நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து

ஆனால் மௌனியின் மீது புதுமைப்பித்தனுக்கு பெரிய மரியாதை இருந்தது என்பதை இக்கூற்று இடம்பெற்ற சிறுகதை மறுமலர்ச்சி காலம்  என்ற கட்டுரையை (1946ல் வெளியானது) முழுதாக வாசித்தாலே உணர்ந்து கொண்டு விட முடியும். அக்கட்டுரையில் அதுவரை தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் மௌனியின்  ‘எங்கிருந்தோ வந்தான்’, தன்னுடைய  ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ உள்ளிட்ட நான்கு கதைகளை தமிழின் ஒப்பற்ற கதைகள் என்று  புதுமைப்பித்தன் சொல்கிறார். புதுமைப்பித்தனின் சமகாலத்தவரான கநாசுவுக்கு மௌனியின் கதைகள் மீது பெரும் மயக்கமே இருந்திருக்கிறது. சி.சு.செல்லப்பா எழுதிய விரிவான கட்டுரையிலும் (மௌனியின் மனக்கோலம்) மௌனியின் கதைகள் குறித்த தீவிரமான பற்று வெளிப்படுவதை பார்க்கலாம்.

புதுமைப்பித்தன் எனும் அறிவன்

புதுமைப்பித்தன் இறந்து சரியாக முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது என்ற அடிப்படையில் புதுமைப்பித்தனும் ஒரு ‘வரலாறு’ (அவர் தன்னைப்பற்றி ‘வாழ்ந்துகெட்ட வரலாறு’ என்று சொல்வாராயிருக்கும்) என்று கொள்ளத்தக்கவரே. புதுமைப்பித்தன் குறித்து இலக்கிய விமர்சகன் அல்லது எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவரை அழகியல் ரீதியாக மதிப்பிடுவதுதான் என் வேலையாக இருக்க முடியும். அவர் எழுதியவற்றில் இன்றும் எஞ்சுவது எது என்பதைப் பார்க்க வேண்டியதே சமகாலத்தவர்களாக நம்முடைய முதன்மையான நோக்கம். ஆனால் இலக்கியம் என்பது சமூகத்துடனும் தொடர்புடைய கலையாக இருக்கிறது. எல்லை கடந்து இலக்கியம் ‘சமூகத்துக்குப் பயன்தர வேண்டும்’ என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஆனால் இலக்கியம் முதன்மையாக வாசகருக்கு ஒரு அனுபவத்தை வழங்குவதன் வழியாக அவருக்குள் விழுந்திருக்கும் சில முடிச்சுகளை அவிழ்க்கிறது. அவர் போதத்தை இன்னும் சற்று கூர்மைப்படுத்துகிறது.

2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்

இந்த நாவலின் ஐந்து பகுதிகளில் எந்தவொன்றும் ‘முடிவுற்ற’ உணர்வைத் தருவதில்லை. ஒவ்வொரு பகுதியின் முடிவும் பக்கங்களின் முடிவாகவே உள்ளது. இந்த அம்சம் நாவலின் ‘கதைத் தன்மையை’க் கேள்விக்கு உள்ளாக்குகிறது. பாத்திரங்களின் மனவார்ப்பில் தோன்றும் மாற்றங்கள் காடசிச் சித்திரிப்புகள் வழியாகத் துல்லியமாகச் சொல்லப்படுவதால் இந்தக் கதையின்மை ஒரு சிக்கலாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக, The part about criticsல் பென்னோ வான் ஆர்கிம்போல்டி என்ற தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத ஜெர்மன் எழுத்தாளரைத் தேடும், நான்கு விமர்சகர்களுக்கு இடையேயான உறவைச் சொல்லலாம்.

ஈர்ப்பு

பெண்களின் கண்ணீர்க் கதைகளில் பெரும்பாலும் இருப்பது இவனுக்கு என் விரிசல் தெரியவதேயில்லை என்ற அங்கலாய்ப்பு தான். அல்லது தன்னை விரிசலற்ற இடத்தில் தாக்கி தனக்குள் நுழைந்தவன் மீதான பொறுமல்கள். இந்த ஆட்டங்களை நான் அறிந்து விலகியவன் என என்னைப் பற்றி கற்பனை செய்து விட வேண்டாம். நான் இந்தக் களத்தில் நுழையும் வாய்ப்பவற்றவன். பெண் என்ற உயிரினத்துக்கு அடிப்படையில் ஒரு தேர்வுணர்வு உள்ளது. ஒரு விதத்தில் பெண் என்பவள் அந்த தேர்வுணர்வு மட்டும்தான். ஆண் என்பவன் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உணர்வு.

ஆழத்தில் மிதப்பது

அக்கா நீ என்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என் மீது உனக்கிருப்பது அன்பா வெறுப்பா? நீ அம்மாவை துளியும் வெறுப்பதில்லை. நம் அப்பாவை மயக்கி திருமணம் செய்து கொண்டவள் என்று அவளை நீ திட்டியபோது கயிற்றை எடுத்துக் கொண்டு தூக்குமாட்டிக்கொள்ள சென்றவளை பிடரி முடியைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்திருக்கிறாய். அன்றிரவே உண்ணாமல் படுத்திருந்தவளை உதைத்து எழுப்பி மிரட்டி சாப்பிட வைத்திருக்கிறாய். நான் உறங்கிவிட்டேன் என்ற நம்பிக்கையில் அன்றிரவு அம்மாவைக் கட்டிக்கொண்டு சத்தமாக ஏங்கி ஏங்கி அழுதாய். பின்னர் அவள் மடியிலேயே விம்மி விம்மி அழுதுகொண்டு உறங்கிப்போனாய். எனக்குத் தெரியும் அவள் மீது உனக்கிருப்பது என்னவென்று? ஆனால் என் மீது உனக்கிருப்பது என்ன? என்னை நீ தொட்டுப் பேசியதில்லை. தம்பி என்று அழைத்ததில்லை. அப்பாவின் முகம் எனக்கு இருப்பது உன்னை சங்கடப்படுத்துகிறதா? பெரியம்மா கூட அம்மாவை ஏற்றுக் கொள்ளத்தானே செய்தார். பிறகு ஏன் என்னை இவ்வளவு வெறுக்கிறாய்?

எஞ்சும் சொற்கள்

இடைநாழியில் தூரத்தில் இருந்தே மாவட்ட ஆட்சியரின் அறையும் அதையடுத்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறையும் சாத்தியிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் ஆசுவாசம் கொண்டவளாய் நடையில் துள்ளல் தெரிய ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறைக்கு எதிரே இருந்த சிறிய அறையில் போய் அமர்ந்தாள். … நாங்கள் இருப்பதை அப்போதுதான் கவனித்தவளாய் மொத்தமாக ஒரு சிரிப்பினை அனைவரையும் நோக்கி வீசிவிட்டு “உள்ள வந்து உக்காந்து இருக்கலாமே” என்றவாறே எங்களை வரவேற்றாள். ஒரு அரசு அலுவலக அறையில் அதிலும் சிறிய அறையில் யாரும் அழைக்காத போது சென்று அமரும் அளவிற்கு எங்களில் யாருக்குமே வயதாகி இருக்கவில்லை. என்னுடன் அதுவரை பேசிக்கொண்டிருந்த பையன் “தேங்க்ஸ்க்கா” என்று அவளைப் பார்த்து சிரித்தபடி உள்ளே ஓடினான்.

பெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம்

ஒரு படைப்பாளி எவ்வளவு சமகாலப் பிரக்ஞை உடையவராயினும் பழமையை மறுப்பவராயினும் எழுத வேண்டும் என்ற உந்துதலை படைப்பாளி அடைவதில் இத்தனை ஆண்டுகளாக மானுடம் தொகுத்த மேன்மைகளின் ஒரு கூறு செயல்படவே செய்கிறது. இன்றைய பின் நவீனத்துவம் வரலாற்றை தொகுக்கப்பட்டவற்றை கட்டுடைத்துப் பார்க்கிறது. எனக்கு அப்படிப் பார்ப்பது ஒரு கடினமான கணிதச் சமன்பாட்டை எதிர்கொள்ளவது அல்லது  ஒரு சிக்கலான அறிவியல் சூத்திரத்தை விளக்குவது போன்றதொரு மூளைச் செயல்பாடு என்று மட்டுமே தோன்றுகிறது. இன்னொரு வகையான வாசிப்புக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது எழுத்தின் பின்னிருந்து செயல்பட்ட அதிகாரத்தை கருத்தில் கொள்ளாமல் மனவெழுச்சியைக் கருத்தில் கொள்வது.  ஏன் அந்த வாசிப்பு அவசியம் என்கிறேன் என்றால் ஒரு வலிமையான படைப்பாளியை அவர் எவ்வளவு சமநிலையும் மேதைமையும் கொண்டிருந்தாலும் அவரை எழுதத் தூண்டுவது மனவெழுச்சி என்ற அம்சமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் எழுதுவது இலக்கியமாகிறது. அனைவருக்குமானதாகிறது. சமூகத்துடன் உரையாடுகிறது.