2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம்

2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும் முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டும். இணையத்தின் வாயிலாக வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வாசகர்களின் நெருக்கம் அதிகமாக, விவாதங்களும் அதிகரித்தன. எல்லா முக்கிய சிறுகதைகதைகளும், சிறுகதையின் சூட்சமங்கள் எளிதாக வாசிப்பாளர்களிடமும் சென்று சேர்ந்தன. புதுமைப்பித்தன் மீண்டும் மறுவாசிப்பு உள்ளானார்.

பனி இறுகிய காடு

This entry is part 2 of 2 in the series பனி இறுகிய காடு

அக்காவு யோசித்த முகத்துடன் இன்னைக்கு “இன்னிக்கு அவரு ஊருக்கு போறாரு” என்றான் மெதுவாக. புரிந்துக் கொண்டவர் போல தலையசைத்து “உள்ள உட்காருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இரவின் சாயல்கள் பெருகிவரும் நேரம், பெரிய உருண்டை பல்பு உயரத்தில் எரிந்தது. அதன் வெளிச்சம் மஞ்சள், இளம்சிவப்பு நிறங்களை வெளிப்படுத்தின. உள்ளே வந்த போது மாறியிருந்தார். கழுத்து மணிகளின் ஓசை மிக மெல்லியதாக வைத்தியின் உள்ளத்தில் ஒலித்தது. அவ்வோசையை பின் தொடர்ந்தால் அவர் கைவேலைகளின் வேகத்தை அறியமுடியும். கண்களை மூடிக் கொண்டான் வைத்தி. முழுமையான இருள் பிரதேசம். அவன் இருப்பது அவனுக்கே தெரியவில்லை

பனி இறுகிய காடு

This entry is part 1 of 2 in the series பனி இறுகிய காடு

வெறித்த கண்கள், நடுங்கும் கால்கள், தூக்கமின்மை வளர்வதை கண்டு சுவாதி அழைத்து வந்திருந்த டாக்டர் சோதித்துவிட்டு, “பிபி 180க்கு அதிகமா இருக்கு, நரம்புத் தளர்ச்சி அதிகமாயிடுச்சு பாப்போம்” என்பது மட்டும் காதில் விழுந்தது. கண்களைத் திறக்க முடியாத வலி. ஆனால் கண்கள் நிலைத்த ஒரு சொல்போல ஆகிவிட்டிருந்தன. பயந்த முகத்தின் அப்பட்டமான அதிர்வு நிலைத்திருக்கும் கண்கள். கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அது யாரோ என்று நினைத்திருந்தான். கொஞ்ச “நேரம் தூங்குடா வைத்தி” என்று கூறிக் கொண்டிருந்தான் சுந்தரம். தன் ஒன்று விட்ட சகோதரன் அவன் என்பதை அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. லேசான தடுமாற்றத்துடன் நின்றிருந்த அவன் கதவைப் பிடித்துக் கொண்டு மெல்ல வெளியேறினான்.

கணக்கு

ஏதோ ஒரு அருவருப்பு அந்த இடம் முழுவதும் பரவி இருப்பது போன்ற உணர்வு. தன் உடல் முழுவதும் அந்த வெறுப்பு அலையாகப் பரவிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் விஜி. அம்மா அவரைப் பார்த்து சிரிக்கும்போது ஏதோ ஒன்று தன்னுள்ளிலிருந்து விலகியது போலிருந்தது. அவள் தன் உள்ளுக்குள் இருந்த அவளின் பிம்பத்தை இனி மறுஆய்வு செய்ய வேண்டும் என நினைத்தாள்.

குதிரை மரம்

திருமணமான புதிதில் பூசினாற் போலிருந்தாள். உப்பிய கன்னங்கள். எடுப்பான பற்கள் பார்க்க லட்சணமாகவே இருந்தாள். சரக்குகளை வாங்கிவரும் மாலை வேளைகளில் சிறிய இடை நெளிய புன்னகையுடன் உள்ளிருந்து ஓடிவந்து கைகளில் வாங்கிக் கொள்வாள்.

கருடனின் கைகள்

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஒருமுறை உங்க பிள்ளை நன்றாக படிக்கிறாங்க என்று சொன்னதற்கு அங்கேயே அம்மா அழுதுகொண்டிருந்தாள். “மேடம் உங்க பொண்ணு பத்தி நல்லாதானேங்க சொல்லியிருக்கோம்” என்றாலும் அழுதுகொண்டிருந்தாள். புவனா தன் வாயிலிருந்து வார்த்தைகளை வெளிவராமல் “அம்மா, ஏம்மா இப்படி அழுது மானத்த வாங்குற” என்றாள்.

புரியாதவர்கள்

நேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்றத்தில் சறுக்கி, தேவையான அளவு மென்மையை சேர்த்து கடைசியில் முறையிடலாக முடித்தார். அவசரப்படுத்தலின் மூலம் காரியம் வெற்றி பெறவைத்துவிடமுடியும் என்கிற நினைப்பு இருப்பதுபோலத் தோன்றியது. அன்றைய தினவியாபார வெற்றிக்கும், மற்றொரு நாளுக்காக சின்னமீனாலான தூண்டிலைப் போலவும் அந்தக் கூவல் இருந்தது. ஆனால் அசராமல் கூவியபின், அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக, ஒருநாளும் தோன்றியதில்லை. மூன்று முறை சாவதானமாகக் கூவிவிட்டார் அந்த அக்கா. ’எலுமிச்ச வேணுங்களா…

தெய்வமரம்

பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்தது “மங்களவிலாஸ்” வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார்.

பாம்பு வேட்டை

பழக்கமில்லாத வெய்யிலும் எதையும் கவனிக்காத மனிதர்களும் அவனுக்கு மிக அன்னியமாக இருந்தன. யாருக்கும் நகரத்தின் தெருப்பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கண்டடைந்தவுடன் தெரு முனையில் இருந்த பெயர்ப் பலகைகளைக் கொண்டு அவனே தேடி அடையாரில் இருந்த ஒரு சின்னக் கடைக்கு வந்தான். தட்டச்சு செய்து கொடுக்கும் கடைமுதலாளி சிங்காரம் அண்ணன் அவன் நினைத்ததைவிட அந்த நகரத்திற்குப் பொருத்தமில்லாமல் வேட்டியிலும் பனியனிலும் முறுக்கிய வெள்ளை மீசையுடன் பார்க்க‌ ஒரு விவசாயி போல‌ நின்றிருந்தார். அப்பாவின் பால்ய நண்பர். இருவரும் சந்தேகமாக ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல உணர்ந்தான். அவன் அளித்த கடிதத்தைப் பார்த்தது அவர் அடைந்தது மகிழ்ச்சியா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் முகமே அப்படித்தான் எனப் பின்னாளில் புரிந்தது.

பெயர் தெரியாப் பறவையின் கூடு

காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்ட‌ சின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்த‌ மூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடைய‌ தாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிக‌ளை எழுப்ப ஆரம்பிக்கும். இரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்த‌ அவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான்.

மாங்காச்சாமி

முன்பு இம்மாத சனிக்கிழமைகளில் வாசலில் சமராத்தனைக்காக பிச்சைக்கேட்டு நிறைய பேர் வருவார்கள். சின்னப் பையனாக நானும் தங்கை சுதாவுடன் ஒட்டுத் திண்ணை தூணைப் பிடித்து கொண்டு தெருவை இருபக்கமும் பார்த்தபடி இருப்போம். அரிசியை யார் போடுவது என்று இருவருக்குள் சண்டைகள் வரும். கொடுக்கும் அரிசியில் ஒவ்வொரு கோஷ்டியில் உள்ள நபர்களுக்கு சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும். அதிகம் குறைவாகப் போட்டாலோ கடைசி நபருக்கு இல்லை என்றோலோ அது பெரும் குற்றமாகிவிடும். யாருக்கும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிருஷ்ணன் பாடல்கள், கீர்த்தனைகள் என்று இருக்கும் ஒவ்வொரு கோஷ்டியிலும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நபர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் தனியாக வருவார்.

வருகை

புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக‌ இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட ப் பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படித் தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாகக் கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்தக் கவலையும் இன்றித் தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்தது.

அந்நியன் என ஒருவன்

‘அவங்ககிட்ட அன்பு பாசம் இல்லாம இல்ல செய்ய நிறைய மனசு இருக்கு, ஆனா அவங்களுக்கு குடும்பம், குட்டிங்கனு ஆன பிறகு, அதெல்லாம் செய்ய முடியறதில்லை; இதெல்லாம் இயற்கைதான் நீங்களே உங்க வயசுல புரிஞ்சுப்பீங்க பாருங்க’ என்றார். அதன்பின் அவர் கூறிய எதுவும் அவன் காதில் விழவில்லை. நீண்ட ஒரு உரைபோல பேசிக்கொண்டே போனார். ஏதோ ஒரு பெரிய மேடைப்பேச்சை முடித்து சாதனை செய்துவிட்ட மகிழ்ச்சியில் அவர் முகம் அந்த சின்ன ஒளி இடைவெளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

அத்திமரம்

மரம் அவனைவிட நான்கு மட‌ங்கு பெரியதாக இருந்தது. மரத்தின் உச்சிவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டான் உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த‌ நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்தது. மரத்தைச் சுற்றி, ஒரு அவசரத்தில் அமைக்கப்பட்டிருந்தது போலிருந்த‌ கல்தளத்தில் மண்ணை நன்கு ஊதிவிட்டு அமர்ந்துகொண்டான். அமர்ந்ததும் அதன் தொடர்ச்சியாக ஆசுவாசப்படுத்தும் தோரணையில் மூச்சை வேகமாக வெளியேற்றி சுற்றுமுற்றும் பார்த்தபடி கால்களை இருமுறை தேய்த்துக்கொண்டான். சின்ன மாமாவிடமிருந்து கற்றுக்கொண்டவைகளில் இதுவும் ஒன்று. அணிந்திருந்த புதிய தோல் செருப்பின் தன்மை அழகாக, தடித்த தரையில் தேய்க்கும்தோறும் ஏற்படும் ஒலி கிளர்ச்சியாக இருந்தது. நடந்துவந்தபோது அது ஏற்படுத்திய கிளுகிளுப்பு அவன் மனதிலிருந்து இன்னும் அடங்கவில்லை.

வெளவால்கள் உலவும் வீடு

திண்ணையும், திண்ணையின் முனையில் நிறுத்தப்பட்டிருந்த‌ முன்பைவிட அதிகம் ஆங்காங்கே உடைந்திருந்த சாயம் போன‌ தடுப்பு தட்டியை அன்னிச்சையாக‌ கவனிக்க‌ இந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் மன‌தில் அலைமோதின‌‌. அம்மா வெத்தலை மென்றப‌டி காலை நீட்டி இந்த‌ திண்ணையின் முனையில் அமர்ந்திருப்பாள். பள்ளிகூடம் விட்டதும் ஓடிவந்து அம்மாவின் கால்களில் சாய்ந்துகொண்டு இடுப்பை பிடித்துக் கொள்வான். வந்துட்டான், இவன் ஒருத்தன் ஹஹ என்றுவிட்டு சற்று தூக்கிய வெத்தலை மென்ற வாயுடன் சிரித்தபடி அவனுக்கே கேட்டு அலுத்துப்போன‌ அவனின் சிறுவயது பராகிரமங்களில் ஒன்றை பேசிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு பெண்ணிடம் சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.

அதில் ஒரு பெருமையும் அலாதி அன்பும் இருப்பது தெரியும் பக்கத்துவீட்டு பெண்மணி ஒவ்வொருமுறையும் புதிதாக கேட்பதுபோல ஆர்வத்துடன் கேட்டுகொள்வாள். மூன்று மகன்கள் மேல் அதீத கற்பனைகள் அவளுக்கு. ஆனால் எப்போதும் கம்னாட்டி, கழிச்சாலபோறவனே என்று திட்டிக்கொண்டே தான் இருப்பாள்

அவன்

அடிக்கடி காதலிகளை மாற்றுவதும், பின் புதிய காதலிகளைத் தேடி அலைவதும், பழைய லட்சியங்களை மாற்றிப் புதிய லட்சியங்களை கைக்கொள்வதும், தன்னைப் புதுமைவிரும்பியாக, புரட்சிக்காரனாக‌க் காட்டிக்கொள்வதுமாக அலைவான். கூடவே இலக்கியம், சமூகம், வரலாறு, அறிவியல் என்று பல விஷயங்கள் மற்றவர்களுக்குப் புரிவதைப் பற்றி கவலைப்படாமல் அது குறித்து நீளமாக‌ பேசிக்கொண்டிருப்பான். கொஞ்சநாள் முன்புதான் காதலியை மாற்றியிருந்தான். இருவரும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதாகவும், முன்னையவளைவிட பின்னையவள் சற்றேதான் மாறியவளாகத் தெரிகிறாள் என்றும் கூறியதை அவன் ரசிக்கவில்லை.

பின்தொடரும் காலம்

பந்தி முடிந்து கைகழுவியபோது குறுக்கே வந்த அவரை மடக்கி முருகானந்தம் எங்கே என நான் நீண்டநேரமாக கேட்க நினைத்திருந்ததைக் கேட்டுவிட்டேன். ஒரு சிறுயோசனைக்குப் பின், அழைத்துச் செல்கிறேன் என்றார். அழைத்து வருகிறேன் என்று சொல்லாமல் அழைத்துச் செல்கிறேன் எனச் சொன்னதில் எழுந்த குழப்பம் கல்யாணம் முடியும் வரையில் இருந்தது.

கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை

பதற்றமும் பயமும் அதிகரிக்க அம்மாவின் வசைகளுக்கு நடுவே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் என தெரியாமல் மீண்டும் உள்அறைக்கு சென்று அமர்ந்துகொண்டான். ஏன் பதற்றம் அதிகரிக்கிறது என சட்டென புரியாமல் போனது. தன்னையறியாமல் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். புத்தக‌த்தை விரித்ததும் அதில் தெரிந்த எழுத்துக்கள் நீரில் ஓடும் மலர்கள் போல ஒடியதில் அவன் கண்கள் கண்ணீரில் மிதப்பதை உணர்ந்தவனாக‌ லேசான கோணல் வாயுடன் கவனித்தான்.

சாமத்தில் முனகும் கதவு

வாசுகியை நினைக்கும் தோறும் அவன் உடல் இறுக்கம் கொள்வதை அறிந்திருந்தான். அவள் ஸ்பரிசத்தின் மென்மை ஒரு பெண்மையை கையாள்வது இத்தனை எளிதானதா என்ற எண்ணம் ஓடுவதை தவிர்க்கமுடியவில்லை. போகத்தில் ஒவ்வொரு சமயமும் அவள் இளகுவது எந்த உண்மையை அறியும் பொருட்டு என்று கடையின் இருண்ட அறையில் அமர்ந்து யோசித்திருக்கிறான். உச்சத்தில் அவள் கண்களில் தெரிவது வெறிகொண்ட மிருகத்தின் கண்கள் என்பதை பிறகு உணர்ந்து பயந்திருக்கிறான்.

அப்ரஞ்ஜி

பெண் பிரசவத்தின்போது. ‘அப்ரஞ்ஜி… பச்ச உடம்பு, பொண்ண பாத்துக்க’ என்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து – குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். – அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.

இரண்டாம் படி

பஸ் ஒரு தொழிற்சாலை, ஒரு கடை, சில விடுகள் என் சின்னச் சின்ன பகுதிகளை கடந்து சென்று கொண்டிருந்தது. பலவகை தொழிற்சாலைகள் இருந்தன. மருந்து வாசனை, மண்வாசனை, புகைவாசனை என கலவையாக வந்து கொண்டிருந்தன. கன்னனூர் என்ற பகுதியில் இறங்கி சற்றுதூரம் நடந்ததும் அவன் சொன்ன சிமெண்ட் பேக்ட்ரி வந்தது. கடற்கரக்கு சென்று வந்தது போல் எல்லோர் சிகையும் தாறுமாறாய் கலைந்திருந்தது. தியாகு தவிர அனைவரிடமும் சீப்பு இருந்தது உடனே வாரிக் கொண்டபடி உள்ளே நுழைந்தனர்.

பஸ் ஸ்டாண்ட்

எந்த ஊர் சென்றாலும் அவ்வூரின் பஸ் ஸ்டாண்டை தாண்டி அவன் சென்றதில்லை. சினிமா பார்ப்பதற்காக வெளியே செல்வான், அதிகபட்சம் அவ்வளவுதான். மீண்டும் வந்துவிடுவான். ஒரு ஊரில் கிடைக்கும் நண்பன் அந்த ஊரோடு சரி. அவன் எந்த ஊர் சென்றாலும் வாழ்விடமாக எப்போதும் நினைப்பது பஸ் ஸ்டாண்டைதான். வாழ்வில் காணும் சுகதுக்கங்கள், ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் பஸ் ஸ்டாண்டிலே கண்டுவிட முடியும். ஒரு நல்ல அனுபவத்தை தேடும் ஒருவன் பஸ் ஸ்டாண்டை புறக்கணிப்பதில்லை என்பது அவன் கண்டுபிடிப்பு.