அதிரியன் நினைவுகள் -22

This entry is part 22 of 22 in the series அதிரியன் நினைவுகள்

அந்த முகம் அழகானது, அதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை, இருந்தும் அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் சொல்லாததற்கு, முற்றிலுமாக தன்னை  அவனிடம் இழந்திருந்த மனிதனொருவனின் தயக்கமாக இதனை பார்க்கக்கூடாது. எவ்வளவு தீவிரமாக தேடினாலும், நாம் தேடுகின்ற முகங்கள் நமக்குக் கிடைப்பதில்லை, தப்பிவிடுகின்றன, அப்படித் தேடி  அலுத்து கிடைத்த கணமொன்றில் கண்டதே அவனுடைய முகம்: கருத்தடர்ந்த தலைமுடியின் கீழ் சாய்வாக ஒருதலை, அதில் கண்ணிமைகளுக்கு இசைவாக நீண்டும், வளைந்துமிருக்கும் விழிகள், இளம் முகமோ அகன்று, அவ்விழிகளுக்கென்று அமைந்ததுபோலவும் இருக்கும்

அதிரியன் நினைவுகள் -21

This entry is part 21 of 22 in the series அதிரியன் நினைவுகள்

எனது முன்னிரவு நேரங்களை உடுக்களின் வடிவமாறத்தின் மீதான மனிதப்பார்வையின் போக்கிற்கு அடிக்கடி செலவிட்டபோதிலும்,  வானியல்கணிதம் மற்றும் எரிநட்சத்திர பேருடல்கள் தரும் தெளிவற்ற ஆருடங்களில் எனது ஆர்வத்தைக் கூடுதலாக உணர்ந்தேன். ஆனாலிந்த கிரகங்களின் தன்மையிலமைந்த மனிதர் வாழ்க்கையின் இவ்விநோதமான மாற்றுப்பாதை  பிரச்சினை,  எனது உறக்கமற்ற நேரத்தை அடிக்கடி ஆக்கிரமித்திருந்ததால்; வானியல் கணிதத்திலும், எந்த எரிநட்சத்திரங்களின் பேருடல்கள் தெளிவற்ற ஆரூடங்களை முன்வைத்தனவோ

அதிரியன் நினைவுகள் -20

This entry is part 20 of 22 in the series அதிரியன் நினைவுகள்

நான் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், போரில் வாகைசூடிய நம்முடைய ஆறாவது படையணி பிரிட்டிஷ் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே இங்கிருந்த நம்முடைய ஒன்பதாவது படைப்பிரிவு வீரர்களில் அனேகர்,  பார்த்தியர்களோடு நாம் யுத்தத்தில் இருந்த முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெடித்த கலவரத்தில் கலிடோனியர்களால்  வெட்டுண்டு மடிந்து அவல்நிலையில் இருக்க, இவர்கள் இடத்தில் ஆறாவது படையணி. இத்தகைய அசம்பாவிதங்கள்  மீண்டும் நிகழாமல் தடுக்க இரண்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டன.

அதிரியன் நினைவுகள் -19

This entry is part 19 of 22 in the series அதிரியன் நினைவுகள்

அளவிற்பெரிய இச்சிற்பங்கள் ஒரு முகத்தை மிக அருகில் சென்று பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.  நீள அகலத்தில்  கூடுதலாகவும்; தனித்த தன்மையுடனும்; கொடுங்கனவில் வருகிற காட்சிகளாகவும், தோற்றங்களாகவும்; உறக்கம் கலைந்தபின்னும் நினைவில் நிற்கும். வடிக்கின்ற உருத் தோற்றங்களில் அப்பழுக்கற்ற பரிபூரணத்தை வேண்டினேன்; சுருங்கச் சொல்வதெனில்,  இருபது வயதில் அகால மரணமடைந்த ஒருவனை அவனுக்கு வேண்டியவர்கள் எந்த அளவில் நேசிப்பார்களோ அந்த அளவில் கடவுளுக்கு நிகரான பரிபூரணம்

அதிரியன் நினைவுகள் -18

This entry is part 18 of 22 in the series அதிரியன் நினைவுகள்

பலனாக, புத்தம்புது மனிதனாக, பிரம்மச்சாரியாக, ஒரு மிகத்தீவிர பிரம்மச்சர்ய உல்லிஸ்(Ulysse)1 ஆக, குழந்தைப்பேறின்றி, மூதாதையரென்று எவருமின்றி, எனக்குள் ஒர் இத்தாக்கியனாக(Ithaque) இருப்பதன்றி வேறு எதையுமே விரும்பாமல் இருப்பதன் நன்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து, எந்தவொரு ஊரையும் முழுமையாக நான் சொந்தம் கொண்டாடியதுண்டா என்றால், இல்லை. அத்தகைய உணர்வுக்கு நான் என்றுமே ஆளானதில்லை

அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 22 in the series அதிரியன் நினைவுகள்

நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது

அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 22 in the series அதிரியன் நினைவுகள்

வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…

அதிரியன் நினைவுகள் -15

This entry is part 15 of 22 in the series அதிரியன் நினைவுகள்

தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை  புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று  ஒரு கணக்கீடு இருப்பதாகவும்  நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான  நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ  பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில்  ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர். 

அதிரியன் நினைவுகள் -14

This entry is part 14 of 22 in the series அதிரியன் நினைவுகள்

சமாதான நடவடிக்கைகளுக்குப் பிறகு  கிளர்ச்சியின் காய்ச்சல்களைத் தணிக்க வேண்டிய அவசியம். எகிப்தில் அதன் வீரியம் மிகவும் அதிகமாக தெரியவர, கூடுதல் துருப்புகள் வரும்வரைக் காத்திராமல் விவசாய போராட்டக்காரர்களுக்கு அவசரகதியில் வரிவிதித்து அவர்களை அடக்க முயற்சித்தேன்.  எனது தோழர் மார்சியஸ் டர்போவிடம், அங்கு ஒழுங்கை நிலைநாட்டும்படி கேட்டுக்கொண்டேன், அவரும் அப்பிரச்சனையைச் சற்று கடுமையான சாதுர்யத்துடன் கையாண்டு இட்ட பணியை நிறைவேற்றினார். 

அதிரியன் நினைவுகள் – 13

This entry is part 13 of 22 in the series அதிரியன் நினைவுகள்

பேரரசர் இறுதியாக ஹத்ராவின்(Hatra) முற்றுகையை நிறுத்திக்கொண்டு, யூப்ரடீஸ் நதியைத் திரும்பக் கடக்க முடிவு செய்தார்,  அது நிறைவேறாமலேயே போனது. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெப்பம், இதனுடன் பார்த்தீனிய வில்லாளர்களின் உபத்திரவமும் சேர்ந்துகொள்ள அவர்கள் திரும்பிய  பயணம் பெரும்சோதனையாக இருந்துள்ளது. ஒரு சுட்டெரிக்கும் மே மாத மாலையில், நான் நகரத்தின் நுழை வாயில்களுக்கு வெளியே, ஓரோண்டஸ்  நதிக்ரையில் நலிவுற்ற நிலையில் பேரரசர், அட்டியானுஸ்,  மற்றும் அரசகுடும்ப பெண்கள் என்கிற  சிறு கூட்டம்  காய்ச்சல், பதற்றம், சோர்வு ஆகியவற்றால் பாதித்திருக்க கண்டேன். மன்னர் திராயான் அரண்மனைக்குத் தான்  குதிரையில் திரும்பவேண்டுமென தெரிவித்தபோதும், அதற்குரிய உடல்நிலையில் அவரில்லை

அதிரியன் நினைவுகள் – 12

This entry is part 12 of 22 in the series அதிரியன் நினைவுகள்

மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர்.  விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர்.  சைப்ரஸில் குடியிருந்த  கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

அதிரியன் நினைவுகள் – 11

This entry is part 11 of 22 in the series அதிரியன் நினைவுகள்

எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன.  யூத மற்றும் அரேபிய  தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள்  தங்கள் பகுதியைத்  துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத  நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார்,  இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல்.   மன்னருடன் இருந்தவர்களில் சிலரும்  விபத்தில் மாண்டிருந்தனர்

அதிரியன்  நினைவுகள் – 10

This entry is part 10 of 22 in the series அதிரியன் நினைவுகள்

ஈரப்பதமான கோடையைத் தொடர்ந்து, பனிமூட்டத்துடன் ஓர் இலையுதிர் காலம், பின்னர் கடுங் குளிர்காலம்.  எனக்கு மருத்துவம் பற்றிய அறிவு தேவைப்பட்டது, முதலில் என்னை நானே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையோரங்களில் நான் வாழ்ந்த வாழ்க்கை மெல்லமெல்ல  என்னை சார்மேத்தியினர் நிலைக்கு கொண்டு வந்தது: கிரேக்க தத்துவஞானிக்குரிய  குறுந்தாடி, காட்டுவாசிகள் தலைவன் ஒருவனின்  குறுந்தாடியாக மாறியது. டேசியர்களுடன் சண்டையிட்ட நாட்களில் என்னவெல்லாம் கண்டேனோ அவற்றைத் திரும்பவும் நானே வெறுக்கின்ற அளவிற்கு திரும்பக்  காண நேர்ந்தது. நம்முடைய எதிரிகள் தங்கள் கைதிகளை உயிரோடு எரித்தனர்; 

அதிரியன் நினைவுகள் – 9

This entry is part 9 of 22 in the series அதிரியன் நினைவுகள்

இவ்விவகாரத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன:   நானும் தக்க தருணத்திற்கென்று திரைமறைவில் காத்திருக்கும் (நாடக) நடிகன் போல,  முன்பின் தெரியாத ஒரு நபர் உள்ளே பரபரப்புடன் தெரிவிக்கும் சங்கதிகளை,  குறிப்பாக சலசலவென்று பேசுகிற பெண்களின் குரல்களை, வெடிக்கும் கோபத்தை அல்லது சிரிப்பை, சொந்த வாழ்க்கையின் முணுமுணுப்புகளை, மொத்தத்தில் நானிருக்கிறேன் என்பது தெரியவந்த மறுகணம்  அடங்கிப்போகும் ஒலிகளை ஆர்வத்துடன் ஒட்டுக்கேட்பதுண்டு. குழந்தைகள், ஆடைகுறித்த தீராத பிரச்சனைகள்,  பணத்தைப் பற்றிய கவலைகளென, நான் இல்லாத நேரத்தில் பேசப்படும் பொருள் எதுவென்றாலும்  எனக்குத் தெரியக்கூடாத முக்கியமானதொரு விஷயம்

அதிரியன் நினைவுகள் – 8

This entry is part 8 of 22 in the series அதிரியன் நினைவுகள்

எனது இராணுவ வெற்றிகள்  மன்னர் திராயானைப் போன்ற மாவீரர்களிடத்தில்  பகை உணர்வை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. துணிவென்ற மொழியை மட்டுமே உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்தார். அதன் சொற்கள் நேரிடையாக அவர் நெஞ்சத்தைத் தொட்டன. என்னைத் தம்முடைய வலதுகையாக, ஏன்  கிட்டத்தட்ட ஒரு மகனாகவே கருதினார். அதன் பின்னர் எங்கள் இருவரையும் முழுமையாக பிரிக்கின்ற வகையில் எந்தச் சம்பவமும் குறுக்கிடவில்லை.  என்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துக்களைப் பற்றிய  எனது ஆரம்பகால ஆட்சேபணைகளை அவர் இராணுவத்தில் வெளிப்படுத்திய போற்றத்தக்க மேதமையை அறிந்தமாத்திரத்தில் குறைந்த பட்சம் தற்காலிகமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்து, பின்னர் மறக்கவும் செய்தேன். கைதேர்ந்த நிபுணர்கள்  செயல்படும் விதத்தைக் காண்பதில் எனகெப்போதும் மகிழ்ச்சி.

அதிரியன் நினைவுகள்  – 7

This entry is part 7 of 22 in the series அதிரியன் நினைவுகள்

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததொரு சம்பவம் கிட்டத்தட்ட சீரழிக்கும்நிலமைக்கு என்னைத் தள்ளியது. விஷயம் இதுதான், அழகான முகமொன்று என்னை வென்றிருந்தது, இளைஞன் ஒருவனிடம் அன்பின் வசப்பட்டு மிகநெருக்ககமாக இருந்தேன், பேரரசர் திராயான் அவனை அறிந்திருந்தார். ஆபத்தான விளயாட்டு என்றாலும்கூட எனக்கது சுவையான அனுபவம். காலுஸ்(Galus) என்ற பெயரில் மன்னருக்கு ஒரு செயலாளர் இருந்தார், நீண்ட காலமாக மன்னரிடம் எனது கடன்கள் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைத்தும் வந்தார். இந்நிலையில் என்னுடைய சமீபத்திய நடத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். மன்னரின் கோபம் உச்சத்தை எட்ட என்வாழ்க்கையில் மிகமோசமான தருணம் அது. என்னுடைய நண்பர்கள் சிலர், குறிப்பாக அச்சீலியுஸ், அட்டியாயூனுஸ் முதலானோர் ஒன்றினைந்து எனக்காக வாதிட்டு மன்னரை என்மீது கொண்டிருந்த அந்த அபத்தமான வெறுப்பிலிருந்து மீட்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு முடிவில் அவர் இறங்கியும்வந்தார்.

அதிரியன் நினைவுகள் – 6

This entry is part 6 of 22 in the series அதிரியன் நினைவுகள்

இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.

அதிரியன் நினைவுகள் – 5

This entry is part 5 of 22 in the series அதிரியன் நினைவுகள்

ஏதன்ஸ் நகரை அடைந்த மறுகணம் என்னுடைய மனதைப் பறிகொடுத்திருந்தேன்; நானோ, பிறர் சந்தேகிக்கிற விரும்பத்தகாத தோற்றம்கொண்ட மாணவன், அங்கு நிலவிய கலகலப்பான சூழல், வேகமாக பரிமாறிக்கொள்ளப்பட்ட உரையாடல்கள், நீண்ட ரம்மியமான மாலைப்பொழுதுகளில் காலாற நடக்கும் தருணம், வேறெங்கும் அறிந்திராத விவாதங்கள், தர்க்கங்கள், ..அனைத்தையும் முதன்முறையாக அங்குதான் சுவைத்தேன். கணிதம், கலை இரண்டுமே சுழற்சிமுறையில் எனது தேடலுகேற்ப தங்கள்பால் அக்கறை கொள்ளவைத்தன. …மருத்துவர் தொழில் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்; அப்பணியின் அடிப்படை அணுகுமுறை, எனது சக்கரவர்த்தி தொழிலுக்கென முயற்சித்துப் பெற்ற அணுகுமுறையை ஒத்திருந்தது.

அதிரியன் நினைவுகள் – 4

This entry is part 4 of 22 in the series அதிரியன் நினைவுகள்

என் தந்தை, ஏலியஸ் அஃபர் அத்ரியானுஸ்(Aelius Afer Hadrianus) நல்லொழுக்கங்கள் நிறைந்த  மனிதர்.  தேசம், அரசாங்கம் என அவர்  உழைத்தபோதும், பலனடைந்தவரில்லை.  செனெட் அவையில், அவர் குரல் எடுபட்டதில்லை. வழக்கமாக நம்முடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஆப்ரிக்க பகுதி நிர்வாகிகள் செல்வத்தில் கொழிப்பதுண்டு, ஆனால் இவர் அங்கும் எதையும்  சம்பாதித்தவரில்லை. திரும்பிய பின் இங்கும் ஸ்பெயின் நாட்டில் நமது கைவசமிருந்த    இட்டாலிகா (Italica) நகராட்சியில் ஓயாமல் உள்ளூர் சர்ச்சைகளைத் தீர்த்துவைத்து சோர்வுற்றதுதான்  அவர் கண்ட பலன். இலட்சியங்களற்ற மனிதர், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெரிதாக அனுபவித்தவரில்லை. பெரும்பாலான மனிதர்களைப்போலவே  ஆண்டுதோறும் மேலும்மேலும் நிறமிழந்து, இறுதியில் அற்பவிஷயங்களில் வெறித்தனமாக ஒரு முறைமையைக் கையாண்டு தம்மை சிறுமைபடுத்திக்கொண்டார்.

அதிரியன் நினைவுகள் -3

This entry is part 3 of 22 in the series அதிரியன் நினைவுகள்

அனைவரையும் போலவே எனது பணியிலும் மனிதர் இருப்பை மதிப்பிட மூன்று வழிமுறைகள். முதலாவது சுயபரிசோதனை, இது மிகவும் கடினமானது மட்டுமல்ல ஆபத்தும் இதில் அதிகம், இருந்தும் பயனுள்ள வழிமுறை. இரண்டாவது மனிதர்களை அவதானிப்பது. பொதுவில் மனிதர்கள் மொத்தபேரும் அவ்வப்போது இரகசியங்களை பொத்திவைப்பதில் கெட்டிக்க்காரர்கள் என்பதோடு தங்களிடம் அவை கணிசமாக உள்ளதென்பதை பிறர் நம்பவேண்டும் என்பதுபோல அவர்கள் நடத்தையும் இருக்கும். மனிதர் இருப்பை அளவிட நான் கையாளும் மூன்றாவது வழிமுறை புத்தகங்கள், வாசிக்கிறபோது, தீர்க்கதரிசனமாக சொல்லப்படும் வரிகளுக்கிடையில் உணரப்படும் பிழைகளும் எனக்கு முக்கியம். சரித்திர ஆசிரியர்களின் எழுத்துகள் கவிஞர்கள் எழுத்துக்ளைபோல பெரிதாகக் கொண்டாடக்கூடியவை அல்ல.

அதிரியன் நினைவுகள்-2

This entry is part 2 of 22 in the series அதிரியன் நினைவுகள்

காதலென்கிற வியத்தகு மனித உறவிற்கு முன்பாக, அதிலும் குறிப்பாக மற்றொரு உடல் மீதான அதன் அவாவிற்குச் சொல்லப்படும் நியாயங்கள் குழப்பமானவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்புதிய மற்றொரு உடலும் குளிப்பாட்டுவது, உணவு தருவது, முடிந்தவரை அதன் இன்னல்களை தவிர்ப்பது இவற்றைத் தவிர பெரிதாக அக்கறைகாட்டாத நமது சொந்த உடலைப் போன்றதுதான், இருந்தும் புதிய உடலின் ஸ்பரிஸத்திற்குத் தவிக்கிறோம். ஏனெனில் இப்புதிய உடல் வேறொர நபரால் இயக்கப்படுகிறதென்கிற எளிமையான காரணம் ஒருபுறம், இன்னொருபுறம் அவ்வுடலில் நாம் காண்கிற வசீகர அம்சங்கள்.

அதிரியன் நினைவுகள்-1

This entry is part 1 of 22 in the series அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் அல்லது Mémoires D’Hadrien, புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியை மார்கெரித் யூர்செனார் (MargueriteYourcenar) என்பவரால் 1951 எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல். ரோமானிய அரசன் தமது முதிர்ந்த வயதில் தமக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளவிருந்த மார்க் ஒரேல்(Marc Aurèle) என்கிற வாலிபனுக்கு எழுதும் மடலாக சொல்லப்பட்டுள்ள இப்படைப்பு ஆசிரியரின் கற்பனை. ரோமானிய பேரரசன் அதிரியன் தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட அத்தனை அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதாக, விமர்சிப்பதாக நாவல் விரிகிறது. 2002ஆம் ஆண்டு நார்வே இலக்கிய வட்டம் எக்காலத்திலும் வாசிக்கப்படவேண்டியவையென உலகின் 54 நாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய 100 படைப்புகளை பட்டியல் இட்டுள்ளது, அவற்றில் இந்நாவலும் ஒன்று

அவள்

தலையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திகு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார். 

”காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம், தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை,சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம்.  

எழுத்துசாமியும் பேச்சாண்டியும்

“என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது, பரிசு எனக்கு வேணும், ஒங் கூடுவாஞ்சேரி பிரச்சனை முடிஞ்சுதுன்னு வச்சுக்கோ” என்று சொல்லி போனை வைத்துவிட்டார். எதிர் பார்த்ததுபோல பரிசு அவருக்குக் கிடைத்தது. இவருக்குப் போட்டியாக இருந்த இளைஞனுக்கு குடும்பக் கஷ்டத்தைவிட, நான்கைந்து பாட்டில்களை அந்த மாசத்துல கூடுதலாக வாங்க முடியுமென்ற கனவில் மண்ணைப் போட்டிருந்தார். 

‘தான்’ அமுதம் இறவாதது

மகாகவி என்றொரு அடைமொழியை அவனாக வரித்துத் கொண்டவனில்லை. அவன் கவிதையில் தோய்ந்தவர்கள் சூட்டியபெயர். பாரதி என்ற சொல்லே போதும், சட்டென்று முண்டாசுடன் நம் முன்னால் நிற்பான், அப்படியொரு ஆகிருதி, தேஜஸ். அவனுக்கெதற்கு அடைமொழிகள்.

ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு

This entry is part 27 of 48 in the series நூறு நூல்கள்

படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.

இறந்த காலம்

ஜனவரியில் வெளிவரவுள்ள  ‘ இறந்த காலம்’ நாவலிலிருந்து… ஒர் அத்தியாயம் சைகோன், கொஷன்ஷீன் (இந்தோ சீனா) – ஸ்ரீமுக வருடம் தை மாதம் 21ந்தேதி (1934ம் வருடம், ஜனவரிமாதம் 15 ந்தேதி)     சிரஞ்சீவித் தம்பி சதாசிவத்திற்கு, தமக்கை வேதவல்லி எழுதிக்கொண்டது. இவ்விடம் என் கணவரும், பிள்ளைகளும் ஷேமம். “இறந்த காலம்”

பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்

அடுத்தடுத்த நீதிபதியின் கேள்விகளை வைத்தும், குற்றவ்வாளியின் பதிலைக்கொண்டும் தெரியவந்த செய்திகள் : ஹாலந்து நாட்டவர், பத்திரிகயாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுகம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன், அப் பெண்மணி இவரை உதறிவிட்டு வெளியேறுகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகைக்கடைகள், ஆயத்தஉடை கடைகள் முதலானவற்றில் விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அவற்றிற்குரிய பணத்தை வங்கிகளில் பொய்த் தகவல்களைக்கொண்டு தொடங்கியக் கணக்கில் பெற்ற கடனட்டைகள்,காசோலைகளில் செலுத்துவது, பிடிபடுவது, சிறைசெல்வது.

குறிப்பிற் குறிப்புணர்வார்

தமிழ் நிலத்தின் வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ; இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது? எப்படி அடையாளப்படுத்துவது? நண்பர் சா.பாலுசாமி, நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது. தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி : “சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ ….. வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச் (இந்திய) ஒழுங்கமைவு” என முன்வைக்கும் குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.

 ஒரு கேள்விக்கு இரு பதில்கள்

ஐந்துவிரல்களுக்குள் அடக்கிவிடக்கூடிய கதைமாந்தர் எண்ணிக்கை, ஒன்றிரண்டு சம்பவங்கள், செறிவான மொழி இவைகளெல்லாம் கூடிவந்தால் சிறுகதை. இன்றைய படைப்பிலக்கியம் பின் நவீனத்துவம், பின்-பின் நவீனத்துவம்(Post-postmodernism) எனப் புதிய புதிய அவதாரங்களை எடுத்தபின்னும், மேலேகண்ட பொதுப்பண்புகள் மட்டும் கைவிடாமற் வைத்துள்ளன. அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை ஒரு வாசகனாக என்னை நிறுத்தி ‘ ஏன் நேசிக்கிறேன் ?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டபோது, எனக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் கிடைத்தன.

தடம் பதித்த சிற்றிதழ்கள்

கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது பிறகு நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத சிற்றிதழ்கள் வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை. இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்.

Le Rainbow Warrior – COP 21

பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து உலகத் தலைவர்களுக்கு வரிசையாகக் கைலுக்க நேர்ந்ததில் தோள் சுளுக்குடன் இருப்பதாக் கேள்வி. இத்தனைக்கும் அவர் எல்லோருடனும் கைகுலுக்கவில்லை. செட்டியார் முடுக்கா சரக்கு முடுக்கா எனப்பார்த்தே வரவேற்றார். அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பியநாடுகளின் சில தலைவர்களுக்குத்தான் அவருடைய கை குலுக்கல் கிடைத்தது. அடுத்தக் கட்டத் தலைவர்களை வரவேற்றவர் பிரான்சு நாட்டின் பிரதமர் மனுவெல் வால்ஸ். அதற்கடுத்த நிலை உலகத்தலைவர்களை வரவேற்றவர்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சர்

பிரான்ஸ்: நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும்

பெரியண்ணன்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இம்மனிதர்கள் உண்மையில் அப்பாவிகள். சாவிகொடுத்த பொம்மைகளாக, நடைபிணம்போல இயங்கி மடியும் அடிமைகள். அவர்கள் சாகாமலிருந்தால் மரணதண்டனைக்குச் சாத்தியமற்ற பிரான்சு நாட்டில் – ஜனநாயக நாடென்ற பாரத்தையும் சுமந்திருப்பதால் குற்றவாளிகளே ஆனாலும் சட்டப்படி கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் இருக்கின்றன. விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பிறகு (வசதியான) சிறைவாசம் என்பதற்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தில் கணிசமாக ஒரு பகுதியைச் செலவிட வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. ஆகக்கொலையாளிகள் பிரான்சுநாட்டினை விரோதமாகப் பாவித்தபின்பு, அவர்கள் செலவில் தங்கள் உயிரைப் பேணுவது எவ்விதத்திலும் நியாயமுமில்லை.

குடிமக்களும் ஆட்சியாளர்களும் – 2

இன்றுவரை இடது சாரிகளில் Parti socialisteம், வலதுசாரிகளில் Les Républicains கட்சியும் (இதற்குமுன்பாக RPR என்றும் UMP என்றும் பெயர் வைத்திருந்தவர்கள்) மாறி மாறி ஆட்சியிலிருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் செல்வாக்கிழந்து நாட்கள் பல ஆகின்றன. ஒரு சில நகராட்சிகளைக் கைப்பற்றுவதோடு அவர்கள் திருப்தி அடையவேண்டியிருக்கிறது. அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொழிற்சங்கங்கள் தற்போதைக்கு ஆறுதல் தருபவையாக உள்ளன. கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகளின் தலமையின் கீழ் அமைச்சராக முடிந்ததெல்லாம் இனி நாஸ்டால்ஜியாவாக அசைபோடமட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கு உதவும்.

பிரான்சு: குடிமக்களும் ஆட்சியாளர்களும்

பிரான்சு நாட்டில் வாக்குரிமை வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டில், சரியாகச்சொன்னால் பிரெஞ்சுபுரட்சிக்குப் பிறகு, மக்களுக்கு வாய்த்தது. பிரெஞ்சுப் புரட்சியை வழி நடத்தியவர்கள் பூர்ஷுவாக்கள் (Bourgeoise) Bourg என்றால் நகரம் (உதாரணம் -Strasbourg) ஆக நகரவாசிகள் என சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எனவே 1789ல் ஆரம்பத்தில் குறைந்த பட்ச வரித்தொகையை செலுத்தியவர்களுக்கே வாக்குரிமை எனச்சொல்லப்பட்டது. வாக்குரிமையின் ஆரம்பகாலத்தில் எல்லா நாடுகளுமே இதையே கடைப்பிடித்திருக்கின்றன. தவிர வாக்களிக்கும் வயது 30 ஆகவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலமையும் இருந்தன.

பிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்

மனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.

பிரான்சு : பிரெஞ்சு மக்கள்

இன்றைய பிரெஞ்சுமக்களைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட இம்மக்களின் சமூககம் வேர்பிடித்த காலம் அண்மைக்காலத்தில்தான் நிகழ்ந்தது, ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட வரலாறுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. பிரெஞ்சுக் காரர்களின் பூர்வீக மக்கள் என்று பலரை வரலாற்றா¡சிரியர்கள் குறிப்ப்பிடுகிறார்கள். 13ம் நூற்றாண்டில் இந்திய ஐரோப்பிய வழியில்வந்த கெல்ட்டியர்கள் ஆயிரக்கணக்கில் இன்றைய பிரான்சுநாட்டில் குடியேறியதாகவும் அவர்களை ரொமானியர்கள் கொலுவா என அழைத்ததாகவும், அம்மக்களே பிரெஞ்சுக்காரர்கள் எனகூறுகிறவர்கள் இருக்கின்றனர் வேறு சில வரலாற்றாசிரியர்கள் பிரெஞ்சு மக்களின் முன்னோர்களென்று ரொமானியர்களைச் சொல்கிறார்கள்

பிரான்சு நிஜமும் நிழலும் -5: உணவும் -விருந்தும்

ஐரோப்பியரல்லாத ரெஸ்ட்டாரேண்ட்களில் இந்திய மற்றும் சீன ரெஸ்ட்டாரெண்ட்கள் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பிப் போகக்கூடியவை. இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்கு காந்தி யென்றோ, இந்திராவென்றோ, பாம்பே என்றோ, தில்லி என்றோ, தாஜ்மகால் என்றோ பெயர்வைப்பது பொதுவாக வழக்கில் இருக்கிறது. இந்தியா உட்பட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காந்தி தற்போதைக்கு ஒரு வியாபாரப் குறியீடு என்பதால், பாகிஸ்தானியர்கள் உட்பட காந்தி என்ற பெயரைத்தான் வைக்கிறார்கள், ‘ஜின்னா’ வென்று தங்கள் ரெஸ்டாரெண்டிற்கு பெயரிடுவதில்லை.

பிரெஞ்சுக் குடும்பம்

நவீன பிரெஞ்சுக் குடும்பம் -கலப்பு குடும்பம் – சமூகத்தின் எதிர்பார்ப்பைத் துச்சமாகக் கருதுகிறது. தனிமனிதனின் உடல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மனிதத்தின் ஒழுங்குகளை கலைத்துப்போட்டிருக்கிறது. இரத்த உறவுகள்கொண்ட பிள்ளைகள், தம்பதிகள் ஆகியோரிடமே சிற்சில சமயங்களில் அசாதரண பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோது, உடம்பின் இச்சையை மாத்திரம் கணக்கிற்கொண்டு ஒழுங்கைச் சிதைத்து கட்டமைக்கப்படும் நவீன குடும்ப அமைப்பு ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ அல்ல உணர்ச்சிகளின் ஆதிக்கம்- ஆபத்தானது.

பிரான்சு: நிஜமும் நிழலும் -3

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் சந்திப்பு நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை

பிரான்சு: நிஜமும் நிழலும் – 2

வீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் படியேறுகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ர வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு . இப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது:

பிரான்சு: நிஜமும் நிழலும்

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன்.

காப்காவின் நாய்க்குட்டி (நாவல்)

ஒரு திறந்த வெளியில் மீண்டும் மனித சமுத்திரத்தில் விழுந்திருக்கிறாள். உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகள். சீருடைபோன்ற ஒற்றை வண்ண மழைக் காப்பு ஆடைகள். பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்புடன் பொறுப்புமிக்க தம்பதிகள். இளம் காதலர்கள். தோழிகள். நண்பர்கள். அல்லது இவை எதுவுமே அற்ற மனிதக் கலவை. அபூர்வமான உடையணிந்து இசைக்கச்சேரி அல்லது நாடக விளம்பரத்திற்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முகங்களுக்கிடையில் நடந்தபோது தன்னை ஒர் இம்ப்ரஸனிச ஓவியமாக உணர்ந்தாள்

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் – தன்னை எழுதுதல்

எழுத்துக்கு வேர் பேச்சு எனில், தன்னை எழுதுதலுக்குத் ‘தன்னைப் பேசுதல்’. மனித வரலாற்றில் தொடக்கத்தில் பேச்சாளனும், பின்னர் எழுத்தாளனும் வருகிறார்கள். மேடையில் ஊரறிய அல்லது நாலுபேரிடம் தனது தனது சுபகீர்த்திகளைச் சொல்லப்பழகியவனுக்குத்: தனது அபகீர்த்தியினை, தனது அகவெளியின் அழகுகளை, ஆபாசங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது தனியொருவனாக மனதிற்படுகிற வதைகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள ‘தன்னைப் பேசுதலைத்’ தொடக்கத்தில் இரண்டொருவரிடம் தொழிற்படுத்தியிருக்கவேண்டும்.

மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டுவந்தவைபோலவும், அந்தக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பதுபோலவும் இருக்கிற முகங்கள்.

ஜெயந்தி சங்கரின் நெடுங்கதைகள்…..

ஜெயந்தியின் நாவல்களில் உரையாடல்களின் பங்களிப்பும் முக்கியமானது. பல நேரங்களில் வெகு எளிதாக கதையை முன் நகர்த்த அவை உதவுகின்றன. அக்கறையோடு செவிமடுத்தால் சொற்களின் தொனி தெளிவாக, இயல்பாக கேட்கின்றன. வாசிக்கிறவர்களுக்கு கதைக்கான களமெது, உரையாடுபவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள், அவர்களது பின்புலமென்ன என்பதை துல்லியமாக உணர்த்தும் வசனங்கள் நாவல்கள் நெடுக வருகின்றன. குரல்களூடாக, சொற்களைக்கொண்டு பேசுவது ரம்யாவா சந்தியாவா; குமாரா செந்திலா; அவுன்ஸ் மாமாவா அத்தையாவென சட்டென்று சொல்லிவிடலாம்.

அறன் வலி உரைத்தல்

மனிதரில் பத்து சதவீத புண்ணியவான்களுக்கு இப்படியொரு சாமர்த்தியம். எஞ்சியிருக்கிற 90 சதவீதத்தினர் செக்குமாடுகள்போல சாவகாசமாக வாழ்க்கையை சுற்றிவரபழக்கப்பட்டவர்கள். அந்த அசட்டு மந்தையில் நானும் ஒருவன். இப்படி எப்போதாவது எதையாவது உளறிக்கொண்டிருக்கிறேன். நியாயங்களை அல்லது நியாயங்களென்று நம்புவதை கேட்பாரற்ற(?) வெளிகளில் உதறிவிட்டு, கோடைகால காவிரிப்படுகைபோல ஈரம் காணாமல் வெப்பத்தை உண்டு பசியாறுகிறேன்.

நடுக்கடலுக்குப் போனாலும்…

– எங்க தலைவர அவன் இவண்ணு சொல்றான் மாமா.
– விடு வேணு. இதென்ன புதுசா, எல்லோருமே அப்படித்தான் சொல்றோம். நீ மத்த நடிகருங்களை அப்படி சொல்றதில்லையா?
– இப்ப அவரு ஒரு கட்சிக்கு தலைவரு.
– எந்தத் தலைவராக இருந்தாலும், அப்படித்தான் நாம ஏக வசனத்தில் அழைக்கிறோம். மரியாதை கொடுக்கிறமாதிரி அவங்க நடந்துக்கணும், இல்லைண்ணா சொல்லத்தான் செய்வாங்க.

பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்- தாய்-சீஜி

தாய்-சீஜிக்கு இரு வடிவங்களுண்டு. அவரொரு தேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் என்பது முதலாவது, வெற்றிகரமான எழுத்தாளர் என்பது இரண்டாவது. முதலாவது துறையில் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டது ஏராளம், குறிப்பாக சீன அரசிடமிருந்து. ‘எனது மனத்துயரம் சீனா’ (Chine ma douleur) என்ற திரைப்படத்திற்காக சீன அரசாங்கம் அவரை நாடு கடத்தியது. அப்படத்தில் வரும் இளைஞன் செய்த குற்றம் அரசால் தடை செய்யப்பட்டிருந்த இசைத் தட்டொன்றை தனது வீட்டில் வைத்திருந்ததும், அதைப் போட்டுக் கேட்டதும்.