முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்

This entry is part 53 of 72 in the series நூறு நூல்கள்

எழுத்தாளர் காலத்துகள் தனது அண்மைய சிறுகதை தொகுப்புகள் இரண்டை அனுப்பி வைத்திருக்கிறார், அவற்றில் ஒன்றன் பெயர், _முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்._

“சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைத்தாக வேண்டும்,” என்று ஆல்பர் காம்யூ எழுதியதாக நினைக்கிறேன் (அவர் அப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை – பிரஞ்சு மொழியில் என்னவோ எழுதியது ஆங்கிலப்படுத்தப்பட்டு அதன் தமிழாக்கம் இது போல் இருக்கிறது (‘imagine’ என்று ஆங்கிலத்தில்- இதை நாம், சிசிபஸ் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும், என்று அர்த்தம் பண்ணிக் கொள்வதா அல்லது, அவன் மகிழ்ச்சியாக இருப்பதாக வைத்துக் கொள்ளலாம், என்றோ  சிசிபஸ் மகிழ்ச்சியாக இருப்பதாய் கற்பனை செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை, எனறோ புரிந்து கொள்வதா?). இந்த தமிழாக்கம் மட்டுமல்ல, எந்த தமிழாக்கமும் முழுக் கதையையும் படிக்காமல் சரியாக வராது. அப்போதும்கூட இந்த ஒற்றை வாக்கியத்தில் மட்டுமல்ல, முழுக் கதையிலும் நாம் காணக்கூடிய அர்த்த அனர்த்த சாத்தியங்களுக்கு முடிவில்லை).

சிசிபஸ் பேச்சு ஏன் வருகிறது என்று பார்ப்பதற்கு முன், “_மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள், இன்னும் மேலான தோல்வியைத் தழுவுங்கள், சிறப்பான தோல்வி அடையுங்கள்_” என்ற பெக்கட்டின் ஆப்த வாக்கியத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறை தோற்றுப் போகும்போதும் சிசிபஸ் இன்னும் மேலான தோல்வியைத் தழுவி சந்தோஷப்படுகிறான் என்று கற்பனை செய்வதில்தான் என்ன மோசம் போகி விடப் போகிற்து? தோல்வி உறுதி என்றாலும்  முனைப்பைப் கைவிட முடியாது. முனைப்பு இருக்கும் வரை முயற்சியும் தொடரப்போகிறது.

சிசிபஸ் ஒரு பெரிய கல்லை மலையின் உச்சியை நோக்கி உருட்டிக் கொண்டு செல்கிறான், அது உச்சியைத் தொட்டதும், கீழே உருண்டு விழுந்து விடுகிறது. அவன் தொடர்ந்து தன் முயற்சியை தொடர்கிறான். ஏறுவதும் இறங்குவதுமாக அவனது வாழ்க்கை தொடர்கிறது. சிசிபஸின் கதை மேலை இலக்கியத்தில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம், காலத்துகளின் கதைகள் இன்னும் அந்த உயரத்தைத் தொடவில்லை என்பது உண்மைதான், ஆனால் அவருக்கும் தன் கல்லை உருட்டும் உரிமை உண்டுதானே? இதில் ஒரு வேறுபாடு உண்டு – தொகுப்பின் தலைப்பு சொல்வது போல, அவரது பயணம் கீழ் நோக்கிச் செல்கிறது, ஒரு பெரிய கல்லோடல்ல, ஒரு சிறிய முற்றுப்புள்ளியுடன்.

இருத்தலியலோ பின்நவீனத்துவமோ தமிழிலக்கியத்தில் கைகூடவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து, இதை ஒரு பொது விமரிசனமாக முன்வைக்கும் துணிச்சல் எனக்கு இல்லை. _Pastiche_ இப்போதும் உயரிய மொழியாக கொண்டாடப்படுகிறது, நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்ற அளவிலேயே ஐரனி நின்று விட்டது, அதற்குரிய தொலைவு நமக்கு எட்டவில்லை, உடைத்து எழுதுவது, புனைவைப் பற்றி கதையிலேயே பேசுவது போன்ற விஷயங்கள் பின்நவீனத்துவம் என்று முத்திரை குத்திக் கொள்ள போதுமானவையாக இருக்கின்றன. காலத்துகள் கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் என்னை வசீகரிக்கவில்லை. உலகில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன, கதை எழுத முடியவில்லை என்பதும் கதைக்குள் கதை இருப்பதும் கதையிலேயே கதையைப் பேசுவதும் ஒரு சமிக்ஞையாகத்தான் எனக்குத் தெரிகிறது. சம்காலத்தில் இலக்கியம் படைப்பதன் சமிக்ஞைகள்.மைல் பலகைகள்?

இங்கேதான் நாம் செயற்கை நுண்ணறிவின் காலத்தில் இருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அந்த சிந்தடிக் டெக்ஸ்ட்கள் நம்மைப் போலவும் நம்மை விடவும் நல்ல கதைகள் சொல்லப் போகின்றன. அவை உற்பத்தி செய்யும் கதைகளுக்கு முடிவே இருக்கப் போவதில்லை. எழுத்தாளன் தன் எழுத்துக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறான், அவனது வாழ்க்கை அவனது கதையை எந்த அளவுக்கு விளங்கச் செய்யப் போகிறது, அவன் தன்னை எழுத்தில் தோலுரித்துக் கொள்கிறானா, தன் எழுத்தில் தன்னை பணயம் வைக்கிறானா என்பது போன்ற இலக்கியத்துக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் அதன் உண்மைக்கு சான்றாக அமையும். ஒரு கோரிக்கை விடுத்தால் எப்படிப்பட்ட கற்பனை கதையும் சாத்தியம் என்ற காலத்தில் இக் கதையின் கற்பனைக்கு என் வாழ்வே சாட்சி என்று சொல்லும் கதைகள் தனித்து நிற்கக் கூடியவை.

காலத்துகள் ஒரு முயல் வளைக்குள்- முடிவற்ற பயணத்தை -ஒரு முற்றுப்புள்ளியில் ஆரம்பித்து தொடர்கிறார். முற்றுப்புள்ளியின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அவரது கதைகள் வெளிப்படுத்துவதாய்ப் பார்க்கிறேன். உயரங்கள் அவரது இலக்கல்ல என்பதால் வீழ்ச்சிகள் அவருக்கு இல்லை, அதற்கு நேரெதிர் திசையில் செல்லும் அவரது பயணத்தில் விழுந்தால் எழுந்து அதே திசையில் செல்ல வேண்டியதுதான். திரும்ப முடியாது, ஒரு சிசிபஸிய பயணமாய் இதைக் கண்டெடுத்தேன் என்று எந்த கல்லையும் தூக்கிக் கொண்டு மேலே வர முடியாது. ஆனால் இதிலும் தற்காலிகமாகவெனினும், கண்டெடுப்புகள் உண்டு என்பதால் தான் தேர்ந்தெடுத்த இந்த பயணத்தில் கதைசொல்லி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறிப்பில் நவீன ஆட்டோகம்ப்ளீட்டின் பொருள் விளங்காத மேதைமை இருப்பதை நுண்பார்வை கொண்ட நண்பர்கள் உணரக்கூடும். அதாவது, படிக்காமலேயே படிச்ச மாதிரி எழுதுவது.  அதற்கும் நாம் பழகிக் கொள்வது நல்லது- பின்நவீனத்துவத்துக்கு பிற்பட்ட காலம் எதுவாக இருப்பினும், அதில் – எழுத்தாளனின் வாழ்வனுபவ சாட்சியத்துடன்  பொருள் விளங்காத மேதைமையும் இரு பிரதான குணங்களாக இருக்கும். எழுத்தாளனின் இடத்தில் துப்பறிவாளன் பிராக்ஸி கொடுக்கும் காலத்துகளின் இக்கதைகளில் அந்த லட்சணத்தின் துவக்கங்கள் தென்படுகின்றன- தரவுகளை உற்பத்தி செய்து தீர்மானங்களை அடைவதில் இன்ஸ்பெக்டர் எக்ஸ் வில்லனாக இருந்தாலும் இப்படிப்பட்ட காலத்தில் வாழச் சபிக்கப்பட்ட எழுத்தாளனின் குவாண்டரி இன்னதென்று சொல்லத் தக்கதல்ல. இப்போதும் இனியும் எழுதப்படும் கதைகளைக் கொண்டுதான் அதன் வரைகள் துலக்கம் காண முடியும். 

நூறு நூல்கள்

கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள் கனவு மழை

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.