அடையாளம் 

கடைகளும் தெரு வியாபாரங்களுமாக ஜேஜேயென்றிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் நாட்டியாஞ்சலி விழாவுக்கென்று இப்போதே ஊர் விழாக் கோலம் பூண்டு கொள்ள ஆரம்பித்து விட்டது என்று சென்னையில் இருந்த போதே ஜெயராமன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சுற்று வட்டாரத்திலிருந்து வந்து அப்பும் கடை கண்ணிகள் இல்லாத விழா ஏது?

ஒருத்தி மகளாய்ப் பிறந்து…

கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனையோ சிசுக்களைப் பிறந்த சில நாட்களுக்குள் பெற்ற தாய்களிடம் இருந்து பிரிக்கும் பாவத்தையும், அந்தப் பச்சிளம் குழந்தைகளை அன்புடன் ஆதரவுடன் வளமுடன் வளர்க்கும் குடும்பங்களில் சேர்த்த புண்ணியத்தையும் ஒருசேர செய்து வருகிறேன். இதுவரை நான் வழிசெய்த எந்த இடமாற்றமும் துயரத்தில் முடிந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம், மனிதர்களின் தராதரத்தைக் கணிக்கும் எனது சாமர்த்தியம்

பிரதி

அன்றுதான் அல்கா முதன் முதலில் அந்த ஒளிரும்‌ கிருஷ்ணனைக் கண்டாள். அதென்ன அப்படி ஒரு அழகு ஒய்யாரம். இடையில் என்ன ஒரு ஒசிவு. அவன் காலருகே தலையை அள்ளிப்பிடித்தபடி ஒரு பித்தி. அவள்தான் தான் என்று நினைத்தாள் அல்கா. கண்ணைக் கொட்டி கொட்டி எத்தனை முயன்றாலும் நீர் திரண்டுகொண்டே இருந்தது. ரமாபாய் சொன்னாள் ‘பரவால்ல இந்த அழகுக்கு முன்னாடி அழாட்டிதான் தப்பு’. அந்த ஒரு மாலையில் அந்த அயல் நிலத்தை தனதாக உணர்ந்தாள் அல்கா.

என்ர ராசாவுக்கு

திருமணமாகி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும். இருவரும் தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசிக்கும் எண்ணத்தில் திருச்சி வந்திறங்கி, பின்னர் சில திருத்தலங்களை தரிசித்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை வந்தடைந்தனர். ஆகம விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருந்த ராஜகோபுரங்களின் கம்பீரமும் அழகும் அவர்களை பிரமிக்கவைத்தது.

கரிக்குருவி நூறு

பிரகாசிக்கும் முகம், சுருக்கம் விழாத தோல், சரியாத ஸ்தனங்கள், தேயாத வளைவுகள் இவையெல்லாம்தான் அவன் கண்ணுக்கும் தெரிந்திருக்குமா… நான் கணவனோடு நிறைவாக வாழ்ந்து முதிர்ந்தவள் என்பது தெரியாதா? என் மனம் குறித்து ஏன் அவன் சிந்திக்கவில்லை? இதற்காக எத்தனைநாள் திட்டமிட்டு காத்திருந்தான்… தெரிந்தவனா? தெரியாதவனா? அறிமுகமானவனா? பேசிப் பழகியவனா? உறவா? எதிரியா? வழிப்போக்கனா…. விடையற்ற கேள்விகள் உதயமாகும் போதெல்லாம் எனது உடல் முழுவதும் சன்னி வந்தது போல் நடுங்குகிறது

இருள் வெளிச்சம்

அதிகாரத்தின் நெடிய கைகளில் இருந்து தப்பிக்க அது இயங்கும் நேரத்தில் நாம் இயங்காமல் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். வறியவர்களின் கைகள் இருளில் தான் ஓங்கியிருக்கும் வாய்ப்பிருக்கிறது. அது அதிகாரத்தை கூட நடுங்க வைக்கும். அம்மா செய்த ஒரு கொலையை நான் கண்டிருக்கிறேன். அது இருளில் ஆரம்பித்து இருளில் முடிந்ததால் பகலின் நியாய சட்டங்கள் அதற்கு பொருந்தாது என்ற வியாக்யானம்

தங்க நகரம்

அதை வெகு நேரம் மார்க் ஆராய்ந்து தன் குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். ஜானை அருகில் அழைத்து அந்த கல்லை சுட்டி காட்டினார். பார்ப்பதற்கு அது ஒரு துணியை அடித்து துவைக்கும் துவைகல் போன்று தோன்றியது. அதன் மேற்பரப்பில் எல்லாம் பச்சை பாசி படர்ந்திருந்தது. ஆங்காங்கே சில மஞ்சள் மற்றும் சிவப்பு கறைகள் போல் திட்டுகள் தெரிந்தன.

மாதவிப் பொன் மயிலாள்

ஒரு ஆவர்த்தம் ஜதி சொல்லி பின்னழகைக் காட்டி அசையாமல் அவள் நிற்க உளி அந்த மென்மையான கற்களில் அவள் நின்ற நிலையை வடித்துக் கொண்டிருந்தது. பின்னர் ‘தர்ஷன் தேஜோ நாத்’ என்ற ‘ஸ்தாவன்’ (பதம்) எடுத்து அபிநயிக்க அதில் சித்தம், சித்தாலயம் என்ற நிலையில் அவள் ஆடாமல் அசையாமல் நின்றாள். அந்த நிலையில் உடலின் கீழ்ப் பகுதி ஒரு நேர்க்கோட்டில் நிற்க, இடை ஒசிந்து, மார்புகள் விம்மி, கரங்களில் தாமரைத் தண்டு கொண்டு வருடும் வீணை அமர்ந்திருக்க, காதுக் குழைகள் நிலைத்து நிற்க, நெற்றி விரிய, எடுத்துக் கட்டிய சிகையே மகுடமாக அவளே ஒரு சாத்யகி போல நின்றாள்

உதயத்தில் ஓர் அஸ்தமனம்

அவள் களைத்துப் போனது போலத் தெரிந்தாள்.  மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது.  கவலை அவள் முகத்தில் கருநிழல் போலப் படர்ந்திருந்தது.  அவளது முடியிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அதைக் கழுத்துக்கு மேல் ஒரு கொண்டையாக முடிச்சிட்டு வைத்திருந்தாள்.  அவளது உடைகளும் ஈரமாகத்தான் இருந்தன.  மிகவும் இளமையாகவோ, மிகவும் முதிர்ச்சியாகவோ இல்லாமல் பார்க்க இனிமையாகத் தெரிந்தாள் அவள்

உதிர்தல்

பசுக்களெல்லாம் கொட்டடைந்தபின்னான மாலையில் சொன்ன நாள் நேரத்துக்கு ஊர் கூடியிருந்தது. பறவை திசை நோக்கி ஷிவலிங்கையா இந்த வருடம் மழை அதிகமிருக்குமென்றும், இன்னும் இரண்டு நாட்களில்  மழை துவங்குமென்றும் சொன்னார். ஊர் தானியங்களை நீர்ப்பதமேறாமல் பாதுகாக்கக் கிடங்குக்கு இன்னும் இரண்டு சுவர் கூடுதலாக எடுக்க வேண்டுமென்றார். அதுவரை அவ்வூர் கண்டிராத மழை அவ்வருடம் இருக்கப்போவதாகச் சென்னார். நிகழாதவை தன்னை நிகழ்த்திக்கொள்ளும் காலமது.

அசல்

வாழ்க்கை அதேபோல் நெருக்கடியில் செல்வதாகவே விதிக்கப்பட்டது என்பதாகவே நான் எடுத்துக்கொண்டேன். இப்போது செல்பவர்களும் அப்படித்தான் எண்ணக்கூடும். இரண்டு பெட்டிகளுக்கு பின் கூட்டம் குறைவாக இருக்கக்கூடும் என்பதையோ உடலும் மனமும் நெருக்கடியின்றி செல்லமுடியும் என்பதையோ அறியவேயில்லை. முதல் பெட்டியில் செல்வதால் எப்பயனும் இல்லையென ஒரேயடியாக மறுத்துவிடமுடியாது. சாலையிலிருந்து வந்து ஏறுவதற்கு அதுதான் முதன்மையானது.

ஓவியம் என்பது யாதெனில்…

வெண்ணிற தாடி, தொப்பிகள் மறைக்காத நரை மயிர், சுருக்கங்களும் பள்ளங்களும் நிறைந்த சுமுகமான முகங்கள். அவற்றில் என்ன தத்ரூபமான வெளிப்பாடுகள்! காலமெல்லாம் தோழமை கொண்டாடிய இருவர். பரஸ்பர அன்பு, நம்பிக்கை, ஒருவரின் ரகசியங்களையும் குறைபாடுகளையும் மற்றவர் அறிந்த அன்னியோன்யம். உரையாடலில் ஒரு இடைவெளி. அந்தக் கணம் சித்திரத்தில் உறைந்திருக்கிறது. ஒருவர் ஏதோ சொல்ல நினைக்கிறார். அதற்கு சரியான வார்த்தைகளைத் தேடுகிறார்.

ஆண்மை

தன் மாளிகையின் உப்பரிகையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார் பீஷ்மர். நதியின் அலைகள் காற்றில் அலைபாய்ந்து கரைகளைத் தொட்டுச் சென்றன. அவைகளின் மேல் ஆதவனின் பொன்னிறக் கிரணங்கள் ஆசையுடன் படிந்தன. இவைகளெல்லாம் தன் இயல்பில் இருக்கையில் ஏன் மனிதன் மட்டும் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை வகுத்தான்? வாய் பேச “ஆண்மை”

வரம்

நல்லதுதான், ஒரே முதலீட்டை நம்பி இருக்க முடியாது, இன்றைக்கு என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள், தேவைப்பட்டால், இன்னொன்று பார்க்கலாம், என்னுடைய நீண்ட கால நண்பன் தான்“ என்று இன்னொரு பெயரை உதிர்த்தார். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எனக்கு பழக்கம் இல்லை, எழுதிக் கொண்டேன். ஒரு வேளை அவருக்கு அதில் ஏதாவது கமிஷன் கிடைக்குமோ என்னவோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது

பாலசுப்ரமணியன் ரயில்வே ஊழியர். திருமணம் சொந்தத்திலேயே அமைந்தது. பின்னே சும்மாவா, பட்டமங்கலத்தான் பரம்பரையில் முதல் அரசு ஊழியன். முறை உள்ள சொந்தங்கள் எல்லாம் நீ நான் என்று போட்டி போட, பாலசுப்ரமணியன் தெரிவு செய்தது தூரத்து உறவுக்கார பெண்ணான தங்கத்தை. வந்த வரன்களில் தங்கம் படித்தவள். பட்டம் பெறவில்லை என்றாலும், பனிரெண்டு வரையில் படித்தவள். கிளை நூலகத்தின் உறுப்பினள்.

களத்திர ஸ்தானம்

காலைலேர்ந்து ஒரு பொண்ணு வீட்டுக்காரன் வரல பாத்துக்கோ. தொண்ணூறு பையன் ஜாதகம் வந்தா பத்து பொண்ணு ஜாதகம் வருது. என்னத்தச் சொல்ல போ.. ஒரலும்  ஒலக்கையுமா செய்யச் சொன்னா வெறும் ஒலக்கையாச் செஞ்சு போட்டுருக்கு, கிறுக்குக் கூதி புள்ள..ஒலக்க வேணும்னா சொல்லு…என்று கண்ணடித்த மீனாச்சியைப் பார்த்து ‘அப்பிடி ஏதும் பிடிச்சிட்டயா என்ன?’ என்று கேட்க நினைத்து கேட்காமல் சிரிப்பதைத் தவிர ஏதும் செய்ய முடியவில்லை

கதவு

” பஞ்சாயத்துல தீர்வை பாக்கி கட்டலைன்னு, நேத்து சாய்ந்தரம் கதவ கழட்டி கொண்டு போய்ட்டாங்க. விடிஞ்சா, என் கடைசி பொண்ணு தங்கத்தை, பொண்ணு பார்த்து பரிசம் போட வராங்க. அடுத்த முகூர்த்த தேதியில கல்யாணம் முடிவாயிரும்.இப்ப இப்புடி ஒரு சூழ்நிலை. எனக்கு உதவி பண்ணு கந்தா” என்று பொன்னுசாமி கண்ணீர் விட்டு கலங்கி நின்றபடி கேட்டார்.

சண்டிகா

என் கட்சிக்காரர் தான் சுமக்கும் மூன்றாவது கருவை சட்டப்படி அழிக்க நினைக்கிறார். அவர் கணவரின் முழு சம்மதமும் இதற்கு இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்து ஒராண்டுதான் ஆகிறது. உடல் உபாதைகள், மன நோய்க்கான சிகிச்சைகள் என்று அவர் தெம்பற்று இருக்கிறார்

தில்லையாடி வள்ளியம்மையின் சொந்தக்காரர்

நானும் இங்க இருந்தப்ப சாதி எல்லாம் பாத்த குடும்பத்துக்காரந்தாங்க. அது பாருங்க தில்லயாடிக்குள்ளே அங்காளி பங்காளிக்குள்ளேயே தகராறுதான். ஆனால் நூறு மைல் தாண்டி திருச்சிக்கு போனா நம்ம சாதின்னு யார் கிட்டயாவது போய் ஒட்டிக்கிடுறோம். மெட்ராசுக்கு வந்தா தஞ்சாவூர் திருச்சி ஜில்லாகாரங்க சிநேகிதம் பிடிச்சுக்கிடறோம். டெல்லிக்கு போனா? தமிள் பேசறவன் எல்லாம் சிநேகிதன்

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

“எல்லாமே ரெண்டு வரி, மூணுவரி கவிதைதான். இப்பம் எனக்கு ஒரு யோசனை பாத்துக்கிடுங்கோ. நம்ம ஓட்டல்லே டபுள் ரூம், சூட் எல்லாம் சேத்து எழுவத்திரண்டு ரூம் இருக்கு… எல்லாமே ஏசிதான். எல்லா ரூம்லேயும் நாலு செவுருலேயும் நம்ம கவிதைகளைப் பெரிய எழுத்திலே, ஓவியரைக் கொண்டு எழுதி பிரேம் போட்டு மாட்டுனா என்னாண்ணு

கடன்காரன்

எங்கிட்ட ஐம்பதாயிரம், ரெஜினாக்கிட்ட ஐம்பதாயிரம், அப்புறம் எங்க க்ளாஸ்மேட்ஸ் சதீஷ்கிட்ட அம்பதாயிரம், மகேஷ்கிட்ட எழுபதாயிரம்னு நிறைய பேர்ட்ட இப்டி வாங்கியிருக்காண்டா, இன்னும் யார் யார்லாம் இருக்காங்கன்னு தெரியல! சத்தியமா உன்னோட பேரு என் நெனப்புக்கே வரலடா, வந்திருந்தா உன்னையாவது காப்பாத்தியிருக்கலாம்..’ என்று கவின் சொல்லிக்கொண்டே போக என்னால் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன்.

வாலு போச்சி கத்தி வந்தது

சம்பந்தி அனுப்பிய லிஸ்ட்டை எடுத்துக்கொடுத்து  சாமான்கள் அத்தனையும் வாங்கிக்கொண்டான். ரூபாய் மூவாயிரத்து முந்நூற்றி முப்பத்து மூன்று  . ரூபாயை இரண்டு முறை எண்ணினான். கடைக்காரனிடம் கொடுத்தான்.  அவன் சொல்வதுதான் கணக்கு.  எந்த பொட்டலத்தில் என்ன வைத்துக்கட்டினானோ யார் கண்டார்கள். நேராக வாயுவேகா கொரியர் காரனிடம் போய் நின்றான். 

தீர்த்தம்

 எல்லா திசைகளிலும் தேடி அலைந்தவளுக்கு இன்னும் கீழத்தெரு மட்டும் பாக்கியிருந்தது.நேற்று தேடிவிட்டு வரும் வழியில் வாரியூர் வெற்றிலைக் குறிகாரரை பார்த்துவிட்டு வந்தாள்.’ஒன்னோட மாடு இந்நேரம் வண்டியேத்தி அறுப்புக் கடைக்கு போயிருக்கும்’ என மை தடவி கை விரித்த குறிகாரரின் வார்த்தைகளைக் கேட்டு மயங்கி விழுந்தவளை தண்ணீர் தெளித்து தெளிய வைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.கல்யாணிக்கு இரண்டு நாட்களாக சரியான உறக்கமில்லை

சரண் நாங்களே

உண்மைதான். எப்போதும் நாங்கள் அடிக்கிற மாதிரி அடிப்போம், அவன் அழுகிற மாதிரி அழுவான். எந்த நெறிமீறலுக்கும் இதே சூத்திரம்தான். எப்போதும் எங்கள் வற்புறுத்தலுக்காகத்தான் நெறி தவறுவது போல நடிப்பான். அப்படி ஒரு பிம்பத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது சுமைதான். தந்தையரிடம் பிள்ளைகளால் வெளிப்படையாக பேசவே முடிவதில்லை.

படையல்

வயக்காடு போதைடா.. சேத்துல கால் வைக்காத வரைக்கும் தான் தயக்கமெல்லாம்.. காட்டுல இறங்கி ரெண்டொரு நாள் வேல செய்ய ஆரம்பிச்சிட்டா அப்புறம் இந்த ருசியே பழகிடும். லாபமோ நட்டமோ செடி பயிரு மரம் மட்டை காக்கா குருவி மாடுனு இதுங்ககூடவே வாழ்ந்துடலாம்னு தோணும். அதான் அவனுங்கள காட்டுல அண்டவே விடுறது இல்ல. என்ன படிச்சாலும் பெரிய பதவிக்கு போனாலும் இந்த சேறு படிஞ்ச கோவணம் தானே எல்லாத்துக்கும் முதலு..

நினைவில் நின்றவை

மஞ்சுவை வெளியே கூட்டிச் சென்ற நந்தன், அங்கு நின்ற கார்களில் ஒன்றை மஞ்சு வீட்டிற்குப் போவதற்காக ஒழுங்கு செய்தான். காருக்குச் சமீபமாகக் குந்தியிருந்த ஒருவர் சாப்பாடு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அவரை மஞ்சுவால் அடையாளம் காண முடியவில்லை. ஒத்துவராத சாப்பாட்டை உடல் உதறித் தள்ளுகின்றது. ஒவ்வாதவற்றை உடம்பு மாத்திரமா வெளியேற்றும், மனமும் தான் துரத்தும். மஞ்சு காரின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.

பூனை சொன்ன ரகசியங்கள்

வகுப்பறைக்குள் செம்மண் நிற சேலையணிந்த ஒரு ஆசிரியை நுழைந்தாள். அவள் தலைக்கு மேலே பல வண்ணங்களில், பல வடிவங்களில் பலூன்கள். பலூன்களோடு பிணைக்கப்பட்ட கயிறுகளை கொத்தாகத் தன் கையில் பிடித்திருந்த ஆசிரியை வகுப்பறையின் நடுவே நின்றாள். குழந்தைகளைப் பார்த்து சிரித்துவிட்டு வித்தை காட்டுவதுபோல கையை விரித்து ஊதினாள். கயிறுகள் விடுபட்டு பலூன்கள் வகுப்பின் மேற்சுவரோடு ஒட்டிக்கொண்டது. வாய்திறந்து வேடிக்கை பார்த்த குழந்தைகள் ஓடிச்சென்று ஆசிரியையைச் சுற்றி நின்றார்கள்

பரிசு

பனிச் சிறுத்தைகளை படம் எடுப்பது மிகக் கடினம். முதலில் கண்களுக்கே எளிதாகத் தென்படாது. அவற்றுக்கு “ மலைப் பேய் “ என்றே பட்டப் பெயர் உண்டு. அவை பனி படர்ந்த மலைகளில் சுமார் ஒன்பதாயிரம் முதல் பதினெட்டாடிரம் அடி உயரத்தில் வசிப்பவை. குளிர் காலத்தில் மலையில் சற்று கீழே இறங்கி வரும். உருவத்தில் புலிகளை விட சிறியவை. உடலில் இருக்கும் சாம்பல்  நிறத் திட்டுகள், பனியிலும் பாறைகளின் பின்னணியிலும் அவை இருப்பதையே மறைத்து விடும். இந்தியாவில் இமைய மலைத் தொடரில் சுமார் நானூறு பனிச் சிறுத்தைகள் இருப்பதாகத் தகவல். நிறைய புகைப் பட நிபுணர்கள் அவைகளைத் தேடித்தேடிப் படம் எடுப்பதற்கு அவை எளிதில் காணக் கிடைக்காததே முக்கிய காரணம்.

கப்பை

யாரையும் வீட்டில் அழைப்பதோ அவர்கள் வீட்டிற்குச் செல்வதோ எனக்கு அறவே பிடிக்காத செயல். பழக்கத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவாறு எடைபோட்டுத் தொடர்வது, பிறகு அதே நபரின் பின்புலம் வசதி குறித்தறிந்த பின் நடத்தையில் ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்துபவர்களின் ஆபாசத்தில் அருவறுப்படைந்து, சிலரை விட்டு விலகியுமிருக்கிறேன். ஆதலால், யாராக இருந்தாலும் சந்திப்பு வெளியில் தான்

ராபர்ட் அற்புதராஜ்

அந்த நாள்! அப்போதுதான் பத்தாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது. அன்று பள்ளி முடிந்ததும் இரண்டு அணிகளாகப் பிரிந்து பயிற்சியாட்டம் ஆடினோம். ராபி எதிரணியில் ஆடினான். தாயைப் பிரியாத குழந்தைபோல பந்து அவன் காலைவிட்டு நகராமல் இருந்தது. எல்லைக்கோட்டில் நின்றிருந்த அலெக்சாண்டர் சார் ராபியின் ஆட்ட நுணுக்கங்களை சத்தமாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். தடுப்பாட்டக்காரனாக மாற்றப்பட்டிருந்த என்னைக் கடந்து ராபி ஒரு கோல் போட்டிருந்தான். சில நிமிடங்களில் ராபிக்கு மறுபடியும் கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. காற்றில் பறந்துவந்த பந்தைப் பாதத்தில் தாங்கி நிறுத்தினான். வலப்பக்கம் நகர்ந்து இடப்பக்கம் ஓடி தடுக்க வந்த ஒருவனை ஏமாற்றினான்.

முனி பள்ளம்

அங்கத்தான், 1949’ல ஒரு மிகப் பெரிய அசம்பாவிதம் ஆயிருக்கு. நீர் மின் நிலையத்துக்கு தண்ணீ கொண்டு போற பெரிய சுரங்கப்பாதை வெட்டிகிட்டு இருந்திருக்காங்க. அது மழை சீசன். ஒரு நாள் மத்தியானம் மேக வெடிப்பு ஏற்பட்டு எதிர்பாராத, கடுமையான மழை. தொடர்ந்து  பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு கல்லு மண்ணு பாறையெல்லாம் தண்ணியோட அடிச்சிட்டு  வந்து கட்டிட்டிருந்த குகையோட வாசலை மூடிடுச்சு! அப்ப உள்ளே கிட்டத்தட்ட 600 பேர் வேலை செஞ்சிட்டு இருந்திருக்காங்க”

நாய்கள் ஜாக்கிரதை

“ஏங்க? ரூல்ஸை நான் என்ன உள்ளங்கைலயா பச்சை குத்தி வச்சிருக்கேன், காட்டறதுக்கு? ஏத்தக் கூடாதுன்னா ஏத்தக் கூடாதுதாங்க.. அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஒழுங்கா லக்கேஜ் புக் பண்ணி லக்கேஜ் வேன்ல ஏத்துங்க… இல்லேன்னா பாசஞ்சர் சேஃப்டிக்குக் குந்தகம் வெளவிச்சீங்கன்னு அடுத்த ஸ்டேஷன்ல நாயோட சேத்து எறக்கி விட்ருவோம், தெரிஞ்சுக்குங்க”

யாழ் பறவை

“அவன் அப்ப இருந்த மனநிலையிலை, அந்தரிச்சுப்போய் அப்படி நடந்திருக்கலாம். உங்களைத் தேவையில்லையெண்டா, பேந்தும் பேந்தும் ஏன் அவன் உங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்? பாவம் அவன்ரை மனிசி… அவள் ஒரு அப்பிராணி,” பராசக்தி மீண்டும் உபதேசம் செய்துவிட்டு, தனது மொபல்போனைத் திறந்து தங்கச்சுரங்கத்தில் எடுத்த படங்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினார். 

பாப்பாக்காவும் பிரசாந்த் சினிமாவும் 

வாத்தியார் வீட்டின் வாசலில் நிற்கும் ஓங்கு தாங்கான முருங்கை மரத்தின் பொந்தில் தான் அவர்களின் காதல் சிறுக சிறுக வளர்ந்தது குருவி குஞ்சுகளோடு. துண்டு சீட்டு அதற்கு பதில் சீட்டு என்று இருவரும் மாறி மாறி குருவிகளை விட அந்த பொந்தை அதிகமாக பயன்படுத்தி கொண்டார்கள்.  எந்த கை உள்ளே வருகிறது, எந்த கை எடுக்கிறது என்பெதெல்லாம் முருங்கையும், பொந்தில் அடையும் குருவிகளுமே அறிந்த ரகசியம். கொஞ்ச நாட்களிலேயே குஞ்சுகள் வளர்ந்தன. தங்கள் திசை நோக்கி பறந்தன. 

40+

இந்தப் பூஜா ஹெக்டே ப்ளூ டூத் ஹெட்செட்டைத் தூக்கிப் போட்டுட்டு சென்ஹைஸர் வாங்குமா” பாபு அடிக்கடி கலாய்ப்பது நினைவுக்கு வந்து அதன் பங்கிற்கு புன்சிரிப்பை டெலிவரி செய்தது. இந்தப் பிட்ரான்(pTron) ப்ளூ டூத் சாதனம் நன்றாகத் தான் இருக்கிறது. பாடல்கள் கேட்க, செல் அழைப்புகளை ஏற்றுப் பேச, கைப்பையில் மொபைலைப்  பத்திரப்படுத்தி விட்டு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில்  மிகவும் செளகர்யமாக இருக்கிறது. துல்லியமான ஒலித்தரம், ஆடியோ அவுட்புட், பக்கா பேஸ் என பாபு ஏதேதோ சொல்கிறான்.

இசை

ஒரு இங்கிலீஷ் பயங்கரப் படம். பேரு ஞாபகமில்லீங்க. வெள்ளக்கார பொண்ணு குளிக்க போறா. வில்லன் கத்தியோட வந்து அவள குத்து குத்துனு குத்துறான். ரத்தம் சும்மா பீறி அடிக்குது. அப்ப பேக் கிரவுண்ட் மியூசிக்க கேக்கணுமே….. “வீல், வீல் . வீல் ” எணு சும்மா பிச்சி வாங்குது. மாமா சவுண்ட் டயல உச்சத்தில் வச்சி புடிச்சாரு. தியேட்டர் சும்மா அதிருது. அரைவாசி பசங்க கால தூக்கி கதிரையில் வைச்சி……. அத கேக்காதீங்க சார். கதிரைய நனைக்சிட்டானுக எண்ணா நம்புவீங்களா சார்?

கேட்டதும் கண்டதும்

அந்த வீட்டுக்குப் பெரியவா வந்தா. அப்போ வீட்டுக்காரரோட பரிச்சயம். பெரிய காம்பவுண்டு  உள்ளே நாலஞ்சு வீடுகள்.  ஒரு ரூம், சின்ன கிச்சன், அதை விடச்  சின்ன பாத்ரூம்ன்னு வீடு. வாடகைன்னு நானா கொடுக்கறதுதான். கொடுக்காட்டாலும் கேக்க மாட்டார். அப்படி ஒரு மனுஷன். “வாடகையை விட்டா ஒத்தக்கட்டைக்கு வேறே என்ன பெரிய செலவு?  சாப்பாடுதான்.  மாசா மாசம் பென்ஷன் வரது. இங்கே மாசத்திலே பதினஞ்சு நாள் தக்ஷணையோட சாப்பாடும் கிடைச்சுடும். பாத்தேளா, தக்ஷனைன்னதும்தான் ஞாபகம் வரது. ஐநூறு ரூபாயை வாத்தியாருக்கு வாபஸ் கொடுக்கணும்” என்றபடி கையிலிருந்த பர்ஸைத் திறந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தார்.

கடாரம் கொண்டான்

பாட்டி என்றால் நார்மடிப் பாட்டி இல்லை. நாகரீகப் பாட்டி. சுருக்கங்கள் இல்லாத ரவிக்கை அணிந்து இருக்கிறாள். காதில் வைரத்தோடு துலங்க கம்பீரமாக, தாத்தா போன இந்த பத்து வருடங்களில் ஓரிரண்டு சுற்றுகள் பெருத்தும் நிறத்தும் இருக்கிறாள்.”ஏன் பாட்டி.. நீ நல்லவளாத் தான இருந்தே? ராமாயணம் வியாசர் விருந்துன்னு படி படின்னு படிச்சுண்டு இருந்தே.. இந்த கூட்டத்தோட சேர்ந்து இப்படிக் கெட்டுப் போயிட்டியே..”

வெந்துயர்க் கோடை

படிக்கையில் சிரிப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. இவ்வளவு உக்கிரமான காதல் எப்படி பிரிவில் முடிந்தது. அவ்வளவு கறாரானதா வாழ்க்கை? இது என்ன இப்படியெல்லாம் மனதை உழட்டிக்கொள்கிறேன். நான் பாட்டுக்கு நெட்ஃப்லிக்ஸில் எதாவது ஸாம்பி படம் பார்த்துக்கொண்டிருப்பேன். இவனால் வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியாகிவிட்டது. மாதவை நேரில் பார்த்து இரண்டு வருடம் இருக்கும். மைசூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊர் பக்கம் வருவதே இல்லை. சென்னைக்காவது வா என்றாலும் வருவதில்லை.

கடிதம்

கண்ணு, இந்த கொஞ்ச நாள்லியே என்னமா எளச்சி போயிட்டடீ?. முந்தியெல்லம்கூட ஒனக்கு இப்படி ஒடம்புக்கு முடியாம போயிருக்குதான்!. ஆனா, கூட கூட போனாக்கா ரெண்டு நாளு. பேரு வெட்டி வந்துருவியே?.. ஏண்டி, இந்த தடவ ஒடம்புக்கு ரொம்ப முடியிலியா?. நா வந்ததுகூட தெரியாமா கண்ண மூடியே கெடக்குறியேடீ?. அது சரி! நாந்தான் எனக்கு புள்ளிங்களே கெடையாதுன்னு சொல்லிட்டன்!. எனக்காவ நீயும் அவுங்கள ஒரேடியா ஒதுக்கி வெச்சி, பெத்த மனம் பித்துன்றத பொய்யாக்கிட்டியேடீ!. இப்படி முடியாம இருக்கறப்பகூட அவுங்கள பத்தியெல்லாம் ஏங்கிட்ட ஒரு வார்த்த பேசுனது இல்லியே!.  

யானை வெரூஉம்

எட்ஜ் சாம்பியனாக இருந்த போது என் அப்பாவுக்கு கல்கத்தாவிற்கு மாற்றல் வந்தது. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தோம். எனக்கு மீசை லேசாக அரும்பியிருந்தது. ஆக அழ முடியாது எனும் கட்டாயம் வேறு. என் அக்கா வெஸ்ட் பெங்காலில் படித்தவள் ஒரு வருடமாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறாள். குடும்பமே கல்கத்தா திரும்பும் குதூகலத்தில் இருந்தது. நான் பேசிப்பார்த்தேன். ஒரு பயனும் இல்லை. வாழ்க்கை இனித்துக்கொண்டே இருக்கக் கூடியதல்ல என்பது அந்த காலத்தில்தான் அறிமுகமானது. என்னை ரயிலேற்றிவிட பிலுக்கோண்டு மட்டும்தான் வந்திருந்தான்

தூயக் கடலாள்

நாங்கலாம் மனுசங்க இல்ல இவனுக்கு எப்ப பாத்தாலும் சங்கரு சங்கரு.. போன வாரம் கோவா போனானே அக்கா மவளுக்குனு அக்காவுக்குனு ஏதாச்சும் வாங்கிட்டு வந்தானா? இவன் புள்ளைங்களுக்கு மாதிரியே அவன் புள்ளைங்களுக்கும் மேட்சிங்கா டிரஸ்ஸு.. அத போட்டோ எடுத்து வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் வேற.. இருக்கட்டும்..’ எனக் கறுவியவளை சமாதானப்படுத்த பிரபுவுக்கு வெகு நேரம் ஆனது.

பெரிய ஸார்

ஹைமவதி கையில் கொண்டு வந்திருந்த பச்சை நிற அப்ளிகேஷன் ஃபார்மையும் மார்க் ஷீட்டையும் எடுத்து அவரிடம் தந்தாள். அவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை லேசாக மேலே தூக்கி விட்டுக் கொண்டு பார்த்தபடியே மேஜை மேலிருந்த காலிங் பெல்லை அடித்தார். உட்பக்கத் தள்ளு கதவைத் திறந்தபடி பள்ளி அலுவலர்கள் அணியும் சீருடையில் ஒருவர் வந்தார்

உங்க வீட்ல தங்க விளைய..

போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா,   அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது  முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு   கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”

அந்த இவள்

சோறிடும் போது அவள் விரல்களை கவனிப்பான். அவை சின்ன சின்னதாக அழகாக இருக்கும். அவளின் விரல்களை காண நேர்கையில் அவன் எண்ணங்கள் எங்கோ போய்விட்டு மீளும்.  அவசரமாக தலையை வேகமாக உதறிக்கொள்வான். சாப்பாடும்  வைக்கும் போது அவள் காட்டும்  நேர்த்தியும், பதறியபடி இவனின்  ‘ம்….ம்’ என்ற முனகலுக்கு வார்ப்பதை நிறுத்தும் நரிவிசும் அவனுக்கு பிடித்திருந்தது.

மாரியின் மனைவி

மனிதர்களுக்கு கடுப்பையும், எரிச்சலையும் ஊட்டுவது கார்டிசால் என்ற ஹார்மோன். அட்ரினலின் சுரப்பியினின் மூலமாக கார்டிசால் மனிதனுக்கு ஆபத்து வந்தால் சுரக்கும்.  ஆதி மனிதனுக்கு அது  உயிர் வாழ உதவியாக இருந்தது. வனவிலங்குகளைக் கண்டால் மனிதன் ஓடவோ, சிலை போல நிற்கவோ, போராடவோ அது பல விதத்தில் உதவி செய்தது. அதே போல் மனிதனுக்கு பசியைத் தூண்டுவது க்ரெலின் என்ற ஹார்மோன். சில சமயம் கார்டிசால் க்ரெலின் சுரப்பை அதிகரிக்கும்.

உள்ளிருத்தல்

‘கல்யாணத் தரகு விசுவநாதன் இருக்கானே அவன்தான் போற போக்குல சொல்லிட்டு போனான் ‘என்ன சோம சுந்தரம்.. ராஜா வீட்டு கல்யாணத்துக்கும் நானே புடவ குடுக்குறேன்னு கேக்க வேண்டிதானே’ ன்னு, அன்னக்கி ராத்திரி எனக்கு தூக்கமில்ல. பொரண்டு பொரண்டு படுக்குறேன். காலைல விடியிறப்ப முடிவு பண்ணேன் ‘போயி கேட்டுர்ரதுன்னு. என்ன நடக்கும். விதி பெருசா ஓடிட்டு இருக்கு. யார எங்க தள்ளும் யாருக்குத் தெரியும்.  பாறைல மோதுமா இல்ல அப்டியே தூக்கி கரைல போடுமா யாருக்குத் தெரியும். காலைல குளிச்சு கோயிலுக்குப் போய் அப்பா காசி விசுவநாதா நீதான் கதீன்னு கும்பிடு போட்டு நேரா அரண்மனைக்கு நடந்தேன். இப்ப வேணா அவங்க ராஜாவ இல்லாம நாட்ட ஆளாம இருக்கலாம். ஆனாலும் ராஜ வம்சம் தானே. பணிவா போய் நிக்கிறேன். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு. தயங்கித் தய்ங்கி கேக்குறேன். கேட்டா நம்ப மாட்ட மணி. உடனே ஒத்துக்கிட்டார். அறுபத்திரெண்டு புடவ வேணும்னு சொல்றார்.

போர்

டெக்ஸாஸில் இருந்து கரடுமுரடாக வாஷிங்டனுக்கு வந்த ஜான்சனுக்கு முதலில் தன் படிப்பு, பின்புலம் சார்ந்து தாழ்வுமனப்பான்மை இருந்தது. பல இடங்களில் அது நெருடல்களாகவும், தெளிவின்மையின் சிக்கல்களும் வெளிப்படுவதை முதலில் ரேபரனும் அவர் மூலமாக ரஸ்ஸலும் அறிந்தனர். இருவருக்குமே ஜான்சனை பிடித்துப்போக முக்கியக் காரணம் அவர் தெக்கத்திக்காரன் என்பதே, மற்றபடி தேர்தல் அரசியலில் தொடர்வதற்கு தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் ஏற்கனவே இருந்தது. ரஸ்ஸலும், ரேபரனும் ஜான்சனுக்கு எந்த இடத்தில் உண்மையான அதிகாரமும், செல்வாக்கும் இருக்கிறது என்பதை காண்பித்துக் கொடுத்தவர்கள்.

பாவப்பட்டவன்

‘என் சர்வீசிலே நான் எவ்வளவோ பார்த்துட்டேன் சார்…திருச்சில நான் இருந்தபோது இப்படிச் சொல்லிட்டிருந்த ஒரு மானேஜரை, அவர் வயலூருக்கு டூ வீலர்லே போகறச்சே இடை மறிச்சு அடி பின்னி எடுத்துட்டாங்க சார்…அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் ஆபீசுக்கே வரலை. அப்டியே லீவைப் போட்டுட்டுப் போனவர்தான். மெட்ராஸ் போயிட்டார் ஒரேயடியா…! இவுங்கல்லாம் ரொம்ப வருஷமா தொடர்ந்து நம்ம ப்ராஜக்ட் ஒர்க் பார்த்திட்டிருக்கிறவங்க சார்…ஆளுகளைக் கூட மாத்த முடியாது…யாரையும் எதுத்துக்கவும் முடியாது. அவுங்களால எந்தப் பிரச்னையும் வராது. ஏன்னா எந்தச் சிக்கல்னாலும் அவுங்களே சமாளிச்சிக்குவாங்க…நாளைக்கு ஆடிட்ல பிரச்னை வந்தாலும் கையைக் காண்பிச்சு விட்டாப் போதும்..

கிரிஸ்ஸோபதேசம்

முதலீடுகளில்  பலவகை  உண்டு.  அந்த காலம் மாதிரி  மனைவியின் தாலியை  அடகு வைத்து, உனது கார்  கொட்டகையில் புத்தொழில்  தொடங்க முடியும். சில சமயம்  அது வெற்றி பெற்று ஒரு கோடி ஈட்டி ஒற்றைக் கொம்பு (unicorn) நிறுவனமாக வளரலாம்.  இல்லாவிடில்  மக்களிடம் முறையிட்டு கூட்ட நிதி சேர்க்கலாம். அடுத்த வழி  தேவதை முதலீட்டார்களை (angel  investors ) முதல் சுற்று முதலீடு கேட்பது.  பெரிய தொகையானால் முதலீட்டார்கள் கூட்டமைப்பை (syndicate )  அணுகலாம். அந்த மாதிரி பல கூட்டமைப்புகள் குழுமத்துக்கு நான்  தலைவன்.