சண்டிகா

“அப்போ, நா கோர்டுக்குத் தான் போகணும் இல்லியா?” கை விரல்களைப் பிணைத்துக் கொண்டு அவள் கேட்டாள்.

அருகில் அவள் கணவன் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் நிலவிய மௌனத்தை டீனின் கனைப்பு கலைத்தது. அவர் பேசும் முன்பாக, அவர் அருகிலிருந்த பெண் மருத்துவர் கோபத்துடன் கேட்டார் ‘என்ன பயமுறுத்துகிறீர்களா?’

அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

டீன் மீண்டும் கனைத்தவாறே சொன்னார் ‘நீங்க கேக்கறத நாங்க செய்யமுடியாது. உங்க உடல்   நெல மோசமா இல்ல; இம்ப்ரூவ் செய்யறதுக்கும் மருந்து கொடுத்திருக்கோம். நீங்க மனக் கொழப்பத்ல இருக்கீங்க. நீங்க அதுக்கும் மாத்ர எடுக்கறீங்க. இங்க ம்ருணாளினின்னு ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருக்காங்க. அவங்களப் பாருங்க, உங்க பயமெல்லாம் போயிடும்.’

அவள் சற்று அலட்சியமாகச் சிரித்தாள்.

“நன்றி, டாக்டர். நா வேற ஹாஸ்பிடல் பாக்கறேன்.” என்று எழுந்தாள்.

‘ஒரு நிமிஷம் உக்காருங்க. சார், நிமிந்து பாருங்க. அஞ்சு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. எங்க போனாலும் செய்ய மாட்டாங்க. யாராவது க்வேக்கிட்ட போனீங்கன்னா, பெரிய உசுரும் போய்டும். உங்க இரண்டு கொழந்தையும் தாயில்லாம நிப்பாங்க. நீங்க அவங்களுக்கு இணக்கமா எடுத்துச் சொல்லுங்க.’

‘அம்மா, கொஞ்சம் யோசிங்க. உங்க அம்மா உங்களக் கலைச்சிருந்தா நீங்களே இல்லேல்ல.’ என்றார் ஒரு ஆண் இளம் மருத்துவர்.

அவரையும் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தவள்,” நா இல்லேன்னு யார் அழுதா?” என்றவாறே வெளியேறினாள். அவள் கணவன் பின் தொடர்ந்தான்.

மருத்துவ மனையின் நீண்ட வராந்தாவில் சிறு தொட்டிகளில் செடிகள் புஷ்டியாக இருந்தன. பல வண்ணப் பூக்களும் அழகழகாய் அதில் சிரித்தன. வெளியில் ஈய நிற வானம், இந்த நிறம் ஏன் என்று சிந்தித்து பரந்து நின்றது. வளாகத்திலும் மரங்கள், மேடைகள், புல்வெளி என்று ரம்மியமான தோற்றம். ஒரு ஆட்டுக்குட்டியைப் போல அவளைப் பின் தொடர்ந்து சென்றவனுக்கு இந்தக் காட்சிகள் அவள் கண்களுக்குத் தெரியாதா, அவள் மனம் நெகிழாதா, இந்த முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாளா என்றிருந்தது.

அவர்கள் நடந்து கொண்டிருக்கையில் ஒரு பெண் ஓடி வந்து அவர்கள் காலில் விழுந்தாள். அவள் அதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. அவன் பதறிப் போனான். சுதாரித்துக் கொண்டு எழுந்த அந்தப் பெண், ‘அம்மா, பத்து வருஷமா ஒரு புள்ளக்கி ஏங்கறேன். நீ பெத்து எங்கிட்ட குடு தாயீ, நா வளத்துக்கறேன்.’

அவள் அந்தப் பெண்ணை தோளில் தட்டினாள். “நா பெக்கவே போறதில்ல. சும்மா கைகால்ல விழுந்து தொந்தரவு செஞ்சீனாக்க, நா பத்ரகாளியாயிடுவேன்.”

அவள் கணவன் வாயடைத்துப் போனான். வீட்டில் பேசிக் கொள்ளலாம் என்று வராந்தா முனை திரும்புகையில், இரு வார்ட் பாய்கள் இவர்கள் காதில் விழ வேண்டுமென்றே உரக்கச் சிரித்துப் பேசினார்கள்.

‘இந்தம்மா சொல்றதெல்லாம் சும்மா புரூடா; ஊர மேஞ்சு சுமக்குது. இது ரெண்டும் சுமார் நெறத்ல இருக்குது; அவன் நல்ல கலரோ என்னவோ, அதான் பயப்படுது.’

மற்றொருவன் சொன்னான் ‘அது சரி வாத்யாரே; புருஷங்காரன் இன்னமும் வெட்டி விடாம வாழறானே, வெக்கங்கெட்ட பய.’

அவள் தன் கால் செருப்பைக் கழற்றினாள். அவன் பதறி அவளை இழுத்துக் கொண்டு ஓடினான். பின்னால் அவர்கள் இன்னமும் ஓங்கிச் சிரிப்பது கேட்டது.

‘சொல்றதக் கேளு; இந்த விஷப் பரிக்ஷையெல்லாம் வேண்டாம். இது பொறக்கட்டும், உடனே கருத்தடை பண்ணிக்கலாம்.’

‘உனக்கென்ன ஈசியா சொல்லுவ. நான்னா சுமக்றவ; சுமக்றது மட்டுமா, அத வளக்கறதுக்கு படு பாடு படணும்.’

‘ரெண்ட வளக்கலியா, இது ஒண்ணுதான, இத்தோட நிப்பாட்டிடுவோம்.’

“நீ எங்கயா வளத்த, காலேல எட்டுக்குப் போனா, ராத்திரி 11க்கு வர. அல்லும் பகலும் நா கெடந்து அல்லாட்றேன். நா கோர்ட்டுக்குப் போவேன். சட்டப்படி கலைப்பேன்.”

‘உனக்கு வெட்டிச் செலவு செய்ய நா ஓவர் டைம் செய்யல தெரிஞ்சுக்கோ. கோர்ட் செலவுன்னு ஒத்த பைசா தரமாட்டேன் புரியுதா?.’

“சர்தான்; நா தாலிய வித்துட்றேன்.”

வழக்கறிஞர் நடுவயது தோற்றத்தில் இருந்தார். “நீங்க சட்டப்படி கருக் கலைப்பக் கேக்கறீங்க. கோர்ட்ல நம்ம பக்கம் தான் ஜெயிக்கும். ஆமா, ஏன் 22 வாரம் வரைக்கும் கவனிக்காம விட்டுட்டீங்க?” 

‘என் ரெண்டாவது கொழைந்தைக்கி பால் கொடுத்துக்கிட்டு வரேன்; அதனால பீரியட்ஸ் வல்ல; இந்தக் கருவால தான் வல்லைங்கறது, எனக்கு அதிகமா வயிறு வலிச்சப்புறந்தான் தெரிஞ்சது. எனக்கு உடம்புல தெம்பு இல்ல, வருமானமும் போதாது. இத சுமக்கவோ, வளக்கவோ என்னால முடியாது. அபார்ஷன் செய்யறாங்கள்ல, அந்த மாறித்தானே இதுவும்.’

“என் கட்சிக்காரர் தான் சுமக்கும் மூன்றாவது கருவை சட்டப்படி அழிக்க நினைக்கிறார். அவர் கணவரின் முழு சம்மதமும் இதற்கு இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்து ஒராண்டுதான் ஆகிறது. உடல் உபாதைகள், மன நோய்க்கான சிகிச்சைகள் என்று அவர் தெம்பற்று இருக்கிறார். அவர் உடலின் மீது அவருக்கத்தானே முழு உரிமை? ஐந்து மாதம் நிறைவடைந்துவிட்ட படியால், இதை முதன்மை வழக்காகக் கருதி உடனடியாக விசாரித்து, அரசு மருத்துவமனை அவரது கருவைக் கலைக்க வேண்டும் எனக் கோர்ட்டார் உத்தரவிடக் கோருகிறேன்.’

தங்கள் ஓய்வறையில் இந்த வழக்கைப் பற்றிப் பேசுவதற்காக ஐந்து நீதிபதிகள் கூடினார்கள்.

‘என்னைய்யா இது, ஒவ்வொரு குடும்பப் ப்ரச்சனையும் நம்மகிட்ட வந்துடுது.’

“வெளில பாத்தீங்களா, மனித உரிமைக் கழகம், மகளிர் உரிமைக் கழகம், ஆடவர் சங்கம்”

‘என்னது, ஆடவர் சங்கமா?’

“ஆமாங்க, ஆடவர் சங்கம் என்ன சொல்லுதுன்னா “தேவையில்லாம கரு கலைப்பு செய்யக் கூடாதுன்னு’

“அரும,அரும. அப்போ மனித உரிமை, மகளிர் உரிமை இதெல்லாம்?”

‘மனித உரிமைக் கழகம் நம்ம தீர்ப்ப வச்சு மேக்கொண்டு தீர்மானிப்பாங்களாம். மகளிர் உரிமை குழு, அந்தத் தாயோட பக்கம். அவ உடம்பு, அவ விருப்பம்னு பேசறாங்க.’

“அப்படிப் போடு அருவாள. அப்போ உள்ள இருக்கற கருவைப் பத்தி யாருக்கும் கவலயில்ல, இல்லியா?”

வழக்குக் கூடத்தில் அதிக அளவில் கூட்டமிருந்தது. எதையும் பரபரப்பாக்க முயலும் ஊடகத்தினர், மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். அந்தத் தம்பதிகளே இத்தனை நபர்களைக் கண்டு மிரண்டு போனார்கள்.

‘ரெண்டு கொழந்த இருக்கு. ரெண்டாவது பொறந்து ஒரு வருஷம் தான் ஆகுதாம். எத்தன கருத்தடை வழி இப்ப இருக்கு. கவனமா இல்லாம, ஆறு மாசமா தூங்கிட்டு இப்ப அந்த அம்மா இப்படிக் கேக்கறாங்க’ என்று தொடங்கினார் அரசு தரப்பு வழக்கறிஞர்.

“முதலில் எதைச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்று அறியாத அரசு வழக்கறிஞரின் ஒவ்வொரு கொச்சைச் சொல்லையும் நான் ஆட்சேபிக்கிறேன். கருத்தடை வழிகளைப் பற்றிப் பேசவா இந்த வழக்கு?” என்றார் மனுதாரரின் வக்கீல்.

‘அப்ஜெக்ஷன் சஸ்டைன்ட்’ வாதியை பர்சனலா பாதிக்கற விதத்தில் பேசக்கூடாது.’

“ஸாரி யுவர் ஆனர். கரு நல்ல நிலையில் இருப்பதாக அரசு மருத்துவக் குழு சொல்லியிருக்கிறது. குற்றம் செய்யாத ஒரு உயிரை சட்டப்படி கொல்வதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இதுதான் மையமான எங்கள் வாதம்.”

‘ஆட்சேபிக்கிறேன், யுவர் ஆனர். இது கொலை முயற்சி இல்லை. அம்மாவின் உடல் நிலை மற்றும் மன நிலையைக் கவனத்தில் கொண்டு அந்த அம்மாவே எடுத்த முடிவு. அவர் கணவரும் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறார்.’

“வாதியின் வழக்கறிஞர் எல்லாவற்றையும் ஆட்சேபிக்கிறார். சிசு சரியான விதத்தில் வளர்ந்துள்ளது. அதை, அதுவும் 24 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அழிக்க நினைப்பது கொலையில்லாமல் வேறென்ன?”

‘அப்ஜெக்ஷன் ஒவர்ரூல்ட்.’

“அரசு தரப்பு வக்கீல், முழுதும் வளர்ச்சி அடையாத நிலையில் உள்ள ஒரு கருவை மனிதனாக உருவகிக்கிறார். அந்தக் கருவிற்கு எந்தச் சட்டத்தில், எத்தனையாவது பிரிவின் படி உரிமை உள்ளது என்பதை அவர் சற்று விளக்க வேண்டும்.”

‘மனுதாரரின் சட்ட அறிஞருக்கு வாழ்வியல் சட்டம் தெரியவில்லையே?’

“ஐயா, அந்தக் கருவிற்கு இறையாண்மை சட்டப்படி என்ன உரிமை உள்ளது? அது சுயேச்சையான ஒரு கருவா அல்லது அன்னையின் தயவில் உள்ள கருவா அல்லது அதற்கென சட்டங்கள் தனியாக உள்ளனவா?”

‘இந்தக் கேள்விகள் இப்போது கேட்கப்பட வேண்டியவை அல்ல. உள்ளே இருக்கும் சிசுவிற்கு இறையாண்மை சட்டம் எதற்கு? அதுவே இறையல்லவா? ஒரு கரு எப்படிச் சுயேச்சையாக இருக்க முடியும்? அது இவ்வாறு இருப்பது இயற்கையின் கூற்றல்லவா? அந்த இயற்கையை மாற்ற முடியுமா?’

“அரசு வக்கீல் இதற்கு பதில் சொல்ல வேண்டும். என் கட்சிக்காரரின் உடல் நிலை, மன நிலை, பொருளாதார நிலை இதையெல்லாம் கவனிக்க வேண்டுமல்லவா? பிறக்காத குழந்தைக்குப் போராடும் அரசு, அதைச் சுமக்கும் அன்னைக்காகக் கவனம் செலுத்தாதா?”

‘நாங்கள் அதிகக் கவனம் எடுத்துக் கொள்கிறோம் அவர் உடல் மற்றும் மன நிலையைக் காக்க. மருந்து, மாத்திரை, டானிக், கவுன்சலிங். அவரது உயிருக்கு ஆபத்து வராமல் தடுப்பதற்கே இந்தக் கருக்கலைப்புக் கூடாதென்று சொல்கிறோம்.’

“மக்கள் நல அரசு அப்படித்தானே செய்ய வேண்டும்?” என்று சிரித்த மனுதாரரின் வழக்கறிஞர் “மருத்துவ முறைப்படி கருக் கலைப்புச் சட்டம், அதாவது மெடிகல் டெர்மினேஷன் ஆஃப் ப்ரெக்னென்சி சட்டம் 5ம் பிரிவு வாழற உரிமையோட இதை இணைக்குது.”

‘யாரோட வாழற உரிமை அது?’

“புரியல, சார்”

‘அம்மாவோடதா இல்லக் கருவோடதா?’

“அம்மாவோடது சார்; அது கருதானே”

‘அப்படியில்லை. ஆறரை மாசம் முடிவடைந்திருக்கிறது. கருவோட ஹார்ட் சரியா துடிக்கிறதென்றும், கரு சரியான வளர்ச்சியில இருக்கிறதென்றும் மெடிகல் ரிபோர்ட் சொல்லுது.’

“அப்போ?”

‘நம்ம சட்டம் மூளைச்சாவை சாவுன்னு ஏத்துக்கறதில்லை; இதயத் துடிப்பு நின்னு போச்சுன்னாத் தான் அது மரணம். அந்த சிசு உயிரோட இருக்கு. குத்தமே செய்யாம அதுக்கு மரண தண்டனையை ஏன் கொடுக்கணும்?’

“அப்ப, அந்த அம்மாவோட ஹெல்த், மன நிலை?”

‘டாக்டர்ஸ் பாத்துப்பாங்க. இப்போ அவுங்க கருவத் தாங்கற சக்தியோடத்தான் இருக்காங்கன்னு ரிபோர்ட் சொல்றதே. யுவர் ஆனர், வயிற்றில் கருவாக இருக்கும் போதே பிரகலாதனுக்கு நாராயண மந்திரத்தை நாரதர் உபதேசித்தார் என்று நரசிம்ம அவதாரம் சொல்கிறது. இன்றைய அறிவியலும் கருவைச் சுமக்கும் தாய், நல்ல இசை கேட்க வேண்டும், நல்ல உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே சொல்கிறது. அந்தக் கரு , தன்னை வேண்டாம் என்று கலைக்கப் பார்க்கும் இத்தகைய சூழலில் எத்தனை வேதனை அடையும்?’

அவர் தொடர்வதற்கு முன் மனுதாரரின் வழக்கறிஞர் குறுக்கிட்டார்.

‘அரசு தரப்பு அறிஞர் எழுத்தாளர் போலிருக்கிறது.. சட்டம் என்ன சொல்கிறது என்று தானே பார்க்க வேண்டும்?’

கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது.

‘சைலன்ஸ், சைலன்ஸ்’ என்று சுத்தியலால் தட்டினார் நீதிபதி. “அரசு வழக்கறிஞர் தொடரலாம்.”

‘நன்றி, யுவர் ஆனர், நாங்கள் முன்னரே சொன்னது போல், அந்த சிசுவின் இதயம் துடிக்கத் தொடங்கி விட்டது. துடிக்கும் இதயத்தை நிறுத்துவதற்கு வலுவான காரணங்கள் வேண்டும். ஒன்று அந்தக் கருவில் இருக்கும் நிவர்த்தி செய்ய முடியாத குறை பாடுகள்; மற்றொன்று அந்தக் கருவைச் சுமப்பதால் அதன் அன்னைக்கு ஏற்படும் உயிராபத்து. இந்த வழக்கில் இந்த இரு விதிகளும் மனுதாரருக்குச் சாதகமாக இல்லை. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்து தாயையும், சேயையும் காப்பாற்றக் கோருகிறோம்.”

“கருவைக் கலைக்க கோர்ட் அனுமதிக்க மறுத்தால், அரசு அந்தக் குழந்தையைத் தத்தெடுக்கணும்னு விண்ணப்பச்சிருங்காங்க என் கட்சிக்காரர்.”

‘யுவர் ஆனர். பல தாய்-சேய் நலத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அரசுகள் அதற்கான கட்டமைப்புகள் செய்து தருகின்றன. தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்க உதவும் இந்தத் திட்டங்கள் பொது மக்களுக்கானவையே. ஒரு அரசு, இப்படி வேண்டாம் என்று தவிர்க்கும் சிசுக்களை தான் தத்து எடுத்துக் கொண்டால், அது நேரடியாகவே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பாகி விடும். ஒரு நாட்டில் அதன் மக்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. எனவே, அந்தக் கோரிக்கையையும் தள்ளுபடி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அரசை தத்தெடுக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொள்ளுமாயின், அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாகிவிடும்.’

‘நாம் ஏற்கெனவே 142 கோடி.’ என்றார் தலைமை நீதிபதி.


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “சண்டிகா”

  1. ‘சண்டிகா ‘ ஒரு மோசமான Toxic கதை.வர வர இன்றைய பெண்கள் மித மிஞ்சிய Liberalism காரணமாக அடிப்படை மானுட அறம்,கருணையை இழந்து வருகிறார்கள் என்பதற்கு இந்தக் கதையே சாட்சி.
    அறிவிலோ,முதிர்ச்சியிலோ எந்தக் குறையும் இல்லாத நவீனப் பெண் victim ஆகக் காட்டிக்கொண்டு விரும்பியதை சாதித்துக்கொள்வதை
    நிறுத்த வேண்டும்.
    தன் வாழ்விலும் சமூகம் சார்ந்தும் பெண்களும் பொறுப்புணர்ச்சியோடு முடிவு எடுப்பதற்கான காலம் இது.
    ஒரே ஒரு மாத்திரை போதுமே கரு உருவாகாமல் தடுக்க!
    உருவாக்குவார்களாம்,
    அது வளர்ச்சியடைந்து வலி உணரும் மனித உயிராக மாறிய பின் கொல்வார்களாம்.
    அது உரிமையாம்.
    வெளிப்படையாகக் கேட்கிறேன்,
    குழந்தையைப் பெற்று வளர்க்க
    உடலில் சக்தி இல்லாதவர்களுக்கு Sex க்கு மட்டும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது கேவலமாக இல்லை?
    எந்தப் பெண்ணும் (ஏன் ஆணும்!)தன் உடல் முழுக்க தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடிவிட முடியாது.
    நம் ஒவ்வொரு செல்லிலும் பெற்றோர்,கண்களுக்குத் தெரியாத மூதாதையரின் தொடர்ச்சி,
    இறையாற்றல் எல்லாம் உண்டு.
    நான்தான் உருவாக்குகிறேன் என்ற கர்வமெல்லாம் அபத்தம்,அனாவசியம்.
    இறை அல்லது இயற்கைப் பேராற்றல் ஒரு புதிய உயிரை உலகுக்கு அனுப்பும் போது நடுவில் பயன்படுகிற Agents ஆணும் பெண்ணும் என்பதுதான் உண்மை.

    அறத்தின் அடிப்படை கருணை மட்டுமே.

    கதை நாயகிக்கு மனநோய் எல்லாம் இல்லை.வெறும் சுயநலமே உருவான,இரக்கமற்ற வன்ம மனதுக்காரி, அவ்வளவுதான்.
    மனநோய் உள்ளவர்களிடம் அலட்சியம்,திமிர் இருக்காது.

    வருமுன் காக்க வழி இருந்தும் அதைச் செய்யாதவர்கள் படுகொலை நிகழ்த்துவதெல்லாம் அடிப்படை மனித உரிமைக்குள் வராது.

    1. நன்றி. இரு மாதங்களுக்கு முன் இந்திய உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த வழக்கின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை.
      சாந்தனுவின் மனைவியான கங்கை தன் ஏழு சிசுக்களை கங்கை ஆற்றில் போட்டுக் கொன்றாள். நல்லதங்காளை நாம் அறிவோம்
      கதையில் அரசு தரப்பு வழக்கறிஞர், கருவை அழிக்கக்கூடாதென்றே வாதிடுகிறார்.
      அந்தப் பெண் தன் பொருளாதாரம், குழந்தையை வளர்க்கப் படப் போகும் பாடு இவற்றினால் அதீதமாகக் கவலை கொண்டு அதை அழியுங்கள் அல்லது அரசே தத்தெடுக்கட்டும் என்று சொல்கிறாள். நடுவிலும் தலைமை நீதிபதி சொல்கிறார் ‘வயிற்றில் வளரும் கருவைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.’
      முடிவில் அவர் சொல்வது, நம் மக்கள் தொகை, இதைப் போன்ற செயல்களை (அரசு தத்தெடுப்பது, இதயம் துடிக்கும் உயிரை அழிப்பது, மற்றும் , மருத்துவர்களின் அறிக்கை) ஊக்குவித்தால், பல்கிப் பெருகிவிடும் என்பதே.
      உங்கள் அற சீற்றத்திற்குப் பாராட்டுகள். கலவி சில நேரங்களில் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.