நாய்கள் ஜாக்கிரதை

ஓ…ஹ்ஹோஹ்ஹோ… என்று போலியாகச் சிரித்தார் பெரியசாமி. வாயை விரல்களால் நாசூக்காக மூடி, சப்தம் லேசாக நழுவுகிற மாதிரி ஒரு கெக்கலிப்பு. கண்களில் ஒரு ஏளனம். 

அவர் சிரிப்பதை நாயும் கவனித்தாற்போல் கழுத்தைத் திருப்பி அவரைப் பார்த்து சிநேகமாக உறுமியது.

“நாய் வளக்கறான் பாரு… நாயி… பிச்சக்காரப்பய” என்று கூறியவாறே தன்பிடியை இறுக்கி, கணேசனை இழுத்தவாறே விரைந்தார் தாத்தா. 

தெரியாமல் இந்த தெருப்பக்கம் வந்து விட்டனர். பக்கத்து தெரு வழியாகப் போயிருக்கலாம். குளத்தின் மேல்கரை வழியாக சுற்றிப் போக வேண்டும். இது குறுக்குப் பாதை. 

தாத்தாவுடன் நடப்பது பேரானந்தமான அனுபவம். நிறைய பழங்கதைகள் சொல்வார். 

“பாடகச்சேரி சாமி நம்ம வீட்டுக்கு வந்திருக்கு… குளம்பு சோறோ மோர் சோறோ அம்மாஞ்சோத்தையும் ஒரு குண்டான்ல கவுத்து கையால மைய்யப் பெசஞ்சு உள்ளங்கை உள்ளங்கையா உருட்டி உருட்டி திண்ணைக் குறட்டுல வைக்கும். நாங்கள்லாம் சின்னப்பயலுவோ. வேடிக்கை பாப்பம். அப்பால, சூச்சூன்னு ஒரு சத்தம் கொடுக்கும்.. எத்தினி உருண்டை இருக்குதோ அத்தினி நாயி, சொல்லி வச்சாப்ல எங்கிட்டு இருந்தோ வந்து ஆளுக்கொண்ணா கவ்விக்கிட்டு ஓடிப்போயிறும்..‌ என்னா மகிமை… என்னா மகிமை..”

நாய்களைப் பற்றி பேசிக் கொண்டு பெரியசாமி வீட்டைத் தாண்டும் போதுதான் உர்ரென்று ஒரு உறுமல் கேட்டது. அது உறுமல் இல்லை. கர்ஜனை. இருவருக்கும் சப்தநாடியும் அடங்கி விட்டது. கன்னங்கரேல் என்று ஒரு ராட்சஸ உருவம் இருகால்களையும் உயர்த்தி கேட்டில் வைத்து எந்நேரமும் தாவிவிடுகிற மாதிரி. 

“யப்பாடியோவ்.. எம்மாம் பெரிய நாயி… ஓடுறா தம்பி.. என்று தட்டுத் தடுமாறி நிலைகுலைந்த நிலையில் தான் இவர்கள் இருவரையும் பார்த்து பெரியசாமி சிரித்தது.

“பெரிய ஐசீஎஸ்  புடுங்கின்னு நெனப்பு… காலிப்பய”

அதற்குள் பெரியசாமியின் மனைவி வீட்டில் இருந்து காம்பவுண்டு சுவருக்குள் இருந்து, வெளிவாசலுக்குப் பாயத் தயாராக இருந்த  பிராணியிடம் செல்லமாக “ஏய்.. பீட்டர்.. உள்ள வா” என்றாள்.

“பீட்டர் மேட்டர்னு ஒரு பேரு.. போக்கத்த பய..‌ சோமசுந்தரம்னு அவங்கப்பன் பேரையே வெக்க வேண்டியது தானே”.

பெரியசாமி காதில் விழ வேண்டும் என்றே தாத்தா இரைந்து பேசுகிறார் என்று தோன்றுகிறது. ஆனாலும் அவரிடம் ஒரு பயம் தென்பட்டது உண்மை. பீட்டர் பாட்டுக்கு எகிறிக் குதித்து மேலே பாய்ந்து விட்டால் என்ற பயம்.

என்ன காரணமோ தாத்தாவுக்கு பெரியசாமியைப் பிடிக்காது. சித்தப்பாவும் பெரியசாமியும் ஒன்றாகப் படித்தவர்கள். சித்தப்பா படிப்பு வராமல் மளிகைக்கடை வைத்து சுமாராக ஓடுகிறது. அப்பாவும் பள்ளிக்கூட வாத்தியார். ஏதோ கொஞ்சம் நிலபுலன் இருப்பதால் தேர் நிலை தட்டாமல் ஓடுகிறது.

பெரியசாமி எப்படியோ படித்து, பட்டம் வாங்கி, தகிடுதத்தம் செய்து, வாகினியாக ஒரு உத்யோகத்தை சம்பாதித்துக் கொண்டு விட்டார். அதன் பின்னர் அவர் காட்டில் மழை.

கணேசன்  பீட்டரைத் திரும்பிப் பார்த்தான். அடேங்கப்பா… என்ன உயரம். ஏதோ நல்ல ஜாதிநாயாகத்தான் இருக்கணும். கருஞ்சிறுத்தை மாதிரில்ல இருக்கு? யப்பாடி, கவ்விச்சு… கெண்டக்கால் முச்சூடும் காலியாயிறும் என்று நினைத்துக் கொண்டான்.

இது பெரியசாமி வீட்டில் மூன்றாவதாகவோ  நான்காவதாகவோ  வளர்க்கப்படும் நாய்.

பெரியசாமி வீட்டுக் கதவில் முன்னெச்சரிக்கையாக “நாய்கள் ஜாக்கிரதை” என்று போர்டு தொங்கும்.

“ஒரே ஒரு நாய்தான இருக்கு.. எதுக்கு  நாய்கள்னு போட்ருக்காங்க தாத்தா?”

“அது பெரியசாமியையும் சேத்து எழுதியிருக்காங்க”.

பெரியசாமி வீட்டைக் கடப்பதற்குள் வேர்த்து விட்டுவிடும். 

இது பெரியசாமியின் சொந்த வீடு. செங்கல் செங்கல்லாக அனுபவித்துக் கட்டிய வீடு. எப்போதும்  நாலைந்து வருடங்கள்தான் தொடர்ச்சியாக இந்த ஊரில் சொந்த வீட்டில் இருப்பார். 

வெறுமனே சம்பளம் மட்டும்தான் வருமானம்னா காம்பவுண்டு வரைக்கும் தான் கட்ட முடியும் என்பார் தாத்தா.

அவன் எப்படியாச்சும் இருந்துட்டுப் போவட்டுமே, ஒங்களுக்கு ஏன் தாங்க மாட்டேங்குது, என்று அங்கலாய்ப்பாள் பாட்டி.

பெரியசாமிக்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ட்ரான்ஸ்பர் வருவதும் அடுத்த இரண்டே வருடங்களில் திரும்பவும் இங்கேயே மாற்றி வருவதும் தொடர்ந்து நிகழ்பவை.

ஆனால் நாய் வளர்ப்பு மட்டும் மாறவே இல்லை.

பல வருடங்கள் முன் தெருவில் அலைந்த நாய்க்குட்டியை பழைய சோறு போட்டு மடக்கி வளர்க்க ஆரம்பித்து அது பூச்சி வந்து செத்துப் போய் விட்டது. கொஞ்ச நாள் அவர்கள் வீட்டில் எல்லோரும் அழுது கொண்டு இருந்தார்கள். அப்புறம் சில மாதங்களில் வேறொரு நாய்க்குட்டி வாங்கி வந்து  சத்துணவு மாதிரி முட்டையெல்லாம் போட்டு வளர்த்து வந்தனர்.

 எவனோ ஒருவன் சும்மா இல்லாமல் டாபர்மேன் ரக நாயின் வீரம் அதன் வெட்டப்படும் வாலில் இருக்கிறது என்று சொன்னதில் பெரியசாமி கடைக்குப் போய் சில்வர் ப்ரின்ஸ் சவர ப்ளேடு வாங்கி வந்து நாய்க்குட்டியின் வாலை நறுக்கி விட, அது செப்டிக் ஆகி செத்துப் போய் விட்டது.

“கிராதகன்” என்பாள் பாட்டி. 

அவனைய ஏதாச்சும் கம்பளைன்ட் பண்ணி உள்ள தள்ளி இருக்கணும். காதுங்காதும் வெச்ச மாதிரி அநியாயமா ஒரு சீவனே சாச்சுப்புட்டான்.

அப்புறம் கொஞ்ச நாள் நாய் வளர்க்கவில்லை. அதற்குள் அவர் அந்தஸ்து உயர்ந்து, “ஒரு காரணமும்” இல்லாமல் யாரோ ஒரு ஜாதி நாயைப் பரிசளிக்க, பெரியசாமி குடும்பத்திற்கு மறுபடியும் பிடித்து விட்டது.

இதோட மூணு நாய் மாத்திட்டான். நாயை லஞ்சம் வாங்கி நான் கேட்டதில்லப்பா என்று புலம்பும் என் தாத்தாவிடம் வேறு எதெல்லாம் லஞ்சமாக வாங்கலாம் என்று கேட்கத் தோன்றியது.

நான்கு வருடங்கள். வழக்கம் போல அவரை சென்னைக்கு  அருகில் எங்கோ மாற்றிவிட பெரியசாமி வழக்கம் போல மூட்டை கட்டிக் கொண்டு லாரியில் ஏற்றி அனுப்பி விட்டார்.

இன்று இரவு ரயிலில் சென்னை கிளம்ப வேண்டும்.

பெரியசாமி இரவு உணவை அவசரமாக உண்டு விட்டு, ஊர் சனங்களிடம் பிரியா விடை பெற்று (அப்பாடா… தொலஞ்சான்.. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கவலை இல்லை) ரயில் நிலையம் வந்தார்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் ரிசர்வ் செய்து இருந்தார். அவர் ஆசையாக வளர்க்கும் பீட்டர் பெயரிலும் ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து இருந்தார்.

 ரிசர்வேஷன் படிவங்களில் ஆணா பெண்ணா என்று மட்டுமே இருப்பதை சாதகமாக்கி ஆண் என்பதை டிக் செய்து டிக்கெட் வாங்கி விட்டார். 

அவர் மனைவிக்குக் கொஞ்சம் பயம் தான். ஆனால் பெரியசாமி பயப்படவில்லை. தான் பொய் கூறவில்லை என்பதில் தீர்மானமாக இருந்தார். அதைவிட, தன் வாய் சாதுரியத்தையும், எந்த ப்ரச்சனையையும் தன் வாய்த்துடுக்காலும் புஜபலத்தாலும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்ததாலும். 

ரயில் அன்று வழக்கத்தை விட முன்னதாக, பதினைந்து நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது. 

பெரியசாமி தன் குடும்பத்தை ஏற்றிவிட்டுக் கடைசியாக, யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என்பதற்காகக் கொஞ்சம் தாமதித்து, வண்டி கிளம்பிய உடன் வாகனம் சகிதம் காலபைரவர் மாதிரி தாவி ஏறினார்.

சொற்ப நேரமே வண்டி நிற்குமாதலால் அவரவர் தங்கள் உடமைகளைப் பத்திரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

சில நிமிட தாமதத்தில் பெரியசாமியுடன் வந்த பீட்டரைப் பார்த்து ரகளை ஆரம்பித்தது. 

ஒருவர் கொஞ்சம் சுதாரித்து, “என்னங்க இது அநியாயம்? நாயெல்லாம் கொண்டு வந்திருக்கீங்க” என்று நடுக்கத்துடன் ஆரம்பித்தார். அவர் கடந்த மூன்று மாதங்களாக மருத்துவரின் அறிவுரைப்படி உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி எடைகுறைப்பில் ஈடுபட்டு இருப்பவர். ஆறுமாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் குறையக்கூடிய சதையை அரை செகன்டில் குறைத்து விடும் உத்வேகத்தில் நின்ற பீட்டரைப் பார்த்துக் குலை நடுங்க பலகீனமாகத்தான் கேட்டார்.

அவர் எதிர்பார்த்ததைப் போல் பீட்டர் பாயவில்லை.‌ அதன் எஜமானர் தான் பாய்ந்தார்.

“என்ன தகிரியம் இருந்தா அதை நாய்னு சொல்வீங்க”

 ஆஜானுபாகுவான அவரது உடல் கோபத்தில் கடுமையாக நடுங்கியது. அவர் வாயில் இருந்து புறப்பட்ட சரளமான வார்த்தைகளை எழுதுவது நாகரீகமாக  இருக்காது.

விஷயம் டிக்கெட் பரிசோதகரிடம் அடைந்தது. அவரும் மனிதர்கள் ப்ரயாணிக்கும் பெட்டியில் விலங்குகளை ஏற்றக் கூடாது என்று சொல்லிப் பார்த்தார். 

“அப்படின்னு எங்க இருக்கு? இப்பவே ரூல்ஸைக் காட்டு”

“ஏங்க? ரூல்ஸை நான் என்ன உள்ளங்கைலயா பச்சை குத்தி வச்சிருக்கேன், காட்டறதுக்கு? ஏத்தக் கூடாதுன்னா ஏத்தக் கூடாதுதாங்க.. அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஒழுங்கா லக்கேஜ் புக் பண்ணி லக்கேஜ் வேன்ல ஏத்துங்க… இல்லேன்னா பாசஞ்சர் சேஃப்டிக்குக் குந்தகம் வெளவிச்சீங்கன்னு அடுத்த ஸ்டேஷன்ல நாயோட சேத்து எறக்கி விட்ருவோம், தெரிஞ்சுக்குங்க”

“என் பீட்டரை நாயின்னு சொன்னே கெட்ட கோவம் வரும்”

“அவர் நாயின்னு சொன்னது பீட்டரை இல்லீங்க” என்றது ஒரு இளவட்டம். அதே கொல்லென்ற சிரிப்பு. 

அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டது. இதப் பாருங்க, மரியாதையா எறங்கி நான் சொன்னபடி செஞ்சீங்கன்னா பொளச்சுப் போனீங்க.. இல்லேன்னா ஆர்பீஎஃப்பைக் கூப்பிட்டு எறக்கி விட்ருவேன்.. இங்கிட்டு வண்டி ரெண்டே நிமிசந்தான் நிக்கிம்”

வேறு வழியில்லாமல் பெரியசாமி அந்த ஸ்டேஷனில் பீட்டரோடு இறங்கி ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு விரைந்தார்.

அங்கே விவரத்தை விவரிக்க, ஸ்டேஷன் மாஸ்டர்,  குமாஸ்தாவை அழைத்துச் சொல்ல, அவர் நேரமின்மையைக் காரணம் காட்டி மறுத்து விட்டார். பெரியசாமி அவரை மிரட்டலாம் என்று நினைத்தவர், கூடியிருந்த ஜனத்திரளையும் போலீஸையும் பார்த்து, பணிவாகத் தன் நிலையைக் கூறி இறைஞ்ச, ஸ்டேஷன் மாஸ்டரும் “போனால் போகிறது சங்கரு… சாரு கெஞ்சுறாரு… வண்டி பத்து நிமிசம் அட்ஜஸ்ட்மெண்ட்ல தான் ஓடுது… ஸன்டிங்ல அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க”

பெரியசாமியிடம் விண்ணப்ப படிவம் திணிக்கப்பட, அவர் அவசர அவசரமாக அதை அரைகுறையாக நிரப்பினார்.

பீட்டர் அவரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, லக்கேஜ் சீட்டின் ஒரு பிரதி பெரியசாமி கையிலும், இன்னொன்று பீட்டரைப் பிணைத்த கயிற்றிலும் இணைக்கப்பட்டு, ப்ரேக் வேன் எனப்படும் பார்சல் பெட்டிக்கு இழுத்துச் செல்லப் பட்டது.

பீட்டர் முரண்டு பிடித்தது. அதுவொரு விசேஷ அல்சேஷன் வகை நாய். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது என்று அடிக்கடி சொல்வார் பெரியசாமி. அதாவது அதை அன்பளித்தவர் அதை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். முழு உடலும் மினுமினுக்கும் கருப்பு நிறம்.

அதை இழுப்பதற்குள் நாக்கு தள்ளி விட்டது சிப்பந்திகளுக்கு. பீட்டர் கொஞ்சம் மிரட்சியும் கொஞ்சம் கோபமும் கொஞ்சம் குழப்பமுமாக பெரியசாமியின் கட்டளைகளுக்கு விரும்பாமல் கீழ்ப்படிந்ததில் நேரமாகிக் கொண்டு இருக்க, என்ஜின் ட்ரைவர் பொறுமையிழந்து மூன்று நான்கு முறை என்ஜினை அலற விட்டார்.

ஸ்டேஷன் மாஸ்டருக்கும் கவலை வந்து விட்டது. எல்லா தாமதமும் தன் தலைமேல் விடிந்து விடப் போகிறதே என்று கிலியாகி விட்டது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தாமதங்கள் அதற்குக் காரணகர்த்தாக்கள் மீது சம்பளவெட்டாக விழும்.

ஆளாளுக்கு விரட்டி ஒருவழியாக பீட்டரைக் கஷ்டப்பட்டு பார்சல் பெட்டியில் ஏற்றித் திணித்து, கயிற்றைக் கட்ட இடமில்லாமல் ஒரு கனமான பார்சலின் கீழே நுழைத்துக் கதவை மூடினர்.

ஸ்டேஷன் மாஸ்டர் பெரியசாமியிடம் “கவலைப் படாதீங்க சார்.. இதுல இனிமே ரூம் இல்லை.. அதுனால இனுமே லோடிங் இருக்காது.. நீங்க சென்னைல போயி சீட்டைக் காமிச்சு நாயை ஓட்டிக்கிட்டுப் போயிடுங்க… பாருங்க… வண்டி நவுருது… ஓடிப்போயி ஏறுங்க..”

பெரியசாமி ஓடிப்போய் ஏறிக் கொண்டார். மற்றவர்களின் ஏளனப் பார்வையை சந்திக்க அவமானமாக இருந்தது. துரிதமாகத் தன் படுக்கையில் ஏறிப் படுத்துக் கொண்டார்.

மடத்தனம் என்று மனைவியைச் சாடினார். “போனதடவைகள் மாதிரி லாரில ஏத்தி அனுப்பி இருக்கலாம்”

“நீங்கதான சொன்னீங்க.. ரயில்ல சேஃப்டியாக் கொண்டு போயிடலாம்னு.. இப்ப என்னையச் சொல்றீங்க”

பெரியசாமி பதில் சொல்லவில்லை. சரிசரி தூங்கு என்று அதட்டியவர் தான் தூங்கவில்லை. பீட்டரை நினைத்து உறக்கம் வரவில்லை. அதற்கு சரியாக உணவளிக்கவில்லை. ரயிலில் அளிக்கலாம் என்று அசிரத்தையாக இருந்தது தவறு. ஒன்றும் ஆகாது. அரைவயிற்றில் அது என்ன செத்தா போய்விடும். சென்னையில் இறங்கிய உடனே அதற்கு உணவளித்து விடலாம். என்ன எட்டு மணி நேரம் தானே?

வண்டி அடுத்த நிலையத்தை அடைந்தது. ஓரிரு நிமிடங்கள் நிற்கும்.

பீட்டரை ஏற்றி இருந்த பெட்டி நடுவில் இருப்பது. வண்டியின் கடைசியில் ஒரு ப்ரேக் வேன் இருக்கும். அதில்தான் வண்டியின் கார்டு பயணம் செய்வார். அதையொட்டி ஒரு பார்சல் பெட்டி இருக்கும்.

பீட்டரை ஏற்றிவிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் அடுத்த நிறுத்தத்தின் ஸ்டேஷன் மாஸ்டரிடம் பார்சல் பெட்டியில் இடமில்லை என்று கூறியிருந்தார். அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, கார்டு வேனுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டியில் இடமில்லை என்று நினைத்து பீட்டர் ஏற்றிய பெட்டிக்கு அருகில் ஓரிரு பார்சல்களைத் தண்டு இறக்கியிருந்தனர். 

என்ன‌ காரணமோ பொதுவாக அங்கு பார்சல் ஏற்றுவதில்லை. அந்த இடத்தில் ரயில்வே கான்டீன் இருந்தது. தின்று தீர்த்த உணவுகளை அங்கிருந்த பெரிய தொட்டியில் தான் நியாயமாக இடவேண்டும். என்ன காரணமோ எல்லோரும் சொல்லி வைத்தாற்போல தொட்டியின் வெளியில் தான் எறிவது.

வேறுவழியில்லாமல் பார்சல்களைக் கடைசி நிமிடத்தில் இடமாற்றம் செய்வதற்கும் வண்டி தாமதத்துடன் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

பார்சல்களை ஏற்றும் பணியாள் கதவைத் திறந்து “இங்கிட்டும் எடமில்லையே என்று முதலில் இருந்த பார்சலை நகர்த்தியது தான் தாமதம், பீட்டர் விருட்டென்று வெளியில் பாய்ந்தது.  

அவன் அலறியடித்துக் கொண்டு கீழே விழ, இன்னொரு சிப்பந்தி சுதாரித்துக் கொண்டு பீட்டரைப் பிடிக்க முயல, அது அவனை டபாய்த்து ஓடும்போது, அதன் கழுத்தில் இருந்த லக்கேஜ் சீட்டைப் பிடித்து விட்டான். 

ஒரு சிறு துவந்த யுத்தத்தில், அது கையோடு வந்து விட்டது. பீட்டர் அசுர வேகத்தில் ஒரே தாவாகத் தாவி ஸ்டேஷனை விட்டு வெளியேறி ஊருக்குள் சென்று விட்டது.

இதெல்லாம் கணப்போதில் நடந்து விட்டன. விஷயம் கேள்விப்பட்டு மற்ற சிப்பந்திகள் வந்து எப்படி இருக்கும் என்றே தெரியாத நாயைத் துரத்தும் பணியில் மனமில்லாமல் ஈடுபட்டு தோல்வியைத் தழுவினர். பீட்டர் போயே போய் விட்டது.

சூப்பரின்டென்டென்ட் பதறிப் போய் விட்டார். என்ன செய்வீர்களோ தெரியாது, அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் நாயைப் பிடித்து வராவிட்டால் கதவை அஜாக்கிரதையாகத் திறந்த இரண்டு சிப்பந்திகளையும் பணிநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டி, கன்ட்ரோலரிடம் பேசச் சென்று விட்டார்.

சிப்பந்திகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதில் ஒருவன் சட்டென்று யோசித்து, அங்கே எச்சில் இலைத் தொட்டிக்கு வெளியே விழுந்திருந்த எச்சில் இலையை தேமேனென்று நக்கிக் கொண்டு இருந்த ஒரு சொறிபிடித்த நாய் ஒன்றில் மேல் வெறியுடன் பாய்ந்து, அதைத் திமிறத் திமிறக் கயிற்றால் பிணைத்து, பீட்டரிடம் அபகரித்து இருந்த கிழிந்த லக்கேஜ் சீட்டையும் பிணைத்து, பார்சல் பெட்டியில் அடைத்து, நன்றாகக் கட்டி, மூடி விட்டனர். அவர்கள் அதிர்ஷ்டம் அதுவும் கருப்பு நாய்தான்.

ஸ்டேஷன் அதிகாரியிடம் நாய் கிடைத்து விட்டதாகப் பொய் கூறிவிட்டனர். கடுமையான தாமதத்தில் கலங்கிப் போயிருந்த அவரும் அனாவசியமாக மேல் கேள்விகள் கேட்காது, வண்டியைப் புறப்பட அனுமதி கொடுத்தார்.

எழும்பூரில் முதல் காரியமாகப் பார்சல் பெட்டியைத் திறக்கும் முன்னரே பெரியசாமி அங்கு சென்று விட்டார். 

அங்கு நின்றிருந்த சிப்பந்தி பார்சல் வேன் முன் கூடியிருந்த பயணிகளை அடிக்காத குறையாக விரட்டி பார்சல் ஆஃபீஸூக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

கூட்டம் முண்டியடித்து பார்சல் ஆஃபீஸ் விரைந்தது. 

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து பொருட்களை நவீன யுகத்திலும் கூட இரும்பு உருளைகள் கொண்ட ஒரு இழுவண்டியில் வைத்து நாலைந்து போர்ட்டர்கள் அதிவேகமாக இழுத்து வந்தனர். ராக்கெட் கிளம்பும் போது கூட அவ்வளவு சத்தம் வராதாயிருக்கும். பெரியசாமி எட்டி எட்டிப் பார்த்தார். அவரது நாய் தென்படவில்லை.

வந்த பொருட்கள் அடுக்கப்பட்டு, லக்கேஜாக ஏற்றப்பட்டவை பிரிக்கப்பட்டு துரிதமாக அனுப்பப் பட்டனர். பெரியசாமி பட்டுவாடா செய்து கொண்டு இருந்த குமாஸ்தாவை கூட்டத்தைப் பிளந்து அணுக முற்படும் தருணம், வேறொரு போர்ட்டர் கருப்பு நாயைத் தரதரவென்று இழுத்து வந்து பார்சல்  அலுவலகத்திற்குள் கட்டியதை கவனிக்கத் தவறிவிட்டார்.

லக்கேஜ் காரர்கள் எல்லாம் பட்டுவாடா முடிந்த உடன் கிளம்பி விட, பெரியசாமி அவரை அணுகி “என்னோட லக்கேஜ் என்னங்க ஆச்சு” என்பதற்கும், உள்ளே இருந்து வந்த போர்ட்டர் குமாஸ்தாவிடம், பெரியசாமி சீட்டைக் கொடுத்து, “சார்..  பெரியசாமின்னு ஒரு நாயை உள்ள கட்டிப் போட்டு இருக்கேன் சார்… எவனாவது சீட்டோட வந்தா அம்பது ரூவாயாச்சும் கறந்துரு…. அத்தய் இஸ்துக்கினு வர்றதுக்குள்ள இன்னா பேஜாராயிடுச்சு தெரீமா.. கட்ச்சு கிட்ச்சு வச்சிருந்துச்சுன்னா எனிக்கு ஆரு ஜவாப்தாரி”

அதற்குள் பெரியசாமி முந்திக் கொண்டு “அது நம்ம பீட்டருங்க”

“பெர்சாமின்னு போட்டுக்கீது”

“அது எம் பேருங்க”

“அப்டியா….கோச்சுக்காத தலீவரே… நான் நாய்பேருதான் பெர்சாமின்னு நென்சுக்கினேன்..  மறக்காம துட்டை வெட்டிட்டுப் போ… படா பேஜாராயிரிச்சு”

அதற்குள் குமாஸ்தா பெரியசாமி கையில் இருந்த சீட்டையும் நாயிடம் இருந்து அவிழ்க்கப்பட்ட சீட்டையும் ஒப்பிட்டு, பேனாவால் கோடிழுத்தார். லக்கேஜூக்கான பிரத்யேகமான புத்தகத்தில் பெரியசாமியின் கையெழுத்தைப் பெற்றுக் கொள்ளவும் மேற்சொன்ன போர்ட்டர், நாயை இழுத்து வரவும் சரியாக இருந்தது.

நாயைப் பார்த்த உடன் பெரியசாமி “ஐயய்யோ” என்று பெருங்குரலில் அலறினார்.

பதிலுக்கு நாயும் அலறியது.

“ஓனரும் நாயும் பேசிக்கறாங்க போல”

“யோவ்… இது என் பீட்டரே இல்லய்யா”

“யோவ்வா.. இன்னாப்பா ராங்கு காட்டுறே? அய்யா.. புய்யான்றே… பேத்துறுவேன்”

“நீதான்யா மரியாதை இல்லாம பேசறே”

அதற்குள் குமாஸ்தா குறுக்கிட்டு, “என்ன சார் ப்ரச்சனை?”

“இது என்னோட பீட்டர் இல்லீங்க?”

“அதெப்படி? இதுதான் வண்டிக்குள்ள இருந்துச்சு”

“அது எனக்குத் தெரியாது… ஆனா.. இது பீட்டர் இல்லே”

அதற்குள் போர்ட்டர், “பீட்டர் பீட்டர்” என்று கூப்பிட, அது திரும்பிப் பார்த்தது.

“இது பீட்டர்தான் பா.. கூப்டாக் கரீக்டா திரும்புது பாரு”

பெரியசாமிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“இதை எப்படிக் கூப்ட்டாலும் திரும்பிப் பார்க்கும்ங்க”

“அப்போ உனிக்குத் தெர்ஞ்ச நாய்தான்.. நீயே நைசா இந்த நாயை ஏத்திட்டு, எங்க கிட்ட துட்டு வாங்கிக்கினு போய் நல்ல நாய் வாங்கலாம்னு பாக்றியா? படா ஆளுய்யா நீ.. “

“சும்மா இரப்பா நீ… சார்… என்னோட பீட்டர் உயர்ந்த ஜாதி  சார்”

“தோ பார்ரா…. அது இன்னா ஜாதி கண்ணு… ஜாதின்ற… பீட்டருன்ற.. இன்னாமோ கோல்மால் பார்ட்டி மாதிரி கீதே”

அதற்குள் கூட்டம் களை கட்ட, வாக்குவாதம் பெரிதாகி, ரயில்வே போலிஸ் அதிகாரியும் ட்யூட்டி ஸ்டேஷன் அதிகாரியும் வருகின்றனர். பெரியசாமியின் மனைவியும் சேர்ந்து கொள்ள ஒரே ரகளை.

போலிஸ் அதிகாரியை அவர் உடுப்பில் பார்த்ததும் கொஞ்சம் அமளி அடங்கியது. 

அவர் கூடியிருந்தவர்களைப் பார்த்து இங்கே இவ்வளவு பேருக்கு என்ன வேலை? சினிமாவா காட்றாங்க? மொதல்ல இடத்தைக் காலி பண்ணுங்க. 

ஒரு கான்ஸ்டபிளை அழைத்து, ”மணி, இங்கே நிக்கறவங்க கிட்ட ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கு… நாளைக்கு விட்னெஸுக்குக் கூப்பிடலாம்” என்றது தான் தாமதம், கூட்டம் சிட்டாய்ப் பறந்து விட்டது.

அவர் பெரியசாமியிடம்,

“என்னங்க ப்ராப்ளம்?”

குமாஸ்தா இடைமறித்து, “சார் இவரு 102ல வந்தாரு.. ஒரு கருப்பு நாயை புக்பண்ணி பார்சல்ல ஏத்தி வந்திச்சு… நாங்க ஆஃப்லோடு பண்ணி ஹேன்ட் ஓவர் பண்ணா, இது என் நாயில்லைன்னு கலாட்டா பண்ணறாரு  சார்”

“இது ஒங்க நாய் இல்லையா”

“இது எங்க பீட்டர் இல்லை சார்”

“அதுக்கு என்ன ஆதாரம்?”

“எங்க ஊருக்கு வந்தா எல்லாரும் சொல்வாங்க சார்”

“ஆமாம்.. எங்களுக்கு இதான் வேலை.. ஊர் ஊரா போயி விசாரணை பண்ணுவோம்.. சும்மா சண்டித்தனம் பண்ணாம நாயை ஓட்டிக்கிட்டுப் போங்க சார்.. நெல்லை அவுட்டர்ல வெயிட்டிங்கு… உள்ளே வாங்க முடியலை”

“இது என் பீட்டர் இல்லை சார்”

“அதையே எத்தினி தடவைங்க சொல்வீங்க? உங்க நாய் என்ன கலரு?

“கருப்புங்க”

“இது என்ன கலரு?”

“கருப்புதான்.. ஆனா இது பீட்டர் இல்லீங்க”

“யோவ்.. பீட்டர் பூட்டர்லாம் ஒங்கூட்டுல… எங்களுக்கு இது கருப்பு நாயி.. அவ்வளவுதான்”

“அதெப்படி சார்… எனனோட பீட்டர் உயர்ந்த ஜாதி சார்.. பத்தாயிரம் ரூபா வெலை… இது ஏதோ தெரு நாய்..”

“சர்தான்… ஏதாவது அங்க அடையாளம் இருக்குதா”

“தொப்புள் கிட்ட ஒரு மச்சம் இருக்குங்க” என்று சட்டையை உயர்த்தி உப்பியிருந்த தொப்பையைக் காட்டினார்.

“சட்டைய மூடுய்யா… நல்ல ஆளுய்யா நீ.. நாயப் பத்தி கேட்டா உன்னையப் பத்தி பேசுற?”

“பீட்டர் நல்ல வெல்வெட் கருப்பு சார்..”

“சரி”

“ஃபெரோஷியஸா இருப்பான் சார்”

“சரி”

“அப்பறம் எல்லா நாய் மாதிரி தான்.. வாலு காலு, காது, நாக்கு …”

“ஏதாச்சும் சொல்டப் போறேன்”

“அது காஸ்ட்லி ஸ்பீசிஸ் சார்… அல்சேஷன் டைப்பு… இல்லன்னா அதை இவ்வளவு செலவழிச்சு வண்டீல கூட்டிட்டு வருவேனா”

“அதெல்லாம் செல்லாது… நீங்க சொன்னதை அப்ளிகேஷன்ல எழுதி இருக்கீங்களா”

அப்போது தான் பெரியசாமிக்கு அவசரத்தில் வெறும் கருப்பு நாய் என்று எழுதியது தவறென்று புரிந்தது. 

பரிதாபமாக “இல்லை சார்… அவசரத்துல…” என்று இழுத்தார்.

“சார்… நீங்க சொல்றது உண்மையாவே இருக்கலாம்.. ஆனா, பூட்டி இருந்த பார்சல் வேன்ல இந்த நாய்தான் இருந்திச்சு… அது கழுத்துல இருந்த இன்வாய்ஸூம் ஒங்க சீட்டும் ஒத்துப் போகுது… ரெண்டுலயும் கருப்பு நாய்னுதான் போட்டுருக்கு..நீங்களும் ஒங்க கைப்பட எழுதின அப்ளிகேஷன்ல கருப்பு நாய்னுதான் எழுதி இருக்கறதா சொல்றீங்க… இங்கே டெலிவரி ரெஜிஸ்டர்ல கையெழுத்தும் போட்டுட்டீங்க…நீங்க சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும் யாரும் ஒத்துக்கிட மாட்டாங்க.. மரியாதையா உங்க ப்ராப்பர்ட்டியை ஓட்டிக்கினு ஊடு போயி சேருங்க… இல்லேன்னா உங்க மேல பொது இடத்துல குழப்பம் விளைவிச்சதா  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்..” என்று எச்சரித்து விட்டுக் கிளம்பினர்.

சிப்பந்திகளும் பின்னால் நுழைய இருக்கும் வண்டிக்கு ஆயத்தமாயினர்.

பெரியசாமி குடும்பத்துடன் தனித்து விடப்பட்டார். அவர் கையில், நோயா சேறா சாக்கடையா என்று அனுமானிக்க முடியாது படைபடையாக செதிள் செதிளாக துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கும் ஒரு ஜீவன், தன் புது எஜமானர் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, சிநேகமாக வாலாட்டி, லேசாக உறுமியது.

பெரியசாமி தன் விரல்களால் வாயை மூடிக்கொண்டு ஓ…ஹ்ஹோஹ்ஹோ என்று  நிஜமாகவே  அழுதார்.

4 Replies to “நாய்கள் ஜாக்கிரதை”

    1. தெரியவில்லை. அதை யாரேனும் பிடித்து, பழைய சோறு போட்டு வளர்த்து, அதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றி எழுதினால் தெரியவரும். கதைசொல்லி பெரியசாமியோடு போய்விட்டார். பீட்டரோடு போயிருந்தால் தெரிந்திருக்கலாம்.🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.