உங்க வீட்ல தங்க விளைய..

ல்லா இருக்கியாமா?” என்றபடி சைக்கிளை நிறுத்தினார் வாத்தியார். பின்புறம் அமர்ந்திருந்த அவர் பையன் கீழே குதித்தான்.

அமிர்தம்மாள் திண்ணையில் கிடந்த ஆட்டு புழுக்கைகளை கூட்டுவதை விட்டு வேகமாக கீழே இறங்கி வாத்தியாரை பார்த்து, கையிலிருந்த வாருகோலை பின்புறமாக எறிந்துவிட்டு, சிரித்த முகத்துடன் வெளியே இறங்கி பேசினாள்.

“நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருங்கிக்கீங்க. நரம்பு பிரச்சனைக்கு தஞ்சாவூர் போயிட்டு வந்தீங்களா. கண்ணு சரியாயிடுச்சா சார்?. பொன்வண்டு அப்பா கூட ரொம்ப கவலை பட்டுக்கொண்டு இருந்தார் சார்”.  

“சின்ன பிரச்சனைனு  நினைச்சேன். ஒரு மாசம்  அலைகழிச்சிடிச்சி. என்னடா காரணம் கேட்டா மூக்கு பொடிதான்ரான். கொஞ்ச கொஞ்சமா நிறுத்தணும். நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க” 

“நல்லா இருக்கோம் சார். நம்ம வீட்ல அவ்வோ எப்படி இருக்காவோ?” 

“நல்லா இருக்கு. பொண்ணு பெருசாயிடுச்சி. சடங்கு வச்சிருக்கு. ஞாயிற்றுக்கிழமை. கூப்பிடலாம்னு வந்தேன்”

“சந்தோஷமா இருக்கு சார். சின்னூண்டு பாத்தது. பெருசா ஆயிடுச்சு சொன்னா வருஷம் ஓடுதுன்னு தெரியுது.”

“ஆமா. ஆமா. வீட்லயும் கவலை பட ஆரம்பிச்சிடிச்சி” 

“என் சார். நீங்கதான் நல்லா ஆயிட்டிங்கள்ள.. அப்புறம் என்ன. நீங்க பண்ற பூஜை புண்ணியம் எல்லாம் கூட இருக்கும்  சார். உங்க பரம்பரைக்கே நல்லதுதான் நடக்கும்”

“நடந்தா சரி மா. செட்டியார் இருக்காரா. பொன்வண்டு கல்யாணம் பத்தி என்ன முடிவாயிருக்கு”

“நீங்க சொல்லிட்டீங்கனு, அஞ்சாப்போட  நிறுத்தாம, பத்தாப்பு வரைக்கும் போட்டாச்சு. அலுப்பு பாக்காம தினமும் ஏழு மைலு சைக்கிளை மிதிச்சி, வெளிபாளையம் வரைக்கும் கொண்டு போய் விட்டு, கூட்டிட்டு வந்து படிக்க வச்சாச்சு. எழுவது மார்க் வாங்கி பாஸும் ஆயிடுச்சு.  போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா,   அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது  முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு   கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”

“எல்லாம் நல்லதுதான் நடக்கும். கவல படக்கூடாது. செட்டியார் எங்க?”

“மில்லுக்கு போனாரு. செத்த நேரத்துல வந்துடுவாங்க. நீங்க உட்காருங்க” என்று திண்ணையிலிருந்து நாற்காலியை எடுத்து துடைத்து கீழே போட்டாள் அமிர்தம்மாள். வாத்தியார் பையனை பார்த்தவாறு, 

“தம்பியை புளுக்கொண்டு பாத்தது. இப்ப உங்க பாதிக்கு  வந்துடுச்சி” என்றாள்.

“அய்யா. உள்ளார வாங்க. திணையில உக்காருங்க.” என்று அழைத்தாள்.

பையன் சற்று கூச்சத்துடன் நெளிந்து, வாத்தியாரை பார்த்தான்.

“போடா தம்பி. உக்காரு. செட்டியாரை பாத்துட்டு கிளம்பலாம். வெயிலா வேற இருக்கில்ல.” என்றார் வாத்தியார்.

“சரி” என்றவாறு பையன் திண்ணையில் உட்கார்ந்தான். வீட்டின் அருகே இருந்த வேப்ப மரமும், புங்க மரமும் சிறிதாக அசைந்து மெல்லிய காற்று வந்தது. 

“என்னை  தெரியுதா?” என்று பையனை பார்த்து கேட்டாள் அமிர்தம்மாள்.

“தெரியும். பொன்வண்டு அக்கா எங்க?” 

“நியாபகம் இருக்கா. அவ ஆத்தா வீட்டுக்கு மஞ்சக்கொல்லை போயிருக்கா. என்ன படிக்கறாப்பல இப்ப?”

“அஞ்சாப்பு”

“அக்கா என்ன படிக்கறாப்ல”

“எட்டாப்பு. சிக்கல்ல போயி பரீட்சை எழுதினா. நானும் அம்மாவும் கூட போனோம்”

“அப்படியா?. பெருங்கடம்பனுர்ல எட்டாவது எழுத கூடாதா?” என்று வாத்தியாரை பார்த்து கேட்டாள்.

“இல்லமா. அது இ.எஸ்.எஸ்.எல்.சி. நம்ம ஊர்ல எழுத முடியாது. சிக்கல்தான் போகணும்.” என்றார் வாத்தியார்.

“அது சரி. பிள்ளைங்க படிக்கணும்னா நாம அலஞ்சி தான் ஆகணும். அடுத்த வருஷம் படிக்கணும்னா நடந்து போயி, சங்கமங்கலத்தில வண்டிய புடிச்சு சிக்கல் இல்ல,  நாகப்பட்னம் போகனுமில்ல” என்றவாறு திரும்ப, செட்டியார் தெரு முக்கில் வருவதை பார்த்து, விறு விறு என்று நடந்து, வேப்ப மர அடியில் உள்ள மேட்டில் ஏறி,

“ஏங்க, இங்க பாருங்க. நம்ம சார் வந்திருக்காரு. பிள்ளையும் வந்திருக்கு” என்று கத்தினாள். 

செட்டியார் பசுமாட்டை விரட்டிக்கொண்டே வேகமாக வீட்டருகே வந்து “அம்மாடி. பாத்து ஒரு மாசம் ஆச்சு. எப்படி இருக்கீங்க. ஒரே கவலையா போயிடுச்சி சார்.” என்றவாறு குரல் கொடுத்துக்கொண்டே பசுமாட்டை வேப்ப மரத்தடியில் காட்டினார் செட்டியார். 

“நல்லா இருக்கேன். எங்க வெயில்ல போயிட்டு வந்தாவது?” என்றார் வாத்தியார்.

“லட்சுமி காலையில மேய போனது. வரல. எப்படியும் நம்ம கோயில்கிட்ட படுத்துயிருக்கும்னு தெரியும். அப்புறம் மில்லில அரிசி மூட்ட அரைக்க போட்டிருந்தேன்.  அதான் ஒரு எட்டு  பாத்துட்டு, லெட்சுமியையும் அப்படியே ஓட்டிட்டு வரலாம்னு, சைக்கிளை எடுத்தா பஞ்சரு. ராத்திரி வெளிபாளைய போயிட்டு வந்தேன். தர்கா தாண்டும்பொழுதே காத்து கம்மியாகர மாதிரி தெரிஞ்சிச்சி. நினைச்ச மாதிரியே காலையில வேலைய காமிச்சிடிச்சி. நமக்கு கால்தான் சைக்கிளு” என்று பெருமூச்சு விட்டார் செட்டியார்.

“நம்ம ரோடு கப்பி ரோடு. தாரு கிடையாது. சைக்கிளை பகல்ல ஓட்டறதே கஷ்டம். சாயங்காலத்திலேயே வீட்டுக்கு வந்திடனும். உங்களுக்கு தெரியாதா என்ன?” என்றார் வாத்தியார்.

“நம்ம ராணிக்கு ஜுரம் சார். மாத்திரை வாங்கலாம்னு போனேன்”

“சின்னதுக்கா. அதான் குரல் கேட்டும் வரலையா. கெட்டிக்காரியாச்சே. என்னாச்சி”

“இருந்து என்ன பிரயோசனம். போன எட்டுக்கும், பத்தாயம் சுத்தம் பண்ணேன். ஓடு பிரிச்சோம். அப்ப   கூட மாட ஒத்தாசை செஞ்சிச்சி. அதுல முடியாம போச்சு. நோஞ்சான் குஞ்சி. ஹார்லிக்ஸ் வாங்கி போட்ருக்கேன். குடுத்து பாப்போம்.” என்று திரும்பி உட்புறம் பார்த்து ““இந்தா.. பாப்பா..பாப்பா..வெளில வா..சாரு வந்திருக்காரு” என்றார்.

ராணி வெளியில் வந்தாள். தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தது தெரிந்தது. மெலிந்த தேகம். வாத்தியாரை பார்த்து சிரித்தாள்.

“ஏம்மா உடம்பு பரவாயில்லையா?” என்றார் வாத்தியார்.

“பரவாயில்ல  சார். உடம்பு வலி இருக்கு. ஆஸ்பத்திரி போயி ஊசி போடணும்னு அம்மா சொன்னிச்சி”

“பள்ளிக்கூடம் போகாம இருக்கிறதுக்கு எதாவது சொல்லக்கூடாது. கண்ணீரப்பன் கண்ண குத்தும்”

“உங்க வீட்ல தங்க விளைய. எங்க அம்மா மாதிரியே நம்பாம இப்படி கேக்கறீங்க.”

“இல்லமா. மூஞ்சி தெளிவா இருக்கு. உடம்பு வலினா கண்ணு குழம்பியிருக்கும்ல. சரி. நீ சொல்ற. நம்பறேன். காலையில கிளம்பி நாகப்பட்னம் லொங்கு லொங்குனு போய்ட்டு, ஆஸ்பத்திரிலே அரைநாள் உக்கார்ந்துட்டு வந்தா, வலி இருந்தா ஜாஸ்தியாயிடும், வலி இல்லாதவங்களுக்கு வலி வந்திடும். நம்ம இளங்கடம்பனுர் கம்பௌண்டர போயி பாரு. மருந்து கொடுப்பான். ரொம்ப முடியலைன்னா ஊசி போடுவான். ஒரே நாள்ல வலி ஓடிடும்.” என்றார் வாத்தியார்.

“அவ கிடக்கிறா சார். வெந்நீர்ல குளிச்சி, படுத்து எஞ்சா சரியாயிடும். நீங்க எதுவும் சாப்பிடமாட்டீங்க. பையனுக்கு மோரு தரட்டுமா” என்றாள் அமிர்தம்மாள்.

“தம்பி. மோர் சாப்ட்ரியா” வாத்தியார் பையனை பார்த்து கேட்டார்.

பையன் திண்ணையில் எல்லாத்தையும் பார்த்து கொண்டு இருந்தவன், மெதுவாக எழுந்து வாத்தியாரிடம் வந்தான். மெதுவாக கேட்டான் “அப்பா.. வீட்ல தங்க விளையுமாப்பா” 

இதை கேட்டவுடன், செட்டியார் சத்தமாக சிரித்தார்.

அமிர்தம்மாளும் சிரித்தாள்.

ராணியும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து சின்ன வெட்கத்துடன் சிரித்தாள்.

வாத்தியாரும் மெதுவாக சிரித்து.. “ராத்திரி சொல்றேன்.” என்றார்.

வாத்தியார் பெண்ணின் ருது பத்திரிகை செட்டியாரிடம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

சைக்கிளை எடுத்து பையனை பின்புறம் ஏற சொல்லி மிதிக்க ஆரம்பித்தார். பையன்  கத்தினான் . “அப்பா, அப்பா, ஒன்னுக்கு வருது நிறுத்துப்பா” 

வாத்தியார் சைக்கிளை ஒரு பூவரச மர நிழலில் நிறுத்தி “போயிட்டு வாடா தம்பி” என்றார்.

பையன் போகாமல் நின்றான். முறைத்தான்.

வாத்தியார் கேட்டார் “தம்பி என்னாச்சி”

“அப்பா, உங்க வீட்ல தங்க விளையும் சொல்லிச்சி அந்த அக்கா. அப்படி விளையுமா. அப்படி விளைஞ்சா நிறைய காசு கிடைக்கும்ல” 

வாத்தியார் சிரித்தார். “இதான் காரணமா. ராத்திரி வரைக்கும் இருந்து கேக்க பொறுமை இல்ல.”

பையன் கோபமாக “ஆமா. இப்ப தெரியணும். சொல்லுங்க” என்றான்.

வாத்தியார் சொல்ல ஆரம்பித்தார் “அந்த பொண்ணு, அவங்க பாட்டி சொல்றத கேட்டு பழகிடிச்சு. புரியுதா. திட்றதுக்கு சொல்றதுதான் அந்த பழமொழி.”

“தங்கம் விளைஞ்சா, வெள்ள கலரு பிளஷரு   வாங்கலாம். அத்த வீட்டுக்கு ஜாலியா போகலாம்.” என்றான் பையன்.  

வாத்தியார் புன்சிரிப்புடன்  பையனை பார்த்து “வீட்ல தங்கம் விளைஞ்சா நல்லதில்லடா தம்பி. யோசிச்சி பாரு. நம்ம வீட்ல தங்கம் விளைஞ்சா என்னாகும். நமக்கு எல்லாமே கிடைக்கும்னு நினைப்போம். அதான் இல்ல. நான் வேலைக்கு போக மாட்டேன். நீயும், உங்க  அக்காவும் பள்ளிக்கூடம்  பக்கமே  போமாட்டீங்க. ஊர்ல எல்லாரும் வந்து தங்கம் கேப்பாங்க. திருடன் வருவான். தங்கம் முக்கியமா இருக்கும். நம்ம வாழ்க்கை நரகமா இருக்கும். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சி இல்லையா”

“போப்பா. தங்கம் விளையுமா, விளையாதா?” 

“இல்ல தம்பி. சாமி நமக்கு தேவையின்னா கண்டிப்பா கொடுத்திருப்பார்.  யோசிச்சி பாரு. பணம்,புகழ், அதிகாரம் எல்லாம் சாப்பாடு மாதிரித்தான். கஷ்டப்பட்டு அளவோட வந்தா நிக்கும், அளவு தாண்டினா மேல இருக்கிறவன் றெக்கையை ஒடச்சி விட்டுருவான்.” என்றார் வாத்தியார்.

பையன் யோசித்துக்கொண்டே சைக்கிளில் ஏறினான். வாத்தியார் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். பையன்  மனதில் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரம் தங்க மரமானது. புளியங்காய்கள் தங்க கட்டிகளானது.

One Reply to “உங்க வீட்ல தங்க விளைய..”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.