சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது

பாலசுப்ரமணியத்துக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆயுத கேஸ் என்று சொன்னார்கள். உண்மைக்கு அது ஆப்பரேஷன் செய்த நார்மல் டெலிவரி என்று தான் சொல்ல வேண்டும் . தண்ணீர் குடம் உடையாமல் பிரசவ கதவை உடைக்க பார்த்திருக்கிறது பிள்ளையின் தலை. முயன்று முயன்று பார்த்தாள் தங்கம். கடைசியில் மூர்ச்சையானது தான் மிச்சம். மயக்கத்தில் இருந்தவளுக்கு கத்தி வைக்க போக காட்டு கத்தலுடன் பிரசவமானது.

பிள்ளையை கண்ட நொடியிலேயே அதன் சிவந்த காதுகளில் மூன்று முறை சொன்னார் பாலசுப்ரமணியன் , “சுமதி. சுமதி. சுமதி”.

சில பெயர்களுக்கு வயதே ஆவதில்லை. லதா, ரேணுகா, ராதா, தேவி என்று. அந்த வரிசையில் சுமதி என்ற பெயருக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் அதுவல்ல காரணம். பாலசுப்ரமணியன் தன் முதல் மகளுக்கு சுமதி என்ற பெயர் வைத்ததற்கு வேறொரு காரணமிருந்தது. அதை நாம் தெரிந்து கொள்ள தான் வேண்டும்.

இரண்டாம் ஆண்டு இயற்பியல் படித்து கொண்டிருந்த ஒருத்தியை இளம் வயது பாலசுப்ரமணியன் ரொம்ப ரகசியமாக காதலித்தார். அந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டார்.அப்போது அவர் முதலாண்டு ஆங்கிலம். ஒவ்வொரு ஹவர் முடியும் போதும் அவள் வகுப்பை தாண்டி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாளும் தவறமாட்டார். தாண்டி  செல்வதென்றால் அவளை சாடையாக ஒரு நோட்டம் விட்டபடி செல்வது பின்னர் திரும்ப வரும்போது ஒரு பார்வை. நான் உன்னை பார்க்கவே வந்தேன் என்பது போல இருக்கும் அந்த பார்வை. 

முதல் பெஞ்சில் முனையில் அமர்ந்திருக்கும் அவள் இவரை லயமாக திருப்பி பார்ப்பாள். அவ்வளவு தான்.  ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, பைரன் என்று சிலபஸில் உள்ள எல்லோரும் வரிசையாக தோன்றி நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் அவர் கண் முன்னால்.

அவள் பார்த்து பழக்கப்படாத உடையில் தான் தினம் தினம் கல்லூரிக்கு வருவார். இரவல் தான். எல்லாம் கல்லூரிக்கு எதிரிலுள்ள சலவைக்காரரிடம் சிநேகம் வாய்த்த பலன்.  என்றைக்கேனும் அவள் புடவையில் வந்திருப்பாள். அப்போதெல்லாம் தீடீரென ரெண்டாம் ஹவரில் காணாமல் போகும் அவர் பளிச்சென வேட்டி சட்டையில் அடுத்த ஹவரில் அவள் முன்னே தோன்றுவார். 

அவள் சிரிப்பாள். இவர் முன்னே ஷேக்ஸ்பியர் வந்துவிடுவார். 

நிறுத்தத்திலுள்ள டீ கடையில் அவளுக்காக காத்திருப்பார். அவள் ஏறும் அதே பேருந்தில் அவரும் ஏறுவார். அவள் பார்வை படும் இடம் பார்த்து தொங்குவார் . நடிப்பதற்க்கு பேருந்தில் இடமில்லாத காரணத்தால் ஷேக்ஸ்பியர் அங்கே அப்போது வரமாட்டார். வெறுமையான அந்த இடத்தில் இளையராஜா அட்டணக்கால் போட்டு அமர்ந்து கொள்வார். 

பல அவள்களையும் பல அவர்களையும் சுமக்கும்  அந்த பேருந்தில் காதல் பிதுங்கி வழியும். சாலையில் கரை புரளும். எதிர் திசையில் வரும் வண்டிகளெல்லாம் வழுக்கி சறுக்கும். பெரும் பெரும் விபத்துகள் எல்லாம் நிகழும். எல்லா விபத்துகளும் கோர சாவில் முடியாமல் சில காதல்களிலும் முடிந்திருந்தது.

காதல் வளர்ந்தது. சில செமெஸ்டர்கள் கழிந்தன. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தன அவர்களின் திருமணத்திற்கு!. 

அவர்களின் என்றால் அவளுக்கும் அவனுக்கும்!

அவள் பெயர் இன்னவென்பதை பாலசுப்ரமணியன் அன்று தான் தெரிந்துகொண்டார்! 

சுமதி!.

ஆனால் அவரின் காதல் கதையை நாம் விசாரித்த வகையில்,  புலப்பட்டது என்னவெனில், பாலசுப்ரமணியன் நம்மிடம்  சில இடங்களை மறைத்துவிட்டிருந்தார். அவைகளையும் நாம் தெரிந்து கொள்ளல் அவசியமானது. 

இரண்டாம் ஆண்டு இயற்பியல் படித்து கொண்டிருந்த ஒருத்தியை பாலசுப்ரமணியன் ரகசியமாக காதலித்தார் தானே. அது எவ்வளவு ரகசியமெனில் அவளுக்கும் கூட தெரியாது. பாலசுப்ரமணியன் என்ற ஒருவன் தன்னை காதலிப்பதாக. 

நேர நேரத்திற்கு கடக்கும் அவரை அவள் திரும்பி பார்த்தாள் தானே. காரணமென்னவெனில் வாயுலோர முனையில் இருந்ததினால் அவரன்றி எந்த நாய் வந்திருந்தாலும் அவள் திரும்பி பார்த்து தான் இருப்பாள். அவள் இருக்கையின் வாட்டம் அப்படி. 

அவர் வேட்டி சட்டையில் நின்ற பொது சிரித்தாள் தானே! அது , “நீ புடவையில் அழகாக இருக்கிறாய்” பக்கத்து பெஞ்சுக்காரி ஒருவள் சொன்னதற்கு வெட்கத்தில் வந்த சிரிப்பை வாசலை நோக்கி எறிந்தது.   

பாலசுப்ரமணியன் சொல்லாத ஒன்றும் நம்  விசாரணையில் புலனானது. அது என்னவெனில், ஷேக்ஸ்பியர் கவிதைகளை நெட்ரூ பண்ணி அவள் வரும்போதெல்லாம் சத்தமாக ஒப்பிப்பார். அதுவும் மனதுக்குள்ளே!. 

எது எப்படியோ, நிகழ மறந்த அந்த பெருந்துயரின் நிவாரணமாக தன் பிள்ளையைக்கு  சுமதி என்று பெயரிட்டார் !.

பெயர் சூட்டல் விழா அஸ்பத்திரி வாடையில் இனிதே நடந்து முடிந்தது. பிள்ளை அழத் துவங்கினாள். ஆனால் பாலசுப்ரமணியனுக்கு அப்போது தெரியாது பிள்ளை பெயர் பிடிக்காமல் தான் அழுகிறாள் என்று.

பாலசுப்ரமணியன் ரயில்வே ஊழியர். திருமணம் சொந்தத்திலேயே அமைந்தது. பின்னே சும்மாவா, பட்டமங்கலத்தான் பரம்பரையில் முதல் அரசு ஊழியன். முறை உள்ள சொந்தங்கள் எல்லாம் நீ நான் என்று போட்டி போட, பாலசுப்ரமணியன் தெரிவு செய்தது தூரத்து உறவுக்கார பெண்ணான தங்கத்தை. வந்த வரன்களில் தங்கம் படித்தவள். பட்டம் பெறவில்லை என்றாலும், பனிரெண்டு வரையில் படித்தவள். கிளை நூலகத்தின் உறுப்பினள். அது ஒன்றும் மட்டுமே அவருக்கு போதுமானதாக இருந்தது. 

வீட்டில் கவிழ்த்து வைக்க பட்ட புத்தகத்தை புரட்டியபடி தங்கத்தின் அப்பாவிடம். சொன்னார், “ம். ரயில்வே டிபார்ட்மென்ட். பெர்மனெண்ட் ஜாப் தான்ங்க “. 

மகன் இங்கிலீஷில் பேசியது பட்டமங்கலத்துகாரருக்கு. பெருமையாக இருந்தது.

நல்ல இடம் நாலு இடம் கூட மாட போய் வர, ஆபீஸ் ஆட்கள் கூட சகஜமாக பேச,  பழக,  படித்த தன்னை படித்த பெண் தன்னை நன்றாக புரிந்துகொள்ளும், பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி தரும், அது மட்டுமில்லாமல் படித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வது  கவுரதியா  இருக்கும். மனதுக்குள் இருந்த செக் சலிப் கட்டங்களை ஒவ்வொன்றாக டிக் அடித்துக்கொண்டே வந்தார். 

அவரின் அரசு ஊழிய புத்தி ஒரு சில நொடிகளில் கணக்கு போட்டு முடித்தது, தனக்கு மனைவியாக இருக்க வேண்டிய அனைத்தும் தங்கத்திடம் இருக்கிறது.

திருமணம் தடபுடலாக நடந்தது. மாப்பிள்ளை ஆபீஸ் போய் வர TVS 50 மோட்டார் சைக்கிள், மர  பீரோல், கட்டில் மெத்தை தலையணை,  சாமான் சட்டு, சீர் செனத்தி எல்லாமும். 

மருஉண்டு வருடம் கழிந்தது. உறவுக்கார்கள் லேசாக காது கடித்தனர். “விசேஷம் உண்டா” 

அவர்கள் அந்த கேள்வியின் சூட்சமம், அதில் தடவப்பட்ட விஷத்தின் ருசியறிந்திருக்கவில்லை. வெட்க சிரிப்பில்  வெள்ளந்தியாக கடந்து தான் சென்றனர் கணவன் மனைவி இருவரும். பின்னர் பிள்ளைபேறு தள்ளி போக, தள்ளி போக, அந்த கேள்வி அவர்களை தூங்கவிடாமல் துரத்தியது. வீட்டில் இருந்தவர்கள் தங்கத்தை குறி வைத்தார்கள். 

“எம்புள்ள கவர்னமெண்டு ஆளு. இருந்தாலும் பொன்னு செத்தாலும் பொன்னு. ரெண்டாம் கல்யாணம் செஞ்சிக்க கூட ஆளுக இருக்காவோ,. இப்போ அவன் சொன்னா கூட புடி புடின்னு வேற ஒருத்திய கொண்டாந்து வச்சிடுவே ” என்று வெளிப்படையாகவே பட்டமங்கலத்தார் சொல்ல துவங்கினார்.  

தங்கம் சதா அழுதபடி இருப்பாள். வீடு நிம்மதியற்று போனது.. பாலசுப்ரமணியன் முதல் தலைமுறையாக அறிவியல் படித்தவர். பிள்ளை உண்டாகாமல் இருப்பதற்கு தானும் ஒரு காரணமாக இருக்க கூடும் என்ற வகையில் அவர் இருந்தார்.  சரியாக ஒன்பதாவது வருடம் தங்கம் கருவுற்றாள். அந்த செய்தியை கேட்க பட்டமங்கலத்தாருக்கு வாய்க்கவில்லை. புகைப்படத்தில் முறைப்புடன் இருந்தார். 

சுமதி பிறந்தாள். 

அட்டெண்டென்ஸ் எடுக்கும் நேரம் சுமதிக்கு ஒருவித பதட்டம் வந்து தொற்றி கொள்ளும். கோவம் வரும்.  சில நாட்களில் அழுகையாக கூட அது மாறுவதுமுண்டு. அதுவும் அந்த சமூகவியல் வாத்தியார் சேஷாத்திரி  அழுத்தமாக கூப்பிடும் போது சற்றேகுறைய அழுதேவிடுவாள்.

“பாசுமதீ”.

தமிழய்யா இளங்கோவன் மொழிப்பற்றை மாணவர்களுக்கு ஊட்டும் பொருட்டு எடுத்த முடிவு தான் சுமதியின் இந்த வேதனைக்கு காரணமாயிற்று. R அருண். ரா அருண் என்றானான் . S கீதா சா கீதா என்றானாள். அந்த வரிசையில் B சுமதி பா சுமதி ஆகியிருந்தாள். அவர்களின் இனிஷியல் மாற்றம் செய்ததை பெரும் புரட்சி செய்துவிட்டதாக எண்ணி தானே பெருமை கொண்டார் இளங்கோவன். ஏனோ அவர் தன்னிடம் டியூசன் படிக்கின்ற மாணவர்களிடம் அந்த புரட்சியை பற்றி மூச்சுவிடுவதில்லை. 

“ரா அருண்”

“எஸ் சார்”.

“கோ கௌரி “

“எஸ் சார்”.

“…..”

“எஸ் சார்”.

“…..”

“எஸ் சார்”.

“பா சுமதி”

எத்தனை கிலோ சார் வேணும் என்றான் கடைசி பெஞ்சிச்சில் இருந்த ஒருவன்.

பயல்கள் கூச்சலிட்டார்கள். பின் பாதி வகுப்பில் சிரிப்பலை. 

வாத்தியார் மீண்டும் அழைத்தார். “பாசுமதி”.

இந்த முறை வகுப்பெ ஆர்ப்பரித்தது. சுமதியை தவிர்த்து.

உதட்டை பிதுக்கி உள்ளுக்குள்ளே செருமிக்கொண்டே சொன்னார். “எஸ் சார்”. 

வகுப்பில் எழுந்த அமளியில் அவள் எஸ் சொன்னது வாத்தியாருக்கு கேட்டிருக்கவில்லை.

“பாசுமதி இருக்கியா இல்லியா “

பயல்கள் கூச்சலிட்டார்கள்,  “இருக்கு சார், கிலோ 25 ரூவா:

“டே மாப்பிள பெஞ்சுக்காரனுவளா வெயில்ல முட்டி போட வச்சா தெரிஞ்சிடும்” என்றார் வாத்தியார்.

வகுப்பு அமைதியானது.

“பாசுமதி” பொறுமை இழந்திருந்தார் அவர்.

“வந்திருக்கா சார், ஹே  ஹே…”

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் அவள் பெயரை வாத்தியார் அழைத்து அவள் வருகையை உறுதிசெய்வதற்குள் வகுப்பில் கெக்கலிப்பு அலை எழும். எழுந்து பள்ளிக்கூட ஓட்டு கூரையை தூக்கும். பாதி பீரியட் முடிந்திருவிடும்.

அதிலும் கணக்கு வாத்தியார் மூர்த்தி வந்து விட்டால் அவ்வளவுதான்.  “பேர பாரு பாசுமதி தொவரம் பருப்புன்னு”  என்று தான் ஆரம்பிப்பார்.

கணக்கு வாத்தியார் மூர்த்திக்கு பயல்கள் வைத்திருந்த பெயர் மெண்டல் மூர்த்தி. அவர் கணக்கில் அறிவாளி. அதனால் அந்த பெயர். அவருக்கு கணக்கு மட்டுமல்ல பள்ளிக்கூடத்தை பற்றியும்  எல்லாம் அத்துப்படி. ஒவ்வொரு வகுப்பில் எத்தனை மேசை நாற்காலிகள் இருக்கின்றன, எந்த வகுப்பில் எவ்வளவு சாக் பீஸ் துண்டுங்கள் சிதறி கிடக்கின்றன என்பது கூட துல்லியமாக தெரியும். இது எல்லாவற்றிற்கும் மேலாக சிமெண்ட் தரையில் அலங்காரத்திற்காக கிழிக்கப்பட்டுள்ள சதுரங்கள், வட்டங்கள், செவ்வகங்கள், கோடுகள் உட்பட அனைத்தின் எண்ணிக்கையும் அவர் விரலிடுக்கில் இருக்கும். 

இத்தனை பெரிய அறிவாளிக்கு அட்டெண்டன்ஸ் கணக்கு மட்டும் நேராவதில்லை. முதல் பீரியட்டிற்கு வகுப்பிற்கு வந்தால் அவர் ஒரு கணக்கை கூட நடத்துவதில்லை என்ற புகார் கூட அவர் மேல் உண்டு. பீரியட் முடித்திருக்கும்.  ஆனாலும் அவர் அட்டெண்டன்ஸ் எடுத்து முடிப்பதில்லை. 

மூர்த்தி ஒவ்வொருவராக எண்ணத் தொடுங்குவார். மாப்பிள்ளை பெஞ்சுக்காரன் எவனாவது ஒருத்தன் அவர் எண்ணும் போது பெஞ்சுக்கு அடியில் குனிந்து கொள்வான். ‘எஸ் சார்’ சொன்ன எண்ணிக்கையில் ஒன்று குறையும். பின்னர் மீண்டும் எண்ணுவார். அப்போது ஒருவன் ரெண்டு இடமாக மாறி உட்காருவான். எண்ணிக்கை இப்பொது ஒன்று அதிகரித்து விடும். இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கும், சுமதியின் பாசுமதி பிரச்சனையை தீர்ப்பதற்கும் பெல் அடிப்பதற்கும் சரியாக இருக்கும்.  

பயல்கள் சிரிப்பது அவமானமாக இருந்தது சுமதிக்கு. வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் அவளை அவ்வாறே அழைக்கலாயினர்.  எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கும் வாத்தியார்கள்  கூட, தன்னை மட்டும் இனிஷியலோடு கூப்பிடுவது கேலி செய்வது போல இருந்தது அவளுக்கு.  

இதற்கு பயந்து கொண்டே, அவள் நேரம் கடத்தி பள்ளிக்கூடம் செல்லலானாள். ப்ரேயர் முடியும் வரையில் கிரௌண்டில் முட்டி போட பழகிக் கொண்டாள் . நல்ல வாய்ப்பாக PT வாத்தியாருக்கு அவள் சுமதி என்றே அறியப்பட்டியிருந்தாள். அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்து ஸ்டாஃப் ரூமுக்கு போகும் வாத்தியார் பின்னாலே ஓடி சென்று தன் வருகையை உறுதிப்படுத்திக் கொள்வாள். 

“நல்லா படிக்கிற புள்ள லேட்டா வர்றது நல்ல பழக்கம் கிடையாது. மாத்திக்கணும் இல்லைனா ஹச் எம் கிட்ட சொல்லிடுவேன் பாத்துக்க” என்று அவர்கள் சொல்வதோடு சரி. 

அட்டெண்டன்ஸ் கேலியை தாண்டி அவளை பள்ளியில், கடைத்தெருவில்  என்று எங்கு வைத்து பார்த்தாலும் பயல்கள் ‘பாசுமதி  பாசுமதி’ என்று விளிப்பது அவளுக்கு எரிச்சலாக வரும். சுமதி என்ற பெயரிட்ட அப்பாவை  அவள் நிந்திக்காத நாளேயில்லை. பாசுமதி என்று யாரேனும் கிண்டல் செய்தால், உடனே மனதுக்குள் அப்பாவின் பத்து தலைமுறையை இழுத்து திட்டுவாள்.  

ஒட்டுமொத்த வகுப்பில் ஒருவன் மட்டும் அவளை சுமதி என்றே அழைப்பான்.  அதனாலேயே அவனை அவளுக்கு பிடித்திருந்தது. அவள் அப்போது பெரியமனுஷி ஆகியிருந்தாள். பப்ளிக் எழுதி முடித்த கடைசி நாளில் அவனிடம் சொன்னாள் “எனக்கு உன்னை நிறைய பிடிக்கும்ப்பா . நான் உன்னை கல்யாணம் கட்டிக்கொண்டால் என் பெயர் மறுபடியும் பாசுமதி ஆகிவிடும். சாரிப்பா”, இழைந்து கொண்டே சொன்னாள். 

முதல் முறையாக பாரிக்கண்ணன் தன் பெயரை எண்ணி கவலைப்பட்டான் . தன் அப்பாவிடம் பகை கொண்டான். சுமதி கொண்டதை போலவே.


சுமதி பாரிக்கண்ணனை மறந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பமானது. விருப்பம் போலவே வரணும் அமைந்தது. அவளுக்கும் பிடித்திருந்தது. 

சுமதி சந்திரன். தன் பெயரோடு அவன் பெயரை சேர்த்து எழுதி பார்த்துக்கொண்டாள். எழுதிய வரிகளை லேசாக வருடினாள். பூரித்தாள். கல்யாண வேலை தூள் பறந்தது. பத்திரிக்கை அச்சாகி வந்திருந்தது. 

பத்திரிகைகள் கவர்கள் தனிதனியாக நூறு நூறாக கட்டப்பட்டிருந்தன. ஒரு கட்டை மட்டும் பிரித்தாள். கையில் எடுத்து பார்த்தாள். முகர்ந்தாள். ஆசுவாசமாக சோபாவில் அமர்ந்தபடி படித்தாள். பத்திரிகையை தூர எறிந்து விட்டு திடீரென ஓவென அழு தொடங்கினாள்.

பிரிந்துகிடந்த பத்திரிகையில் மாப்பிள்ளையின் பெயர் செல்வன் 

கு பாலசந்திரன் BE ., AE, TNEB என்று அச்சிடபட்டிருந்தது. 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.