அசல்

பாட்டுக்காரர் அடுத்த பாட்டை எடுத்தார். “மலையோரம் வீசுங்காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா…”. மலையிலிருந்து பொங்கிவரும் காற்று முகத்தில் மென்மையாக மோதி நழுவியது. இருக்கையின் பக்கவாட்டு பலகையில் சன்னமாக எழுப்பப்பட்ட தாளம் பொருத்தமாக இயைந்தது. கண்களை மூடி அந்தப் பாடலை மட்டும் காதில் வாங்கிக் கொண்டிருந்தேன். இனிமை இனிமை என மனதினுள் ஒலித்தது. மனதோடு உடலும் சேர்ந்து எடையற்றுப் பறந்தது. ”உள்மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே இல்லாத வானமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே…” குழைந்து வளைந்து ஒலித்த குரலால் நெஞ்சில் மெல்லிய விம்மல் எழுந்தது. 

      பாடல் முடிவதற்காக காத்திருந்ததைப்போல கலைசல் அரவம் கேட்டதும் கண்களைத் திறந்தேன். சிலர் எழ அந்த இடத்தில் இன்னொருவர் அமர்வதும் நகர்ந்து அமர்வதுமாய் இருந்தார்கள். ஆவடி வந்துவிட்டதுபோலும். பாடுபவர் அவருக்கு அருகிலிருந்தவரிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார்.  

   இரண்டு ஆண்டுகளாக தினமும் ரெயிலில் பயணம் செய்தபோதும் இந்தப் பெட்டியில் ஏறியது எதேச்சையாக நடந்தது. வேப்பம்பட்டு நிலையத்தில் எப்போதும்போல முதல் பெட்டியில் ஏற நின்றுகொண்டிருந்தபோது தலையில் ஒரு சாக்கு மூட்டையும் கையில் ஒரு பெரிய பையையும் தூக்கிக்கொண்டு ஒரு மூதாட்டி பிரயத்தனத்துடன் நடந்து வந்தார். யாரும் அவரைக் கவனிக்கவில்லை. அவரவர்களுக்குண்டான கவலைகளிலோ சிந்தனையிலோ ஈடுபட்டிருந்தனர். நானும் அப்படித்தான் எப்போதும் இருப்பேன். ஆனால் அன்று என்னவோ அவரைக் கவனித்தேன். அதோடு அவருக்கு உதவவும் தோன்றியதுதான் இப்போதும் வியப்புக்குரியதாகவே உள்ளது. கேட்டவுடனேயே ஆச்சர்யமும் ஐயமும் கொண்டு என் முகத்தை ஒரு கணம் நோக்கியவர் முகம்மலர அந்தப்பையை என்னிடம் நீட்டினார். நான்காவது பெட்டியில் வரும் அவரின் மகளிடம் அதை அளிப்பதற்காக கொண்டுவந்திருந்தார். 

   அரக்கோணத்திலிருந்து வந்த வண்டியில் அவர் மகள் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள். வண்டி நின்றதும் மகளிடம் பிள்ளைகள் குறித்து விசாரித்தார். அவள் கணவன் கீழிறங்கி மூட்டையை வாங்கிக்கொள்ள பையை நானே உள்ளே தூக்கிக் கொண்டு ஏறினேன். நின்றவர்களை விலக்கியபடி அவர் செல்ல அதே இடைவெளியில் நானும் சென்றேன். அம்மூதாட்டி வெளியே நின்றபடியே கைகூப்பி  விழிகளால் நன்றி சொன்னபோது வண்டி நகரத் தொடங்கிவிட்டது.  அப்போது ”காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை..’ என்று பாடல் கேட்டது…வியந்தபடி திரும்பியபோது தொடர்ந்து கேட்டது.  ”முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு….” சற்று கட்டை குரலாக இருந்தபோதும் குழைவும் பாவமும் கச்சிதமாக இருந்தன. 

   பாடிக்கொண்டிருந்தவருக்கு நாற்பது வயதிருக்கும். மாநிறத்துடன் நடிகர் ராஜேஷின் சாயலில் இருந்தார். பட்டரவாக்கதிலிருந்த பெரிய தொழிற்சாலையின் முத்திரை பதித்த சட்டை அணிந்திருந்தார். அருகிலிருந்து அவரை ஊக்கியபடி தாளமிட்டும் தலையாட்டியும் ரசித்துக் கொண்டிருந்த அவரின் நண்பர்களும் உடலளவிலும் வயதிலும் அவருக்கு இணையானவர்களாகவே இருந்தனர். “எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்…” என முடித்தபோது என் விழியோரம் நீர் கசிந்தது. ஓடும் ரயிலின் இரைச்சல், இசையென ஏதுமில்லாமல் எளிய தாளம் மட்டுமே ஒலித்தது, குரலும் அத்தனை நேர்த்தியானதில்லை. ஆயினும் மனம் உருகுவது எப்படி. இதையெல்லாம் அப்போது யோசிக்கவில்லை. அடுத்தடுத்து தொடர்ந்த பாடல்களில் லயித்திருந்தேன். பட்டரவாக்கத்தில் அவர்கள் இறங்கிச் சென்ற பிறகே இதையெல்லாம் யோசிக்க முடிந்தது.. 

      எனக்குத் தெரிந்த இசையென்பது இளையராஜாவின் திரைப்பட பாடல்கள்தான். அதுவும் பெரிதாக ராகமெல்லாம் இல்லாமல் எளிதான வார்தைகளுடன் பாடப்படும் உற்சாகமான பாடல்கள்தான். பாட்டுக்காரரின் முதன்மையான தேர்வாக இருந்தது நடிகர் மோகன் பாடுவதாக திரைப்படத்தில் அமைந்த பாடல்களே.. அவர் பாடும்போது என்னை உருக வைத்தது என் மனதாழத்தில் இருந்த பாடல்தான் என்ற எண்ணம் எழுந்தது.. அவருடைய திறன் என்பது  பாடலின் முதன்மையான குழைவையும் பாவத்தையும் தன் குரலில் எழுப்பி என் மனதாழத்தில் படிந்துள்ளஅப்பாடலை மெல்லத் தீண்டி என் மேலுள்ளத்திற்கு கொண்டு வந்ததுதான். அவர் ஒன்றும் பெரிய பாடகரில்லை என என் ஆணவத்தின் ஒரு குரல் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் எல்லோராலும் அதைச் செய்யமுடியவில்லையே என்ற கூற்றால் அக்குரலை அடக்கினேன். அவரைப் போன்ற தோற்றம் கொண்டவர்களைக் கண்டாலே மனம் இனிமை கொண்டுவிடுவதை மகிழ்வுடன் கவனித்துவந்தேன்.

     இரண்டு மாதங்களாக அவர் பாடுவதை கேட்பதற்காகவே இப்பெட்டியிலேறி கேட்டு ரசித்து வந்தாலும் அவரின் பெயரைக் கேட்கவோ அவருடன் உரையாடவோ முனையவில்லை. ஏதோவொரு பெயராக மட்டும் சுருக்கி அவரை நினைவுகூர விருப்பமில்லை என்பதொன்று. கலைஞனாக இருப்பவர்களிடம் உரையாடினால் அவருடைய அசட்டுத்தனமான மற்றொரு பக்கம் வெளிப்பட்டு அவர்மேல் கொண்டுள்ள மதிப்பு குறைவதற்கான வாய்ப்பு அதிகம் என எங்கேயோ படித்து மனதில் பதிந்துள்ள வாசகம் மற்றொரு காரணம். 

    தினமும் நான்காவது பெட்டியிலேயே ஏறத்தொடங்கியவுடன் வாழ்வின் அன்றாடக் காலைப்  பயணம் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணமயமாகிவிட்டது. முதல் பெட்டியில் பயணிக்கும் அத்தனை பேரின் முகத்திலும் ஒரு பரபரப்பும் அவசரமும் மெல்லிய நெகிழித்தாள்போல படர்ந்திருக்கும். அடுத்தவரை நெருக்கித் தள்ளியபடி  வேகவேகமாக ஏறுவதும் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் நகர்ந்தபடியும் இருப்பார்கள். சிலபேர் ஏன் வண்டிய உருட்டுறான் எனத் தன்னிடமே கேட்பதும் நாட்ல எதுவுமே சரியில்ல வெளிநாட்லயெல்லாம் இப்படியில்லை என தனக்கே பதில் கூறுவதுமாக இருப்பார்கள். கால்வாசிப்பேர் அவர்கள் காதில் மட்டும் கேக்குமாறு கருவி பொருத்தியிருப்பார்கள். பலர் தான் பார்க்கும் காட்சியின் ஒலி அடுத்தவருக்கு ஏற்படுத்தும் இன்னலைப் பற்றி கிஞ்சித்தும் அறிவில்லாதவர்களாகவும் சத்தம் வெளியே கேட்கிறது என்ற பிரக்ஞை இல்லாமலும் இருப்பார்கள். ஒருபுறம் ஹிந்தி நிகழ்ச்சியின் ஒலி காதைக் கீறும். இன்னொருபுறத்திலிருந்து மலையாள இணையத்தொடரின் ஒலி காதைக் குடையும். நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஹக்ஹக்ஹக்… ஓஓஓவ்வ்… என நகைப்பது போன்ற பின்னொலியை முதன்முதல் சேர்த்தவன் முற்றிய மனநோய் கொண்டவனாகவே இருக்கவேண்டும். காட்சியை பார்ப்பவர்களுக்கே இம்சையாக இருக்கும் அவ்வொலி, வெறுமனே கேட்பவர்களுக்கு மனக்கொதிப்பை உண்டாக்கிவிடும். சில முறை சத்ததை குறைக்கச் சொல்லி, ஒரு சிலர் முறைப்புடன் குறைத்திருக்கிறார்கள். அதிலும் சிக்கல் உண்டு.  எல்லோருமே கையில் திறன்பேசி வைத்திருக்கும் நிலையில் எவருடையதிலிருந்து சத்தம் வருகிறது என்பதையே அறியமுடியாது. ஒருமுறை பொறுக்க முடியாமல் அருகில் நின்றவனிடம் ”டேய்… சத்தத்தைக் குறைடா” என நான் கூறவும் அவன் என் முகத்தின் தீவிரத்தைப் புரியாத மாதிரிப் பார்த்து தன் காதிற்குள் வெளித்தெரியாத மாதிரி பொருத்தியிருந்த சிறு குமிழை கையில் எடுத்துக்கொண்டு என்னவென்று வினவினான். முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மன்னித்துக் கொள்ளுமாறு கேட்க வேண்டியதாகிவிட்டது.   

       சத்தம் ஒருபுறமிருக்க நெரிசல் தரும் எரிச்சல் இன்னும் அதிகம். ஆண்களோடு ஒட்டி நிற்கும்போது ஏற்படும் கசகசப்பும் ஒவ்வொரு உடலிலிருந்து வெளிப்படும் வெவ்வேறு விதமான வாசணைகளும் இணைந்து ஏற்படும் கலங்கல் நெடியும் குமட்டலை உருவாக்கும். ஆண்கள் கூடப் பரவாயில்லை, பெண்கள் அருகில் வந்து நின்றால் ஏற்படும் பெரும் பதட்டத்தில் உடலிலும் மெல்லிய நடுக்கம் தோன்றிவிடும். அவர்கள் மேல் கையோ பையோ படாதவாறு  முழுப்பிரக்ஞையோடு இருக்கவேண்டும். பட்டுவிட்டால் அந்தப்பெண் மட்டுமல்ல அருகிலுள்ள ஆண்களும் என் ஒழுக்கத்தோடு குலத்தின் ஆதியந்தத்தைப் பற்றியும் கேள்வி எழுப்புவார்கள். எனவே, தங்களின் இரண்டு பைகளையும் தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் பிடித்தபடி நிற்கும் பெண்ணைச் சுற்றிலும் சிறு அகழிபோல இடைவெளி இருக்கும். நான் புதிதாக ரெயிலில் பயணம் மேற்கொண்டபோது, பெண்கள் அருகிலிருக்கும் மகளிர் பெட்டியை விடுத்து பொதுப்பெட்டியில் ஏன் ஏறுகிறார்கள் என் யோசித்ததுண்டு. பிறகுதான் புரிந்தது, அந்தப் பெட்டியில்போல மற்ற பெண்களின் நெருக்குதலில் நசுங்காமல் இங்கே எவர் மேனியிலும் படாமல் நிற்கமுடியுமே. 

       பொருட்கள் வைக்குமிடத்தில் எட்டி வைப்பது சிரமம் என்பதால் நின்று கொண்டிருப்பவர்கள் பையை தோளில் மாட்டிக் கொண்டிருப்பதையாவது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் பைகளை தங்கள் மடியில் வைத்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது ஏனென இப்போதும் புரியவேயில்லை. ஆண்களையொட்டி   நிற்கும்போது முதுகில் அழுந்தும் பை பல நேரம் சுடும். சில நேரம் தண்னென இருக்கும். மூன்றுமுறை ஈரமாக இருந்து சட்டையை நனைத்ததும் உண்டு. அதன் பிறகுதான் என் குழம்பு பாத்திரத்தை நெகிழிப்பைக்குள் வைத்து பைக்குள் வைக்கத் தொடங்கினேன்.  

     இதையெல்லாம்விட மனதைப் பாதிக்கும் மற்றொன்று உண்டு. பதின்பருவ இணையர்கள். அணைத்தபடியே ஏறி வருவார்கள். அவர்களுக்கான வழி தானாகவே அமையும். அவர்களுக்கேற்ற ஓரிடத்தில் சென்று நிற்பார்கள். தோற்றம் கல்லூரியில் பயிலும் மாணவனாகவும் பள்ளி மாணவியாகவுமே தோன்றும். ஆனால் அவர்களின் நடத்தைகள் அப்படி இருக்காது. அவர்களின் விரல்களின் வருடல்களும் உதடுகளின் சுழிப்பும் விழிகளின் கிறக்கமும் பலர் நெருக்கி சூழ இருப்பதைப் பற்றிய போதமில்லாமல் அவர்கள் தாங்கள் வேறொரு தனித்த இடத்தில் இருப்பதாக உணர்வதாகவே தோன்றும். எல்லோருக்குமே ஒருவித அசௌகரியமாக இருந்தாலும் கண்டும் காணாததுமாகவே இருப்பார்கள். எனக்கு ஒரு சமயம் ஆத்திரம் வரும். பல சமயங்களில் பரிதாபம் தோன்றும். அவர்களுக்கென தனித்த இடம் இல்லாமல் இருக்கலாம். அப்போது, காதலோ அல்லது அதுபோன்ற ஏதோவொன்றின் எப்போதும் நீடிக்காத பித்தின் திளைப்பு அவர்களுக்கு நீடிக்கட்டுமென வேண்டிக்கொள்வேன்.  சில நிலையங்களிலேயே அவர்கள் இறங்கிவிடுவார்கள். அவர்கள் இறங்கியபின் அதுவரை வண்டியில் நிலவிய இறுக்கம் மெல்லத் தளர்ந்து இயல்படையும். ஆனால் அலுவலகத்தை அடைந்து முகம் கழுவும்போது கண்ணாடியில் தெரியும் முகம் நான் மிகவும் விரும்பும் என் முகமாக இல்லாமல் நான் மிகவும் வெறுக்கும் இன்னொரு முகத்தையே நினைவுபடுத்தும். 

        இதெல்லாமே இப்போது தோன்றுகிறது. ஆனால் அப்பெட்டியில் பயணிக்கும்போது இதுமாதிரி யோசித்ததுகூடயில்லை. வாழ்க்கை அதேபோல் நெருக்கடியில் செல்வதாகவே விதிக்கப்பட்டது என்பதாகவே நான் எடுத்துக்கொண்டேன். இப்போது செல்பவர்களும் அப்படித்தான் எண்ணக்கூடும். இரண்டு பெட்டிகளுக்கு பின் கூட்டம் குறைவாக இருக்கக்கூடும் என்பதையோ உடலும் மனமும் நெருக்கடியின்றி செல்லமுடியும் என்பதையோ அறியவேயில்லை. முதல் பெட்டியில் செல்வதால் எப்பயனும் இல்லையென ஒரேயடியாக மறுத்துவிடமுடியாது. சாலையிலிருந்து வந்து ஏறுவதற்கு அதுதான் முதன்மையானது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இறங்கி நெரிசலுக்குள் கால்கள் பின்னாமல் வெளியே செல்வதற்கு அதுதான் வசதி. நான்காவது பெட்டியிலிருந்து இறங்கும்போது முன்னால் இருக்கும் பெட்டியிலிருந்து இறங்கியவர்களே மொத்தமாக இறங்கி குழம்பி நிற்பார்கள். பின்னால் இறங்கி அவசரமாக செல்ல வேண்டியவர்கள் முதுகில் மோதி முண்டுவார்கள். சில நிமிடங்கள் பொறுத்து பதறாமல் செல்வதென்றால் மட்டுமே இப்பெட்டியின் பயணம் இனிமையானதாகயிருக்கும்.  

      அரசு அலுவலகம் என்பதால் விதிகளின்படி என் அலுவலகம் தொடங்கும் நேரம் காலை பத்துமணி. பணியில் சேர்ந்ததிலிருந்தே எப்போதும் அந்நேரத்தில் அலுவலகத்தில் இருப்பேன். விதிகளின்படி நடப்பவன் என சிறு ஆணவம் கொள்வதில் ஒருவித மகிழ்ச்சி. ஆனால் அதை நான் மட்டுமே சொல்லிக்கொள்வேன். யாரும் ஏற்பதுமில்லை முக்கியமாக மறுப்பதுமில்லை. பொதுவாக அலுவலகம் உயரதிகாரிகள் வரும்போதே தொடங்கும். அப்போது யார்யார் இருக்கிறார்கள் என்பதே கவனிக்கப்படும். யார் முதலில் வந்தது என்பது பற்றி யாருக்கும் பொருட்டில்லை. யார் பார்க்கவில்லையென்றாலும் எவரும் கேட்கவில்லையென்றாலும் பத்துமணிக்குள் போயாகவேண்டும் என எனக்குள் ஒரு வைராக்கியம் இருந்தது. இப்போது பாட்டுக்காரரால் கிடைக்கும் மனநிறைவிற்காக அவ்வைராக்கியத்தை கைவிடவேண்டியதாகிவிட்டது. ஆனால் இப்போதும் உயரதிகாரி வருவதற்கு முன்பாகவே அலுவலகம் செல்கிறேன், மலர்ந்த முகத்துடன்.

   முகம் மலருமளவிற்கு பாட்டுக்காரர் என்ன செய்கிறார், அவருக்குப் பிடித்த பாடல்களை அவருக்குத் தெரிந்த வகையில் பாடுகிறார் அவ்வளவுதானே. ஆனால் அந்தப் பாடல்கள் எனக்கும் பிடித்தவை என்பதோடு எனக்குள் ஒலிக்கும் குரலில் பாடுகிறார் என்பதும்தான் காரணம். அந்தப் பாடல்கள் எனக்குள் எழுப்பும் காட்சிகளும் நினைவுகளும் அடுத்தபடியாக முக்கியமானவை. பாடலின் முதல் வரி ஒலித்தவுடனேயே அக்காட்சி தெரியும். வார்தைகளுக்கான காட்சியமைப்பு தனிதனியாக துலங்கித் தெரிவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படியே அந்தத் திரைப்படத்தை எங்கு பார்த்தேன் என்பதும் யார் உடன் இருந்தார்கள் என்பதும் துல்லியமாக நினைவில் எழும். பாடலின் உணர்வு பாடல் முடிந்த பின்னும் அடுத்தபாடல் தொடங்கும்வரை நீடிக்கும். பெரும்பாலும் இனிமையான உணர்வுகள். நேற்று “சங்கீத மேகம் தேன்சிந்தும் நேரம்… ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…” என்று பாடியபோது பின்னணியில் ட்ரம்ஸின் மெல்லிசையும் வயலினின் வேகமான இசையும் இனிமையாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ”இந்தத் தேகம் மறைந்தாலும்… இசையாய் மலர்வேன் கேளாய் பூமனமே…” என்றபோது உடல் சிலிர்க்க ஒரு சொட்டு கண்ணீர் கன்னத்தில் சொட்டியது. இனிமையினால் கண்கள் கசிவதை முதல்முறையாக பாட்டுக்காரர் மூலமாகவே உணர்ந்தேன்.

           இந்தப் பெட்டியிலும் கூட்டம் இருக்கும், ஆனால் மூச்சை திணறவைக்குமளவிற்கு இருக்காது. இதில் பயணிப்பவர்கள் வயதானவர்களோ முடியாதவர்களோ வந்தால் எழுந்து இடம் கொடுப்பவர்களாக இருந்தார்கள். இவர்கள் தேவதூதர்களோ என முதலில் மயக்கம் தோன்றியதுண்டு. ஆனால் புறச்சூழல்தான் அவர்களின் மனதை இலகுவாக்கியுள்ளது எனப் பிறகு புரிந்தது. இவர்களே முதல் பெட்டிக்குச் சென்றால் வேறு மாதிரித்தான் மாறுவார்கள் எனத் தோன்றியது.. எல்லோரின் மனதையும் இலகுவாக்கிய பாட்டுக்காரர் சில முறை கடுமையாக நடந்து கொண்டது  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  

    அன்றொருநாள் பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் தான் ஒரு பாடல் பாடுவதாக்க் கூறினான். இவர் முக மலர்ச்சியுடன் தலையாட்டினார். தொங்கிய கைப்பிடிகளை பிடித்தபடி இருக்கைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தவன் இருக்கைகளுக்கு மத்தியிலிருக்கும் திண்டில் சாய்ந்து நின்று கொண்டு ஆரம்பித்தான். “ஒன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா… நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்துபோனா அழகா..” என்னவென்று புரியாத ஏதோ குறைகிறதே எனத் தோன்றியது. இரண்டு வரிகளையும் இரண்டாம் முறை பாடி முடித்தவுடன் “தம்பி நிறுத்துங்க” என சத்தமாகக் கூறினார். நிறுத்தி அவரைப் பார்த்த அவனின் முகம் அவமானத்தில் சற்று சிவந்திருந்தது. 

“நீங்க நல்லாப் பாடறதா ஒங்க பிரண்டுகளாம் சொல்லியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதான் நிறுத்தச் சொன்னவுடனே ஒங்க மொகத்துல கோபம் தெரியுது. நான் பெரிய பாடகன் கெடையாது. ஆனா பாட்டு சரியில்லைங்கிறதச் சொல்றதுக்கு பாட்டக் கேக்குறவனா இருந்தாலே போதும்னு நெனைக்கிறேன். நல்ல ஏத்தயெறக்கத்தோட பாடுறது மட்டும் நல்ல பாட்டாயிடாது. அதுல உணர்ச்சியும் ரொம்ப அவசியம். உணர்ச்சி இல்லாம எவ்வளவு இலக்கண சுத்தமாப் பாடினாலும் அது உயிரில்லாத அழகான உடம்பு மாதிரி வெளிறிப்போய்தான் இருக்கும்” என்று கூறியதும் அவன் முகத்தில் சிறு தெளிவு ஏற்பட்டது. ஆனாலும் முழுதாகப் பாட விட்டிருக்கலாம் என எனக்குத் தோன்றியது. 

இரண்டு வாரங்களுக்கு முன் பாட்டுக்காரரின் நண்பர் தான் பாடுவதாகக் கூறினார். இவரும் சம்மதித்து ஜன்னலோரமாக நகர்ந்து தாளமிடுவதற்கு தயாரானார். “பச்ச மலைப்பூவு நீ உச்சீ மலைத்தேனு… குத்தங்குறையேது நீ நந்தவனத்தேரு…” தொடங்கியவுடனேயே எனக்கு தெரிந்துவிட்டது அதில் ஏதோ மிகுகிறதென. பாட்டுக்காரர் அளவிற்கே எல்லோரும் பாடமுடியாதே என சமாதானமும் செய்துகொண்டேன். ஆனால் பாட்டுக்காரர் பொறுத்துக்கொள்ளவில்லை. தட்டிக் கொண்டிருந்த தாளத்தை நிறுத்திவிட்டு கண்னைமூடிப் பாடிக்கொண்டிருந்தவரின் கைமேல் வேகமாகத் தட்டினார். பாடுவதை நிறுத்திவிட்டு கண்திறந்தவர் இவரின் முகத்தைப் பார்த்ததும் புரிந்துகொண்டார். அவர் முகம் பரிதாபமாய் மாறியது. 

       “இத்தனை வருசம் கேக்குறியே சரியா வரலேன்னா ஏன் ஆசப்படறே. பாடறப்ப அந்தப் பாட்டோட சூழ்நிலையை உணர்ந்து பாடனும்தான். ஆனா உணர்சிக்குள்ள ஒரேயடியா மூழ்கிடக்கூடாது. நீ இப்படிப் பாடறதக் கேட்டா இனிமே அந்தப் பாட்டோட நெனப்பு வர்றப்பல்லாம் ஒன்குரல்தான் முன்னுக்கு வரும். அந்தப்பாட்டக் கேக்கவிடாமப் பண்ணிடும். இனிமே இதுமாதிரிப் பாட நெனைக்காத சரியா. அதுதான் எல்லோருக்கும் அதுவும் குறிப்பா ஒனக்குப் புடிச்ச அந்தப் பாட்டுக்கு நல்லது” என்று பாட்டுக்காரர் முடித்தபோதுதான் மிகுதலும் ஒரு குறைவே என்ற முரண் எனக்குப் புரிந்தது.  

    பாட்டுக்காரர் இறங்குவதற்கு இன்னும் இரண்டு நிலையங்கள் இருந்ததால் இன்னொரு பாடலை எதிர்பாத்திருந்தபோது எதிர்புறத்திலிருந்து அந்த ஹம்மிங் கேட்டதும் மனதில் ஒருவித ஒவ்வாமை தோன்றியது. அந்த  ஹம்மிங் திருவிளையாடல் திரைப்படப் பாடலின் தொடக்கத்தில் இடம்பெற்றதுதான். அதில் எந்தக் குறையுமில்லை, ஆனால் அதை தொடர்ந்து வரப்போகும் உடைந்து தளர்ந்து பொருந்தாமல் ஒலிக்கப்போகும் குரலை எண்ணியே அந்த ஒவ்வாமை.  ஆனால் அவர் எப்போதும் மாலை வேளையில் திரும்பும்போதுதானே வருவார். கையில் பழைய டிரான்ஸிஸ்டர் போன்ற ஒன்றை வைத்து இசையை மட்டும் ஒலிக்கவிட்டு வரிகளை அவர் பாடி யாசகம் கேட்பார்.  பாடினாலும் அவரை பாட்டுக்காரர் என அழைக்க மனம் ஒப்பவில்லை. அதற்காக பிச்சைக்காரர் எனவும் அழைக்க முடியவில்லை. நான் வைத்திருக்கும் காதொலிப்பானை மீறி அவரது குரல், நுழையக்கூடாத ஏதோவொன்று காதில் நுழைந்ததைப் போன்று உறுத்தலையும் அசூசையையும் ஏற்படுத்தும். பிச்சையிடுவதன் மூலம் தர்மத்தை ஈட்டிக்கொள்வதில் எனக்கு ஆர்வமில்லை என்பதால் அவருக்கு ஒரு நாணயமும் நான் அளித்ததில்லை. விரும்பினால் கொடுக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டியது என்பதே எனது நிலைப்பாடு என்பதால் பிச்சைக்காரர்களை எவரும் இழிவு செய்தால் எனக்கு கோபம் வந்துவிடும். கடந்த வாரம்கூட ஐம்பது வயது மதிக்கத்தக்கவரை உழைக்கச் சோம்பல்பட்டு பிச்சை கேட்பதாக ஒரு இளைஞன் கூறியபோது என் இயல்பை மீறி தகாத வார்த்தையால் அவனைக் கண்டித்தேன். 

          சிறு குறைகளுடன் பாடியபோதே பொறுமையிழந்தவரின்முன் அந்தப் பெரியவர்  பாடிக்கொண்டு வந்தால் பாட்டுக்காரர் சினம்கொண்டு தகாத வார்தைகள் கூறுவார் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. அதைக் காண்பதன்மூலம் பாட்டுக்காரர்மேல் நான் கொண்டுள்ள மதிப்பு சரிந்து அவர்மேல் வெறுப்போ ஒவ்வாமையோ தோன்றக்கூடும். அதன்பின் இதே பிரியத்துடன் அவரின் பாடல்களை ரசிக்கமுடியுமா. கண்களை மூடினால் பாட்டுக்காரரின் சினமுகமே மனதில் நிற்கும். ஆனால், அதை தடுக்க என்னால் செய்யக்கூடுவது ஏதுமில்லை. வண்டி கிளம்பிய தருணத்தில் அவர் ஏறியதும் என் மனதில் பதட்டம் அதிகமானது. நடக்கப்போகும் எதையும் என்னால் மாற்றமுடியாது. உணர்வுக்கு இடம் கொடுக்காமல் நிகழ்வதை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும் என எனக்குள் உறுதி செய்துகொண்டேன்.   எல்லோருமே அவரவர் இயல்புடன் இருக்க எனக்குள் பெரும் கொந்தளிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. காவி வேட்டி வெளுத்ததா அல்லது வெள்ளை வேட்டி நிறம் கூடியதா எனக் கண்டறிய முடியாதவொன்றை  இடையில் கட்டியிருந்தார். அதே நிறத்திலிருந்த துண்டை தோளைச்சுற்றி போர்த்தியிருந்தார். முகசதை இளகி லேசாக தொய்ந்திருந்த்து. டிரான்ஸிஸ்டரில் ஒலித்த   ஹம்மிங் முடிந்தவுடன் பாடத் தொடங்கினார். “பாட்டும் நானே பாவமும் நானே  பாடும் உனை நான் பாட வைத்தேனே” என்ற வரிகளை வெவ்வேறுவிதமாக மாற்றி மூன்று தடவை பாடினார். ஏற்கனவே பல தடவை கேட்டிருந்ததால் முதல்முறை கேட்டபோது அடைந்த்துபோல் பெரிதாக அதிர்ச்சியடையாமல் பாட்டுக்காரின் முகம் எப்படி மாறுகிறது என்பதை ஆர்வத்துடன்  கவனித்தேன். அன்று அப்பெரியவரின் குரலைக் கேட்டு அடைந்ததைக் காட்டிலும் பெரிதான அதிர்ச்சியை இப்போது அடைந்தேன். 

    பாட்டுக்காரரின் முகம் பரவசம் கொண்டதுபோல் தோற்றம் கொண்டிருந்தது. இசையைப் பற்றி எதுவுமேயறியாத எனக்கே நாராசமாய்த் தோன்றிய பாடல் நன்றாகப் பாடும் பாட்டுக்காரருக்கு கடும் சினத்தையல்லவா ஏற்படுத்தவேண்டும். அவர் நண்பரையே சரியாக பாடவில்லையென கடிந்து கொண்டவர் இப்போது லயித்திருக்கிறாரே. “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே… நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…” என்ற வரிகளுக்குப்பின் வாத்தியவோசை போலவே தன் குரலால் தொடர்ந்து ஒலியெழுப்பினார். அப்போது பாட்டுக்காரரின் கண்கள் கசிந்ததைக் கண்டதும்  எனக்கு திகைப்பு உண்டானது. பாடலை முழுவதுமாக தலையாட்டியபடிக் கேட்டவர் தன் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை அந்தப் பெரியவருக்கு அளித்தார். அதைப் பார்த்த அவர் நண்பர்களும் அருகருகே அமர்ந்திருந்தவர்களும் தங்களால் இயன்றவற்றை அளித்தனர். என்னையறியாமலேயே முதல்முறையாக நானும் பத்து ரூபாய் அளித்தேன்.

         அம்பத்தூரில் இறங்கி அடுத்த பெட்டிக்கு சென்ற அப்பெரியவர் முகத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் நம்பிக்கையின்மையின் ஒளி ஒரு துளி குறைந்து அதில் நிறைவு சேர்ந்ததாகத் தோன்றியது. பாட்டுக்காரரும் இறங்குவதற்கு ஆயத்தமானார். என் மனதில் கேள்விகளின் பாரம் அதிகரித்தது. இன்றே கேட்கவேண்டுமா நாளைக்கு சாவகாசமாக கேட்டுக்கொள்ளக் கூடாதா என உள்ளெழுந்த குரலை இன்று கேட்காமல் விட்டால் பிறகு எப்போதும் கேட்கமுடியாமலேயே போகக்கூடும் என்ற பதிலால் அடக்கி அவரை நெருங்கினேன்.  

    நண்பருக்கு எழுவதற்கான சைகை காட்டியபடி எழுந்தவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். என் மனதிலிருந்த கேள்விகளில்  ஒன்றை மட்டும் தயங்கியபடியே கேட்டேன்.

“சரியாவே பாடாதவரோட பாட்ட பாராட்டுற மாதிரி பணம் கொடுத்தீங்களே ஏன்…” என்னைக் கேள்வி கேக்கும் இவன் யார் இவனுக்கு பதில் சொல்லவேண்டியது அவசியம்தானா என்றெல்லாம் அவருள் ஓடிய எண்ணங்களை முகம் காட்டியது. ஒரு கணத்தில் சொல்வதென தீர்மானித்தார். “நானெல்லாம் பாட்டக் கேட்டுட்டு பாடறேன். அவரெல்லாம் பாட்ட உருவாக்கறவரு. மொத ரெண்டடிய திரும்பப் பாடினாரே கவனிச்சீங்களா. ஒன்னு மாதிரி ஒன்னு இல்ல. அதத்தான் சரியாப் பாடலைனு நீங்க சொல்றீங்க. அவர் இசைய அறிஞ்சவர். ஒரு தடவ பாடுன மாதிரி திரும்ப அவங்களால பாட முடியாது. ஏன்னா உண்மையான கலைஞன் ஒன்ன உதுத்துட்டு அடுத்ததுக்கு போய்க்கிட்டு இருப்பான். நகலியந்திரம் மாதிரி  ஒரே மாதிரி   ஒன்னையே திரும்பத் திரும்பப் பாடறவன் என்னை மாதிரி நகல் கலைஞன்தான். புதுசா ஒன்ன அவனால உருவாக்கமுடியாது. நிலாவோட சின்ன வெளிச்சத்திலேயே மயங்கி மகிழ்ச்சியா இருக்கிறவங்களுக்கு சூரியனோட வெளிச்சம் கண்கூச்சத்தையும் புரியாத வெறுப்பையுந்தான் உண்டாக்கும்.   அசல் கலைஞனோட  குரல் தளர்ந்தாலும் அவனோட தனித்தன்மை அழியாம தன்னைக் காட்டும். ஆனா அதை தெரிஞ்சவன் மட்டுமே அறியமுடியும்…”  என தனக்கே சொல்லிக்கொள்வதுபோல கூறியபடி இறங்கினார்.

    நண்பரின் தோளில் கையை வைத்தபடி நடந்தவரை பார்த்துக் கொண்டிருந்தபோது இனிமேல் பாட்டுக்காரர் பாடமாட்டார் என ஏனோ தோன்றியது. மனதில் வெம்மையான வெறுமை பரவுவதை உணர்ந்தேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “அசல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.