பெரிய ஸார்

“ஏய் லல்லி, இந்த ஜெரோம் என்னடி பண்ணிண்டு இருக்கான்?” என்று ஹைமவதி சமையல் உள்ளிலிருந்து இரைந்தாள்..

“வேறென்ன? நம்மாத்துப் பிக்காஸோ நாக்கைத் துருத்திண்டு கூடத்திலே வெள்ளைப் பேப்பரைக் கருப்பு மசியாலே நாசம் பண்ணிண்டு இருக்கான்” என்று லல்லிக்கா சொன்னாள். 

“இவன் ஏன் இப்பிடிப் படுத்தறான்? டேய் ஜெரோம்! வந்து இட்லி எடுத்துக்கோ”

கூடத்திலிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.

“ஏய் லல்லி, இந்த இட்லியை எடுத்துண்டு போய் அவனைச் சாப்பிட வையேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. ஸ்கூலுக்கு ஓடணும்” என்றாள் அம்மா.

“ஆமா. எருமை மாட்டுக்கு ஆகற வயசு அவனுக்கு. கையிலே என்ன கொண்டு போய்க் கொடுக்கறது? எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்மா. அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்” என்றாள் லலிதாக்கா  அம்மாவிடம்.

புயலைப் போல் சமையலறைக்குள் ஓடி வந்தான் ஜெரோம் என்கிற ஜெயராமன். “அக்கா சொல்றது கரெக்ட்டுதாம்மா. நீ ராஜகுமாரியைப் போய் வேலைக்காரி மாதிரி வேலை செய்யச் சொன்னா?” என்றபடி தட்டில் போட்டு வைத்திருந்த இட்லியை வாங்கிக் கொண்டான்.

“ஆனாலும் உனக்கு இவ்வளவு வாய் கூடாதுடா!” என்று அம்மா சிரித்தாள்.

தொடர்ந்து “சாப்பிட்டுட்டு தலையை ஒழுங்கா வாரிக்கோ. போன வாரமே சொன்னேன். பெரிய சினிமாக்காரா கிராப்பெல்லாம் வாண்டாம். ஓட்ட வெட்டிண்டு வான்னு. அப்படியெல்லாம் சொன்ன பேச்சைக் கேக்கறவனா நீ? அட்லீஸ்ட் இப்ப அட்மிஷனுக்குப்  போறப்பவாவது படிய வாரிண்டு வா” என்றாள்.

ஜெரோம் பதிலளிக்காமல் இட்லித் தட்டோடு வெளியே போனான்.    

இந்த வருஷம் அவன் ஒன்பதாம் வகுப்புக்குப் போகிறான். திடீரென்று அவன் அப்பாவுக்குத் திருச்சியிலிருந்து மதுரைக்கு டிரான்ஸ்பர் ஆகி விட்டது. கனரா பாங்கில் அவருக்கு வேலை. நல்ல வேளையாக அவரது ஆபீசுக்குப் பக்கமாக மேலச் சித்திரை வீதியில் வாடகைக்கு வீடு கிடைத்து விட்டது.  வீட்டிலிருந்து சேதுபதி ஸ்கூல் பக்கம் என்று இன்று அம்மாவும் பிள்ளையும் இன்டெர்வியுவிற்குப் போகிறார்கள்.

ஜெரோம் வீட்டு வாசலில் நின்றான். அவனைப் பார்த்து விட்டு சிவகுரு அவனருகில் வந்தான். அவனது அப்பா கலெக்டர் ஆபீசில் இருக்கிறார்.

“எத்தனை மணிக்கு ஸ்கூல்ல இருக்கணும்?” என்று கேட்டான் சிவகுரு.

“பத்து மணிக்கு” என்றான் ஜெரோம். “நேத்திக்கு உனக்கு எப்படி இருந்தது?”

சிவகுருவும் சேதுபதி ஸ்கூலில் சேர இருக்கிறான். அவன் தந்தை மூலம் கலெக்டரின் சிபாரிசுக் கடிதத்தோடு போவதாக நேற்று சொன்னான். 

“ரெண்டு நிமிஷம்தான் இருக்க வச்சாங்க. ஒரு நாளைக்கு இருபது பேர்தான் பாப்பாங்களாம். எங்க நம்பர் பதினாலு. ஆனா அங்க ஆபீஸ்லே கலெக்டர் லெட்டரைக் காமிச்சதும் போன உடனேயே உள்ளே அனுப்பிச்சிட்டாங்க.

எங்கப்பா கலெக்டரோட லெட்டரை ஹெட்மாஸ்டர் கிட்டே கொடுத்ததும் ‘சரி, பண்ணிடலாம்’னு சொல்லிப் போகச் சொல்லிட்டாரு. கலெக்டர் ரெகமெண்டேஷன்னா சும்மாவா?” என்று சிரித்தான் சிவகுரு.

வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஜெரோமுக்குச் சற்று உதறலாகத்தான் இருந்தது. அந்த ஹெட்மாஸ்டர் ரொம்பக் கண்டிப்பு என்று சீனா மாமா – அவன் அம்மாவின் தம்பி –  போன வாரம் ஸ்கூலிலிருந்து வாங்கிய அப்ளிகேஷனைக் கொடுக்க வந்த போதே சொன்னார். ரெண்டு கேள்வி கேட்டே பசங்களின் கெட்டிக்காரத்தனத்தை நிமிஷமாக் கண்டுபிடிச்சிடுவார் என்று மாமா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.அந்த ஸ்கூலில் சேர எல்லோரும் முண்டியடிப்பதால் அட்மிஷனும் கொஞ்சம் டஃப்பாக இருக்கும் என்று அவர் பங்குக்கு வயிற்றில்  புளியைக் கரைத்து விட்டுப் போனார். ஆனால் அம்மாதான் ‘எல்லாம் மலைக்கோட்டைப் பிள்ளையார் பாத்துப்பார்” என்று அவனைத் தைரியப்படுத்தினாள்.

அம்மா எப்போதும் ஒரு டோன்ட் கேர் மாஸ்டர். ‘ஹைமவதி சாதிக்கணும்னு நினைச்சா எலி வாலால மலையையும் இழுத்துண்டு வந்துடுவா’ என்பார் அப்பா. ‘இப்படிச் சொல்லியே நீங்க செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் என்னிடம் தள்ளி விட்டுடுங்கோ!’ என்பாள் அம்மா. 

“ரெடியா? கிளம்பலாமா?” என்று கேட்டுக் கொண்டே அம்மா வாசலுக்கு வந்தாள். அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு “ராஜாவாட்டம் இருக்கே! 

சமத்தா டிரஸ் பண்ணிண்டு” என்று கூறி விட்டுச் சிரித்தாள்.

“தலையைப் படிய வாரிண்டு!” என்றான் ஜெரோம். 

“அம்மாடி, என்ன பொல்லாத்தனம்!” என்று அம்மா அவன் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தாள். 

அம்மா கட்டிக் கொண்டிருந்த மாம்பழப் பழ மஞ்சள் புடவை ஜெரோமுக்குப் பிடித்த ஒன்று. ‘இந்த சுங்கிடிப் புடவையைப் போய் என்னமோ காஞ்சிவரப் பட்டுப் புடவையாட்டம் பாத்துண்டு! சுத்த மண்டுடா நீ!” என்று அம்மா அவனைக் கேலி செய்வாள். புடவைக்கு மேட்சிங் ஆகக் கறுப்பு நிற ரவிக்கை அணிந்திருந்தாள். அளவான மூக்கும்  எப்போதும் சிரிக்கும் உதடுகளும்  முன் நெற்றியிலிருந்து ஆரம்பிக்கும் தலைமயிரால் ஒரிஜினலாக இருந்த நெற்றியின் அகலம் குறைந்து விட அழகாக ஆகி விட்ட முகமும் ஹேமவதிக்கு ஒரு தனி சோபையைக் கொடுத்தது.  

அவர்கள் வீதியில் இறங்கி நடந்து சென்றார்கள். அவர்களைப் படுத்தி எடுக்க வேண்டாம் என்று நினைத்தது போல சூரியன் எங்கோ மேகத்துக்குள் மறைந்திருந்தான். வடக்கத்தி ஜனங்களும் நாலைந்து வெள்ளைக்காரர்களும் எதிர்த் திசையில் வந்தவர்கள்  அவர்களைக் கடந்து சென்றார்கள். மேலக் கோபுர வாசல் வழியாக மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போகும் கூட்டம்.

“சிவகுரு உங்கிட்டே என்னடா கதை விட்டான்?” என்று அம்மா கேட்டாள்.

“நேத்திக்கு அவனும் அவனோட அப்பாவும் போனாளாம். கலெக்டர் லெட்டரைக் கொடுத்ததும் ஹெட்மாஸ்டர் சரி உங்களுக்கு சீட்டு கொடுக்கறேன்னு சொல்லி அனுப்பிட்டாராம். ரெண்டு நிமிஷத்துக்குள்ளே எல்லாம் ஆயிடுத்துன்னான்” என்றான் ஜெரோம். “கலெக்டர்னா பெரிய ஆளாம்மா? நம்ப அப்பா கூடக் கலெக்டர் ஆபீஸ்லே இருந்த நன்னா இருக்குமில்லே?”  

“ஜாக்கிரதையா ரோடைக் கிராஸ் பண்ணனும். பாத்து வா”  என்றபடி வாகனங்கள் வராத நேரம் பார்த்து மேலமாசி வீதியைக் கடந்தாள் அம்மா. இருவரும் டவுன்ஹால் ரோடில் நுழைந்தார்கள். என்றும் போல் அன்றும் கடைவீதி ஜே ஜே என்றுதான் இருந்தது. கடைக்காரர்கள்  ஆபீஸ் போகிறவர்கள்,  தெருவோர வியாபாரிகள், வெளியூர்ப் பிரயாணிகள் என்று பகல் முழுவதும் களை கட்டும் இடம், மாலையானால் கல்லூரி மாணவர்கள் மாணவிகள், வேலை பார்க்கும் அல்லது வேலை பார்க்காத இளைஞர்கள் இளைஞிகள் என்று குதியாட்டம் போடும் கூட்டத்தை வரவழைக்கும் இடமாக மாறிவிடும்.

அவர்கள் பள்ளியை அடைந்த போது பிரேயர் முடிந்து கிட்டத்தட்ட சத்தம் இல்லாத நிலையில் இருந்தது. தேர்வு நடக்குமிடம் என்று வாசலில் ஒரு போர்டு அம்புக்குறியுடன் நின்றது. அவர்கள் அந்த இடத்தை அடைந்த போது கணிசமான அளவில் பையன்களும் அவர்களது பெற்றோர்களும் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் அழைக்கப்பட வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டிருந்ததால் கூட்ட நெரிசலோ தள்ளு முள்ளுகளோ காணப்படவில்லை. ஹேமாவதி பதினெட்டாம் நம்பர் ஒட்டியிருந்த நாற்காலியைத் தேடிக் கண்டு பிடித்து அதில் சென்று உட்கார்ந்து கொண்டாள்   

சற்று நேரம் கழித்து அங்கு வந்த ஒருவர் எல்லோரையும் பார்த்து”இன்னும் அஞ்சு நிமிஷத்திலே இன்டெர்வியு ஆரமிச்சிடும். முதல் ரெண்டு நம்பர் கிடைச்சவங்க முதல்லே  இருக்கற ஹெச். எம். ரூமுக்குப் போங்க. நம்பர் ஒன் ஹெட்மாஸ்டர் ரூமுக்குள்ளே போகணும். நம்பர் டூ  அங்கே வாசல்லே இருக்கற சேர்லே உக்காந்துக்கலாம். உள்ளே போனவர்வெளியே வந்ததும் ரெண்டாவது பேரென்ட் ரூமுக்குள்ளே போகலாம்.அவர் அங்கே நுழைஞ்சதும் இங்கேர்ந்து அடுத்ததா போக வேண்டிய மூணாம் நம்பர் லெட்டர் வச்சிருக்கறவர் எழுந்து அங்கே போய் உக்காந்துக்கணும். நான் சொல்றது புரியறதா?” என்று கேட்டார். 

சிலர் தலையை ஆட்டினார்கள். 

ஜெரோமின் முறை வந்த போது மணி பனிரெண்டாகி விட்டது. அவனும் அம்மாவும் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார்கள். அந்த அறையின் வாசலில் “கே. பத்மநாபன்  எம்.ஏ., ஹெட் மாஸ்டர்” என்ற பழுப்பு நிற போர்டில் வெள்ளை எழுத்துக்கள் மின்னின. உள்ளேயிருந்தவர் வெளியே வந்ததும் அவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள்.

பெரிய மேஜைக்குப் பின்னால் இருந்த நாற்காலியிலிருந்து சற்றுஉயரமான மனிதர் தலையை நிமிர்த்தி வாருங்கள் என்று சொல்லும் பார்வையை அவர்கள் மீது செலுத்தினார். மேஜையின் இந்தப் பக்கம் அவரை நோக்கும்படி இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவர் குனிந்து கையில் இருந்த ஒரு தாளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் அவர் பேசுவதற்காகக் காத்திருந்தார்கள். அறையில் ஓடும் மின்விசிறி எழுப்பிய ஒலியைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. அவர் தலையை நிமிர்த்தாமலே ஒரக் கண்ணால் தன்னை ஒரு முறை பார்த்தது போல ஜெரோமுக்குத் தோன்றியது.இவ்வளவு நேரத்துக்கு நேற்று சிவகுரு வேலை  முடிந்து திரும்பிப் போய்விட்டானோ என்று அவன் வயிறு சற்றுக் கலங்கியது.

“உக்காருங்கோ” என்றார் அவர். திடீரென்று வந்த சப்தம் ஒரு நொடி அதிர்வை எழுப்புவது போல இருந்தது. ஹேமவதி உட்கார்ந்து கொண்டதும் அவன் அம்மாவின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.

அம்மா போர்த்திய தலைப்புடன் “இவன் என்னோட ஒரே பிள்ளை. திருச்சிலேந்து இவனோட அப்பாவுக்கு இங்கே டிரான்ஸ்பர் ஆயிடுத்து. அங்கே எட்டாங் கிளாஸ் பாஸ் பண்ணிட்டான். ஒம்பதாங் கிளாசுக்கு ஒரு சீட் வேணும். டி சி வாங்கிண்டு வந்துட்டேன்” என்றாள். 

அவர் ஜெரோமைப் பார்த்து “கண்ணாடி போட்டுண்டு இருக்கியே, நெறைய டி.வி. பாப்பியோ?” என்று கேட்டார்.

அம்மா குறுக்கிட்டு “அவனுக்கு அஞ்சு வயசாறச்சே மாரியம்மன் போட்டிடுத்து. அதிலே ஷார்ட் சைட்…”

அவர் அவளைப் பார்த்துக் கையமர்த்தி விட்டு  ஜெரோமிடம் “இருக்கட்டும். நீ சொல்லு” என்றார்.

அவன் அவரைப் பார்த்து “ஆமாம். பார்ப்பேன்” என்றான்.

ஹைமவதி அதிர்ச்சியுற்றுப் பிள்ளையை நோக்கினாள்.

ஹெட்மாஸ்டர் “வெரி குட். கமல்ஹாசனா ரஜனிகாந்தா?” என்று கேட்டார். அவர் முகத்தில் அவர் என்ன நினைக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை ஹைமவதியால்.

ஜெரோம் சற்றுத் தயங்கியபடி “ரஜனிகாந்த்!”” என்றான் 

ஹெச். எம். “எனக்குக் கமலஹாசன்” என்றார்.

ஹைமவதி அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள். விளையாடுகிறாரா இந்த மனுஷன்! மனதுக்குள் ஒரு நிமிஷம் ‘இந்தப் பிள்ளை கமலஹாசன்னு சொல்லியிருக்க மாட்டானோ?’ என்று  நினைத்தாள்.  

“நன்னாப் படிப்பியா?” என்று ஹெச். எம். கேட்டார்.

ஹைமவதி கையில் கொண்டு வந்திருந்த பச்சை நிற அப்ளிகேஷன் ஃபார்மையும் மார்க் ஷீட்டையும் எடுத்து அவரிடம் தந்தாள். அவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை லேசாக மேலே தூக்கி விட்டுக் கொண்டு பார்த்தபடியே மேஜை மேலிருந்த காலிங் பெல்லை அடித்தார். உட்பக்கத் தள்ளு கதவைத் திறந்தபடி பள்ளி அலுவலர்கள் அணியும் சீருடையில் ஒருவர் வந்தார்.சற்று வயதானவர் போலக்  காணப்பட்டதற்குத் தலை முழுவதும் பம்மியிருந்த வெள்ளை நிறம் காரணமாயிருந்தது. கூர்மையான கண்கள்.  வந்திருந்த இருவரையும் பார்த்தார்.

“ராமய்யர்! நீர் சீரங்கம் ஆசாமிதானே? இது நல்ல ஸ்கூலா?” என்று ஹெச் எம். கேட்டார்.

“முனிசிபல் ஹையர் செகண்டரி ஸ்கூல். கவர்மெண்ட் ஸ்கூல் மாதிரி சார். ப்ராப்ளம் இல்லாம எடுத்துக்கலாம். மார்க் வேறே எல்லாத்திலேயும் எண்பதுக்கு மேலே” என்றார்.

ஹெச்.எம். மேஜை மீதிருந்த சிவப்புப் பேனாவை எடுத்தார். சிவப்பு மசியில் அப்ளிகேஷன் மீது “நைன்த் பி’ என்று எழுதி “ஃபீஸ் கட்டிட்டுப் போங்கோ”என்று ஹைமவதியிடம் கொடுத்தார்.

ராமய்யர் அப்போது ஹைமவதியைப் பார்த்து “உங்களை இங்கே மதுரையிலேயே பாத்திருக்கேன்னு நினைக்கிறேன். எங்கேன்னுதான் சட்டுன்னு பிடிபட மாட்டேங்கிறது” என்றார்.

ஹைமவதி  திகைப்புடன் அவரைப்  பார்த்தாள்.

“என்னோட  ஹஸ்பண்ட் இந்த ஊர்க்காரர்தான். அவா சொந்தக்காரா எல்லாம் இங்கேதான் இருக்கா. அவாளைப் பாக்க வந்து போயிண்டு இருப்போம்” என்றாள்.  

“அதுக்கில்லே. லாஸ்ட் டூ த்ரீ மந்த்ஸ்லே கல்யாணம் கார்த்தின்னு ஏதாவது ஃபங்க்ஷனுக்கு இங்கே வந்தேளா?”  

ஹைமவதி ஒரு நிமிஷம் யோசித்து விட்டு “ஆமா. என் பெரிய மாமனார் பேத்தி கல்யாணம்னு வந்திருந்தோம்.”

“எப்போன்னு ஞாபகம் இருக்கா?”

அவள் மறுபடியும் யோசித்து விட்டுச் சிரித்தாள். “குட் ஃபிரைடே அன்னிக்கு.  அதுக்கடுத்த ரெண்டு நாளும் பேங்க் லீவுன்னு மூணு நாள் ட்ரிப் போட்டுண்டு போகலாம்னு சொல்லி என் ஹஸ்பன்ட் அழைச்சுண்டு வந்தார்!” 

“தோத்தாத்ரி ஸாராத்துக் கல்யாணம்தானே?” என்று ராமய்யர் கேட்டார்.

ஹெச். எம். தலையை நிமிர்த்தி அவர்களைப் பார்த்தார்.

“ஆமா.” 

“அவர் எங்கள் ஸ்கூல் சேர்மன் ஸார் இல்லியா? அன்னிக்கிப் பூரா எனக்கு வேலை கல்யாண மண்டபத்திலேதான். அன்னிக்கிதான் உங்களைப் பாத்திருக்கேன்ன்னு இப்ப ஞாபகம் வரது” என்றார்.

ஹெச். எம். ராமய்யரைக் கண்களில் கேள்விக்குறியுடன் பார்த்தார். 

“நீங்க அன்னிக்கி முகூர்த்தத்துக்கு வந்துட்டு சாப்பிட்டதும் கிளம்பிட்டேள்” என்ற ராமய்யர் மறுபடி ஹைமவதியின் பக்கம் திரும்பி “இப்போ காலம்பற பத்து மணிக்கு வந்து வெயிட் பண்ணி பன்னெண்டு மணிக்கு வந்திருக்கேள். ஆபீஸ் ரூமுக்குள்ளே வந்து சேர்மன் சார்ன்னு என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்க மாட்டேளோ?” என்று வருத்தமான குரலில் கூறினார்.

ஹைமவதி ஒரு நிமிஷம் மௌனம் சாதித்தாள். ஹெச். எம். அவளை நோக்கினார்.

“என் ஹஸ்பன்ட் ரெகமெண்டேஷன்னு அவரோட பெரியப்பா கிட்டே போக வேண்டாம்னுட்டார். இவனுக்கு மெரிட்லேயே எடம் கிடைச்சாப் போறும். இப்ப சிபாரிசிலே அட்மிஷன் கிடைச்சா நாளைக்கு சொந்தத்திலேயே நாலு பேர் இளக்காரமா பேசுவா, பாப்பா. அதனாலே  வேண்டான்னுட்டார்” என்றாள்.    

ஹெட்மாஸ்டர் முதல்முறையாகப் புன்னகையுடன் ஹைமவதியைப் பார்த்தார்.

“எனக்குச் சிரிப்புதான் வரது. கலெக்டர் சிபாரிசுன்னு நெஞ்சு விம்ம ஒருத்தர் வரார். எங்க எல்லோருக்கும் பெரிய பாஸானவர் தனக்குச் சொந்தக்காராளா இருந்தாலும் சிபாரிசும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு இன்னொருத்தர் வரார். ரெண்டு பேரையும் பாத்து ஏதாவது தெரிஞ்சுக்கோன்னு என் ஐயன்  முருகன் அனுப்பி வைக்கிறான். ஈஸ்வரோ ரக்ஷது” என்றார். பிறகு ஜெரோமைப் பார்த்து “ஒழுங்காப் படிக்கணும்” என்றார். 

ஹைமவதியும் ஜெரோமும் அவரைக் கை கூப்பி வணங்கினார்கள். 

அவர்கள் அட்மிஷனை முடித்து விட்டு வெளியே வந்து நடந்தார்கள்.

“நன்னாப் படிக்கணும்னு சொல்லி அவர் அட்மிஷன் கொடுத்திருக்கார். படிச்சு பெரிய கலெக்டரா வரணும் நீ. சரியா?” என்று அம்மா சொன்னாள்.

“வேண்டாம்மா. நான் பெரிய ஸாரா ஆகணும்” என்றான் ஜெரோம்.

“அதென்னடா பெரிய ஸார்?”

“நல்லவாளா கெட்டிக்காராளா இருக்கறது.”

அம்மா நடப்பதை நிறுத்தி விட்டு நடு ரோடு என்றும் பாராமல் குனிந்து ஜெரோமைக் கட்டி அணைத்துக் கொண்டு ஒரு முத்தம் கொடுத்தாள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.