40+

ஏப்ரல் மாத முதல் வார புதன் கிழமை :

இரண்டு மாதமாக புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லிஃப்டில் ஏறி டெரஸ்க்கு செல்லும் போதெல்லாம் அவனும் வருவது வழமையாகி விட்டது. துவக்கத்தில் இருந்த பரவசம் தணிந்து தற்போது இயல்பானதாகிப் போனாலும் சிறு குறுகுறுப்பு க்ஷண நேரத்தில் உண்டாவது மட்டும் மாறவில்லை. அவன் மொட்டை மாடிக்கு கிளம்பும் போது அவளும் ஃபிளாஸ்க்குடன் வெளியேறி லிஃப்டை அடைவது எதேச்சையானது கிடையாது என்பதை அவள் நன்கு அறிவாள். அன்றும் அப்படித்தான் நடந்தது. 

காரியாலயத்தின் நுழைவாயிலுக்கு அருகே ஒர்க் டேபிள் இருப்பது இது போன்ற அனுகூலங்களை வசதியாக  வழங்குகின்றன. 3,2,1… எண்கள்  கீழ் வரிசையில் நோக்கி நகர்வதைப் பார்க்கும் போது படபபடப்பு கூடியது. காலணிகளுக்கு உள்ளே மறைந்திருந்த கால் விரல்கள் ஏனோ வேகமாக அசைந்தன, கை விரல்கள் ஃப்ளாஸ்க் மீது மெலிதாகத் தாளமிட்டன. நான்கு கண் விழிகளும் பார்வையில் இணைந்த போது அவன் மெலிதான சிரிப்பொன்றைப் படர விட்டான். இரு முகங்களும் ஒரு பரிச்சயத்தை எட்டிய நாளிலிருந்து, கண்டவுடன் புருவம் மேல் நோக்கி வளைவது நின்றதிலிருந்து, அவன் புன் சிரிப்பைத் தர பழக்கிக் கொண்டிருக்கிறான். 

“நீங்களா! நல்லா இருக்கீங்களா?” என்ற சம்பிரதாய விசாரணைக்கான உடல் மொழி இது. பதிலுக்கொரு சிரிப்பைத் தருவது அவசியமாகிப் போனது. “உங்களைப் போல நானும் நல்லா இருக்கேன்”. கண்கள், அதரங்கள், பற்கள் இம்மூன்றும் இரு மனிதர்களிடமிருந்து வெளிப்படுவதை புன்னகை எனப் பொதுவாக வகைமைப்படுத்தினாலும், ஒருவரின் விசாரிப்புக்கும், அதற்கானப் பதிலுக்குமான இணக்கமான கருவி புன்னகை. நான்கு எண் மிளிர லிஃப்ட் கதவு திறந்தது. 5,6 க்கு உரிய ஆட்கள் யாரும் இல்லாததால் இருவரை சுமந்து கொண்டு மேல் நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. காலை 11.30 மணி வாக்கில் அந்த இரண்டு தளங்களுக்கும், டெரஸ்க்கும் செல்ல யாருக்கும் விருப்பமில்லையா? அத்தகைய சூழல் ஒருவருக்குக் கூடத் தகையவில்லையா? 

லிஃப்டை விட்டு வெளியே வந்தவன் வேகமாக நகர்ந்து தனியே நின்றபடி சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தான். எதுவும் பேசாதது ஏமாற்றத்தைத் தந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஃபிளாஸ்க்கைத் திறந்து கோப்பையாக உதவும் ஃபிளாஸ்க் மூடியில் எலுமிச்சைத் தேநீரை நிரப்பிக் கொண்டவள் ஆகாயத்தை வெறித்து நோக்கினாள். அலுவலகத்திற்குள் அரை மணித்தியாலத்தைக் கடத்தினாலே காற்பதனியின் செயற்கை குளிரோட்டம் சில்லிட வைக்கிறது. தேநீர் இடைவேளை எப்போது வரும் என்று காத்திருக்கச் செய்து விடுகிறது ஆனால் எல்லாம் பிரசவ வைராக்கியம் போல நடந்தேறுகிறது. வெளியே வந்த சில நிமிடங்களில் தேகம் வியர்க்க, அலுவலக அறைக்குப் போனால் போதும் என்று நினைக்க வைக்கிறது. அவன் பேசும் நாட்களில் இவ்வாறான சிந்தனை எழாது. மௌனம் வியாபிக்கும் இம்முற்பகல் பொழுதில் வெயில் உரைக்கிறது. 

அவள் தேநீர் அருந்தி முடித்து ஃபிளாஸ்க்கைக் கழுவிக் கிளம்பும் வரை காத்திருந்து இணைந்து எப்போதும் கிளம்புபவன் அன்று துரித கதியில் புகைத்து முடித்து அவள் மீது பார்வையைக் கூட வீசாது கிளம்பிப் போனான். நிதானமாக துலக்கும் வேலையை முடித்து காரியாலத்திற்குள் பிரவேசித்த போதும் சரி, முப்பது நிமிடங்கள் கடந்த போதும் சரி செயற்கை ஜில்லிப்புத் தேவையாக இருந்தது. குளுமையான சீதோஷ்ணம் என்பது தேகம் தாண்டி மனதிற்கும் அனுசரணையாக இருப்பதைக் கண்டுணர்ந்த போது மதிய உணவு இடைவேளை என கடிகாரம் சொன்னது. இப்போதெல்லாம் பசிக்கும் போது சாப்பிட முடிவதில்லை. அலுவல் நேரம் போல காலை சிற்றுண்டிக்கான நேரம், தேநீர் அருந்தும் நேரம், மதிய போஜன நேரம், மாலைத் தின்பண்டங்கள் & தேநீர் நேரம் என நேரத்தின் அடிப்படையில் தான் உணவோ, பானமோ என்று வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும்.   

வொர்க் டேபிளில் இருந்து எழுந்து இடது புறமாக அறையின் உள்நோக்கி நடந்தால் கண்ணாடிக் கதவு, அதைத் திறந்தால் தனி அறை. தேநீர், காஃபி, பால், எலுமிச்சைத் தேநீர், வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீரைத் தனித் தனியே வழங்கும் இயந்திரம். இதையே மாற்றியமைக்க வேண்டும். கத்திரி வெயில் காலங்களில் நீர் மோர், பானகம், இளநீர், உப்பு மட்டும் சேர்த்த ஜில் எலுமிச்சைச் சாறு என ஒவ்வொரு பொத்தானை அழுத்தினால் கோப்பையில் நிறையும்படியான சாதனங்களை உருவாக்க வேண்டும் என்று ஒருவருக்குக் கூடவா யோசனை உதிக்காது? அதே அறையின் எதிர்ப்புறம் நோக்கினால் அனைவரின் போஜன சுமைப் பைகளும் ஒரு டேபிளில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். மேஜை, நாற்காலிகள் ஒழுங்கு முறையில் அமைந்த அவ்விடத்தில் தான் அனைவரும் உணவருந்துவது, தேநீர் குடிப்பது என சிரமப்பரிகாரம் செய்வதற்காகப் புழங்கினார்கள். தலைவலி, காய்ச்சல், ஒவ்வாமை என அவஸ்தைக்கு ஆளாகும் கலீஃஸ்கள் அந்த அறையில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மதிய உணவு இடைவேளை தவிர்த்து அவள் புழங்காத இடமது. 

உண்டு முடித்து இருக்கைக்குத் திரும்பும் போது அவன் கிளம்பிப் போவதை கண்ணாடிக் கதவு படம் பிடித்துக் காட்டியது. அவள் காரியாலயத்தைத் தாண்டும் போது அவன் நடை வேகம் தணிந்து தயங்கியபடி பாதங்கள் நகர்வது போலத் தோன்றியது. அவளின் பிரமை என்பது நிதர்சனம். ‘போலத் தோன்றியது…’ எனும் அந்த சமாதானத்தால் பாதகம் ஏதும் இல்லை.

ஏப்ரல் மாத நான்காம் வார வெள்ளிக்கிழமை :

வாரா வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவன் வருவதில்லை ஆனால் அவன் வரும் நாட்கள் இவ்விரு கிழமைகளில் மட்டுமே அமைகிறது. எந்தெந்த வாரத்தில் இக்கிழமைகளில் ஆஜராகிறான் என்பது பிடிபட கூடுதல் அவதானிப்பு வேண்டும் போல! ஹேண்ட்ஸம், லுக் எல்லாம் பார்வைக்கு வடிவைத் தந்தாலும் அவன் நிச்சயம் 80 ஸ் கிட்டாகத் தான் இருப்பான் என மனம் கூப்பாடு போட்டது. சற்று மெனக்கெட்டால் போதும். ஒரு மனிதனின் வயதைத் துல்லியமாக கணித்துச் சொல்லி விட முடியும். ஒன்றும் கடினமான சூத்திரம் இல்லை. இன்று ஏன் பணிக்கு வந்ததிலிருந்து அவனையே மனம் சுற்றி வருகிறது? ஆஃபீஸின் வருடாந்திர அவுட்டிங்கில் மதுப்புட்டியை சிசுவை ஏந்துவது போல் தன்மையாகச் சுமந்து வந்த டெய்ஸியைக் கண்ட போது ஏற்பட்ட அதிர்ச்சியை விட மதுவருந்திய பின் அவளின் சுபாவம் எந்தக் கோணத்தைத் தழுவும் என்பதைக் காண வேண்டுமென்பதில் ஆர்வம் மேலிட்டதற்கு சற்றும் சளைத்ததில்லை இன்றைய ஆர்வம். சந்துரு மீது நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரிக்கிறது. விளக்க முடியாத ஒரு வசீகரம் அப்பெயருக்கு உண்டு. எந்த வயதில் அப்பெயர் மீதான ப்ரேமம் உண்டானது? என்ன தான் பெரு நகர வாழ்க்கைக்குள் பொருத்திக் கொண்டாலும், பலவிதமான வசதிகள் வாழ்க்கைப் பாணியை செளகர்யமாக்கினாலும் பூர்வீக சோழவந்தானின் பிடிப்பை விலக்க முடியவில்லை. ஆயுஸுக்கும் மாறாதது பையாலாஜிக்கல் பேரண்ட்ஸ் & நேட்டிவ் பாண்டிங். 

ஜீன்ஸ் காற்சட்டையில் நாட்டமில்லாததால், ஃபார்மல் பேண்ட் & சட்டை அணிவது இரு சக்கர வாகன சாரதியாக உலாவுவதற்கு மிகத் தோதாக இருக்கிறது. அதே சமயம் நீளமான தலைக் கேசத்தைக் கத்திரிக்க மனம் ஒப்பவில்லை. வடிவான அப்பாவிப் பெண்ணை வன்புணர்வு செய்வதற்கு கொஞ்சமும் குறைவில்லாத பயங்கரவாதம் அது.   

லிஃப்ட்டில் அன்று ஏனோ இருவரும் மேல் நோக்கிப் பயணிக்கப் பொத்தானை ஒரு சேர அழுத்த முனைய, ஸ்பரிசம் இருவருக்கும் ஒரு தயக்கத்தைத் தோற்றுவித்தது. வேகமாக அதே சமயம் பதமாக கரத்தை நகர்த்தி மற்றொரு கரத்தால் “நீங்களே” என்பது போல் சைகையால் பாவித்தான் சந்துரு. முகத்தில் புன்னகையைப் படரவிட்டு சூழலின் இறுக்கத்தை குறைக்க யத்தனித்தான். 

ஏனோ அவ்வாறெல்லாம் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பொதுவாக அதுபோன்றதொரு பழக்கம் எப்போதும் இருந்ததில்லை. நடுத்தர வயது கொண்ட பரிச்சயமான பெண்கள் எல்லோரும் பொதுவில் பெரிதாக உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சில இடங்களில் உணர்வை வெளிப்படுத்தாது கடப்பது, சில இடங்களில் அட்டகாசமாக பகிரங்கப்படுத்தித் திரிவது என சுயம் மட்டும் ஏன் வித்தியாசமானதாக இருக்கிறது? மணமானால் நிதானம் பழகும் என்பதே பிழையா? தப்பிப் பிறந்து, வளர்ந்து விட்டோமா? அன்று கூட பேக்கரிப் பெண் தந்த சூடான பஃப்ஸ்ஸின் ஏகாந்த ருசியை ஸ்லாகித்து உரத்த பாஷையில் உதிர்த்த போது பலர் உற்று நோக்கி நெளிய வைத்தார்கள். மழை, ரெயில், நாய்க் குட்டி, வாரத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாலைப் பொழுது… பிடித்தமானவற்றை ஏற்கும் மனதின் நிலையைத் திரையிட்டு மறைக்கும் லௌகீகம் ஏனோ கைகூடவில்லை.  ஆண்கள் எப்படி? சந்துரு எப்படிப்பட்டவன்? எது மாதிரியான ஆசாமி? 

டீ குடிக்கும் போது இன்றாவது கதைப்பானா? கதைத்தான். 

“டைட் வொர்க் பேச முடியல ஊர்மிளா. எப்படிப் போகுது?”

எலுமிச்சைத் தேநீர் நாவில் ஜாஸ்தியாக சூட்டைக் காண்பித்தது. “ஏதோ போகுது”

“என்னம்மா சுவாரஸ்யமே இல்லாம பேசற, எல்லாம் நல்ல படியா முடியும், ரிலீஸ் ஆகப் போற அந்த மூவி பத்தி ஏதோ…” 

“மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி மூவி, எப்போ ரிலீஸ் ஆகும்னு வெயிட்டிங், நோ நோ பாட்டு… ஒத்து ரா பாபு வரிகள்… அதகளமா இருக்கு” 

“தலையாட்டி சிரித்தான்” 

வெளியாகப் போகும் அந்தப் படம் குறித்து, அத்திரைப்படம் பற்றிய சுய எதிர்பார்ப்புகள், முன்முடிவுகள், அனுஷ்கா மீதான பிரமிப்பு, அனுஷ்காவின் நடிப்பாற்றல், நடுத்தர வயதுப் பெண், ஆண் கொண்ட ஆசாபாசங்கள்  நிறையப் பேச நினைத்தாள், எதுவும் வார்த்தைகளாகப் பிரசவிக்கவில்லை. 

அவன் யார்? அவன் எதற்காக காரியாலயம் அமைந்திருக்கும் அந்தக் கட்டிடத்திற்கு குறிப்பிட்ட வாரத்தின் இரண்டு கிழமைகளில் மட்டும் தவறாது வருகிறான். லா ஃபர்ம்  அலுவலகத்திற்கு வருபவன் அங்குள்ள முக்கிய வழக்கறிஞருடன் பல மணித்தியாலங்களுக்கு கதைக்கிறான். அதன் காரண, காரிய வடிவம் என்ன? எதுவுமே அறியாது இப்படியே தொடருமா? 

மேற்கொண்டு சம்பாஷணை ஏதுமின்றி தேநீர் இடைவேளை நேரத்தை விழுங்கியது.  

கழுவப்பட்ட ஃபிளாஸ்க்குடன் ஊர்மிளாவும், முடிவுக்கு வந்த சிகரெட்டால் காலியான இடது கையுடன் சந்துருவும் வழக்கம் போல இணைந்து லிஃப்டை நோக்கி நகர்ந்தனர்.   

… Preminche Samayam Ledhe 

Premanna Prashne Radhe

Janmantha Jamayipoye 

Janjatamlo Gunjeelodhe

Smart Phone La Kalam Lo 

Hifi WIFI Lokam Lo

WIFI Malli Malli Commitaye Kastaloddhe

Oddhu Ra Babu!

Nee Sneham No No No 

Nee Moham No No No

Nee Bandham No No No 

Anubhamdham No No No…

மதிய உணவு முடித்தும் நேரம் மீதம் இருந்தது. ப்ளூ டூத் கருவி எடுத்து நாமும் பொருத்திக் கொண்டால் என்ன? நோ நோ பாடலைக் கேட்டே ஆக வேண்டும். தரவிறக்கம் செய்து வைத்திருந்த நோ நோ நோ பாடலை கேட்க கேட்க புத்துணர்வு பரவியது, தலையசைத்தபடி சிரித்துக் கொண்டே பாடலைக் கேட்டுப் காண்பதைக் கண்டா டெய்ஸி அவளருகே வந்து பேசித் திரையைப் பார்வையிட்டு பாடலின் ரிஷிமூலத்தை அறிந்த பின், அவளுக்கு வலிக்காதவாறு அவள் கரத்தில் கிள்ளிவிட்டு கண்கள் சிரிக்க ‘என்ஜாய்’ என்றபடி நகர்ந்தாள். 

‘பாபுவை அழைத்துக் கொண்டு ஏதாவது சினிமா போக வேண்டும். அவனுக்குப் பிடித்தமான பாவ் பாஜி செய்து தர வேண்டும்.’ – இரண்டாம் வாரக் கடைசியின் ஆகர்ஷண சக்தி உற்சாகத்தோடு அவளை உசுப்பியது.

மே மாத இரண்டாம் வார புதன் கிழமை

அதிகாலை நாலரை மணிக்கே விழிப்பு தட்டியது. விடாப்பிடியாக முயற்சித்தும் அம்பகத்தோடு நித்திரை இணையவில்லை. தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழியில்லை… பாடல் வரிகளை முணுமுணுத்தபடி அன்றாட அலுவலுக்குத் தயாராவது மேல் என்ற சிந்தனை மேலோங்க வாஷ்பேஸின் நோக்கி கால்கள் நகர்ந்தன. 

மூளையின் கட்டளையை உடல் உறுப்புகள் ஏற்பதற்கு மனோநிலை அவசியமாக இருக்கிறது. உடல் உறுப்புகளின் பணியைத் துரிதப்படுத்துவதும் மனம் தான், முடக்கிப் போடுவதும் மனம் தான்! ஏதோ அபூர்வமாக யோசிப்பது நன்கு புலப்பட்டது. முகம் கழுவுதல், பல் துலக்குதல் எனத் துவங்கி காபி, குளியல், காலை மற்றும் மதிய உணவு தயாரித்தல் முடித்து பாபுவை எழுப்பி  பல் துலக்க வைத்து, அவன் காபி குடித்து முடித்த போது களைப்போ, சோம்பலோ எட்டிப் பார்த்தது. 

“சான்ஸ்க்ரிட் க்ளாஸ் & ஸ்விம்மிங் க்ளாஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து லன்ச் எடுத்துக்க, அம்மா குளிச்சுட்டு வந்த உடனே நீயும் குளிச்சு ரெடி ஆகு. அப்போ தான் எட்டு மணிக்கு பண்டிட் வீட்டுக்குப் போக முடியும்.” பாபுவின் பதிலுக்குக் காத்திராமல் பேசியைப் பார்வையிடுவது வசதியாகிப் போனது. 

காலையில் இருபது  நிமிடம் ஒதுக்கி ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸப், ட்விட்டர் எனப் புல் மேய்வது துவக்கத்தில் ஆர்வத்தைத் தர, நாளடைவில் அது மெலிந்து தற்போது கடமைப் புள்ளியாக சுருங்குகிறது. இரவு 11 மணி வாக்கில் வாட்ஸப்பில் தவறிய அழைப்பு அதைத் தொடர்ந்து குறுஞ்செய்தி, கர்த்தா – ஹமீத்.   

துவக்கத்தில் இயற்கை, அழகியல், வர்ணனை என எழுதியதைப் பகிர்ந்து வந்தான். கவிதை என அவன்  திடமாக நம்பினாலும் மனம் அதை நிராகரிக்கப்பதைத் தொடர்வது ஏன்? கவிதை என்று வகைப்படுத்துவதை ஏற்காமல் தவிர்த்தாலும் எழுதியதில் சில பாந்தமாகத் தான் இருக்கின்றன. அவனின் எழுத்து நடையை ஓரளவு உள்வாங்கிய நிலையில் பெண், கட்டுடைத்தல், புரட்சி, பெண்ணியம் என்று ஜானர் மாறியபோது பாந்தம் அளவு சரியத் துவங்கியது. மதம், அரசியல் என அவன் பார்வை மாறியதை நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. அதிர்வு இல்லாத குரல், மெலிதாகப் பழகும் விதம் என அவன் துவக்கத்தில் பரிமாறியதன் பருக்கைகள் மீதம் இருந்தாலும் அது அக்ஷ்யப் பாத்திரமாக மீள் உருவாக்கம் செய்து கொள்ளவில்லை.  தலையை சிலுப்பி குரல் உயர்த்தி சார்பின்மை என்றபடி அப்பட்டமான சுய சார்பு நிலையை அவன் இதயத்தில் அறையும் போதெல்லாம் ரணம் தான்.  “கறுப்பு அங்கி உடுத்தினால் உங்களுக்கு வடிவா இருக்கும்” என்று சிரித்தபடி அமிலம் வீசிய போதும், அழைக்க பிடித்தமான பெயர் ஒன்றை சூட்டி இருப்பதாக பிரகடனபடுத்தியது கட்டாயமான மாற்றத்தை நோக்கி ஹமீத் நகர்த்துவது தெளிவானது. இதற்குத் தானா என்னப்பாவில் குறுஞ்செய்தி? 

துவக்கத்தில் அவன் பரிணாமங்கள், பிடிமானங்கள் எல்லாம் ஆதுரமாகத் தெரிந்தவை தற்போது ஏதோ காரண காரிய வடிவத்தை உள்ளடக்கிய கனமான பொருளின் மீது ஒட்டப்பட்ட பளபளப்பான காகிதமாக உறுத்தியது. 

உடுப்பு… பெயர் மாற்றம்… 

மலை வாஸ்தலத்தையும் அதன் சீதோஷ்ணத்தையும் பார்த்து மயங்கி இங்கு காலம் செல்வதே வாழ்க்கை, கான்க்ரீட் கூட்டுக்குள், தனியறையில் காற்பதனியை துணைக்கு அழைத்துக் குளிரூட்டி, சாளரம் வழியே உலகத்தைகே காண்பதெல்லாம் ஜீவிதம் அல்ல? என்று கற்பனையோட்டத்தில் தொடர்ந்து பயணித்திருந்தால் இறுதியில் சுவாசிக்கக் கூட வழியின்றி, சகஜமாக நடமாடும் பெண்களைக் கண்டு உள்ளூர புலம்பி, நிர்பந்தத்தின் பேரில் அடக்குமுறை தான் பாதுகாப்பு என்று போலி பரப்புரை சமைத்து… நினைக்கவே குமட்டியது. 

இந்த வாழ்க்கை தெய்வம் தந்தது, விரும்பியபடி இருத்தலைத் தொடர, கடவுளுக்கும் உள்ளத்திற்கும் இடையே யாரும் இல்லாத, எதையும் கட்டாயப்படுத்தாத சுதந்திரமான சூழலை எக்காரணத்தைக் கொண்டு இழக்கவும் கூடாது. பாதுகாப்பு, இது எங்கள் உரிமை என்று புதை குழிக்குள் ஜீவிதத்தை ஒப்படைப்பது கொடூரமானது.

சிறு வயதிலேயே பாபுவின் பக்குவம் மேம்பட்டபடி நகர்கிறது. சுபாவம், தன்மையான பேச்சு, நிதானம், சூழலுக்கு ஏற்றவாறுத் தன் வடிவமைப்பை மாற்றிப் பொருத்திக் கொள்ளும் பாங்கு, ஆத்திக மனப்பான்மை இல்லாது வளைய வருவது… அனைத்தும் அவனை பரிபூரணப்படுத்திக் கொண்டே வருகின்றன. விதவையின் வாரிசு, ஒற்றைப் பெற்றோரின் வளர்ப்பு என அலசி ஆராய்ந்து குறைகளைப் பட்டியலிடுவோர் சகலரும்  முடங்கிப் பேச்சின்றிப் போகும் விதத்தில் தன்னை நிலை நிறுத்துகிறான். நினைக்கும் போதே பெருமிதம் ஆர்ப்பரித்தது.

இரண்டாம் வார புதன் கிழமை இல்லை. அதற்குப் பதிலாக முதல் வார புதனும், இரண்டாம் வார வெள்ளியும், மாதத்தின் நான்காம் வார புதன் மற்றும் வெள்ளி என இரு கிழமைகளில் வருகை, மாதமென கணக்கிட்டால் நான்கு முறை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வந்து பல மணித்தியாலங்களை செலவழிக்கிறான். கணக்கு சரியா? தவறா? சரி என்பது அவளின் திடம், அவள் சார்ந்த நம்பிக்கை.   

சந்துரு இல்லாத மொட்டை மாடி பெயருக்கு ஏற்றபடி இருந்தது. கலகலப்பு இல்லாது ஏதோ சூன்ய வெளி போன்றதொரு தோற்றத்தை சுமந்தது. சீதோஷ்ணம் கூட கூடுதலான உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகப்பட்டது. கண்ணுக்கு எட்டிய இடங்களில் பெரிதாக நீளமாக வளர்ந்து நின்ற கட்டிடங்கள் மரங்கள் போல தரிசனம் தந்தன. மரத்தின் நடுப்பகுதியை கான்க்ரீட் என்றும், கண்ணாடி பூசிய சுவர் மற்றும் சாளரங்களைக் கிளைகள் என்றும் சித்தரிக்கலாம். ஏனோ உள்ளத்துக்குள் உருவான எள்ளல் அதரங்களில் மெல்லிய சிரிப்பாக உதிர்ந்து விழுந்தது. ஒன்றுமே இல்லாததை எல்லாம் மிகப் பெரிதாக கற்பனைப்படுத்தி  வளர்த்தெடுக்கும் பணியா இது? ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளுக்குவது என்பது இதுதானா? சுரத்தின்றி காரியாலயம் நோக்கிப் போனவளுக்கு மலர் அலங்காரம், மணமக்கள், கலகலப்பான சிரிப்பொலிச் சூழல் இல்லாது, வைபவமற்ற நிலையில் நிற்கும் ஜானவாசத்திற்கான பிரத்யேக மகிழுந்து போல லிஃப்ட் பாவமாய் வறண்டு மூலையில் காணப்பட்டது.

உயிர் உள்ள ஜீவனோ, உயிரற்ற பொருளோ, புழங்கும் சுற்றமோ இவற்றுக்கான சாரத்தைப் புகட்டுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பார்வை, இதயத்தின் அபிலாஷை உலகில் எல்லாமுமாகவும், ஏதுமற்றதாகவும் இல்லாமல் இருக்கிறது. தனி மனிதப் பார்வையைப் பொறுத்து உருமாறுகிறது. மாற்றமும் ஒவ்வொருவரின் வரையறைக்கு உட்பட்டது என்கிற எல்லைக் கோடு கொண்டு முடிகிறது. மொத்தத்தில் எதுவுமே மாறாமல் மாறுகிறது.

மே மாத இரண்டாம் வார வெள்ளிக்கிழமை

சந்துரு வருவது போலத் தெரியவில்லை. மின் தூக்கியை நெருங்கி மொட்டை மாடி செல்வதற்கானப் பொத்தானை அழுத்திக் காத்திருந்த போதும் ஆள் வருவதற்கான எந்த முகாந்திரமும் புலப்படவில்லை. கதவுகள் திறந்து உள்ளே சென்று கதவுகளை மூட பொத்தானை அழுத்தி இரு பக்கக்  கதவுகள் இணையும் சமயம், ஓட்டமும் நடையுமாக சந்துரு வெளிப்பட்டான். படபடப்பு மேலோங்க இணைந்த கதவுகளைப் பிரிப்பதற்கான பொத்தானை அழுத்தி சேர்மானம் தடைபட்டு விலகிய பிறகே பதற்றம் தணிந்தது. வழமையான புன்சிரிப்போடு உள்ளே பிரவேசித்தவன் ‘தேங்க்ஸ் மா’ என்றான். ஏனோ வெட்கம் எட்டிப் பார்த்தது. இதென்ன பதின் பருவ மனோநிலை? ரசாயன மாற்றம்? 90 ஸ் காலத்திற்கு சிந்தனையை மட்டும் காலச்சக்கரம் நகர்த்திக் கொண்டு போய்விட்டதா? மேற்கொண்டு அவன் எதுவும் பேசவில்லை. 

இருவரின் கரங்களிலிருந்தும் புகை வெளியாகி மேல் நோக்கி நகரத் துவங்கின. அவன் விரலிடுக்கில் இருந்து புகை வெளியாக, அவள் ஏந்தியிருந்த கோப்பையில் இருந்து புகை நடனமாடி மேல் நோக்கி எழும்பிச் சென்றது. அவன் பேசத் துவங்கினான். இருபது வினாடிகள் அவன் அதரங்கள் அசைவதை மட்டும் காண முடிந்தது. ஒலி செவியை எட்டவில்லை. அவன் சற்று உரத்துப் பேச்சைத் தொடர்ந்தான். 

“… ஜிம்முக்குப் போவுறது, காலைல ஜாக்கிங், ராத்திரி வாக்கிங்னு அட்டவணை போட்டு இயங்கினாலும் வயசானதை அக்ஸப்ட் செய்துக்கறது உத்தமம். அன்னிக்கு க்ரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடுற பையன் ஒருத்தன் பாய்ண்ட் பொசிஷன்ல நிற்கிறான். பேட்ஸ்மன் பளார்னு அடிச்ச ஸ்கொயர் கட்ல பந்து சீறி அவன் இடது கை பக்கமாத் தள்ளி வருது. பட்னு டைவ் அடிச்சு ஒத்த கைல பந்தைத் தடுத்துப் பிடிக்கிறான். சாலிடா பெளண்டரி போகாம சேவ் செய்துட்டான். சத்தியமா என்னால அது முடியாது. ஏஜிங் என்பதை ஓத்துக்கிட்டு வாழ்க்கையைத் தொடரும் போது வருத்தமா இருக்கு ஆனால் வேற வழியில்லை ஊர்மி, நீ என்ன சொல்ற? இது மாதிரி அனுபவம் கண்டிப்பா உனக்கும் இருக்கும்”  

ஊர்மிளாவை சுருக்கி செல்லமாக ஊர்மி என்றழைத்ததும் வடிவாகத் தான் இருக்கிறது. இதற்கான பதில்? 

“வயோதிகத்தால் குதூகலத்திற்கு ஏற்றவாறு தேகம் ஒத்துழைக்க மறுப்பதைத் தான் பதவிசாக நிதானம், பக்குவம் என்று மாய் மாலம் காட்டுகிறார்களா? நாற்பதைக் கடந்த வயதில் ஓரளவு நடனமாட முடிகிறது, அதி வேகம் இல்லாது போனாலும் ஓட முடிகிறது, அட்டகாசமாகச் சிரிக்க முடிகிறது, சமயத்தில் கால் முட்டு வலியால் சில சங்கடங்கள் முளைக்கின்றன. ஆசனம் இன்றி கீழே அமர்ந்தால் கையூன்றாமல் எழும்ப முடிவதில்லை. பிணி அச்சம் காரணமாக விநாயகருக்குத் தோப்புக்கரணம் போட தேகம் ஒத்துழைப்பதில்லை. ஷ்ரியா சரண் நாற்பதைக் கடந்தவள் தான். அவளால் நன்கு சுழன்று சுழன்று நடனமாட முடிகிறது. சர்வ சாதாரணமாக தரையில் அமர்ந்து வேகமாக எழுந்து நிற்க முடிகிறது. குழந்தையைக் கரங்களில் ஏந்தியபடி வேகமாக ஓடி விளையாட முடிகிறது. அவளைப் பார்க்கும் போது பொறாமையைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. கனகச்சிதமான உடல் வாகு, சுறுசுறுப்பான செயல் திறன். கொடுப்பினை என்றே பெருமூச்சோடு கடக்க வேண்டும். நீ வரும் போது… பாடலுக்கு துள்ளலான நடனத்தால் அசத்திய மழை ஷ்ரியா சரண் இப்போதும் அதே ஜோஷ் உடன் வளைய வருகிறாள்” 

எண்ணவோட்டம் பொங்கிப் பாய தலையை ஆட்டியபடி ‘வாஸ்தவம்’ என்று ஆமோதிக்க, அவன் சிரித்தான். காற்சட்டை பாக்கெட்டில் கரங்களை நுழைத்து சரியாகப் பொருத்திக் கொண்டவன். ஏதுமற்ற கரங்களை வெளியே எடுத்து விரல்களை சொடுக்கினான். கிளம்பத் தயாராகி விட்டான். வழமையான டிஷ் வாஷ் முடித்து அவளும் புறப்பட்டாள். 

கீழ் நோக்கி முடியும் போது எந்தவொரு படபடப்பும் இல்லை. உயரம் தொடும் போது  தான் பரிதவிப்பு, படபடப்பு எல்லாம் முளைக்கின்றன. கீழே உதிர்கையில் எந்தவொரு சலனமும் வெளியே தெரிவதில்லை.  

ஜூன் மாத நான்காம் வார புதன் கிழமை :

இம்மாதத்தின் மூன்று சந்திப்புகளையும் நினைவில் சேமிக்க, நாட்குறிப்பில் எழுதி வைக்க, அவ்வப்போது அசை போட என எந்தவொரு வகைமையிலும் நிலை நிறுத்த முடியவில்லை. யோசிக்க யோசிக்கதான் புலப்பட்டது. மூன்று தினங்களில் ஒரு முறை கூட அவன் மொட்டை மாடியில் பேசவில்லை. லிஃப்ட்டிற்குள் வரும் போது துவக்கப் பார்வை, தலை அசைத்தபடி புன்சிரிப்பு அவ்வளவு தான். இத்தனை நாட்கள் கடந்தும் அவள் அருந்துவது ஸ்ட்ராங் காஃபியா?, இஞ்சி டீயா?, மதர் ஹார்லிக்ஸா? ஃபார்மலான கேள்விகளைக் கூட அவன் கேட்டதில்லை. 

“என்ன பிராண்ட்? கிங்ஸ்?, லைட்ஸ்?, க்ளாஸிக் மெந்தால்?, மார்ல்ப்ரோ? ஒரு முறை கூட அவள் அடிப்படையான விசாரிப்பைத் தந்ததில்லை” என்று அவன் யோசிப்பானோ? குழப்பமான புன்னகை அவளை மீறிப் பரவியது. 

இன்றும் எதுவும் பேச மாட்டானா? லெமன் டீயுடன் ஹியர் பாடைத் துணைக்கு அழைத்துப் பாடல் ஏதாவது கேட்கலாமா? 

“இந்தப் பூஜா ஹெக்டே ப்ளூ டூத் ஹெட்செட்டைத் தூக்கிப் போட்டுட்டு சென்ஹைஸர் வாங்குமா” பாபு அடிக்கடி கலாய்ப்பது நினைவுக்கு வந்து அதன் பங்கிற்கு புன்சிரிப்பை டெலிவரி செய்தது. இந்தப் பிட்ரான்(pTron) ப்ளூ டூத் சாதனம் நன்றாகத் தான் இருக்கிறது. பாடல்கள் கேட்க, செல் அழைப்புகளை ஏற்றுப் பேச, கைப்பையில் மொபைலைப்  பத்திரப்படுத்தி விட்டு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில்  மிகவும் செளகர்யமாக இருக்கிறது. துல்லியமான ஒலித்தரம், ஆடியோ அவுட்புட், பக்கா பேஸ் என பாபு ஏதேதோ சொல்கிறான். அம்மா ஹை டெக்காக வளைய வர வேண்டுமென்பது இந்தக் கால வாரிசுகளின் விருப்பமாக இருக்கிறது போலும்!

சந்துரு சந்தோஷம் மேலிட உற்சாகமாக இருப்பது போலத் தெரிந்தது. நடையில் சிறு துள்ளல், ஆர்ப்பரிப்பு, உத்வேகம் என பல காரணிகள் வரிசை கட்டி உலாவி உறுதிப்படுத்தின.

அனுமானத்தை பேச்சில் வெளிப்படுத்த ஆரம்பித்தான். 

“புது ட்ரெஸ் எடுத்துத் தந்துடறேன்” 

“ஏன் என்ன விசேஷம், எனக்கு உடுப்புன்னு பார்த்தா ஆயிரம் சங்கதிகள் இருக்கு. லேடீஸ் போல ஆண்களுக்குக் கிடையாது, கம்ப்ஃபர்ட் ஸோன்ல இருக்கிறவங்க”

“ட்ரெஸ்ல என்ன இருக்கு? அதுக்குக் கூட கோட்பாடுகளா?”

கண்டிப்பா இருக்கு. சட்டைப் பாக்கெட்ல மொபைலை வெச்சுக்கிட்டு கேஷுவலா ஆண்கள் போற மாதிரி பெண்களால் முடியாது. சுடிதார் டாப்ஸ்ல பாக்கெட் கிடையாது. புடவைன்னா சுத்தம். அதுக்காக எல்லா நாளும் ஷர்ட், பேண்ட் உடுத்த முடியாது. மத்தவங்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு செட் ஆகாது. மொபைல  ஹேண்ட் பேக்ல தான் வெச்சுக்கணும். ஹெட் செட் இல்லைன்னா வர கால்ஸை அட்டண்ட் பண்றது சிரமம்.  

“எல்லாத்துக்கும் விளக்கம் இருக்கு போல”

“எஸ்.  ரொம்ப உற்சாகமா இருக்கிற மாதிரி தெரியுதே?”

“ஆமாம் எல்லாம் முடிஞ்சுட்டு, ஒரு வழியா அறுத்து விடப் போறாங்க. அடுத்து…”

“ஓஹோ ஆனா பெரிய அளவுல எக்ஸ்போஸ் செய்யாம இருக்க, லைட்டா துள்ளல் பிரதிபலிக்குது மத்தபடி பெருசா இல்லியே” 

“நீண்ட நாள் போராட்டம், மன உளைச்சல், எவ்ளோ ரிலாக்ஸ்டா இருக்கு தெரியுமா? கண்டிப்பா அவளுக்கும் அப்படித் தான் இருக்கும். கருத்து வேறுபாடு அதிகமாகிட்டே போகும் போது பிரியறது நல்லது, ரெண்டு பேருக்கும் நிம்மதி. அடுத்தடுத்து…”

“வருத்தம் இல்லியா?”

“பெருசா இல்லை. ஒரு வேளை குழந்தைங்க இருந்திருந்தா ரெண்டு பேரும் கில்டியா ஃபீல் செய்துருப்போம்” 

“அடுத்து… அதை முழுசா சொல்லு” 

“மகனைத் தயார் செய். நிதானமா எடுத்து சொல்லிப் புரிய வை, ஏதாவது ரெஸ்டாரண்டுக்கு அவனையும் அழைச்சுட்டு வா, நான் பூதம் இல்லைன்னு எடுத்து சொல்றேன். அவன் எதிர்காலம் ரொம்ப முக்கியம்” 

“கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்குள்ள முதல்ல போறப்ப, சாமி ரூம்ல இருக்கற அவர் போட்டோவை வணங்கி ஆசிர்வாதம் வாங்கிக்கோ ஓகே வா” 

“ஹஹா… செய்யலாம் தப்பில்லை, தெய்வமா இருந்து அவர் ஆசிர்வாதம் செய்வார்னு உன் பக்கம் நம்பிக்கை இருந்தா அதை ஏத்துக்கறதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லை” 

“நல்லா பேசற”

“நேரா வீட்டுக்குக் கிளம்பறேன், ஏற்கனவே ஆஃபீஸ்க்கு வர முடியாதுன்னு பார்ட்னர் கிட்ட சொல்லிட்டேன். கம்ப்ளீட் ரெஸ்ட். நாளைக்கு ஃப்ரெஷ்ஷா ஆரம்பிக்கப்போறேன்”

“எதுக்கு?”

“எல்லாத்துக்கும்”

வியப்பு மேலிட்டது. அதிகபட்ச உரிமையை சுவீகரித்துக் கொண்டோமோ? ஃபிளாஸ்கைக் கழுவி முடிக்கும் வரை காத்திருந்தான். இணைந்து புறப்படும் போது ஏனோ மீண்டும் அவன் சிரித்தது அசாதாரணமாக இருந்தது. 

பத்தே நிமிடங்களில் மதிய போஜனம் முடிவுக்கு வந்ததை நம்ப முடியவில்லை. இனி சாத்தியமில்லை. பழகி மறந்ததை மீண்டும் பழகிக் கொள்ள வேண்டும்.  

“பையன் டீன் ஏஜ் வந்தாச்சு, “40 + ஆகியும் அலையுறா பாரு” பல முறை கேட்ட அமிலக் கரைசல் சொற்பதம் மின்னலாய் முளைத்தது. 

டெய்ஸி சிரித்தபடி இருக்கையை நகர்த்தி நெருங்கினாள். சீக்கிரமா சாப்பிட்டு முடிச்சுட்ட, அடுத்தென்ன ‘பூரணி?’ ஹியர் பாட்… சாங்ஸ்… சில்லெக்ஸ்… வாஞ்சையுடன் கதைத்தாள். 

ஹியர் பாட் 

லிஃப்ட்டில் இருந்து வெளியே வரும் போது, அவன் தினமும் கதைக்கப் பயன்படுத்திய ஹியர் பாடை அருகாமையில் காண முடிந்தது. மாடியிலிருந்து கிளம்பும் போதே சிறு பெட்டிக்குள் வைத்து மூடி காற்சட்டை பாக்கெட்டில் பத்திரப்படுத்துவான். இன்று அதைச் செய்யவில்லை.  உற்று நோக்கியதில் பிராண்ட் தெரிந்தது 

சென்ஹைஸர் (Sennheiser)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.