கரிக்குருவி நூறு

கிழம் பூ வாசம் இச்சையைக் கூட்டுவது போல் உனது அழுத்தமான வாசமும் இடைவிடாது என் இருப்பை கோருகிறது.” வெகுநாள் கழித்து அருகில் படுத்திருந்தவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டார்.

ஐம்பத்து மூன்று வயதில் நீண்ட நேரம் கலவி கொள்வது உடலுக்கு ஆகாது என்றேன்.

“இன்றைக்கு மட்டும்… இன்று ஒரு நாளோடு எனக்கு போதும் விசா… நிறைவடைந்து விட்டேன். கூடவே புதிதாக பிறந்தது போலவும் உணர்கிறேன். எனது சுமைகள் எல்லாம் முற்றிலும் உதிர்ந்து விட்டன… அற்புதமாக இருக்கிறது. எல்லாம் உன்னால்தான். நன்றி விசா… நன்றி.”

என்ன இது புது பழக்கம் நன்றி எல்லாம் எதற்கு? பேச்சிலும் செய்கையிலும் இன்று நீங்கள் நீங்களாகவே இல்லை. போதும் அமைதியாக படுத்து உறங்குங்கள்.

“சரி படுத்துக் கொள்கிறேன். உன்னிடம் ஒரு ரகசியம்… கூறவா?”

என்ன அது?

“நிமிடங்கள்தோறும் தனது நினைவுகளை அழித்துக் கொள்ளும் கலை அறிந்தவன் சிக்கலின்றியும் சிக்கிப் போகாமலும் வாழலாம்.”

நல்ல சிந்தனை. ஏதேனும் தத்துவப் புத்தகத்தில் படித்தீர்களா?

“இல்லை இல்லை சில நாட்களாக இக்கலையை பெரும் முயற்சியோடு கற்றுக் கொண்டுள்ளேன். உனக்கும் கற்று தரட்டுமா?”

எனக்கா…! உங்களுக்கு இதுவரை யாரிடமும் ஒரு பிரச்சனையும் எழுந்தது கிடையாது. எப்பொழுதுமே எதிலுமே நிதானம்… அது உங்கள் நிழலாக அல்லவா பின் தொடர்கிறது.

“ஆமாம்… நிழலாகத்தான் பின் தொடர்கிறது உனக்கும் அந்த நிழல் வேண்டாமா?”

எனக்கு கலைகள் எதுவும் வேண்டாம். முடிந்தால் கரிச்சான் குருவிகளின் மொழியைக் கற்றுக்கொடுங்களேன்.

“எனக்கு தெரிந்தது எல்லாம் ஒருமொழித் தானே…” 

சரி…சரி…பேசியது போதும் படுத்துக் கொள்ளுங்கள். 

புன்முறுவலுடன் மறுப்பு ஏதுமின்றி படுத்துக்கொண்டார். அதிகாலை மூன்று மணி வாக்கில் எங்கோ தொலைவில் விரைந்து செல்லும் ரயிலின் ஓசையால் விழிப்புத் தட்டியது. அருகில் படுத்திருந்தவரின் உடல் சில்லிட்டது. அசைத்துப் பார்த்தேன். எந்தவொரு எதிர் செயலும் இல்லை. ஒரேயொரு இதயத்தின் துடிப்போசை மட்டுமே அறையில் எதிரொலித்தது. இந்நேரத்தில் யாரை போய் எழுப்புவது… என்னவென்று சொல்வது? மீண்டும் அவருக்கு அருகில் படுத்து மெல்ல அவரை அணைத்துக் கொண்டேன். 

தோட்டத்தில் கரிக்குருவிகளும் குயில்களும் காகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக குரலெழுப்பி அழைத்தன. இறுதியாக கண்ணாடி பாத்திரத்தில் சோழி வைத்து உருட்டியது போல் கெளதாரி… அதன் அழைப்பொலியை நிறுத்த ஐந்தரைக்கு வரும் பால்காரர் சிவநேசனின் காற்றொலிப்பான்… கதவை திறந்ததும் நேற்று மாலையில்  நீர் தெளித்து எழுதிய வாசல் கோலம் சிரித்தது.

“என்ன விசாலாட்சிம்மா இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க… உடம்புக்கு சுகமில்லையா? முகம் எல்லாம் வீங்கினாப்பல இருக்கு. பால் சொம்பு எடுத்துட்டு வரலையா… “ அவரிடம் செய்தியைக் கூறியதும் உள்ளே வந்து பார்த்தார்.

“தூக்கத்திலேயே பிரிஞ்சிடுச்சு… முகத்தில் சிரிப்பு அப்படியே இருக்கு பாருங்க. ஐயா எப்பவும் குழந்தை மாதிரிதான்… இது நல்ல சாவு. என்ன இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட இருந்திருக்கலாம்… எல்லாம் நம்ம கையிலயா இருக்கு. போதும் கிளம்பி வான்னா போய்த்தானே ஆகணும் தாயீ… நீங்க அதைரியப்படாதீங்க…” அறையில் இருந்து வெளியேறி பக்கத்து வீட்டு கதவை தட்டினார்.

டி முழக்கம் போன்ற ஓசையின் திடுக்கிடலால் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.  மூன்று மணிக்கு எழுபவளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தவறாமல் எழுப்பிவிடும் கனவு. உண்மையில் இது ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்திட்ட நிஜம். கனவு நிஜமாவதும் நிஜம் கனவாக மாறுவதும் வாழ்வின் புரியாத புதிர். என்ன சத்தம் அது? யாரேனும் வந்திருக்கிறார்களா? காவலர்கள் யாரேனும்… இந்நேரத்திலா? சிந்தனையின் வெப்பத்தால் மேனியில் ஊறும் பயத்துடன் கதவைத் திறந்தேன்.

வீதியில் யாருமில்லை…! தன்னிஷ்டம் போல் ஆளுமை செய்யும் கற்பனை வழக்கம்போல் முட்டாளாக்கி நகைக்கிறது.  பகலெல்லாம் அலைந்து திரிந்த நாய் தெருவை அடைத்தவாறு படுத்திருப்பதுபோல் மஞ்சள் மின்விளக்கின் வெளிச்சக்கீற்று மேலும் கீழுமாக மூச்சிழுத்தவாறு சாலையில் உருள்கிறது. அரவமில்லாத வீதியை வெறித்துவிட்டு மீண்டும் சமையல் அறைக்கு வந்து பாயில் சுருண்டு கொண்டேன். 

கணவர் இறந்ததற்கு பிறகு படுக்கை அறைக்குள் சென்று உறங்குவதில்லை. எப்பொழுதாவது உடல்வலி தாளாமல் அறையில் இருக்கும் மெத்தையில் படுத்துக்கொண்டாள் சிறிது நேரத்தில் ஈக்களைப் போல் கனவுகள் மொய்க்கத் தொடங்கி விடுகின்றன. எங்குப் படுத்து உறங்கினாலும் சரியாக கரிச்சான் கூவும் மூன்று மணிக்கு விழிப்பு தட்டி விடுகிறது. உறக்கம் வராதபோது கண்களை இறுக மூடிக்கொள்ளும் அலுப்பை போல் உலகில் வேறேதுவும் இல்லை. ஆழ்ந்திருக்கும் இருளில் பூமியும் வானமும் சங்கமிக்கும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருடர்களையும் தியானிகளையும் தவிர காரணமில்லாது விழித்திருப்பவள் நான் மட்டுமே.

சித்திரை வந்தால் ஐம்பது வயது நானும் நதியாவும் வெளியே செல்கையில் அவளது நண்பர்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அக்காவா என்கிறார்கள். இனி உன்னோடு நான் வெளியே வரமாட்டேன் அம்மா என்று கோபித்துக் கொள்கிறாள். அவள் பிள்ளைகளிடம் சொன்னால் அவர்களும் சிரிக்கிறார்களாம். முதுமை என்பது காலமது உடலில் கவிழ்த்தும் கவசமா? 

பிரகாசிக்கும் முகம், சுருக்கம் விழாத தோல், சரியாத ஸ்தனங்கள், தேயாத வளைவுகள் இவையெல்லாம்தான் அவன் கண்ணுக்கும் தெரிந்திருக்குமா… நான் கணவனோடு நிறைவாக வாழ்ந்து முதிர்ந்தவள் என்பது தெரியாதா? என் மனம் குறித்து ஏன் அவன் சிந்திக்கவில்லை? இதற்காக எத்தனைநாள் திட்டமிட்டு காத்திருந்தான்… தெரிந்தவனா? தெரியாதவனா? அறிமுகமானவனா? பேசிப் பழகியவனா? உறவா? எதிரியா? வழிப்போக்கனா…. விடையற்ற கேள்விகள் உதயமாகும் போதெல்லாம் எனது உடல் முழுவதும் சன்னி வந்தது போல் நடுங்குகிறது. குமட்டல் தரும் எண்ணங்கள் முளைத்தெழாமல் தடுத்திட மனதை இறுக மூடிக்கொள்ள முயற்சிக்கிறேன் நீண்ட சிந்தனையில் இருந்து மனதை மீட்கும் நெடிய போராட்டத்தில் அயற்சி சோர்வளித்து என்னை இருளுக்குள் மூழ்கடிக்கிறது. கருமேகத்தை என்மீது போர்த்தி அமைதிப்படுத்துகிறது.

பேருவுருவும் வெண்ணிறமும் கொண்ட ஆனைச்சாத்தான் பறவைகள் நூறும் பற்றி எரியும் காண்டவ வனத்தின் மேற்பரப்பில் வெகுநாட்களாக வட்டமிட்டன. நெருப்புத் தனலிலும் கருநிறப் புகையிலும் சோர்வடையாமல் தொடர்ந்து குரலெழுப்பி பறந்தன. சாம்பலாகிப்போன கானகத்தின் எல்லையில் பறவையின் இறகை தலையில் சூடிய நீல நிறத்தவனும் பறவைகளைத் தாக்கும் ஆயுதம் ஏந்திய வீரன் ஒருவனும் நின்று கொண்டிருந்தனர். பேருவுரு சிற்றுருவாகவும் வெண்ணிறம் கருநிறத்தில் மாறிய ஆணைச்சாத்தான்கள் குறித்தும், அவை ஓய்வு மறந்து உணவு மறந்து ஆகாய மார்க்கத்தில் பறந்தவாறு தங்களை பின்தொடர்ந்து கண்காணிப்பது குறித்தெல்லாம் அவர்கள் ஒருபோதும் அறியவில்லை. சொல்லப்போனால் கரிக்குருவியான ஆனைச்சாத்தான்கள் குறித்த எந்தவொரு சிந்தனையும் அவர்களைத் தொடவில்லை.

பெருமழைக்குப் பின்பு இயல்பூக்கத்தால் வனம் தன்னை மீட்டமைத்துக் கொள்ளும், எரிந்து போன தங்கள் பொற்காலம் மீண்டும் முளைத்தெழும் என்கிற நம்பிக்கைகள் தகர்ந்து பொடி பொடியான நாளில் பறவைகள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டு ஒட்டுமொத்தமாக இமயம் நோக்கி பறந்தன.

வனம் அழிந்துபோன இடத்தில் புதிய நகரம் ஒன்றை தீர்மானிப்பதற்கு முன்னெட்டு பூஜைகள் துவங்கின. யாகத்தீயின் முன்னால் குந்தியும் குந்திக்கு பின்னால் பாண்டவர்களும் பாண்டவர்களுக்கு பின்னால் திரெளபதியும் வணக்கத்துடன் நின்றனர். புரோகிதர்களுக்கு வஸ்திரங்கள் தானம் அளிக்கப்பட்டன. நகர கட்டுமானத்தின் தலைவரான மயன் தனது பணியாட்களை வரிசையாக நிற்கும்படி கட்டளையிட்டார். வாழ்நாளில் ஒருபொழுதும் பருகிடாத தேனும் பாலும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட பாயாசத்தின் சுவையை ருசித்திட பொறுமையின்றி அவர்கள் தவித்தனர். பாண்டவர்கள் வழங்கிய பிரசாதத்தின் முதல் துளி நுனிநாவில் விழுந்ததும் பணியாட்களின் முகங்கள் கசப்பில் சுருங்கின. பயம் அவர்களை பேசவிடாது செய்தது. கசப்பு நிறைந்த பாயசத்தை நாய்கள் பக்கம் சிந்தவிடாது மிச்சமின்றி முழுவதையும் பருகி முடித்தனர்.

இமயத்தின் குளிரில் பயமற்று காத்திருக்கும் கரிக்குருவிகளின் துன்பத்தை கேட்டறிந்த பரமசிவன் தங்கள் இனத்தின் மிச்சமாக வயிற்றில் தாங்கி இருக்கும் முட்டைகளை தன்முன்னால் வைத்துவிட்டு செல்லுமாறு கூறினார். பறவைகளும் அதன்படி செய்துவிட்டு கனத்த மனதுடன் இல்லாத வனம் நோக்கி திரும்பின.

பரமசிவன் நூறு முட்டைகளையும் விலைமதிப்பு வாய்ந்த கற்களாக மாற்றி ஒரு பாறையில் மறைத்து வைத்தார். பறவையின் இறகை சிரசில் வைத்திருக்கும் அச்யுதன் தனது நண்பனின் புதிய நகரத்தின் அழகுகிற்கு மேலும் ஒளியைக்கூட்ட  சிறந்த பரிசு வழங்க விரும்பினான். நெடுந்தொலைவு பயணம் செய்து கைலாயம் வந்தடைந்தவன் மதிப்பு வாய்ந்த கற்களை எடுத்துச் சென்றான். 

மரம், செடி, கொடிகள் விதவிதமான விலங்குகள் நிரம்பிய பல்லுயிர் வனம் பாலை நிலமாகி பாழாய் போன கட்டிடங்களால் நிரம்பியிருப்பதைக் கண்டு கரிக்குருவிகள் துக்கம் தாளாது கதறின. 

ட்டீ…ஹ்ஹீ…ட்டீ…ஹ்ஹீ என்று விடாது கவிழும் கீச்சொலி அரவம் நிறுத்தி கரிக்குருவிகள் யாவையும் கொன்று வரவிருக்கும் விருந்தினர்களுக்கு சகாயம் செய்ய வேண்டும் என்கிற பாண்டவர்களின் உத்தரவுக்கு ஏற்ப அம்புகள் வான் நோக்கி பறந்தன.

திசைகள் வெவ்வேறாய் மாறி பறந்து மீண்டும் குழுமும் கரிக்குருவிகளில் ஒன்றையும் நிலம் தொட வைக்க முடியாது வீரர்கள் சோர்ந்து தளர்ந்தனர். இதற்கிடையே கெளரவர்களை வரவேற்க குழலும், சங்கும், பறையும், உடுக்கையும் முழங்கின.

முகம் உயர்த்தி அரண்மனையைக் கண்ட துரியோதனன் வியந்து மெச்சினான். இனி பாண்டவர்கள் தொல்லையின்றி அஸ்தினாபுரத்தை தான் ஒருவனே ஆளலாம் என்கிற மகிழ்வினூடே கரிக்குருவிகளின் எச்சம் அவன் முகத்தில் விழுந்து அருகில் இருந்த சில கௌரவர்கள் மீதும் தெறித்தது.

ஆரத்தி தட்டேந்தி வரவேற்க காத்திருக்கும் பணிப்பெண்கள் திரெளபதி சிரிப்பில் தன்னிலை மறந்து தாங்களும் கலந்தனர். கோபத்துடன் உள் நுழைந்து தென்பட்ட தடாகத்தில் காலை வைத்து நீர் மொண்டு கழுவ எத்தனித்து கீழே விழுந்த துரியோதனனைக்  கண்டு திரெளபதி மீண்டும் சிரித்தாள் ‘அது பொய்த் தடாகம்’ என்றாள். துரியோதனன் நொறுங்கும் ஓசையுடன் பற்களை கடித்தான்.

பாரதப் போரின் முடிவில் வெற்றி என்கிற ஒரு சொல்லைத் தவிர அனைத்தும் இழந்து நின்ற பாண்டவர்கள் ஆதியில் கானகத்தில் சுற்றி அலைந்தபோது கிடைத்திட்ட மனநிறைவையும் மகிழ்ச்சியின் உச்சத்தையும் திரும்பப் பெற்றிட மலைகளுக்கும் கானகத்திற்கும் யாத்திரை செய்தனர். நூறு கரிக்குருவிகளின் நிழல் தங்களைவிட்டு நீங்காமல் பின்தொடர்வது குறித்தெல்லாம் அறியாது மனிதத் தடயங்கள் பதியாத மாணா கிராமத்தின் எல்லையை வந்தடைந்து பார்வதி வனத்திற்குள் நுழைந்தனர். பசியும் களைப்பும் அவர்களை வாட்டியது. கானகம் முழுக்கத் தேடியலைந்தும் உண்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. நாளின் முடிவான அந்திப்பொழுதில் அர்ஜுனன் பழங்கள் மிகுந்திருக்கும் மரம் ஒன்றைக் கண்டான். இது நாம் அறியாத மரம் சுவைக்காத கனி என்று மூத்தவன் எச்சரித்தான். அப்படியெனில் காத்திருக்கலாம் பட்சிகள் வந்தமர்ந்தால் இது நஞ்சற்ற மரம் நாம் தயங்காமல் பசியாறலாம்.

கரிக்குருவிகள் நூறும் நஞ்சடர்ந்த மரத்தின் கிளைகள் யாவிலும் வந்தமர்ந்து ட்டீ…ஹ்ஹீ…ட்டீ…ஹ்ஹீ… என்று உரத்துக் கத்தின. குருவிகளை கண்டதும் அர்ஜுனன் தனது வில் வளைத்து அம்பெய்து அவைகளை விரட்டிவிட்டு மரத்தின் மீதேறினான். முதல் பழத்தை பறித்து திரெளபதிக்கு வீசினான். பிறகு வயதில் இளையவர்களான சகாதேவனுக்கும் நகுல தேவனுக்கும் இரண்டு பழங்களை வீசினான். பசி பொறுக்காமல் தானொரு பழத்தை உண்டு விட்டு பீமனிடம் ஒன்றும் யுதிஷ்டரனிடம் ஒன்றும் கொடுத்தான்.

தன் குலம் அழித்த எதிரிகளை விஷக்கனிகளின் வலைப்பொறிக்குள் சிக்க வைத்த பறவைகள் ஆகாயத்திலிருந்து கீழே பார்த்த போது திரெளபதி பீமன் மடியில் சரிந்து விழுந்தாள். ஆதியில் தங்கள் பூர்வீகமாக திகழ்ந்த இந்திரப் பிரஸ்தம், நகரத்து இடிபாடுகளின் பாழ்வெளி மறைவில் ஒரு வனம் விழித்தெழுவதற்கான விதைகளை தன்னகத்தில் மறைந்து வைத்துக் காத்திருப்பதை உணர்ந்த நூறு கரிக்குருவிகளும் தங்கள் முட்டைளை மீண்டும் கண்டறிந்தன. மனிதர்கள் இல்லாத நகரம் விரைவில் வனமாக மலரும் என்கிற நம்பிக்கையின் விகசிப்பில் தங்கள் முட்டைகள் மீது மகிழ்ச்சியாக அமர்ந்து கொண்டன.

கரிக்குருவி நூறு – கதையை என் அப்பா கூறும் விதத்தில் காட்சிகள் யாவும் என்னை விழுங்கிக் கொள்ளும்.  கரிக்குருவிகளை பார்க்கும்போதெல்லாம் நானும் அப்பாவும் மௌனமாகி விடுவோம். அவை பறந்ததும் அதனை பற்றி ஓயாமல் பேசிக்கொள்வோம்.

நுகத்தடியால் கழுத்தில் காயம் உண்டான மாட்டின் அருகில் காக்கைகள் கூட்டமாக சுற்றித் திரியும்… ஐயோ என்று மனம் பதைக்கும் நேரத்தில் எங்கிருந்தோ ஆக்ரோஷமாய் பறந்து வரும் கரிக்கருவி மாட்டுப் புண்ணை கொத்தும் காக்கைகளை துரத்தி விரட்டும். 

“ஆநிரைக் காத்ததாலே இவன் ஆணைச்சாத்தான், சும்மாவா பெயர் வைத்தார்கள்…” 

அப்பாவின் கதையும் சிலாகிப்பும் மட்டுமல்ல…  அன்று என் உயிரை காத்திட்ட கரிக்குருவிகள் இப்போது என் வாழ்வின் அங்கமாகவே ஒன்றிவிட்டன. ஒருநாள் என் வேதனை தீர்க்கவும் விரைவில் வழியைக் காட்டும். 

மூன்று மாதங்களாக காத்திருக்கிறேன். மகள் எவ்வளவு சொல்லியும் அவளுடன் செல்லாமல் தனிமைத் தவத்தில் காத்திருக்கிறேன், வருவான்… ஒருநாள் கண்டிப்பாக  வருவான். ஏன் அது இன்றைய தினமாகவும் இருக்கலாம். அவன் வருகின்ற அன்று கரிக்குருவிகள் நூறும் என் தோட்டத்தில் திரளும்.

புருஷன்காரன் செத்தும் கட்டுக் குலையாமல் இருப்பவள் – முதுகுக்கு பின்னால் பேசும் என் சித்தி முகம் எதிரே மிரட்டி விரட்டிடப் பார்க்கிறாள்.

“வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனா…” அய்யோ சித்தி நீ எனக்கு ஆறுதல் சொல்றீயா இல்லை உயிரோடு சாகடிக்கிறீயா… தயவுசெய்து உன் ஒப்பாரியை கொஞ்சம் நிறுத்துறீயா…  

 “… இவ்வளவு நடந்த பிறகும் உனக்கு நெஞ்சழுத்தம் ஆகாதும்மா… கேள்விப்பட்ட எனக்கே குலை நடுங்கிடுச்சு. உனக்கு யாராவது பைத்தியக்காரி பட்டம் கட்றதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பு…” அவள் முடிக்கும் முன்பாக இனி நீ என் வீட்டிற்கு தயவுசெய்து வரவே வேண்டாம் என்று துண்டித்தேன்.

தனிமையையும் வேதனையையும் ஒருங்கே கிளர்த்தும் விரக்தியின் தூண்டுதல் பகலும் இரவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சமையலறைக்கு பின்னால் பரந்து விரிந்திருக்கும் தோட்டத்தில் மிகுந்திருக்கும் மரங்களை நாடி வரும் விதவிதமான பறவைகள் உணர்ச்சிக்கு அடிபணிந்து சரிந்து போகாமல் என்னைப் பாதுகாக்கின்றன. ருசிக்கப்பட்டதால் விஷமேறிய இந்தப் பண்டம் மிச்சமிருக்கிறது. சுவை கண்டவன் மீண்டும் வருவான்.

ன்று மார்கழி அதிகாலை. கணவனுடன் இறுதியாக கலவியில் இருந்ததும் அதன் பிறகு அவர் தூக்கத்தில் மரணம் அடைந்ததும் வழக்கம்போல் கனவுகளாக வியாபித்தன. 

ட்டீ…ஹ்ஹீ…ட்டீ…ஹ்ஹீ… என்று ஓயாமல் சத்தமிட்டு கொண்டிருக்கும் கரிக்குருவிகளின் இரைச்சலால் பதட்டத்துடன் எழுந்து கொண்டேன். 

இந்த வழக்கமான கீச்சொலியால் கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே? என்று மனம் சமாதானம் பாடியது. அதனைத் பின்தொடர்ந்து வாய்விட்டு பாடத் துவங்கினேன்…

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய் திற – ஏலோர் எம்பாவாய்.

வாசல் கதவு திறந்தேன். இருளையும் மறைக்கும் வெண்பனி மூட்டம் அருகில் இருந்த வீடுகளும் எதிரில் இருந்த வீடுகளும் கண்களுக்கு தெரியவில்லை. கை விரல்கள் வாசல் தரையில் போடும் கோலமும் புலப்படவில்லை. ஒரு வழியாக வரைந்து விட்டு நிமிர்ந்தேன். தொலைவில் தென்மேற்கு திசையில் செஞ்சூரிய பிரகாசத்தில் கரும்பு தோட்டம் பற்றியெரிவதாகத் தோன்றியது. அறுவடை முடிந்த பிறகு அடிக்கட்டை மீண்டும் துளிர்ப்பதற்காக மேலிருக்கும் கருப்பஞ் சோலைகளை எரிப்பது வழக்கம்…  

வாசல் கதவை சாத்திவிட்டு சமையல் அறைக்கு வந்து ஜன்னல்களை திறந்தேன். கரிக்குருவிகள் கத்துவதை நிறுத்தவில்லை. மின்விளக்கு குமிழியை அமிழ்த்தி விட்டு தோட்டக் கதவை திறந்ததும் குருவிகள் அமைதியாகின. கழிவறைக்குள் சென்றதும் மின்விளக்கு நின்றது. கரிக்குருவிகள் முன்பைவிட அதிக சத்தத்தில் இரையத் தொடங்கின. தங்களுக்குள் அப்படியென்ன விவாதம்? என்னதான் பேசிக் கொள்ளும்…

கழிவறைக்கு வெளியே வந்து இருளில் காலடி வைத்தேன். கரிக்குருவிகள் கீச்சொலிக்கும் திசையில் பார்த்தேன். வானத்தின் பின்ணணியில் மரங்கள் நிழல் உருவாய் தெரிந்தன. எனது உருவத்தை நானே ஒருமுறை பார்க்க முயற்சித்து தோற்றேன். என்றைக்கும் இல்லாமல்  நான் பதட்டம் அடைகிறேனா? 

திடீரென்று பின்திசையில் இருந்து வந்த ஒரு கரம் என் வாயை இறுகப் பொத்தியது. இன்னொரு கரம் இடுப்பை இறுக்கியது. திருடன் புகுந்து விட்டான்… இனி கத்தியைக் காட்டி என் வாயில் துணி வைத்தடைத்து கயிற்றால் கட்டிவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களையும் கழுத்தில் காதில் இருப்பதை எல்லாம் கொள்ளையடித்து செல்வான் என்று கருதினேன். ஆனால் அவன் தன்முகத்தை என் கழுத்தருகில் கொண்டு வந்து மூர்க்கத்துடன் வாசம் உறிஞ்சினான். எனது இடது காலை இடறி கீழே சரித்தான்.

வெகு நாட்களாக பயன்பாடு இல்லாமல் மண்ணிற்குள் புதைந்து வெளியே நீட்டியிருக்கும் அம்மி குழவியின் முனைமீது பின்னந்தலை பட்டதும் என் நினைவுகள் மங்கலாயின. கதகதப்பான குருதி தோள்பட்டையை நனைத்தது. எனது கைகளையும் கால்களையும் அசைக்க முடியவில்லை. முந்தானையை விலக்கி இரவிக்கையை கிழித்தவன் எனது மார்பகத்தைப் பற்றியிழுத்து வலி ஏற்படுத்தினான். அருகில் நெருங்கி சிறகடித்து பறக்கும் கரிக்குருவிகளின் கூச்சலையும் பொருட்படுத்தாது புடவையை மேலுயுயர்த்தி ஆவேசத்துடன் இயங்கத் தொடங்கினான்.

நினைவுகள் முற்றிலும் தப்பாமல் என் மீதான வன்முறைக்கு என்னையே சாட்சியாக்கின. ஒவ்வொரு முறையும் மூச்சின்றி தண்ணீருக்குள் தத்தளிப்பது போல் உணர்ந்தேன். அவனை உதறித் தள்ளும் சக்தியை உடல் இழந்து விட்டது. குரல்வளை மீது பாறையை வைத்தது போல் வார்த்தைகள் அறுபட்டன.

எப்பொழுது சென்றான் என்று தெரியவில்லை. கரிக்குருவிகள் தனது அலகால் என் முகத்தை கொத்தி உணர்வூட்டின. கண்களை சிரமத்துடன் மெதுவாக திறந்தேன். எங்கிருந்து வந்தான்? எதற்காக இப்படியொரு காரியம் செய்தான்? யாரிந்த தைரியம் கொடுத்தது… என் வெளித் தோற்றம் கண்டு மோகித்தவர்களில் ஒருவனா? என் கணவரின் பகையாளியா? கணவன் துணையில்லாது தனித்திருப்பவள் தானே யார் தடுக்கப் போகிறார்கள் என்கிற ஏளனமா? சமயம்பார்த்து பகை தீர்த்துக் கொண்டனா? என்னைக் கொல்லாமல் விட்டுச் சென்ற பாவி…பாவி…

கரிக்குருவிகளுடன் குயில்கள், காகங்கள், கௌதாரிகள் யாவும் ஒன்று சேர்ந்து குரலெழுப்பின. தெருவாசலில் பால்காரர் சிவநேசனின் குரல் கேட்கிறது. அவர் பக்கத்து வீட்டு கதவைத் தட்டுகிறார். பக்கத்து வீட்டு தோட்டக் கதவைத் திறந்து கொண்டு ராணியம்மா வருகிறாள். கழிவறை சுவற்றில் இருக்கும் விளக்கு குமிழியைத் தடவிப் பார்த்து அழுத்துகிறாள். தோட்ட வாசலில் நின்றவாறு சமையலறை நோக்கி குரலெழுப்பியவள் திரும்பியதும் கிழிந்தத் துணியாக கிடைக்கும் என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

ஜாதிச் சண்டை தலைக்கேறி கரும்பு காட்டை எரித்துவிட்டு சென்றவர்களில் எவனோ ஒருவன் செய்த அசிங்கம் என்கிறார்கள். கருப்பஞ்சோலைகள் பற்றி எரியும் போது வரும் புகைச்சல் நாற்றம் என்னைக் காயப்படுத்தியவன் மீதும் இருந்தது … யார் அவன்?

“வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால் கால் விழுந்த கிழவியும் குமரி ஆவாளா… மோசம் போயிட்டியே விசாலாட்சி…” சித்தியின் ஒப்பாரி மருத்துவமனை வரை எதிரொலித்தது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் நான் அவளை சந்திக்கும் போதெல்லாம் இதே போல் ஒப்பாரி வைத்து ரணப்படுத்துவாள்.

மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது காவல்துறையினரும் மருத்துவர்களும் இடைவிடாது கேள்விகள் கேட்டுத் தகவல்கள் பெறுவதிலே குறியாக இருந்தனர். எங்கே? எப்போது? எவ்வாறு? அந்நேரத்தில் எதற்காக தோட்டத்திற்கு சென்றீர்கள்? எவ்விதம் நடந்தது? எந்த சூழ்நிலையில் நடந்தது? நின்று கொண்டா? படுத்த நிலையிலா? முன்புறமாகவா? பின்புறமாகவா? உணர்வுடன் இருந்தீர்களா? உணர்விழந்து போனீர்களா? அது நிகழ்வுக்கு முன்பா… பின்பா? அழுதீர்களா? கூக்குரல் எழுப்பவில்லையா? அவன் மீது காயம் ஏற்படுத்தினீர்களா? யார் உங்களை முதலில் பார்த்தது…? சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் அரைமயக்க நிலையில் இருந்து நான் விடுபடவே இல்லை.

ஆறாவது நாள் அமெரிக்காவில் இருந்து வந்ததும் என் மகள் நதியா காவல் நிலையம் சென்று ஆவேசத்துடன் சத்தமிட்டாள். 

“இது ஊர் தகராறு கலவரம் செய்தவர்களை பிடித்து விசாரணையில் வைத்திருக்கிறோம்” என்றனர்.

“வெறிப்பிடித்த நாய்கள் வயலையும் தோப்பையும் எரித்துக் கொண்டு தங்களுக்குள் எப்படியோ அடித்து சாகட்டும்.  அறுபது வயது நெருங்கும் தனித்திருக்கும் முதியவள் மீது இப்படியொரு வன்முறையை பிரயோகிப்பதற்கு எப்படி மனம் வந்தது… இவர்கள் எல்லாம் மனித ஜென்மங்கள் தானா? உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு நடந்தால் மட்டும் தான் உங்களுக்கு வேகம் வருமா? தடயவியல் அறிக்கையை வைத்து நீங்கள் பிடித்து வைத்திருக்கும் விசாரணை கைதிகளில் யார் இந்த ஈனத்தனமான செயலை செய்தார்கள் என்று கண்டுபிடிப்பது என்ன அவ்வளவு கடினமா?”

“மேடம் உங்கள் கோபம் புரிகிறது. இது தனிப்பட்ட விரோதமல்ல. ஊர் கலவரம். தனிப்பட்ட நபர் மீது வழக்கு பதிய முடியாது. குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 223 கீழ் தான் வழக்கு பதிய முடியும். குற்றம் நிரூபணம் ஆனால் அவர்களுக்கு இரண்டு வருடம் தண்டனை கிடைக்கும்…” 

“ஓ …அது சரி… உங்களோட அதே சட்டம்தான் சொல்லுது வன்புணர்ச்சி செய்தவனுக்கு ஐ பி சி 376 ஆயுள் தண்டனை …  நாங்க கொடுத்தப்  புகாருக்கு முதல் தகவல் அறிக்கையே நீங்க இன்னும் பதியலையே சார்… அப்பறம் எப்படி நீங்க விசாரணை செஞ்சு குற்றவாளியை கண்டுபிடிப்பீங்க? முதல்ல நாங்க கொடுத்தப் புகாருக்கான முதல் தகவல் அறிக்கையோட நகலைக் கொடுங்க… அப்பறம் யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக உங்கள் கடமையை  செய்யுங்க … குற்றவாளியை பாதுகாக்கறத விட்டுட்டு பாதிக்கப்பட்டவங்க பக்கம் ஆதரவா நில்லுங்க…”

“எதுக்கும் எல்லை இருக்கு மேடம்…  எங்க வந்து என்ன பேசறீங்க… எங்களுக்கு நீங்க உத்தரவுப் போடாதீங்க. சும்மா பேசிக்கிட்டே போறீங்க… இது அமெரிக்கா இல்லை. உங்கள் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகது.”

“நான் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அதுக்கு மதிப்பில்லைன்னு தெரியும். இப்ப நான் ஒரு அமெரிக்கன் சிட்டிசன். என்னுடைய குரல் உலகம் முழுக்கக் கேட்கும். எங்க அம்மாவுக்கு மட்டும் நீதி கிடைக்கல… அதற்காக நீங்கள் ரொம்ப வருத்தப்படுவீங்க…”

நதியாவின் குரலுக்கு பயந்து வழக்கு பதிந்தார்கள். விசாரணை என்கிற பெயரில் பாதிப்படைந்தவளையே மேலும் மேலும் ரணப்படுத்தினார்கள். அன்றைக்கு கரும்பு தோப்புகளை தீயிட்டு கொளுத்திய முப்பத்து ரெண்டு நபர்களை அடையாள அணிவகுப்புக்கு அழைத்து வந்து நிறுத்தினார்கள். தலை குனிந்து நின்றிருக்கும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்களின் பெயருடன் அவர்களது வயதையும் காவலர் ஒருவர் உரக்கக் கூவினார். 

என் காதுகளில் கரிக்குருவிகள் இரைச்சலிட்டன. கண்களுக்கு முன்னிருந்த யாவும் மறைந்து போயின. பனியும் இருளும் என்னை நடுநடுங்கச் செய்தன. பெரும் பரப்பில் செழித்திருக்கும் கரும்புக் காட்டின் பசுமை திரட்சி ஒரு நொடி என்முன் தோன்றி மறைந்தது. பிறகு பசுஞ்சோலை பரப்பில் தீப்பற்றி திகுதிகுவென்று வானம் தொடும் தழலாக வளர்ந்தது. பனிக்காற்றோடு கலந்து முகத்தில் அறையும் புகைச்சல் வாடை என் மூச்சழுத்தி நிறுத்தியது. மயங்கி கீழே சரியும் வேளையில் அறுபடும் கடைசி நினைவில் குழவிக் கல்லில் என் தலை மோதக்கூடாது என்று பதறினேன். 

என் மகள் புத்திசாலி. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பவள். தன்னொருத்தியாள் மட்டும் என்னை இயல்புக்கு திருப்பிக்கொணர முடியாது என்பதயறிந்ததால் என்னவோ பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள். நீதிக்கான போராட்டம் பயனளிக்காது என்பதை வெகுவிரைவில் புரிந்து கொண்டவள் நீயும் என்னோடு வந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். சில நாட்களாவது என்னோடு வந்து இரும்மா என்று இறைஞ்சினாள். நான் மெளனத்துடன் இறுகிப் போயிருந்தேன். எனது நிலைமைக்கு அவளால் அழ மட்டுமே முடிந்தது. பெண்ணல்லவா… அதுவும் என் வயிற்றில் பிறந்த மகள் அல்லவா, அவருக்கு புரியாமல் யாருக்கு புரியப்போகிறது. கடைசி முயற்சியாக தனது குழந்தைகளை ஆயுதமாக்கினாள்.

குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்… புரியாவிட்டாலும் முடிந்தவரை என்னிடம் பேசிப் பேசி இயல்பாகிட முயன்றார்கள். நான் என்ன செய்வது என்னைச் சுற்றி எப்பொழுதும் இருளும் பனியும், எரிந்த கரும்பின் புகைச்சல் வாடையும் சூழ்ந்திருக்கின்றன. தோள்பட்டையில் எனது குருதியின் வெப்பம் உணர்கிறேன். பின்னந் தலையில் தெறிக்கும் வலி… இவை யாவும் என்னை நிந்தரமாக சிறை வைத்து விட்டன. ஆனால்… ஒவ்வொரு நாளும் அதிகாலை மூன்று மணிக்கு தவறாமல் என்னிடம் பேச வரும் கரிக்குருவிகளின் கீச்சொலி மட்டுமே எனது விடுதலையின் நாதத்தை செறிவடைச் செய்கின்றன.

பேத்தியும் பேரனும் தங்கள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டார்கள். “பாட்டி இன்னைக்கு நாங்க ஊருக்கு போறோம். அம்மா நீ நல்லா பாடுவன்னு சொன்னா, ப்ளீஸ் எங்களுக்காக ஒரேயொரு பாட்டு பாடுவியா… ” தலையசைத்தேன். குழந்தைகள் குதூகலித்தனர்.

ஒரு கரிக்குருவி எருமையின் மேல் ஏறி உட்கார்ந்தது பார்… 

ஓஹோ எருமை உனைவிட நானே உயரம் என்றது பார்…

திரும்பும்முன் குருவியை சிறுவன் ஒருவன் சென்று பிடித்தான் பார்…

சிக்கிய குருவி படப்படவென்றே சிறகை அடித்தது பார்…

சிறுவயதில் அப்பாவுடன் சேர்ந்து உற்சாகமாகப் பாடிய பாடல்… இப்பொழுது முழுமையாகப் பாடி முடிக்காமல் என் கண்கள் கசிவதை அவர்கள் கண்டுவிடக் கூடாது என்பதற்காக தலையைக் கவிழ்த்தேன். மகள் என் குரல் கேட்டு வெளியே வந்தாள். குழந்தைகள் பாடலைத் தொடர்ந்து பாடும்படி வற்புறுத்தினார்கள். இயலாது…  இனி பாட்டி மெளனத்திற்குள் உறைந்து விடுவாள் என்பதை புரிந்து கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினார்கள்.

“கரிக்குருவின்னு சொன்னீயே அது எப்படி இருக்கும் பாட்டி?”

“பாட்டிக்கு தொந்திரவு கொடுக்கக் கூடாது. நான் சொல்றேன்… கரிச்சான், ஆணைச்சாத்தான், ரெட்டைவால், கருவாட்டுவால், வலியன் இப்படி பல பெயர்கள் இருக்கு… உனக்கு எப்படி சொல்றது. யெஸ்… உனக்கு ட்ரோங்கோ தெரியுமா? அதுதான் அது…”

“அம்மா… நாங்க உங்களிடம் கேட்டோமா? பெயர்கள் எல்லாம் சரிதான். நீ அந்தப் பறவையை பார்த்திருக்கியா?” நதியா இல்லையென்று தலையசைத்தாள். குழந்தைகள் அவளை நிராகரித்துவிட்டு என் பக்கம் திரும்பி நீ சொல்லு பாட்டி… என்றார்கள்.

கரிக்குருவி பறவைகளுக்கெல்லாம் ராஜா. தன்னுடைய கூட்டை பாதுகாப்பதில் கூர்மையும் திறமையும் கொண்டவை… கழுகு, பாம்புகள் மட்டுமல்ல எதிரிகள் யாராக இருந்தாலும் துச்சமாக கருதி துணிந்துநின்று போராடும். அதிகாலை மூன்று மணிக்கு விழித்தெழுந்து தன் மந்திரக் குரலால் உலகத்திற்கு உயிர் கொடுக்கும். பலம் நிறைந்த எதிரிகளை பழிவாங்கும் காலம் வரும் வரை அமைதியாக காத்திருக்கும். எல்லா பறவைகளுக்கும் தெரியும் கரிக்குருவி வீண் வம்பிற்குச் செல்லாது. தேடிவரும் வம்பிற்கு பதிலடித் தராமல் திரும்பாது என்று… கரிக்குருவிங்க இருக்கிற இடத்தில் மற்ற பறவைகளும் பயமின்றி கூடுகட்டி வாழும். இறந்த பூச்சிகளை விரும்பாமல் பறக்கும் பூச்சிகளை மட்டுமே வேட்டையாடும்… சுயமரியாதை அதிகமுள்ள கரிக்குருவி தன்மேல் நம்பிக்கை வைத்து உதவியென்று கேட்பவர்களை ஒருபோதும் கைவிடாது.

நதியா என்னனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கரிக்குருவிகள் நம்ம தோட்டத்திற்கு வருமா பாட்டி…?”

அதோ பார்… என்றதும் மரத்தின் பக்கம் திரும்பி “ஹய்யா…  மொத்தம் ஐம்பது குருவிகள்…  இல்லை நாற்பது…  முப்பது…  ” என்று கத்தினார்கள். இல்லை… இல்லை… தவறான கணக்கு. இன்று தரையிறங்கி அசையாமல் அமர்ந்திருப்பவை சரியாக அறுபது, விரைவில் நூறாகும் என்றேன்.

மகள் வினோதமும் பரிதாபமும் கவிய என்னை சில கணங்கள் பார்த்துவிட்டு மீண்டும் வந்து உன்னை அழைத்துச் செல்லாமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியுடனும் மன வருத்தத்துடனும் ஊருக்கு கிளம்பினாள்.

ழ்ந்திருக்கும் இருளில் வானமும் பூமியும் சந்திக்கும் பிரம்ம முகூர்த்தத்தில் கரிக்குருவிகள் கீச்சு கீச்சு என்று முழக்கம் இடுகின்றன. எண்ணிக்கை பார்க்கும் அவசியமெல்லாம் கிடையாது… விதவிதமான வகையில் தொண்ணூற்று ஒன்பது பறவைகள் போர் குணத்துடன் காத்திருக்கின்றன…உறுதியுடன் கூறுகிறேன். இன்றைக்கு நான் தரையில் சரிய மாட்டேன், தலையிலும் அடிபடாது, பனிமூட்டம் பார்வைக்கு இடைஞ்சல் தராது, கருப்பஞ் சோலையின் புகைவாடை தாக்கினாலும் பயமில்லை… வரட்டும். வரவேண்டும்… நிச்சயம் வருவான். அதற்குள் நூறாவது கரிக்குருவியும் வந்துவிட வேண்டும்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.