சரண் நாங்களே

தூரத்தில் ஏதோ காட்டு மிருகம் ஊளையிடும் சத்தம் கேட்டது.

குகை வாசலில் காவலாக அரைக்கண் மூடி அமர்ந்திருந்த அர்ஜுனனின் தோளை மூடியிருந்த மான் தோல் சரிந்தது. கை குகையின் கூரையிலிருந்து கீழ்நோக்கி வளர்ந்து கொண்டிருந்த பனிக்குச்சியின் அடியின் கூர்மையை தன்னிச்சையாகப் பரிசோதித்தது. குகையின் உட்புறச் சுவரில் சாய்ந்து கொண்டு காலை நீட்டி அமர்ந்திருந்த திரௌபதி புன்னகைத்தாள். பாஞ்சாலியின் காலைத் தலையணயாகக் கொண்டு படுத்திருந்த நகுலன் “கர்தபகண்டன் வந்துவிட்டான்” என்று சகாதேவனைப் பார்த்துச் சொன்னான்.

“ஏதோ கழுதைப்புலி ஊளையிடுகிறது என்று நினைத்தேன்” என்றான் அர்ஜுனன். “கழுதை வரைக்கும் சரிதான்” என்று நகுலன் சிரித்துக் கொண்டான். கைகளைத் தன் தலையின் பின்னால் கட்டிப் படுத்திருந்த காதேவன் “பீமன் பாடுகிறான்” என்றான்.

“பாடுகிறானா? இத்தனை வருஷத்தில் அவன் பாடி நான் கேட்டதே இல்லையே? இத்தனை கர்ணகடூரமாகவா பாடுவான்?”

“மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டும்தான் பாடுவான். நீ பாசுபதம் பெறச் சென்றிருந்த நாட்களில் அவன் முறை வந்தது, அப்போது சில இரவுகளில் அவன் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். நல்ல வேளையாக இந்திரப்பிரஸ்தத்தில் அவன் மாளிகை நகருக்கு வெளியே இருந்தது, அதனால் அங்கே அவன் பாடுவதைக் கேட்கும் பாக்கியம் நமக்கு கிட்டாமல் போய்விட்டது” என்றான் நகுலன்.

“அதுதான் கழுதைத் தொண்டையன் என்று பேர் வைத்திருக்கிறீர்களா?” என்று அர்ஜுனன் சிரித்தான்.

“நாங்கள் வைக்கவில்லை. அது பாஞ்சாலி வைத்த பேர். அவள்தான் அந்த சாரீரத்தை அதிகம் அனுபவித்திருக்கிறாள். அவன் கழுதைத் தொண்டையன், நான் குதிரை…”

பாஞ்சாலி சட்டென்று கையைத் தூக்கி நகுலன் தன் வாக்கியத்தை முடிக்காமல் தடுத்தாள். “போதும் போதும். மூத்தவர் இல்லாவிட்டால் பொதுவில் என்ன பேசுவதென்று என்ற விவஸ்தையே இருப்பதில்லை” என்று பொய்க் கோபத்துடன் சொன்னாள். அவள் கன்னங்கள் சிவந்திருப்பது வெண்முடிக்கு மாறாக அந்த அரை இருட்டிலும் தெரிந்தது.

அர்ஜுனன் மெதுவாகச் சிரித்துக் கொண்டான். “இத்தனை நாள் கழித்துத்தான் நீ இப்படி பட்டப் பெயர் வைத்திருப்பதே தெரிகிறது. ஒருவன் கழுதை, ஒருவன் குதிரை, நான்?”

“நீர் கழுகு; எங்கே பெண் இருந்தாலும் மூக்கில் வேர்த்துவிடும். இவர் அன்னம். பாலையும் தண்ணீரையும் பிரிப்பது போல நல்லது கெட்டதைப் பிரித்துச் சொல்லுவார், வெள்ளைவெளேரென்று வேறு இருக்கிறார். மூத்தவருக்கு வேறு என்ன பெயர் வைக்க முடியும்? கரையான்தான், ஏட்டை அரிக்கும் கரையான்…” என்று திரௌபதி நகைத்தாள்.

அர்ஜுனன் புன்னகையோடு மான் தோலை இழுத்து தன் தோள்களை மூடிக் கொண்டான். மீண்டும் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்தான்.

அரை நாழிகைக்குப் பிறகு பீமன் குகைக்குள் நுழைந்தான். அவனது மரப்பட்டைக் காலணிகள் குகையின் பாறைத் தரையில் ஓசையை எழுப்பின. அவன் தோளில் சில கிழங்குகள் கிடந்தன. “பசிக்கிறது திரௌபதி, இந்த கிழங்குகளை சுட்டுக் கொடேன்” என்று குகைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகச் சொன்னான். பாஞ்சாலி கிழங்குகளை வாங்கிக் கொண்டு போனாள். பீமன் தன் காலணிகளைக் கழற்றி வீசினான். தலையில் கட்டியிருந்த துணியையும் உருவினான். வெண்மையும் கறுமையும் கலந்திருந்த அவன் தலையிலிருந்து பனித்துளிகள் உருகி அவன் கன்னங்களில் வழிந்தன. தலைத்துணியை வைத்து கன்னங்களை நன்றாக துடைத்துக் கொண்டான்.

குகையின் ஓரத்தில் மூன்று பெரும் கற்கள் அடுப்பாக அமைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே சுள்ளிகள் குவிக்கப்பட்டிருந்தன. பாஞ்சாலி சில சுள்ளிகளை வைத்து நெருப்பை மூட்டி இருந்தாள். பீமன் தீக்கு நேராக தன் பாதங்கள் இருக்கும்படி காலை நீட்டி அமர்ந்தான்.

பெரிய குகை. குகையின் மேலே இருந்த சில பிளவுகளின் மூலம் குளிர்ந்த காற்று வந்து கொண்டிருந்தது. குகைக்குள்ளிருந்து பாறைக் குழிவு ஒன்றில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. இலைகளை முடைந்து ஐந்து படுக்கைகள் செய்யப்பட்டிருந்தன. பீமன் சுற்றுமுற்றும் பார்த்தான். “வெளியே நல்ல குளிர், உள்ளே அத்தனை தெரியவில்லை” என்று முனகிக் கொண்டான். “நீ சொன்ன பிறகுதான் உரைக்கிறது” என்ற அர்ஜுனன் மான் தோலை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

“பாத்திரங்கள் கிடையாது, நேராக நெருப்பில் சுட்டுத்தான் உணவு. வரும் வழியில் பனி எருதின் தடங்களைப் பார்த்தேன். காட்டு மிளகுச் செடியும் பெருங்காய மரமும் உப்புக் கற்களும் கூட தெரிந்தன. நாளை விருந்துண்போம். அடுத்த நாளிலிருந்து வடக்கிருப்பதை ஆரம்பிப்போம்” என்றான் பீமன்.

“கொண்டாட்டத்தை இன்றே, இப்போதே ஆரம்பித்துவிடுவோம். கொஞ்சம் பாடேன்.” என்றான் அர்ஜுனன.

“கேட்டுவிட்டதா? உங்கள் எல்லார் மீதும் பரிதாபப்பட்டுத்தான் அரைக் காத தூரத்திலேயே பாட்டை நிறுத்தினேன்” என்றான் பீமன்.

திரௌபதி அதற்குள் ஒரு தொன்னை நிறைய வாதுமைக் கொட்டைகளைக் கொண்டு வந்து பீமனிடம் கொடுத்தாள். “அருகில் மரம் இருக்கிறதா? நாளை எருதிறைச்சியோடு இவற்றையும் சுட்டுத் தின்போம்” என்று சொல்லிக் கொண்டே பீமன் கொட்டைகளை உடைக்கத் தொடங்கினான்.

அர்ஜுனன் பீமனை நோக்கி தன் புருவத்தை உயர்த்தினான்.

“யுதிஷ்டிரன்தானே? அரை நாள் தூரத்தில் நான் கீழே விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டேன். என்னைப் பார்த்து பெருமூச்செறிந்தான். என் தலையைக் கோதினான். பிறகு “பெருந்தீனிக்காரன், அதனால்தான் கடைசி வரை வரமுடியவில்லை” என்று முணுமுணுத்தான். பிறகு அவனும் அவனுடன் ஒட்டிக் கொண்ட அந்தப் புது நாயும் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்கள்”

நால்வரும் வாய்விட்டு சிரித்தார்கள். “எனக்கு மத்யமர் மீது அதிகப் பிரியம், இரட்டையருக்கு அழகு, அறிவு பற்றிய கர்வம், மத்யமருக்கு பெண் பித்து, நீங்கள் விருகோதரன், இவர் மட்டுமே மாசு மறுவற்ற உத்தமர், அதனால் கடைசி வரைக்கும் செல்ல முடியும்” என்று திரௌபதி சொன்னாள்.

“ஓநாய் வயிறனா? கழுதைத் தொண்டையன் என்று நினைத்தேனே” என்று அர்ஜுனன் இடையில் வெட்டினான்.

“யுதிஷ்டிரனை விட நாம் அனைவருமே உடல் வலு மிக்கவர்கள்; ஏன், இன்றைய பாஞ்சாலி கூட அவனை விட இளையவள், வலியவள். அவனால் எப்படித்தான் அவனுக்கு முன் நாம் அனைவரும் விழுவோம் என்று நம்ப முடிகிறதோ? அதுவும் பீமன் தனக்கு முன் விழுவான் என்று எப்படித்தான் நம்புகிறானோ?” என்று நகுலன் அலுத்துக் கொண்டான்.

“அவனுடைய பலமே தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் திறமைதானே? தனக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை நான்கு முறை தனக்குத் தானே சொல்லிக் கொள்வான், அது உறுதியான நம்பிக்கையாக மாறிவிடும், அவனுக்கென்று நாலு சூதர்கள் அதைப் பாடலாகவும் பாடிவிடுவார்கள். தர்மவான் தேர் தரையில் இறங்காது என்று வியாசரையே பாட வைக்கவில்லையா? தம்பியரையும் மனைவியையும் வைத்து சூதாடியவன் தர்மவான்தானா, அஸ்வத்தாமனைப் பற்றி பொய் சொல்வதற்கு முன் அவன் நெறி பிறழவே இல்லையா என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்று அவன் ஒரு கணம் யோசித்திருப்பானா?” என்று சகதேவன் எரிச்சலோடு சொன்னான்.

“அன்று அவன் கை எரியாமல் தப்பியது எப்படி என்று இன்று வரை எனக்குப் புரிந்ததில்லை. என்னைத் தடுத்தது எது?”

அர்ஜுனன் பீமனை பார்த்து தன் இடது புருவத்தை மட்டும் தூக்கினான். “நீ இல்லை! நீ வெறும் சாக்குதான்” என்று பீமன் எரிந்து விழுந்தான்.

“கர்ணன் அங்க நாட்டின் அரசனானதும் எல்லாரும் அவன் ரிஷிமூலத்தை கண்டுகொள்ளாமல் போயிருப்பார்கள். ஆனால் உங்கள் இருவரையும் – ஏன்  எங்கள் இருவரையுமே கூட அவனை குதிரைச் சூதன் என்று இழிவுபடுத்தும்படி தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பான். ஆனால் அவன் தன் வாயால் எதுவும் சொல்லமாட்டான்!” என்றான் சகதேவன்.

“குதிரைச் சூதன் என்றால் அது நானேதான். இந்த லட்சணத்தில் நான் அவனை எங்கே இழிவாகப் பேசுவது என்று நான் அவன் தூண்டுதலுக்கு மசியவில்லை. இவன் என் ஆடிப் பிம்பம் அதனால் இவனும் மசியவில்லை. பகாசுரனையும் இடும்பனையும் கூட உயர்வாகவே மதிப்பவன் பீமன்! ஆனால் பீமன் குடிப்பிறப்பை வைத்து இழிவுபடுத்திய ஒரே வீரன் அவன்தான்” என்று நகுலன் சொன்னான்.

“நீதி தவறாதவன் என்று பேரும் புகழும்! கர்ணன் யாரென்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.  இந்திரப்பிரஸ்தத்தை  நிர்வாகித்த எனக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டான். என் கண்களே கட்டப்பட்டிருந்தால் இந்த அப்பாவி பீமனுக்கும் வில்லையும் குதிரையையும் மட்டுமே அறிந்த இவர்கள் இருவருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. ஆனால் உண்மையைச் சொன்னால் அரசு பீடம் போய்விடுமே! அதனால்தான் கர்ணனை, கர்ணனை மட்டுமே அஞ்சினான். அன்னையை கர்ணனிடம் அனுப்பி அவனை பலவீனப்படுத்தியவன் அவன்தான், ஆனால் கண்ணனுக்குத்தான் வஞ்சகன் என்று பேர்” என்று சகதேவன் சொன்னான்.

“மகாவீரன், என்னை விட, பீஷ்மரை விட, துரோணரை விட ஒரு மாற்று உயர்ந்த வீரன். இத்தனை பேர் முனைந்து அவனை பல ஆண்டுகளாக தொடர்ந்து பலவீனப்படுத்தி இருக்காவிட்டால் அவனை வென்றிருக்க முடியாது. உண்மை தெரிந்த பிறகு எங்கள் எல்லாருடைய மனமும் மாறிவிட்டது, ஆனால் கர்ணன் மீது இன்றும் அவனுக்கு பெரிய ஒவ்வாமைதான். விருஷகேதுவை இளவரசனாக்காமல் பரீட்சீத்தை முன் வைக்கவும் அதுதான் காரணம்” என்று அர்ஜுனன் தழுதழுத்தான்.

“தன்னகங்காரம் அதிகம், ஆனால் அடக்கமே உருவானவன் மாதிரி நடிப்பான். அஸ்வமேதத்தின்போது உன் கைகளில் என்றும் அழியாத ரத்தக்கறை என்று கூக்குரலிட்ட சார்வாகன் கதி என்னாயிற்று?” என்று சகதேவன் முணுமுணுத்தான்.

“எப்போதும் எங்கள் வற்புறுத்தலுக்காகத்தான் நெறி தவறுவது போல நடிப்பான். நாங்கள் எல்லாம் கொடுத்த அழுத்தத்தால்தான் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகப் பொய் சொன்னானாம், இல்லாவிட்டாம் சொல்லி இருக்கமாட்டானா? பீஷ்மவதை இவன் சம்மத்தோடுதானே நடந்தது? சகதேவன்தான் பாவம், இவனது ஒவ்வொரு நெறிமீறலுக்கும் ஏதாவது நீதிநூலிலிருந்து ஒரு சப்பைக்கட்டைக் கொண்டு வர வேண்டும்!” என்று பீமன் சிரித்தான்.

“விடுங்கள். காலமெல்லாம் அண்ணன், அரசன் என்று நுகத்தை நாமும் கணவன், அரசன் என்ற நுகத்தை இவளும் சுமந்து வாழ்ந்திருக்கிறோம். எப்போதும் ஆசிரியர் மாணவர்களை குறும்பு செய்யாமல் தடுப்பது போன்று அவனும் நம்மைக் கட்டுப்படுத்தியே காலத்தைக் கழித்திருக்கிறான். கடைசி சில நாட்களாவது தோளில் அந்தச் சுமை இல்லாமல் வாழலாம் என்றுதானே இப்படி ஒவ்வொருவராக இறந்தது போல நடித்து விட்டு விலகி வந்திருக்கிறோம்? மீண்டும் அவன் புராணம்தானா?” என்று நகுலன் மிருதுவான குரலில் சொன்னான்.

“ஓரிரண்டு பிள்ளைகளாவது மிஞ்சி இருந்தால் அவரது சுமை இத்தனை கனமாக இருந்திருக்காது…” என்று திரௌபதி பெருமூச்செறிந்தாள். அவளது வெண்கூந்தல் தீயின் ஒளியில் பிரகாசித்தது. சிறிது நேரம் அனைவரும் மௌனமாக இருந்தனர்.

கிழங்குகளை எடுத்து பீமனின் அருகில் வைத்தாள். ஒன்றை எடுத்து அவளும் கடித்தாள். அது வெளியே சற்று முறுமுறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருந்தது. தன் சமையல் திறனைத் தானே பாராட்டும் விதமாக கண்ணை உயர்த்தி ம்ம் என்றாள். பீமன் மற்ற மூவரையும் நோக்கினான். நகுலனும் சகதேவனும் வேண்டாம் என்று தலையை ஆட்டினர். அர்ஜுனன் வலக்கையை உயர்த்த ஒரு கிழங்கை எடுத்து அவனை நோக்கி பீமன் வீசினான். அர்ஜுனன் கையில் அது சரியாகச் சென்று அமர்ந்தது. “வீராதிவீரர்கள், ஆனால் சிறுபிள்ளைத்தனம் போகவில்லை” என்று திரௌபதி செல்லமாக சலித்துக் கொண்டாள். சிறிது நேரம் கிழங்குகளை பீமன் பற்களால் அரைக்கும் ஒலியைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

பிறகு “வாடா, ஒன்றும் அச்சமில்லை. என்னைத் தாண்டித்தான் எந்த காட்டு விலங்கும் உங்களை அணுக முடியும்” என்று பீமன் அர்ஜுனனை அழைத்தான். ஐவரும் தங்கள் இலைப் படுக்கைகளுக்குச் சென்றனர். குகையில் மௌனம் நிலவியது. ஆனால் ஐவரில் எவருக்கும் உறக்கம் வரவில்லை. குகையின் கூரையையும் சில பிளவுகள் வழியாக வந்த மெல்லிய நிலவொளியையும் பார்த்துக் கொண்டே படுத்திருந்தனர்.

திரௌபதி திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள். “அழகர் சொல்வது சரிதான்; மூத்தவரின் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக சில நாட்களாவது வாழ வேண்டும்தான். அவரைப் பற்றி பேச வேண்டாம்தான். ஆனாலும் ஒரே ஒரு சந்தேகம். எனக்கு நீண்ட நாட்களாக இந்தக் கேள்வி உண்டு. நுகம், சுமை என்று காலமெல்லாம் உணர்ந்தீர்கள். கதிரை வைத்திழந்தான் மீது நாலு பேருக்கும் – ஏன் எனக்கும் – ஏற்பட்ட சினம் இன்றும் அணையவே இல்லை. நான் பாரதீய நாரி, பத்தினி என்று நிலையிலிருந்து விலக முடியவில்லை, அவரை நீங்க முடியவில்லை. ஏன் நீங்கள் அண்ணனை விட்டுப் போய் வேறு ஊரில் நாட்டில் ஒரு அரசை ஏற்படுத்தி வாழ்ந்திருக்கக் கூடாது? நீங்கள் இருவரும் வெல்ல முடியாத வீரர்கள். நீங்கள் இருவரும் ஒரு மாற்றுதான் குறைந்தவர்கள். திராவிடத்திலோ காமரூபத்திலோ மிசிரத்திலோ யவனத்திலோ பீதர் நாட்டிலோ எங்கோ மூத்தவரிடமிருந்து தூரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாமே? குறைந்த பட்சம் துவாரகைக்கு அருகில் ஒரு நகரை அமைத்துக் கொண்டிருக்கலாமே? கண்ணன் உதவி இருக்கமாட்டானா?”

யாரும் பதிலளிக்கவில்லை. சில நிமிஷங்கள் சென்றன. பிறகு பீமன் மெதுவாகத் தன் கண்களைத் திறந்தான். மார்பில் கட்டியிருந்த கைகளை விடுவித்து தன் முகத்தை துடைத்துக் கொண்டான். “நீ கூட புரிந்து கொள்ளவில்லையா பாஞ்சாலி?” என்றான்.

அர்ஜுனன் எழுந்தான். சற்று பின்னகர்ந்து குகையின் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். “கண்ணன் ஏன் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி ஆகவில்லை? ஜராசந்தனும் சிசுபாலனும் இறந்த பிறகு அவனுக்கு பெரிய எதிரிகள் என்று யாரும் கிடையாது. இந்திரப்பிரஸ்தத்தை விடு, அஸ்தினபுரியே அவனுக்குத் துணையாக நின்றிருக்கும். அவன் ஏன் ராஜசூயம், அஸ்வமேதம் என்று எந்தப் பெருவேள்வியையும் நடத்த முய்ற்சிக்கவில்லை?” என்று கேட்டான்.

சகதேவன் தன் உடலை திரௌபதியை நோக்கித் திருப்பி ஒருக்களித்துப் படுத்தான். “யுதிஷ்டிரன் இல்லையென்றால் நாங்கள் நால்வரும் ஷத்ரியர்களாகவும் இளவரசர்களாகவும் இருந்திருக்கமாட்டோம். ஷத்ரியர்களுக்கு சேவை செய்யும் சூதர்களாக மாறி இருப்போம். விராடர் அரசில் நாங்கள் இருந்த நிலைதான் எங்களுக்கு நிரந்தரமாக இருந்திருக்கும்” என்றான்.

கைகளைத் தலைக்குப் பின்னே கோர்த்துப் படுத்திருந்த நகுலன் தன் கண்களைத் திறக்கவில்லை.  “அப்படி வாழ்வதில் நிறைவடைந்திருப்போமா என்ன? எங்கள் ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை என்று இழிவாகத்தான் உணர்ந்திருப்போம்” என்று முனகினான்.

“நீயும் கிடைத்திருக்க மாட்டாய் பாஞ்சாலி, வாழ்வு குறைபட்டதாகத்தான் இருந்திருக்கும்” என்று பீமன் சிரித்தான். பாஞ்சாலியின் கன்னங்கள் விகசித்தன.

“தமையன் மட்டுமல்ல; வழி நடத்தும் தந்தையும் கூட. தலைவன்.” என்று அர்ஜுனன் சொன்னான்.

சகதேவன் “எங்கள் எவருக்கும் – ஏன் கண்ணனுக்கும் கூட – எங்கள் சூழல்களை மீறும் சக்தி, எங்கள் சூழலைத் தாண்டி பெரும் கனவுகளைக் காணும் திறமை இல்லை. தர்மன் கனவு காண்பவன், விழைவுகள் உள்ளவன், அந்த விழைவுகளை நிஜமாக மாற்றத் தெரிந்தவன். இதனை இவனால் இவன் முடிக்கும் என்று கணிக்கத் தெரிந்தவன். அதனை அவனிடம் ஒப்படைப்பதில் அவனுடைய தன்னகங்காரம் குறுக்கே வராது. , பிரச்சினைகளுக்கு எங்களால் நினைத்தும் பார்க்க முடியாத தீர்வுகளை காண்பவன்.  அதனால் தலைவன்” என்று தீர்க்கமான குரலில் சொன்னான்.

சகதேவன் தொடர்ந்தான். “யோசித்துப் பார், ஹஸ்தினபுரியில் அடுத்த வேளை உணவுக்கு திருதராஷ்டிரரின் தயவை எதிர்பார்த்து நின்றிருந்த ஒரு விதவைத் தாயின் ஐந்து சிறுவர்களில் ஒருவன் அவன். வலுவற்ற தோளன். திருதராஷ்டிரர் துரியோதனன்தான் இளவரசனாக அமர வேண்டும் என்று விரும்பினார். பீஷ்மருக்கும் விதுரருக்கும் கிருபருக்கும் அதில் இசைவுதான். பின் ஏன் இவனுக்கு வேண்டாவெறுப்பாக இளவரசுப் பட்டம் சூட்டினார்?”

பீமனின் கண்களின் ஓரம் ஈரம் தெரிந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டான். “இளமையில் அவன் கனவு காப்பியங்கள் இயற்றுவதுதான், அடுத்த வால்மீகி ஆக வேண்டும், புரூரவஸ், யயாதி, ஹஸ்தி ஆகியோரைப் பற்றி காவியங்கள் எழுத வேண்டும் என்று தன் கனவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறான். என்று நஞ்சூட்டியும் நான் பிழைத்தேனோ அன்று ஆதரவற்ற அனாதைகளாக இருந்தும் கௌரவர் கண்ணில் நாங்கள் எதிரிகளே என்பதை அவன் உணர்ந்தான். பீஷ்மர்/விதுரர் கரங்களில் இருந்த அதிகாரம் நாளை அவர்கள் கைகளுக்கு மாறினால் எங்கள் நிலை என்ன? உயிர் தங்குமா? தான் ஹஸ்தினபுரி அரசனாக ஆவதே எங்கள் முன் இருக்கும் ஒரே வழி என்பதைப் புரிந்து கொண்டான். படைகள் கௌரவர்கள் பக்கம்; கருவூலம் அவர்கள் கையில்; அதிகாரம் அவர்கள் கையில். பீஷ்மரும் கிருபரும் விதுரரும் சகுனியும் மற்ற மூத்தவர்களும் அன்று துரியோதனனே அடுத்த இளவரசன் என்பதை ஏற்றிருந்தார்கள். இவன் எப்படி குறுக்கே நுழைவது, அரசனாவது? எத்தனை திறமையான ஆட்டத்தை ஆடினான்? கண்ணனால் கூட அப்படி யோசித்திருக்க முடியாது. நான் திரும்பி வந்த நாளிலிருந்து தான் நீதிமான், தானே தர்மவான், தானே அறச்செல்வன் என்று பிம்பத்தை உருவாக்கினான். குடிகளை, குடித்தலைவர்களை தன் பக்கம் இழுத்தான். விதுரர் மெதுவாக எங்கள் பக்கம் சாய்ந்தார். துரோணரும் பீஷ்மரும் கிருபரும் இத்தகைய அறச்செல்வன் அரியணை ஏறுவதுதான் சிறந்தது என்று எண்ண ஆரம்பித்தார்கள். எண்ணிப் பார், குரு வம்சத்தில் – வேண்டாம் ஏதாவது ஷத்ரிய அரசில் – குடிமக்கள் நல்லெண்ணத்தை மட்டுமே வைத்து அரசனானவன் என்று யாராவது இருக்கிறார்களா என்ன? எனக்காக, என் உயிரைக் காக்க, தன் கனவுகளைக் கைவிட்டு எங்களுக்காக கனவு கண்டவன் பாஞ்சாலி!” பீமன் குரல் தழுதழுத்தது.

“ஆமாம் தம்பியர் நலனே முதல் நோக்கம், அதனால்தானே உங்களை எல்லாம் பணயமாக வைத்தார்!” என்று திரௌபதி ஆங்காரமாகக் கத்தினாள்.

“ஆம், தம்பியர் நலனுக்காக உலகியல் வெற்றியை அடைய நினைத்தவன் ஒரு கட்டத்தில் உலகியல் வெற்றிக்காக தம்பியரைப் பணயம் வைக்கத்தான் செய்தான். அவனும் மனிதன்தான், அது அவனுடைய ஒரு கணத்து மாற்றம், ஒரு கணத்து பலவீனம். சகதேவனை பணயம் வைத்த கணத்தை நாங்களே எதிர்பார்க்கவில்லை, அதனால் மூச்சடைத்து பேச்சடைத்து செயலற்று சிலையாக நிலையழிந்து நின்றோம். யுதிஷ்டிரனுக்கும்  எங்கள் அறிவுரை தேவைப்படும் தருணம் ஒன்று நிகழும், இன்ன செய்யலாம் இன்ன செய்யக்கூடாது என்று நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கும் என்பது அந்தக் கணத்துக்கு முன் எங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டது. எங்கள் இயல்புநிலை திரும்பியபோது அவனைத் தடுக்கும் கணம் கடந்துவிட்டது, அவன் இயல்புநிலை திரும்பியபோது அவனாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை…” என்றான் அர்ஜுனன்.

“ஒரு கண பலவீனம் திரௌபதி, எல்லா வெற்றிகளும் தம்பியருடையது, தானும் ஒரு வெற்றியைப் பெற வேண்டும் என்று விழைந்தான். சூதில் வல்லவனும் கூட, ஆனால் சகுனி அவனை விடவும் வல்லவர் என்பதை அவனால் உய்த்துணர முடியாமல் போவிட்டது…” என்று சகதேவன் பெருமூச்செறிந்தான்.

“பிழைகளே செய்யாதவன் அல்ல; தப்புக் கணக்குகளே போடாதவன் அல்ல.” என்று நகுலன் சொன்னான்.

“உங்கள் பங்கை, அதுவும் கண்ணன் பங்கை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்” என்று பாஞ்சாலி மெதுவான குரலில் சொன்னாள்.

“நல்லவன்தான்; வல்லவன்தான்; பெரும் கனவுகளைக் காண்பவன்தான். அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்று திறமையாகத் திட்டமிட்டு நிறைவேற்றுபவன்தான். ஆனால் அவனால் வரைவுத்திட்டம்தான் போட முடியும், அவற்றை நிறைவேற்ற முடியாது. அதற்குத்தான் கண்ணன் தேவைப்பட்டான். அவனால் மாபெரும் மாளிகைக்கு ஒரு வரைவுத் திட்டம் போட முடியும். அதை எப்படி நிர்மாணிப்பது, அதற்கு எங்கே என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை எல்லாம் பார்த்துக் கொள்ள கண்ணன் வேண்டும். மாளிகையை எழுப்ப நாங்கள், முக்கியமாக இவர்கள் இருவரும் வேண்டும்” என்று நகுலன் சொன்னான்.

“கண்ணன் மூளை, நானும் பீமனும் கரங்கள்,  இவர்கள் இருவரும் கண்கள். யுதிஷ்டிரனே மனம், அவனை எங்களை வழிநடத்தும் ஆத்மா” என்று அர்ஜுனன் சொன்னான்.

“இன்று நினைத்துப் பார்க்கும்போது ஒரே ஒரு குறைதான்.  நாங்கள் உன்னைப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவனுக்குப் புரிய வைத்திருக்கலாம். அவனுக்கும் சுமை குறைந்திருக்கும்” என்று சகதேவன் முனகினான்.

அர்ஜுனன் பிளவுகளின் வழியே தெரிந்த நிலவின் கீற்றை நோக்கினான். “உண்மைதான். எப்போதும் நாங்கள் அடிக்கிற மாதிரி அடிப்போம், அவன் அழுகிற மாதிரி அழுவான். எந்த நெறிமீறலுக்கும் இதே சூத்திரம்தான். எப்போதும் எங்கள் வற்புறுத்தலுக்காகத்தான் நெறி தவறுவது போல நடிப்பான். அப்படி ஒரு பிம்பத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது சுமைதான். தந்தையரிடம் பிள்ளைகளால் வெளிப்படையாக பேசவே முடிவதில்லை. அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் வாயைத் திறந்து பேசிவிட வேண்டும்” என்றான்

“வளர்த்துவானேன் பாஞ்சாலி? அவன் தலைவன் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று பீமன் தன் கையைக் கூப்பினான்.

குகையின் மேலே ஒரு பிளவுக்கு அருகே படுத்திருந்த யுதிஷ்டிரன் எழுந்தான். தூங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டியின் வாயைப் பொத்தி அதை தன் கைகளில் ஏந்திக் கொண்டான். ஓசையில்லாமல் மெதுவாக இறங்கி மலைச் சிகரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் கண்களில் கண்ணீரின் தடம் இருந்தது. அவன் முகம் புன்னகையால் விகசித்திருந்தது.

4 Replies to “சரண் நாங்களே”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.