யானை வெரூஉம்

வரிசையாக சைக்கிள் பெல் சத்தம் கேட்கும். கூடவே ‘தீர்தா தீர்தா’ எனும் குரல்களும். சுந்தரின் கீச்சுக் குரல் மட்டும் தனித்துக் கேட்கும். வீட்டுக் காம்பவுண்டுக்கு முன் ஒரு பெரிய குழு கூடியிருக்கும். ராஜ்குமார், ரமணி, திவாகர், சுரேன், வெற்றிவேல், அழகரசன் மற்றும் தீர்த்தா எனும் நான். ஏழு பேர் கொண்ட குழு தேவை. எந்த விதமான ஆட்டமும் ஏழு பேரை கொண்டு சாத்தியம். கிரிக்கெட் என்றால் சுரேன் தன் பேட்டை எடுத்து வர வேண்டும். பந்து ஒரு விஷயமல்ல. அடித்துப் பிடித்து பாக்கெட் மணி இரண்டு ரூபாய் எல்லாம் ஒன்றானால் பத்து ரூபாய்க்கு ஸ்டம்பர் பந்து. அதில் சின்னதாய் ஓட்டை போட சுந்தரின் அக்கா சுந்தரியிடம் ஊக்கு கேட்கலாம். தாவணியிலோ, அல்லது உடையின் ஏதோ ஒரு பகுதியிலோ குத்தப்பட்டிருக்கும் ஊக்கை கொடுத்துவிட்டு மறக்காமல் வாங்கிக்கொள்வாள். இல்லையேல் ரமணியின் அம்மா தாலியில் வழக்கமாய் இரண்டு மூன்று ஊக்கு வைத்திருப்பார். மூன்று பேர் ஒரு அணி மூன்று பேர் எதிர் அணி. ஒருவன் ஜோக்கர் அல்லது காமன். இரண்டு அணிக்கும் பொது. இரண்டு அணிக்கும் பேட்டிங்க் பவுலிங்க் செய்யலாம். 

கிரிக்கெட் இல்லாது போனால் புட்டு விளையாடுவோம். எந்த ஊரில் இருந்தோ எங்கள் ஊருக்கு வந்து ஒரு வருடம் மட்டும் எங்கள் குழுவில் இருந்து பின் குடும்பமாய் யாருக்கும் தெரியாத ஊருக்கு சென்றுவிட்ட ஹேமந்த் ராவ் மட்டும் ஸெவென் ஸ்டோன்ஸ் என்பான் புட்டு விளையாட்டை. ஆங்கிலத்தில் இருக்கவும் சில நாட்கள் சொல்லித் திரிந்தோம். பின் ஹேமந்த் ராவ் போனதோடு ஸெவன் ஸ்டோன்ஸும் இல்லாமல் போய் புட்டு எனும் வார்த்தையே நிலைத்தது. மூலதனம் பேப்பரை சுற்றி ஸெலோ டேப் கட்டிய பந்து மற்றும் ஏழு சப்பையான கற்கள். ஆனால் புட்டு கிரிக்கெட் இரண்டும் விளையாட சர்ச் க்ரவுண்டுக்கு செல்வதுண்டு. அப்படி செல்ல இயலவில்லையெனில் லாக் அன்ட் கீ, டப்பா – கண்ணா மூச்சி, அதுவும் இல்லையெனில் யாரையாவது சீண்டுவது. சுந்தர் பெரும்பாலான நேரம் சீண்டப்படுவான். சுந்தரை பிலுக்கோண்டு என அழைப்பதுண்டு. அதைச் சொன்னால் சின்ன உருவுடைய சுந்தருக்கு சுல்லென்று கோபம் வரும். கோபமான பார்வை வீசி வாயை முணுமுணுப்பான். ரமணி என்னடா மந்திரம் சொல்றியா என்பான். அழகரசனுக்கு ஒட்டடை என்று பெயர். அவன் முடி அமைப்பு காரணம். ரமணி என்றொரு பெண் எங்கள் வகுப்பில் இருந்தாள். அதனால் ரமணிக்கு அவன் பெயர் மீதே வெறுப்பு. அதனால் அவனை ரமணி என்று சிரித்தபடி அழைத்தால் போதும். என்னை சக்கர என்பார்கள். என் பெயர் தீர்த்தோ சக்ரபர்த்தி. இந்த பெயர் எல்லோரையும் குழப்புவதுண்டு. தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படி பெயர் கிடையாது.  

நான் பிறந்தது கல்கத்தாவில். என் அப்பா இரண்டாம் தலைமுறையாக வங்கிப் பணியில் இருப்பவர். ஆனாலும் அவருக்குக் கிடைத்த முதல் போஸ்டிங் தமிழ்நாடு. பிறந்து ஒரு வயதுக் குழந்தையாக தமிழ்நாடு வந்தவன் நான். வருடத்திற்கு ஒரு முறை கல்கத்தா. தாகூரின் அமர் ஷோனார் பாங்குளா மட்டும்தான் எனக்குத் தெரிந்த பெங்காலிப் பாடல். அதுவும் என் பாட்டி பாடிப் பாடி மனதில் ஏற்றியது. மற்றபடி தமிழ்தான் எனக்கு. வீட்டில் பெங்காலியே தவிர தினம் ஏழு மணி நேரம் கூத்தாடிக் களிக்கும் பள்ளியில் தமிழ்தான். எழுதப் படிக்கச் சரளமாகத் தெரியும். வெஸ்ட் பெங்கால் செல்லும் போதுதான் அந்நியமாக உணர்வதுண்டு. ரஸகுல்லா நன்றாகத்தான் இருக்கும் ஆனால் எனக்கு அய்யங்கார் கடை அல்வா மீது அலாதி ஈர்ப்பு.

விளையாடும் நேரம் போக ஒருவரை ஒருவர் கேலி பேசி சீண்டிச் சிரிக்கும் நேரம் போக எங்களுக்கு செய்வதற்கு எதுவும் இல்லை. ராகுல் கேங் எங்கள் வகுப்பில் இருக்கும் இன்னொரு குழு. நாங்கள் இரண்டு கேங்கும் சண்டையிடுவதில்லை. சண்டை சச்சரவு என்றால் பீ.இ.டி ஸார் சுளுக்கெடுத்துவிடுவார். அதனால் முறைத்துக்கொள்வதோடு சரி. அவ்வளவாக பேசிக்கொள்ள மாட்டோம். ராகுல் கேங் எப்பொழுதும் கிரிக்கெட் பற்றிப் பேசும். நாங்கள் மிஞ்சிப் போனால் ஷக்திமான் பற்றி பேசுவதுண்டு. சுந்தர் குரல் மாற்றி ஜாக்கால் போல் ‘பாஆஆவர்’ என்பான். இது எங்களுக்கு பெரிய குறை. பெரியவர்கள் செய்வது போல் ஏதாவது ஒரு விளையாட்டைப் பற்றி பேசுவது என்பது எங்களுக்கு சாத்தியமே ஆகவில்லை. ராகுல் காங்கிற்கு இது சாத்தியமானது. ஆனால் எங்களுக்கும் பேச ஒரு விஷயம் கிடைத்தது. எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. எப்படி கேபிள் சானல் வழி வந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. டென் ஸ்போர்ட்ஸில் மாலை நான்கு மணியானால் ஒளிபரப்பாகும் டபிள்யு டபிள்யு ஈ – வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயிமென்ட். மெல்ல எங்கள் உலகத்தை ஆக்கிரமித்தது. எங்களுக்கு அது பற்றிப் பேச நிறைய இருந்தது. 

யாரால் அறிமுகப் படுத்தப்பட்டது என்பதற்கு ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் எடுப்பான பல்லுடன் எப்பொழுதும் பளபளக்கும் உதடுகளுடன் இருக்கும் வெற்றிவேல் – அவன் மாமா பார்ப்பதைப்பார்த்து முதன் முதலில் டீ.வீக்கு முன் அமர்ந்து கொடுக்கப்பட்ட பாலை அப்படியே கையில் பிடித்தபடியே மெய்மறந்து அமர்ந்திருந்தான் என ஊகிக்கலாம். ஏனெனில் அவன் தான் எங்கள் வீட்டில் குழுமியிருந்த போது அதிலும் கார்டூன் நெட்வர்க்கில் ‘பவர் ஸோன்’ ஓடிக்கொண்டிருந்த போது எல்லா எதிர்ப்பையும் மீறி டென் ஸ்போர்ட்ஸுக்கு மாற்றியவன். அவன் மாற்றிய போது விளம்பரம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ‘இருங்கடா… ஸெம ஃபைட்டுடா’ என்றவன் எங்கள் உச்ச வசவுக்கு உள்ளானான். பிலுக்கோன்டு எனும் சுந்தர் கட்டுப்பாட்டை இழந்து மயிரு எனும் வார்த்தையை உதிர்த்தான். அந்த கணம் ஷோ துவங்கியது. நெருப்பு வெடிக்க, ஒரு ஈவிலான இசையுடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி ஒரு அரக்கன் நடந்து வந்தான். கெய்ன் என்பது அந்த அரக்கனின் பெயர். (கெய்ன் அன்டர்டேக்கரின் தம்பியா என்பது தீராத விவாதமாக நெடுநாள் நீடித்தது). அன்று கேன் எனும் அரக்கனுக்கும் ஒரு சோனிப்பத்தானுக்கும் ஆட்டம். அலேக்காக இடுப்போடு தூக்கி நச் என்று தரையில் அடித்தார். கயிற்றில் மோதி வந்து ஒரு ஜம்ப் படித்து கீழ்த்தொடையால் படுத்திருப்பவனை நசுக்கினார். சோனிப்பத்தானும் அடித்தார். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. ஓடித் தாக்க வந்த சோனிப்பத்தானின் முகத்தில் காலை ஓங்கி ஒரு தாங்கல். மயங்கி கிறங்கி எழும் சோனிப்பத்தானுக்கு ஒரு சோக்ஸ்லாம். சோக் என்றால் கழுத்தைப் பிடிப்பது ஸ்லாம் என்றால் ஓங்கி அரைவது. ஒற்றைக் கையால் கழுத்தைப் பிடித்து தலைக்கு மேல் தூக்கி முதகு நிலம் பட அரைவது. அடுத்து பின்ஃபால். ஒன்று இரண்டு மூன்று நொடிகளுக்கு நிலத்தில் இரண்டு தோள் பதிய கிடத்தினால் வெற்றி. அன்று கேன் வெற்றி பெற்றபின் இரண்டு கையை வான் நோக்கி உயர்த்தினார். எதையோ கஷ்டப்பட்டு தூக்குவது போல் அந்த அசைவு. பின் நிலம் நோக்கி தடார் என இறக்கவும் ரிங்கின் நான்கு மூளையிலிருந்து சிவந்த நெருப்பு பீறிக்கொண்டு அடிப்பதோடு அந்த ஈவிலான இசையும் பெருகியது. நாங்கள் எல்லாம் ஆடி அசந்துபோய் அமர்ந்திருந்தோம். வெற்றிவேலைத் திட்ட எழுந்த பிலுக்கோண்டு அப்படியே நின்றமேனியில் முழு ஆட்டத்தையும் பார்த்திருந்தான். 

அன்று தொடங்கி தினமும் நான்கு மணிக்கு பள்ளி விட்டதும் அடித்துப் பறந்து எங்கள் வீட்டில் ரெஸ்லிங் பார்ப்பது வழக்கமானது. மெல்ல மெல்ல பெயர்கள் அறிமுகமாயின கேன், அன்டர்டேக்கர், ராக், ஹல்க் ஹோகன், கோல்ட்பர்க், ட்ரிப்பிள் ஹெச், ஷான் மைக்கெல்ஸ், பிக் ஷோ, ப்ராக் லெஸ்னர், கர்ட் ஆங்கிள் (குர்ட் ஆங்கிளா கர்ட் ஆங்கிளா என்பது ஒரு தீர்வு காணாமலே போனது), கோல்ட் டஸ்ட், புக்கர் டீ, ஆர் வி டி, ஜெஃப் ஹார்டி, மேட் ஹார்டி, எடி க்வுரேரோ, சாவோ க்வேரெரோ, எட்ஜ், ரைனோ, ரிக்கிஷீ, ரே மிஸ்டேரியோ…. இந்த பட்டியல் எனக்கே ஆச்சர்யம் தரும் அளவுக்கு நீள்கிறது. இன்னும் ஒரு ஐம்பது பெயர்களை என்னால் சொல்ல முடியும். எத்தனையோ ரெஸ்லர்ஸ் வந்திருந்தாலும் எங்கள் ஒட்டு மொத்த குழுவில் ஒருமனதான ஆதரவைப் பெற்றது ஒரே ஒரு பெயர்தான். ஏன் என் தாத்தா தேவ் சக்ரபர்த்தி கூட அந்த ஒரு பெயருக்கு விசிறி. க்ரிஸ் பெனாய்ட்.

பிலுக்கோண்டு செய்யும் சேஷ்டைகள் நினைவுக்கு வருகின்றன. வாயிலேயே க்றீஸ் பெனாய்ட்டின் என்ட்ரன்ஸ் ம்யூசிக்கை கொடுப்பான். ‘ஜகு ஜகு ஜான் ஜகு ஜகுஜான்.. ஜகு ஜகு ஜான் ஜகு ஜகு ஜான்’. பிலுக்கோண்டு மட்டும் தன்னை க்றிஸ் பெனாய்ட்டின் வெறியனாக எப்படியோ நிறுவிக்கொண்டான். ஹெட் மாஸ்டர் ரூமிலிருந்து பச்சை பால் பாயின்ட் பேனாவைத் திருடி கையில்  க்றிஸ் பெனாய்ட் என்று பச்சைக் குத்திக் கொண்டான். எங்கள் குழுவை ஒருமுகமாக க்றிஸ் பெனாய்ட் ரசிகனாக்கியதில் பிலுக்கோண்டுவின் பங்கு அதிகம். 

க்றிஸ் பெனாய்ட் குள்ளமான ஆனால் கரவு சரவான சதைக்கட்டுடன் கூடிய உடல் உடையவர். ஆஜானபாகுவான காலடிகளில் அவரால் நடக்க முடியாது. ஆக தன் வீரியத்தை வேகமான நடை மற்றும் ஓட்டத்தின் மூலம் வெளிப்படுத்துவார். நாங்கள் ரெஸ்லிங் பார்க்கத் துவங்கிய காலத்தில் மிகவும் சாதாரணமான பெயர் தெரியாத நபர்களுடனேயே ஆட்டம் இருந்தது பெனாய்ட்டிற்கு. கொஞ்ச காலம் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை எடி க்வேரேரோவுடன் பகிர்ந்து கொண்டதாய் நினைவு. ஆனால் திடீரென மேலெழுந்து வந்தார் பெனாய்ட். அவருக்கும் ப்ராக் லெஸ்னருக்குமான ஆட்டம் நாங்கள் மறக்க முடியாதது. ப்ராக்கின் உடல் அமைப்பு முக பாவனை எல்லாமே ஒரு அரக்கனுக்கானது. அந்த பெரிய உயர்ந்த உடலை குள்ளமான க்றிஸ் பெனாய்ட் ஒடி ஓடி அடித்தது நன்றாக நினைவுள்ளது. அந்த ஆட்டத்திற்குப் பின்தான் க்றிஸ் பெனாய்ட்டிற்கு ஒட்டு மொத்த குழுவும் ரசிகனானது.

2004 ராயல் ரம்பிள் நடந்தது. ஒவ்வொருவராக குறிப்பிட்ட கால இடைவெளியில் ரிங்கிற்குள் வருவார்கள். ரிங்கை விட்டு தூக்கி வீசப்பட்டு இரண்டு கால்களும் ரிங்கிற்கு வெளியில் நிலம் தொட்டால் தோல்வி. அந்த வருடம் முதன் முதலில் உள் வந்தவர் க்றிஸ் பெனாய்ட். வரிசையாக வந்து கொண்டே இருந்தனர். ஒரு புள்ளியில் சுமார் இருவது மல்லர்கள் ஒரே மேடையில். எப்படியும் க்றிஸ் பெனாய்ட் வெளியேற்றப்பட்டுவிடுவார். ஏனெனில் ராயல் ரம்பிள் வகை ஆட்டம் பேருடலர்களுக்கானது. ஆனால் ஆச்சர்யப்படுத்தும் வகையில் கடைசி எட்டு நபர் வரையில் இருந்தார். பின் ஆறு.. நான்கு… கடைசியாக மேடையில் இருவர். பிக் ஷோ மற்றும் க்றிஸ் பெனாய்ட். பிலுக்கோண்டு சுமார் இரண்டு மணி நேரமாக சிறுநீர் கழிக்காமல் பார்த்திருந்தான் அன்று.  ஒரு பக்கம் பிக் ஷோ – பெயரே சொல்லிவிடும். மலை ஒரு பெரு மலை பிக் ஷோ. எதிர் பக்கம் சின்னதாய் கோபமான க்றிஸ் பெனாய்ட். பரியது கூர்ங்கோட்டதாயினும் யானை வெரூஉம் புலி தாக்குறின் எனும் குறளை இந்தச் சண்டையை வைத்துதான் புரிந்துகொண்டேன். உச்சமான சண்டை. கடைசியாக கயிற்றிற்கு வெளிப்புறம் க்றிஸ் பெனாய்ட். முடிந்தது கதை என நினைத்தேன். வெற்றி சாத்தியமே இல்லை. ஆனால் பெனாய்ட் பிக் ஷோவின் கழுத்தை கைக்குள் அடக்கிப் பிடித்து காலை கயிற்றில் பின்னலாய்க் கோத்துக்கொண்டு தூக்கி அரினாவிற்கு வெளியே வீசினார். நாங்கள் வெடித்துக் கத்தினோம் அன்று. இதெல்லாம் சும்மா ட்ராமா என பலர் சொல்லியும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை. அடுத்தடுத்து க்றிஸ் பெனாய்ட் ஜெயித்தார். ஒரு புள்ளியில் ட்ரிபிள் ஹெச்சை தோற்கடித்து வேர்ல்ட் ஹெவி வெயிட் சேம்பியன் ஆனார். காலாண்டு அரையாண்டு போன்ற பரீட்சைகளினால் சற்றே தடைப்படும் எங்கள் ரெஸ்லிங் மோகத்தை மொத்தமாக லீவில் சரிக்கட்டிக்கொள்வோம். 

இப்படி தொடர்ச்சியாக எங்கள் ஆதரவுக்கு உள்ளான க்றிஸ் பெனாய்ட் திடீரென மாயமாய் மறைந்தார்.  நன்றாக நினைவு கூற முயன்றும் நினைவில்லை. கடைசியாக டிரிப்பிள் ஹெச்சுடனான ஒரு ஆட்டத்தில் சாம்பியன்ஷிப்பை இழந்ததாக நினைவு. அதன் பின் க்றிஸ் பெனய்ட்டை திரையில் பார்க்கவே இல்லை. பின் யார் யாரோ ஹெவி வெயிட் சாம்பியன் ஷிப்பை ஜெயித்தார்கள்- ரேன்டி ஆர்ட்டன், பட்டீஸ்டா, எட்ஜ் – ஆனால் க்றிஸ் பெனாய்ட்டைப் போல் வென்றவர் இல்லை. வெற்றி வேல் சொன்னான் ஒரு நாள்,

“ஓரு வேல க்றிஸ் பெனாய்ட் செத்து போயிருப்பாரோ?”

“ச ச.. அப்டி இருந்தா எல்லாரும் பேசியிருப்பாங்க… எடி க்வேரேரோ செத்தப்ப பிக் ஷோ அழுதான் தெரியுமா… ” 

மெல்ல அழகரசன் ஸ்கூல் ஹாக்கி டீமில் சேர்ந்திருந்தான். அவனால் முன் போல் ரெஸ்லிங் பார்க்க முடியவில்லை. மெல்ல ஆர்வமிழந்தான். ரமணியும் அப்படித்தான் -‘ எல்லாம் டூப்பாம்’ என்றுவிட்டான். நானும் பிலுக்கோண்டுவும் எவ்வளவோ முயன்றோம் கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிலிருந்த்து ஒன்பதாம் வகுப்பு வரை இருந்த ரெஸ்லிங் மோகத்தை கட்டிக்காக்க முடியவில்லை. நானும் பிலுக்கோண்டு மட்டும் உறுதியாக இருந்தோம்.

எட்ஜ் சாம்பியனாக இருந்த போது என் அப்பாவுக்கு கல்கத்தாவிற்கு மாற்றல் வந்தது. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தோம். எனக்கு மீசை லேசாக அரும்பியிருந்தது. ஆக அழ முடியாது எனும் கட்டாயம் வேறு. என் அக்கா வெஸ்ட் பெங்காலில் படித்தவள் ஒரு வருடமாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறாள். குடும்பமே கல்கத்தா திரும்பும் குதூகலத்தில் இருந்தது. நான் பேசிப்பார்த்தேன். ஒரு பயனும் இல்லை. வாழ்க்கை இனித்துக்கொண்டே இருக்கக் கூடியதல்ல என்பது அந்த காலத்தில்தான் அறிமுகமானது. என்னை ரயிலேற்றிவிட பிலுக்கோண்டு மட்டும்தான் வந்திருந்தான். மனம் கனத்துக் கிடந்தாலும் அழவே கூடாது என்பதில் உறுதியாய் இருந்தோம். ரயில் ஒரு மணி தாமதாமானது. பின் மேலும் ஒரு மணி நேரமாகும் என அறிவிப்பு வந்தது. ஏன் வலியின் கணங்கள் நீள வேண்டும், இந்த ரயில் வந்தால்தான் என்ன என்றிருந்தது எனக்கு. ரயில் வராமலே போய் ஒரு ஆச்சர்யமான திருப்பமாய், 2004 ராயல் ரம்பிளில் க்றீஸ் பெனாய்ட் ஜெயித்தது போல் நாங்கள் தமிழ் நாட்டிலேயே இருந்து விடுவோம் என்றுகூட யோசித்தேன்.

பிலுக்கோண்டு, ‘உன்ட்ட ஒன்னு சொல்லணும்டா’ என்றான்.

‘சொல்லுடா’

‘இங்க வேணாம் கொஞ்சம்  நடந்து அப்டி போவோம்’ 

மெல்ல நடந்து ஆள் இல்லாத ப்ளாட்பாரத்தின் நுனிக்குச் சென்றோம்.

‘க்றிஸ் பெனாய்ட் செத்துடானாம்டா’ என்றான்

நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு வயிற்றிற்குள் சுருக்கென்றது.

‘அப்டிலாம் இருக்காது’ என்றேன்.

‘அன்னக்கி மேட்ச் இருந்துதாம். அதக்கூட கேன்ஸல் பண்ணிட்டு வீட்டுக்குப் போய் தன்னோட மனைவி புள்ளைய கொன்னுட்டு தானும் சூசைட் பண்ணிக்கிட்டானாம்’

இது ஏதோ ஹாலிவுட் பேய்க்கதையில் வருவது போல இருந்தது. நான் நம்பவில்லை. பிலுக்கோண்டு தொடர்ந்தான்,

‘ஜிம்குள்ள போய் கழுத்துல கயிற சுத்திட்டு, கையில ஹெவி வெயிட் லிஃப்ட் பண்ணிட்டு தொப்புனு வெயிட்ட ரிலீஸ் பண்ணினாராம், கழுத்து ஒடஞ்சு உடனே இறந்துட்டாராம்…’

இங்கு பரியதும் கூர்ங்கோட்டதுமான யானை க்றிஸ் பெனாய்ட் என்று பட்டது. புலி?  

‘உனக்கு எப்டிடா இதெல்லாம் தெரியும்’

‘என் அக்கா கம்ப்யூட்டர் வெச்சிருக்குல… ப்ரவுஸ் பண்ணேன்டா’

‘அன்டர்டேக்கர் செத்து போய் திரும்ப வரது மாதிரி…’

பிலுக்கோண்டு உனக்கு புத்தி மழுங்கிவிட்டதா என்பது போல் பார்த்தான்.

எங்கள் இருவருக்கிடையான மௌனம் மெல்ல எங்களை முழு விசையுடம் ஆளரவமற்ற பாழுக்குள் சுழற்றி உள் இழுத்தது. ரயிலின் குரல். என் அக்கா என்னைத் தேடி வந்திருந்தாள்.ரயிலில் ஜன்னல் கம்பியின் வழி முகத்தை திணித்துக்கொண்டு பிலுக்கோண்டுவை பார்த்திருந்தேன். ரயில் மெல்ல வேகமெடுத்தது. ஏதோ நினைத்தவன் தட தட வென என் ஜன்னலை நோக்கி செருப்பதிர ஓடி வந்தான்.

‘என்னடா’ என்றேன்

மூச்சிறைக்க ஓடியபடி ‘இஸ்ஸிஸ்ஸுமர்ர்ர்ர்ர் த ராக் ஈஸ் கோகே’ என சிரித்தபடி கத்திவிட்டு ராக்கை போல் ஒரு கையை மட்டும் உயர்த்தினான். நானும் சிரித்தேன். பிலுக்கோண்டு உயர்த்திய கைகளோடு ஓட்டத்தை வேகம் குறைத்து நின்றுவிட்டான். கடைசியாக பிலுக்கோண்டுவைப் பார்த்த போது மங்கலான உருவமாய் அணிந்திருந்த ஆடையின் நிறமாக ஒரு சிரிப்பாக தெரிந்தான்.   கண்களில் நீர் நிரம்பியது. அம்மா மடியில் விழுந்தபோது  அழுகையினூடே ஒரு கேள்வி எழுந்தது ‘யானையை ஏன் புலி தாக்க வேண்டும்?’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.