கலி 

லியபெருமாள் கண்டோன்மெண்ட் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான். சீருடை அணிந்தும் அணியாமலும் இருந்த ஆட்டோ டிரைவர்கள் அவன் மீது பாய்ந்தார்கள். “எங்க சார் போகணும்?” என்று பல குரல்கள் பல மொழிகளில் அவனை வந்தடைந்தன.அவர்களைப் 

பார்த்து “ஹென்னூர் போகணும். எவ்வளவு?” என்று கேட்டான். ஒருவன் “முன்னூறு ரூபாய் கொடுங்க சார்” என்றான். அவன் மற்றவர்களைப் பார்த்தான். அவர்கள் தங்கள் தோழனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய விரும்பாதவர்களைப் போல மௌனம் சாதித்தார்கள்.

“சரி, வழியை விடு. எனக்கும் இந்த ஊர்தான். நான் நடந்து போய்க்கிறேன்” என்றான் அவன்.

“என்னா சார்! நடந்து போறீங்களா? ஏழு கிலோமீட்டரா? பாத்தா ஹீரோ மாதிரி இருக்கீங்க. நீங்க கூலி கொடுத்தா ஒரு வயிறு நிறையும் சார்” என்றான் அவர்களில் ஒருவன்.

“சரி, இதைப் பார்” என்று கையிலிருந்த கை பேசியைத் தட்டி சில வினாடிகள் காத்திருந்து கை பேசியைக் காண்பித்தான்.

“என்ன போட்டிருக்கு?”

“ஒலால்லாம் அப்படித்தான் சார் போடுவாங்க. நாங்க திரும்பி வரப்போ சவாரியே கிடைக்காது சார்” என்றான்.

“எவ்வளவு போட்டிருக்கு?” என்று மறுபடியும் கேட்டான் கலியபெருமாள் 

“நூத்தி அம்பது” என்றான் டிரைவர் தயக்கத்துடன்.

“ம், நீ டபுள் சார்ஜ் கேக்கறே. ஓலா கேக்கற சார்ஜை விட இருபத்தி அஞ்சு ரூபாய் மேலே போட்டுத் தரேன். யாராவது வரீங்களா?” 

அவனிடம் முதலில் வந்தவன் “சரி, இருநூறாச்சும்…”

கலியபெருமாள் மறுத்துத் தலையை ஆட்டினான். “சரி வாங்க” என்று அந்த டிரைவர் அவனைத் தன் ஆட்டோ நிற்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றான்.

ஆட்டோவில் உட்கார்ந்து போகும் போது கலியபெருமாளுக்குத் தன்னை ஒருவன் ஹீரோ என்று அழைத்தது ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு ஏற்பட்டது. எதை வைத்து அப்படிச் சொன்னான்? தில்லி வாழ்க்கை தந்த உடலின் செழிப்பான தோரணையும் அணிந்திருந்த மடிப்புக் கலையாத உடைகளுமா? பத்து வருஷங்களுக்கு முன்னால்  யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இதே ஸ்டேஷனிலிருந்து ஒரு அழுக்குப் பேன்ட்டும், அழுக்குச் சட்டையும், வார் அறுந்து போகும் நிலையில் இருந்த செருப்புமாக  ஊரை விட்டுச் சென்றான். ரிசர்வேஷன் இல்லாத இரண்டாம் வகுப்புப் பெட்டியில் நின்று கொண்டே செல்ல வேண்டியிருந்த பிரயாணம். இன்று அவன் சென்னையிலிருந்து இரண்டாம் வகுப்பு ஏ.சி. சேர் காரில் வந்தான். நாயகத்தைப்  பார்க்க வேண்டும் என்று வளர்மதியையும்.

காலம் அவன் வாழ்க்கையை வெகுவாகப் புரட்டிப் போட்டு விட்டது. இரண்டு வருடங்கள் சென்னையில் தடுமாறி விழுந்து விழுந்து எழுந்த நாள்கள். அவனுக்குக் காரோட்டத் தெரிந்திருந்ததால் டாக்சி நடத்தும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ‘வேலையாள் வயிற்றில் அடித்துச் செல்வம் சேர்ப்பது எப்படி?’ என்று அந்த நிறுவன முதலாளி நன்கு கற்றுத் தேர்ந்திருந்தான். ஆனால் ஒரு நாள்,  அதிர்ஷ்டம் ஒரு வயதான பெண்மணியின் உருவில் கலியபெருமாளை நெருங்கியது. திருவான்மியூரில் இறக்கி விட வேண்டும் என்று மயிலாப்பூரில் ஏறினாள். ஆனால் திருவான்மியூர் வந்ததும் எந்தத் தெரு என்று அவளுக்குக் குழப்பம் ஏற்பட்டு சுத்தோ சுத்து  என்று அப்படிச் சுத்தினார்கள். எந்தத் தெருவில் நுழைந்தாலும் அதுதான் சரியான தெரு என்று சொல்லிக் கடைசியில் அது இல்லை என்றாகி விடும். கடைசியில் கலியபெருமாள் அந்தப் பெண்மணியிடம் அவள் போக வேண்டிய வீட்டுக்காரர்களின் போன் நம்பர் இருக்கிறதா என்று கேட்டு வாங்கி ஒரு கடை முன்னால் வண்டியை நிறுத்தினான். அங்கிருந்து போன் செய்து அந்த வயதான பெண்மணியைச் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தான். அரை மணிக்கும் மேலாக அவள் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தாள். வீட்டை அடைந்ததும் அவனுக்கு நன்றி கூறி விட்டுக் கையிலிருந்த  பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு வீட்டுக்குள் சென்று மறைந்தாள். 

அவன் மிகவும் பசிக்கிறது என்று பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலுக்குச் சென்று மதிய உணவை உண்டான். திரும்ப வந்து காரைக் கிளப்பும் போது பின் சீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அங்குதான் அந்த வயதான அம்மாள் முன்பு  உட்கார்ந்திருந்தாள்  அவன் சந்தேகப்பட்டுப் பின் பக்கக் கதவைத் திறந்து சீட்டின் அடியில் பார்த்தான். அங்கே ஒரு வெள்ளைப் பை காணப்பட்டது. எடுத்தான். அதிலிருந்துதான் அந்தப் பழைய ஒலி கேட்டது. அந்தம்மாவின் வீட்டிலிருந்து அவன் ஓட்டலுக்குச் சென்ற போது இந்தச் சத்தம் கேட்கவில்லையே என்று நினைத்தான். இப்போது அந்தப் பை சாய்ந்து கீழே உருண்டதில் சத்தம் வந்திருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. திறந்து பார்த்தான். அவனுக்கு மூச்சடைக்கும் போல இருந்தது. ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணினான். பத்து கட்டுகள். ஐந்து லட்சம் ரூபாய்! பையைத் திறந்து பார்த்த போது நகைக்கடைப் பெட்டிகள் இரண்டு காணப்பட்டன. அவற்றைத் திறந்து பார்க்க அவன் விரும்பவில்லை.

அவன் சற்றுப் பதற்றத்துடன் அந்த அம்மாளை இறக்கி விட்ட வீட்டுக்குச் சென்றான். வாசலில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் நின்று கொண்டிருந்தது.    அவனுடைய வண்டியில் வந்த  அந்தப் பெண்மணியும் ஒரு ஆணும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது போலக் காட்சியளித்து உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தார்கள். 

கலியமூர்த்தியைப் பார்த்ததும் “இதோ அந்த டிரைவர்!” என்று கூவிக் கொண்டே  அந்த அம்மாள் அவனை நோக்கி ஓடி வந்தாள்.      

அவள் வந்த வேகத்தில் கீழே விழுந்து விடுவாள் போலிருந்தது. “மெல்ல, மெல்ல அம்மா!” என்று அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவளிடம் கொண்டு வந்திருந்த பையைக் கொடுத்தான். திறந்து பார்த்து “அப்பா! வெங்கடாஜலபதி காப்பாத்தினார்” என்றாள்.

“எல்லாம் சரியாக இருக்கான்னு ஒரு தடவை பாத்திருங்க” என்றான் கலியபெருமாள்.

அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு அந்தப் பையைக், கூட இருந்த ஆணிடம் கொடுத்தாள்.  பின்னர் கலியபெருமாளிடம் “நீயும் உள்ளே வா!” என்று கூட்டிக் கொண்டு போனாள். எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்து விட்டு சரியாக இருக்கிறது என்று அந்த ஆண் கூறினார். உள்ளே சென்று ஒரு கிளாசில் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்தார். 

“இப்ப எனக்கு வெங்கடாஜலபதி நீதான்” என்று அந்த அம்மாள் கூறினாள். கலியபெருமாள் வெட்கத்துடன் சிரித்தான்.

“உன் பேரென்ன?”

“கலியபெருமாள்” என்றான் கலியபெருமாள்.

“நான்தான் சொன்னேனே! நீ பெருமாள்தான்னு” என்று அவள் சிரித்தாள்.

பிறகு “இந்த ஊர்தானா அப்பா உனக்கு? அம்மாப்பால்லாம்  உன்கூட இருக்காங்களா?  என்று கேட்டாள்.

“ஊரு பெங்களூரு. அப்பா அம்மா ரெண்டு பேரும் மேலே போய்ச் சேந்துட்டாங்க.”     

“அடடா!” என்றாள் அவள். தொடர்ந்து “என் பேர் சாரதா. டெல்லிலே இருக்கேன். இங்கே பேத்திக்குக்  கல்யாணம் நடக்கப் போறதுன்னு வந்தேன். பேங்கிலேந்து நகையும் பணமும் எடுத்துண்டு வரச்சே இப்படி ஆயிடுத்து. ஆனா அவன் எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுக் கொடுத்தானே. உன்னோட வண்டியிலே நான் ஏறினது எப்பவோ செஞ்ச புண்ணியம்தான்” என்று தழுதழுத்தாள்.

அவன் பேசாமல் நின்றான்.

 “நீ இப்போ இங்க யார் கிட்டயாவது வேலையிலே இருக்கியா?” 

 வேலை பார்த்து வருமிடத்தைச் சொன்னான். 

‘சம்பளம் என்ன?’ என்று கேட்டாள். 

சொன்னான்.

“அவ்வளவுதானா? எப்படிச் சமாளிக்கறே? கல்யாணம் ஆயிடுத்தா?”

“நான் வாங்குற சம்பளம் எனக்கே பத்தாது. இதிலே எப்பிடி இன்னொரு ஆளையும் வச்சுக் காப்பாத்துறது?’ என்று அவன் சிரித்தான்.

“தனிக்கட்டையா? நல்லதாப்  போச்சு” என்றாள்.

அவன் வியப்புடன் அவளைப் பார்த்தான். 

“இப்ப இருக்கற ஆள் கிட்டேயிருந்து வேலையை விட்டு வரதுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும் உனக்கு?”

“இப்பப் போயி காரையும் சாவியையும் அவரு கிட்டே கொடுத்தா இன்னிவரைக்கும் தர வேண்டிய  சம்பளத்தைக் குடுத்து அனுப்பிச்சிருவாரு” என்று கலியபெருமாள் சிரித்தான். “காரு ஷெட்டுலே தங்குன்னு எடம் குடுத்தாரு. அதனாலே அதையும் காலி பண்ண வேண்டியதுதான்.”

“சரி, என் கூட டெல்லிக்கு வரையா?”

அவன் திடுக்கிட்டு சாரதாவைப் பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த கனிவு அவனுக்கு வேண்டியிருந்தது.

“சரி, நீ ஒண்ணும் பதில் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்திக்க வாண்டாம். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு எடுத்துக்கறேன்” என்று சிரித்தாள்.  பக்கத்தில் நின்றவரைத் தன் தம்பி என்று அறிமுகப்படுத்தினாள்.

“நாளைக்குக் காலம்பற ஒன்பது மணிக்கு வந்துடு. வாசல்லே கார் நிக்கறதே, அது இவரோடதுதான். நான் இங்க இருக்கற பத்து நாளும் நீதான் என்னோட டிரைவர். மாடிலே ஒரு ரூம் இருக்கு. அங்கதான் உனக்குக் குளியல் தூக்கம் எல்லாம். சாப்பிடறது எல்லாம் இங்கேதான் எங்களோட..பத்து நாள் கழிச்சு டெல்லி போறோம். சரியா?” என்றாள்.

அவன் அவள் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் ‘தடா’லென்று அவள் காலில் விழுந்தான். கைகளால் அவளது பாதங்களைப் பற்றிக் கொண்டான். அவன் உடம்பு குலுங்கிற்று.

“சரி, சரி, எழுந்திரு” என்று அவள் குனிந்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தாள்

அவன் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். 

காரை ஓனரிடம் ஒப்படைத்து விட்டு ஷெட்டுக்கு வந்து அறையைக் காலி செய்யும் வேலையில் இறங்கினான். காலையில் சீக்கிரம் எழுந்து போக வேண்டும் என்று நினைத்தபடியே ஜமுக்காளத்தைத் தரையில் விரித்துப் படுத்துக் கொண்டான். தலைக்கு மேலும் பக்கவாட்டிலும் தெரிந்த சுவர்களைப் பார்த்தான். இவைகளுடன் இரண்டு வருடமாகப் பழகிய  பாசம்  மனதைப்  பிசைந்தது. ஊரை விட்டு வரும் போது கூட இப்படித்தான் இருந்தது. ஆனால்  அதற்கு முக்கிய காரணம் வளர்மதிதான். இன்று அந்த அம்மாள் கலியாணம் ஆகி விட்டதா என்று கேட்ட போது சட்டென்று அவன் மனதில் தோன்றி மறைந்தது வளர்மதிதான். இப்போதும் அவன் நினைவில் மஞ்சளும் லேசான பழுப்பும் கலந்த அவள் உருவம் வருகிறது. அவளும் அவனும் நாயகமும் ஒரே ஸ்கூலில் படித்தார்கள். நாயகம் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்தான். அவன் அப்பா சப்-ரிஜிஸ்திரார் ஆபீசில் இருந்தார். கே.ஆர். புரத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை ரிஜிஸ்தர் பண்ணும் போது அவர் இடது கையால் வாங்கியது அவரது இரண்டடுக்கு வீட்டின் ஒவ்வொரு செங்கல் மீதும் படர்ந்திருந்தது.  நாயகம் காலேஜுக்குப் போன போது பொருளாதாரச் சூழ்நிலையால் அவனும் வளர்மதியும் மேலே படிக்கவில்லை.

ஆனாலும் நட்பின் தொடர்பில் எப்போதும் இருந்தார்கள். நாயகத்தின் அப்பாவின் செல்வாக்கால் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது. 

அவள் மீது அவனுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை  அவளுக்கு இருந்திருந்தால், அவளும் காட்டிக் கொள்ளவில்லை. 

நாயகம்தான் ஒரு நாள் “டேய் கலியா, உங்காளை எங்கடா இன்னிக்கிக் காணோம்?” என்று சிரித்தான்.

கலியபெருமாள் திடுக்கிட்டு நண்பனைப் பார்த்தான்.

“என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறே? நீ வளர்மதிக்கு லைன் போடறேல்லே?”

“ஏய், அநியாயமா ஏதாவது கதை கட்டி விடாதேடா. பொம்பளைப் புள்ளே பேரு கெட்டுப் போயிரும்.”  

“அப்படின்னா நீ அதை லவ் பண்ணலேன்னு சொல்லு பாப்போம்.” 

அவன் கொஞ்சமும் தயங்காமல் நாயகம் நினைப்பது தவறு என்று சொல்லி விட்டான். கலியபெருமாளும் வளர்மதியும் தங்கள்  

இருவரின் குடும்பத்தைப் பற்றி, பணக் கஷ்டத்தைப் பற்றி, பள்ளியில் உடன் படிப்பவர்களை பற்றி, அவர்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை கதாநாயகிகளைப் பற்றி என்று எதைப்பற்றி யெல்லாமோ என்னவெல்லாமோ பேசியிருக்கிறார்கள். ஆனால் காதல் நேசம் என்று ஒரு வார்த்தை கூடப் பரிமாறிக் கொண்டதில்லை. அதனால்தான் அவன் நாயகத்திடம் இல்லை என்று உறுதியாகக் கூறி விட்டான்.  

மறுநாள் மாலை அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பிடிஎஸ் கார்டன் அருகே வளர்மதி  நின்று கொண்டிருந்தாள். 

“மதி! நீ எங்கடா இங்க?”

அவள் மெயின் ரோட்டிலிருந்து உள்ளே சென்ற சிறிய தெருவிற்குள்  சென்றாள். இன்னும் விரிவடையாத இடமென்பதால் மரங்களும் செடி கொடிகளும் வெட்டப்படாத  நிலங்களாகக் காட்சியளித்தன. ஆங்காங்கே கல் மரங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. அவன் அவளைப் பின் தொடர்ந்தான். தெருவில் அதிக நடமாட்டமில்லை. 

அவள் ஒரு மரத்தின் அடியில் நின்றாள். அவனிடம் “நீ நாயகத்திட்டே நேத்திக்கி என்ன சொன்னே?” என்று கேட்டாள்.  

அவன் உடனடியாக என்ன பதில் சொல்வதென்று திகைத்து நின்றான்.  

“என்னைக் கண்டாலே உனக்குப் பிடிக்கலேன்னு சொன்னியாமே?”

“ஐயையோ! பொய். பொய். நான் எங்கே அப்பிடிச் சொன்னேன்?”  

அவள் மேலே பேச வாயெடுக்கும் முன் அவன் தனக்கும் நாயகத்துக்குமிடையே நடந்த உரையாடலை விவரித்தான்.

“அப்போ உன் மனசிலே எனக்கு எடமில்லே. அப்படித்தானே?”

“நீ உன் மனசிலே இருக்கறதை என் கிட்டே சொல்லாதப்போ நான் எப்பிடி அவன் கிட்டே ஆமான்னு சொல்லுறது?”

“முழியப் பாரு, திரு திருன்னு” என்று அவனை நெருங்கி வந்து செல்லமாகக் கன்னத்தில் குத்தினாள். அவன் இடது கை விரல்களைத் தன் வலது கை விரல்களில் கோர்த்துக் கொண்டு இறுக்கினாள். அவன் உடலில் ஒருவித சிலிர்ப்பு ஓடிற்று

“நாயகம் இப்பிடி வந்து கதையை மாத்திப் போடுவான்னு நான் நினைக்கலே” என்றான் கலியபெருமாள்.

“அவன் கேக்க  ஆசப்பட்டதை நீ சொன்னேன்னு அவனுக்கு ரொம்ப சந்தோசமாயிட்டுது” என்றாள் வளர்மதி.

“நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலே”

“உனக்குப் புரியலேன்னா நல்லா யோசிச்சுப் புரிஞ்சுக்கப் பாரு” என்று சொல்லி விட்டு அவள் வீட்டுப் பக்கம் சென்றாள்.         

அறை சில்லென்று இருந்தது. தில்லியின் கடித்து உதறும் குளிரை விட இந்த ஊரின் கொஞ்சலான குளிர் அவனுக்குப் பிடித்திருந்தது. என்ன இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊராயிற்றே என்று தனக்குள் சிரித்துக் கொண்டான் கை பேசியைப் பார்த்து மணி ஐந்தரை  என்று தெரிந்து கொண்டான். ஒயோ அறையின் ஜன்னல் வழியே பார்த்த போது கட்டிடத்தைச் சுற்றியிருந்த பச்சைப் புல்வெளியும் காற்றிலாடும் மரங்களும் தெரிந்தன. தூரத்து மாடிக் கட்டிடங்கள் இப்போதே பெய்ய ஆரம்பித்து விட்ட வெண்பனியில் மறைந்து குளிக்கச் சென்று விட்டன.  சென்னையில் இருந்த ஒரு வீட்டை விற்க சாரதா கிளம்பி வந்த போது அவனும் உடன் வந்தான். டெல்லிக்குச் சென்ற இரண்டு வருடங்களில் அவன் ஹிந்தியையும் கம்ப்யூட்டர் தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு சாரதாவின் வலது கையாக ஆகி விட்டான். கரோல்பாக். கோல் மார்க்கெட், பஹாட்கஞ்ச் என்று மூன்று இடங்களில் சாரதா கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் நடத்தி வந்தாள். அவளது காரோட்டியாகவும்,கம்ப்யூட்டர் பள்ளிகளின் மேற்பார்வையாளனாகவும் இருந்தான். 

உடம்பிலும் மனதிலும் மூளையிலும் கற்றதன் செழிப்பு பரவியிருந்தது. வீட்டை விற்கும் வேலை முடிந்ததும் கலியபெருமாள் சாரதாவிடம் ஒரு நாள் பெங்களூருக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறினான்.

நாயகத்தின் வீடு தனிசந்திராவில் இருந்தது. அங்கிருந்து வேறெங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதபடி  அப்படி ஒரு பெரிய வீட்டை நாயகத்தின் தந்தை கட்டி விட்டார்.  இப்போது கிளம்பினால்அரை மணியில் அடைந்து விடலாம்.ஆட்டோவில் போகும் போது ஹென்னூர் மெயின் ரோடில் முளைத்திருந்த பகட்டான கடைகளின் வரிசை வியப்பை ஏற்படுத்தியது. ஒரு வங்கி, அடுத்தாற்போல் ஒரு ஓட்டல், அதையடுத்து ஒரு ஜவுளி அல்லது நகைக்கடை, மறுபடியும் ஒரு வங்கி, ஒரு ஓட்டல், ஒரு… இவை போக  மளிகை, காய்கறிக்.கடைகள் என்று சாலையின் இருபுறங்களையும் அடைத்திருந்தன. இவற்றின் வாழ்வாதாரமான ஜனக் கூட்டம்  இருபுறமும் நெருக்கியடித்துக் கொண்டு பவனி வந்தார்கள். சுற்றுச் சூழலுக்குக் கருணையுடன் கரியமில வாயுவைத் தந்தபடி விரையும் அரசுப் பேருந்துகள், குண்டும் குழியுமான சாலைகளில் தடுமாறிக் கொண்டு செல்லும் வெளிநாட்டுக் கார்கள் பலமாடிக் குடியிருப்புகள்… ஏ அப்பா! பத்து வருஷத்தில் இவ்வளவு மாறுதலா? இங்கெல்லாம் மைல் கணக்கில் நடந்தும் அடிக்கடி பஞ்சர் ஆகி விடும் சைக்கிளை உருட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்  சென்ற நாள்கள் அவனது நினைவுக்கு வந்தன. இப்போது நாயகமும் இந்த அளவுக்கு செல்வத்தில் முன்னேறிப் புரண்டு கொண்டிருப்பான். ‘நீயும் ஒரு நிலைமைக்கு வந்து விட்டதைப் பெருமையுடன் அவனிடம் காண்பிக்கத்தானே இங்கு இப்போது வந்திருக்கிறாய்?’ என்று அவன் மனது அவனைக் கேலி செய்தது. 

தனிசந்திரா மெயின் ரோடில் மான்யதா டெக் பார்க் பின் வாசலருகே இறங்கிக் கொண்டான். அங்கிருந்து சற்றுத் தூரம் நடந்து இடப்பக்கச் சாலையில் திரும்பினான். முன்பு மண் ரோடாக இருந்தது இப்போது தார் ரோடாக மாறி விட்டதையும் சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நின்றதையும் பார்த்தபடி சென்றான். நாயகம் இருந்த வீட்டின் அருகே சென்றதும் அதிர்ச்சி அடைந்தான். அங்கு நாயகத்தின் பெரிய வீடு காணப்படவில்லை. மாறாக அந்த இடம் முழுவதும் கம்பி சுற்றப்பட்டு ஒரு போர்டு தொங்கியது:

‘அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், கிஷன் சந்த், போன்: 9845233456’

அவன் அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்றுத் தள்ளி சில ஓட்டு வீடுகள் காணப்பட்டன. அவற்றில் ஒன்றின் முன்பாகப் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த வயதானவரிடம்  கைகூப்பி வணக்கம் தெரிவித்து “இங்க நாயகம்னு ஒருத்தர் வீடு இருந்திச்சே” என்றான். 

அந்த ஆள் அவனை உற்றுப் பார்த்து விட்டு கையிலிருந்த வெற்றிலையை மடக்கி வாயில் போட்டுக் கொண்டார். சைகை காண்பித்து தனக்குக் கேட்கப், பேச வராது என்றார்.

அப்போது உள்ளேயிருந்து கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடி ஒரு பெண் வந்தாள் “யாரு உன்கிட்டே பேசறாங்க?” என்று கேட்டுக் கொண்டு.

அவனைப் பார்த்ததும் அவள் முகம் மாறிற்று.

“நீ, நீங்க..”

அவளை வளர்மதி என்று கண்டு பிடிக்க அவனுக்கு ஒரு நொடி கூடத் தேவைப்படவில்லை.

“எப்போ வந்தே?” என்று கேட்டாள்.

“இன்னிக்கிதான்” என்றான். இயல்பாக பேச முடியவில்லை என்று நினைத்தான். அவள் தோற்றம் தந்த அழுத்தம் மனதில் விழுந்திருந்தது. 

“நீ எப்படியிருக்கே மதி?” என்று கேட்டான். 

“அதான் பாக்குறியே?” என்றாள். பத்து வருஷத்துக்குள்  இவ்வளவு வாடலும்  முற்றலும்  ஒரு அழகான முகத்தைச் சூறையாடி விட முடியும் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“நாயகத்தைப் பாத்துட்டு அவன் கிட்டே நீ எங்கே இருக்கேன்னு கேட்டு உன்னையும் வந்து பாக்கலாம்னுதான் வந்தேன்” என்றான்.

கையிலிருந்த குழந்தையைக் காட்டி “இதோட அப்பாவையா?” என்று கேட்டாள்

“என்னது?”

அவள் குழந்தையைக் கீழே விட்டு விட்டு சேலையைச் சரி செய்து கொண்டாள். இப்போது அவள் இளைப்பு இன்னும் நன்றாகவே தெரிந்தது.   

“ஆமா. நீ சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டே. பெரிய வீடு, வாசல், நிலம், புலம்னு சொத்து சுகத்துல பொரண்டுகிட்டு இருந்த அவங்க அப்பா என் அம்மாவைக் கூப்பிட்டு உன் மகளைக் கொடு; என்ன சொல்லியும் கேக்காம உன் மகளைத்தான் கட்டுவேன்னு என் மகன் ஒத்தைக் கால்ல நிக்கறான்னு சொல்லிக்  கட்டி வச்சிட்டாங்க.” இரண்டொரு வரிகளில் பத்து வருஷ வாழ்க்கைச் சரித்திரத்தை அவன் முன் வைத்து விட்டாள். 

கலியபெருமாள் அடக்க முடியாமல் “நாயகத்தைக் கட்டிட்டு ஏன் இப்ப இப்பிடி உருக்குலைஞ்சு நிக்கறே?” என்று கேட்டு விட்டான்

அவள் வறண்ட சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.

“நீ ஊரை விட்டுப் போன அடுத்த வருசம் என்னோட மாமனார வேலைய விட்டுத் தூக்கிட்டாங்க. அவரோட இடது கையி வலது கைய விட நீளமாயிருக்குன்னு கவர்மெண்டுல வெட்டிப் போட்டுட்டாங்கன்னு ஊரே சிரிச்சிது. வேலையை விட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. அவரு நிறைய பேரு கிட்டே கடன் வாங்கியிருக்காருன்னு. கடன்காரங்க சுத்தி வந்து வீடு நெலம் எல்லாத்தையும் வளைச்சு எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. அது வரையிலும் வீட்டிலே காலை ஆட்டி கிட்டு உக்காந்திருந்த  இந்த மனுசன் வேறே வழியில்லாம  வேலைக்குப் போக வேண்டியதாயிருச்சு. மறக்கறேன்னு குடி வேறே இப்பல்லாம். அதனாலே மாசத்தில  பத்து நாள் வேலைக்குப் போனா அதிசயம். ‘நீ ஒரு அதிர்ஸ்டக்கட்டடி. உன்னாலேதான் எங்க குடும்பமே சீரளிஞ்சு போயிருச்சு. நீ கால் வயித்துக்கு கஞ்சி குடிச்சா போறும்ன்னு’…” 

அவளால் மேலே பேச முடியவில்லை. அவனுக்கும் வயிற்றைப் பிசைந்தது அவள் துக்கத்தைக் கேட்கையில்.

ஒரு நிமிடம் கழித்து வளர்மதியே பேசினாள் “வராதவன் வந்திருக்கே. உன்கிட்டே என் அழுகையைக் காமிச்சுக்கிட்டு இருக்கேன் பாரு. நான் ஒரு புத்தி கெட்டவ.  டீ சாப்பிடு” என்று வீட்டின் உள்பக்கம் திரும்பினாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இப்பதான் குடிச்சிட்டு வரேன்” என்று அவன் அவளைத் தடுத்து விட்டான்.

“நீ நல்லா இருக்கியா? ஆளைப் பாத்தா அப்பிடித்தான் தோணுது. நீ ரொம்ப நல்லவன். கடவுள் நல்லவங்க வயித்தில அடிக்க மாட்டான்.” 

“ஆனா உன்னை அடிச்சிட்டானே?” என்றான் ஆற்றாமையுடன்.

“ஒவ்வொரு விதிக்கும் ஒரு விலக்கு இருக்கில்லே” என்றாள் வளர்மதி. தொடர்ந்து “சரி,இப்ப என்ன பண்ணப் போறே?” என்று கேட்டாள். 

“நாயகத்தைப் பாக்கலாம்னு வந்தேன்” என்றான்.

“அதுவும் சரிதான். இங்க வந்துட்டு அதைப் போயிப் பாக்கலேன்னா அவ்வளவுதான். வேறே வினையே வாணாம். சூதானமாப் பேசி நடந்துக்க.”

அவன் அவளை உற்றுப் பார்த்தான். அவள் வெளியே சிந்திய வார்த்தைகளை விட அவை தம்முள் இடுக்கிக் கொண்டிருந்த அர்த்தங்களை அறிய முயன்றவன் போலத் தடுமாறி நின்றான்.

“இந்த ரோடுலயே நேரா போனா பிள்ளையார் கோயில் வரும். அது உனக்குத் தெரியும்தானே? இந்தப் பத்து வருசத்திலே மாறாம நிக்கறது அது ஒண்ணுதான். கோயிலுக்கு எதித்தாப்பிலே ஒரு சிமெண்டு ரோடு போகும். எடது பக்கம் மொத கட்டிடமே பாக்டரிதான். அங்கதான் வேலை பாக்குது சூப்பருவைசரா.”

அவன் தயங்கியபடி நின்றான்.

வளர்மதி “எதுக்கு இப்பிடி நிக்கறே?உன்னாலே எனக்கு எதுவும் பண்ண முடியாது. பண்ண முடியாததை பண்ண முடியாதுன்னு விட்டிரணும்” என்றாள்.

“நீ தப்பா நினைச்சிக்கலேன்னா நான் உதவி செய்யறேன்” என்றான்.

“பணமா? நீ எதுக்குக் கொடுக்கணும்? எவ்வளவு நாள் கொடுத்துக்கிட்டே இருப்பே? ஒரு வருசம், அஞ்சு  வருசம், பத்து  வருசம்? நடக்கற காரியமா என்ன?”

“நாயகம் எனக்கு எவ்வளவோ பண்ணியிருக்கான். அவங்க அப்பாதான் எனக்கு மொதல்லே வேலை போட்டுக் கொடுத்தாரு. அந்த நன்றிக் கடனுக்காச்சும்…”

“அப்போ அது கிட்டே கொண்டு போய்க் கொடு. இன்னும் தினமும் சாஸ்தியா குடிச்சிட்டு என்னை வந்து அடிச்சுக் கொல்லட்டும். யார் கண்டா? நீ கொடுக்கறேன்னு சொன்னாலே யாருக்காக கொடுக்கறேன்னு அசிங்கமா பேசவும் பேசும் அது” 

கலியபெருமாள் அவளிடம் விடை பெற்று அவள் சொன்ன வழியில் சென்றான். அவளது தோற்றம் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? அதுவும் அடுத்தவனின் மனைவியாகி விட்டவளிடம். பண உதவியை அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று அவளை நன்றாக அறிந்தும் அவன் கல்லை எறிந்து பார்த்தான் 

அவன் பாக்டரி வாசலை அடைந்து ஒரு நிமிடம் நின்றான். காவலாள் யாரும் காணப்படவில்லை. வாசல் கதவு திறந்து கிடந்தது. பாக்டரிக்குண்டான சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை. ஆறரை மணிக்கு வேலையாட்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிப் போயிருப்பார்கள்.

அவன் உள்ளே நுழைந்து பார்த்தான். பெரிய கட்டிடத்தின் உள்ளே மெஷின்கள் காணப்பட்டன. 

அவன் “நாயகம்! நாயகம்!” என்று உரத்த குரலில் கூப்பிட்டான்.

“யாரு?’ என்றபடி அங்கிருந்த ஒரு அறையில் இருந்து வந்தவன் நாயகம்தான். பாக்டரி யூனிபார்மில் இருந்தான்.அவன் முதலில் கலியபெருமாளை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அருகில் வந்தவன் உற்றுப் பார்த்து விட்டு “ஏய் கலியா! நீதானாடா? வெள்ளையும் சொள்ளையுமா யாரோ பெரிய மனுஷன் வந்திருக்காருனுல்லே மொதல்லே நினைச்சிட்டேன்” என்று சிரித்தபடி அவனைக் கட்டிக் கொண்டான். உடனே “சே சே, உன் டிரஸ்லாம் அளுக்காயிடும்”  என்று சொல்லி விலகி நின்றான்.  

பாக்டரி மணம் அவன் உடலில் இருந்தது.

“நீ அப்பிடியே மாறாமல் இருக்கே” என்றான் கலியபெருமாள். 

“ஆமா. உடம்பை வச்சு சொல்லுறையா?” என்று தன்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டான். “ஆனா பாக்கெட்டுதான் சூம்பிப் போயிருச்சு” என்று சிரித்தான். பொருமலும் சிறிது சினமும் அவன் குரலில் வழிந்தது.

அவன் பார்வை கலியபெருமாள் மீது பாய்ந்து விழுங்கியது.

“எங்கே மெட்றாசா? ஊரை விட்டுச் சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டே. யார்  கிட்டே கேட்டாலும் உன்னைப் பத்தி ஒண்ணும் தெரியலே. “நீதானேப்பா அவனோட கான் தோஸ்து? உனக்கே தெரியாதான்னு கேட்டு மடக்கினாங்க” என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினான் நாயகம். 

கலியபெருமாள் பதில் எதுவும் அளிக்காமல் சிரித்தபடி நின்றான்.

“எப்பிடி இந்த இடத்தைக் கண்டு பிடிச்சு வந்தே?” என்று கேட்டான் நாயகம். 

அவனுடைய பழைய வீட்டைத் தேடிச் சென்றதையும்  அங்கு வளர்மதியைப் பார்த்ததையும் கூறினான்.

“அவதான் உன்னை இங்கே அனுப்பினாளா?” என்று கேட்டான், குனிந்து தரையில் கிடந்த ஒரு கிடுக்கியை எடுத்தபடி.

“ஆமா. உங்களை எல்லாம் பாக்கத்தான் வந்தேன்னு சொன்னேன். இந்த பாக்டரியைப் பத்தி அதுதான் சொல்லி அனுப்பிச்சது” என்றான் கலியபெருமாள். 

“ரொம்பப் பெரிய மனுசனாயிட்டேன்னு உன்னைப் பாத்தாலே தெரியுது. சரி, வா. ரூமுக்குள்ள போயி உக்காந்து பேசலாம்” என்று அவன் வெளியில் வந்த அறைக்கு அழைத்துச் சென்றான். 

கலியபெருமாள் சென்னைக்குச் சென்றதையும், பின்னர் தில்லியில் வாழ்க்கையைத் தொடங்கியதையும் தற்போது பார்க்கும் வேலையைப்  பற்றியும் பற்றியும் சொன்னான்.

“நல்ல சம்பளமா? கார்லாம் கொடுத்திருக்காங்களா? வீடு பெரிய வீடா?”

கலியபெருமாள் முடிந்தவரை அடக்கி வாசித்தான். பணக்காரனாயிருந்து கீழே விழுந்து விட்டவனின் மனப்பான்மை அவன் அறியாததல்ல.

“சரி, நீ வந்ததைக் கொண்டாட ஒரு பெக் போடலாமா?” என்று அவன் உட்கார்ந்திருந்த மேஜையின் இழுப்பறையைத் திறந்து பாட்டிலை எடுத்தபடி “நீ அடிப்பேல்ல?” என்று கேட்டான்..

அவர்கள் குடித்துக் கொண்டே அரசியல் சினிமா, விளையாட்டு என்று பலவித விஷயங்களைப் பற்றி பேசினார்கள். கலியபெருமாள்  

இரண்டாவது பெக் எடுத்துக் கொள்ளும் போது நாயகம் நாலாவது பெக் ஆரம்பித்து விட்டான். 

“ஐஸ் போட்டு அடிச்சா சரியா கிக் வரதில்லே” என்று தம்ளரில் இருந்ததை ஒரே மூச்சில் குடித்து விட்டு மறுபடியும் மதுவை நிரப்பினான். “ராவா அடிச்சா அது தனி மஜாதான்” என்று ஐந்தாவது பெக்கை உறிஞ்சினான்.

“மெல்லடா, மெல்ல” என்று கலியபெருமாள் நண்பனைப் பார்த்தான். 

“இதைப் பத்தியெல்லாம் கவலைப் படாதே. கவலையையும் கஸ்டத்தையும் மறக்கத்தானே கடவுள் இதைக் கொடுத்திருக்கான்! நாம  ரெண்டு பேரும் ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்த நாள்லேர்ந்து பிரெண்டுங்க. ஆனா எங்கிட்டே சொல்லாம ஓடிப் போயிட்டியே! எங்க  வீட்டிலே டாலின்னு ஒரு நாய் இருந்து ஒரு நாள் என்னையே கடிக்க ஆரமிச்சிருச்சு. நீயும் அதுவும் ஒண்ணுதான்” என்றான் நாயகம்.

கலியபெருமாள் பேசாமலிருந்தான்.

“உங்கப்பாம்மா ஆக்சிடெண்டுலே போய்ச் சேந்தப்பறம் எந்த சொந்தக்காரன்டா உன்னை எடுத்து வளக்க வந்தான்? பிச்சைக்காரன் மாதிரி எங்க வீட்டிலேதானேடா சாப்பிட்டு வளர்ந்தே?”

உள்ளே சென்றுள்ள திரவம் அவனை இம்மாதிரிப் பேச வைக்கிறது என்று கலியபெருமாள் தனது இரு கை விரல்களையும் பிசைந்து கொண்டான்.

“அடுத்த வேலைக்குப் போட்டுக்க ஒரு துணி இருந்திச்சா? ஜட்டி கூட நாந்தானேடா வாங்கிக் கொடுத்தேன். தீவாளி, பொங்கல்னு எங்கப்பா கிட்டே சொல்லி டிரஸெல்லாம் வாங்கிக் கொடுக்கலேன்னா நீ அரை அம்மணமாத்தானேடா தெருவிலே திரிஞ்சிருப்பே?”   

அவன் தனது தன்மானத்தின் மீது உரசிப் பார்க்கிறான். குடிகாரனின் பேச்சு என்று கலியபெருமாள் நாயகத்தின் பேச்சை உதற முயன்றான். நாயகத்திடம் “நீ சொல்லுறது எல்லாம் ரொம்பக் கரெக்ட்டு. நீ இல்லாட்டா நான் எங்கையோ குப்பை பொறுக்கிட்டு இருந்திருப்பேன்” என்றான். 

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவனாக “அதெல்லாம் விடு. படிப்பு? ஸ்கூல் பீஸ் கட்டி ,டியூசன் வாத்தியார் வச்சு எனக்கு செஞ்சதையெல்லாம் உனக்கும் செய்யணும்னு எங்கப்பா கிட்டே சண்டை போட்டது உனக்குத் தெரியுந்தானேடா? நான் இல்லாட்டி நீ படிப்பு அறிவு இல்லாத கம்மினாட்டியாத்தானேடா இருந்திருப்பே?” என்றான் நாயகம்.

கலியபெருமாளுக்கு இதையெல்லாம் நெடுங் காலத்துக்குப் பின் தேடி வந்த பால்ய சிநேகிதனிடம் எதற்கு அவமானத்தைப் 

பீய்ச்சும் வார்த்தைகளில் தெரிவிக்கிறான் என்று வியப்பு உண்டாயிற்று.  

“நீ பதிலுக்கு என்ன செஞ்சே? ஓடிப் போனவன் ஒரு நாளாச்சும் என்னைப் பத்தி நினைச்சுப் பாத்தியா?  விசாரிச்சு நான் தெருவிலே விழுந்து கிடக்கேன்னு உனக்குத் தெரிஞ்சு நீ உதவிக்கு வந்திருக்கணுமில்லே. அது எப்பிடிடா உன்னைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியாம இருக்கிற மாதிரி பண்ணிக்கிட்டே? நீ மேலே வந்திட்டே. நீ இருந்த இடத்துக்கு நான் இப்ப வந்து கிடக்கேன்.”

ஓ,  மதுவின் தூண்டுதலால் அடிமனதில் உள்ள பொறாமை வெளியே வந்து விழுகிறது என்று கலியபெருமாள் நினைத்தான். நாயகத்தின் மேல் அவனுக்குக் கோபமல்ல, இரக்கம் உண்டாயிற்று.  

கலியபெருமாளின் அமைதி நாயகத்தை இன்னும் சீற்றம் கொள்ளச் செய்து விட்டது.

“களுப்புணி மாதிரி இருந்துகிட்டே காரியத்தை சாதிச்சிட்டு போகற புத்தி உன்னை இன்னும் விடலையே” என்றான். “வளர்மதியை அப்படித்தானே தள்ளிக்கிட்டு போனே!”

கலியபெருமாள் திடுக்கிட்டு நாயகத்தைப் பார்த்து “என்ன உளர்றே?” என்றான் சற்றுக் கோபத்துடன்.

“ஆகா, எனக்கு அந்தக் கதையெல்லாம் தெரியாதாக்கும்? மொத மொதல்லே எங்கடா சாச்சு வச்சு அவளுக்கு முத்தம் கொடுத்தே? அவ வீட்டுலேதானே? சினிமாவுக்குத் தனியா கூட்டிட்டுப் போயி அவ மேலே கை போட்டது எப்பிடி இருந்திச்சு? அவ இடுப்பை  அணைச்சுகிட்டே லால்பாக்குலே நடந்து போனேல்ல? என் கூட நீ வரப்போல்லாம் உன்னையப் பாத்ததும் எப்பிடி அவளுக்கு வெக்கமும் சந்தோசமும் போட்டி போட்டுக்கிட்டு வருங்கிறதை நான் எவ்வளவு தடவை பாத்திருக்கேன்? அவ கன்னம், காது, மூக்கு காலுன்னு உன் உடம்பு படாத இடம் ஒண்ணு பாக்கியில்லே. நான் கேட்டப்போ ஒண்ணுமே தெரியாத பூனை மாதிரி இருந்தே. அதையும்  நான் நம்பிக் கெட்டேன் பாரு. அப்புறம்தான அவ ஒடம்பு மேலே கை வச்ச மொத ஆளு நீதான்னு தெரிஞ்சிச்சு! இப்பவும் அவளைப் பாக்கத்தானே ஓடி வந்திருக்கே? எப்ப வந்தே? அங்க இருக்கற கிழவனுக்கு காதும் கேக்காது. கண்ணும் சரியா தெரியாது. நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளே போயி….”

கலியபெருமாள் எழுந்து எதிரிலிருந்த நாயகத்தின் மீது முழு வேகத்துடன்  பாய்ந்தான். இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத நாயகம் நாற்காலியிலிருந்து கீழே விழுந்தான். அவன் எழுந்து நிற்க முயன்ற போது குடிபோதை அவனைக் கீழே தள்ளி  எழவெட்டாமல் செய்தது. கலியபெருமாள் ஆத்திரம் அடங்காதவனாக நாயகத்தைத் தூக்கி நிறுத்தி அவன் முகத்தின் மீதும் நெஞ்சின் மீதும் குத்தி அடித்தான். நாயகம் ‘பொத்தென்று தரையில் சரிந்து அசையாமல் கிடந்தான். கலியபெருமாள் அவனைப் புரட்டிப் போட்டுப் பார்த்த போது அவன் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.  நாற்காலியின் மேல் விரித்திருந்த துண்டை எடுத்து ரத்தத்தைத் துடைத்தான்.  நாயகத்தின் மூக்கருகில் கை வைத்துப் பார்த்தான். பிறகு அங்கிருந்து வெளியே வந்தான்.

ஆட்டோ பிடித்து கலியபெருமாள் தன் அறைக்கு வந்து படுக்கையில் சாய்ந்தான். அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. நாயக ராஸ்கல்! யதேச்சையாக அவன் பார்வை சட்டை மீது படிந்த போது ரத்தத் துளிகளைப் பார்த்தான். எழுந்து பாத்ரூமுக்குள் சென்று சட்டையைக் கழற்றி போட்டான். அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்த போது அவன் தன்னையே வித்தியாசமாகப் பார்ப்பது போல உணர்ந்தான்.

கண்ணாடியில் இருந்த உருவம் அவனைப் பார்த்துக் கேட்டது: “உனக்கு இவ்வளவு கோபம் வருமா?”

அவன் பதில் அளிக்காமல் அந்த உருவத்தைப் பார்த்தபடி நின்றான்.

“அவன் உன்னை பிச்சைக்காரன்னு கூப்பிட்டான். அனாதைப்பயல்னான். அவனோட நாயும் நீயும் ஒண்ணுன்னான். அம்மணமா திரிய வேண்டிய பயல்னான். அறிவில்லாத கம்மனாட்டின்னான். அப்பல்லாம் வராத கோவம் கடைசியா எப்பிடி வந்திச்சு?”

அவன் உருவத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போலப் பதில் சொல்லாமல் நின்றான்.

உருவம் நக்கலாகச் சிரித்தபடி “அவன் பொண்டாட்டியை இழுத்து அசிங்கமா கொச்சையா பேசினான். அதுல ஒரு வார்த்தை கூட உண்மையில்லேன்னு உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அப்புறம் எதுக்குக் கோபம் வந்து இப்பிடி அவனை அடிச்சுப் பின்னி வாங்கிட்டே?” 

“அவன் வளர்மதி கிட்டே நான் செஞ்சதா சொன்ன ஒண்ணைக் கூட நான் செய்யலையேன்னுதான் எனக்கு என் மேலேயே   கோபம் வந்திருச்சு. அதை அவனிடம் காட்டிட்டேன்” என்றான் கலியபெருமாள்.     


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.