மாதவிப் பொன் மயிலாள்

வானின் கீழ்ப்பகுதியில் தங்க ஆரஞ்சைப் போல இரவின் தொடக்கத்தில் தோற்றம் தந்த நிலா நள்ளிரவிற்கு மேல் மிக அதிகப் பிரகாசத்துடன் அமுதக் கிரணங்களை பொழிந்து கொண்டிருந்தது. மலை முகடுகள் வெள்ளி முலாம் பூசியது போலத் தோன்ற, மரங்கள் கரும் ஈயப் பச்சை நிறத்தில் காற்றில் ஆடி வெள்ளிக் காசுகளை இரைத்துக் கொண்டிருந்தன. மாளிகைகளின் சாளரம் மற்றும் முற்றத்தில் சந்திரன் வெண் துகிலை போர்த்திக் கொண்டிருந்தான்.

இந்த இடம் தான், தன் சதங்கைகள் இனிய ஒலி எழுப்ப அவள் ஆடிய நடன மண்டபம். சாந்தலா தன் காற்சிலம்புகளை சரி செய்து கொண்டாள்.

“தாகிட தகதோம், ததிங்கிணதோம், தகதோம், தகுந்தரி கிட தக, தத்தீம், தகதீம், ஜொனுதகதீம், தகஜொணு தகதீம், கிடதீம், தித்தில்லானா….” மனது ஜதிகளைப் பாடிக் கொண்டே வர அவள் உடல் சுழன்றாடியது.

Madanika | Best viewed in large for all the details! At the ...

‘தேவி, இந்த அபிநயத்திலேயே சற்று நில்லுங்கள். இடை ஒசிய, வலது கை மேலே வளைந்து காற்றில் துழாவ, வலது கால் பின்புறமாக சற்று வளைய, இடது கால் முன்னோக்கி எழுந்து வலது கெண்டைக் காலைப் பற்றும் இந்த நிலையில் உங்கள் சிலைக்கான அமைப்பை மனதில் பதித்துக் கொள்கிறேன்.’

சாந்தலா திடுக்கிட்டாள். கேட்ட குரல் மலிதம சிற்பியின் குரல். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த தான் பேலூரின் இந்த நடன மண்டபத்தில் நாட்டியம் ஆடும் இந்த நள்ளிரவு பௌர்ணமி வேளையில், மலிதம எங்கிருந்து வந்தார்? ஏன் கண்களில் படாமல் குரல் மட்டும் கேட்கிறது?

“தலைமைச் சிற்பியாரே, நேரில் வாருங்கள். என்னையும், என் பள்ளி மாணவிகளையும் மாதிரியாகக் கொண்டு நீங்கள் வடித்துள்ள மதனிகா சிற்பங்கள் பேலூரிலும், ஹொளபீடுவிலும் இன்னமும் அலங்கரிக்கின்றன. இந்த பூமி என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறது. என் ஆவி இங்குதான் குடி கொண்டிருக்கிறது; மஹாவீரரின் அருளால் இந்த இளஞ்சிவப்பு முழு நிலவு நாளில், நான் என் உடல் கொண்டு ஆடுவேன்.”

‘ஆம், தேவி. என் குரலும், உளியின் ஓசையும் மட்டுமே உங்களுக்குக் கேட்கும். என் உடலோ, அதன் இயக்கங்களோ தெரியாது. என் உயிர் பிரிகையில் நான் ஒரு வரம் கேட்டேன். எந்த நாளில் எங்கள் அரசி, சாந்தலா தேவி, இந்த நடன மணி மண்டபத்தில் சதங்கைகள் ஒலிக்க ஆட வருவார்களோ அன்று நானும் வந்து அவர்களின் சிற்பத்தைச் செய்ய வேண்டும். ஆடுங்கள், தேவி, வித விதமான நிலைகளில் உங்களை வடிக்க வேண்டும். தயவு செய்யுங்கள்.’

சாந்தலாவிற்கு அனைத்துமே விசித்திரமாக இருந்தது. அவள் கால் கொண்டு ஆடுவதும். அவர் கை கொண்டு செதுக்குவதும் இன்றா நடக்கின்றன? எத்தனை நூற்றாண்டுகள் சென்ற பின்பு இப்படி ஒரு சந்தர்ப்பம்? இறந்து போன நானும், மறைந்து விட்ட அவரும் எப்படி இங்கே பேலூரில்  இருக்கிறோம்? இறந்தவர்கள் உலகிலும், இதைப் போன்ற மதி மயக்கங்கள் ஏற்படுமா?

அவள் சிந்தனையை உதறினாள். ஒரு ஆவர்த்தம் ஜதி சொல்லி பின்னழகைக் காட்டி அசையாமல் அவள் நிற்க உளி அந்த மென்மையான கற்களில் அவள் நின்ற நிலையை வடித்துக் கொண்டிருந்தது. பின்னர் ‘தர்ஷன் தேஜோ நாத்’ என்ற ‘ஸ்தாவன்’ (பதம்) எடுத்து அபிநயிக்க அதில் சித்தம், சித்தாலயம் என்ற நிலையில் அவள் ஆடாமல் அசையாமல் நின்றாள். அந்த நிலையில் உடலின் கீழ்ப் பகுதி ஒரு நேர்க்கோட்டில் நிற்க, இடை ஒசிந்து, மார்புகள் விம்மி, கரங்களில் தாமரைத் தண்டு கொண்டு வருடும் வீணை அமர்ந்திருக்க, காதுக் குழைகள் நிலைத்து நிற்க, நெற்றி விரிய, எடுத்துக் கட்டிய சிகையே மகுடமாக அவளே ஒரு சாத்யகி போல நின்றாள்.

அடுத்த பதத்தில் சிவ தாண்டவம். மானாக, மழுவாக, மங்கையாக, வியாக்ரபாதராக, பதஞ்சலியாக, நாகமாக, முயலகனாக, கணங்களாக மாறி மாறி நின்றாட கோட்டு வடிவங்கள் கற்களில் எழும்பிக் கொண்டே வரும் இனிய ஒலியும் தொடந்தது. ஆடிக் கொண்டே வந்தவள் எப்போது பிரகாரத்திற்கு வந்து நடனத்தைத் தொடர்ந்தாள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. பொழுது புலரும் முன்பே அத்தனை நிலைகளிலும் ஆடும் வேகமும், அதை வடிக்கும் வேகமுமாக கலை அங்கே தெய்வ சக்தியையும் மிஞ்சி நின்றது.

‘தேவி, சற்று ஓய்வெடுங்கள். இந்தச் சிற்பம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

King Vishnuvardhana panel. notice Queen Shantala Devi on the right and Acharya Ramanuja on the left

“மறக்க முடியுமா, மலிதம. என் அருமைக் கணவர், நம் நாட்டின் அரசர், பிட்டி தேவன், விஷ்ணு வர்த்தனாக மாறிய பிறகு, ஆசார்யர் இராமானுஜரும், நானும் அரசருக்கு இரு புறமும் அமர்ந்து வாதம் செய்த காட்சி அல்லவா இது?”

‘ஆம், தேவி. பல்லாளரின் இளவலாகப் பட்டத்திற்கு வந்த பிட்டி தேவர் சமணத்திலிருந்து வைணவத்திற்கு மாறினாரே?’

“அதில் தவறில்லை சிற்பியாரே. நான் அவரது பட்டத்துராணியாக இருந்தும், என்னை அவர் வற்புறுத்தவில்லையே? நான் கடைசி வரை சமணத்தைத்தானே பின் தொடர்ந்தேன்.”

‘ஆம், தேவி, அன்று இராமானுஜருடன் நீங்கள் என்ன விவாதம் செய்தீர்கள்?’

“பெரிதாக ஒன்றுமில்லை, சிற்பியாரே. அவர் ஒரு தேர்ந்த ஞானி. வேதத்தில் முழு நம்பிக்கை கொண்டவர். ஆத்மாவை ஜீவன், பரமன் எனச் சொல்லி, ஒவ்வொரு ஜீவ ஆன்மாவிலும் விஷ்ணுவின் அம்சம் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்றும், அது முழுமையாகப் பெருமாளின் குணங்களை அடைகையில் அதுவே ‘பிரம்மன்’ என்று ஆகிவிடுகிறது என்ற விசிஷ்டாத்வைதம் அவரது பள்ளி.”

‘அதில் உங்களுக்கென்ன கருத்து வேறுபாடு. அம்மா?’

‘ஐயனே, நான் அரசு ஊழியர் மார சிங்கையாவின் மகள். நான் வளர்ந்தது சமண மதத்தவளாக; அதன் ஐந்து அரும் பெரும் கொள்கைகளான அகிம்சை, சத்யம், திருடாமை, பிறர் சொத்தை அபகரிக்காமை, ப்ரும்மசர்யம் இவைகளே என் ஆபரணங்கள். நான் கலைக்கெனவே வாழ நினைத்தேன். கலைகளில் மத பேதமில்லை. இதோ இந்த கப்பே சென்னிங்கராயர் கோயில் நான் கட்டியது என்று உங்களுக்குத் தெரியும். இந்தக் கோயிலில் முதன்மை மூர்த்தி மகாவிஷ்ணு தான். நான் இராமானுஜரை தரிசித்தப் பின்னர் தான் இதைக் கட்டினேன். ஆனால், என்னால் அவரது கொள்கையான விசிஷ்டாத்வைத்தை ஏற்க முடியவில்லை. சமணம் சொல்லும் ‘ஷாயத்வாதம்’ (Syadwad) தான் உண்மையை உணர்த்துகிறது என்று அவரிடம் சொன்னேன். ஒன்றை அறுதி எனச் சொல்ல முடியாது- அதன் காரணங்கள் சூழலால் அனுமானிக்கப் படுகிறதே அன்றி ‘இதுதான்’ என்று ஒற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.”

‘ஆனால், தேவி, அரசர்…?’

“உண்மை. அவர் என்னை முதலில் சந்தித்ததே இந்த மகா நடன மண்டபத்தில் தான். அவரோ அரசர், நானோ அரச ஊழியரின் மகள். தன்னை மணந்து கொள்ள அரசர் கேட்கையில் நான் மறுக்க முடியாது, மறுப்பதற்கான காரணமும் இல்லை. நான் இரண்டு வரம் கேட்டேன். ஒன்று என் நடனம் நிற்கக் கூடாது; இரண்டு, என் உயிரினும் மேலான என் தோழியையும் அவர் மணமுடிக்க வேண்டும். அவள், என் நடனத்தின் ஆத்மா. என் ஆடை, அணிகலன், செஞ்சாந்துக் குழம்பு, மருதோன்றிக் கோலங்கள், அபிநய சாஸ்திர ஏடுகளில் சொல்லப்பட்டுள்ள நிலைகள், முத்திரைகள், தாந்திரீக விளக்கங்கள், இசைக் கோர்வைகள், நடன மண்டபத்தில் எந்த இடத்தில் பாடலுக்கேற்றவாறு நிற்க வேண்டும், அசைய வேண்டும், ஆடவேண்டும், சுழல வேண்டும் என்று கற்பித்த குரு. அவளில்லாமல் ஒரு வாழ்க்கையா?”

‘தேவி, அரசர் உங்கள் விருப்பப்படி அவரையும் மணந்து கொண்டாரே’

“ஆம், ஆனால், அவளை பட்டத்து ராணியாக்கவில்லை. பிறர் பொருளை அபகரித்தது போல என் நெஞ்சம் பதறிக்கொண்டே இருந்தது. வெளியே தெரிந்த என் அழகு, அவளது உள்ளத்து அழகை மறைத்து விட்டது. ‘நான் சொன்னால் அரசர் கேட்பார். நீதான் பட்டத்தரசி’ என்று நான் அவளுக்குக் கொடுத்த வாக்கை என்னால் செயல்படுத்த முடியவில்லை. அரசர் அவளிடமும் அன்பாக இருந்தார். எனக்கு அதில் நிறைவே.  அவள் பெற்ற பெண்ணிற்கு இருந்த தீராத நோயை, சமண குருமார்களால் தீர்க்க முடியாமல் இருந்த வியாதியை, இராமானுஜர் நேர் செய்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி எது என்பதில் எனக்கு இன்று வரை சந்தேகம் இருக்கிறது சிற்பியாரே”

‘தேவி, ஒன்பது நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் உங்கள் மீது உங்களுக்கே ஐயம் ஏன்?’

“அந்தக் குழந்தையும் என் பெண் தான். அவள் நோயிலிருந்து மீண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி தான். அதற்கானப் பரிசாக பிட்டி தேவன் வைஷ்ணவத்திற்கு மாறியதை என்னால் தாங்க முடியவில்லை. அவர் குருதியில் வந்தவள் அந்தச் சிறுமி. அரசர் அவளிடம் உயிரை வைத்திருந்திருக்கிறார். அப்படியென்றால், எதிலும் குறை காணாத, யாரையும் நோகடிக்காத என் தோழியின் மேல் அளவற்ற காதல் வைத்திருந்திருக்கிறார். என் மீதான தனது அன்பை வெளிப்படையாகக் கொண்டாடியவர், என் தோழியின் மீது கொண்டிருந்த காதலை என்னிடம் ஏன் சொல்லவில்லை? சிற்பியாரே, இந்தப் பெண் மனதின் விசித்திரத்தைப் பார்த்தீர்களா? அவளை மணமுடிக்க வைத்தது நான், அவளை பட்டத்து அரசியாக்க துடித்ததும் நான். ஆனால், கணவனின் அன்பை அவள் அதிகம் பெற்றதாக எண்ணி ஏங்கிக் கொண்டு தவித்ததும் நான்.’

‘தேவி, இந்த ஒப்பீட்டை நீங்கள் தவிர்த்திருக்கலாம். இதை மறந்து விடுங்கள். இராமானுஜர் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையா?’

“நான் வேதத்தை மறுப்பவள். சமணர்கள் அப்படித்தான். பலியைச் சொல்லும் வேதம் எங்களுக்கு ஏற்புடையதில்லை. ஆனால், அவர் சொன்னார் ‘இயற்கைச் சுழற்சியில் இதுவும் ஒன்றே. ஓநாய், ஆட்டைக் கொல்வதும், வேங்கை மானைக் கொல்வதும் அந்தந்த உயிரினத்தின் வாழ்வும், வாதையும். வேதம் அனைத்துத் தருணங்களிலும் பலி கொள்வதில்லை. பலிக்குச் சமமான பொருளை அது பரிந்துரைக்கிறது. சமணத்தில் நீங்கள் உடலை பலவாறாக வருத்துகிறீர்கள், நோகச் செய்கிறீர்கள். சகிப்புத்தன்மையை அதன் மூலம் வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பது உண்மைதான். அனைவரும் சமம் என்று சொல்லும் நீங்களே, பெண்களுக்கு முக்தி இல்லை எனவும் சொல்கிறீர்கள், நம்புகிறீர்கள். கண்களுக்குப் புலனாகும் பொருளை வைத்து, அறுதி உண்மை என எதுவுமில்லை, ஒருக்கால் இவ்வாறு இருக்கலாம் எனச் சொல்லும் சமண தத்துவத்தை என்னால் ஏற்க முடியவில்லை, அம்மா.’ என்றார் ஆச்சாரியர்.

மனமகிழ்ந்து அரசரும், மந்திரிகளும், அரசு ஊழியர்களும், பொது மக்களும் வைணவத்திற்கு மாறினர். ஆனால், அரசு இதில் எவரையுமே வற்புறுத்தவில்லை. நானே ஒரு உதாரணம். நான் சமணத்தில் தொடர்ந்தேன். ச்ரவண பெலகோளாவில் பக்தர்களுக்கும், வணிகர்களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், துறவிகளுக்கும் நான் அமைத்துக் கொடுத்த பஸதிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. எனக்கு ‘சமண நம்பிக்கையின் ஒளிவிளக்கு’ என்ற பட்டமும் கொடுத்தார்கள். நான் நடனமாடிக்கொண்டேயிருந்தேன். மாநில அரசாங்கம் என் பெயரில் நாட்டிய ராணி விருதினை பல்லாண்டுகளாக வழங்கி வருகிறது. என் பள்ளிகளில் காற்சதங்கை ஒலிக்க ஒலிக்க சிற்பியரின் கைகளில் உளி ஒலித்துக் கொண்டேயிருந்தது. எத்தனை மதனிகா சிற்பங்கள், எத்தனை நிலைகள், ஆடை ஜாலங்கள், ஆபரண நகாசுகள், விரல் நகங்கள் முதற்கொண்டு தெளிவாய் வந்துள்ள சிலைகள், ஐயா, காலத்தில் எங்களின் இளமையைத் தக்க வைத்துள்ள உங்கள் கலைத்திறனிற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய முடியும்?”

‘அரசி, நீங்கள் இல்லையேல், இந்தச் சிலைகளில்லை. சினம் கொள்ளவில்லை என்றால், நான் ஒன்று கேட்கலாமா?’

“சிற்பியாரே, இன்னமும் என்ன தயக்கம், உங்கள் கேள்வி தானென்ன?”

‘அறிவு, அழகு, பதவி, கலை, நல்ல வாழ்க்கை எல்லாம் அமையப் பெற்றிருந்த நீங்கள் சிவகங்கே முகட்டிலிருந்து விழுந்து ஏன் தற்கொலை செய்து கொண்டீர்கள்?’

சாந்தலா சிரித்தாள். “நல்லது, சிற்பியாரே. நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை. நோன்பிருந்து உயிர் துறந்தேன். சமணம் அனுமதிக்கும் ஒன்றுதான் அது.”

‘சரி தேவி, அப்படி உயிரை விட என்ன அவசியம் வந்தது?’

“மலிதம, மூர்க்கத்தனமான மத நம்பிக்கைக்கும், என் ஒரே மகன் குமார வல்லாரின் உயிருக்கும் இடையே நான் இழுபட்டேன். போர்க்களத்தில் படுகாயம் அடைந்து அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான் வைணவ ஆச்சார்யரை அணுகியிருக்கலாம், அவன் ஒரு வேளை பிழைத்திருக்கவும் கூடும். நான் சமணத்தை விட்டு விலக விரும்பவில்லை. அவன் ஆத்மாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். என் கரங்களில் அந்த சிட்டுக் குருவியின் உயிர் பிரிந்தது. என் தோழியின் மகள் நோயிலிருந்து விடுபட்ட போது, அரசர் வைணவத்தை தழுவியபோது, என்னுள் எழுந்த காழ்ப்பிற்கான விலையை என்னையன்றி யார் தருவார்? நான் நோன்பிருந்து உயிர் விடுவது ஒன்றே வழியல்லவா?”

‘அம்மா, நீங்கள் அறத்தின் உருவம். இப்போது எந்தக் கசடுகளும் இல்லை. பொழுது புலர்ந்து விடும். நம் நேரம் பூமியில் முடிவடையும் முன் எனக்காக ஒரு நடனம்.’

“தீம், தித்தளாங்கு ததிங்கிணதோம், தகஜனுததிமி, தகித ஜனுத, தகிட தத்தோம், டுகு டுகு டும் டும்”

காலையில் வளாகத்தை சுத்தம் செய்ய வந்த நபர்கள் அங்கே சிதறிக்கிடந்த சலங்கைப் பரல்களையும், புது மதனிகா சிலைகளையும், படர்ந்து கிடந்த மென்பாறைத் தூசிகளையும் கண்டு வியந்து நின்றனர்.

One Reply to “மாதவிப் பொன் மயிலாள்”

  1. Beautifully ‘crafted’ story. The dance and sculpture takes the lead role. The religious conversions too. The story brings to the fore that art is above religion and stands tall. The way Bharatham and sculpture are described with its nuances by the author, it gives an impression that the author is well informed about these arts. Also the religious practices are brought in very fairly. Kudos to the author of this story. Wishing all success in future endeavours

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.