அந்த இவள்

ஜவை போட்டு செய்தது போல அப்பனை கொண்டிருந்தத பிள்ளை. மா நிறம். . சுருள் சுருளாக அடர்ந்த முடி. கொட்ட கொட்ட விழிக்கும் விழிகளில் அத்தனை தீட்சண்யம். தூக்கி நிறுத்தினால் அப்படியே பொம்மை மாதிரி ஸ்டோவ்ட்டா கை கால்கள்  எல்லாம் நல்லா விறைப்பாக! 

பிள்ளை அழகாகயிருப்பது மட்டும் தான் கொஞ்சம் நெருடல். அது மட்டும் பிசகாமல் இருந்திருந்தால் அப்படியே அப்பனை மாதிரியே என்று தைரியமாக சொல்லலாம். ஏனென்றால்  முருகு கொஞ்சம் சுமார் ரகம் தான். 

“முழிக்கிது…பாரு நல்லா மொச்ச கொட்ட கணக்கா”, பற்களை கடித்து கொண்டு சொன்னாள் அவள். கொஞ்சலா கோவமா என்றறியாத பிள்ளை திரு திருவென்றது. அக்கம் பக்கம் அரவம் பார்த்து, ஆள் யாரும் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டு பிள்ளையின் குஞ்சானுக்கு கிள்ளி முத்தம் குடுத்தாள். பிள்ளை ‘ஹக் ஹக்’ கென கெக்கலித்தது. 

முருகுவின் தலைச்சனை அள்ளி கொஞ்சுவது அவளுக்கு ஏனோ பிடித்திருந்தது. அந்த ‘ஏனோ’  என்பதில் தான் நிலைத்திருந்தது அவளின் மொத்த வாழ்வும். 

டைலர் சோமுவிற்கு செந்திருப்பில் பெண் பார்த்து வந்த செய்தி தான் அன்றைக்கு கடைத்தெரு முழுக்க பேச்சு. “பொண்ணு  சின்ன பிள்ளையாம்ப்பா. கொள்ளை அழகாம். மரப்பாச்சி கணக்கா இருக்காளாம்ய்யா. சோமுவுக்கு அடிச்சுது பாரு லாட்டரி” , அவன் கூட்டுக்கார்கள் கேலி பேசி சோமுவை விடைக்க  வெட்கத்தை மேலுக்கு மொண்டு ஊத்திக்கொண்டது போல சோமு வழிய வழிய வழிந்து நின்றான். 

இந்த கொஞ்ச நாளில் தான் கையில் காசு பார்க்க ஆரம்பித்திருந்தான் அவன். அவனின் முப்பதாவது வயதில். ஜெயராம் டைலரிடம் ஆரம்பகால தொழில் கற்றுக்கொண்ட சோமு ஒரு பத்து வருடங்கள் மெட்றாஸுக்கு  போய்  வந்ததிலிருந்து ஊருக்குள்  ஏக கிராக்கி. தனி கடையில் நியூ ஸ்டார் டைலர்ஸ்  என்று போர்டு மாட்டி தொழில் செய்யும் அளவுக்கு வளர்ந்திருந்தான். ஜெயராமன் கடையில் ஒட்டு போட்ட டவுசரை மாட்டிகிட்டு டீ வாங்கி கொடுத்து கொண்டிருந்த சின்ன பயல் இப்படி தனி கடை எடுத்து நான்கு மெஷின்கள் வரிசையாக போட்டு, ஒரு அஞ்சு ஆறு பேத்தை வேலைக்கு வைத்திருந்தது கண்டு  கண்கள் விரிய கனைத்து கொண்டது சின்னக் கடை தெரு.

வரும்படி கொஞ்சம் கூடிப்போகவே கடைக்கு வருவோர் போவோருக்கு டீ வாங்கி கொடுக்க வேண்டி ஒரு சின்ன பையனை தேடியதில் அவனின் உறவில் ஒரு பயல் இருப்பதாக கேள்விப்பட்டு  கஞ்சனூரிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தவன் தான் இந்த அத்தாச்சி பயல் முருகு. ஆம். அத்தாச்சி முருகு!

அவனுக்கு ஏனோ அப்படியொரு பட்டப்பெயர். ஒருவகையில் முருகு அவனுக்கு தம்பி முறை. சோமுவின் சித்தாப்பார் மகன். அவனை விட பதினைந்து பதினாறு வயது சின்னவன். அப்பாவின் அடி உதை தாங்க முடியாமல் சின்ன வயசில் வீட்டை விட்டு சோழபுரத்து பக்கம் ஓடிப்போன கொளஞ்சி சித்தப்பாவின் மகன். 

சித்தப்பா அங்கு போய் ஒரு ஓட்டலில் சர்வர் வேலையில் சேர்ந்திருக்கு. கடைக்கு அடிக்கடி வந்து போகும் எஸ்தர் நர்ஸுக்கு கொளஞ்சி சித்தப்பாவை பிடித்து போக. ஒருநாள் இருவரும் குமரன்குடி மாதா கோவிலில் கல்யாணம் பண்ணி கொண்டு அங்கேயே வாழ ஆர்மபித்திருக்கிறார்கள். எஸ்தர் சின்னம்மாவிற்காக சித்தப்பா  ‘கிருஸ்துராஜ் கொளஞ்சி’ யாக மாறியிருக்கு.

கொளஞ்சி சித்தப்பா எஸ்தர் சின்னம்மாவை கல்யாணம் கட்டி கொண்டது  வீட்டில் யாருக்கும் பிடிக்காமல் போக. வீட்டிற்கும் அவருக்கும் இருந்த கொஞ்ச நஞ்ச தொடர்பும் அற்று போய்  விட்டதாம். 

சித்தப்பா வீட்டை விட்டு ஓடிப்போன கதையை நினைக்கும் போதெல்லாம் சிரிப்பு தான்  வரும். அந்த சிரிப்பு கதையை கிழவி ஏன் சோகமாக சொல்கிறாள் என்பது இன்றுவரையில் சோமுவிற்கு புரிந்ததில்லை. 

ஒவ்வொரு  சித்திரையிலும் முத்தாச்சி அம்மன் கோவிலில் தீமிதி நடப்பது வழக்கம். அப்படி ஒரு திருவிழா  தான் சித்தப்பாவை வீட்டை விட்டு விரட்டியனுப்ப காரணமாகியிருக்கிறது. சித்திரை தீமிதி எங்கள் பக்கம் வெகு பிரபல்யம். சந்நிதிக்கு எதிரே உள்ள திடலை வார கணக்காக உழவாரம் செய்து திருத்தி செப்பனிட்டு பத்துக்கு ஐந்து என்ற அளவில் முழங்கால் ஆழத்துக்கு குழி வெட்டி அதில் ஆற்று மணலை பரப்பி, மஞ்சள் தெளித்து சவுக்கை விறகால் படுக்கை விரிக்கபடும். எண்ணெய் நெய் மண்ணென்னை கற்பூரம் விட்டு தகிக்க தகிக்க நெருப்பு வார்க்கபட்டு கனல் கக்க ஒரு பூக்குழி உண்டாக்கபடும். வேண்டுதல் பலித்தோரும்  வேண்டிக் கொண்டோரும் விரதம் இருந்து மஞ்சள் குளித்து பூக்குழி இறங்கும் சடங்கு நடைபெறும். கோவில் பூசாரி முதல் அடி எடுத்து வைக்க அவரை தொடர்ந்து கட கடவென ஒருவர் பின் ஒருவராக தீமிதித்து ஏற பொங்கல் படையலுடன் விழா நிறைவு பெறும்.

அதில் ஒரு அம்சம் தான் இறுதி நாளில் விடையாற்றியாக விரதமிருந்த  இளைஞர்கள் வேஷம் கட்டி ஆடும் பச்சை காளி பவள காளி ஆட்டமும் அதை தொடர்ந்து தீச்சட்டி ஏந்தி வரும் உலாவும்  இடம்பெறும். அந்த வேஷத்தை கட்டி ஆட இளைஞர்கள் அதற்காக வேண்டியே தயார் ஆவார்கள். கறி கவிச்சையின்றி நாற்பது எட்டு நாட்கள் கடுமையான விரதம் இருப்பார்கள். செருப்பு கூட அணியாமல் சித்திரை மாத  வெயிலை வெறும் பாதங்களோடு கடப்பார்கள். காலை மாலை என்று இருவேளை குளியல். ஈர துணியோடு பூஜை. ஒருவேளை மட்டும் கோவிலில் பொங்கச் சோறு.  மாதம் முழுவதும் வீதியுலா, உற்சவம், மண்டகப்படி என்று ஊரில் எந்த வம்பு தும்புக்கு போகாமல் கோவிலே கெதி. மஞ்சள் உடை. நெற்றி நிறைய சந்தனம். குங்குமம். கிட்டதட்ட காளியாகவே தங்களை எண்ணிக்கொள்வார்கள் காப்பு கட்டிய அந்த இளைஞர்கள். .

அனல் கக்கும் கண்களையும், கோரமான பற்களையும் கொண்ட  காளியின் தலையையும் முரட்டு தனமான மார்புகளையும், கொண்ட மர உடுப்பை அணிந்து கொண்டு ஆட தனி தகுரியமும், அந்த கனத்தை தாங்க வலுவும் வேணும் இல்லையின்னா அவ்வளவு  தான் வீதியிலே மடிந்து சாவ வேண்டியது தான் என்று கிழவி வியந்து சொல்லும். 

எட்டு கைகள். கைக்கு ஒன்று என்று எட்டு கொடூரமான ஆயுதங்கள். கால்களில் சதங்கைகள். மரவுரியில் காப்பு. நடு சாமத்தில் செண்டை முழவு, உறுமி, தவில், நாயனம் பரபரக்க, வெடிச்சத்தத்துக்கு ஊடே பச்சை காளியும் பவளக்காளியும் ஆவேசமாக   காளியாட்டம் ஆடி பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள்.  அவர்கள் விபூதி பூசும் பிள்ளைகள் நோய் நொடியின்றி திடகாத்திரமாக வளரும் என்று ஐதீகம், என்று கிழவி மேலும் சொன்னாள் .

இப்படி வருசா வருஷம் வேஷம் கட்டியாடும் மாரிமுத்து மாமா  அப்பாவின் கூட்டுக்காரர். மாமா டீ கடை வைத்திருந்தார். வயசு துடிப்பில் பீடி குடித்துக்கொண்டிருந்த கொளஞ்சி சித்தப்பாவை கடைத்தெருவில் வைத்து மாமா பொராடியிலே ரெண்டு போடு போட்டு கண்டிச்சு அனுப்பியிக்கிறார். அந்த கோவத்தில் இருந்த சித்தப்பா, பச்சைகாளி வேஷம் கட்டி ஆடி வரும் மாமாவிற்கு குடிக்க வைத்திருந்த நீர்மோரில் பேதி மாத்திரையை கலந்திருக்கு. வேஷம் கட்டி ஆக்ரோஷமாக வீதியில் ஆடிவந்த காளிக்கு வயிற்றை கலக்க அன்றைய திருவிழாவே நாறியிருக்கு. அவமானத்தில் மாமா குன்னிப்போய் வியாபாரத்தை கூட கவனிக்காமல் போனதாம் . பார்ப்பதற்க்கு சவலை பிள்ளை கணக்கா சுணங்கி போயிடுச்சாம். சித்திரை விழாவில் காளி வேஷம் கட்டி விஸ்வரூபம் எடுக்கும் மாமா ‘நான் காளியாயி டா’ என்று ஊரில் இறுமாப்புடன் நடக்கும் மாமா அப்படி குன்னி போய் இருப்பதை பார்க்க தாளாமல் அப்பா தான் தேற்ற முயற்சித்திருக்கிறார். பலன் இல்லை. அதற்கு பிற்பாடு தான் அப்பா சித்தப்பாவை அடித்து விரட்டிய கதையெல்லாம்  நடந்திருக்கு. 

பின்னர் வளர்ந்து ஆளாகி எஸ்தர் சின்னம்மாவை கல்யாணம் முடிச்சி இந்த அத்தாச்சி பயலும் பொறந்திருக்கான் அதெல்லாம் பெரிய கதை.  முருகு பயலுக்கு வயசு எட்டு இருக்கும்போது, ஒரு நாள் தீடீரென நெஞ்ச பிடிச்சிக்கிட்டு ரோட்டில் விழுந்திருக்கு கொளஞ்சி சித்தப்பா. பாவம்  சின்னம்மா தான்  தனி பொம்பளையா இருந்து இந்த அத்தாச்சி பயல ஆளாக்க படாத பாடு பட்டு இதோ இப்போ நம்ம வீட்டிலே ஒண்டி கிடக்குதுவோ என்று கிழவி எப்போதோ சொன்னவைகள் எல்லாமும் முருகுவை பார்க்கும் போது  சோமுவின் நினைவில் வந்து போயின.       

முருகு பதினைந்து வயதுக்கு மீறிய உடற் கட்டுடன் இருந்தான். எஸ்தரை போல நல்ல காய்ச்சிய இரும்பு கம்பி நிறம். கொளஞ்சியை போலில்லாமல் கொஞ்சம் அசமந்தமாக இருந்தான். சோமுவும் முருகுவும் ஒருவருக்கு ஒருவர் பேசிகொண்டாரில்லை. என்ன ஏன் என்ற முறையில் தான் இருந்தது அவர்களின் உறவு. 

அண்ணன் என்றோ வேறு உறவு சொல்லியோ முருகு சோமுவை அழைத்து யாரும் பார்த்ததில்லை. ஏன் என்றெல்லாம் அவனுக்கே தெரியாது. அண்ணன்  மீது அளவு கடந்த பாசம். அண்ணனின் சொல்லுக்கு மறுபேச்சு கிடையாது. வீட்டில் கடையில் இருந்த மற்றும் இல்லாத எல்லா வேலைகளையும் அவன் ஒருவன் தான் செய்தான். 

“ஏய், சின்னவனே அந்த ….”, என்று சோமு கூப்பிடும் போதே, “ஓவ்.. “, என்று  அவன் முன்னால் கை கட்டி பவ்யமாக நிற்பான் முருகு. சொல்வதை நிதானமாக கேட்டுவிட்டு பின்னர் “தொ வந்துட்டேன்” என்பான் இடுப்பு துண்டை உதறியபடி. 

அந்த வேலை முடிந்தது என்று வைத்து கொள்ளலாம். படு வேலைக்காரன்.

சோமுவின் கல்யாணத்தில்  சாமான்களை பார்த்து பார்த்து சமையலுக்கு எடுத்து கொடுப்பதிலிருந்து எச்சில் இலைகளை எடுப்பது வரையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான் அவன். சோமுவும் முருகுவை சித்தப்பார் மகன் என்ற உறவை தாண்டி சொந்த தம்பிமார் போல தான் பார்த்தான். அதுவரையில் அரைவேட்டியில் சுற்றி கொண்டிருந்தவன்  கல்யாண ஜோரில் பளிச்சென்று நின்றான் முருகு.  வாழ்க்கையில் முதல் முதலாக வேட்டி சட்டை அணிந்து கொண்டு பெரிய மனுஷ தோரணையில் அண்ணனின் கல்யாணத்தில் கால் ரோமங்கள் தெரிய வலம் வந்தான் முருகு.

சோமு கட்டிக்கொண்ட பெண் சற்றேறக்குறைய முருகுவின் வயதுடையவள். வயதுக்கு ஏற்றார் போல நல்ல வாளிப்பு உடம்பில். சோமுவிடமே வாய்விட்டு பேசாத முருகு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் அதுவும் தன் வயதுடையவளை எங்கனம் ‘அண்ணி’ என்றழைப்பது. எஸ்தரிடம், கிழவியிடம் என்றளவில் சன்னமாக ஒலித்து கொண்டிருந்த அவனின் குரல் அவள் வந்த பின்னால் முற்றிலுமாக அம்சடங்கிப்போனது. 

மூச்சு பேச்சில்லாமல் வீட்டிற்கு வருவான். திண்ணையில் உட்கார்ந்திருப்பான். அல்லது கிழவியிடம் எதையாவது வம்பளந்து கொண்டிருப்பான். அவள் சமையல்கட்டு குமைந்து கொண்டிருப்பாள். எதையாவது சமைத்திருப்பாள். கணவனுக்கும் கடையில் வேலைபார்க்கும் ஆட்களுக்கும் சாப்பாட்டை கூடையில் எடுத்து வைத்து விட்டு திண்ணை வரையில் ஒய்யாரமாக ஒரு நடை போய் வருவாள். அது தான் அவனுக்கான செய்தி. மட மடவென்று கொல்லை புரத்துக்கு  போய் முகம் கை கால் கழுவிவிட்டு முத்தத்தில் அமர்வான். அவள் அவனுக்கு சோறு வார்ப்பாள். இவன் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு எழுவான். மறுசோறு கேட்கக்கூட வாய் வராது. என்ன வென்று கூப்பிட்டு கேட்பது என்ற தயக்கம். பல நாட்கள் கூச்சப்பட்டுக்கொண்டு மொத சோற்றிலே எழுந்துகொள்வான். பிறகு இவனை பற்றி அறிந்து கொண்ட அவள் கடைசி பருக்கை சாப்பிடும் வரையில் அவனையே பார்த்து கொண்டு தூணோரமாக நிற்பாள். அவன் மோர் ஊற்றி கொண்டு தட்டத்தில் வாய்வைத்து  நீராகாரத்தை உறிஞ்சி சிந்திய சோற்று பற்றுகளை அள்ளி  வழித்து தட்டத்தில் போட்டு விட்டு கை அலம்பும் வரையில் அந்த தூணை விட்டு அகலமாட்டாள். 

அவள் சமைக்கும் சாப்பாடு முருகுவிற்கு பிடித்திருந்தது. ஒவ்வொரு வாய் சோறுக்கும் கண்களை சொக்கி தலையை ஆட்டுவான். 

சோறிடும் போது அவள் விரல்களை கவனிப்பான். அவை சின்ன சின்னதாக அழகாக இருக்கும். அவளின் விரல்களை காண நேர்கையில் அவன் எண்ணங்கள் எங்கோ போய்விட்டு மீளும்.  அவசரமாக தலையை வேகமாக உதறிக்கொள்வான். 

சாப்பாடு  வைக்கும் போது அவள் காட்டும்  நேர்த்தியும், பதறியபடி இவனின்  ‘ம்….ம்’ என்ற முனகலுக்கு வார்ப்பதை நிறுத்தும் நரிவிசும் அவனுக்கு பிடித்திருந்தது. 

கனிவோடு அவளின்  பாதங்களை பார்ப்பான். அவள் கட்டைவிரலால் மெட்டியை உரசுவாள். எதையோ சொல்வதை போல. சட்டென கண்களை சோற்றுக்குள் புதைப்பான். 

சோமுவுக்கு அவள் மேல் கொள்ளை பிரியம். அதன் பெருமிதம் தான் பருவம் தப்பாது பொழியும் மாரி போல அவள் வருடத்திற்கு ஒன்றை ஈனுவது. இப்படி ஏழு வருடங்கள் கழிந்தன. ஆறு பிள்ளைகள் ஆனது அதில் ஒன்று தப்பி போக ஐந்து பிள்ளைகளுக்கு அவள் முலையூட்டி கொண்டிருந்தாள். ஐந்தில் ஒன்று மட்டும் அவளின் சாயல். பிள்ளை நையென்று இருந்ததால் சோனி என்று அதற்கு  முருகு பெயரிட்டு அழைப்பது அவளுக்கும் விருப்பம் தான். 

இருபத்தி இரண்டு வயதுக்குள் அவள் பெருவாழ்வு வாழ்ந்து முடித்த பெண்மணி போல மாறியிருந்தாள். மார்பகங்கள் தளர்ந்து விட்டிருந்தன. ஆனால் முருகுவை காண நேரும் போதெல்லாம் தான் இன்னும் சின்ன பெண் என்றும் உன் வயதுக்காரி தான் என்பதும் போல கூடுதலாக வெட்கம் கொள்வாள். அது அவள் கல்யாணம் முடித்து முதல் முறையாக வீட்டிற்கு வந்ததை விட கொஞ்சம் தூக்கலாக இருக்கும். 

ஐந்து பிள்ளைகளுக்கு தாயாகி இருந்ததால் இப்போது அவள் பெரிய மனுஷி. முருகுவிடம் சாடை மாடையாக பேச துவங்கியிருந்தாள். “கடைய எடுத்து வச்சாசா, “அவுங்க கெளம்பிட்டாங்களா, “முன்னமே வந்துட்டிங்களா”,  “கோவிலுக்கு போயிருந்தேன் நேரமாச்சுது'” , “தோ வரேன்” என்று விரிந்தது பேச்சு. 

சொற்கள் முடிந்த போதெல்லாம் மெல்லியதாக புன்னகைப்பாள் அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவளுக்கும் தான். 

சோமுவிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தவள் ஒருமுறை அவனிடம் சத்தமாக சண்டை பிடித்தாள். 

“ஏங்க என்னா பொண்ணு பாத்துருக்கீங்க  அதுக்கு. பொண்ணா அது நல்லா குள்ள பிசாசு கணக்கா. கொஞ்சமாக வேணும் பொருத்தம் வேணா. அத்தை நிறத்திலாவது இருக்க வேணாமா பொண்ணு. இப்படியா போய் விழுறது. எனககென்னவோ இந்த பொண்ண சுத்தமா பிடிக்கல”, என்று முருகுவிற்கு பெண் பார்த்து வந்த நாளில் சோமுவிடம் பொருமி தள்ளினாள். அவள் அந்த குரலில் பேசியது சோமுவிற்கே புதிதாக இருந்தது.

“ந்த. பொண்ணு குடும்பம் நடத்தவா சினிமாவுல குடுக்கவா, எல்லாம் இது போதும்..பொண்ணுக்கு என்னா கொரைய நீயி கண்ட. அதுமில்லாம அவனையும் எத்தினி நாளக்கி ஓடும்பிள்ளையா வச்சிக்கிறது. அவனுக்கும் வயசாவுதா இல்லையா. அவன் சோட்டு பையன்க எல்லாமா பொண்டாட்டி புள்ளைன்னு திரியிறத பாத்தாக்க அவன் மனசு என்னா சங்கட்ட படும். இந்த பய ஒரு வாயில்லா பூச்சி. மறு சோறு கேக்கவே குறு குறுன்னு குந்தியிருப்பான்.. அவனா வந்து கேப்பான் எனக்கு கல்யாணம் பண்ணிவையின்னு.. நாம தான் அப்பங்காரன் ஸ்தானதுல இருந்து செஞ்சு பாக்கனும்” 

அவள் அத்தனை மொவளாசி செய்தது போல முருகுவிற்கு பார்த்த பெண் அப்படி ஒன்றும் மோசமாக இருக்கவில்லை. சின்ன பொண்ணா மரபாச்சி பொம்மை மாதிரி நல்ல முக லட்சனமாக தான் இருந்தாள். நிறமும் குறைச்சல் கிடையாது. உயரமும் சரிதான். இவளுக்கு தான் பெண் ஏனோ திருப்தியில்லாமல் இருந்தது. அந்த பெண் இவளை பார்த்து சிரித்த போது முகத்தை இறுக்கமா வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பெண்ணுக்கு பூ வைத்து விடும்படி கிழவியும், எஸ்தரும் சொன்ன போது காது கேளாதவள் போல யாரிடமோ சம்பந்தமில்லாமல் பேசி கொண்டிருப்பதாக பாவனை செய்தாள். பின்னர் சோமுவின் அதட்டலுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் போக, பூ சூட்டிவிடும் சாக்கில் புதுபெண்ணின் பின்னந் தலையில் ஒரு குட்டு வைத்தாள். வெட்க பூரிப்பில் இருந்த அவள் அதை உணரவில்லை. 

அன்று இரவு காரணமில்லாமல் சண்டை பிடித்தாள். சோத்தில் உப்பை அள்ளிக் கொட்டினாள். ஏன் என்றதற்கு எரிந்து விழுந்தாள். சாப்பிடாமல் படுக்க போனாள். தூக்கமில்லாமல் புரண்டுக் கொண்டிருந்தாள். நடுச்சாமம் எழுந்தவள் மூத்திரம் பெய்ய கொல்லை புறம் ஒதுங்கி சத்தமில்லாது செருமினாள். காலோடு சேர்த்து கண்களையும் கிணத்து நீரில் சேர்த்து அலம்பி  கொண்டாள். ஏனென்று புரியாமல் குழம்பினாள். தவித்தாள். தனக்குள்ளே புலம்பி தீர்த்தாள்.

சோனியை தன் மாரில் கிடத்திக் கொண்டு படுத்திருந்தான் முருகு.  கதைகள்  சொல்லி குழந்தையை தூங்க செய்தான். கண்களை இடை இடையே துடைத்துக் கொண்டான்.  

யார் யாரோ எதை எதையோ நினைத்து கொண்டிருந்த அந்த ஈர இரவில் சோமு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அவர்களை ஒருசேர காண நேரும் போதெல்லாம் இப்போது தான் புணர்ந்து எழுந்து வந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொள்வாள். கல்யாணம் முடிந்த மூணாவது மாதத்தில் மசக்கை கொண்டாள் வந்தவள். விசேஷ செய்தியை கேள்வியுற்ற போது முருகுவை சுட்டு எரித்து விடுவது போல நோக்கினாள் இவள். அவன் கை கால்கள் வெலவெலத்து போனான்.

அவர்கள் நிர்வானமாக சேர்ந்து இருக்கும் காட்சியை நினைத்து பார்த்து துக்கித்தாள். வாசாக்கு விட்டாள். பின்னர் “ஐயையோ தப்பு தப்பு அவுங்க நல்லா இருக்கணும்”  என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

வீம்புக்கு தானும் கற்பவதி ஆனாள் எழாம் முறையாக! இவள் அவளை பார்க்கும் பார்வை, எங்க வீட்டுக்காரரும் என் மீது பிரியமாத்தா இருக்காங்க என்பது போல மிதப்பாக இருக்கும்.

அவளை காட்டிலும் இவள் ரொம்ப அலட்டி கொண்டாள் ஏதோ முதல் பிள்ளை பெற்றடுக்க போவது போல.

வயிற்றை தள்ளி கொண்டே அவள் இவனை பற்றியும் இவள் அவனை பற்றியும் பேசிக்கொண்டார்கள். பெரும்பாலான சமயங்களில் சண்டை பிடித்தார்கள். சேர்ந்து கொல்லைக்கிருந்தார்கள். ஒன்றாக கோவில் குளம் என்று சுற்றி வந்தார்கள். ராவு சமாசாரங்களை கேலி பேசி கொண்டு சிரித்தார்கள்.

ரெண்டு பிள்ளை தாய்ச்சிக ஒரே வீட்டுல இருக்கிறது ஒருத்தி முகத்தை இன்னொருத்தி பார்க்கிறது பொறக்கிற புள்ளைக்கு நல்லது கிடையாது என்ற கிழவியின் பேச்சை இவள் கடைசி வரையில் கேட்கவில்லை. 

“பாத்து பாத்து” என்றவளை முறைத்து கொண்டே பிள்ளையை தூக்கினாள். நான் ஏழு பிள்ளை பெத்தவ, எனக்கு தெரியாதா , பெருசா புள்ள பெத்துருக்கா புள்ள ஊரு ஒலகத்துல இல்லாதத,  அனத்தாம இரு செத்த” சீறினாள்.

“அப்பூ…ஒங்க அம்மா கிடக்குறா..பெரிம்மா வந்துருக்கன் பாருங்க…பெரிம்மா.. தொ பாரு ஓங்க பெரிப்பாவ”

பிள்ளை கண்களை திறக்க முடியாத மயக்கத்தில் இருந்தது. 

“இந்தா வச்சுக்க.. ” ஒரு பத்து ரூபாய் தாளை சுருட்டி பிள்ளையின் கையில் திணித்தாள்.

பிள்ளை ஏங்குவது போல பாசாங்கு காட்டியது தூங்கிக் கொண்டே. “இந்தா” என்றாள்.

“வாங்கிக்க, அவுங்க கை ராசி வாங்கிக்க” என்றான் முருகு.

பிள்ளையை கொஞ்சிவிட்டு வீட்டிற்கு வரும்போது, “ஏங்க நம்ம பிள்ளை அது புள்ளைய விட அழகா தானே இருக்கும்” என்றாள். 

சோமு அவளை ஒரு மாதிரியாக பார்த்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.