ஆயுதம்

டீக்கடைக்காரன் அவசரமாய் டீயை ஆற்றினான். டீ வழிந்து தரையில் விழுந்தது. “சேகர்ணா” என்று சொன்னான். பாதி வார்த்தை வாயிலிருந்து வரவில்லை. சேகர் தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்தான். பொருந்தாத பாண்ட் சட்டை அணிந்திருந்த வேலு மேசைமேல் கைகளைக் கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்திருந்தான்.  தலைமுடி கலைந்து, தூங்காத கண்களுடன் அவன் முகம் வாடிப்போய் இருந்தது.  

ஒரு குழந்தையும் இரு உலகங்களும்

டிரவுசர் இளைஞன் பூனையின் அருகே அமர்ந்து அதன் தலையைத் தாங்கிப் பிடித்து கொஞ்சம் தண்ணீரை காயத்தின் மேல் ஊற்றினான். பூனை அசைந்தது. பூனையின் வாயருகே சில துளிகள் தண்ணீரை விட்டான். பூனை நாக்கை நீட்டி தண்ணீரைப் பருகியது. ஒன்றிரண்டு நொடிகளில் அதன் வாயின் ஓரத்தில் இருந்து நீர் சிவப்பாய் வழிந்து ஒழுகியது. பூனை தன் முன்னங்காலை அசைத்து முன்னே நீட்டி எழப் பார்த்து முடியாமல் மறுபடியும் அமர்ந்தது. மற்றொரு முன்னங்காலை வைத்து தன் உடம்பை இழுத்து மணலில் கொஞ்சமாய் நகர்ந்தது. பிரசாத் தலையை சிலுப்பிக் கொண்டு ஆனந்தியைத் தேடினான். அவள் அவனுக்கு முன்னால் நின்றுகொண்டு பூனையையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

ரத்னா

பாரதியார் காலனி நகர்ப்புற வளர்ச்சித் துறையால் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழ்நிலைக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டது. வடக்கில் செல்வசிந்தாமணிக் குளம், மெயின் ரோட்டில் இருந்து வழி குளக்கரையோர சாலையாக நீண்டு காலனியைத் தொடும், மேற்கே கவுண்டர் தோட்டம், கிழக்கே தனிவீடுகள், தெற்கே முள்ளுக்காடு. ஆங்கில எழுத்துக்கள் ‘A’ முதல் ‘T’ வரை இருபது பிளாக்குகள், தளத்திற்கு நான்கு என்று இரண்டு மாடிகள் கொண்ட ஒவ்வொரு பிளாக்கிலும் இரண்டு பத்துக்குப்பத்து அறைகள் கொண்ட பன்னிரண்டு வீடுகள். இருநூற்றி நாற்பது வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டதும் 1980ல் குலுக்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

மாநகரம்

இரு நிமிட அமைதி. திடீரென குடிகாரன் திமிறி முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க சேகரின் பிடி நழுவியது. குடிகாரனின் சட்டைக் காலரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காவலன் அவனைப் பின்னால் இழுத்தான். குடிகாரன் முன்னே செல்ல முடியாமல் திணற அவன் கையைப் பிடித்து முறுக்கிய சேகர் “த்தா எங்க போற?” என்று அதட்டினான். குடிகாரன், “சார் சார் சார், வலிக்குது… விடுங்க விடுங்க” என்றான்.

ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்

பிரேமா மூடிய கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அடுத்த பாடலை ஓடவிட்டாள். அவள் காதுகளில் ஒரு ரயில் மெதுவாக டுடுன் டைன்டுடுன் டுடுன் டைன்டுடுன்… என்று தீனமாக ஆரம்பித்து வேகமெடுத்து பாலத்தில் ஓடும்போது பாடலில் ஓ சாயா…(O saya) என்று ரஹ்மானின் குரல் ஆரம்பித்தது. ரயில் இன்ஜின் ஓசை, இரும்புடன் இரும்பு சேர்ந்தோடும் ஓசை, ஓடும் ரயிலில் கதவைத் திறந்து வாசலில் நின்று தலையை வெளியே நீட்டி மனம் விட்டுக் கத்தினால் வரும் ஓசை போன்ற அர்த்தம் இல்லாத ஓசைகள் அந்தப் பாடலில் இசையானது.

உன் பார்வையில்

பாட்டிலைக் காண்பித்து அவர்கள் போனதும் மீதமிருக்கும் இரு மடக்கு பியரை குடித்துவிட்டுப் போகலாம் என்று விக்னேஷ் உன்னிடம் கண் ஜாடையில் சொல்கிறான். நீ வேண்டாம் என்று தலையசைத்து பாட்டிலை வீசச் சொல்லி கண் காட்டுகிறாய். விக்னேஷ் மறுத்துத் தலையசைத்துச் சிரிக்கிறான். திடீரென ஒரு சைரன் ஒலி கேட்கிறது. சாலையில் ஒரு போலீஸ் ஜீப் தலையில் சுழலும் விளக்குகளோடு வந்து நிற்கிறது. உங்களுக்கும் ஜீப்புக்கும் நடுவே நிற்கும் பாஸ்கரும் ஜெயபாலும் சல்யூட் அடிக்கின்றனர். ஜீப்பின் முன்னிருக்கையிலிருந்து திரண்ட உடல்வாகுடன் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு காவல் அதிகாரி இறங்குகிறான்.

சில்லறைகள்

நான் தெரியும் என்று தலையாட்டினேன். அவள் தொடர்ந்தாள், “துர்கா பூஜைக்கு கொல்கத்தா எங்கும் வெச்சு வணங்கும் துர்காமாவோட மண் சிலை இருக்கே? எங்களை மாதிரி ஒரு பொண்ணு வீட்டுக்கு பூசாரி வந்து வேசி வீட்டுவாசல் மண் வாங்கி கலக்காமல் எந்த துர்கா சிலையும் செய்ய மாட்டாங்க. மரியாதையைப் பத்தி நீ எங்ககிட்ட பேசறயா? கிளம்பு இங்க இருந்து.”
பேசிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.

அவளும்

அப்படித் தன்னிடம் எதைப் பார்த்து திருமணம் வரை வந்து விட்டான் இவன் என்று ராணி யோசித்தாள். குமரேசன், கல்லூரியில் கூடப் படித்த சபரி, தன்னோடு வேலை செய்த கௌரிஷங்கர், இவர்களும்தான் காதலித்தார்கள், எவனாவது கல்யாணம் என்று வந்து நின்றானா? …
சந்திரன் வீட்டினர் சந்தோஷமாய் உணவருந்திவிட்டுச்  சென்றதும் ராணி சமையலறையில் அம்மாவுக்கு உதவிக்கொண்டே சொன்னாள் “எல்லாத்துக்கும் சரீன்னு சொல்லறான். டயலாக் வேற பேசறான். அதுதான் சந்தேகமா இருக்கு.” 

தனித்த வனம்  

கை அசைத்து வந்து நின்ற டாக்ஸியில் அமர்ந்து “கோவைப்புதூர், உறவுகள் எல்டர்ஸ் சொசைட்டி” என்றேன். ஆயிரம் ரூபாய் சார் என்றான். தலையை ஆட்டினேன். அப்பா இருந்திருந்தால் தீனமான குரலில் அவருக்கே உரிய கிண்டலுடன், “அதான் போயிட்டேனே, இனி எதுக்கு அவசரமா டாக்ஸி புடிச்சு வர்றே. உக்கடம் வந்தா நிறைய பஸ் காலியா கிடைக்கும். பழைய பஸ்ல ஏழு ரூபா டிக்கெட் எடுத்து பொறுமையா வா” என்று சொல்லி இருப்பார்.