தங்க நகரம்

இருள் அப்பிக் கிடக்கும் காடு. இரவென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். பகல் தான். சூரியனின் ஓரிரு கீற்றுகள் மட்டுமே உடலில் பாய்ந்த கூர்வாள்கள் போன்று அங்கும் இங்கும் கருமையை ஊடுருவியது. மலை போன்று உயர்ந்த மரங்களின் இலை பரப்பு கதிரவனை முகம் காட்டாதவாறு மறைத்தது. நகரங்களில் காணும் ஃப்லை ஓவர் பாலங்களின் ராட்சத தூண்கள் போன்று மரங்கள் விண் நோக்கி நின்றன. மேகங்கள் இல்லாமலேயே காட்டினுள் மழை பெய்தது. அதிசயம். இருட்டையும் ஈரத்தையும் குழப்பி கலைத்தவாறு ஒரு தபவெப்ப நிலை. பிசுபிசுக்கும் கதகதக்கும் ஈரப்பதம். தாவரங்கள் ஒரு கரும்பச்சையாய் தோற்றம் அளித்தன. அவற்றின் அடர்த்திக்கு உவமை கூற வேண்டுமென்றால் மெட்ரோ ரயில்களின் நெரிசலை சொல்லலாம். சூரியனின் வெளிச்சத்திற்கு போட்டிப்போட்டு கொண்டு நீண்ட பெரும் மரங்களின் நிழலில் ஒளிக்கு பிச்சை கேட்பவர்களாய் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு இருந்த செடி கொடிகள். புழுக்கத்தின் நடுவில் பூச்சிகளின் ரீங்காரமும் சத்தமும் எரிச்சலூட்டும் ட்ராஃபிக் ஒலிகளை ஒத்திருந்தது. ஈக்களும் கொசுக்களும் உடலை மொய்த்தன. இந்த அசௌகரியங்களை பொருட்படுத்தாது ஜானும் தன் நெறியாளரான மார்க்கும் பிரோ பழங்குடியின உதவியாளர்களும் தம் அகழ்வு தொழிலை இடைவிடாது செய்து கொண்டிருந்தனர். அந்த அமேசான் காட்டினுள் அழிந்துவிட்ட இன்கா நாகரிகத்தின்  எச்சங்களை தோண்டி ஒரு மாத காலமாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.   

மார்க் அமெரிக்காவிலுள்ள ந்யூ யார்க் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் பல ஆண்டுகளாக இன்கா சாம்ராஜியத்தை பற்றியும் அதன் வர்த்தகத்தை பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தார். இவரின் புது அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் தொல்லியல் வட்டத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இன்கா நாகரிகத்தினர் பெரும் செல்வத்தை கொண்டிருந்தனர். அதிலும் தங்க பரிவர்த்தனை வளமோங்கி இருந்தது என்ற விடயங்களை பொது வெளிக்கு தன் ஆராய்ச்சி கட்டுரைகளால் கொண்டு வந்தார். இப்பொழுது சில ஆண்டுகளாக இன்கா புராணங்களில் கூறப்படும் அந்த ஏழு நகரங்களை கண்டறிய முனைப்புடன் இருந்தார். துணைக்கு தன் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவனான ஜானும் இருந்தான். அவன் ‘இன்காவினரின் தங்க நாணயங்கள்’ என்ற தலைப்பில் தன் ஆராய்ச்சி கட்டுரையை எழுதி வந்தான். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் பெரூ நாட்டிலுள்ள அமேசான் காட்டின் நடுவில் தங்கள் இன்கா சார்ந்த அகழ்வாராய்ச்சியை செய்வது வழக்கமாய் இருந்தது.

பெரூ நாடு அமெரிக்காவை போல் அல்ல. அது வெப்ப மண்டலத்தில் இருக்கும் ஒரு நாடு. ந்யூ யார்கின் மே மாத இதமான வெயிலை அங்கு எதிர்பார்க்க முடியாது. பெரூவின் தலைநகரமான லிமாவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது காற்றின் சூடும் ஈரமும் அவர்களை வரவேற்றது. அங்கிருந்த பல்கலைக்கழகங்களின் கூட்டு உதவியுடனும் தம் யூ. எஸ்ஸில் உள்ள ந்யூ யார்க் பல்கலைக்கழகத்தின் உதவி தொகையினாலும் மார்க் மற்றும் ஜானின் இந்த ஆராய்ச்சி பயணம் சாத்தியமானது. இன்கா சாம்ராஜியமும் அதன் நாகரிகமும் பெரூ நாட்டின் வரலாற்று மற்றும் பண்பாட்டில் பெரும் முக்கிய இடத்தை வகித்தது. அதனால் அவர்களின் முனைவுகளுக்கு தாராளமான தொகை உதவி வந்து சேர்ந்தது. சகல வசதிகளும் செய்யப்பட்டன.

விமான நிலையத்தில் அவர்களுக்கு கார்லோஸ் காத்துக்கொண்டிருந்தான். கார்லோஸ் கோமெஸ் அவனது முழு பெயர். வெறும் வாகன ஓட்டுனராக மட்டுமல்லாமல் மார்க் மற்றும் ஜானுக்கு கைடாகவும் மொழிப்பெயர்ப்பாளனாகவும் பெரூ நாட்டின் இஸ்பானிய கலாச்சார நுணுக்கங்களை எடுத்துரைக்கும் களஞ்சியமாகவும் இருந்தான். கார்லோஸ் அன்றி மார்க் தனது ஆராய்ச்சி திட்டங்களை நடைமுறை படுத்திருக்க முடியாது. மார்க்குக்கும் ஜானுக்கும் மொழி பெரிய தடையாக இருந்தது. ஓரிரு இஸ்பானிய சொற்களையே அறிந்திருந்தனர். இந்த விஷயத்தில் கார்லோஸ் பெரும் உதவியாக இருந்தான். பெரூவின் நல்ல நல்ல உணவுகளையும் அவர்களுக்கு பரிந்துரை செய்வான். 

தற்பொழுது அவர்கள் விமான நிலையத்திலிருந்து லிமா நகரத்தின் மத்தியில் உள்ள தங்கள் விடுதிக்கு சென்றுகொண்டிருத்தனர். 

வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த கார்லோஸ் திடீரென “அந்த ஏழு தங்க நகரங்கள் இருந்தது உண்மையா சார்?”, என்று மார்க்கிடம் கேட்டான். 

“ஆமா கார்லோஸ். எங்களோட அகழ்வுல ரெண்டு மூனு நகரங்கள கண்டுபிடிச்சோம். தங்க புழக்கம் இன்கா மக்களிடையில நிறைய இருந்த மாதிரி தெரியுது. ஆனா புராணங்கள்ல சொல்லப்படுற மாதிரி பெரிய தங்க சிலைகள் ஒன்னும் கிடைக்கல.”

“ஓ! இஸ்பானிய காலனியர்கள் சொன்னா மாதிரி எல் டொராடோ நகரம் தென்படலையா?”

“தென்படல. இஸ்பானிய காலனியர்களோட குறிப்புகள பாத்தா எல் டொராடோ அல்லது தங்க நகரம் மிகவும் செழிப்பானதா இருக்கும்னு தோணுது. தங்க நாணயங்களும் சிலைகளும் பொருட்களும் குவிந்து கிடக்கும் நகரம்னு சொல்லப்படுது. நாங்க தங்க நாணயங்கள் சிலத கண்டெடுத்தோம். ஆனா புதையல் அளவுக்கு ஒன்னும் இதுவர கண்டுபிடிக்கல.”

“இந்த முறை கண்டுபிடிப்பீங்க சார்”, என்று தைரியமளித்தான் கார்லோஸ். 

கார்லோஸ் கூறியது மார்க்கின் மனதில் திரும்பத்திரும்ப ஓடியது. இந்த முறை இன்கா சாம்ராஜ்யத்தின் மொத்த தங்க குவியலை கண்டெடுக்க வேண்டும். எல் டொராடோவை கண்டுபிடிக்க வேண்டும். இஸ்பானிய மொழியில் ‘எல் டொராடோ’ என்றால் தங்க நகரம் என்று அர்த்தம். இன்கா நாகரிகத்தில் ஏழு நகரங்கள் இருந்தன என்றும், அவற்றுள் ஒன்று தான் எல் டொராடோ என்றும் நிறைய காலனிய குறிப்பேடுகள் கூறுகின்றன. அந்த நிகரற்ற செல்வத்திற்கு நேர் சான்றுகளாக நிறைய டைரி குறிப்புகள் இருக்கின்றன. தீயில்லாமல் புகையாது என்ற மரபு மொழியை மார்க் நினைவூட்டினான். எல் டொராடோவின் செழிப்பை கூறும் இந்த கதைகளில் உண்மை கொஞ்சம் இருக்கும் என்றே அவருக்கு தோன்றியது.        

விடுதியை வந்தடையும் பயணம் முழுவதிலும் கார்லோஸ் வெவ்வேறு இஸ்பானிய காலனியர் பற்றிய கதைகளை கூறி வந்தான். பெரூவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் போல கார்லோஸும் கலப்பு இனத்தவன் தான். காலனிய ஆதிக்கம் செலுத்திய இஸ்பானியருக்கும் பூர்வக்குடி மக்களுக்கும் பிறந்த கலப்பு இனம் தான் அவனது மரபணுவின் அடையாளம். இஸ்பானியார்கள் பல பழங்குடிகளை கொன்று வீழ்த்தி தான் தென் அமெரிக்காவின் பெரும் பகுதிகளை தங்கள் கீழ் கொண்டு வந்தனர். பெரூ, சிலே, மெஹிகோ, அர்ஜன்டீனா போன்ற பல நாடுகளின் கதை இதுவே. இன்று லத்தினோ என்று கூறப்படும் தென் அமெரிக்க மக்களின் ரத்த சரித்திரம் இதுவே. ஆதிக்கம் செலுத்தியவனின் ரத்தமும் ஆதிக்கம் தன் மேல் செலுத்தப்பட்டவனின் ரத்தமும் கலந்த வரலாற்றை தன் தனிப்பட்ட குடும்பத்தின் கதை மூலம் கார்லோஸ் கூறினான். பெரூவின் பழங்குடி ஒன்றில் பிறந்த தன் பாட்டி ஒரு இஸ்பானியரான தன் தாத்தாவை மணந்த காதல் கதையை கூறினான். கார்லோஸ் போன்ற பல தென் அமெரிக்கர்கள் அல்லது லத்தினோக்கள் தங்கள் பூர்வக்குடி வேர்களை விட்டுவிட்டு முழுவதும் ஸ்பானிஷ் பேசும் பிரஜைகளாய் மாறின. இதனால் பல பழங்குடி மொழிகள் அழிந்து விட்டிருந்தன. எஞ்சியுள்ள மொழிகள் அமேசான் காடுகளில் வசிக்கும் காட்டார் குடிகளின் தாய்மொழியாக குறைந்த எண்ணிக்கையால் பேச பட்டு அழிவின் விளிம்பில் காத்திருந்தன. இவர்கள் தாம் வரலாற்றில் இன்கா பேரரசின் குடிமக்களாய் பெருமையுடனும் பண்பாட்டுடனும் வாழ்ந்து வந்தனர். கார்லோஸ் எவ்வளவு தன் இஸ்பானிய பாரம்பரியத்தை நேசித்தானோ அதே அளவு தன் பழங்குடி வேரினையும் பெருமையுடன் கருதினான். இதனாலேயே ஸ்பானிஷுடன் தன் பாட்டி பேசிய பிரோ மொழியையும் கற்று பேசி வந்தான். பிரோ பேசக்கூடிய திறன் கொண்டதாலேயே மார்க் அவனை கைடாக இருக்க தீர்மானித்தான். இன்கா நாகரிகத்தின் சிதிலமடைந்த எச்சங்கள் பெரும்பாலும் பிரோ பழங்குடியினர் வாழும் காட்டு பகுதியிலே இருந்தது. மார்க்கின் அகழ்வால் தோண்டி எடுக்கப்பட்ட அந்த ஒன்றிரண்டு இன்கா நகரங்கள் பிரோ கிராமங்களுக்கு அருகிலேயே இருந்தன. இன்று காடுகளாக தோற்றமளிப்பது ஒரு நாள் நகரங்கள் முளைத்திருந்த இடமாய் இருந்தது. அகழ்வு பணி தனி நபரால் செய்ய இயலாது. பல கைகள் சேர்ந்து தான் பூமியை தோண்டி மண்ணை அகற்றி வரலாற்றின் எச்சங்களை கண்டறிய முடியும். கார்லோஸின் உதவியுடன் மார்க் பிரோ ஆண்கள் சிலரை அகழ்வு வேலைக்கு உதவ ஏற்பாடு செய்தான். மார்க், ஜான், கார்லோஸ் மற்றும் பிரோக்கள், இவர்கள் அனைவரின் முயற்சியாலே தான் ஒவ்வொரு வருடமும் புதைந்த இன்கா நகரங்களை வெளிக்கொண்டு வரப்பட்டன. 

விடுதி அடைந்த மார்க், ஜான் மற்றும் கார்லோஸ் தத்தம் அறைகளில் பயண களைப்பால் ஓய்வெடுத்தனர். ஒரு சிறு தூக்கத்திலிருந்து எழுந்த மார்க் அறையிலிருந்த மேஜை ஒன்றில் அமர்ந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இஸ்பானிய காலனியர் ஒருவரின் டைரியை வாசிக்க துவங்கினான். இது போல பல டைரிகள், குறிப்புகள், காலனிய கதைகள் மற்றும் புராணங்களை மார்க் படித்திருக்கிறான். மேற்கத்திய உலகத்திற்கு இன்கா, ஆஸ்டெக் போன்ற அமெரிக்க நாகரிங்கங்களை பற்றிய விவரங்கள் இந்த இஸ்பானிய காலனிய எழுத்துக்களின் கண்ணோட்டத்தினாலேயே வந்தடைந்தது. செவ்விந்தியர்கள் என்றழைக்கப்பட்ட அமெரிக்காவின் பூர்வக்குடிக்கு இப்படி ஒரு பிரமிப்பூட்டும் நாகரிக வரலாறு உள்ளது என்பது இந்த இஸ்பானிய எழுத்துக்கள் மூலமே ஐரோப்பியர்கள் முதலில் அறிந்தனர்.  யூ. எஸ்ஸில் பிறந்து வளர்ந்த மார்க் தன் பால்ய காலத்தில் எல் டொராடோ பற்றிய குறிப்பை வரலாற்று புத்தகம் ஒன்றில் படித்தான். அந்த நகரத்தின் பிரம்மாண்டம் செழிப்பு ஆகியவற்றை பற்றி படித்த மார்க்கின் மனதில் அது ஆச்சர்யமூட்டியது. ஆழமாய் பதிந்தது. புதையலை தேடும் வேட்கை கொண்ட பல ஐரோப்பியர்களின் இலக்காய் அது இருந்தது. அவர்களின் சாகச கதைகளை படித்து வளர்ந்த மார்க்குக்கு அது புதுமையை கண்டறியும் தாகத்தை உண்டாக்கியது. பழமையை நாடி புதிய கண்டுபிடிப்புக்களை செய்யும் தொல்லியல் நிபுணராக ஆக வேண்டும் என்ற லட்சியம் அவன் சிறு பருவத்திலேயே உண்டாயிற்று.                                                                        

நடு ராத்திரியில் அந்த டைரியை வாசித்த மார்க்குக்கு ஒரு சூக்ஷமமான விடயம் தோன்றிற்று. எல் டொராடோ என்ற ஸ்பானிஷ் சொல் ஒரு பெயரடை. இது ஒரு நகரத்தை மட்டும் தான் குறிக்கும் என்றல்ல. ஒரு பள்ளத்தாக்கை குறிக்கலாம். தங்கமான பொருள் ஒன்றாக கூட இருக்கலாம். ஏன் எல் டொராடோ ஒரு மனிதனை குறிக்கும் அடையாக கூட இருக்கலாம். இதை நாம் ‘தங்க’ என தொக்கி நிற்கும் பெயரெச்சமாகவே தமிழில் மொழிபெயர்க்க முடியும். அதன் பின் நகரம், பொருள், ஆள் என எந்த பெயர்ச்சொல்லையும் கொண்டு முடிக்கலாம். இந்த எண்ணத்தை அந்த டைரியின் பக்கம் ஒன்றின் ஓரத்தில் குறித்து கொண்டான்.          

மார்க்கின் பக்கத்து அறையில் தான் ஜான் தங்கி இருந்தான். அவன் தொல்லியலில் முனைவர் பட்ட படிப்பின் மூன்றாவது ஆண்டில் இருக்கின்றான். களப்பணிக்கான ஆண்டு. பெரூ நாட்டிற்கு இது அவனது முதல் பயணம். சிறு வயதில் இருந்தே அவன் பொருட்களை சேகரிப்பதில் தனி ஆர்வம் கொண்டிருந்தான். கடிதங்களில் ஒட்டியிருக்கும் பல நாட்டு தபால் தலைகள், கடற்கரை ஓரம் எடுத்த கூழாங் கற்கள், பறவைகளின் பல வண்ண சிறகுகள், படிக்க தெரிந்த பின்னர் செய்தி தாள்களில் வரும் செய்தி துண்டுகள் என பல விடயங்களை சேகரிக்கும் பழக்கம் இருந்தது அவனுக்கு. புராதன நாணயங்களையும் சேகரித்தான். அதன் வழியே அவனுக்கு தொல்லியல் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. வெறும் கிரேக்க ரோமானிய நாணயங்களை சேகரித்த அவனுக்கு அமெரிக்க நாகரிகங்கள் நாணயங்கள் கொண்டிருந்தன என்பதும் பிற சமகால நாகரிகங்களுடன் நாணய வர்த்தக பரிவர்த்தனை செய்தன என்பதும் வியப்பூட்டும் விடயமாக இருந்தது. மார்க் எழுதிய அந்த செய்தி துணுக்கு தொல்லியல் இதழ் ஒன்றில் பிரசுரம் ஆகியிருந்தது. தொல்லியலில் தன் முதுகலை படிப்பை முடித்த ஜான் மார்க்கிடம் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்ள தீர்மானித்தான். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்த ஜான் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான். பெரூ நாட்டிற்கு முதல் முறை என்பதால் சகல ஏற்பாடுகளுடனும் தயாருடனும் வந்திருந்தான். பெரூ நாட்டு உணவு சற்றே காரசாரமாக இருக்கும் என்பதால் வயிற்று உபாதைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்தான். வெயிலையும் சூடையும் தாங்க சன்ஸ்க்ரீன் கழிம்பும் மெல்லிய பருத்தி உடைகளும் அகலமான விளிம்பு கொண்ட தொப்பியும் கொண்டு வந்திருந்தான். களப்பணி நடப்பது பிரோ கிராமம் ஒன்றுக்கு அருகில் என்பதால் அங்கேயே கூடாரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தன. கொசு பூச்சிகள் அண்டாமலிருக்க தோலில் பூசப்படும் கழிம்பு ஒன்றும் வைத்திருந்தான். ஏதேனும் அவசர மருத்துவ தேவை ஏற்பட்டால் காட்டினுள்ளேயே அதற்கு வசதி செய்திருப்பதாக மார்க் கூறியிருந்தார். இன்னும் ஒரு சில நாட்களில் லிமாவிலிருந்து அந்த பிரோ கிராமத்திற்கு சிறு விமானம் ஒன்றில் மார்க், ஜான் மற்றும் கார்லோஸ் புறப்படுவார்கள். நியூ யார்க் போன்ற பெரு நகரங்களை ஆங்கிலத்தில் ‘கான்க்ரீட் ஜங்கில்’ என்றழைப்பனர். கான்க்ரீட்டால் ஆன பெரும் காடு என்று பொருள். ‘கான்க்ரீட்’ காட்டிலிருந்து நிஜ காட்டிற்கு செல்ல போகிறோம். அதன் அனுபவம் எப்படி இருக்குமோ என்று ஜானுக்கு பயம் கலந்த உற்சாகம். இந்த முறை எல் டொராடோவை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற மார்க்கின் கூற்று ஜானுக்கு மேலும் பரவசத்தை ஊட்டியது. அந்த வளமிக்க தங்க நகரத்தை கண்டு பிடித்த முதல் நபர்கள் என்று தன் பெயரும் வரலாற்றில் இடம் பெற கூடும் என்ற எண்ணமே ஜானுக்கு மன எழுச்சியை தந்தது.

…………………………………………………………………………………………………………

அமேசான் என்னும் பெரும் நதியின் ஒரு கிளையின் ஓரம் அமைந்திருந்தது அந்த பிரோ கிராமம். வெறும் பத்து குடிசைகளை கொண்ட ஒரு கிராமம். அதன் பக்கத்திலேயே ஆராய்ச்சிக்கான ஒரு கூடமும் தங்குவதற்கான கூடங்களையும் அமைத்திருந்தனர். லிமாவிலிருந்து ஐந்து மணி நேர பயணமாயிருந்தது விமானத்தில் அந்த கிராமத்தை அடைய. காட்டின் புழுக்கமும் வெயிலும் முதல் சில நாட்களில் அவர்களை வாட்டியது. நாட்கள் செல்ல அதுவே பழக்கமாயிற்று. கூடாரங்கள் பெரிதாகவும் வசதியாகவும் இருந்தாலும் உள்ளே வெப்ப ஈரப்பதம் ஊடுருவியது. வெளியில் இருந்த’பூச்சி தொல்லை உள்ளே இல்லை. அதனால் இரவுகள் ஒரு அளவிற்கு சௌகர்யமாய் இருந்தன. அகழ்வு செய்யும் தலம் அங்கு ஓடிய அமேசான் நதியின் மேற்கு கரையில் அமைந்திருந்தது. அந்த கிளை நதியை பிரோ அருவி என்றே அழைத்தனர். பிரோ கிராமமும் அவர்களின் கூடாரங்களும் மேற்கு கரையிலேயே அமைந்தது வசதியாய் இருந்தது. அருவியை கடந்து கிழக்கு கரைக்கு அவர்கள் சென்றதில்லை. அங்கும் சில பிரோ கிராமங்கள் இருக்கின்றன என்று காட்டு மக்கள் சொல்ல கேள்வி பட்டனர். புவியின் மத்திய ரேகைக்கு அருகிலிருந்ததால் சூரியன் தாமதமின்றி தினமும் ஆறு மணி அளவில் உதித்துவிடும். எட்டு மணிக்கெல்லாம் மார்க், ஜான் மற்றும் பிற பிரோ ஆண்கள் சிலர் எல்லாம் அகழ்வு பணியை துவங்கி விடுவர். தற்போதைக்கு ஒரு மேடான பகுதியில் அமைந்த இன்கா கோவில் இடிபாடுகள் சிலவற்றை தோண்டி கொண்டிருந்தனர். அன்று அகழ்வில் ஒரு பெரிய சமன் தளத்தை கண்டறிந்தனர். இந்த உச்சி தளத்தை அடைய சுமார் பத்து பெரிய படிகள் அமைந்திருந்தது. ஒரு சிறிய பிரமிடு போல் இருந்தது. ஆட்கள் நிற்க கூடிய ஒரு பெரிய மேடை போன்றே தோன்றியது. அந்த உச்சி தளத்தின் நடுவில் சதுர வடிவில் ஒரு கல் எழுப்பப்பட்டிருந்தது. அதில் சில சித்திரங்களும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அதை வெகு நேரம் மார்க் ஆராய்ந்து தன் குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். ஜானை அருகில் அழைத்து அந்த கல்லை சுட்டி காட்டினார். பார்ப்பதற்கு அது ஒரு துணியை அடித்து துவைக்கும் துவைகல் போன்று தோன்றியது. அதன் மேற்பரப்பில் எல்லாம் பச்சை பாசி படர்ந்திருந்தது. ஆங்காங்கே சில மஞ்சள் மற்றும் சிவப்பு கறைகள் போல் திட்டுகள் தெரிந்தன. திடீரென மின்னல் தாக்கியது போல மார்க் ஆச்சர்யத்தில் கண் விழித்தார்.

“ஜான் இது என்னன்னு தெரியுதா?”

“இல்ல மார்க்”

“இது ஒரு பலிபீடம். இன்கா மக்கள் நரபலி செஞ்சாங்கன்னு கேள்வி பட்டோம் இல்லையா? அது உண்மை! இங்கே பார்.”, என்று கூறி அந்த மஞ்சள் கலந்த சிவப்பு கறைகளை காட்டினார். கல்லின் பக்கவாட்டில் வடிக்கப்பட்டிருந்த இன்டியின் (இன்காவினரின் சூரிய தெய்வம்) உருவத்தை காட்டினார். ஜான் படித்திருந்த இன்கா புராணங்களில் இன்டி கடவுளுக்கு மனிதர்களை பலி கொடுத்தனர் என்ற விடயம் இருந்தது. இது பலிபீடம் என்றால் அந்த பிரமிடு இன்டி கடவுளின் கோவிலாக தான் இருக்க வேண்டும். அவர்கள் அகழ்வு செய்த முதல் இன்கா கோவில் அது என்பது அவர்களுக்கு பெரும் பரவசத்தை ஊட்டியது. அந்த பிரமிடு ஒரு அளவுக்கு முழுதாக அகழ்வு செய்யப்பட்டுவிட்டதால் மார்க் அதை ஆவணப்படுத்த துவங்கினார். சில மனித எலும்பு கூடுகளையும் அங்கே கண்டெடுத்தனர். அந்த தலம் பலிபீடம் என்பதற்கு சான்றாக, கண்ட எலும்பு கூடுகளின் தலைகள் தனியாக சிதைக்க பட்ட மாதிரி இருந்தன. அன்றிரவு மார்க்கும் ஜானும் உற்சாகத்தின் உச்சியில் ஆவணப்படுத்துவதில் தீவிரமாக மூழ்கியிருந்தனர். அடுத்த நாள் அவர்களுக்கு ஆச்சர்யமூட்டும் வேறொரு செய்தி காத்திருந்ததை அறியாது அன்றிரவு கழிந்தது.   

அடுத்த நாள் காலை, ஜான் ஒரு பெரும் சத்தத்தை கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து கொண்டான். தன் கூடாரத்தை சுற்றி மக்களின் ஆராவாரம் கேட்டது. துயில் கலையாத கண்களை துடைத்து கொண்டே வெளியே சென்றான். பிரோ கிராமத்திற்கும் அமேசானின் கரைக்கும் நடுவே தான் அவனது டென்ட் போடப்பட்டிருந்தது. நாலைந்து பிரோ இளைஞர்கள் கையில் கூர் வேலை ஏந்தி கொண்டு அவனின் கூடாரத்தை தாண்டி நதி கரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து அவனும் ஓடினான். ஒரு காட்டு பன்றியை அவர்கள் துரத்திக்கொண்டு ஓடுவதை அப்போது தான் அறிந்தான். முன் ஓடிய அந்த இளைஞர்கள் தற்போது பன்றியை சுற்றி வளைத்தனர். ஒரு புறம் நீரும் மறு புறம் கூர் வேல்களும் என வசமாக சிக்கி கொண்டது அந்த பன்றி. எதிர்பாராத விதமாக அந்த கிழக்கு நதி கரையில் ஒரு படகு வந்து நின்றது. கையில் துடுப்புகளுடன் வெண்ணிற ஆடையில் ஒரு பெண். உடுப்பை வைத்து பார்த்தால் அவர் ஒரு மருத்துவர் போன்று தோன்றியது. பார்த்தால் பிரோ இனத்தவர் போன்றோ லத்தீனோ இனத்தவர் போன்றோ தெரியவில்லை. அவனை போலவே மேற்கத்திய நாட்டிலிருந்து வந்த வெள்ளைக்கார பெண். ஜான் அந்த பெண்ணை உற்று நோக்கி கொண்டிருக்கையில் அந்த பன்றி கரை ஒதுங்கிய படகில் ஏறி நடுங்கி கொண்டிருந்தது. திடீரென்று அந்த பெண் பிரோக்களின் வேல் முனைகளிலிருந்து பன்றியை காப்பாற்றுவாறு நடுவே வந்து மறைத்தார். பன்றியை கொல்ல வேண்டாமென்று பிரோ மொழியில் அந்த இளைஞர்களுக்கு கூறினார். பன்றியால் ஏற்பட்ட அந்த பரபரப்பு உடனே கலைந்தது. இளைஞர்கள் விலக பன்றி நதிக்கரையோரம் காட்டினுள் ஓடியது. இளைஞர்கள் திரும்பி தங்கள் குடிசைகளை நோக்கி சென்றனர். ஜானுக்கு யார் இந்த வெள்ளைக்கார மருத்துவ பெண் என்ற கேள்வி மண்டையில் குத்தியது. கையில் ஒரு மருந்து பெட்டியுடன் அந்த பெண் படகிலிருந்து இறங்க ஜான் அவரிடம் பேச்சு கொடுக்கலானான். எந்தவித தயக்கமுமின்றி அவர் பேசினார். தான் பிரான்சு நாட்டிலிருந்து பிரோ மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வந்த ஒரு கிருத்துவ மத போதகர் என்று தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டார். தன் பெயர் ஈவ்லின் என்றும் கூறினார். பெண் போதகர்களை அதிகம் கண்டதில்லை என்று ஜான் அவரிடம் கூறினான். பன்றி ஓடி வந்த தடங்களை பின்பற்றியே பிரோ கிராமத்திற்குள் இருவரும் பேசிக்கொண்டே வந்தனர். மேற்கு கரையிலுள்ள வேறொரு பிரோ கிராமத்து மக்களை ரத்த சோதனைகள் செய்து விட்டு திரும்புவதாக கூறினார் ஈவ்லின். மேற்கு கரை பிரோக்களுக்கு ரத்தம் மிகவும் கம்மியாக இருப்பதாகவும், ரத்த சோகை இருக்குமென அஞ்சுகிறேன் என்றும் அறிவித்தார். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் மிக கம்மியாக இருப்பதாகவும் அதனால் ரத்தம் மஞ்சள் நிறத்துடன் வெறும் பிளாஸ்மாவாக தோற்றமளித்தது என்றும் கூறினார். இவையெல்லாம் ஜான் காதுகளுள் பெரிதாக நுழையவில்லை. இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் மத போதகராக கன்னிகாஸ்திரீயாக இருக்க வேண்டும் என்று வியந்து யோசித்திருந்தான். பன்றியை ஏன் காப்பாற்றினார்கள் என்ற கேள்விக்கு ஈவ்லின் தான் ஒரு சைவ பெண் என்றும் மிருகங்களை துன்புறுத்துவது தனக்கு சற்றும் பிடிக்காது என்று கூறினார். பன்றியை கொல்ல வந்த இளைஞர்கள் ஈவ்லினிடம் ஏதோ பிரோ மொழியில் கதைத்து கொண்டே இருந்தனர். அந்த பன்றி தங்கள் கிழங்கு செடிகளை நாசம் செய்து கொண்டிருந்ததாம். அதனாலேயே அதை கொல்ல துரத்தினார்களாம். ஏன் அதை காப்பாற்றினீர்கள் என்று ஈவ்லினிடம் அவர்கள் கடிந்து கேட்டு கொண்டிருந்தனர். 

ஒரு பிரோ குடிசையின் முன் தன் மருத்துவ பெட்டியை திறந்து வைத்து அமர்ந்து கொண்டார் ஈவ்லின். சுற்றியிருந்த பிரோ மக்களிடம் தான் அவர்களுக்கு மலேரியா டெங்கு போன்ற நோய் இருக்கிறதா என்று ரத்த சோதனை செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே மேற்கு கரை பிரோக்களுக்கு ரத்த சோதனை முடிந்தாயிற்று என்பதையும் அறிவித்தார். ஒவ்வொருவராக ரத்த சோதனைக்கு முன்வந்தனர். மார்க்கும் கார்லோஸும் வர அகழ்வு பணிக்கு செல்ல ஈவ்லினிடம் விடை பெற்றான் ஜான்.

அன்றைய அகழ்வில் பெரிதாக தங்க பொருட்கள் ஒன்றும் தென்படவில்லை. ஆனால் தாங்கள் தேடும் எல் டொராடோ அந்த இடம் தான் என்று தனக்கு  உள்ளுணர்வு சொல்லியது என்று  மார்க் கூறினார். அந்த இன்டி பிரமிடு கோவிலையே அன்று ஆராய்ந்து கொண்டிருந்தனர். கதிரவனும் அஸ்தமிக்க துடங்கினான். இன்று வேலையை முடித்து கொள்வோம் என்று மார்க் கூற எல்லாவரும் களப்பணியை நிறுத்தினர். மார்க்கும் ஜானும் பிரோ கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் பாதையில் வேகமாய் ஒரு ஜீப் வந்தது. அதன் பக்கவாட்டில் ‘பையோ வொர்க்ஸ்’ என்று பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. ஜீப்பில் ஐந்தாறு பிரோக்கள் இருந்தனர். ஓட்டுனர் கறுப்பினத்தை சேர்ந்தவராக தென்பட்டார். அந்த பிரோக்கள் காலையில் கண்ட இளைஞர்கள் போன்று தோன்றியது ஜானுக்கு. கூப்பிட்டு விசாரிக்கலாம் என்று நினைக்கும் நொடிக்குள் ஜீப் எட்டா தூரத்திற்கு சென்று மறைந்தது.

பிரோ கிராமத்திற்கு திரும்பிய போது இன்னமும் ஈவ்லின் தன் சோதனைகளை செய்து கொண்டிருந்தது அவர் அர்ப்பணிப்பையும் வேலையில் காட்டும் அக்கரையையும் தெரிவித்தது.  ஜான் பாதையில் கண்ட அந்த வாகனத்தை பற்றி ஈவ்லினிடம் கூறினான். அது ஒரு பையோடெக் கம்பெனியின் வாகனமென்றும் அவர்கள் பிரோ மக்களை தங்கள் ஆராய்ச்சிக்காக சோதனை செய்ய கொண்டு சென்றனர் என்றும் ஈவ்லின் கூறினார். மேற்கு கரை பிரோக்களையும் இதேவாறு அவ்வப்போது அழைத்து செல்வர் என்பதையும் ஈவ்லின் கூறினார். இங்குள்ள பிரோக்களுக்கும் ரத்த சோகை இருப்பதாகவும் ரத்தம் மஞ்சள் நீராகவே தென்படுகின்றது என்றும் அவர் ஜானிடம் வருந்தி கூறினார்.

பிரோ மக்களை ஏன் ஒரு பையோடெக் நிறுவனம் சோதிக்க வேண்டும்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று ஜானுக்கு தோன்றிற்று. ஜீப் சென்ற பாதையில் பின் தொடர்ந்து இந்த புதிருக்கு விடை அறிய வேண்டும்! மார்க்கிடம் சற்று வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த வாகனம் சென்ற தடத்திலேயே கால் வைத்து தொடர்ந்தான் ஜான். அடர்ந்த மரம் செடிகள் இருந்தும் காட்டினுள் அந்த பாதை தெளிவாக தனியாக தெரிந்தது. அந்தி பொழுதை நெருங்கி கொண்டிருந்தது. ஜான் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் நடந்திருப்பான். திடீரென மரங்களற்ற ஒரு வெளிக்கு வந்து சேர்ந்தான். அந்த அகண்ட வெளியின் மத்தியில் ஒரு நவீன கட்டிடம். கட்டிடத்தின் முன்னர் சில வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மாடி ஏதும் இல்லாமல் கட்டிடம் ஒரே தளம் மட்டும் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்து என்ன நடக்கிறது என்று கண்டறிய வேண்டும். அதோ முன் கதவு திறந்த படியே தான் இருக்கிறது. நல்ல சந்தர்ப்பம். உள்ளே போய் விடலாம். சற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜான் பையோ வொர்க்ஸ் நிறுவனத்தினுள் அடி எடுத்து வைத்தான்.

வெளியே அந்தி பொழுதாய் இருந்தாலும் உள்ளே பளீச்சென்று மின் விளக்குகளால் ஒளி பரவி கிடந்தது. ஒரு ஆஸ்பத்திரி போல் தோன்றியது. யார் கண்ணுக்கும் அகப்படாமல் மெல்ல நடந்து சுற்றி பார்த்தான். ஆங்கொரு அறை இருந்தது. சுவர்கள் அன்றி வெறும் கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. சோதனை அறை போல் தோன்றிற்று. உள்ளே இருக்கும் இயந்திரங்களும் பல வண்ண ரசாயனங்கள் கண்ணாடி குவளைகளில் இருந்தன. அங்கு சில கட்டில்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் ஒரு பிரோ இளைஞன் படுத்திருந்தான். அவர்கள் கைகளிலிருந்து நுண் குழாயில் ரத்தம் இப்பெரிய கண்ணாடி பாட்டில்களுக்குள் சேகரிக்க பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் ரத்தம் மஞ்சள் நீர் போல் தகதக வென்று மின் வெளிச்சத்தில் மின்னிற்று. ஜானுக்கு அப்பொழுது தான் புரிந்தது. பிரோக்களுக்கு ரத்த சோகை இல்லை. இந்த பையோடெக் நிறுவனம் சோதனை என்ற பெயரில் அவர்களின் ரத்தத்தை குடித்துக்கொண்டிருந்தது. இந்த அநியாயத்தை தன்னால் இப்பொழுது தடுக்க முடியாது என்பதை அறிந்த ஜான் மார்க்கிடமும் ஈவ்லினிடமும் கூறி ஏதாவது செய்வோம் என்று தீர்மானித்தான். கமுக்கமாக திரும்பி விடலாம் என்றெண்ணி வந்த வழியே நடைபோட்டான். கதவை அடைக்கும் வேளையில் வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்த அந்த கறுப்பர் இனத்தவன் கண்ணில் ஜான் அகப்பட்டான். அவனுக்கு பயம் உச்சியில் ஏறியது. ஒரே ஓட்டமாக அந்த இருண்ட காட்டில் தெரிந்த சிறு வெளிச்சத்தில் வந்த பாதையிலேயே பிரோ கிராமத்தை சென்றடைந்தான். அந்த கருப்பன் தன்னை பின் தொடரவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தான். தப்பித்து விட்டோம் என பெருமூச்சு விட்டான். நடந்ததை முற்றிலும் மார்க்கிடம் சொன்னான். கதையை கேட்ட மார்க்கின் கண்களில் ஒரு வியப்பு தெரிந்தது. வந்த வேகத்தில் ஜான் கூடாரத்தின் முகப்பு திரையை சாற்றாமல் விட்டுவிட்டான். உள்ளே இருந்த சிறு வெளிச்சத்தை நாடி கொசுக்களும் பூச்சிகளும் வந்தன. தன்னை ஒரு கொசு கடிக்க ஜான் சட்டென்று அதை அடித்தான். செத்த கொசு கையில் ஒட்டியிருந்தது. ரத்த கறை சிகப்பாய் இல்லாமல் ஒரு தங்க நிறத்தில் மின்னியது. அதை கண் பிதுங்க ஆச்சர்யத்தில் மார்க் பார்த்தார். 

“என்ன மார்க்? ஏன் வியந்து பாக்குறீங்க?”

“இப்ப தான் எனக்கு புரியுது ஜான்!”

“என்ன புரியுது?”

“நாம தேடி வந்த எல் டொராடோ ஒரு தங்க நகரம் இல்ல ஜான்.”

“பின்ன என்னது?”

“அது இந்த மக்கள் தான் ஜான். இந்த மக்கள் தான் தங்கம்! இவங்க ரத்தத்திலேயே தங்கம் இருக்கு. ஏதோவொரு மரபணு மாற்றத்தால ரத்த அணுவிலுள்ள இரும்புக்கு பதிலாக இவங்களுக்கு தங்கம் இருக்கு. அதனால தான் இவங்க ரத்தம் தங்க மஞ்சுளா தெரியுது. இத தெரிஞ்ச பையோடெக் கம்பெனி இவங்க ரத்தத்த சோதிக்கிறாங்க. இவங்களுக்கு ரத்த சோகையும் இல்ல. அது இந்த பையோடெக் கம்பெனி ரத்தத்த எடுக்கறதனால. இன்கா இனத்தவரின் மரபணுவோட விந்தை ஜான்! இன்கா நாகரிகத்தவர்களுக்கு இந்த ரகசியம் தெரிந்திருக்க வேணும். அதனாலேயே தான் அவங்க நரபலி கொடுத்து மேம்பட்ட ரசாயன தொழில்நுட்பத்தால ரத்தத்தில இருந்து தங்கத்த எடுத்திருக்காங்க. அவங்க செழிப்புக்கும் அது தான் காரணம். நாம பாத்தது பிளாஸ்மாவோட மஞ்சள் நிறம் இல்ல. அத்தனையும் தங்கம், தங்கம்!” என்று வியக்க வியக்க கூறினார் மார்க்.          

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.