அடையாளம் 

றையிலிருந்து கிளம்பி கீழே ஓட்டல் வாசலுக்கு நான் வந்த போது கைக்கடிகாரம் பத்து என்று காட்டியது. ‘ஷார்ப்பா பத்து மணிக்கு இங்கே இருப்பேன். லேட் பண்ணி விடாதேயும்’ என்று நேற்று எச்சரித்து விட்டுச் சென்ற சிங்கம் வர இன்னும் கால் மணி ஆகும் என்று எனக்குத் தெரியும். இருவருக்கும் தெரிந்த  நெருங்கிய நண்பர் ஜெயராமன் வீட்டு விசேஷமென்று நானும் சிங்கமும் சிதம்பரத்துக்கு வந்திருந்தோம். நேற்று நடராஜர்  கோயிலில் அந்த விசேஷம் முடிந்து மத்தியான சாப்பாடு ஆனதும் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் தங்கியிருந்த என் அறைக்கு இருவரும் சென்றோம். உண்ட மயக்கம் இருவரையும் நல்ல தூக்கத்தில் ஆழ்த்தி விட்டது. ஒரு மணி நேரம் போயிருக்கும். திடீரென்று ஒலித்த கைபேசி  எங்களை எழுப்பி விட்டது. சிங்கம் கைபேசியை எடுத்துப் பேசினார்.

“சொல்லுங்க நாதன்.  என் மெஸேஜ் கிடைச்சுதா?”

மறுமுனையில் பதிலளிக்கும் சத்தம் கேட்டது. 

“தாங்க்ஸ். எனக்கு எஸ்செம்மெஸ் பண்ணிடுங்க” என்று சிங்கம் போனைக் கீழே வைத்தார்.

பிறகு என்னைப்  பார்த்து “நாதனை உங்களுக்குத்தான் தெரியுமே?””

“தெரியும். அவரும் இந்த ஊர்க்காரர்தானே?” என்றேன் நான். 

“ஆமா. இப்ப வேலூர்லே செட்டில் ஆயிட்டாரு. அவரு இங்கே இருந்தப்போ மௌனியோட ரொம்ப சிநேகிதம்” என்றார் சிங்கம். “உயிரோட இருக்கறப்போதான் மௌனியைப் பார்க்க முடியலே. இப்ப இங்கே வந்ததுக்கு அவர் இருந்த வீட்டையாவது பாக்கலாமேன்னுதான் நாதன் கிட்டே அட்ரஸ் கேட்டேன்.”

“அவரே மௌனியைப் பத்தி ஒரு பிரமாதமான தொகுப்பு கொண்டு வந்தாரே” என்றேன் நான்.

“ஆமா. அவர் ரொம்ப நெருக்கம். அதனாலேதான் அவர் கிட்டே அட்ரஸ் கேட்டேன்.”

அப்போது செய்தி வரும் ஒலி அவரது கை பேசியில் கேட்டது. பார்த்து விட்டு “இங்கே கஞ்சித்தொட்டின்னு இருக்காம். அதுக்குப் பக்கத்திலேன்னு அனுப்பிச்சிருக்கார். நாளைக்குக் காலம்பற போயிட்டு வந்துடலாமா? நாம சாயந்திரம்தானே ஊருக்குக் கெளம்பறோம்?” என்றார் சிங்கம்.  

அதற்காகத்தான் இப்போது நான் ஓட்டல் வாசலுக்கு வந்து நிற்கிறேன். 

எதிரே ஓடிச் சென்ற சிறிய சாலையை வேடிக்கை பார்த்தேன். கீழ வீதியிலிருந்து கோயிலுக்குப் போகும் வழி தன்னுள் அடக்கியிருந்த 

கடைகளும் தெரு வியாபாரங்களுமாக ஜேஜேயென்றிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் நாட்டியாஞ்சலி விழாவுக்கென்று இப்போதே ஊர் விழாக் கோலம் பூண்டு கொள்ள ஆரம்பித்து விட்டது என்று சென்னையில் இருந்த போதே ஜெயராமன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சுற்று வட்டாரத்திலிருந்து வந்து அப்பும் கடை கண்ணிகள் இல்லாத விழா ஏது?

அப்போது வலது பக்கம் சற்று உரத்த குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஓர் இளம் பெண் தெருவில் வளையல் கடை வைத்திருந்த கிழவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். 

“ரொம்ப விலை சொல்லுறையே?”

“நீதான் போணி பண்ணி வைக்கணும். மகாலட்சுமி மாதிரி இருக்கே. உனக்கு வேணுங்கிறதை எடுத்துக்கோ. பாத்துப் போட்டுக் கொடு” என்றான் கிழவன்.

“தாத்தா, நல்லா ரீல் விடறே. ஆனா நானும் உன்னையப் போலத்தான். காசு இல்லாத மகாலட்சுமி” என்று அவள் சிரித்தாள். கறுப்பாகவும் இல்லாமல் சிவப்பாகவும் இல்லாமல் மாநிறத்தில் இருந்தாள். உயரமாகவும் லேசாகப் பூசிய மாதிரியும் காணப்பட்டாள். முகமும், கைகளும் பளபளவென்று மின்னின. எவரையும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்க்க வைக்கும் தோற்றம்.

அப்போது “யோவ் மாரிசாமி, நீ எப்போய்யா இங்கே  வந்தே?” என்றபடி அவர்களை ஒருவர் நெருங்கினார்.

கிழவன் அவரிடம் “வணக்கமய்யா . நல்லா இருக்கீங்களா? நேத்துதான் வந்தேன்” என்றான்.

“சரி. நைட்டு வீட்டுக்கு சாப்பிட வந்திரு” என்று சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார். 

கிழவன் இளம்பெண்ணிடம் “அவரு எங்க ஊர்க்காரரு” என்றான். 

அவள் வளையல்களைப் பரிசீலித்தபடி “உனக்கு எந்த ஊரு?” என்று கேட்டாள்.

“திருச்சி பக்கத்திலே பிள்ளே.”

“பக்கத்திலேன்னா?”

“பெராட்டியூருன்னு”

“அட, நீ என்னா  இவ்வளோ  பக்கத்திலே வந்திட்டே? எனக்குப் புங்கனுரு” என்று அவள் சிரித்தாள். கிழவனும் மலர்ச்சியுடன் அவள் கூடச் சேர்ந்து சிரித்தான்.

“ஆமா, அங்கேந்து எதுக்கு இம்மாந் தூரம் வளையலை எடுத்துக்கிட்டு வியாபாரம் பண்ண வந்தே?” என்றாள் ஆச்சரியத்துடன். “போக்கு வரத்து  செலவுக்காச்சும் வியாபாரம் கட்டுதா என்ன?” 

“நா என்னா வருசம் பூராவுமா இப்பிடித் திரியுரேன்? இந்த மேரி செதம்பரத்துலே டான்ஸ் விளா . மதுரைலே சித்திரைத் திருநாளு, திருவண்ணாமலைலே காத்திகை தீபம், அப்புறம் இருக்கவே இருக்கு தீவாளி, பொங்கலுன்னுட்டு. போகற எடத்திலே எல்லாம் பொம்பளைப் பிள்ளைங்க வந்து வளையல் வாங்க ஆசைப்படுதுங்களே! இதுக்கு வியாபாரத்துக்கு வியாபாரம் சாமி கும்புடறதுக்கு கோயிலு குளம்னு ஆச்சில்லே. அப்புறம் என்னா?” 

“அடேயப்பா, பெரிய ஆபீசரு மேரில்லே திட்டம் போட்டு வேலை பாக்குறே! அது சரி, ‘இந்த வயசிலே இவ்வளவு நாளு உளைச்சுக் கொட்டினது போறும்: வீட்டோட இரு; பேரப் பிள்ளைங்களைப் பாத்துக்கிட்டு’ன்னு சொல்ற மகங்க மக்களுங்க இருக்காங்கல்லே?”

“ஒரு பயதான். அவனும் மருமவளும் பேத்தியும் திருச்சியிலே இருக்காங்க. அவன் கலெக்டர் ஆபீசிலே யாரோ கான்டிராக்டரு கிட்டே வேலை பாக்குறான். அவன் சம்பாத்தியம் அவன் குடும்பத்துக்கு. எனக்கென்ன, கடவுளுந்தான் நீயே நின்னு நடமாடிக்கோன்னு ரெண்டு காலு கொடுத்துப் போட்டிருக்காருல்லே! அப்புறம் என்னா?” 

அவள் வளையல்களைத் தேர்ந்தெடுத்துக் கையில் வைத்து அழகு பார்த்தாள். அவள் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியின் பிரகாசத்தைக் கிழவன் கவனித்ததை நானும் கவனித்தேன்.

“உன் கைக்கு நல்லாயிருக்கே. எடுத்துக்க” என்றான் கிழவன். 

“வாங்குற மாதிரி வெல சொல்லு” என்றாள் அவள்.

“நீ என் மக மாதிரி இருக்கே. திருவிளாவுக்கு எடுத்துக்க. பணம் ஒண்ணும் வேணாம்” என்றான் கிழவன். “பக்கத்து ஊர்க்காரியா வேறே ஆயிட்டே. சந்தோசமா கொடுக்கறேன். நீயும் சந்தோசமா எடுத்துக்க.”

அவள் திடுக்கிட்டு “சே சே, அது எப்புடி? உனக்கு யாராச்சும் சும்மா குடுத்தாங்களா? இது எல்லாம் சேத்து நீ  முப்பது ரூவான்னே. இருபதுக்கு கேக்கலாமின்னு இருந்தேன். இப்ப உனக்கும் இல்லே, எனக்கும் இல்லேன்னு இருபத்தி அஞ்சு வச்சுக்கோ” என்று ரவிக்கைக்குள்ளிருந்து ஒரு பர்சை  எடுத்துப் பிரித்து அவனிடம் பணத்தை நீட்டினாள். கிழவன் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.

அவள் கிளம்பும் போது “நீ உங்க ஊருக்கு வந்தா எங்க வீட்டுக்கும் வந்திட்டுப் போ தாயி. பக்கத்து ஊருதானே” என்றான் கிழவன்.

“மாரிசாமின்னா ஊர்லே எல்லாருக்கும் தெரியுந்தானே?” என்று சிரித்தாள்.

“அவரு சொன்னதைக் கேட்டு வச்சிட்டியா?” என்று கிழவன் அவளைக் கனிவுடன் பார்த்தான். “ஆனா அப்படிக் கூப்பிட்டுக்கிட்டு வந்தா எங்க ஊர்லே….”

அவன் முடிக்கும் முன் அவள் குறுக்கிட்டு “பெரட்டியூரு என்னா மெட்றாசா இல்லே மதுரையா கண்டுபிடிக்க முடியாம இருக்கறதுக்கு?” என்றாள்.

“லெப்டன்னு கேளு. அதான் ஊர்க்காரப் பயலுங்களுக்குத் தெரியும்.” 

அவள் கிழவனை உற்றுப் பார்த்தாள்.

“எனக்கு எல்லாமே எடது கைப் பளக்கம்தான். சின்ன வயசிலேயிருந்து. அதனாலே அந்தப் பேரே நின்னு போயிருச்சு” என்று இடது கையை நீட்டிக் காண்பித்தான். அவள் கொடுத்த பணம் இன்னும் அவனது இடது கையில்தான் இருந்தது. 

அப்போது “என்னய்யா, வேடிக்கை பாத்துகிட்டு நிக்கறே?” என்ற சிங்கத்தின் குரல் கேட்டது. எதிரே சிரித்துக் கொண்டு நின்றார்.

“நீர் வரேன்னு சொன்னது பகல் பத்து மணிக்கா இல்லே ராத்திரி பத்து மணிக்கான்னு யோசிச்சிண்டு கால்மணியா இங்கே நிக்கறேன்” என்றேன்.

“சாரி பாஸ். சாரி சாரி” என்றார் அவர். தொடர்ந்து “காரைக் கீழ வீதிலேயே நிறுத்தி வச்சிருக்கேன். இங்கே  இந்த நெரிசலுக்குள்ளே   வந்தா காரைத் திருப்பறதுக்கு சிதம்பரம் நடராஜா வந்தா கூட ஹெல்ப் பண்ண முடியாது” என்றார்.

நாங்கள் கார் நின்றிருந்த தேர்முட்டியை அடைந்தோம். கடவுளின் கையில் உயிரை ஒப்படைத்து விட்டுச் சாலையில் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து சென்ற சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்காரர்களை அர்ச்சனை செய்து கொண்டே டிரைவர் காரை ஒட்டிச் சென்றார். ஏகப்பட்ட குண்டும் குழியுமாக இருந்த சாலை எங்களை உட்கார விடாமல் தூக்கிப் போட்டுக் கொண்டே வந்தது.

“இதுவும் ஒரு ஜென்மத்தில் பதஞ்சலியின்,  வியாக்ரபாதாவின் பாதத் துளிகள் பட்ட ராஜபாட்டையாக இருந்தது என்று நம்புவது கஷ்டமாக இருக்கிறது” என்று நான் சிரித்தேன். கீழ வீதியின் கோடியை அடைந்ததும் வலது பக்கம் கார் திரும்பிற்று. சற்றுத் தொலைவு சென்றதும் வந்த சிக்னலுக்கு வலதுபுறம் சென்று கஞ்சித் தொட்டியை அடைந்தோம். கஞ்சித் தொட்டிக்குப் பதிலாக அங்கு ஏகப்பட்ட நடமாடும் டிபன் வண்டிகள் தெருவின் இருபுறமும் நின்றன. கஞ்சித்தொட்டிப் பஸ் ஸ்டாப்புக்கு அருகே சிவகாமி அம்மன் கோயில் தெரு முனையில் டிரைவர் காரை நிறுத்தினார்.  

எதிரேயிருந்த ஒரு கடை “தொட்டுப்பார்” என்ற  பெயர்ப் பலகையுடன் சவாலுக்கு அழைத்தது. சிங்கம் தன் கைப்பேசியைப் பார்த்து விட்டு  அந்தக் கடையை நோக்கி நடந்தார். நானும் “தொடப் போறீங்களா?” என்று கேட்டபடியே அவருடன் சென்றேன். அதன் வாசலில் நின்றிருந்தவரிடம் “சார், இங்கே வீர ராகவ நாயக்கன் தெருவுக்கு எப்படிப் போகணும்?’ என்று சிங்கம் கேட்டார். அந்த மனிதர் கையைக் காட்டி “மேக்காலே கொஞ்ச தூரம் போயி லெப்டுலே திரும்புங்க” என்றார்.

சற்றுத் தொலைவு சென்றதும் மறுபடியும் இன்னொருவரிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. அவர் தனக்குத் தெரியவில்லை என்று சொல்லி விட்டார். நாங்கள் சென்ற வழியில் இடது பக்கம் பிரிந்த தெருக்கள் எல்லாம் குறுகலாக இருந்தன.

நான் டிரைவரிடம் “அங்க ஒரு ஓட்டல் இருக்கு பாருங்க. காரை அங்க நிறுத்தி வச்சுக்குங்க. நாங்க நடந்து போய்த் தேடிக் கண்டு பிடிச்சுக்கறோம்” என்றேன்.  

வலப்பக்கம் ஓரிடத்தில் செம்படவர் தெரு என்று காணப்பட்டது. அப்போது எங்கள் அருகே இன்டேன் சப்ளை வண்டியை இழுத்துக் கொண்டு வந்தவரிடம் விலாசத்தைக் கேட்டோம். அவர் “எடது பக்கம்  ரெண்டாவது தெருவிலே திரும்பிப் போங்க. நீங்க சொல்லுற அட்ரஸ் அங்கதான் வருது” என்றார்.

அதுவும் குறுகிய தெருதான். சில பழைய சிறிய வீடுகளுக்கு அருகருகே பல புதிய பெரிய வீடுகள் காணப்பட்டன. நாங்கள் தேடிய நான்காம் நம்பர் வீடு கண்ணில் படவில்லை. வீட்டு நம்பர்களும் ஒழுங்கான வரிசையில் இல்லை. இருபத்தி ஏழுக்குப் பிறகு  பதினொன்று வந்தது. இடது பக்க வீடு பதினேழு என்றால் எதிர்வரிசை வீடு முப்பது என்றது. ஒவ்வொரு இருபது முப்பது அடிக்கும் ஒரு சிறிய சந்து இடது பக்கமும் வலது பக்கமும் பிரிந்து சென்றது. அதைத் தாண்டினால் வந்த தெருவின் பெயர் வேறொன்றாக இருந்தது.

“தலையை சுத்தறது” என்றேன் நான். 

“யாரோ ஒரு பெரிய முனிசிபாலிட்டி இன்ஜினீயர்தான் ரொம்ப இன்னொவேட்டிவ் ஆக வேலை செஞ்சிருக்கார்” என்றார் சிங்கம்.

இதற்குள்  நாங்கள் இரண்டு முறை அந்தத் தெருவின் நீள அகலத்தை அளந்து பார்த்து விட்டோம். களைத்துப் போய் ஒரு கடை வாசலில் நின்றோம். ஜெராக்ஸ் கடை என்று போடப்பட்டிருந்தது. உள்ளே

யிருந்து வந்த ஒருவர் “யார் சார் வேணும்? ரொம்ப நேரமா தேடறீங்களே?” என்றார். வயதானவராக இருந்தார். அறுபது எழுபது வயதிருக்கும்.

சிங்கத்தின் பார்வை கடை வாசலில் நின்ற  கண்ணாடிப் பெட்டியில் காணப்பட்ட குளிர் பானங்களின் மீது விழுந்தது.

“ரெண்டு ஃப்ரூட்டி கொடுங்க. சில்லுனு இருக்கா?” என்று கேட்டார்.

“தரேன்” என்று அவர் கண்ணாடிக் கதவைத் திறந்து இரண்டு பாட்டில்களை நீட்டினார்.

“இந்தத் தெருவிலே மௌனின்னு ஒருத்தர் இருந்தார். அவர் வீட்டைத்தான் தேடிண்டு இருக்கோம்” என்றார் சிங்கம் அவரிடம்.

“பேரே வித்தியாசமா இருக்கே?” என்றார் கடைக்காரர்.

“அவர் பெரிய தமிழ் ரைட்டர். மௌனிங்கறது அவர் எழுதறதுக்காக வச்சுக்கிட்ட பேர்” என்றேன் நான்.

“பெரிய ரைட்டர்னா கல்கி, தமிழ்வாணன் மாதிரியா?” என்று கேட்டார். 

அவருக்குப் பதில் சொல்லாமல் இருந்தால் அவர் தப்பாக நினைப்பார் என்று நான் “இல்லே. இவர் வேற மாதிரியா எழுதறவர். பெரிய ரைட்டர்.”  

“இப்ப இருக்காரா?”

“இல்லே. அதனாலேதான் அவர் இருந்த வீட்டையாவது பார்த்துட்டுப் போகலாம்னு மெட்றாஸ்ட்லேந்து வந்திருக்கோம்” என்றார் சிங்கம். “நாலாம் நம்பர் வீடு”

“இந்தக் கடை இருபத்தி மூணு. ஆனா புது நம்பர் கொடுக்கறேன்னு யாரோ ஒரு பிரம்மகத்தி வந்து கன்னா பின்னான்னு  குழப்பி வச்சிட்டுப் போயிட்டான்” என்றார் கடைக்காரர் கோபத்துடன்.

“அவரைத் தேடி அமெரிக்காலே இருந்தெல்லாம் வந்திருக்காங்க” என்றேன் நான். “வந்தவங்க  அவரோட கதையெல்லாம் இங்கிலீஷ்லே போட்டுருக்காங்க.” 

“சார், நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்தத் தெருவிலே பாதிப்பேர் அமெரிக்கா,  இங்கிலாண்டு, ஆஸ்திரேலியா,  ஜப்பான்னு போய் வேலைக்குச் சேர்ந்துட்டவங்க. மாசத்துக்கு நாலு ஃபாரின்காரங்க இங்க இருக்குற யார் வீட்டுக்காவது வந்து போறாங்க. என்னத்தைச் சொல்லறது?” 

“அவரோட பேர் மணி” என்றார் சிங்கம். அது ஏதாவது கடைக்காரரிடம் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறதா என்று தேடுபவர் போல. 

அவர் உதட்டைப் பிதுக்கினார். “சார், நானும் இங்கே நாப்பது வருஷமா இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு ஒரு மணி இருந்தாரு, பக்கத்து விளங்கியம்மன் தெருவிலே. அவர் டெய்லி காலெண்டரைக்  கிழிக்கறப்போ அந்தத் தாளைப் படிச்சதுதான்” என்று சிரித்தார்.

நாங்கள் வேறு வழியில்லை என்று சிரித்து வைத்தோம்.  

“மௌனியோட பையன் கூட அமெரிக்காவிலே வேலை பாக்கறார்” என்றார் சிங்கம்.

கடைக்காரர் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. 

பிறகு சிங்கத்தைப் பார்த்து “சார், அங்கே ஒரு ஆட்டோ நிக்குது பாருங்க. அதற்கு அடுத்தாப்பிலே  ஒரு பெரிய நீலக் கலர் கட்டிடம் தெரியுதா? அந்த வீட்டிலே ஒருத்தர் அமெரிக்காவிலே இருக்காரு. நீங்க சொல்லுறவரு ஜப்பான்கார அம்மாளைக் கட்டியவரா?” என்று கேட்டார்.

சிங்கம் மறுத்துத் தலையசைத்தார். 

எங்களுக்கு உதவ முடியலையே என்பது போலக் கடைக்காரர் சற்று வருத்தமான முகத் தோற்றம் கொண்டிருந்தார்.

“இவ்வளவு தூரம் வந்து கஷ்டப்பட்டும் வீட்டைக் கூடப் பாக்க முடியலையேன்னுதான் வருத்தமா இருக்கு. அவர் உயிரோட இருக்கறப்பவே  அவரைத் திருமூலர்னு ஒருத்தர் அப்படி ஒரு உசரத்திலே வச்சுக் கூப்பிட்டார். ஆனா உள்ளூர்லே அவரை யாருக்கும் தெரியலே பாருங்கோ” என்றார் சிங்கம் என்னைப் பார்த்து.

 நாங்கள் மூவரும் ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசாமல் கடை வாசலில் நின்றோம்.

 அப்போது திடீரென்று நினைவுக்கு வந்தவராகக் கடைக்காரரிடம் “சார், அவரு ஒரு ரைஸ் மில் கூட வச்சிருந்தார்” என்றார் சிங்கம்.

கடைக்காரர் “அட, ரைஸ் மில் அய்யரா? முன்னாலேயே சொல்ல மாட்டீங்க? அதோ எதித்தாப்பிலே தெரு போகுதே, அதிலே முதல் வீடுதான் அவரோடது” என்றார்.  

எனக்கு ஏன் மாரிசாமியின் நினைவு அப்போது வந்தது என்று ஆச்சரியப்பட்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.