கடிதம்

னைவியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துவிட்ட பின்னரும் அவள் பட்ட அவஸ்தை கண்களிலேயே இருந்தது. வெளியெல்லாம் நிரம்பிக்கிடந்த காற்றில் தனக்குரிய சுவாசத்தைத் தேடி அவள் பட்ட திணறல்!. நல்லமுத்து பதறிப் போனார்!. அவ்வப்போது, உடனடி நிவாரணம் அளிக்கும் ‘Ventoline’  தெளிப்புகூட எதிர்ப்பார்த்த பலனை அளிக்கவில்லை. ஆம்புலன்ஸ் வரும்வரை சுவாசத்திற்குத் திணறியது அம்மாகண்ணுவும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திண்டாடியது நல்லமுத்துவாகவும் இருந்தனர். 

‘இப்ப எப்படி இருக்காளோ தெரியிலியே!.. ஐசீயூல ஏதும் வெச்சிருப்பாங்களோ?..’

அவரின் நினைவெல்லாம் மனைவியின் மேலேயே இருந்தது. மறுநாள் நண்பகல் 12.30 வரை அவளைப் பார்க்க முடியாதுதான். இருந்தாலும், அவர் வீட்டிற்குப் போக விரும்பவில்லை. நிரந்தரமாக இரவு காவலாளியாக  வேலை செய்யும் இடத்தில் ஒரு நாள் அவசர லீவு எடுத்திருந்தார்.

‘பெத்த புள்ளிங்க பக்கத்துல் இல்லாட்டி இன்னா?.  அவ ஒன்னும் அநாத இல்ல. அவளுக்கு நா இருக்கன்..’ என்று, அவரின் வாய் முணுமுணுத்துக்கொண்டது. அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள்!. ஆனால், நல்லமுத்துவைப் பொருத்தவரை அவர்கள் என்றோ செத்துப் போய்விட்டனர். அவர்கள், ஏதோ பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போவதாகவும் இரண்டே வருடங்களில் வாங்கிய பணத்தை  மீண்டும் தந்துவிடுவதாகவும் சொல்லி, அவரின் சேமிப்பை பெற்றவர்கள்,  கடைசிவரை அதைத் தரவேயில்லை. 

“பெத்த அப்பனையே ஏமாத்துன அஞ்ஜடிக்கார நாய்ங்க!. நாசமாத்தான் போவுங்க..” என்று வயிற்றில் எரிந்துகொண்டிருந்த சாபத்தைப் பிள்ளைகள் மேல் வீசியபோது, தாய் பதறிப் போனாள். 

“ஐயோ, வேண்டாங்க!. என்னதான் இருந்தாலும் பெத்த புள்ளிங்களாச்சே!.. “ என்று தாய் மன்றாடியும் அவர் மனம் இரங்க இல்லை. 

இரவெல்லாம் தூங்கவே முடியாமல் சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தது மிகுந்த சோர்வைத் தந்தது. கழுத்தும் இடுப்பும் வலித்தன. மனசு மிகவும் துக்கப்பட்டுக் கிடந்தது. 

மறுநாள், மனைவி நோயில் வாட பசியாறவே பிடிக்கவில்லை!. இரைப்பை வலி வந்து தொலைக்குமே என்று எதையோ தின்று வைத்தார். பார்வையாளர் நேரம் வந்ததும் மனைவியைப் பார்க்கப் போனார். நல்ல வேளையாக சாதாரண வார்ட்டிலேயே இருந்தாள். ஆனால், வாயிற்குள் டியூப் பொருத்தப்பட்டிருந்தது!. முன்பெல்லாம் முகக்கவசத்துடன் கூடிய கையடக்க ‘நெபுலைசர்’ சிகிச்சையே அளிக்கப்பட்டது. முதல் தடவையாக டியூப் வழி சிகிச்சை அளிப்பது நோயின் தீவிரத்தைக் காட்டியது. மனைவியின் வேதனையைப் பங்கிட்டுக்கொள்ள முடியாத சங்கடத்தில் அவரின் கண்கள் பனித்தன!.    

“இப்ப எப்படிடீ இருக்கு?..” 

அதற்கு பதில் தேவையில்லையென்பதுபோல் அம்மாகண்ணு, கணவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வைக்கு, ஒரு வாய் வார்த்தை எவ்வளவோ மேல் என்று அவருக்குப் பட்டது. அவளது வேதனை, கண்ணீரால் மட்டுமே சொல்லத்தக்கது என்பது போல் கண்களில் கண்ணீர்!. எழும்பிச், சுருங்கிய நெஞ்சக் கூட்டில் அவளின் அவஸ்தைத் தெரிந்தது.     

“ஏண்டீ அழுவுற?..” என்பதை நல்லமுத்துவால் குரல் உடையாமல் கேட்க முடியவில்லை!. கணவரின் கண்களில் கண்ணீரைக் காணச் சகிக்காமல் அம்மாகண்ணு, மேலும் கண்ணீரில் மூழ்கினாள்!. பகிர்ந்துகொள்ள முடியாத வேதனையை அருகிலிருந்தே ஆற்றிக்கொள்வதுபோல் அவர், மனைவியின் கரங்களைப் பற்றிக்கொண்டு பார்வையாளர் நேரம் முடியும் வரை பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார். 

முன்போல் இரண்டொரு நாட்களில் உடல் தேறி வந்துவிடுவாள் என்று எதிர்ப்பார்த்தது தப்பாகிப் போனது. மூன்று நாட்களாகியும் உடல் தேறவில்லை!. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு  மோசமாகிவிட்டதாக நர்ஸ் சொன்னாள்.   

இரவில், 12 மணிநேர வேலை!. பகலில் சில மணி நேரம் மட்டுமே தூக்கம்!. பின்னர், மனைவியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்து போக வேண்டிய பிரயாணம்!. நல்லமுத்து, பாவம் அசதியில் தளர்ந்து போனார். மனைவியின் பிரிவும்; நோயும் அவரை மேலும் துவண்டுப் போக வைத்தது. வேலை நேரங்கள் தவிர மனைவியைப் பிரிந்து இருந்தவரல்ல அவர்!. அவள், அவருக்குத் துணையல்ல, பிடிமானம்!. 

நல்லமுத்துவின் சட்டைப் பையில் – நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் – அம்மாகண்ணு தன் காதலைச் சொல்லி எழுதிய கடிதம், இன்னொரு இதயமாய் எப்போதும் இருக்கும்!. அவருக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. எனவே, அதையும் அவளேதான் படித்துக் காட்டினாள். படிக்கும்போது அவள் காட்டிய வெட்கம், பதற்றம் எல்லாம் இன்னும் அப்படியே நல்லமுத்துவின் நினைவில் பசுமையாய் இருந்தன. ஒரு தற்குறியான தன்மேல் அவளுக்கிருந்த காதலைக் கேட்க அவ்வளவு பெருமையாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. எனவே, மனம் எப்போதாவது மிகவும் சோர்ந்து கிடக்கும் போது, யாரிடமாவது அந்தக் கடிதத்தைப் படிக்கக் கேட்டு, ‘எனக்கு அவ இருக்கறப்ப, என்னா கவல!.’ என்று அவருக்குத் தன்னைத் தேற்றிக்கொள்ள வேண்டும்!. 

மூன்று நாட்களாகவே கடிதத்தைப் படித்துக் காட்ட யாராவது கிடைக்கமாட்டார்களா என்று மிகவும் ஏங்கினார். அப்படிப் படிக்கக் கிடைப்பவர்கள் யாராகவும் இருக்கலாம்!. ஆனால், அவர்கள் படிக்கும்போது அவருக்கு கேட்பதெல்லாம் அம்மாகண்ணுவின் குரலாகவே இருக்கும். அவள் பாவம், அவஸ்தையில் இருக்கிறாள்!. அவருக்கு இப்போது ஆறுதல் சொல்ல அந்தக் குரல் தேவைப்பட்டது. அவர் தேடி அனுகிய யாருக்குமே தமிழ் தெரிந்திருக்கவில்லை!. அவர்கள், மலாய் பள்ளியில் படித்தவர்களாம்!.   

அன்று, காத்திருக்கும் நேரத்தில் இன்றாவது யாரும் கிடைப்பார்களா என்று தேடியபோது, 25 வயதிற்குள் இருக்கும் ஒர் இந்தியப் பெண்ணைப் பார்த்தார். அவள், மிகுந்த கவலையில் இருப்பது தெரிந்தது!. அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவள், ஒரு முறை எதேச்சையாக இவர் பக்கம் திரும்பி, வேதனைத் தோய்ந்த புன்னகையைக் காட்டிவிட்டு பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். நல்லமுத்துவிற்கு அவளிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. அவளருகில் போய் அமர்ந்து,

“யாரும்மா ஆஸ்பத்ரீல.” என்று கேட்டார்.  

“என்னோட அம்மா, தாத்தா.” என்று சுரத்தில்லாத குரலில் அவள் சொன்னாள். 

“ஏன்? அவுங்களுக்கு என்ன தாயி செய்யுது?..”

அவள், அவரைப் பார்க்காமல்  விழியோரங்களில் கண்ணீர் கசிய, தலையைக் குனிந்து கொண்டாள்.. 

“சொல்ல விருப்பம் இல்லாட்டி பரவால்ல தாயி!. பாக்க ரொம்ப கவலீல இருக்குயேன்னு கேட்டன். என் சம்சாரத்துக்கு ஆஸ்மா தாயி.. மூனு நாளிக்கி முந்தி ரொம்ப முடியாம போச்சி.. டியூப் வழியா கேஸ் ஏத்திட்டு இருக்காங்க..” என்று வேதனைப் பொங்கச் சொன்னார். அவள், சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தாள். அவரின் வேதனை, கண்களுக்குக் கீழே சுருங்கிக் கிடந்த  தோல் மடிப்பில் தேங்கிக் கிடந்தது.

பதிலுக்கு தனது சோகத்தைச் சொல்லி ஆறுதல் தேட முனைந்ததுபோல் அவள் சொன்னாள்.

“அம்மாவுக்கு மாருல கட்டி தாத்தா. கான்சரா இருக்குமோன்னு பயமா இருக்கு..”

“அட, இவ்ளோதானா!. என்னா தாயி, படிச்ச புள்ளியா தெரியிர இப்படி கவலப்பட்டுபோய் கெடக்கிறியே!. மாருல கட்டின்னா அது கான்சராதான் இருக்குனுமா என்னா?.  அம்மாக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீயே இப்படி இடிஞ்சி போனாக்கா எப்பிடி தாயி?. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது தாயி!. வீணா மனச போட்டு கொழப்பிக்காத..” என்று அவளின் கரத்தைத் தட்டி ஆறுதல் சொன்னார். 

அவள், நன்றியுடன் அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

அவளின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, 

“புனிதா, இந்த நேரத்துல இத கேக்க எனக்கு சங்கடமாதான் இருக்கு. ஆனா, மூனு நாளா இதுக்காவ அலஞ்சிகிட்டு இருக்கன் தாயி!.” என்று தயக்கத்துடன் சொன்னார்.

புனிதா, அவர் பண உதவி ஏதும் கேட்கப் போகிறாரோ என்று தர்மசங்கடமாய் உணர்ந்தாள்.  

“உனக்கு தமுழ் படிக்க தெரியுமா தாயி?”

அவள் வியப்புடன் அவரைப் பார்த்துச் சொன்னாள்..

“தெரியும் தாத்தா!.. ஏங் கேக்குறீங்க?..”

“அம்மாடி, ஏங்கிட்ட ஒரு கடுதாசி இருக்குது. எம் பொஞ்சாதி சின்ன புள்ளியா இருக்குறப்ப எனக்கு எழுதுனது. எனக்கு தமுழு படிக்க தெரியாது. அவளேதான் அத எனக்கு அவ்ளோ வெக்கதோட படிச்சும் காமிச்சா..” என்று அந்த நினைப்பில் ஆழ்ந்து போனதுபோல் மெல்ல சிரித்துக்கொண்டார்.

புனிதா, ஒரு கணம் தனது சோகத்தையெல்லாம் மறந்து அவர் சொன்ன வார்த்தைகளில் லயித்துப் போனாள். 

“அவளும் பாவம் எத்தினியோ வாட்டி எனக்கு தமுழ் கத்துக் கொடுக்கறதா சொல்லி பாத்தா. பாவி, நாந்தான் வேணான்னு மொரண்டு புடிச்சிட்டன். ஏன்டா கத்துக்காம போயிடோமேன்னு இப்ப  வருத்தமா இருக்கு. எனக்கு எப்பல்லாம் மனசு ரொம்ப சங்கடத்துல இருக்குமோ அப்பல்லம் இத யாருகிட்டியாவது படிக்கச் சொல்லி மனச தேத்திக்குவன். இது இப்ப, அவ விருப்பத்த சொல்ற கடுதாசி இல்ல அம்மாடி!, எம் மனச தேத்துர டானிக்கு!. அவ முடியாம மூனு நாளா ஆஸ்பத்ரீல இருக்கா. இத படிக்கறதுக்கு ஒரு ஆளு கெடக்காதான்னு நா தேடிக்கிட்டு இருக்கன். இப்பல்லாம் நம்ம புள்ளிங்க ரொம்ப பேத்துக்கு தமுழ் படிக்க தெரியில தாயி..” என்று வெள்ளந்தியாகச் சொன்னார். அதைக் கேட்டதும் தானே காதல் வயப்பட்டுப் போனதுபோல் மனம் கனிந்துபோய், ஆர்வத்துடன் அவரைப் பார்த்து புனிதா சொன்னாள்.

“கொடுங்க தாத்தா, நா படிச்சு காட்டறன்..”   

நல்லமுத்து, தனது இடது பக்க சட்டைப் பையினுள் மடித்துக்கிடந்த கடிதத்தை, விரல்களின் நடுக்கத்தில் எங்கே மேலும் கிழிந்துவிடப்போகிறதோ என்ற கவனத்துடன் பிரித்து, அவளிடம் நீட்டினார். நோட்டு புத்தகத் தாளில் எழுதப்பட்டிருந்த கடிதம், காலத்தாலோ; காதலாலோ நைந்துபோனதுபோல் பின்புறம் சின்ன சின்ன காகிதங்களால் ஒட்டப்பட்டிருந்தது. ஓரங்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. முந்தைய தலைமுறையின் காதல் கடிதத்ததைப் படிக்கப் போகும்  பதற்றத்தில் புனிதாவிற்கும் விரல்கள் நடுங்கின. 

‘அன்புள்ள முத்துவுக்கு,

நா உங்கள ரொம்பவும் விரும்புறன். நீங்களும் என்ன விரும்புறது எனக்கு நல்லாவே தெரியும். கோவில்ல சாமி கும்புடறப்ப நீங்க என்னியே பாத்துட்டு இருக்குறத நான்தான் பாத்திருக்கேனே!. எங்க ஊட்ல எனக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சிருக்காங்க. எனக்கு பயமா இருக்குது. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. வாங்க, நாம எங்கியாவுது ஓடிப்போயி கலியாணத்த பன்னிக்குவோம். உங்களதான் நா மலபோல நம்பியிருக்கன். என்னிய ஏமாத்திற மாட்டீங்களே?  

இப்படிக்கு,

உங்கள உயிருக்கு உயிரா விரும்புற

அம்மாகண்ணு.’

கடிதத்தைப் படித்தது புனிதாவாக இருந்தாலும், கேட்டது என்னவோ தன் மனைவியின் குரல் என்பதுபோல் நல்லமுத்துவின் முகமெல்லாம் பூரித்துப் போனது. உடனே அவர், அங்கில்லாமல் போனது கடிதத்தையே  வெறித்துக்கொண்டிருந்த பார்வையில் தெரிந்தது. 

‘அது, மாதா கோயிலையொட்டி மாரியம்மன் கோயிலுக்கு இறங்கும் செம்மண் சாலை!. மாதா கோயிலின் வளைவில் இருட்டு கவிந்திருக்கிறது!. நான், அம்மன் கோவிலுக்கு போய்க்கொண்டிருக்கும்போது, சட்டென்று ஒரு உருவம் அந்த இருட்டிலிருந்து வெளிப்படுகிறது. 

நான், “அம்மே..” என்று பயந்து, விலகி நிற்கிறேன்.

“ஐயே, சரியான பயிந்தாகொள்ளி!.” என்று சிரித்து, என் கையைப் பற்றி கடிதத்தைத் திணித்துவிட்டு கோவிலுக்கு ஓடிப் போகிறாள் அம்மாகண்ணு!. 

நடந்ததைக் கிரகித்துக்கொள்ள முடியாமல் நான் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்து நிற்கிறேன். யாரும் பார்த்திருப்பார்களோ என்ற பயத்தில் கால்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன!. கடிதமெல்லாம் குட்டிக்குரா பவுடர் மணக்கிறது. ‘கடுதாசிய புட்டாமாவு டப்பாக்குள்ள வெச்சிருந்திருப்பாளோ!.’ அவளின் ஸ்பரிசத்தில் நான் ஒருவித போதைக்குள்ளாகி நிற்கிறேன்!. நான், கோவிலைப் பார்க்கிறேன். அவள், கோவிலுக்குள்ளிருந்து இருட்டைப் பார்க்கிறாள். நான், கோவிலுக்குப் போகாமல் வீட்டிற்கு திரும்பிப் போகிறேன்..’

நல்லமுத்துவைப் பார்க்கப் புனிதாவிற்கு ஒரே சந்தோஷமாய் இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும்  அந்தக் கடிதம் அவருக்குக் கொடுக்கும் பரவசத்தைக் கண்டு அச்சரியப்பட்டுப் போனாள். 

பார்வையாளர்களுக்கான நேரம் வர, எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு லிஃட்டிற்குள் நுழைந்தனர். 

றுநாள், நல்லமுத்து ஆஸ்பத்திரிக்கு சீக்கிரமாகவே வந்திருந்ததால் கொஞ்ச நேரம் இமைகளை மூடி ஓய்வெடுக்க விரும்பினார். தினமும் போதிய தூக்கமில்லாமல் உடல் மிகவும் களைத்துப் போனது. கண்களை மூடிய கொஞ்ச நேரத்திலேயே பக்கத்தில் யாரோ வந்து உட்கார்ந்ததுபோல் உணர, திரும்பிப் பார்த்தார். புனிதா, ஒரு புன்முறுவலுடன் அவருக்கு வணக்கம் சொன்னாள். 

“வா தாயி!.. அம்மாவுக்கு எப்படி தாயி இருக்கு இப்ப?”

“சாதாரண கட்டிதான்னு சொல்லிட்டாங்க தாத்தா. இருந்தாலும் ஆப்பரேஷன் பன்னி எடுத்துட்டா நல்லதுன்னு டாக்டரு சொல்றாரு. நாளான்னிக்கி ஆப்பரேஷன் தாத்தா..” 

“ரொம்ப சந்தோஷம் தாயி!. நா, அன்னிக்கே சொன்னேன்னில்லியா. அம்மாவ நல்லபடியா  பத்துக்க தாயி..”

“நேத்து பூரா உங்க நெனப்புதான் தாத்தா. அந்த லெட்டர நெனக்க நெனக்க எனக்கு அவ்ளோ ஹேப்பியா இருக்கு. ஆமா தாத்தா, நீங்க ஏன் அந்த லெட்டர மட்டும் படிக்கறதுக்கு கத்துக்க கூடாது?.” 

“அட, நீ ஒன்னு தாயி!. அத நா படிக்க கத்துக்கிட்டன படிக்கிற கொரலு ஏங் கொரலா இல்ல போயிரும் தாயி!. அதையே மத்தவங்க படிச்சாங்கன்னா எனக்கு எம்பொண்டாட்டி கொரலா இல்ல கேக்கும்!..” என்று அவர் சொன்னதைக் கேட்டதும் புனிதா, உணர்ச்சி வயப்பட்டு மௌனமாகிப் போனாள். சிறிது நேரம் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவின் முகத்தில் மெல்ல பிரகாசம் படர்வதை ஆச்சரியத்துடன் பார்த்தாள். 

“எனக்கு இப்ப புது ஓசன ஒன்னு தோனுது தாயி!. எம் பொண்டாட்டிக்கு நா ஒரு கடுதாசி எழுதி, நானே அத அவுளுக்கு படிச்சி காட்னாக்கா? இந்த முடியாத நேரத்துலியும் அவதான் எவ்ளோ சந்தோஷம் பட்டு போயிருவா!.” அவர் ஆர்வம் பொங்க சொன்னார். அந்த ஆர்வம் உடனே புனிதாவையும் பற்றிக்கொண்டது. 

“ஐய்யா!. (1)பீஜாவான ஓசன தாத்தா. வாங்க, இப்பியே எழுதி உடனே உங்களுக்கு படிக்க சொல்லி குடுத்திர்றன். எங்கம்மாவுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சி பேரு வெட்றகாட்டியும் நீங்களே அத படிக்க கத்துக்குலாம்..” என்று புனிதா துள்ளிக் குதித்தாள். 

நல்லமுத்து சொல்ல, அவள் எழுதிய கடிதத்தை ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்து புனிதா, அவருக்குப் படித்துக் காட்டினாள். அந்த வார்த்தைகள் யாவுமே அவர் இதயம் சொல்லத் துடித்த வார்த்தைகளாதலால் அவளைத் தொடர்ந்து படிக்க அவருக்குச் சிரமமாகவே இருக்கவில்லை!. மூன்றாவது வாசிப்பிலேயே சற்றே தடுமாற்றத்துடன் அவரால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடிந்தது. 

அம்மாகண்ணு, நல்லமுத்துவிற்கு தன் காதலைச் சொல்ல மொழியைக் கற்றுக் கொடுக்கப் பார்த்தாள். ஆனால், நல்லமுத்துவிற்கோ மனைவி மேல் தான் வைத்திருக்கும் உயிரைக்காட்ட சில வார்த்தைகளே போதுமானதாய் இருந்தன!.      

நல்லமுத்து ஆர்வத்துடன் மனைவியைப் பார்க்கப் போனார். கடந்த நான்கு  நாட்களைப் போலில்லாமல் இன்று மனைவி, கையடக்க ‘நெபுலைசர்’ வழி சுவாசித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க ஆறுதலாக இருந்தது. ஆனால், கணவன் வரும் நேரம் தெரியாதவள்போல் அவள், இமைகள் மூடிக் கிடந்தாள்!. நல்லமுத்து, அருகில் அமர்ந்து, மௌனமாய் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தார்.  

‘கண்ணு, இந்த கொஞ்ச நாள்லியே என்னமா எளச்சி போயிட்டடீ?. முந்தியெல்லம்கூட ஒனக்கு இப்படி ஒடம்புக்கு முடியாம போயிருக்குதான்!. ஆனா, கூட கூட போனாக்கா ரெண்டு நாளு. பேரு வெட்டி வந்துருவியே?.. ஏண்டி, இந்த தடவ ஒடம்புக்கு ரொம்ப முடியிலியா?. நா வந்ததுகூட தெரியாமா கண்ண மூடியே கெடக்குறியேடீ?. அது சரி! நாந்தான் எனக்கு புள்ளிங்களே கெடையாதுன்னு சொல்லிட்டன்!. எனக்காவ நீயும் அவுங்கள ஒரேடியா ஒதுக்கி வெச்சி, பெத்த மனம் பித்துன்றத பொய்யாக்கிட்டியேடீ!. இப்படி முடியாம இருக்கறப்பகூட அவுங்கள பத்தியெல்லாம் ஏங்கிட்ட ஒரு வார்த்த பேசுனது இல்லியே!.   ஒனக்குதான் எம்மேல எவ்ளோ பிரியண்டீ!.’  அவரின் கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன. 

திடீரென்று, நல்லமுத்துவிற்கு அபசகுனமான எண்ணம் ஒன்று தோன்றியது!. அப்படி ஏதும் நடந்துவிடுகிற பட்சத்தில், தடம் புரண்டுப் போகும் தனது வாழ்க்கையை நினைத்துப் பார்க்க பயமாய் இருந்தது. 

‘ஒதுக்குப் புறமான அஞ்ஜடியில் ஒரு துணிப்பை; ஆணியில் தொங்கிகொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையில் மீதமிருக்கும் தேநீர்; ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கும் வெள்ளை நிற ஸ்டைரோஃர்ம் டப்பா சகிதம் பச்சாதாபத்தைக் காட்டச் சொல்லி ஏங்கும் கண்களுடன் இருக்கும் அந்த அஞ்ஜடி வாழ்க்கை, துணை யாருமில்லாத அநாதைக்கானதுதானே?. காலடியில் வேண்டுமானால் ஒரு தெரு நாய் படுத்திருக்கலாம்..’       

பார்வையாளர் நேரம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்க நல்லமுத்து புறப்படத் தயாரானபோது, யாரோ அம்மாகண்ணுவை அழைத்ததுபோல் அவள், கண் விழித்துக்கொண்டாள். கணவனை நோக்கி தன் கையை ஏந்தி, வேதனையில் தொலைந்து, கம்மிப்போன குரலில் கேட்டாள் 

“இப்பதான் வாரீங்களா?..”

“இல்லடி!. வந்து ரொம்ப நேரமாச்சி. நேரம் முடிய இன்னும் உன்னும் அஞ்சி நிமிஷந்தான் இருக்கு..”

அதைக் கேட்டதும், அவளின் கண்கள் மன்னிப்பைக் கேட்டு உருகின!. 

அவர், கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“அதுக்கு ஏண்டீ அழுவுற?. நாந்தான் ‘பாவம், ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு..’ எழுப்பல..” என்று தேற்றினார்.

எஞ்சிய நிமிடங்கள் அவர்களின் விரல் பிணைப்பில் கழிந்தன.  

றாவது நாள்!.     

கணவனை எதிர்ப்பார்த்துக் காத்திருந்ததுபோல அம்மாகண்ணு கண்கள் விழித்தே படுத்திருந்தாள். இன்று, சுயமாகவே மெல்ல சுவாசித்துக் கொண்டிருந்தாள். கணவனைப் பார்த்ததும் லேசான மலர்ச்சி, ஊசியின் வழி நரம்பில் கலக்கும் மருந்தைப்போல் ரகசியமாய் முகத்தில் படர்ந்து மலர்ந்தது. உலர்ந்துபோன உதடுகளின் அசைவில் புன்னகை ஒன்று அர்த்தத்தை இழந்து நெளிந்தது. அவளின் கை, கணவனின் கரத்தை நோக்கி நீண்டது. நல்லமுத்து, மனைவியின் கரத்தைப் பற்றி, தனது கரங்களுக்குள் புதைத்துக்கொண்டு அவளைப் பார்த்தார். நீண்டு விரிந்து, மெல்லத் தணியும் நெஞ்சக்குழியில் சீர்கெட்டுப்போன சுவாசம் தெரிந்தது 

“சாப்பிட்டீங்களா?.”  

அட்மிட் ஆன நாளிலிருந்து இன்றுதான்  முதல் முறையாக அம்மாகண்ணுவால் அந்தக் கேள்வியை கேட்க முடிந்தது. ஆயினும், ஐந்து நாட்களாக கேட்காமல் விட்ட மொத்த அக்கறையும் அந்த ஒரு நாள் கேள்வியில் தொனித்தது. 

நல்லமுத்துவிற்கு சட்டென்று தான் எழுதி வைத்திருக்கும் கடிதத்தின் ஞாபகம் வந்தது. அவள், இப்படி சற்றுத் தெம்பாக இருக்கும் போதே, அதைப் படித்துக் காட்டிவிடத் துடித்தார். தானே கடிதத்தைப் படித்துக் காட்டும் ஆச்சரியம், அந்த அவஸ்தையிலும் அவளுக்குக் கொடுக்கப்போகும் ஆனந்தத்தை நினைத்துப் பார்த்தார். அதுவே, அவளுக்கு ஒரு அருமருந்தாகவும் அமையலாம் என்று தோன்றியது!. 

“கண்ணு! நா, கடுதாசி ஒன்ன படிக்கப் போறன். கேளுடீ..”

அவளுக்கு என்ன கேட்டதோ? கணவன் கையிலிருந்த கடிதத்தை நோக்கி பலமிழந்து போன அவளின் கை நடுங்கிக்கொண்டே நீண்டது..

“இல்லடி!.. நானே படிக்கறன்..” என்று நல்லமுத்து பெருமையுடன் சொன்னார். 

அம்மாகண்ணுவின் ஒளியிழந்து போன கண்களில் உடனே ஒரு ஓளிப் பாய்ச்சல்!. நெற்றியில் சில சுருக்க ரேகைகள்!..  

கடிதத்திலுள்ள சொற்களை ஒவ்வொன்றாகப் பார்த்தே தன்னால் படிக்க முடியுமென்பதால் மனைவியை ஒரு முறைத் தீர்க்கமாய் பார்த்துவிட்டு, கடிதத்தை நிதானமாய்ப் படிக்கத் தொடங்கினார்.

‘கண்ணு,

நீ எதுக்கும் கவல படாதடி. உன்னியும் புள்ளிங்க ஒதுக்கி வெச்சிட்டாங்களேன்னு வருத்தப்படாதடி. நீ ஒன்னும் அநாத இல்ல. நா இருக்கன்டீ ஒனக்கு!. நீ இல்லாம என்னால வூட்ல ஒண்டியா இருக்க முடியலிடி செல்லம்!. உன்ன வுட்டா எனக்குத்தான் வேற யாருடீ இருக்கா?. சீக்கிரமாவே சொகமாயி வந்துருடி கண்ணு. 

இப்படிக்கு, 

உன்னோட நல்லமுத்து’

படித்து முடித்ததும் ஆவலுடன் மனைவியைப் பார்த்தார்.

அவள், கண்ணீர் பொங்க கணவனைப் பார்த்து, கரத்தை நீட்டினாள். நல்லமுத்து மனைவியின் கரத்தைப் பற்றிக்கொண்டார். அவள், பற்றிய கரத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். கொஞ்ச நேரத்திற்கு பின்னர், 

“நா ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?.” என்று வேண்டினாள். 

“ஏன்னடி பேசற?. ஒனக்கு என்ன வேணும் சொல்லு கண்ணு?.” 

“அந்த (2)லாச்சில என்னோட பர்ஸ்சு இருக்கு, எடுங்களேன்..” என்று மூச்சிரைக்கச் சொன்னாள். 

அவர், பர்ஸ்சை எடுத்து மனைவியிடம் தந்தார். அவள், பர்ஸ்சினுள் தன் நடுங்கும் விரல்களை விட்டுத் துளாவி, அவரின் போட்டோவை எடுத்து கட்டில் மேல் வைத்துவிட்டு, அடுத்து ஒரு துண்டு காகிதத்தை எடுத்து கணவரிடம் கொடுத்துச் சொன்னாள். 

“இது நம்ம புள்ளிங்களோட நம்பருங்க. மவனுக்கு ரெண்டு பொண்ணும் மவளுக்கு ரெண்டு பசங்களும் இருக்காங்க. எனக்கு, அவுங்கள யெல்லாம் ஒரு தடவ பாக்கணும் போல ஆசயா இருக்குதுங்க..” என்றாள். 

நல்லமுத்து, வெற்றுக் காகிதத்தைப் பார்ப்பதுபோல் கையிலிருந்த கடிதத்தையே வெறித்தபடி நின்றார்.     

* * *

வட்டாரச் சொல் விளக்கம்

  1. (1) பீஜாவான – அருமையான (மலாய்)
  2. (2) லாச்சில – டிராயரில் (மலாய்)

3 Replies to “கடிதம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.