உதிர்தல்

ஒரு சொல்லுமின்றி,  இருப்பை சிலிர்ப்பின் வழி உணர்த்திக்கொண்டு, தன்னைக் கடக்கும் யாவற்றையும் தன் மனமெல்லாம் நிறைத்துக்கிடந்தது ஏரி. அதன் கரையோரம் நடந்து வந்து கொண்டிருந்த அண்ணையா ஒரு கணம் நின்று அதன் சோபனத்தை நோக்கினார். அது நிர்வாணமாகக் கிடப்பதாய் தோன்றியது. தன்னை மீட்டுக்கொண்டு ஊர் நோக்கி வேகமாய் நடந்தார். ஏரியைக் கடந்தால் ராமுவின் தென்னைத் தோட்டம் வரும் அடுத்தார்போல் நாகன்னா ராகி போட்டிருந்தார். பின் கொழுத்து நிற்கும் பெரிய ஆலமரம். அருகில் கோயில் குளம், கோயில் குளம் என்றுதான் பெயரே ஒழிய ஊர்க்குளம்தான். அருகிலிருக்கும் கோயிலால் அப்பெயர் வந்தது. அக்கோயிலின் பொறுப்பாளர் அண்ணையாதான். விவரம் தெரிந்த நாள் முதல் அக்கோயிலே கதியென்று கிடப்பவர். அக்கோயில்தான் அவரைக் காலையில் எழச் செய்வது, ஏரிக்குச்சென்று முழுக்குப் போட்டு தூய்மை கொள்ளச் செய்வது. அதுதான் உணவிடுவது, அதுதான் விடாது பணிகளை கொடுப்பது, அதுதான் அசதி கொடுத்து இரவில் உறங்கச் செய்வது.  பரம்பரையாக அக்கோயில் பொறுப்பு அவர்களிடம்தான் இருந்தது. அண்ணையாவின் அப்பாவிடம்  பரம்பரையின் பதினோறு பெயர்கள் இருந்தது. பன்னிரெண்டாவதாக அண்ணையா. அப்பாவுடன் சிறுவயதிலிருந்தே கோயிலே கதியென்று கிடப்பவர் அண்ணையா. தந்தையின் இறப்புக்குப்பின் ஊர்க்கூடி முடிவெடுக்கும் அவசியமெல்லாம் இல்லாமல் பதினெட்டு நாள் கழிந்தபின், இருள் விலகாத காலையில்  ஏரியின் பனி இறுக்கத்தை உடல் சூட்டால் கலைத்து முழுக்காடி ஒளியின் ஒரு பொட்டு வெளிப்படும்போது பூஜை செய்தார். ஊர் அந்தப் பன்னிரெண்டு வயது மட்டுமே நிறைந்த இளம் பிள்ளையின் ஷ்ரத்தையை மெச்சியது, பதினோறு தலைமுறையின் வேண்டுதல் ஒரு வாழ்க்கையாக நிகழ்வதாய் பேசியது. ஒரு தேவையும் இல்லாமல் ஒருவரும் இல்லாமல், நிலையான ஒரு ஒழுக்கை அந்த ஊருக்கே அந்தக் கோயிலின் அண்ணையாவின் இயக்கம் கொடுத்திருந்தது. அண்ணையாவுக்கு இப்போது நாற்பது வயது. இருபத்திரெண்டு வருடங்களாய் தனியாகக் கோயிலை பராமரித்து வருகிறார். குளத்தோர ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்த ராமு அண்ணையாவைப் பார்த்ததும் எழுந்து நின்றார். சிறு வணக்கதுடன் கடந்து கோயிலை ஒட்டி இருக்கும் தன் வீட்டை அணுகியவர் உள்ளே யாரோ இருப்பதை உணர்ந்தார். அவர் தம்பிதான். உடல் விதிர்த்து கண்ணீர் எழுந்தது. சென்று அணைத்துக்கொண்டார். ஊர் விட்டுச் சென்று ஆறு வருடமாகிறது, இப்பொழுதான் திரும்புகிறான். 

‘எங்க போன? ஒரு தகவலும் இல்லியே?’

‘இல்ல அண்ணையா வியாபாரம்… ஒரே பரபரப்பு… இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு ஊரோட வந்துட்டேன்’. பேசச் சொலில்லாமல் நின்றிருந்தார்கள். ஆறு வருடத்தை அந்த ஓரிரு நொடி மௌனம் அளந்துகொண்டிருந்தது. மௌனம் மெல்ல கலையும் அப்பொழுதான் உள்ளே இன்னொரு பெண் அமர்ந்திருப்பதை உணர்ந்தார்.

பருத்த உருண்ட கண்களால் சிவு ஊர் திரும்பியிருக்கும் தம்பியையும் அள்ளி அணைத்து நிற்கும் அண்ணையாவையும் பார்த்தான். கையைப் பின்னால் கட்டிக்கொண்டு மேற்பார்வையாளர் போல் மெல்ல நடந்தான். 

‘அண்ணையா சரியா படல’ என்றான் சிவு.

‘போடா அந்த பக்கம், உளறிக்கிட்டு’ என்றார் அண்ணையா. அனந்தன் திரும்பி வந்திருப்பது ஊர் முழுவதும் பரவியது. ஒவ்வொருவராய் வந்து கண்டு சென்றனர். அன்றுமுதல் அனந்துவும் அவன் மனைவியும் இருந்துகொள்ளட்டும் என்று கோயிலிலேயே தங்கிவிட்டிருந்தார் அண்ணையா.

சிவு ஒரு நாள் மதியம் ஆலமர வேரிடையில் உடல் பொதித்து அமர்ந்தபடி கண் அயர்ந்திருந்தார்.

‘அண்ணையா… கொஞ்சம் பிரசாதம் இருந்தா குடேன்’ என்றான் சிவு.

‘சாப்டியா?’

‘இல்ல’

அவனுக்காக இலையில் சுற்றி வைத்திருந்த பிரசாதத்தை எடுத்துக்கொடுத்தார். நாலைந்து வாய் உள் செல்வது வரை எதுவும் பேசவில்லை, பின்,

‘அண்ணையா..’

‘ம்’

‘அனந்து மின்ன மாதிரி இல்ல அண்ணையா’

‘டேய் அவன் சின்னப் பிள்ளடா… நீ சாப்டு’

‘அப்டி இல்ல அண்ணையா..  எட்டு வருஷமா ஒரு சின்ன சச்சரவு இருந்துச்சா ஊருல..  அமைதியா வாழ்க்க போய்கிட்டு இருக்கு.. ஏதாவதொன்னு வரும் அண்ணையா.. எதுவும் வேணாம்னு உன்னாலயும் சொல்ல முடியாது.. ஒன்னுத்தயாவது விட்டுக்கொடுக்குறேன்னு அவன் வாயிலயும் வராது.. அனந்து ஒனக்கு இம்ஸ கொடுக்கத்தான்வந்திருக்கான்’

‘போட்டன்னா.. சாப்டு சிவு சும்மா’

‘இவ்வளவு கொட்டிட்டேன், மித்தத்தையும் கொட்டிடறேன், பூர்வீக நெலம் எங்கெல்லாம் இருக்குன்னு கேட்டுட்0டே வரான்.. உன் தாத்தா காலத்துலேந்து ராமுதான் பாத்துக்குறார் உங்க நெலத்த.. வருஷத்துக்கு ரெண்டு மூட்ட அரிசி, ராகி எல்லாம் கோயிலுக்கு வந்துரும், அது உனக்கு போதுமா இருந்திச்சு..’

‘அதுக்கென்ன இப்ப’

‘அனந்துவுக்கு போதாது அண்ணையா’

‘எடுத்துட்டு போறான் விடு சிவு.. நானே கூப்டு வேணும்னா அவன் பேருக்கு எழுதி வெச்சிடறேன்’

‘அத்தோட விட்டா நல்லது அண்ணையா.. ஆனா வான் அத்தோட நிக்கிற ஆள் இல்ல… வந்து ஒரு மாசமா தினமும் மல் வாத்தியார்கிட்ட போய் நிக்கிறான்…’

அண்ணையாவுக்கு முகம் சிவந்தது. ‘இப்ப என்ன சொல்ல வர… அனந்து என்ன மல்லுக்கு கூப்ட போறான்னு சொலிறியா? சாப்டீல எடத்த காலி பண்ணு’

‘அண்ணையா உனக்கு கோபம் வருது.. பயந்ததெல்லாம் சரி என்றபடி ஏரியை நோக்கி நடையைக் கட்டினான் சிவு.’

அண்ணையா மீண்டும் வேரில் தன்னை பொதிந்துகொண்டார். இவன் சொல்லும் கடைசி சொல் வரை நான் வெறுப்பதே, அது உண்மை என்பதை மனதின் ஒரு சின்னப் பகுதி உணர்வதால்தானோ? அந்த சின்னப் பகுதியின் மீதுதான் ஆயிரம் போர்வைகள் போட்டு மூடி வைக்கத்தலைபடுகிறோமோ?

அப்பா சொல்லிக்கொடுத்த வசனப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது,

உதிர்க்கிறேன் என் சினத்தை

உதிர்க்கிறேன் என் அச்சங்களை

உதிர்க்கிறேன் என ஆசைகளை

உதிர்க்கிறேன் என் சொல்லை

உதிர்க்கிறேன் என் எண்ணங்களை

உதிர்க்கிறேன் என் மனதினை

உதிர்க்கிறேன் என் ஆடைகளை

உதிர்க்கிறேன் என் தோலை

உதிர்கிறேன் என் உதிரத்தை

உதிர்க்கிறேன் என் உயிரை

உதிர்க்க ஏதுமில்லாமல் எஞ்சுமொன்று

அனைத்திலும் ஒன்றாய் எஞ்சுமொன்று

அதை அருள்வாய் 

உடல் மெய்ப்புக்கொண்டது. எழுந்து வேஷ்டியை சரி செய்த படி கோயிலுக்குள் நுழைந்தார்.

அன்று மாலை ஊர் பட்டேலிடம் வழக்குக் கொடுத்திருந்தான் அனந்து. ஊர் பொதுவில் வேண்டாம் என்றவரிடம், இல்லை ஊர்ப் பொதுவில்தான் நடக்கவேண்டும் என்றுவிட்டான். அன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து ஊர் கூடுகை இருந்தது. எல்லோர் எதிர்பார்ப்பாகவும் இருந்தது அண்ணையா எப்படியும் அனந்துவிடம் பேசி சரிசெய்துவிடுவார் என்றுதான். ஆனால் அண்ணையா அனந்துவின் பக்கம் கூட செல்லவில்லை. வழக்கு பற்றிய தகவலை பட்டேலே வந்து சொன்னார் அண்ணையாவிடம். தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு ஏரியைக் கடந்து காட்டுக்குள் சென்றவர்தான். ஒரு வாரத்திற்கு யாரும் அண்ணையாவைப் பார்க்கவில்லை. அன்றிரவு கோயிலை பூட்டியது சிவுதான். ஊருக்கு கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓரு வழமையை கொடுத்து வந்த புலரிகால பூஜை அன்று நிகழவில்லை. நாளில் ஏதோ ஒன்று தவறிவிட்டதை பசுக்கள் கூட உணர்ந்தன. அடுத்த நாள் மாலையிலிருந்து அனந்து கோயில் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அண்ணையா வரப்போவதேயில்லை என ஊர் பேசியது. சிவு கண்டிப்பாக அண்ணையா வருவார் என்றும் அவர் கண்ணில் கோபமும் இழக்கப்போகும் பொருள்மீதான ஆசையையும் பார்த்ததாகச் சென்னான்.

பசுக்களெல்லாம் கொட்டடைந்த பின்னான மாலையில் சொன்ன நாள் நேரத்துக்கு ஊர் கூடியிருந்தது. பறவை திசை நோக்கி ஷிவலிங்கையா இந்த வருடம் மழை அதிகமிருக்குமென்றும், இன்னும் இரண்டு நாட்களில்  மழை துவங்குமென்றும் சொன்னார். ஊர் தானியங்களை நீர்ப்பதமேறாமல் பாதுகாக்கக் கிடங்குக்கு இன்னும் இரண்டு சுவர் கூடுதலாக எடுக்க வேண்டுமென்றார். அதுவரை அவ்வூர் கண்டிராத மழை அவ்வருடம் இருக்கப்போவதாகச் சென்னார். நிகழாதவை தன்னை நிகழ்த்திக்கொள்ளும் காலமது.

அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே கூட்டம் சலசலத்தது. அண்ணையா வந்திருந்தார். அனந்து அவர் பக்கமே நோக்கவில்லை. அவரும்.

பட்டேல் வழக்கு விவரங்களை முதலில் சொல்வதுண்டு, ஆனால் அன்று அனந்துவை நோக்கி சொல்லப்பா என்றார்.

‘ஊருக்கு சபைக்கு என் வணக்கம், நான் என் அப்பா தவறுன பிறகு ஊர விட்டு போய் எட்டு வருஷம் மேல ஆச்சு. வியாபரம் பாத்தேன், கப்பல் ஏறி தூர தேசம் போனேன், கல்யாணம் பண்ணினேன், இன்னக்கி ஊருக்கு திரும்பியிருக்கேன். என் அப்பாவோட சொத்து நெலம் ஒரு நாலு ஏக்கரும், கோயில் பராமரிக்கிற பொறுப்பும்தான். என் சொந்த அண்ணனா நெனக்கிற அண்ணையா என் அப்பாவோட வளர்ப்பு பிள்ளைதான். ஆக பட்டேல் ஐயாவும் ஊரும் எனக்கு பாத்யதையான உரிமைகள் என்னன்னு தீர ஆராஞ்சு சொல்லனும்’

பட்டேல் தலையை லேசாக கவிழ்த்து இரண்டு கைவிரல்கள் நுனிதொடுமாறு சேர்த்து, அதையே நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்பதாவது தலைமுறையாக ஊர் பட்டேலாக இருப்பவர். எண்பது வயது, பார்த்த அத்தனை வழக்கும் ஆசையில் வேர்கொண்டிருப்பவைதான். ஆசையின் திரையை நீக்கிப் பார்த்து அதனை இரு தரப்பையும் பார்க்கச் செய்வதுதான் எப்பொழுதும் நடப்பது. பார்க்கத் திராணி அற்றவர்களுக்கு அதிகாரத்தின் கைகளை ஓங்க வேண்டும். தான் பட்டேலாக இந்த மரத்தின் கீழமர்ந்த ஒவ்வொரு வழக்குக்கும் அண்ணையா உடன் இருந்திருக்கிறார். அண்ணையாவின் வார்த்தையைத்தான் எண்ணிச் சேர்த்து விவாதித்து ஒரு முடிவுக்கு வருவதுண்டு, தன் முடிவைக் கூறிவிட்டு அண்ணையாவின் கண் ஒப்புதலுக்காக ஒரு முறை பார்ப்பதுமுண்டு. ஆனால் இன்று அண்ணையா வழக்கில் வந்து நிற்கிறார். அண்ணையா இப்படி நிற்கக் கூடிய சூழல் கோடி ஆண்டுகளில் நிகழக்கூடியதல்ல என்று பட்டேல் மட்டுமல்ல ஊரே நினைத்திருந்தது. இதுபோன்ற நேரங்களில்தான் விதியை காலத்தை தெய்வத்தை நோக்க வேண்டியிருக்கிறது. அந்தக் குளத்தோர ஆலமரத்தின் கீழ் ஊர் அமைதியாய் அமர்ந்திருந்தது. அண்ணையா தன் வாயால் இதனை இரண்டு வரிகளில் கடந்து விடுவார் என எதிர்பார்த்திருந்தது.

அண்ணையா கனைத்தார், ஒரு வாரத்திற்கும் மேல் பேசாத குரல் மாறி கனம் கூடியிருந்தது.

‘சபைக்கு படேலுக்கு என் வணக்கம். ஊர் பார்வையில ஒரு மனுஷனா நான் இருந்துருக்கேன், கோயில் கைங்கர்யம், ஊர்ப்பொது நிகழ்வுன்னு உழச்சிருக்கேன். அனந்து சொல்ற மாதிரி நான் அப்பாவுக்கு தத்துப்பிள்ளைதான், ஆனா என்னோட பன்னிரெண்டாவது வயது தொடங்கி நான் ஒத்த ஆளா இருவத்தெட்டு வருஷமா கோயில பராமரிச்சு வந்திருக்கேன். ஆக எனக்கு கோயில் கைங்கர்யத்துக்கு மட்டுமான உரிமைய  கேக்குறேன். ஊர் இத கொடுக்கணும் எனக்கு’

படேல் உடலில் இருந்த சிறு சிறு அசைவுகளும் இல்லாமல்  அண்ணையாவைப் பார்த்தார். இது ஊர் எதிர்பார்த்ததுதான், இவ்வழக்குக்கு தீர்வும் இதுதான். ஆனால் காலம் விதி தெய்வத்துக்கு வேலை?

அனந்து ‘அண்ணையாவின் எதிர்பார்ப்பு சரிதான்,  என் அப்பா மொத்தம் பதினோரு தலைமுறையா கைங்கர்யம் பண்ணவங்க பெயர் வரிசை வச்சிருக்கார். இது இரத்த வழியா தொடருர விஷயம். அதுபடி கோயில் கைங்கர்யம் எனக்குதான் வந்து சேரணும், அதுக்குப் பின் என் பிள்ளைக்கு அடுத்து அவன் பிள்ளைக்கு. இரத்த விதத்துல சம்மந்தப்படாத அண்ணையா இதுலேந்து ஒதுங்கிக்கனும்னு சபை கட்டளையிடனும்’ என்றான்.

பட்டேலுக்கு வழக்கு செல்லும் திசை இஷ்டமாகவில்லை. ஊரின் ஒட்டுமொத்த மனநிலையிலும் அதுவரை இல்லாத ஏதோ ஒன்று குடிகொண்டுவிட்டதாய் நினைத்தார். கடந்த மூன்று மாதமாக நடந்து கடந்துவிட்ட பல நிகழ்வுகளில் உள்ள தீய சகுனங்களை மனம் கோர்க்கத் துவங்கியது. ஷிவலிங்கையா பெருமழை ஒன்று பற்றி உறுதியாய் இருப்பது கூட அவருக்கு அச்சமளித்தது. ஆனால் ஐம்பது வருடத்துக்கும் சுற்றியுள்ள பன்னிரெண்டு கிராமங்களின் வழக்குகளை கண்ட மனம் சொன்னது கோணல் எப்பொழுதும் மனித மனதில்தான் என்று. ஆழத்தில் கிடக்கும் அந்தக் கோணலை நெக்கிச் சரியாக்க கடவுள்தான் அருள்புரியவேண்டும். கோணலை வைத்ததே அவன்தானோ எனவும் தோன்றியது.

பட்டேல் அமைதியாய் இருப்பதைக் கண்டு நாகன்னா பேசுவதற்கு உத்தரவு கேட்டுவிட்டு சொன்னார் ‘அனந்து, அண்ணையா இருபத்தெட்டு வருஷமா கோயிலே கதின்னு கிடந்துட்டவரு, உன்னால கூட இப்டி இருக்க முடியுமான்னு தெரியாது, ஒரு நாள் தவறல, வெள்ளம் வந்து ஊரே தண்ணிக்காடா கிடந்தப்பக்கூட கைங்கர்யத்த விடல. ஆக அவருக்கு குடுக்குறதுதான் சரி’

அனந்து ‘வழம மொறைக்கு மரியாத இருக்கணும் இல்லையா? இந்தக் கோயில கட்டுனது தண்ட நாயக்கர் வம்சம்தான், பத்து வருஷம் முந்திகூட அவர் வம்சம்தான் படைதாங்கி நின்னுது, இரத்த வழிதான்  முன்னூறு வருஷமா ஒரு ராஜ்ஜியத்த இங்க நிறுத்தியிருந்துச்சு, இன்னக்கி ராஜ்ஜியம் உடஞ்சு போய் ஒரு மன்னர் இல்லாம நாம் நிக்கலாம் ஆனா இரத்த வழிதான் திரும்பவும் ஒரு ராஜ்ஜியத்த இங்க உருவாக்கி நிறுத்தும். நம்ம பட்டேல் ஐயா பதினெட்டு வம்சமா பட்டேல் பதவீல இருக்காரு. அண்ணையாவோட தகுதி கருதி இரத்த வழிய விடுறது சரியில்ல. பிரம்மச்சாரியான அண்ணையாவுக்கு பிறகு யார் கோயில பராமரிப்பா?’

வழக்கு சுவர்முட்டி நிற்கிறது என்று படேல் உணர்ந்தார். தான் இவ்விடத்தில் ஒரு தீர்ப்பை சொல்ல வேண்டும் இல்லையெனில் ஐம்பது வருடம் முன் விட்டொழிந்துபோன வழக்கம் மீண்டும் எழக்கூடும். அண்ணையா அதற்கு இடம் கொடுக்க மாட்டார்தான் என்று நினைத்த போது மற்போர் ஆசான் எழுந்தார். படேல் தான் பிந்திவிட்டது பிழை என உணர்ந்தார். சபைத் தலைவரான படேலின் அனுமதியின்றி பேசும் உரிமை ஆசானுக்கு உண்டு.

‘சபைக்கு வணக்கம். இன்னக்கி கூட மொத்த ஊரோட ஆண்களும் போர்ன்னு வந்தா ஆயுதமேந்துரது வழக்கம்தான். கோயில் பூசகர் சம்சாரின்னு பேதமில்ல. கடந்த நாலு தலைமுறையா அமைதி நிலவுது. முன்னூறூ வருஷமா இங்க நெலச்ச ராஜ்ஜியத்துக்கு கீழ தனிப்படை உருவாகி வந்திருச்சு. எண்ணூறு வருஷம் மின்ன நம்ம ஊருக்கு வெளில இருக்குற காடுல ஒரு பெரும்போர் நிகழ்ந்ததா கதை இருக்கு. போரோட காலம் முடிஞ்சுட்டதா பட்டேல் ஐயா அபிப்ராயப்படலாம். ஆனா என்னோட இருவதாவது வயதுல நம்ம மொத்த ஊரும் போருக்கு எழுந்திருக்கு. இன்னும் சுத்தியுள்ள ஊர்கள்ல இந்த மொற இருக்கு, ஆனா நம்ம படேல் ஐயா ஒரு வழக்கையும் தனிச்சண்டைக்கு விட்டதில்ல. ஆனாலும் இந்த சபைல ஒருத்தனா, வழக்குல சம்மந்தப்பட்ட இரு தரப்பும் மனம் அடங்காத ஒரு நிலைல, நியாயம் எதுன்னு சபை தயங்குரப்ப, தனி  யுத்தத்துக்கு ஒரு தரப்பு மறு தரப்ப அழைக்கலாம்குறத சபைக்கு தெரிவிச்சுக்குறேன்.இரு தரப்பும் ஒப்புத்துகிட்ட பிறகு சபை ஒப்புதல் குடுக்குறப்ப தனி யுத்தம் நடக்கும். ‘ அமர்ந்துகொண்டார்.

வார்த்தை மாறாமல் ஒவ்வொரு வழக்கிலும் ஆசான் இதைச் சொல்லி வருகிறார். பட்டேல் சிறுவனாக இருந்தபோது ஒரு தனியுத்தம் நிகழ்ந்துள்ளது. அதன் பின் இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஆசான் இதனைக் கூறுகையில் ஊர் மூர்க்கம் கொள்ளுவதாய் பட்டேல் உணர்வதுண்டு. மனம் குழம்பியது பட்டேலுக்கு, இதுவரை ஒரு வழக்கில் கூட இப்படி மனம் குழம்பியதில்லை. நினைத்தும் பாராதாவை நிகழும் காலமுண்டு என தன் தந்தை சொல்வதை நினைத்துக்கொண்டார்.

ஆசான் அமர இருந்தவர் ‘இன்னொரு பெரும் யுத்தம் ராஜ்ஜிய அளவுல தயாராவுது. நாம் எல்லாம் படைக்கலமேந்தி போருக்கு போர நாள் தூரமில்ல. நன்றி’ எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.

அண்ணையா தொண்டைச் செருமல் கை உயர்த்தல் போன்று பேசுவதற்கான எந்த சமிக்ஞையும் இல்லாமல் சொல்லெடுத்தார் ‘அனந்துவை நான் தனி யுத்தத்துக்கு அழைக்கிறேன். வெற்றிக்குப் பரிசாக என் வளர்ப்புத் தந்தையோட முழுச் சொத்தையும் கேக்குறேன்’ ஊர் சிலைத்துப்போய் நின்றது. படேல் அசைவின்றி அண்ணையாவை நோக்கினார்.  தனியுத்தம் நிகழ்வது அரிதாகிவிட்ட காலம் அதிலும் அண்ணையா போன்ற சாதுமூலம் ஏன் நிகழவேண்டும்?

அனந்து யோசிக்க இடம் கொடாமல் ‘மறு தரப்பின் அழைப்பை ஏற்கிறேன்’ என்றான்.

ஒரு தரப்பு மறுத்தால் கூட தனிப்போர் ரத்து செய்யப்படும். அனந்துவின் சொல்லோய்ந்த அடுத்த நொடி ‘சபை சார்பாக நான் ஒப்புகிறேன்’ என்றார் படேல். மல்யுத்தஆசான் ‘ஒப்புகிறேன்’ என்றார். நாகன்னா ஒப்புகிறேன் என்றார். அன்றிலிருந்து மூன்றாவது நாளில் மல்யுத்தம் என உறுதியானது.

ஊரே அந்த தனிச் சமருக்கு தயாராகிக்கொண்டிருந்தது. மனங்களில் ஒடுங்கியிருந்த வன்மம் கிரகணம் போல் மெல்ல இருள் சுரந்தது.  ஆசான் நடக்கவிருக்கும் சமர் மிகவும் தேவையானது எனவும், தலைமறைவாக இருக்கும் தண்ட நாயக்கர் எக்கணமும் படை கோரி ஊருக்கு வரக்கூடும் என்றும், காளியின் கருமையே வரப்போகும் பெருமழையின் மேகம் என்றும் சொன்னார். அனந்தன் அண்ணையாவை விட உயரம் கம்மி, ஆனால் வேகம் அவன் பலம், கை தொடை தசைகள் புடைத்து நரம்போடி ஒரு போர் வீரனுக்கானது. அண்ணையா உயரம், படு உயரம் நின்றபடி கோயில் தூணின் அலங்கார விளிம்பில் இருக்கும் பறவைக் கூடுகளை அகற்றுவார். ஆனால் அவர் கைகள் கால்கள் ஒல்லியானவை, தோளில் எலும்புகள் துருத்தி நிற்கும், கால்கள் பலமானவை, காட்டுக்கு உள்ளும் வெளியுமென நாளின் பாதியில் நடந்தே உறுதியானவை. இதை பேசிப் பேசி பேச்சிலேயே தனி யுத்தத்தை நடத்தி ஊர் மக்களின் அசைவுகளில் குரலில் ஒரு வேகம் கூடியிருந்தது. 

ஷிவலிங்கையா சொன்னது போல் சரியாக ஊர் சபை நாளிலிருந்து இரண்டாவது நாள் மழை துவங்கியது. சூரியனைக் காணவேயில்லை. மலர்க்காம்பை ஒடித்து மலரை துண்டிக்கும் அளவுக்கு பெரும் துளிகளாக மழை பெய்தது. ஊர்ச் சபை முடியவும் காட்டுக்குள் சென்றவர்தான் அண்ணையா. அனந்து தினம் மல்யுத்தபள்ளியில் இருந்தான். பட்டேல் மனம் நொந்தார். இந்த காலம் என்ன, இருவரை போர் புரிய வைத்து என்ன நியாயத்தைக் காண முடியும் , இயற்கையில் இருக்கும் மிருக வழி அல்லவா, வலியது வெல்லும் என்பது மிருக வழியன்றி வேறென்ன, மானுடத்தின் வழி அன்பின் வழியாக மட்டுமல்லவா இருக்கவேண்டும்? அனந்து தான் வெளியூர் சென்று வியாபாரம் பார்க்கப்போவதாய் கிளம்பியபோது கட்டுப்படுத்தமுடியாத கண்ணீர் அல்லவா அண்ணையாவிடமிருந்து வெளிப்பட்டது, திரும்ப அனந்து வந்தபோது கூட மார்பிறுக அணைத்து கண்ணீர் விட்டதாக சிவு சொன்னானே? எங்கு உள்ளது நாம் உதிர்க்கவேண்டிய ஒன்று? அல்லது  ஆசான் சொல்வது போல் இந்த போர்க்காலம்தான் இப்படியான ஒரு நிகழ்வைத் தூண்டுகிறதா? கணம் யோசியாமல் நானல்லவா முதலில் இந்த யுத்தத்துக்கு ஒப்புதல் கொடுத்தேன்? ஊரின் மனம் போரை நாடுகிறதா?  அண்ணையாவின் மனம் எப்படி, சாது என்று ஊரே அறிந்த அண்ணையா எப்படி? ஊர் தனி மனிதனை தன்னுள் விழுங்கிவிடுகிறதா? ஊரை தன் வழி இழுக்க முடிந்தவன் யார்? அவதாரமா? மழையை வெறித்த வண்ணம் யோசித்தபடி நாட்களைக் கடத்தினார்.

தனி யுத்தம் நடக்கவிருக்கும் மூன்றாவது நாள் காலையின் ஒலிகள் ஏதுமற்று இருந்தது,  விரிந்து விரிந்து பரவும், மண்ணை உயிர்ப்பிக்கும், நீரை இளகச்செய்யும் சூரிய ஒளி அறவே இல்லை.  ஊருக்கு வெளியில் தனிப்பாறைக்கு அருகில் பொட்டல்தான் களமாகத் தேர்வாகியிருந்தது. சிறு கல்லைக் காளியாகப் பிரதிஷ்டை செய்தார் ஆசான். பட்டேல் வரவில்லை. அனந்து வந்திருந்தான், ஊர் கூடியிருந்தது மழை ஒரு பொருட்டல்ல என்பதுபோல். காலம் சொட்டிக்கொண்டே இருந்தது. அனந்து அமைதி இழந்தவனாய் அங்கும் இங்குமாய் நடந்துகொண்டிருந்தான். அண்ணையா வரப்போவதில்லை என ஓரிருவர் பேசினர். பின் அனைவருமே அண்ணையா வரப்போவதில்லை என உறுதியாக நம்பினர். சிறு ஏமாற்றத்தை உணர்ந்தனர். சிவு மட்டும் காட்டுப்பாதையை உற்று பார்த்துக்கொண்டிருந்தான். ‘தா’ என்றான். 

படுவேகத்தில் அண்ணையா நடந்து வந்து கொண்டிருந்தார். அணிந்திருந்த வேஷ்டியை கழற்றி வீசிவிட்டு கௌபீனத்தை இறுக்கிக்கொண்டே  நீரில் வழுக்கி வருவதுபோல் வந்து கணம் தாமதியாமல் களத்தில் நின்றார். அனந்து கால் பரப்பி முதுகுத் தண்டு வளையாமல் கொஞ்சமாக முன் சாய்ந்து இரு கைகளைக் கால்முட்டிக்கு அருகில் ஊன்றி நின்றான். அண்ணையா ஒரு கையை மட்டும் முட்டியில் ஊன்றி கண்ணை அனந்துவில் நிலைகுத்தி நின்றார். களத்தில் உள் நுழைந்த ஒரு நொடிக்குள் இவ்வளவும் நடந்தேறிவிட்டிருந்தது. ஆசான் களவீரர் இருவரும் நிலை கொண்டபின் மூன்று நொடி தாழ்த்தி இடி எழுவது போல் படீர் என கையைத் தட்டினார். அடுத்த நொடியில் அண்ணையாவின் முதல் அடி அனந்துவின் காதோடு சேர்த்து விழுந்தது. காது லேசாக அறுபட்டு இரத்தம் வருவது தெரிந்தது. அனந்து சுதாரித்துத் தூரம் சென்றான். அண்ணையாவின் அடியில் இருந்து தப்புவதையே எண்ணமாகக் கொண்டு வேக வேகமாய் நகர்ந்தான். ஆனால் அண்ணையாவின் அகண்ட கால்களின் ஒவ்வொரு அடியும் பிரம்மாண்டமானதாய் அனந்துவை அணுகி வந்தது. முழு விசையில் அறைந்தார். நெளிந்து வளைந்து தப்ப அனந்து முயன்றாலும் ஓரிரு அடிகள் மேல் விழத்தான் செய்தது. அனந்து சுதாரிப்பான நிலையிலேயே இருந்தான். அண்ணையாவிடம் யாருமே எதிர்ப்பார்க்காத இந்த அகோர ஆடலுக்கு முன் தன் சமநிலையை இழக்காமல்தான் இருந்தான்.  வீழ்த்துவதையே எண்ணமாகக் கொண்டிருந்த அண்ணையாமுன் தற்காத்துக்கொள்வதையே எண்ணமாகக் கொண்டு முழுதும் உள் பதுங்கினான். வீழ்த்தும் வேகத்தில் அண்ணயா தன்னை காத்துக்கொள்ளவில்லை என்பதை அவன் மனதில் ஒரு சிறு பகுதி அறிந்து அவனறியாமல் அவன் உடலுக்கு ஆணையிட்டது. தீண்டக் காத்திருகும் நாகம்போலிருந்தவன், அண்ணையாவின் இரு பெரு அடிகளைத் தப்பி ஒரு அடி முன்னெடுத்து தரை நோக்கி அமர்ந்து தன் மணிக்கட்டால் கீழிந்து மேல் நோக்கி அண்ணையாவின் தாடையை அறைந்தான். பல்லுக்கிடையில் இரத்தம் ஊறியது அண்ணையாவுக்கு. அண்ணையா ஒரு அடி பின் அடைந்தார். அடுத்த அடியை அவர் வயிற்றுக்கு கோண்டு சென்றவனின் விசையை மேலிருந்து கீழாக அறைந்து தடுத்தார். அடுத்த கணம் அனந்துவின் கால்கள் அவர் தாடையைத் தாக்கியது. பின் வாங்குவார் என எதிர்பார்த்தான் அனந்து. ஆனால் அடி விழுந்ததன் எந்த அடையாளமும் இல்லாமல் அண்ணையா அவன் முகத்தில் மாறி மாறி அறைந்தார். இரண்டு அறை முகத்தில் விழவும் லேசாக நிலை தப்பியது பின்னடைந்த படி தன் கைகளை உயர்த்தி தன்னைக் காத்துக்கொண்டான் அனந்து. 

மழை மெல்லத் தூறலாக இருந்தது. படீர் படீர் என விழும் அறை. இருவர் உடலும் சிவந்து போயிருந்தது. அண்ணையாவின் வாயிலிருந்து இரத்தம் வந்தது. மதியப்பொழுதுக்குள் நீண்டது யுத்தம். ஆசான் மீண்டும் படீர் என கைதட்டினார். யுத்தம் தன் கால எல்லையை மீறிவிட்டதால் யுத்ததின் களமும் அர்த்தமிழக்கிறது. இனிக் களம் என்பது இப்பூமி என்று அர்த்தம் அந்தக் கைத்தட்டலுக்கு. 

துவக்கத்தில் ஒவ்வொரு அடியையும் தன் மீதும் உணர்ந்த மக்கள் மெல்ல மெல்ல அந்த யுத்தம் யுகம் யுகமாய் நிகழ்வதுபோல் உணர்ந்தனர். பேய்களின் கூததாடும் நடனம் போலிருந்தது அது. மனதின் பேய்கள் விலங்குகள் நீங்க தன் முழு உருவத்துடன் அழிவு அழிவு என்றன, நாசம் நாசம் என்றன, மரணம் மரணம் என்றன. நோவும் உடல்களிலிருந்து வலிமையை, உடலோடு மெல்ல அடங்கும் மனங்களிடம் மேலும் மேலும் வன்மத்தை கோரிக்கொண்டிருந்தது. நாகங்கள் ஒன்றை ஒன்று முறுக்கிக் கடித்துக்கொள்வது போலிருந்தது. இரையைக் கொல்லும்வேகம் இருவரிடமும் கூடியிருந்தது. படீர் என மீண்டும் ஆசான் கையை அறைந்தார். இனி யுத்தம் விதிகளற்றது என்று அர்த்தம்.

கனத்துவிட்ட மழையினூடே இரு தரப்பிலும் பெருமூச்சுக்களும் வலி முனகல்களும் வெளிப்பட்டன. உடலெல்லாம் இரத்தம் கன்னிப்போயிருந்தது. மூச்சிரைப்பின் கம்பி உரசுவது போன்ற ஒலி ஊர்முழுவதும் ஒலித்தது. ஒரு யுகத்தின் ஒரு காலத்தின் ஒரு தினத்தின் ஒரு பொழுதின் இயல்பாகிவிட்ட அந்த யுத்தம் மெல்ல மாலைக்குள் சென்றது. கைகள் வலிமையிழ்ந்து தரைநோக்கி இறங்கின. கால்கள் பாவாமல் தள்ளாடின. பிறப்பின் நோக்கம் பல ஜென்மங்களுக்குப் பின் கிட்டிய வேகத்துடன் அண்ணையா இருந்தார். கைகளைத் தரைநோக்கி இறக்கிவிட்டு கோரமான கூச்சலிட்டார். அண்ணையா வலதுகையை முன்பின்னாக சுழற்றி உள்ளங்கை முழுவதும் முகத்தில் விழுவது போல் அடித்தார். கிரங்கி கீழே விழுந்தான் அனந்து. மழை நன்றாக வலுத்திருந்தது. அனந்துவின் முகம் நடுங்கிங்கொண்டிருந்தது. உடல் வலியில் திருகிக்கொண்டிருந்தது. அண்ணையாவின் உடல் முழுதும் இரத்தம். வலுவான மழையிலும் சிவப்பு உடல் நீங்க மறுத்தது.  அந்நிலையில் யாரும் யுத்தத்தை நிறுத்துவதில்லை. அதுவாக நிகழ வேண்டும். மரணத்தில்தான் அது முடியுமென அனைவருக்கும்தெரிந்தது. வீழ்ந்து அசைவின்றி கிடந்த போது வெற்றி அண்ணையாவுடையது என முடிவானது. அண்ணையா நினைத்தால் அங்கு நிறுத்தியிருக்கலாம். ஆனால் வீழ்ந்தவன் மீதமர்ந்து அவன் முகத்தை உயர்த்தி ஒரு கையால் பிடித்து மறுகையின் மூடிய முஷ்டியால் முகத்தை அடித்து நசுக்கத்துவங்கினார். பட்டேல் அங்கு வந்து அண்ணையாவின் தோள்பட்டையைத் தொட்டார். அதன் பின்தான் அண்ணையா அமைதி கொண்டார். அதற்குள் அனந்துவின் முகம் உரு சிதைந்திருந்தது. கொட்டும் மழையில் இரத்தப் பிண்டமாய் கிடக்கும் அனந்துவின் மீது குருதி சொட்டும் உடலுடன்  அமர்ந்திருந்தார். அவர்களைச் சுற்றி ஒரு குருதி வட்டம் விழுந்திருந்தது. தியானிப்பது போல் அவன் மீது அமர்ந்திருந்தவர் மெல்ல சரிந்து அருகில் விழுந்தார் வானம் இருவரைவும் பார்க்கும்படி.

………………..

சிவு அந்த மாலையும் ஒற்றைப் பாறை வரை வந்து அதன் மீதேறி காட்டுக்குள் நோக்கினான் அண்ணையா வருகிறாரா என்று. இது சிவுவின் வழக்காகிப்போனது. தனியுத்தம் முடித்து காட்டுக்குள் சென்ற அண்ணையா பின் சென்றவன் ஒரு புள்ளியில் நடக்க முடியாமல் வழி தவறி ஒரு சிறுத்தையிடமிருந்து எப்படியோ தப்பிப் பிழைத்து வந்து சேர்ந்தான். அதிலிருந்து ஒற்றைப் பாறைக்கு வருவதும் அண்ணையா வருகிறாரா எனப் பார்ப்பதும் சிவுவின் வழக்காகிப் போனது. காலையில் அனந்து இருக்கும் வைத்திய சாலைக்கு நடந்தே செல்வான். அனந்துவிடம் ஊர் விஷயம் எல்லாம் சொல்வான். ‘தண்ட நாயக்கர் படைக்கு கூப்டுறாரு, ஒட்டு மொத்த ஊரும் தயாராவுது அனந்து, அண்ணையா இருந்தார்னா என்ன கோயில பாத்துக்க சொல்லிட்டு போவாரு, நீயும் இப்டி கிடக்க, நானும் போய்ட்டா கோயில யாரு பாக்குறது’. அனந்து மெல்ல மெல்லத் தேறி நடக்கத் துவங்கியபொது சிவுதான் மாட்டுவண்டியில் வந்து ஊருக்கு அழைத்துச் சென்றான். ஒரு நாள் தண்ட நாயக்கரே வந்திருந்தார். ஊரே உற்சாகம் கொண்டது. போர் வென்றால் அடுத்த மன்னர் இவர்தான். அவர் வருகைக்குப் பின் ஊரின் அனைத்து ஆண்களும் முதியவர்கள் நீங்க போர் செல்ல சித்தமாயினர். அரை நாள் நடை தூரத்தில் ஒரு படைப்பள்ளியை காட்டுக்குள் அமைத்திருந்தார், மெல்ல ஆண்கள் செல்லத் துவங்கினர். ஒரு புள்ளியில் முதியவர்கள் குழந்தைகள் பெண்கள் மட்டும்தான் எஞ்சினர் ஊரில். சிவு ஒரு மாலை தவறாமல் ஒற்றைப் பாறை வந்து போனான். மழை நின்றுவிட்டிருந்தது. மண் காய்ந்து ஈரப்பதம் மட்டுமிருந்தது. அன்று ஒற்றைப் பாறை மேலேறியவன் கண்களுக்கு தூரத்தில் செடிகளுக்கு இடையில் யாரோ நடந்து வருவது தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அருகில் வர வர அவன் சித்தத்திற்கு விளங்கியது. வந்து கொண்டிருந்தது அண்ணையாதான், ஆனால் சிவு கூட அண்ணையா என அழைக்கத் துணிய மாட்டான். உடலில் ஒரு பொட்டு ஆடை இல்லை. தலை சடைப்பிடித்திருந்தது. தூரத்து அடிவானில் நிலைகுத்தியது போலொரு பார்வையுடன் ஊருக்குள் நடந்து சென்றார். சிவு பின் வந்தான். ஒரு சொல்லின்றிக் கிடக்கும் ஏரியைக் கடந்தார். முதியவர்களும் பெண்களும் கூடி விட்டிருந்தனர். அனந்து குச்சியை ஊன்றி ஊன்றி நடப்பவன் ஆல மரத்துக்கருகில் அவரைக் கண்டான். பார்வை அப்பால் எதன்மீதோ இருந்தது. அனந்து தன்னை மறந்து தன்னைக் கடக்கும் அவரைக் கும்பிட்டான்.

பார்ப்பவரை முதலில் துணுக்குறச் செய்தது நிர்வாணம். பின் விடுதலையின் துளி ஸ்பரிசம் கிட்டியது ஒரு கணம். ஊர் அவரைக் கண்டு சிலைத்துப்போய் நின்றது. ஆனால்  பார்வைகூட ஒருவர் மீதும் படியாமல் கடந்து சென்றார்.  ஊர் எல்லை வரை ஊர் பின் சென்றது.பட்டேல் அமைதியான முகத்துடன் நின்று பார்த்திருந்தார் விடுபட்ட ஒருவன் கடந்து செல்வதை. அண்ணையாவின் அப்பா சொல்லும் ஒரு வரி நினைவுக்கு வந்தது. 

உதிர்க்க ஏதுமில்லாமல் எஞ்சுமொன்று

அனைத்திலும் ஒன்றாய் எஞ்சுமொன்று

அதை அருள்வாய்.


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “உதிர்தல்”

  1. கருத்து, நடை – இரண்டுமே அபாரம். இரா. முருகன், பா. வெங்கடேசன் போன்றோர் வரிசையில் அடுத்த தலைமுறை இதோ. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஆங்கிலத்தில் பெயர்த்தால் மடங்கு வாசகர்களை அடையும்; அடைய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.