கப்பை

இன்ஸ்ட்டாவில் நான் பகிர்ந்திருந்த  புகைப்படத்திற்கு கிடைத்திருக்கும் குட்டிச் சிவப்பு ஹார்ட்டின்களில் கணப் பொழுது மகிழ்வுற்று பின்னூட்டப்  பகுதிக்குள் நுழைந்தேன். கண்களில் நீர்வழிய சிரித்துக் கொண்டிருக்கும் ஈமோஜியுடன் ஏகப்பட்ட ‘ha.ha…ha’க்கள் வந்து குவிந்திருந்தன. பெரியதாக ஒன்றும் இல்லை, கீறல் விழுந்து நெளிந்திருக்கும் பெட்ரோல் டாங்கைத் தடவும் மாவுக் கட்டு கையின் மேல் ‘கலை’ என்றெழுதி, அதன் பக்கத்திலேயே நெட்டில் பீராய்ந்தெடுத்த ஒரு கருத்த நாயின் புகைப்படத்தைச் சேர்த்து அதன் மேல் ‘கலைஞன்’ என்றெழுதியிருந்தேன்.

‘ha.ha…ha’க்களுக்கு இடையில் ‘என்னாச்சுடா’ என்று கேட்டிருந்த பரீதாவிற்கு சிறு விபத்து என்று பதிலளித்துவிட்டு, ‘கெட் வெல் ஸூன்’ என்று வந்திருந்த ஜெரோமியின் இடுகைக்கு ஒரு ஹார்ட்டினைத் தட்டிவிட்டேன். 

பரீதா என் பழய உசிரு. சைல்ட்ஹுட் க்ரஷ். பரீதாவைக் கல்யாணம் செய்து கொண்டால் ஒருவருக்கொருவர் கைகளில் மைலாஞ்சி வைத்து விளையாடலாம். அவள் உம்மா வைத்தனுப்பும் நெய்ச்சோற்றையும் பொரித்த கோழியையும் காலமுழுக்க உண்ணலாம். அவள் தம்பிகளைப் போல் பெரிய மனுஷனாட்டம் கைலி உடுத்து தலையில் தொப்பி வைத்து பள்ளி வாசலுக்கு போகலாம் என்றெல்லாம் பிள்ளைப் பருவத்தில் கற்பனை செய்திருக்கிறேன். 

இதெல்லாம் பரீதாவுக்கு தெரியாது. பத்தாம் வகுப்பு முடிந்த கையோடு வெளிநாட்டில் வேலைபார்க்கும் பெரியம்மா மகனைக் கட்டிக் கொண்டு செட்டில் ஆகிவிட்டாள். சமீபத்தில் பள்ளி நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய வாட்ஸப் குழுவின் தயவில் மீண்டும் பேசத் துவங்கியிருக்கிறேன். சவூதியில் சந்தோசமாக கலம் கழுவிக் கொண்டிருக்கிறாளாம். 

என்ன சொல்வது, எப்படியெல்லாமோ தாங்கவேண்டுமென்று நினைத்தேன். வந்த கோபத்தில் பார்த்துக் கொண்டிருந்த யூடியூப் சேனலுக்கு கீழே பின்னூட்டமிட்டிருந்த முஸ்லீம் பெயர்களுக்கெல்லாம் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று வழக்கத்திற்கும் கூடுதலாக பதில் எழுதி வைத்தேன். 

ஜெரோமி மார்த்தாண்டத்துக்காரி. என் எதிர்காலம். சுங்கான்கடை சேவியரில் தேர்ட் இயர் நர்சிங். இன்ஸ்ட்டாவில் ‘ஸ்டைலிஷ் ஸோல்’ என்னும் புனைவாளுமையாக மின்னிக்கொண்டிருந்தவளைக் கண்டுபிடித்து, இருவருக்குமிடையே இப்போது பழக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

‘கெட் வெல் ஸூனின்’ அருகில் சிறு வட்டத்திற்குள்ளிருந்து சிரித்துக் கொண்டிருந்த ஜெரோமியின் முகப்புப் படத்திற்குச் சென்றேன். வரைந்தாற்போல் நீண்ட நல்புருவம். கீழிமைக்குள்ளிருந்து மெல்லிசாக வரைந்திழுத்து கண்களைத் தாண்டி லேசாக எட்டி நிற்கும் மஸ்காரா. புருவத்திற்கு மத்தியில் இருக்கிறதா இல்லையா என்று கணிக்க முடியாதபடி ஒரு சின்ன பொட்டு. கூர் நாசி. கவனித்தால் மட்டும் தெரியும் அதன் வலப்பக்கச் சரிவு. வடிவான உதடுகளில் கூடுதலாகச் சிவந்திருக்கும் கீழுதடென எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் சலிப்பூட்டாத  அம்சமான முக அமைப்பு அவளுக்கு.  காதுகளில் சிறு நட்சத்திரக்கல் பதித்த ஸ்டட் அவ்வளவே அவளலங்காரம். நாள் முழுக்க பார்த்துக் கொண்டேயிருக்கலாம். வெள்ளையில் பிங்க் பூக்கள் கொண்ட ஆர்கான்ஸா சேலையில் அதகளப்படுத்திக் கொண்டிருந்தவளை எதற்கும் இருக்கட்டுமென்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன். 

அலுவலக கொண்டாட்டங்களில், ஷாப்பிங் மால்களில், சினிமா தியேட்டரில், உணவகங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களாகட்டும்; பைக் பயண ரீல்ஸ்கள், ஸ்டண்ட் ஷார்ட்ஸ்களென நான் பதிவேற்றும் எதுவாகிலும் அதற்கு ஜெரோமி தன் செவ்விதயத்தைப் பகிர்ந்து முழுமைப்படுத்தத் தொடங்கியிருந்தாள். கடவுள் புண்ணியத்தில் எப்படியும் மடிந்திருப்பாள், அடுத்த கட்டத்திற்கு நகரலாமென்றிருந்தேன். விபத்து நிகழ்ந்து எல்லாம் பிசகி விட்டது.

மற்றபடி நேரடிப் பழக்கம் இல்லாத இன்ஸ்ட்டா பரிட்சயங்களின், நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றியை பதிலளித்தபடியிருக்கும் போதுதான் அப்பா திரையில் தோன்றினார். 

“அம்மா, எங்க டி இருக்க?” என்று அலறியபடி வாசல் கட்டுக்குச் சென்றேன்.

“ஏமிலே ஒனக்கு? ஒரு வேலச் செய்ய பொருதி தரமாட்டான். நீக்கம்புல போற அவனுக்க விளி” என்று வீட்டின் பின்புறமிருந்து குரல் வந்தது. குளிப்பதற்கு வெந்நீர் சூடாக்க ஈரம் பாரிய விறகுக் கட்டைகளின் புகைச்சலுக்குள் போராடி எரிச்சலடைந்தவள் அங்ஙன கெட வென்று ஊதுகுழலை வலித்து தரையில் எரிந்தபடி கலங்கிய கண்களுடன் முன் வந்தாள்.

“யேமுல கிடந்து தொள்ளையக் கீறுக?” 

“கீறுகியது நானில்ல. ஓம்மாப்பிள, இன்னா என்னென்னு கேளு” என்று அலைபேசியை கையில் கொடுத்தேன். 

“எங்க இஞ்சயா? எத்தன பேராம்?”  

“ஓ..ச்செரி..” என்று அலைபேசி அழைப்பைத் துண்டித்தவள் “லேய் ஒங்கூட வேலச் செய்றவிய ரெண்டுபேரு ஒன்ன பார்க்க வருவினுமாம்” என்று அலைபேசியை நீட்டினாள். 

யாரையும் வீட்டில் அழைப்பதோ அவர்கள் வீட்டிற்குச் செல்வதோ எனக்கு அறவே பிடிக்காத செயல். பழக்கத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவாறு எடைபோட்டுத் தொடர்வது, பிறகு அதே நபரின் பின்புலம் வசதி குறித்தறிந்த பின் நடத்தையில் ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்துபவர்களின் ஆபாசத்தில் அருவறுப்படைந்து, சிலரை விட்டு விலகியுமிருக்கிறேன். ஆதலால், யாராக இருந்தாலும் சந்திப்பு வெளியில் தான்.

அரவிந்தின் அழைப்புகளை புறக்கணித்ததால் வந்த வினை. எமெர்ஜென்சி தேவைக்காக கொடுத்து வைத்திருந்த என் அப்பாவிற்கு அழைத்து விட்டான். நானே பேசியிருந்தால் வீட்டில் இல்லை, வைத்தியர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று ஏதாவது கதை விட்டு அனுப்பியிருப்பேன்.

கடுப்பில் அரவிந்திற்கு நானே அழைத்தேன். ஜெயனுடன் காரில் வந்து கொண்டிருப்பதாகக் கூறினான். திருவட்டாறு ஆதி கேசவப் பெருமாளை சேவித்துவிட்டு அருகில் தானே, என்னையும் பார்த்து விடலாமென்று வந்து கொண்டிருக்கிறார்களாம். ஆகா, ஒற்றை வெடிக்கு இரட்டைப் பட்சிகள். அரவிந்தின் யோசனையாகத் தான் இருக்கும். 

அரவிந்த் மானேஜர், என்னை ஏஜென்ட்டாக பயிற்றுவித்தவனும் அவன் தான். ஜெயன் சீனியர் மானேஜர். நான் பணிபுரியும் கால் சென்டர் முதலீட்டாளர்களில் ஒருவர். டெக் சப்போட்டையும் அவரே பார்த்துக் கொள்கிறார். 

“எடி..அம்மா.. வருவியளுக்கு குடுக்க வீட்டுல எதுவும் உண்டுமா?”

“மெனைஞ்ஞானு தான் மார்த்தாண்டத்திலேயிருந்து ஒருக் கிலோ சிப்ஸ் வேடிச்சு வைச்சேன். போயும் வந்தும் நீதானல தின்னு முடிச்ச..” அவள் சொல்வதும் சரிதான், பண்டம் போட்டு வைத்திருக்கும் சில்வர் போணியை இன்று காலையில் கூட திறந்து பார்த்தேன். காம்பிப் போன நாலு பலா வத்தல்களைத் தவிர ஒன்றுமில்லை. 

“வரியது என் மேனேஜர் மாறாக்கும்.. இப்போ என்னடிச் செய்ய?” வென சோகமானேன்.

“காலம காய்ச்சிவைச்ச பாலு ப்ரிஜ்ஜிக்குள்ள இரிக்கு, கொலையில செந்தொழுவம்பழம் இரிக்கு எதுக்குப் பேடிச்சனும்” என்று சிரித்தாள்.

“செரி.. நான் சென்னு வாரவியள விழிச்சிட்டு வாறென்” என்று முகத்தைக் கழுவிக் கொண்டேன். தலைக்கு குளிக்காததால் பனங்கொட்டை நாறாக சிலுப்பி நிற்கும் தலைமுடியின் மீது கொஞ்சமாக எண்ணை பிரட்டி வறட்டு வறட்டென்று நாலு இழுப்பு இழுத்தேன் அது பணிந்தும் பணியாமலும் ஒரு சைஸாக குருவிக் கூடு போன்று தூக்கிக் கொண்டு நின்றது.  

“எம்மா வீட்ட ஒன்னு தூத்துப் போட்டுட்டு இந்த வேசம் ஒன்னு மாறி நில்லடியம்மா” என்று அவள் அணிந்திருந்த அழுக்கேறிய நைட்டியைப் பிடித்தாட்டினேன்.

“ஓ..ல.. இப்போ என்ன பெண்ணுப் பார்க்கையில்லா வருவினும்..நான் இப்போ சீவி சிங்காரிச்சு ஒருங்கி நிக்கியென். கையில நாலு சக்கரம் கிட்டியங்கிப் போதும் செல் போனு மேடிச்சனும், பைக் மேடிச்சனும்.. வீட்டுக்கு என்னவும் செய்யணும்முன்னு ஒருச் சிந்தையில்ல” 

மேற்கொண்டு நின்று கொண்டிருந்தால் இப்போதைக்கு அறுப்பு  தீராதாகையால் தூளியில் துயிலும் மழலையாக முறிந்த கையை அணைத்த படி இடங்காலி செய்தேன்.

2

ஜெயனையும் அரவிந்தையும் மெயின் ரோடு வழியாகவே வரச்சொன்னேன். வீட்டின் பின்புறம் வழியாகவும் வரலாமெனினும் புதியவர்களுக்கு குழப்புமென்பதால் தவிர்த்தேன். 

பேச்சிப்பாறை நோக்கிச் செல்லும் பிரதான சாலையின் இடப்பக்கம் தெரியும் பெரிய ரப்பர் தோட்டம், சுற்றுச் சுவர் பாதியில் உடைப்பெடுக்கப் பட்டிருக்கும் அதுதான் அடையாளம். 

பூத்து புதுப்பட்டென சுவர் பூஞ்சைகளை உடுத்தி நின்ற கருங்கல் மதில் சுவர் இளந் தளிர் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதனருகாமையில் பச்சை நெடியை நுகர்ந்தவண்ணம் ரோட்டுக் கரையில் காத்து நின்றேன்.

திடு திடுப்பென்ற அவர்களின் வருகை திகைப்பைத் தந்தாலும், என்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருப்பதை அறிந்து அப்பாவின் மனதிற்குள் எழவிருக்கும் என் குறித்த அபிப்ராயங்களை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். 

அவர்கள் வந்த காரின் சில மீட்டர்கள் முன்னாலேயே அப்பா வந்து கொண்டிருப்பது தூரத்தில் தெரிந்தது. வல்கனைசிங் ஒர்க் ஷாப்பை திறந்தபடி விட்டுவிட்டு வந்திருப்பார் போலும். மாரிகோல்ட் பிஸ்கட் பாக்கெட்டோடு, நேந்திரஞ் சிப்ஸோ, மிச்சரோவிருக்கும் பண்டப் பொதியாடும் பிளாஸ்டிக் பை வண்டியின் ஹாண்ட் பாரில் தொங்கிக் கொண்டிருப்பதை எனைக் கடந்து உள்செல்லும் போது கவனித்தேன்.   

வரிசைக் கிரமமாக நேர்த்தியான இடைவெளியில் நூற்றுக்கணக்கான ரப்பர் மரங்கள்; பாவை விளக்கேந்தும் சிலைகளாக கொட்டாங்குச்சியினைச் சுமந்து நிற்பதைக் கண்டு மலைத்து வாய் பிளந்த படி இறங்கியவர்களை கை குலுக்கி வரவேற்றேன். 

“ஹவார் யூ எடி” என்று வாஞ்சையுடன் கேட்டு தோளில் கை வைத்த ஜெயனிடம் “பஃய்ன்..ஜெரி” என்றபடி இருவரையும் கூட்டிக் கொண்டு  முன் நடந்தேன். எங்கள் அலுவலகத்தில் அனைவருக்கும் ஐரோப்பியப் பெயர் தான். நான் எடி, ஜெயன் ஜெர்ரி, அரவிந்த் ஆடெம். 

ரப்பர் தோட்டம் முடியுமிடத்தில் கிடக்கும் தடிப்பாலத்தைக் கடந்திருக்கும் ஏற்றத்தில் தெரியும் வீடுகளில் அயனியும், பாக்கும் நிற்கும் மூன்றாவது வளைவில் இருப்பது எங்களுடையது. இப்பகுதியில் வீடுகள் சேர்ந்திருக்காது மரக்கூட்டங்களுக்கிடையே இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தான் இருக்கும்.  

வீட்டின் முன் ஒற்றைச் சக்கரத்தில் நின்று கொண்டிருந்த கே.டீ.எம்மைக் கண்டு அரவிந்த் திகைத்து என் பக்கம் திரும்பினான். என்ன செய்வது, லகரம் இரண்டெண்ணிக் கொடுத்தால் கிடைக்கும் சாமானமில்லையா, அழைக்கச் சென்ற அவசரத்தில் மூடிமறைக்க மறந்துவிட்டேன். தவணை கட்டி இரண்டு மாதங்களாயிற்று, வண்டியைத் தூக்கிச் சென்று விடுவேனென்று மிரட்டினார்கள். சரி தூக்கிக் கொண்டு போகட்டுமென சக்கரங்களில் ஒன்றை கழற்றிப் போட்டிருக்கிறேன்.

அம்மா வாசலில் வந்து நின்று “வாருங்க சார்” என்று அழைத்தாள். அப்பா நடுக்கூடத்தில் கிடக்கும் இரும்புக் கட்டிலருகே பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டு வந்திருந்தவர்களை அமரச் சொல்லிவிட்டு என்னுடன் கட்டிலில் அமர்ந்து கொண்டார்.

முற்றிலும் அந்நியமான சூழலில் சிக்கிக் கொண்ட பரிட்சயமற்றவர்களைப் போன்று சிறுது நேரத்திற்கு பேச்சற்று அமர்ந்திருந்தோம்.  கூரையில் பற்றியிருக்கும் நூலாம்படை, தரை வெடிப்பு, நான் அமர்ந்திருக்கும் கட்டில் காலில் ஏறியிருக்கும் துரு என்று சுழண்டு கொண்டிருந்த அரவிந்தின் பார்வையும், என் நொண்டிக் கையை வெறித்துக் கொண்டிருந்த ஜெயனின் பார்வையும் ஒரே கணத்தில் என்பக்கம் திரும்ப மூன்று பேரின் முகத்திலும் கூச்சச் சிரிப்பு.  சமூக வலைதளத்தில் நான் கட்டி வைத்திருக்கும் பிம்பமும் பிரபல்யமும் அவர்களின் கண்களிலிருந்து மங்கிக் கொண்டிருந்தது. தர்மசங்கடம் தான்.

அடுப்படியிலிருந்து கொண்டுவந்து போட்ட முக்காலியில் தின்பண்டத்  தட்டை வைத்த அம்மா, கையில் காப்பிக் குவளையுடன் முகம் விகசித்து நின்றாள்.    

சுதாரித்த ஜெயன் “டாக்டர் என்ன சொன்னாங்க எடி?” என்று கேட்டு சூழலின் மௌனத்தை உடைக்கத் துவங்கினார்.

“இரண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்காங்க” என்றேன். 

“ஈ.எஸ்.ஐ பெனிபிட்ஸ் அவைல் பண்றதில, ஒரு பிரச்சனையும் இல்லையே”

“அதெல்லாம் நான் பாலோப் பண்ணிட்டுத்தான் இருக்கேன் ஜெயன்” என்றான் அரவிந்த் மிடுக்காக.

“ஈஎஸ்ஐ ஆஸ்பத்திரில டாக்டர்மாறும் நல்ல கவனிச்சாங்க” என்று அம்மா சொல்ல, அப்பா ஆமோதிப்பது போன்று தலையசைத்தார். 

காப்பிக் குவளையை காலி செய்துவிட்டு தின்பண்டங்களில் பேருக்கு இரண்டெடுத்து வாயில் போட்டவர்கள் விடை பெறுவதாக எழ வந்து பார்த்ததில ரொம்ப சந்தோசமெனக் கூறி வழியனுப்பினோம்.

“நன்மைகளே உனை வந்துச் சேரட்டும்” 

அவ்வெள்ளைக்கார கிழட்டு முண்டை எந்த நேரத்தில் வாய் வைத்தாளோ, தலைக்குள்ளேயே சுற்றி சபித்துக் கொண்டிருக்கிறது.

3

ஆணும் பெண்ணுமாக வீட்டிற்கு நான் ஒருவன் தான். கேட்டவை எல்லாம் கையிலும் வாயிலும் வாங்கித் தந்துதான் எனை வளர்த்தார்கள்.  

பத்து பதினோரு வயதிருக்கும் என்று நினைக்கிறேன், என்னை வெளியே விளையாட விடாததால் அம்மாவுடன் சண்டை போட்டு அழுது அடம்பிடித்தபடியிருந்தேன். மதிய உணவிற்கு வந்த அப்பாவிடம் “உங்க மோன் சென்னத கேட்டிணுமா.. எனக்கு இந்த வீட்டுல இருக்க பிடிச்சல..நான் மட்டும் தன்னிச்சிருக்கேன் கூட களிக்க தம்பி தங்கச்சினு ஆருமில்லன்னு ஒரே ஒப்பாரி..” எனக் கூறி குறும்பாக நகைத்தாள் அம்மா. அவள் சொல்வதைக் கவனித்தபடி  கையில் சோற்றுக் கவளத்தை உருட்டிக் கொண்டிருந்த அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நான் சென்னேன் கொப்பச்சி கடைல இருந்து வரட்டும் செல்லுன்னு” 

“மோனுக்கு மட்டும் தான் ஆசை.. பாவம் இவக்கில்ல” என்று அம்மாவின் பிரிஷ்டத்தில் அப்பா ஒரு அடி கொடுக்க ஜோடி சேர்ந்து ஒரே சிரிப்பு இருவருக்கும். 

கட்டணம் செலுத்திப் படிக்கக் கூடிய ஆங்கிலப் பள்ளிக்கூடத்திற்கே என்னையும் அனுப்பினர். படித்துப் பெரிய வேலைக்கெல்லாம் சென்று கார் பங்களாவெல்லாம் வாங்க வேண்டுமென அப்போதிருந்தே பெருங்கனவு என் பெற்றோருக்கு. அப்பாவின் வருவாய் என் ஒருவனை தீற்றிப் போற்றவே கணக்காக இருக்குமென அப்பா தவிர்த்து விட்டாராம். அம்மாவும்  இன்னொன்றிற்கு மெனக்கெடவில்லையாம். 

கல்லூரி முதல் ஆண்டு சேர்ந்த பிற்பாடு வீட்டில் பைக் வாங்கிக் கேட்டேன். அப்பாவோ முதலில் லைசென்ஸ் எடு அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். நானும் அவரை நம்பி எடுத்ததற்கு, வெறும் ஐம்பதாயிரம் ரூபாயைத் தந்து செகண்ட் ஹேண்ட்டாக ஒன்றை இப்போதைக்கு எடுப்போம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.  

எனக்கோ யமஹா FZ மேல் ஒரு கண். இரண்டு நாள் சாப்பிடாமல் முரண்டு பிடித்தேன். அம்மா என்ன நினைத்தாளோ இரட்டை வட சங்கிலியை கழற்றி கையில் தந்தாள். கோவப்பட்ட அப்பாவிடம் “வாழக் குறுத்தா நமக்கிருக்கியது ஒன்னு, அவனக் கண்ணு நீரு குடிக்க வைச்சு எனக்கு செயின் போட்டு அலையாண்டாம். சம்பாரிச்சு யாரை கரையேத்த வேண்டிக் கிடக்கு இங்க” என்று மூக்கை உறிஞ்ச அப்பா எதுவும் பேசவில்லை. 

என் பக்கம் திரும்பி “ஒனக்க போக்கு பிடிச்சு வருவில” என்று மட்டும் சொல்லி நகர்ந்து கொண்டார். மேற்கொண்டு எதிர்ப்பில்லை. அந்த வார மாலை மலரில் வந்த நாகர்கோவில் பள்ளி மாணவனின் சிரித்த முகமும், தற்கொலை செய்தியும் கூட காரணமாகயிருந்திருக்கலாம். எது எப்படியோ அவ்வருடம் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் அடித்துப் பொழிக்க முடிந்தது.  

அதற்காக நான் படிக்காமல் எல்லாம் இல்லை. கல்லூரி இறுதியாண்டு காம்பஸ் இன்டெர்வியு வரும்போது அனைத்துப் பாடங்களிலும் எண்பது விழுக்காடுகள் எடுத்திருந்தேன். என் நேரம், நான் தேர்ந்தெடுத்திருந்த பாடப் பிரிவில் ஆளெடுக்க வந்த எம்.ன்.சி. நான்கோ ஐந்தோ பேரைத்தான் தேர்வு செய்து சென்றனர்.

என் வகுப்பில் மட்டும் மொத்தம் நாற்பது பேர். அவர்களில் தகுதிச் சுற்றில் தேர்வாகி டெக்னிக்கல் ரௌண்டில் தேறியவர்கள் வெறும் பத்தே பத்து பேர். கல்லூரி விளம்பரப்படுத்தியிருந்ததைப் போல பெரு நிறுவனங்களும் வந்திருந்தனர். அவர்களின் சேவைப் பிரிவில் ஆள் சேர்க்க. 

கல்லூரி பிளேஸ்மென்ட் கோர்டினேட்டரிடம் இது குறித்து கேட்ட போது “உன் பிரிவில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கும் நிறுவனத்தில் ஏறு, பிறகு அங்கிருந்து முயற்சி செய்” என்ற அறிவுரை வந்தது. நண்பர்கள் சிலர் அப்படியே செய்தனர். அவர்களுக்கு வேறு வழி, கல்விக் கடன் வழங்கியவர்களிடம் இருந்து தப்ப வேண்டுமே.  

இருபதாயிரமோ.. இருபத்தைந்தாயிரமோ பெரு நகரத்தில் வீடெடுத்து, சாப்பாடு செலவு பார்த்து, சமைத்து, துவைத்து நடக்கும் காரியமா? மலைச்சாரலிலும், குளுமையிலும் வளர்ந்துவிட்டு சென்னை போன்ற இடங்களுக்குச் சென்று வெயிலில் வறுபட முடியுமா? நினைத்தாலே குதத்தில் சூட்டுக் கட்டி வந்ததைப் போன்று எரிகிறது. 

இந்தப் பிரச்சனைகளை அப்பாவிடம் எப்படி சொல்லிப் புரியவைப்பது என்று திகைத்து நின்ற வேளையில்தான் கடவுள் போல வந்தார் மூர்த்தி சார். அப்பாவின் வாடிக்கையாளர். 

“உன் மொவன மட்டும் குத்தம் சொல்லிப் பிரயோசனம் இல்ல. நம்மூர்ல மட்டுமே நூத்துக்க மேல காலேஜ் இருக்குவு. வருஷாவருசம் கம்பனிக்காரனுவ வந்து திறமையான பிள்ளேல அள்ளிட்டு போறானுவோ, மீதி இருக்கப்பட்டவங்க கை நிறைய சம்பளம் தருக வேலை எங்கக் கிடைக்குவோ அங்க ஓடிப் போயிரானுவ. கடைசில போக்கிடம் இல்லாதவன் நேரா வாத்தியார் வேலைக்கு வந்து நிக்கான். அரைகுறை அறிவுலயிருந்து கூமுட்டை தானவே விரிஞ்சு வெளிய வரும் என்ன நான் சொல்லுகியது? 

பள்ளிக்கோடத்துக்கு படிச்ச அனுப்புயது எதுக்கு, சொயமா சிந்திக்க தெரியவும் நல்லது கெட்டது புரியவும் தான. நடமுறயில அப்புடியா இருக்குவு படிச்சுவாரவிய தலப் பூராப் பீ, எரவல் புத்தி.  வரும்படி வருங்கிற சீருல பிள்ளேல் மேல மொதலு போடுய தாயுந் தவப்பனும் இருக்குமட்டும் காலேஜ கட்டி யாவாரம் தான் நடத்துவான் என்ன நான் சொல்லுகியது?” 

எனக்கு இவரைக் கண்டாலே ஆகாது. அவ்வப்போது அப்பாவின் தலையை திருகிவிடுவதே இவருக்கு வேலை. நான் கல்லூரியில் சேரவிருக்கிறேன் என்று அறிந்த அன்றும் அப்படிதான் “பிளே, எல்லாவனும் போற திசையிலேயே போவணும்னு நெனைச்சாத. டாக்டரும், என்ஜினீரும், வக்கீலுமாரு மட்டுமில்ல பஞ்சர் ஒட்டுறவனும் இருந்தாதானடே ஒலகம் உருளும் என்ன நான் சொல்லுகியது?” இரண்டு காது கிடைத்தால் போதும் பிரசங்கித்து அறுத்தெடுத்து விடுவார். சரியான பூமர். 

படிப்பு முடிந்து வேலை தேடும் சாக்கில் திருவனந்தபுரம், பெங்களூர், சென்னையென்று  சுற்றிக் கொண்டிருந்தேன். அதிலேயே ஏழெட்டு மாதங்கள் போயின.   

பாராளுமன்றத் தேர்தல் சமயமென்று நினைக்கிறேன் ஒருநாள் அப்பா மூர்த்தி சார் வழி ஒரு தனியார் வங்கியில் வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். 21 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு கன்னியாகுமரி கிளையில் பணி நியமனம். ரிலேஷன்ஷிப் மானேஜர். பரவாயில்லாத சம்பளம். 

ஆனால் அலைச்சல் பிடித்த வேலை. வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒன்றரை மணிநேரம் பிடிக்கும். போதாத குறைக்கு க்ளைண்ட்டைப் பார்க்க அஞ்சுகிராமம் போ, மணக்குடி போ, கொட்டாரம் போவென சுத்தலிலேயே தான் இருக்க வேண்டும். ஒரு வாரம் கழியவில்லை அதற்குள் கருத்து கரிக்கட்டையாகிவிட்டேன்.

இது சரிப்பட்டு வராது என்று ஒரு நாள் எங்கள் கிளையைப் பார்வையிட வந்திருந்த பிராந்தியத் தலைவரிடம் “சார் பைக்கிலேயே சுற்றிக் கொண்டேயிருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. வங்கியின் காப்பீடு சேவைகளை விற்கும் வேலையையும், நிறுவனங்களில் சென்று திட்டங்களைப் பிரபலப்படுத்தும் வேலையையும் என் தலையிலேயே கட்டி எங்கேயாவது அனுப்பிவிடுகின்றனர்.  

வீட்டின் அருகாமையில் அது தக்கலையோ, மார்த்தாண்டமோ எந்தக் கிளையாக இருந்தாலும் பரவாயில்லை அலுவலத்தில் அமர்ந்து வேலை செய்யும் பிரிவிற்கு மாற்றுவீர்களா?” என்று கேட்டேன். எப்படியிருந்தாலும் மூர்த்தி சாருக்குத் தெரிந்தவர், நம் கஷ்டத்தைப் புரிந்து கொள்வார் என்ற ஒரு நம்பிக்கை. 

என் கஷ்டங்களையெல்லாம் முகத்தில் புன்முறுவலுடன் கேட்டவர், “நீங்கள் சொல்வதை கிளை மேலாளரிடம் செய்யச் சொல்கிறேன். வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம் இல்லையெனில் அவர் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதா என்று பாருங்கள்” என்று ஆறுதலளித்தார்.

என் வங்கி மேலாளரோ “நான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னது தான். இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலைதான் அங்கேயும் இருக்கிறது. நீங்கள் செய்யவிருக்கும் வேலை குறித்து பயிற்சிக் காலத்திலேயே தெரிந்து கொண்டுதானே வந்தீர்கள்? அதுமட்டுமல்ல, வேலைக்கு சேர்ந்த ஒரு மாத காலத்திலேயே இடமாற்றம் கடினம். ஆறுமாதங்களாவது வேலை பாருங்கள் அதன்பின் உங்கள் திறனை முன்வைத்து முயற்சிக்கலாம்” என்றார்.

என் பிரச்சனை அவருக்குப் புரிந்தமாதிரியே தெரியவில்லை. “என்னால் அலையமுடியவில்லை என்று தானே கேட்கிறேன். அலுவலகத்தின் உள் அமர்ந்து செய்யும் எந்த வேலையும் கொடுங்கள் அல்லது நான் நின்று கொள்கிறேன்” என்று கூறினேன். அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒரு ஏ4 ஷீட்டை என் முன்னால் வைத்து ராஜினாமா கடிதம் எழுதிவிட்டு போகும்படி சொல்லிவிட்டார். கோபத்தில் நானும் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். 

நின்ற நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு தூக்கமும் வரவில்லை, சாப்பாடும் இறங்கவில்லை. பயிற்சிக்கு கொச்சிக்கு சென்ற வகையிலும் முப்பது நாட்கள் வேலைக்கு சென்ற வகையிலும் வீட்டிலிருந்து அறுபதாயிரம் ரூபாயாவது செலவாகியிருக்கும். அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றவே அப்பாவின் முன் கலங்கி நின்றேன்.

Full & Final செட்டில்மென்ட் வாங்க அப்பாவும் கூட வந்தார். மேலாளரிடம்  “சார் இந்த ஒருவாட்டி அவன மன்னிச்சுடுங்க.. நீங்க எந்த வேல குடுத்தாலும், அவன் இனி மடிக்காம  செய்வான் சார்” என்று கெஞ்சினார். அவரோ என் ராஜினாமா கடிதத்தை உடனே மேலிடத்திற்கு அனுப்பி அனுமதி பெற்ற நிலையில் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கையை மலர்த்தி விட்டார். 

வீட்டில் சோர்ந்தமர்ந்த என்னிடம் “நீ சங்கடப்படாத மோன.. இந்த மடமில்லாட்டி சந்தமடம்..” என்று அம்மா தைரியமூட்ட வாசலில் அமர்ந்திருந்த அப்பா கீழுதட்டை உள்ளிழுத்துக் கடித்தபடி தரையை வெறித்துக்கொண்டு தலையை இட வலமாக ஆட்டிக்கொண்டிருந்தார்.

வங்கி வேலையை விட்டு நின்ற பின் நான் தேமே என்று இருந்துவிடவில்லை. சரி கிடைக்கும் வேலையை செய்யலாமென்று, தினசரிகளில் வரும் வேலை வாய்ப்புச் செய்திகள், வெளியூர்களில் இருக்கும் நண்பர்களின் நிறுவனத் தொடர்புகள் என ஒன்றையும் விடவில்லை. என் அலைபேசியிலிருந்து நாலாபுறமும் என் ரெஸூமேயைப் பரத்திக் கொண்டிருந்தேன். 

வேலை கிடைக்கும் வரை அர்த்தமுள்ளதாக எதிலாவது ஈடுபடலாமென இணைய தேர்தல் பிரச்சாரத்தில் களமாடத் தொடங்கினேன். தேசத்திற்காக எதோ நம்மால் எடுத்துப் போடக் கூடிய சிறு துரும்பாக இருந்துவிடாதா என்ற எண்ணம். தலைவர்களின் கருத்துக்களை அரசியலறிவற்ற மக்களிடம் கொண்டு சேர்த்து நல்வழிப்படுத்துவது, எதிர்தரப்பு வாதிகளின் பின்னூட்டங்களில் தர்க்கப்பூர்வமாக விமர்சனம் வைப்பது, முடியாத கட்டத்தில் போலிக் கணக்கில் சென்று வம்பிழுப்பதென செயலூக்கத்துடன் சுழன்று கொண்டிருந்த நாட்களவை. நீங்கள் என் நண்பர்களின் நட்பு வட்டத்தில் இருந்திருந்தாலேயே பிரபலமான நபர் என்று என் புகைப்படப் பரிந்துரையை உங்கள் சமூக வலைத்தளப் பகுதியில் கண்டிருக்கலாம். 

இப்பரபரப்பிற்கிடையில் அப்பாவிற்கு கலியேறிக் கொண்டுவருவதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். ஒருநாள் வேலைவிட்டு வந்தவர் அணிந்திருந்த கரித்துணியைக் கூட மாற்றாமல் வெகு நேரமாக வாசலை அடைத்தமர்ந்து கொண்டு குனிந்த தலையை இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் ஆட்டிக் கொண்டிருந்தார். திடீரென எழுந்து பின்வாசலுக்குச் சென்றவர் ஒரு குடம் தண்ணீரை தலையோடு ஊற்றினார். இடுப்பில் ஒரு துவர்த்தைக் கட்டிக்கொண்டு ஒர்க் ஷாப் சாவியை சாமிப் படம் முன் வைத்து சிறிது நேரத்திற்கெல்லாம் கண்மூடி வணங்கிய பின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

ஒரு பெரிய போத்தல் மதுப் புட்டியுடன் நடுக் கூடத்தில் வந்தமர்ந்தவர் நிதானமாக உடைத்து கப்பில் ஊற்றத் தொடங்கினார். அவர் குடிப்பார் என்று எனக்குத் தெரியும். பார்த்ததில்லை. அன்றுதான் முதல்முறை.  

அப்பாவிற்கு ஒரு சுபாவம். எனக்கு அவரிடம் பிடிக்காததும் அதுதான். தனக்கொவ்வாத ஒன்றை உடனே உணர்த்தி சரிசெய்ய மாட்டார், அனுமதித்தபடியே இருப்பார். வாயே திறக்க மாட்டார். திடீரென்று ஒருநாள் எல்லாவற்றிற்கும் சேர்த்துப் பிடித்து சாமியாடுவார்.

கூடத்திற்கு வந்த அம்மா “என்ன ஒங்களுக்கு இப்ப வட்டெழவியாச்சா” என்று கத்த எழுந்து சளீரென்று ஒரு அறை.  “உங்ககப்பனுக்குட்டீ வட்டு.. பொலயாடி மோள”. நின்றவாக்கில் தலை மட்டும் சிறு வட்டமடித்திருக்க, அம்மாவின் காதுகளில் அவ்வசை விழுந்திருக்க வாய்ப்பில்லை. அடி பொறியில் விழுந்திருக்க வேண்டும்.  கலங்கிய கண்களுடன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்பாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு உள்ளே கலக்கத் தொடங்கியது.  

“எல்லு முறிய பணி செய்ய என்னையும் தின்னு முடிக்க வகைக்கு ஒக்காத எனக்க வித்தும், போற்றி வளக்க பெண்டாட்டின்னு ஒரு போத்தும்..” சுவற்றில் மாட்டியிருந்த சிவ பார்வதி குடும்பப் படத்தை நோக்கி நியாயம் கேட்டார். அவமானத்தில் கோபம் உள்கிளர நடுங்கினேன்.

பின்பு ஒருவார காலம் அவர் ஒர்க் ஷாப் திறக்கவில்லை. ஊணுறக்கமின்றி சதாக் குடி. நடு நெஞ்சிற்கு தலையணையை அடை கொடுத்தபடி சினிமா கதாநாயகிகள் போல முழங்கால்களை தூக்கியாட்டிக்கொண்டு டிவி முன்னாலேயே படுத்துக் கிடந்தார். 

4

என்னை எந்த அளவிற்கு மட்டமாக நினைத்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார் என்று வருத்தமுற்று அலைந்து கொண்டிருந்த நாளொன்றில் அரவிந்திடம் இருந்து அழைப்பு வந்தது. நாகர்கோவிலில் துவங்கியிருக்கும் அவர்களின் புதிய பி.பி.ஓவிற்கு யூ.கே. ஷிப்ட்டில் பணிபுரிய ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

நாகர்கோவில் அலுவலகத்திலிருந்து முதல் சுற்று டெலிபோனிக் இன்டெர்வியூ.  ஹைத்ராபாத் தலைமை அலுவலகத்திலிருந்து ஸ்கைப் இன்டெர்வியூ அடுத்த சுற்று. இறுதியாக ஜெயனுடன் நேர்காணல்.

“எதற்காக உனக்கு இந்த வேலையைத் தர வேண்டும் என்று நினைக்கிறாய்?”

“டிகிரி முடித்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. இனிமேலும் நான் படித்த பிரிவில் வேலை கிடைக்குமெனத் தோன்றவில்லை. நான் வீட்டிற்கு ஓரே பையன், ஆகவே என் பெற்றோரை தனித்து விட்டுவிட்டு வெளியூர் செல்ல முடியாது. மேலும் வளர்ந்த நிறுவனத்தின் சிறு அங்குலமாக இருப்பதை விட வளரும் நிறுவனத்தின் ஒரு அங்கமாயிருந்து முன்னேறுவதே சமயோஜிதம் என்று நம்புகிறேன்” ஜெயன் ஆமோபிப்பது போன்று சிரித்தார். 

பயிற்சி காலத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். இரண்டு மாதங்கள் கழித்து பணி நிரந்தரமான பின்னர் பதினைந்தாயிரம். வெற்றிகரமாக நிறைவு செய்யும் அழைப்புகளைப் பொருத்து ஊக்கத் தொகை. அப்படியாகில் திறமையைப் பொருத்து மாதம் முப்பதுக்கு மேலேயே கிடைக்கும். 

தேடல் உளப்பூர்வமாகவிருந்து மெனக்கெடலில் உண்மையிருந்தால் தராமல் இருந்துவிடுவானா இறைவன்? எனக்கு வேலை கிடைத்தது. தேர்தலில் தோற்ற எதிர் கட்சி கூப்பிலமர்ந்தது.

பயிற்சி வகுப்பின் பிரதான நோக்கம் எங்கள் ஆங்கில உச்சரிப்பில் இருக்கும் தாய் மொழி ஒட்டலை நீக்கி உச்சரிப்பில் நியூட்ரல் தன்மையைக் கொண்டுவருவதுதான். நிறைய மாதிரி அழைப்புகளைத் தொடர்ந்தெடுத்து பயிற்சி எடுத்தோம். எங்களுக்குப் பயிற்சியளித்த அரவிந்த் ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை F வார்த்தையை உச்சரிப்பான். 

இத்துறையில் ஒரு தசாப்தத்திற்கும் கூடுதலான அனுபவமுள்ளவன். டெல்லில் இருந்தானாம். அழுத்தம் திருத்தமற்ற அவன் தமிழ் உச்சரிப்பைக் கேட்க நுனி நாக்கில் புண் வந்து அவதியுறுவது போலிருக்கும்.  ஆண்கள் பெண்கள் என்று இல்லை கண்டபடி திட்டுவான். விரைவிலேயே எங்கள் சருமம் சுரணையிழந்து கெட்டிப் பட தொடங்கிற்று.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம். அன்று எங்களின் தேர்ச்சி நிலை குறித்தறிய ஒரு கடினமான மாதிரி அழைப்பு தரப்பட்டது.  அதில் வைஷாலி மட்டும் தேர்ச்சியுற ஆண்கள் அனைவரையும் கான்பிரன்ஸ் அறைக்கு அழைத்த அரவிந்த் 

“ஷேமான் யூ கைஸ், உங்கள மாதிரி தான வைஷாலியையும் ட்ரைன் பண்றேன். ஒன்னு பண்ணுங்க ஒரு க்ளாஸ்ல அவ யூரினப் பிடிச்சு வாங்கி அதில வரிசையா குதிச்சு செத்துப் போங்கடா யூஸ்லெஸ் பகர்ஸ்”   

அவமானத்தில் எங்கள் அனைவரின் கண்களும் கொதிக்கத் துவங்க, உரத்த குரலில் கேட்டான் “இப்போது சொல்லுங்கள் யாரால் அந்த அழைப்பை சிறப்பாக நிறைவு செய்யமுடியும்?” கேட்கவா வேண்டும் அனைவரின் கைகளும் உயர்ந்திருந்தது. ஆச்சரியகரமாக பாதிப்பேருக்கு மேல் தேறியுமிருந்தோம்.

பிடிக்காமல் பயிற்சி வகுப்பிலேயே கழண்டு கொண்டவர்களும் எங்களில் உண்டு. பயிற்சி முடியும் போது நம்மில் இருந்து வெ..மா..சூ சுத்தமாக காலியாகியிருக்கும். ஆனால் நம்பகத்தனமாக பேசி எதிராளியை வழிக்கு கொண்டுவரும் திறனில் தேறியிருப்போம். 

அலுவலகத்தை விட்டு வெளியில் வந்துவிட்டால் அவனைப் போன்று தங்கமானவனை உங்களால் பார்க்க முடியாது.  டீ கடையில் நம்மைக் கண்டால் அவன்தான் காசு கொடுப்பான். நம் பணத்தை எடுக்க விடமாட்டான். அலுவலகத்தில் யாருக்கேனும் பிறந்தநாள் வந்தால் கேக்கெல்லாம் வாங்கி பலூனெல்லாம் கட்டி தட புடலாக்கிவிடுவான். பின் வேலையில் மட்டும் ஏன் மனப்பிறழ்வு கண்டவனைப் போல் நடந்து கொள்கிறான் என்று தெரியவில்லை.

பயிற்சி முடிந்து லைவில் அழைப்பெடுக்கும் போது அப்படி ஒரு சாகச அனுபவமாக இருக்கும். இல்லாத சேவையைக் கூறி விற்று வெள்ளைக் காரர்களிடமிருந்து பணமடிக்க வேண்டும் அவ்வளவு தான் வேலை. அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நைச்சியமாக பேசி அவர்களது கணிப்பொறியை இயக்கச் செய்தால் மட்டும் போதும். பாதிக் கிணறு அங்கேயே முடிந்துவிடும். மீதியை சீனியர் காலர் அல்லது அரவிந்த் பார்த்துக் கொள்வார்கள். ஒரு நாளுக்கு இருநூறு பவுண்ட் என்பது இலக்கு. அப்போதுதான் ஒரு நூறு நூற்றைம்பதையாவது எட்டமுடியும். எதையும் உயர்வாக உள்ள வேண்டுமென்று ஜெயன் அடிக்கடி சொல்வார்.

ஜெயன் அரவிந்திற்கு நேரெதிர் குணமுடையவர். ஒவ்வொரு திங்கள் கிழமையும் எங்கள் மத்தியில் அவர் தரும் ‘பெப் டாக்’ அவ்வளவு பிரமாதமாகவிருக்கும்.  

“ஒவ்வொரு நாளையும் மிகுந்த நம்பிக்கையோடு ஆப்டிமிஸ்டிக்காக எதிர்கொள்பவர்களே வாழ்வில் வெற்றியடைகிறார்கள். வரலாற்றில் நின்று கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான். உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்வைக் குறித்த பெருங்கனவு இருக்கலாம் அதை நெருங்குவதற்கு கடவுளோ இயற்கையோ இன்றைக்கு அளித்திருக்கும் தீர்வு, உங்கள் முன்னால்  இருக்கும் ஹெட் போனிலும், திரையில் மின்னும் வாடிக்கையாளர்களின் எண்களிலும் தான் இருக்கிறது.  உங்கள் கையில் எட்டு மணிநேரம் இருக்கிறது. ஒருநாள் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு. அதை மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் கைகாரியம் செய்யுங்கள்.  என் முதல் பிரேக்கிற்கு முன் நூறு பவுண்ட் சம்பாதித்திருப்பேன் என்கிற எண்ணத்துடன் அழைக்கத் தொடங்குங்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எண்ணம் போல் தான் வாழ்க்கை ‘யத் பாவம் தத் பவதே’”. 

ஜெயனுடன் சிறிது நேரம் பேசினாலே நமக்குள் உற்சாகம் கொப்பளிக்கும். 

வாடிக்கையாளர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. உச்சரிப்பில் சிறிது பிசிறினாலும் எதிர் முனையில் இருக்கும் முகமற்ற வெள்ளைக்காரன் தாயைப் புணர அழைப்பான். 

ஒரு தண்டனைக் கைதியை தூக்கிலிடுபவனின் அல்லது ஒரு சிசுவைக் கருக்கலைப்பு செய்யும் மருத்துவச்சியின் அல்லது எதிரி நாட்டு மக்களைக் கையாளும் ஒரு  போர் வீரனின் லாவகம் கை கூடாத வரை இவ்வேலையில் விஜயிக்க முடியாது. 

பெண் ஏஜென்ட்களை நினைத்துப் பாருங்கள். தேவிடியாப் பட்டத்துடன் தான் எதிர்முனையிலிருந்து அர்ச்சனையே தொடங்கும். வேலைக்காகாத இடங்களில் நாங்களும் சகட்டு மேனிக்கு திட்டி விடுவோம். மன அழுத்தத்திற்கு எத்தனை நாள் தியானம் செய்வது? மடுத்துவிடும். சிலர் திருட்டுத்தனமாக சிகரெட் பிடிக்கத் தொடங்கி மெதுவாக போதைக்குள் விழுவார்கள். என்ன செய்வது, சம்பள நாள் என்றொன்று அனைவர் வாழ்விலும் இருக்கிறதல்லவா?

அதுமட்டுமல்ல ஜெயன் சொல்வதைப் போன்று, எங்கள் அன்றாட சிக்கல்களில் இருந்து மீட்புற இறைவனளித்துள்ள கர்மம் இன்று இது தானே. செயல் புரிந்தாகத்தான் வேண்டும்.

எல்லா அழைப்புகளும் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விடுவதில்லை ஐந்தாறு அழைப்புகளில் ஒன்றோ இரண்டோ அடுத்த கட்டத்துக்கு போகும். ஒருமுறை நான் மைக்ரோ சாஃப்ட்டில் பணிபுரியும் என்ஜினீருக்கே அழைத்து மண்டையை கழுவத் தொடங்கிவிட்டேன். நல்லவேளை எங்கள் உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயன் உடனடியாக துண்டித்து விட்டார். 

“அலுவலகம் கிளம்பும் அவசரத்திலிருக்கிறேன்”

“பிள்ளைக்கு முலையூட்டிக் கொண்டிருக்கிறேன்”

“புணர்ந்து கொண்டிருக்கிறேன், போனை வைடா பாஸ்டர்ட்..”

“இந்திய நாயே.. இப்படி ஜேப்படிப்பதற்கு..”  

இருபது அழைப்புகளில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாக நிறைவடையும். நான் மூன்றாம் மாதத்தில் பத்தில் நெருங்கிவிட்டேன். இப்போது  முப்பதுகளில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பழைய பைக்கைப் போட்டு கே.டி.எம் எடுத்தேன். எல்லாம் இ.எம்.ஐயில் தான். அப்பாவின் முகத்தில் ஒரு தெளிச்சியும் அம்மாவின் முகத்தில் சிறு கர்வமும் குடி கொள்ளத் தொடங்கிய நாட்களவை.

5

விபத்து நடந்த அன்று வெள்ளிக் கிழமை. சனி ஞாயிறு விடுமுறை. அதுவரையில் நூறோ இருநூறோ பவுண்ட் தான் தேறியிருந்தது. திடீரென எங்கள் அறைக்குள் வேகமாக நுழைந்த ஜெயன் தன் சட்டைப் பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து மேசையில் வைத்து எங்களை நோக்கிச் சொன்னார். 

“அடுத்த இரண்டு மணி நேரத்தில் முன்னூறு பவுண்ட்டை உங்களில் யார் தேற்றுகிறீர்களோ அவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அந்த டீமை ஹோட்டல் விஜயதாவிற்கு அழைத்துச் சென்று ட்ரீட் கொடுப்பேன். யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ”.   

பேய் வேகத்தில் அழைக்கத் தொடங்கினோம். எனக்கு வாகாக ஒரு கிழவி சிக்கினாள்.

“வணக்கம் திருமதி மார்க்ரெட். எனது பெயர் எடி. மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சேவை மையத்திலிருந்து அழைக்கிறேன். இது உங்களுக்கு உதவுவதற்கான அழைப்பு ஆதலால் தயவு செய்து மிகவும் கவனமாக கேளுங்கள்.  பன்னாட்டு தகவல் கட்டுப்பாட்டுத் துறையிலிருந்து எங்களுக்கு வந்திருக்கும் செய்தியின் படி உங்களின் கணிப்பொறியில் மிகவும் ஆபத்தான வைரஸ்கள் இறங்கியுள்ளது. உங்களின் விலை மதிப்பான தகவல் பதிவுகள் அனைத்தும் அழிந்துவிடும் நிலையில் இருக்கிறது. நீங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் உடனடியாக பழுது நீக்கி விடலாம்.  இலவசமான இந்த சேவையை உங்களுக்கு அளிப்பதில் நாங்கள் பெருமுவகைக் கொள்கிறோம்” 

“அய்யோ எடி, அக்கணிப்பொறியில் தான் என் இறந்து போன கணவருடன் கடைசிக் காலத்தில் எடுத்துக் கொண்ட வீடியோக்களும், வங்கி விவரங்கள் என அனைத்து முக்கியக் கோப்புகளும் இருக்கிறது. ஏதாவது செய்து உதவமுடியுமா. நான் தனியே வசிப்பவள்.”

“கவலைப்படாதீர்கள் திருமதி மார்க்ரெட். நான் சொல்வதை நீங்கள் பின்தொடர்ந்து செய்தால் மட்டும் போதும். முதலில் உங்கள் கணினியை ஆன் செய்யுங்கள்”

“செய்துவிட்டேன்”

“கீ போர்டில் உங்கள் இடது கைப் பக்கம் இருக்கும் சன்னல் படமிட்ட பொத்தானையும் “R” பொத்தானையும் ஒரு சேர அழுத்துங்கள். உங்கள் திரையில் ஒரு பெட்டி திறந்திருக்கிறதா”

“ஆம்”

“அதில் %TEMP% என்று மெதுவாக டைப் செய்து என்டர் பொத்தானை அழுத்துங்கள்”

“இப்போது உங்கள் கண் முன் தெரியும் பக்கத்தில் இருக்கும் வைரஸ் கோப்புகளைப் பற்றி தான் நான் எச்சரிக்கை செய்ய வந்தேன். புதிதாக உங்கள் கணினியில் இறங்கியிருக்கும் இவற்றால் தான் உங்கள் கணினிக்கு ஆபத்து வரவிருந்தது”

“நீங்கள் விரும்பும் பட்சத்தில் எங்கள் வல்லுநர் உங்கள் கணினியில் நுழைந்து, சரி செய்து விடுவார். மேலும், இது ஒரு இலவச சேவை”

“சரி..”

“உங்களை எங்கள் வல்லுநர் ஜெரியுடன் இணைக்கிறேன். அவர் உங்களை வழி நடத்துவார் என்றதும் ஜெயன் பேசத் தொடங்கினார்”

கிழவியின் கணினிக்குள் நுழைந்து திரையில் இருந்த கோப்புகளை எல்லாம் அழித்து விட்டு எனை அழைப்பில் மீண்டும் இணைத்தார் ஜெயன்.  உங்களுக்கு இலவசமாக தற்போது வழங்கிய சேவையை, உங்கள் ஊரில் இயங்கும் எங்கள் நிறுவனத்தின் சிறந்த வல்லுநர்களால் நீங்கள் மூன்று வருடங்கள் இலவசமாகப் பெறமுடியும். விருப்பமா உங்களுக்கு”

“உண்மையாகவா எடி”

“ஆம். ஆனால் அதற்கு நீங்கள் முன்னூறு பவுண்டை ஒரே தவணையாக அடைக்க வேண்டி வரும். உங்களுக்கு விருப்பமா?”

“நிச்சயமாக விருப்பம் தான். என் பிறந்த நாள் புகைப்படங்கள், என் கணவரின் புகைப்படங்கள், கனடாவில் வசிக்கும் என் மகனின் புகைப்படங்கள், பேரக் குழந்தைகளின் புகைப்படங்கள் எல்லாம் அதில் தான் இருக்கிறது.  அவைகளை இழந்துவிட்டால் நான் யாரென்பதையே மறந்து தொலைத்து விடுவேன். எனக்கு அப்படியொரு நோய். தெமென்ஷியா” என்றாள். 

“கவலைப் படாதீர்கள் திருமதி மார்க்ரெட். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு உதவ. ஒரு நிமிடம் எங்கள் விற்பனைத் துறை மேலாளர் ஆடமை இணைக்கிறேன்” என்று அரவிந்தை அழைப்பில் இணைத்தேன். அவன் திறமையாகப் பேசி கிழவியின் வங்கிக் கணக்கில் இருந்து முன்னூறு பவுண்டை அனுப்பச் செய்துவிட்டு என்னைப் பேச விட்டான். 

“ஓகே. திருமதி மார்க்ரெட். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்”

“மிக்க நன்றி, எடி. என் மகனின் பெயர்தான் உனக்குமிருக்கிறது. உன்னைப் போல்தான் அவனும் கருணையுள்ளம் கொண்டவன். நன்மைகளே உனை வந்து சேரட்டும். காட் பிளஸ் யூ”

உண்மையில் அக்கோப்புகளால் அக்கணினிக்கு பேராபத்து ஒன்றும் நேர்ந்து விடாது. Ignorance is bliss என்று வெகுளித்தன்மையுடன் எதையும் அணுகி நுகரும் மனங்கொண்டவர்கள் தான் நம் இலக்கு. அவர்களின் அறியாமை நமது மூலதனம். அதுமட்டுமல்ல யார் இவர்கள்?  என் தாய் நாட்டிலிருந்து கொள்ளையடித்து வளர்ந்தவர்கள் தானே. 

5

அன்றிரவு நான் இரண்டு பட்டர் நானுடன் ரோகன் சிக்கன் சாப்பிட்டிருந்தேன். எனக்கு குடிக்கும் பழக்கமில்லை ஆதலால் மேற்கொண்டு நண்பர்களுடன் இருந்தால் நேரமாகிவிடுமென நேரமே கிளம்பிவிட்டேன். வழக்கமாக வரும் பத்மனாபபுர அரண்மனை பின்புறச் சாலையைப் பிடித்துத்தான் வந்து கொண்டிருந்தேன்.  வேர்க்கிளம்பி நெருங்கியதும் லேசான சாரல் விழுந்து கொண்டிருந்தது. 

ஒரு ஆறு கிலோமீட்டர் கடந்திருப்பேன் பிடி பிடியென மழையடிக்கத் தொடங்கிற்று. வலது பக்கம் மலைக்குன்றும் இடது பக்கம் காடு பிடித்தும் கிடக்கும் இடம். சீக்கிரம் இந்தப் பகுதியைக் கடந்து விடவேண்டுமென்ற எண்ணம் ஒன்றுதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாய் பேய் பிடித்தது போன்று கிழக்குப் பகுதியில் இருந்து குறுக்கே வந்து சக்கரத்தில் விழுந்தது. சரியும் வண்டியை சுதாரித்து நிமிர்த்தும் முன் முகமடிக்க சாலையில் விழுந்து இழுத்தெறியப் பட்டேன். தலைக்கவசத்தின் ஒரு பகுதி உராய்வில் அறைந்து பாதிக்கு மேல் போய்விட்டது. சிறு கண்ணாடிக் கீறலோடு தப்பியது முகம்.

வண்டியிலிருந்து என்னை விலக்கிக் கொண்டு நகர்ந்தமர்ந்தேன். அதிர்ச்சியிலிருந்து மெதுவாக பிரக்ஞைக்கு திரும்பி ஹெல்மெட்டை கழற்றினேன். இடக்கை முழங்கையில் முறிவு. எலும்பு சட்டையைத் துருத்திக் கொண்டு வெளித் தெரிந்தது. வலி பின்னியெடுக்கத் தொடங்கிற்று. பொங்கி வடிந்து கொண்டிருந்த அழுகையை முகத்தில் அறைந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கழுவி வடித்துக் கொண்டிருந்த வேளையில் வலப்பக்க புதரில் சலசலப்பொலி கேட்டது. ஒரு செந்நாய். என் குறுக்கே வந்து விழுந்த சனியன் தான் அது. மேல்தாடையின் கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு உறுமியபடி என்னருகே வருவது ஹெட் லைட் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. 

எழுந்து ஓடமுடியுமென்றோ விரட்ட முடியுமென்றோ நம்பிக்கையில்லை. பெட்ரோல் டாங்கின் மீது தலையை வைத்து நீட்டிக்கொடுத்தேன். கிட்டத்தட்ட என்னை அதனிடம் தின்னக் கொடுப்பதைப் போன்றுதான். எச்சில் ஒழுகும் கீழ் தாடையும், விடைத்த காதுகளும், சீறும் கண்களுமாக என் முகத்தருகே வந்து நின்றது. அதன் உஷ்ண மூச்சு என் கன்னத்தில் உறைக்க கண்களை இறுக மூடிக்கொண்டேன். அனிச்சையாக துடித்தபடியிருந்த உதடுகளின் பிதற்றலை உணர்ந்த கணம் நினைவிழந்தேன். “நன்மைகளே உனை வந்துச் சேரட்டும்”

வழிப்போக்கர் யாரோ கண்டு 108க்கு தகவல் கொடுத்தார்களாம். 

6. 

கட்டவிழ்த்து மாதம் ஒன்றாகியும் வேலைக்குத் திரும்பாதலால் அப்பாவிற்கு அழைத்து பணி நீக்க எச்சரிக்கை கொடுத்தார் ஜெயன். இதற்கிடையே என் பைக்கை ஜப்தி செய்து எடுத்துச் சென்றிருந்தனர். நான் கண்டு கொள்ளவில்லை. விடிந்தால் தடிப்பாலத்தில் சென்று அமர்வதும் ஜெரோமியுடன் பேசிக் கொண்டிருப்பதுமே அன்றாடமானது. 

அப்பாவின் மீது கலியேறுவதும் இறங்குவதுமாக இருந்தது. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். அரைப்பக்கா அரிசிப் பானையை முகத்தில் வைத்தால் வெந்து குழைந்துவிடும். அவ்வளவு கடுகடுப்பு அவர் முகத்தில் தெரிந்தது. 

ஒரு ஆணாகப்பட்டவன் விட்டேற்றியாக அலைவதாவென அசூயை கொண்ட சுற்றமும் நட்பும் அக்கறையுடன் அப்பாவை இளக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்தவனைத் திருத்த நடக்கும் இவர்களை எல்லாம் பாஷானம் வைத்துக் கொல்லாத வரை இந்த உலகம் உருப்படும் வழியேயில்லை என்றுதான் நினைக்கிறேன். 

அப்பாவிற்கு கலி முற்றிய ஓரிரவு சிவந்த கண்களுடன் என் முன் வந்து நின்றவர் “லேய் இனியும் எத்தன நாளைக்கு சோலியும் கூலியும் இல்லாத இப்பிடி ஊம்பித் திரியலாமின்னு இருக்க?” என்று கேட்க எனக்கு அந்த இடத்திலேயே அவரைப் போட்டுப் பொளக்க வேண்டுமென்ற ஆத்திரம் தலைக்கேறியது.

பதறியெழுந்த அம்மா “பிள்ளைக்கிட்டயாக்கும் பேசுகது.. நாவடக்கி பேசுங்க..இல்லென்னா” என்று எங்களின் குறுக்கே வந்து நின்றாள்.  நான் கையிலிருந்த போனை தரையில் விட்டெறிந்தேன். அது சுக்கலாக நொறுங்கி வீடு முழுக்கச் சிதறி மின்னியது.

மறுநாள் வேலை முடித்து வந்தவர் எங்கிருந்தோ ஒடித்துக் கொண்டுவந்திருந்த மறுசீனிக் குச்சிகளை நடையில் தட்டினார். வீட்டைச் சுற்றி ஆவேசமாகக் குழியெடுத்தார். குச்சிகள் ஒவ்வொன்றையும் கவனமாக நட்டார்.

“எனக்கு ஒருப் பட்டியும் சோறிடண்டா பதியனிட்டுருக்க கப்ப மதி.. சும்மாவா சென்னான் எனக்கச்சைன் சம்பத்துக் காலத்து தைப் பத்து வைச்சால், ஆபத்துக் காலத்து கா பத்து தின்னாமுன்னு” என்னைப் பார்த்தபடி வீட்டிற்குள் காறி உமிழ்ந்தார். அம்மா அழும் கண்களுடன் காப்பி கலக்கிக் கொண்டிருந்தாள்.  இரு ஆண்களுக்கிடையே ஒரு பெண்ணால் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா என்ன?

நான் இறங்கி தடிப்பாலத்திற்கு நடந்தேன். வெயில் இறங்கி மேகம் கருக்கத் தொடங்கியிருந்தது. பாலத்தின் கீழோடும் ஓடையின் சலசலப்பையும், அதன் இரு கரைகளிலும் செழித்து நிற்கும் யானைக்காது செடிக் கன்றுகளையும், அதனிடையிடையே பூத்துக் கிடக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணியிலும் சூன்ய மனம் இலக்கற்று அளைந்து கொண்டிருக்க காலப் பிரக்ஞையற்று அமர்ந்திருந்தேன்.  

இழப்பிற்கினி ஒன்றுமில்லை என்ற தெளிவு வந்த கணம், எது என்னை இவர்களைப் பிடித்துத் தொங்க வைக்கிறது? கேள்வி மூளையை அரிக்கத் தொடங்கிற்று. பசி.. ஆம்.  பசிதான் தனியனான என்னைக் குடும்பத்துடனும், குடும்பத்தை ஊருடனும், ஊரை நாட்டுடனும், நாட்டைக் கண்டத்துடனும், கண்டத்தை உலகத்துடனும் பிணைத்துப் பிடித்திருக்கும் பசை. மறுகணமே கிறுக்குத் தனமான சிந்தனையென சுய எள்ளல் உள்ளுதிக்க சிரித்துக் கொண்டேன். 

வானம் நல்ல கருத்து நிலவை ஓடையில் தள்ளியிருந்தது, அதை மீன் குஞ்சுகள் கொத்திக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்படியே பின்சரிந்து பாலத்தில் சாய்ந்துக் கொண்டேன். உஷ்ணம் இறங்கி உடலிலேறிக் கொண்டிருக்கும் குளுமையில் கணம் லயித்து கண்களை மூடித் திறந்தேன்.

பேரிருளுக்கு அப்பால் பெருங்கையொன்று தூற்றி வீசும் மணலாக கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் என் மேல் விழ நன்மைகளே உனை வந்து சேரட்டும் என மனம் ஒருமுறை சொல்லி மௌனித்துக் கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.