கதவு

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இருக்கும். அவசர அவசரமாக பக்கத்து வீட்டு கதவை தட்டி நின்றார் பொன்னுசாமி.

கதவை திறந்து, மின் விளக்கு வெளிச்சத்தில் “யார்ரா இது இன்னேரத்துல” என்று உற்று பார்த்து, “அட பொன்னுசாமி!” என்றபடி, “என்னய்யா இந்நேரத்துல ?” என்று கொட்டாவி விட்டபடியே கந்தன் கேட்டார்.

சுற்றி முற்றி திரும்பி பார்த்து “உங்க கிட்ட உதவி கேட்டு வந்தேன் கந்தா” என்றார்.

சற்று யோசித்த பின், “இந்த நேரத்தில்…..சரி சொல்லு” என்றார்.

“என் பொண்ணு கல்யாணம் முடியுற வரைக்கும்  மட்டும் உன் வீட்டு கதவ  குடுங்க சாமி, உனக்கு புண்ணியமா போகும்” என்றபடி சட்டென்று காலில் விழ, தடுத்து தாங்கி பிடித்து, “யோவ், என்ன இதெல்லாம் ?, எனக்கு உன்ன விட வயசு கம்மி, இப்போ என்ன ஆச்சு ?” என்றார் கந்தன்.

” பஞ்சாயத்துல தீர்வை பாக்கி கட்டலைன்னு, நேத்து சாய்ந்தரம் கதவ கழட்டி கொண்டு போய்ட்டாங்க. விடிஞ்சா, என் கடைசி பொண்ணு தங்கத்தை, பொண்ணு பார்த்து பரிசம் போட வராங்க. அடுத்த முகூர்த்த தேதியில கல்யாணம் முடிவாயிரும்.இப்ப இப்புடி ஒரு சூழ்நிலை. எனக்கு உதவி பண்ணு கந்தா” என்று பொன்னுசாமி கண்ணீர் விட்டு கலங்கி நின்றபடி கேட்டார்.

“என்னய்யா இப்புடி சங்கட படுத்துற, எனக்கும் பொண்டாட்டி, குழந்தைன்னு குடும்பம் இருக்கு. உனக்கு கதவு தூக்கி குடுத்துபுட்டு, கதவில்லாத வீடா வச்சிருந்தா, என்னைய ஊருக்குள்ள எவன் மதிப்பான் ?” இது சரியா வராது. நீங்க வேணா வடக்கு ராமசாமி, இல்ல வீரமணிகிட்ட கேட்டு வாங்கிகங்க” என்றார் கந்தன்.

“கேட்டேன்பா….” என்று துணியால் மூக்கை சிந்தி துடைத்து, “அவங்கெல்லாம் ஒன்னு மண்ணுன்னு பேசுவாங்க. ஆனா உதவின்னா ஒருத்தனும் பண்ணமாட்டான். அதான் கடைசி நம்பிக்கையா உன்ன கேட்க வந்தேன். உதவி செய்ப்பா….கதவில்லன்னா! வரி கட்ட வக்கில்லாத குடும்பம்ன்னு மாப்பிள்ள வீட்டுகாரங்க கல்யாணத்த நிறுத்திருவாங்க. கல்யாணம் நின்னு போனா, அப்பறம் என் பொண்ணுக்கு வாழ்க்கையே போயிரும். உதவிபண்ணுப்பா….” என்றபடி கந்தன் கையை இறுக பற்றி கேட்டார் பொன்னுசாமி.

“அதான் நிலம் தான் இருக்குல்ல, விவசாயம் இல்ல. அத கம்பெனிகாரன் கேட்டப்ப வித்திருக்கலாம்ல!” என்றான் கந்தன்.

“அது என் பாட்டன், அப்பன் விவசாயம் பண்ண நிலம். தரிசா கிடைந்தாலும், அத விக்க மனசில்ல. கடைசி நம்பிக்கையா உன்ன நம்பி வந்துட்டேன். உதவி செய் கந்தா” என பொன்னுசாமி கெஞ்சினார்.

பொன்னுசாமி வைத்திருப்பது ஒரு சிறிய காரை வீடு. ஒரு ஏக்கரா தரிசு நிலம். 1980 காலகட்டத்தில் கிராம பஞ்சாயத்தில் தீர்வை வரி கட்டனும். இல்லையென்றால் வீட்டு கதவை தலையாரி கழட்டி கொண்டு செல்வார். வரி செலுத்திய பிறகே கதவை பஞ்சாயத்திலிருந்து ஒப்படைப்பார்கள்.

கிராமங்களில் வீட்டின் கதவை வைத்து, அந்த குடும்ப நிலையை கணிப்பார்கள்.

கடந்த மூன்று வருடங்களாக மழையும் இல்லை. விவசாயமும் இல்லை. அதனால் வருமானமும் இல்லாமல் பொன்னுசாமி மட்டுமல்லாமல் கிராமத்தில் பலரும் நகரத்தில் கிடைக்கும் சிறுசிறு வேலை பார்த்து வாழ்க்கையை நகர்த்தியபடி இருக்கிறார்கள். பொன்னுசாமியும் வீட்டில் முறுக்கு செய்து நகரத்தில் விற்று அதில் பிழைக்கிறார். வறுமையிலும் இரண்டு மகள்களின் திருமணத்தை எப்படியோ முடித்து வைத்தார். மூன்றாவது மகளுக்கும் வரன் பார்த்து, திருமணம் வரும் சமயத்தில்  வீட்டின் கதவு இல்லாமல் இருப்பது  மூச்சு நின்றது போல் ஆனது.

இரவு மூன்று மணி ஆகியும் கணவர் பொன்னுசாமி வரவில்லையே என்று ரங்கம்மா திண்ணையில் அமர்ந்தபடி பார்த்து கொண்டிருந்தாள். சற்று தூரத்தில் தலையில் கதவை தூக்கி கொண்டு வந்து, தனது வீட்டின் நிலைபடியில் மாட்டி, ‘அப்படா’ என்று திண்ணையில் அமர்ந்தார்.

“யாரு வீட்டு கதவு ?” என்றாள் ரங்கம்மா.

“கந்தன் வீட்டு கதவுதான். நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் வேணும்ன்னு சொல்லி வாங்கியாந்தேன்”

“நல்ல மனசு கந்தனுக்கு” என்று பெருமைபட்டாள் ரங்கம்மா.

“அடி நீ வேற போடி, ஒரு நாளைக்கு அஞ்சு ரூபான்னு வாடகை பேசி குடுத்துருக்கான்”  என்றார் பொன்னுசாமி.

“ஆமா,இப்பெல்லாம் யாரு, சுயநலம் பார்க்காம உதவி பண்ணுறது” என்று ரங்கம்மா சொல்லியபடி கண்ணீரை துடைத்து உள்ளே போக, திண்ணையிலே படுத்து உறங்க ஆரம்பித்தார் பொன்னுசாமி.

காலை பூ, பாக்கு தட்டோடு மாப்பிள்ளை இசக்கி, அவரது அப்பா தங்கராசு, அம்மா மேகலை வர, மகள் தங்கம் காபி மாப்பிள்ளையை பார்த்தபடி காபி கொடுக்க, காபி குடித்தபடியே பேசி கொண்டிருந்தனர்.


கந்தனின் மகள் வள்ளி, கதவில் ஏறி நின்று ஆட்டியபடி விளையாடி கொண்டிருந்தாள்.
“நாங்க ஊருல சொந்தமா டீ கடை வச்சிருக்கோம். எனக்கும் உங்கள மாதிரிதான் மூனு பொண்ணு, ஆனா கடைசி கடைகுட்டிதான் என் பையன் இசக்கி” என்று மகனை பற்றி  பொன்னுசாமியிடம் தங்கராசு சொல்ல, ‘கீச்சு….கீச்சென்று கதவு சத்தம் வள்ளி பாப்பா கதவை ஆட்டி கொண்டிருக்க, அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியது.

“அடியே! பாப்பாவ அவங்க வீட்டுல விடு” என்று ரங்கம்மாவிடம் பொன்னுசாமி ஜாடை காட்ட, வள்ளியின் கைபிடித்து ரங்கம்மா இழுத்தபோது, கதவை இறுக பிடித்து, “போ, இது என் கதவு. நான் வரமாட்டேன்னு” அழ ஆரம்பித்தது.

“அய்யோ….. இது வேற” என்று குழந்தையை ஒரு கிள்ளு கிள்ளி “போமாட்ட!, வா” என்று இழுத்து இடுப்பில் ஏற்றி, குழந்தை அழ, அதன் வாயை பொத்தி தூக்கி சென்றாள் ரங்கம்மா.

ஒருவழியாக அடுத்த நல்ல நாளில் குலதெய்வம் மதுரைவீரன் கோவிலில் திருமணம் வைக்க முடிவு பண்ணி, மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியாக கிளம்பி போக வெளியே வந்தார்கள். வெளியே தலையாரி வந்து நின்று, “பொன்னுசாமி, உன் வீட்டுக்கு கதவு எப்புடி வந்துச்சு ?, தீர்வை கட்டிடீயா ?” என்றான்.

“இவன் வேற நேரங்கெட்ட நேரத்துல” என்று நினைத்து கொண்டு, “ஆமா” என்று பதில் சொல்லியபடி,மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி வைத்து தலையாரியை பார்த்து முறை முறைத்தார்.

“கட்டிடீனா சரி, அதுக்கு ஏன் முறைக்கிற” என்றபடி தலையாரி சென்றான்.

“அப்பாடா” என்ற நிம்மதியில் வீட்டிற்குள் வந்து கதவை தாளீட்டு,”குலதெய்வம் கோவில்ல கல்யாணம்,சாப்பாடு,துணிமணி எல்லாம் எவ்வளவு ஒரு ரெண்டாயிரத்துக்குள்ள முடிக்கனும்” என்று ரங்கம்மாவிடம் வெகு நேரம் பேசி கொண்டிருந்தார்.

“டேய், பொன்னுசாமி, வெளிய வா” என்று பஞ்சாயத்து தலைவர் பெரிய பண்ணை பூலோகம் கத்த, சத்தம் கேட்டு சப்தநாடியும் ஆடி போய், கை, கால் நடுங்க கதவை திறந்து, நடுங்கியபடியே வந்து, அவர் காலை பிடித்து, “பண்ணை என்ன மன்னிச்சிடு” என்று கதறினான் பொன்னுசாமி.

“தீர்வ கட்டாம ஏமாத்துற, வேற கதவை மாட்டிருக்க. இங்க நீ புத்திசாலி, நான் முட்டாபயலா ?” என்று பொன்னை எத்தியபடி, “அந்த கதவையும் கலட்டுடா” என்று தலையாரியை ஏவினார் தலைவர்.

“பொண்ணு கல்யாணம் முடிவாச்சு. அதனால கந்தன் வீட்டு கதவை மாட்டுனேன். மன்னிச்சிடு பண்ணை. நான் ஏமாத்தல. இன்னும் பத்து நாள்ல தீர்வை கட்டிடுறேன். பெரிய மனசு பண்ணுங்க பண்ணை” என்று மண்டியிட்டு கையை தலைக்கு மேல் கூப்பி பொன்னுசாமி கதற, அது எதுவும் அவர் காதிலும் வாங்கி கொள்ளவில்லை.

“ஐய்யா, பெரிய மனசு பண்ணுங்க” என்று ரங்கம்மாவும் கதற, வீட்டிற்குள் நின்று தங்கமும் கண்ணீர் விட்டாள்.

ஊர் மக்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். கூட்டத்துக்குள் புகுந்து வந்த கந்தன். தலையாரி கதவை கழட்டி தூங்கி செல்ல போவதை நிறுத்தி, தலைவரிடம், “ஐய்யா, இந்த பரதேசி பய, ராத்திரியில வந்து கதவ கேட்கவும், பரிதாப்பட்டு குடுத்தேன். என்னைய மன்னிச்சிடுங்க. நான் வரியை போன வாரமே கட்டிடேன்” என்று காலை பிடித்து கேட்டான் கந்தன்.

“ரெண்டு பயலும் திருட்டு கம்மானாட்டிங்க. அவன் தீர்வை கட்டடும். உன்னோட கதவையும் சேர்த்து தரேன்” என்று கந்தனை காலால் எத்திவிட்டபடி சென்றார் தலைவர்.

“யோவ், எதாவது பேசுயா ????, உனக்கு உதவி பண்ண போய், என் கதவையும் தூக்கிட்டு போறாங்க” என்று பொன்னுசாமியிடம் கந்தன் கத்த, வீட்டு வாசலில் தலையில் கை வைத்தபடியே உட்காந்திருந்தார் பொன்னுசாமி.

“அட போயா” என்று பொன்னுசாமியை திட்டிவிட்டு,

“ஐய்யா…. ஐய்யா…. என் கதவ குடுங்க சாமி” என்று தலைவர் போய் கொண்டிருக்கும் திசையில் கத்தியபடியே கந்தன் ஓடினார்.

வேடிக்கை பார்த்த கூட்டம் கலைந்து போக, இரவாகியும் அதே இடத்தில், கதவில்லாத தன் வீட்டை பார்த்தபடியே, தலையில் கை வைத்து பொன்னுசாமி அமர்ந்திருந்தார்.

சட்டென்று எழுந்து, தன் வேட்டியை சரி செய்தபடி சென்றார். எங்கு போகிறார் என்று ரங்கம்மாவும் எதுவும் கேட்காமல் இருந்தாள்.

மறுநாள் மாலை பொன்னுசாமி வீட்டு கதவை கந்தன் தலையில் வைத்தபடி வந்து பொன்னுசாமி வீட்டு நிலைபடியில் இறக்கி மாட்டினார்.

ஆச்சரியமாக பார்த்த ரங்கம்மா, “எப்புடி வந்துச்சு இந்த கதவு ?, அவர் எங்க ?” எனக் கேட்டாள்.

திண்ணையில் உட்காந்து, வேர்வையை துண்டால் துடைத்தபடி, “பொன்னுசாமி அண்ணே!  நேத்து ராத்திரி தலைவர் வீட்டுல பேசினாரு, இதான் சமயம்னு தலைவர் தீர்வை பாக்கிகாகவும், பொண்ணு கல்யாணத்துகாகவும் நிலத்தையே தனக்கு விக்க சொல்லி கேட்டாரு. அண்ணனும் எவ்வளவோ கெஞ்சி பாத்துச்சு, கூட பணத்துக்கு பேசி பார்த்துச்சு. கடைசியில தலைவர்கிட்டையே இரண்டாயிரத்துக்கு வித்துட்டாரு” என்று கந்தன் சொன்னவுடன், அதிர்ச்சியில் உறைந்த ரங்கம்மா, “இவருக்கு என்ன பைத்தியமா ?, என் பாட்டன் நிலம் தரிசா கிடந்தாலும்,எவனுக்கும் விக்கலன்னாரு. கூல்டீரிங்ஸ் கம்பெனிகாரன் கூட, எங்க பூமிய நாலாயிரத்துக்கு கேட்டான். இவரு தலைவர்கிட்ட அடிமட்டத்துக்கு போய் வித்திருக்காரு. எங்க இந்த மனுஷன் வரட்டும் பேசிகிறேன். எங்க அவரு ?” என்று சிடுசிடுவென கேட்டாள்.

“கதவ தூக்கிட்டு என் கூடதான் வந்தாரு. அவர் நிலத்தை பார்த்துட்டு, அங்கயே நின்னுகிட்டாரு. “போ! வரேன்னு” நிலத்தையே தொட்டு பார்த்துட்டு நின்னாரு” என்றார் கந்தன்.

சற்று நேரத்தில் தலை குனிந்து, கையை பின்னாடி கட்டியபடி,
வீட்டிற்கு வந்த பொன்னுசாமியை பார்த்து, “நம்ம வயித்தவலிய தெரிஞ்சுகிட்டு, அடிமட்டத்துக்கு தலைவர் நிலத்த வாங்கிட்டாரா ?” என ரங்கம்மா சத்தம் போட ஆரம்பிக்க, அமைதியாக இரண்டாயிரம் ரூபாயை நீட்டினார் பொன்னுசாமி.
“எதாவது பேசுங்க ? ” என்றபடி கத்தினாள் ரங்கம்மா.

நிலப்படியில் இருந்த கதவை பார்த்தபடி, திண்ணையில் உட்கார்ந்த பொன்னுசாமி, அழுகையை முழுங்கி, உணர்த்தியை அடக்கி,கண்ணீரை கட்டுபடுத்தி, தன் கையில் தன் நிலத்தை தொட்டபோது, ஓட்டியிருந்த மண்துகள்களை பார்த்தபடி இருந்தார்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.