ஆட்டம்

அர்த்தநாரீஸ்வரராகவும், பார்வதி தேவியாகவும், தாருகனாகவும், பத்ரகாளியாகவும், கன்னியாகவும் நடந்து வரும் அவர்களை பக்தர்கள் அனைவரும் வியப்போடு நோக்கினர். ஒரு சிலர் பயபக்தியோடு அவர்களை வணங்கவும் செய்தனர். செண்டை மேளம் வாசிக்கும் இடத்திற்கு வந்ததும் தாங்கள் ஆடுவதற்கு தயார் என்பதை தன் கண்களால் அம்மேளக் கலைஞர்களுக்கு உணர்த்தினார் சிசுபாலன். அம்மேளக்கலைஞர்களும் சிவ பார்வதி நடனம் ஆடுவதற்கு ஏற்றாற்போல் தங்களுடைய மேளத்தை அடிப்பதற்கு தயாராகிக் கொண்டனர். சிசுபாலன் உள்பட அனைவரும் ஒவ்வொரு நபராக அந்த மேளக்கலைஞர்களின் வாத்தியங்களைத் தொட்டு வணங்கி விட்டு தங்களுடைய முதல் ஆட்டத்தை அங்கு அரங்கேற்றத் தொடங்கினர்.

குறத்தி முடுக்கு: ஒரு பார்வையின் பயணம்

விலைமகளிர் தெருவையும் அவன் முதலில் உடல் தேவையை நிறைவேற்றும் இடமாகத்தான் அணுகுகிறான். ஆனால் குறத்தி முடுக்கு தெருவில் உள்ள தங்கம் என்ற இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தின் உடனான உறவு அந்தத் தன்னம்பிக்கையை மெதுவாக உடைக்கத் தொடங்குகிறது. அவள் மற்ற ஆண்களுடன் இருப்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் ஏற்படும் சங்கடமும் பொறாமையும், உரிமை உணர்வும், “நான் உணர்ச்சியற்றவன்” என்ற அவனுடைய சுயபிம்பத்துக்கு எதிராக நிற்கின்றன. அவளுக்காகப் பணம் செலவழிப்பது, அவளுடைய வீட்டின் உள்தோற்றத்தை மாற்றுவது, அவளை மணக்க வேண்டும் என்ற ஆசை, அவள் இல்லாதபோது ஏற்படும் வெறுமை போன்ற அனைத்தும் அவன் முன்பு மறுத்திருந்த “காதல்” என்ற உணர்வின் வேறு வடிவங்களாகத் திரும்புகின்றன.

உமிழ்

ஒரே ஒரு நொடி, இருளடர்ந்த அந்த மதுக்கூடத்தின் மண் தரையில் தலைகுப்புற நான் விழுந்து கிடப்பதைப்போல் ஒரு காட்சி கண்முன் விரிந்தது. நிகழும் கணத்திலேயே அதனை பிரமை என்று உள்ளம் உணர்ந்தும் இருந்தது. இரண்டொரு நொடிகளில் அக்காட்சியின் மூலம் எது என்பதையும் நினைவுகூர்ந்திருந்தேன். சமீபத்தில் ஏதேனும் கதைகள் எழுதினீர்களா என்று அந்த இயக்குனர் எழுப்பிய வினாவிற்கு, எழுத்தாக எதுவுமில்லை எனவும் ஆனால் மனதினுள் கருக்களாக சில கதைகள் இருக்கின்றன என்றும் பதில் சொல்லியிருந்தேன். அவற்றில் எனக்கு நெருக்கமானதை விவரித்துச் சொல்லும்படி அவர் கேட்டுக்கொண்டதும் நான் சொல்லத் துவங்கிய கதையின் முதல் காட்சி அது.

அமெரிக்க பாப் இசையின் தந்தை

This entry is part 9 of 9 in the series காப்பிரைட் கதைகள்

ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட்டது. அது நினைவுகளில் இருந்து பாடப்பட்டது.  எழுதி வைக்கப்பட்டவை அல்ல. ஒருவர் கடைக்குச் சென்று நாட்டுப்புற இசையின் இசைக் குறிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியாது. அன்றாட நடைமுறை வாழ்க்கையைச் சித்தரிக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, குடியேற்றத்தால் உருவாகி இருந்த ஒரு சமூகத்தின் பொது அடையாளமாக ஒரு நாட்டுப்புற இசை இருக்க முடியாது.

விஜி ராஜ்குமார் கவிதைகள்

என் கூந்தலிழையின்
நுனிப்பற்றி சுருட்டி
இழுத்து நாணாக்குகிறாய்
என் ஓடா குருதியின் கரையிலமர்ந்து
கூடா வார்த்தைகளின்
பண் இசைக்கிறாய்..
நெளியும் இசையில்
நான்
இருந்தும்
மறைந்தும்
இல்லாமலும்
இருக்கிறேன்.

சொல்வனம் வழங்கும் “எண்ணெய்யும் தண்ணீரும்” ஆங்கிலப் புத்தகம்

அந்தப் பிளாட்பார்ம் ஒரு விசித்திரமான பொருளாதாரச் சூழலையும் உருவாக்கியிருந்தது. அங்கே இலவச உணவு, துணி துவைக்கும் வசதி, குளிர்பானங்கள் என அனைத்தும் வழங்கப்பட்டதால், ஜூஹு ஹெலிபேஸிலிருந்து ஹெலிகாப்டரில் ஏறும்போதே நாங்கள் எங்கள் பணப்பைகளை (wallets) பைக்குள் பத்திரமாக வைத்துவிடுவோம். பிளாட்பார்மில் இருக்கும்போது பணத்தைச் செலவழிக்க வேண்டிய தேவையே இருக்காது. ஆனால், அதில் ஒரு சுவாரசியமான விதிவிலக்கு இருந்தது. அக்காலத்தில் இந்தியா பல துறைகளில் சுயாதிபத்தியக் கொள்கையைப் பின்பற்றி, இறக்குமதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் வரிகளையும் விதித்திருந்தது. நாங்கள் சர்வதேசக் கடல் எல்லைக்கு மிக அருகில் இருந்ததால், பிளாட்பார்மிற்கு வரும் பிற வெளிநாட்டுப் படகுகளோ அல்லது கப்பல்களோ சில வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டு வந்து அங்கே விற்பனை செய்ய முடியும்

  ஆழி மனங்கள்

“என்ன உரிமை” என்றான் சரவணன் பலவீனமாக. அத்தை அடுத்த வார்த்தையை சொல்லும் முன் ராசு கொஞ்சம் உரக்க “நான் போக மாட்டேன்” என்றான். அங்கிருந்த அனைவரும் அவனை நோக்கினார்கள் அத்தை அவன் முன்னாடி நின்று “உனக்கு என்ன உரிமை இருக்குனும் அவன் உனக்கு யாருனும் தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்டே ராசு” என்றாள்.  “எனக்கு தெரியும்” என்றான். சரவணனை தவிர  மூன்று பெண்களுமே அதிர்ந்து போனார்கள். ராசு எழுந்து உறுதியோடு “அத்தை ..நீங்க எனக்கு போன் பண்ணி வர சொன்னதுமே நான் தெரிஞ்சுகிட்டேன்..முதல்ல வரக்கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா சிலதை தெளிவாக்கிடனும்னு தோணுச்சு..எனக்கும் உங்க தம்பிக்கும் உறவுனா அது அவருடைய அண்ணன் மகன்னு இருக்குற ஒரு உறவுதான் அதை தாண்டி எதுவுமே இல்லே..இப்போ மட்டும் இல்லே எப்பவுமே அது ஒண்ணு தான்.

புத்தியில் நிலைத்தவன்

“எவன் ஒருவன் உடலும் மனமும் இயங்கும்போது அந்தச் செயல்களுக்குள் செயலற்ற தன்மையையும், செயலற்று வெறுமனே அமர்ந்திருக்கும் போதும் அந்த நிலையில் செயலையும் காண்பானோ, அவனே மனிதர்களுக்குள் உண்மையான புத்திமான். அவனே யோகி. அவனே தன் அனைத்துக் கடமைகளையும் செய்து முடித்த நிறைவு பெற்றவன் ஆவான்.” என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார்.

பயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்

ராஜன் உடனே “போகும் பொழுது நடு இரவுக்கு முன் குடிவரவுச் சோதனை செய்தோமானால் அன்றைய தேதியில் முத்திரை குத்தி விடுவான். பன்னிரெண்டு மணிக்குப் பின் அடுத்த நாள் முத்திரை வந்துவிடும். ஆகவே முன்னரே சென்றுவிட்டோமானால் ஒரு நாள் தினப்படி அதிகம்  கிடைக்கும். திரும்ப வரும் பொழுது நிதானமாக நடுநிசிக்குப் பின் குடிவரவுச் சோதனையை செய்தோமானால் அதே போல் அடுத்த நாள் முத்திரை விழும். இன்னுமொரு நாள் வெளிநாட்டில் இருந்த கணக்கில் ஒருநாள் தினப்படி அதிகம் கிடைக்கும். எனவேதான் போகும் பொழுது அவசரமும் இறங்கிய பின் நிதானமும். புரிந்ததா என்றார்!” 

தேசிய நெடுஞ்சாலை I-94 கிழக்கு

வாகனத்தில் உள்ளே
அதிசயிக்க தக்கது என எதுவுமில்லை
தன் நோக்கத்தை நேர்த்தியாய் நிறைவேற்றும்
இயந்திரத்தின் மெல்லிய உறுமல்.
சக்கரங்களின் சீரான இசை.

திரும்பும் பயணம்

This entry is part 8 of 8 in the series கொலம்பஸ்

நினா கப்பலின் அப்போதைய உண்மையான கேப்டன் ‘விசென்டே யானேஸ் பின்ஸான்’ (Vicente Yáñez Pinzón – இவர் பிண்டோ கேப்டன் மார்ட்டின் அலோன்சோ பின்ஸானின் தம்பி). சாண்டா மரியா அழிந்த பிறகு, கொலம்பஸ் முழுப் பயணத்திற்கும் தலைவராக இருந்ததால், நினா கப்பலைத் தனது முதன்மை (Flagship) தளபதியகக் கொண்டு, அதன் பொறுப்பைத் தன் கைவசம் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

றெக்கை- அத்தியாயம் 27

This entry is part 27 of 27 in the series றெக்கை

அல்பிக்கு வந்திருக்கும் ஷயரோகம் குழந்தைகளை பற்றிப் படராமல் முன் ஜாக்கிரதையோடு குழந்தைகள் விசியையும் கிட்டாவையும் அவுட் ஹவுஸில் முத்தச்சன் தம்பதியோடு தற்காலிகமாக தங்க வைத்திருக்கிறாள். லெவி வேறு வேலை இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒரு நாள் விடாமல் டிஸ்பென்சரியில்  தனித்திருக்கும் நிர்மலாவுக்கு அட்டெண்டென்ஸ் கொடுக்க வந்து விடுகிறான். கையெழுத்து போட்ட கை சும்மா இருக்குமா என்ன.

உயிர்காக்கும் நீரிலிருந்து நீராவியின் ஆற்றல் வரை

ஆய்வகத்தில் காணப்படும், hydrothermal autoclave வெளியிலிருந்து பார்க்கும்போது வலிமையான உலோகப் பாத்திரமாகத் தோன்றினாலும், அதற்குள்ளே சிறிய செயற்கை பூமி உருவாக்கப்படுகிறது. நீர் கரைப்பானாகச் செயல்படும்போது, அதிக வெப்பநிலையில் அதன் இயற் பண்புகள் மாறுகின்றன. அழுத்தம் அதிகரிக்கும்போது அதன் கொதிநிலையும் மாறுகிறது. பல கனிமப் பொருள்கள் சாதாரண சூழலில் எளிதில் கரையாவிட்டாலும், சூடான அழுத்தமுள்ள நீரில் வேறுவிதமாக நடந்து கொள்ளலாம்.

அலகு 

பாதியிலேயே ரத்னா கிளம்பினாள். சைகை காட்ட குமரனும் பின் தொடர்ந்தான். நடுஇரவிற்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.  கண்சிமிட்டும் தெருவிளக்குகள், அரைத்தூக்கத்தில் சில நாய்கள் தவிர யாரும் இல்லை. தன் வீட்டிற்குள் நுழையாமல் குமரனுடன் உள்ளே வந்தாள். அவளின் உடல் நடுக்கத்தையும் பெருமூச்சையும் அருகில் உணர்ந்தான். ஏதோ ஒரு பூவின் வாசனை. ஸ்பரிசம். எல்லாம் கலந்து ஒரு புது அனுபவம். நினைவில் அது அப்படியே தேங்கிவிட்டது.

கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா?

உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் பொழுதே வார்த்தைகளை வடிவமைக்கும் முறையைக் கொண்டு ஒரு குறியீட்டை/முத்திரையை அதற்குள் கிளாட் பதித்து விடுவதால் படிப்பவர்களால் கண்டுபிடிக்க இயலாது. உரையை ஆய்வு செய்யும் ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தால் மட்டுமே அந்த குறியீட்டைக் கண்டுபிடிக்க முடியும். அதனால் இதை ஒரு வகையில் “டிஜிட்டல் கைரேகை” என்றும் புரிந்துகொள்ளலாம்.

இமாமும் ஷாதுலும்: நிலம் மனிதனை மிருகமாக்கும் கதை

நிலம் என்பது ஒரு மனிதனை எப்படி மிருகமாக்கும் என்பதை இந்த நாவலில் வரக்கூடிய சில கதாபாத்திரங்கள் மூலமாக நாம் மிக அற்புதமாக புரிந்து கொள்ளலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் மிருகம் ஆகிறான் என்பது இந்த நாவலின்  மையக்கருத்து என்று நான் நம்புகிறேன். இந்த கதையின்  மைய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் ,ஒரு கிராமத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய  அப்பா, அம்மா மற்றும் மகன் இவர்களோடு ஒரு கரடி மற்றும் சிலர் அவ்வளவே.

தரவு தனியுரிமை

This entry is part 5 of 5 in the series தரவு ஏக்கம்

நாம் இதுவரை இந்தப் பகுதியில் பார்த்தது, உலக அரசியல்வாதிகளால், பூசப்பட்ட பெரும் டெக் நிறுவனங்களின் தீய முகம். இதை உலகெங்கும் ஊதி வாசிக்கும் இவர்களின் அறிக்கைகளில் ஓரளவு உண்மை இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் சக்தியை இதே அரசியல்வாதிகளே மறுப்பதில்லை. குறிப்பாக, இவர்களின் சில அறிக்கைகள், இந்தத் தொழில்நுட்பத்தை வேறு விதத்தில் அணுக வேண்டும் என்றும் சொல்லி வருகின்றன.