புத்தியில் நிலைத்தவன்

வேதாந்த மரபில் பகவத் கீதை  மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பகுதியும் முதல் ஷட்கம், இரண்டாம் ஷட்கம், மூன்றாம் ஷட்கம் என்று வழங்கப்படுகின்றது. தத்-த்வம்-அஸி என்ற உபநிஷத் மகாவாக்கியம், எங்கும் நிறைந்துள்ள எல்லாம்வல்ல அந்தப் பரம்பொருளான ஈஸ்வரனுக்கும் (தத்), இந்தச் சிறிய உடலுக்குள் இருந்து கொண்டு வரம்புகளுக்குட்பட்ட ஆற்றல்களை மட்டுமே கொண்டு வாழ்வதாக எண்ணிக் கொண்டிருக்கும் ஜீவனுக்கும் (த்வம்) உள்ள ஒற்றுமையை விளக்குகிறது. அஸி என்பதற்கு “இருக்கிறாய்” என்று பொருள். நீ அதுவாகவே இருக்கிறாய் என்பது தத்வமசி என்ற மகா வாக்கியத்தின் பொருளாகும். 

கீதையின் முதல் ஆறு அத்தியாயங்கள் (அத்தியாயம் 1 முதல் 6 வரை) முதல் ஷட்கம் என்று வழங்கப்படுகிறது. இந்த ஆறு அத்தியாயங்களும் த்வம் பத (ஜீவனைப் பற்றிய) விசாரத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் பகுதியில் ஜீவனுடைய இயல்பு, ஆத்ம அனாத்ம விசாரம், ஒரு சாதகன் ஆத்ம ஞானத்தை அடைவதற்காக அடையவேண்டிய அடிப்படைத் தகுதியான மனத்தூய்மையை வேண்டிச் செய்யப்படும் கர்மயோகம், ஆத்மஞானத்தை அடைவதில் சுயமுயற்சியின் இன்றியமையாமை, பற்றின்மை எனப்படும் சன்யாசம், மனதை அமைதிப்படுத்தி, ஒருமுகப்படுத்தும் தியான வழிமுறைகள் ஆகியன விளக்கப்படுகின்றன.

கீதையின் இரண்டாவது ஷட்கம் அத்தியாயம் 7 முதல் 12 வரை கொண்டது. இந்தப்பகுதியில் தத் பத (இறைவன் ஆகிய ஈஸ்வரன் குறித்த) விசாரம் வருகிறது. ஈஸ்வரனின் உண்மையான இயல்பு குறித்தும், எவ்வாறு இறைவன் நிர்குணமாகவும் (அருவம்), சகுணமாகவும் (உருவம்) திகழ்கிறார் என்பது குறித்தும் இப்பகுதி பேசுகிறது. அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை இந்தப்பகுதியில்தான் காட்டுகிறார். பக்தி குறித்தும், பக்தர்களின் வகைகள், அவர்கள் ஒவ்வொருவரது இலக்கணங்கள் ஆகியவை குறித்தும் இந்தப் பகுதியில் கிருஷ்ணர் பேசுகிறார்.

மூன்றாவது ஷட்கம் அத்தியாயம் 13 முதல் 18 வரையிலானது. இந்தப் பகுதியில் அஸி பத விசாரம் வருகிறது. அதாவது நீயும், இறைவனும் ஒன்றுதான் என்று நிறுவும் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் இந்தப்பகுதியில் வருகின்றது. உடல், மனம் ஆகிய தொகுப்புகளான ஜீவனின் வசிப்பிடத்துக்கும் (இதை க்ஷேத்ரம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்), உடல், மனம் ஆகியவற்றை அறியும் சாட்சி உணர்வான ஆத்மாவுக்கும் (இது இங்கு க்ஷேத்ரக்ஞன் என்று குறிப்பிடப்படுகிறது) உள்ள வேறுபாடுகள் விரிவாகப் பேசப்படுகின்றன. எவ்வாறு முக்குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் ஆகியன ஒருவனைக் கட்டுப்படுத்துகின்றன என்றும், அவை மூன்றையும் கடந்து ஒருவன் எவ்வாறு குணாதீதனாக மாறுவது என்பது பற்றியும் இந்தப் பகுதியில் அலசப்படுகின்றது. மனிதன் வளர்த்துக்கொள்ள வேண்டிய தெய்வீகப் பண்புகள் குறித்தும், அவன் கைவிட வேண்டிய அல்லது கைக்கொள்ளவே கூடாத அசுரப்பண்புகள் குறித்தும் இந்தப்பகுதி பேசுகிறது. இந்தப்பகுதியின் இறுதி அத்தியாயம் மீண்டும் ஒருமுறை ஆத்மாவை பற்றிய உபதேசமான ஞானயோகத்துக்குத் திரும்பி, கீதையின் முழு சாரத்தையும் தொகுத்து உரைக்கிறது. இறுதியில் “எல்லா தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டுமே சரணடைக” என்ற கிருஷ்ணர் அர்ஜீனனுக்கு அளிக்கும் மகத்தான வாக்குறுதியோடு நிறைவடைகிறது. பதினெட்டாம் அத்தியாயம் 66 ஆம் சுலோகத்தில் கிருஷ்ணர் தன்னுடைய உபதேசத்தை முடித்துக் கொள்ளுகிறார். இந்த சுலோகத்துக்கு உபசம்ஹார சுலோகம் என்று பெயர். இதன்பின் அர்ஜூனன் கிருஷ்ணரிடம் “என் மோகம் வீழ்ந்தது. அறிய வேண்டியவற்றை நான் அறிந்து விட்டேன். இனி என் தன்னறத்தை நான் செய்வேன்” என்று அறிவிக்கிறான்.

கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு ஆத்மாவைப் பற்றிய உண்மையான தன்மையை தன் உபதேசத்தின் முதல் பகுதியிலேயே கற்பித்து விடுகிறார். அதன் பின்னர்தான் ஆத்மஞானத்தை அடைவதற்குத் தேவையான தகுதிகள் குறித்துப் பேசுகிறார். உபநிஷத்துக்களின் கற்பித்தல் முறையும் இதுதான். உத்தம மாணவன், மத்யம மாணவன், அதம மாணவன் என்று மாணவர்களில் மூன்று பிரிவுகள் உண்டு. உத்தம மாணவன் ஏற்கனவே மனத்தூய்மையுடன் இருப்பவன். அவனுக்கு ஆத்மாவைப் பற்றிய உண்மையை நேரடியாகச் சொன்னாலே போதும். அவன் தன்னைப்பற்றிய அறிவை உடனடியாக அடைந்து மோட்சம் எனப்படும் அகவிடுதலையை உடனடியாக அடைந்து விடுவான். எனவேதான் வேதாந்தக் கல்வியில் அதன் உச்சகட்ட சாத்தியமான ஆத்மஞானம் குறித்த உபதேசம் முதலிலேயே வந்து விடுகிறது. அதைத் தெளிவாக உடனடியாக அறிந்து கொள்ள இயலாத மாணவர்கள் மத்யம மாணவர்கள். இவர்களுக்கு மேலும் பலபடிகளிலாக கல்வியைப் புகட்ட வேண்டும். மேலும் இவர்கள் மனத்தூய்மையை அடைவதற்குத் தேவையான சாதனைகளும் வழங்கப்படும். அதம மாணவர்களுக்கு மனத்தூய்மை என்பது மிகக்குறைவாக இருக்கும். இவர்கள் உடனடியாக வேதாந்தக் கல்விக்குள் நுழையாமல் இருப்பதே நல்லது. மத்யம, அதம மாணவர்களுக்கு கர்மயோகம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆத்மா மற்றும் அனாத்மாவின் இலக்கணங்களைக் கூறிமுடித்தபின் கிருஷ்ணர் கர்மயோகத்தை இரண்டாம் அத்தியாயத்திலேயே ஒரு சாதனையாக அளிக்கிறார். கர்மயோகத்தின் பொன்விதியை இங்குதான் அறிமுகப்படுத்துகிறார். “கர்மத்தைச் செய்வதில்தான் உனக்கு அதிகாரம் உண்டு. அதற்கான பலனை அடைவதில் இல்லை” என்கிறார். 

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன

மா கர்மபலஹேதுர்பூர்மா தே சங்கோஸ்த்வகர்மணி 

என்பது அந்த சுலோகம்.

கர்மண்யேவ அதிகார: தே – உனக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளையும் செயல்களையும் செய்ய மட்டுமே உனக்கு முழு அதிகாரம் (உரிமை) உண்டு.

மா பலேஷு கதாசன – செயலின் விளைவில் (பலனில்) உனக்கு முழுக் கட்டுப்பாடு இல்லை. பலன் என்பது ஈஸ்வரனின் பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டது.

மா கர்மபலஹேதுர்பூஹூ – செயலின் பலனை அனுபவிக்கும் பேராசையோடு செயல்படாதே. பலன் மீதான பற்றைத் துற.

மா தே சங்கோஸ்த்வகர்மணி: பலனில் அதிகாரம் இல்லை என்பதற்காகச் செயல்படாமல் சோம்பேறியாக உட்கார்ந்துவிடாதே. அகர்மத்திலும் உனக்குப் பற்று வேண்டாம்.

மேலும் கிருஷ்ணர் கர்ம யோகத்திற்கு இரண்டு புகழ்பெற்ற வரையறைகளையும் அளிக்கிறார். “ஸமத்வம் யோக உச்யதே” – வெற்றியோ தோல்வியோ, இன்பமோ துன்பமோ, எல்லாச் சூழல்களிலும் மனத்தைச் சமநிலையில் வைப்பதே ‘யோகம்’ (கர்ம யோகம்) எனப்படுகிறது. எந்த ஒரு செயலுக்கும் வெற்றி, தோல்வி என்ற இருவிதமான முடிவுகள் உண்டு. வெற்றி வந்தால் அகமகிழ்ந்து போவதும், தோல்வியில் துவண்டு போவதும் பொதுவாக நிகழக்கூடிய நிகழ்வுகள். ஆனால் எவனொருவன் எந்த ஒரு செயலையும் எந்தப் பற்றுமின்றி வெற்றி, தோல்வி குறித்த எண்ணமின்றி செய்து வருகின்றானோ, வெற்றியால் வரும் இன்பங்கள் குறித்தும், தோல்வியால் வரும் துன்பங்கள் குறித்தும் கவலைப்படாமல் தொடர்ந்து செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறானோ அவன் யோகத்தில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அவனுடைய சமநிலையே யோகம் என்று வழங்கப்படுகிறது.

யோகத்தின் இன்னொரு வரையறை “யோக: கர்மஸு கௌசலம்”  என்பது. செயல்களை பந்தத்தை உருவாக்காத வகையில், மனச்சமநிலையோடு திறம்படச் செய்யும் கலையே ‘கர்ம யோகம்’ ஆகும். இங்கு செயலைத் திறம்படச் செய்தல் யோகம் எனப்படுகிறது.

கர்மயோகம் குறித்து இந்த நூலின் முற்பகுதிகளில் விரிவாகப் பார்த்திருக்கிறோம். கர்மயோகம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதல்ல. நமது அன்றாடச் செயல்களில் நாம் கொண்டிருக்க வேண்டிய பாவனையே கர்மயோகம் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். கடமைகளை ஆற்றும்போது செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணம் என்ற ஈஸ்வரார்ப்பண பாவனையும், செயல்களுக்கான பலன்களைப் பெற்றுக்கொள்ளும்போது இது இறைவன் பிரபஞ்ச நியதிகளுக்கேற்ப எனக்களித்துள்ள பலன் என்ற பிரசாதபுத்தி பாவனையும் கொண்டிருப்பதுதான் கர்மயோகம் எனப்படுகிறது. வேதாந்தக் கல்வியை அடைவதற்கான உளத்தூய்மையை கர்மயோகம் ஒருவனுக்கு அளிக்கிறது. இதுவே கர்மயோகத்தின் பலன் ஆகும். கர்ம யோகத்தைச் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒருவனது புத்தி அறியாமை என்ற குழப்பமான சேற்றைக் (மோக கலிலம்) கடந்து தெளிவடைகிறது. சாஸ்திரங்களைக் கேட்டுப் பெற்ற வறட்டு அறிவைத் தாண்டி, மனம் சலனமற்றுச் சாந்தமடைகிறது (நிஸ்சலபுத்தி:). அவ்வாறு மனம் தூய்மை அடைந்த பிறகே, ஒருவனால் ஆத்ம ஞானத்தை (அத்வைத அனுபூதியை) முழுமையாகப் பெற முடியும்.

ஆத்மஞானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும், மீண்டும் விளக்கமாகவும், அந்த ஞானத்தை அடைந்த ஞானியரை பலவாறாகப் புகழ்ந்தும் பேசுகிறார் கிருஷ்ணர். இதனால் ஆவல் தூண்டப்பட்ட அர்ஜூனன் அந்த ஞானியர் எவ்வாறு இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று கேட்கிறான். ஞானிக்கு ஸ்திதப்ரக்ஞன் என்ற பெயரை அவனே கொடுக்கிறான். “ஸ்தித” என்பதற்கு உறுதியான அல்லது நிலைபெற்ற என்று பொருள். “பிரக்ஞா” என்பதற்கு ஆத்மஞானம், தெளிவு என்று பொருள்.

அர்ஜுனன் கிருஷ்ணரிடம் ஒரு ஞானியின் புற மற்றும் அக அடையாளங்களைத் தெரிந்துகொள்ள நான்கு கேள்விகளைக் கேட்கிறான். எப்போதும் சமாதி நிலையில் இருக்கும் ஞானியின் அடையாளம் (இலக்கணம்) என்ன? அவன் எவ்வாறு பேசுவான்? (அவனது சொற்கள் எப்படிப்பட்டவை?) அவன் எவ்வாறு அமர்வான்? (மனதை வெளிப்புறப் பொருட்களிலிருந்து எப்படி விலக்கி வைப்பான்?) அவன் எவ்வாறு உலவுவான் அல்லது செயல்படுவான்? (உலகியல் விஷயங்களில் அவனது நடத்தை எப்படி இருக்கும்?). இந்தக் கேள்விகளுக்கு பதிலாக கிருஷ்ணர் ஒரு ஸ்திதப்ரக்ஞனின் அகம் செயல்படும் விதம் குறித்தும், அவனது புறச்செயல்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் குறித்தும் விரிவாக விளக்குகிறார்.

முதலில் ஒரு ஸ்திதபிரக்ஞன் தன் மனதிலிருக்கும் அனைத்து ஆசைகளையும் முற்றிலுமாகத் துறந்தவன். அவன் தனது மகிழ்ச்சிக்காக வெளிப்புறப் பொருட்களையோ, மனிதர்களையோ, சூழ்நிலைகளையோ நம்பியிருப்பதில்லை. ஒரு ஸ்திதப்ரக்ஞன் தன் ஆத்மாவிலேயே தானாகவே நிறைவடைந்து வாழ்பவன்  (ஆத்மந்யேவ ஆத்மனா துஷ்ட:) என்று கூறுகிறார். மேலும் துன்பங்கள் வரும்போது அவனது மனம் கலங்குவதில்லை; இன்ப சூழ்நிலைகள் வரும்போது பேராசைகொண்டு துள்ளிக்குதிப்பதில்லை; அவன் பற்று, அச்சம், சினம் ஆகிய மூன்று மன விகாரங்களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டவன் என்கிறார். எப்படி ஒரு ஆமை ஆபத்து வரும்போது தன் சகல உறுப்புகளையும் தன் கெட்டியான ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ளுமோ அதுபோல, ஸ்திதபிரக்ஞன் புலன் இன்பங்களைத் தரும் பொருட்கள் எதிரே வந்தாலும், தன் புலன்களைத் தன் வசப்படுத்தி அகமுகமாகத் திருப்பிக் கொள்கிறான். தன்னையறியாத மனிதன் புலனின்பங்கள் தரும் பொருட்களைத் தவிர்க்கலாம், ஆனால் ஆசை என்னும் ரசம் அவன் மனதிற்குள் இருக்கும். ஆனால், பரம்பொருளான ஆத்மாவையே நேரில் உணர்ந்த ஸ்திதபிரக்ஞனுக்கு, உலகியல் பொருட்கள் மீதான சுவை வேரோடு அழிந்துவிடுகிறது.

ஞானிக்கும், பிறருக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்த கிருஷ்ணர் ஓர் அழகிய உருவகத்தைப் பயன்படுத்துகிறார். “எல்லா உயிர்களுக்கும் எது இரவாக இருக்கின்றதோ அதில் ஞானி விழித்திருக்கிறான்; அவ்வுயிர்கள் எதில் விழித்திருக்கின்றனவோ அது அவனுக்கு இரவாக இருக்கின்றது.” என்று கூறுகிறார். ஞானி புலன்களை வென்று விடுவதால் அவனுக்கு இந்த உலகக்காட்சிகளும், அவற்றின் பொருட்களும் இரவைப்போலத் தோற்றமளிக்கின்றன. அதாவது அவனைப் பொறுத்தவரை அவை வெறும் மாயத்தோற்றமே. ஆனால் உலகம் அவற்றின் பின்னால்தான் ஓடியபடியிருக்கிறது. எனவே இவ்வுலகத்தைப் பொறுத்தவரை அவை அவர்களுக்குப் பகலைப் போன்றவை. அத்வைத தத்துவமோ ஞானிக்குப் பகலைப்போலத் தெளிவாக விளங்கக் கூடியது. உலகமக்களுக்கு அத்வைத தத்துவம் பற்றிய புரிதல் சிறிது கூட இல்லாததால் அது அவர்களுக்கு இரவாகத் தோற்றமளிக்கிறது. 

எப்படி நதிகள் எப்போதும் வந்து தன்னை அடைந்து கொண்டிருந்தாலும் கடல் தன் எல்லையைத் தாண்டாமல், அமைதியாக இருக்கிறதோ, அதுபோல உலகியல் விஷயங்களும் ஆசைகளும் ஸ்திதபிரக்ஞனின் மனதிற்குள் வந்தாலும், அவை அவனைப் பாதிப்பதில்லை. அவனே சாந்தி எனப்படும் உண்மையான அமைதியை அடைகிறான். இந்த நிலையை அடைந்த ஒருவன் மீண்டும் அறியாமை எனும் மோகத்தில் வீழ்வதில்லை. அவன் வாழ்வின் இறுதி வினாடியில் இந்த நிலையை அடைந்தால் கூட, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு பிரம்ம நிர்வாணம் எனப்படும் மோட்சத்தை அடைகிறான் என்று கூறுகிறார் கிருஷ்ணர்.

கனவில் இருக்கும் போது கனவில் காண்கிற பொருள்களுக்கும், அங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தவுடனே கனவைப்பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்கு நனவில் மதிப்பில்லை. அதுபோல கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என கூறப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய நிலைகளைப்பற்றிய மயக்கம் கிடையாது. மனம் மொழிக்கு எட்டாத இந்த பேரானந்தப் பெருநிலையிலிருந்து கீழே இறங்கிவந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். பிரம்ம நிர்வாணம் அடைதலே ஜீவனின் குறிக்கோளாகும். இறக்கும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாகும். விடுதலையென்றும், வீடுபேறு என்றும் இதைச் சொல்வதுண்டு.

இப்படிப்பட்ட ஸ்திதப்ரக்ஞ நிலையை ஒருவன் அடைவதெப்படி? அதற்கான வழியாக ஒரு சுலோகத்தை அளிக்கிறார் கிருஷ்ணர். “எவன் ஆசைகளை அறவே அகற்றி, பற்றற்று அகங்கார, மமகாரமின்றி நடமாடுகின்றானோ அவன் மோக்ஷத்தை அடைகின்றான்” என்று கூறுகிறார். அகங்காரம் என்றால் நான் என்ற அகந்தை. மமகாரம் என்றால் என்னுடையது என்ற உணர்வு. இரண்டையும் விட்டவன்தான் அகவிடுதலையடைகிறான் என்று கூறுகிறார் கிருஷ்ணர். தன்னிடத்திலேயே திருப்தியடைந்தவனாக இருப்பதால் தனது மகிழ்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அவன் வேறு எதையும் சார்ந்திருப்பதில்லை.

‘நானே அனைத்துமாக இருக்கிறேன்’ என புரிந்தவனுக்கு ‘என்னுடையது’ என்ற புத்தியும், மேலும் ‘நான்’ என்ற தனிப்பட்ட உணர்வும் கூட இருப்பதில்லை. சிலர் இதை தற்பெருமையாகப் பார்க்கக்கூடும். ஆனால் இது தற்பெருமை அல்ல. செறுக்கு, கர்வம் மற்றும் ‘இவைகளனைத்தும் என்னுடையது’ என ஒருவர் தனது உடைமை, கொள்திறன், செல்வம், பதவி, திறமை முதலியவற்றை அளவுகோலாகக் கொண்டு இனியொருவருடன் ஒப்பீடு செய்தலின் விளைவாக எழும் அகங்காரத்தினால்தான் தற்பெருமை உண்டாகிறது. ஆனால் ஞானிக்கோ தனக்கு வேறாக எதுவுமே இல்லாமற் போனதால், அங்கு அகங்காரமும் முற்றிலும் இல்லாமற் போகிறது. அவனைப் பொறுத்தவரை பிரம்மம் மட்டுமே சத்தியமாக உள்ளது.

இந்த சுலோகத்தில் பகவான் ‘நடமாடுகிறான்(சரதி)’ எனும் சொல்லை மிக அழகாக உபயோகிக்கிறார். ஞானி இவ்வுலகிலிருந்து விலகி ஓடுவதில்லை. அனைத்து ஆசைகளையும் விட்டவனாக, அவன் பல்வேறு செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இந்த உலகம் தன்னுள் நுழையும் போதும், அல்லது தான் இந்த உலகச் செயல்களில் ஈடுபடும் போதிலும் ஸ்திதப்ரக்ஞனிடம் சாந்தி மட்டுமே உள்ளது. உலக விவகாரம் ஸ்திதப்ரக்ஞனின் அறிவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அவனிடம் ‘நான் செய்பவன்’ அல்லது ‘நான் அனுபவிப்பவன்’ என்ற எண்ணம் இல்லாததால் அவன் மோட்சத்தை அடைகிறான்.

“கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்ததென்பது உங்களது கருத்தெனில், என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்?” என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான். அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக கிருஷ்ணர் இரண்டு விதமான வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒருவன் வீடுபேற்றை அடைவதற்கு முக்கியமான சாதனம் ஞானயோகமேயாகும். அந்தச் சாதனையை இருவித மார்க்கங்களில் ஏதாவது ஒன்றிலிருந்தபடி மேற்கொள்ளலாம். பிரவிருத்தி மார்க்கம், நிவிருத்தி மார்க்கம் ஆகியன அவ்விரு மார்க்கங்களாகும். பிரவிருத்தி மார்க்கம் எனப்படுவது கிருஹஸ்தம் எனப்படும் இல்லற வாழ்க்கை முறையாகும். ஞானயோகத்தைப் பயில்வதற்குத் தேவையான மனத்தூய்மையை ஒருவன் இல்லறத்திலிருந்தபடி கர்மயோகம் புரிந்து அடைகிறான். பின்னர் இல்லறத்திலிருந்தபடியே ஞானயோகசாதனையும் புரிந்து வீடுபேற்றை அடைகிறான். இது ஒரு வழிமுறை. சிலர் இவ்வுலக வாழ்க்கையின் மீதான வைராக்யத்தின் காரணமாக நிவிருத்தி மார்க்கமான துறவறத்தைத் தங்கள் வாழ்க்கைப்பாதையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். துறவறத்தில் அவர்கள் புரியும் குருசேவை போன்ற கர்மங்களின் மூலம் ஞானயோகத்துக்குத் தேவையான மனத்தூய்மையை அடைந்து ஞானயோகம் புரிந்து வீடுபேற்றையும் அடைகிறார்கள். இதில் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு தெரிவிக்க விரும்பியது என்னவென்றால் வாழ்க்கை முறையே ஒருவனுக்கு மோட்சத்தைக் கொடுக்காது. மாறாக சாதனையே மோட்சத்தை நிர்ணயிக்கிறது. இல்லறத்தில் இருந்து கொண்டும் ஞான யோகத்தை மேற்கொண்டு ஒருவன் மோட்சத்தை அடையலாம் என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.

இங்கு சந்யாசிகளை “சாங்கியர்கள்” என்ற சொல்லில் அழைக்கிறார். இந்தச் சொல்லுக்கும் சாங்கிய மதத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. ‘சாங்க்ய’ எனும் சொல்லின் பொருள் அறிவு அல்லது ஞானம். கிருஷ்ணர் கீதையில் அதை சந்யாசம் என்ற பொருளிலும் பயன்படுத்துகின்றார். ஞானத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர்கள் சாங்கியர்கள் என்றும், எல்லா உபநிஷத்துகளிலும் தெளிவாக விளக்கப்படும் வேதாந்தத்தின் மைய விஷயமான இந்த ஞானம் சாங்க்யம் என்றும் கூறப்படும். வேதாந்தத்தின் ஒரே முக்கிய கருத்து ‘ஆத்மாவே ப்ரம்மன்’ என்பதால் சாங்க்யம் என்ற ப்ரம்மத்தையும் குறிக்கும். மேலும் பிரம்மத்தை ‘சாங்க்யம் ப்ரம்ம’ என்றும், பிரம்மத்தை பற்றிய ஞானத்தை சாங்க்யம் என்றும், அந்த ஞானத்தை பின்தொடர்பவர்களை சாங்க்யர்கள் என்றும் அழைக்கலாம்.

மனத்தூய்மை இல்லாதவன் கர்மத்தை துறப்பது என்பது இயலாது. அனைத்து உயிர்களும் பிரகிருதி எனப்படும் இயற்கை மற்றும் முக்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதால் மனிதனால் ஒரு நொடி கூட செயலாற்றாமல் இருக்க முடியாது. நில்லாது சுழன்று கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்ச சக்கரத்தில் மனிதன் ஓர் இன்றியமையாத பகுதி. இந்த இயற்கை நமக்கு எல்லாவற்றையும் தருகிறது. அதற்கு பதிலாக மனிதன் பற்றின்றித் தன் கடமைகளைச் செய்வதை கிருஷ்ணர் யக்ஞம் என்று அழைக்கிறார். எனவே கிருஷ்ணர் அர்ஜூனனைக் கர்மயோகம் செய்யுமாறே பணிக்கிறார். பற்றுடன் செய்யப்படும் எந்தச் செயலும் ஒருவனை பந்தத்தில் ஆழ்த்தும். பற்றின்றி செய்யப்படும் கர்மயோகமே ஒருவனை விடுவிக்கும் என்று கூறுகிறார். ஞானி ஒருவனுக்குத்தான் செயல் செய்யவும், செய்யாதிருக்கவும் உரிமை இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் ஞானியும்கூட உலகத்தின் நன்மை கருதி தன் பிராரப்தம் முடியும்வரை அதற்குரிய செயலை ஆற்றியபடியே இருப்பான் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். ஞானி புரியும் செயல்களை “லோகசங்கிரஹம்” என்று அழைக்கிறார்.

பின்னர் கிருஷ்ணர், ஞானி கர்மத்தின் வகையறிந்தவன் என்று கூறி கர்மத்தின் வகைகளை விளக்குகிறார். அறவழியில் ஆற்றப்படும் செயல்களனைத்தும் கர்மம் என்ற சொல்லாலும்,  அதர்மமான, விலக்கப்பட்ட செயல்களனைத்தும் விகர்மம் என்ற சொல்லாலும் குறிப்பிடப்படுகின்றன. கர்மத்தின் மூன்றாவது வகை அகர்மம் எனப்படுகிறது. நேரடியாக இதற்கு செயலற்ற நிலை என்று பொருள். ஆனால் கிருஷ்ணர் இதற்கு ஒரு அற்புதமான விளக்கத்தை அளிக்கிறார். தன்னுடைய உண்மையான இயல்பான ஆத்மசொரூபத்தில் நிலைபெற்ற ஞானி செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், தான் செயல்புரியாதவன் என்ற அறிவோடு இருப்பான். இந்த நிலையைத்தான் கிருஷ்ணர் அகர்மம் என்று குறிப்பிடுகிறார்.

“எவன் ஒருவன் உடலும் மனமும் இயங்கும்போது அந்தச் செயல்களுக்குள் செயலற்ற தன்மையையும், செயலற்று வெறுமனே அமர்ந்திருக்கும் போதும் அந்த நிலையில் செயலையும் காண்பானோ, அவனே மனிதர்களுக்குள் உண்மையான புத்திமான். அவனே யோகி. அவனே தன் அனைத்துக் கடமைகளையும் செய்து முடித்த நிறைவு பெற்றவன் ஆவான்.” என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார்.

 ஒரு ஞானி கை, கால், உடல் மற்றும் மனதால் உலகியல் கடமைகளையும், போரையும் கூடச் செய்யக்கூடும். ஆனால், அவனது அக உணர்வில் “உடல், மனம், புலன்கள் மட்டுமே இயங்குகின்றன; நான் இவற்றிற்கு சாட்சியாக இருக்கும் செயலற்ற, மாற்றமில்லாத ஆத்மா (அகர்த்தா)” என்று தெளிந்திருப்பான். எனவே, வெளியில் ஆயிரம் செயல்கள் செய்தாலும் அவன் ஆத்ம சொரூபத்தில் செயலற்றவனாகவே இருக்கிறான். இதையே “கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல்” என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். ஒருவன் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டுக்கொண்டு, “நான் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறேன்” என்று நினைத்தால் அது செயலற்று இருத்தல் அல்ல. செயலின்றி இருக்கும்போதும் அவனது மனமும், அகங்காரமும் ஆசைகளோடும் எண்ணங்களோடும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். இந்த வெளிப்புறச் செயலற்ற தன்மையிலும் கர்மமும், அகங்காரமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதை ஞானி உணர்கிறான். இதுவே “அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல்.”

யக்ஞம் என்றால் யாகம் என்று பொருள். கிருஷ்ணர் பற்றின்றி ஆற்றப்படும் செயலை யக்ஞம் என்றே அழைக்கிறார். யோகம், தியானம், பிராணயாமம், சேவை போன்ற செயல்களையும் அவர் யக்ஞம் என்றே வகைப்படுத்துகிறார். ஆனால் எல்லா யக்ஞங்களையும்விட உயர்ந்தது ஞானயக்ஞமே என்று ஆத்மஞானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். “சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே” என்று கூறுகிறார். எல்லாக் கர்மங்களும் ஞானத்தில்தான் நிறைவடைகின்றன. 

ஆத்ம சொரூபத்தில் பொருந்திய தத்துவஞானி பார்க்கும்போதும்,   கேட்கும்போதும், தீண்டும்போதும், நுகரும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், உறங்கும்போதும், சுவாசிக்கும்போதும், பேசும்போதும், மலம் கழிக்கும்போதும், ஒன்றைப் பிடிக்கும்போதும், கண் திறக்கும்போதும், கண்மூடும்போதும் புலன்கள் அந்தந்த புலன்களின் விஷயங்களில் போகின்றன என்று நிச்சயம் செய்தவனாக ‘நான் ஒன்றையும் செய்யவில்லை’ என நினைக்கிறான். எனவே அவன் எந்தச் செயல் செய்தாலும் செயல் செய்யாதவனாகவே ஆகிறான்.

“‘கர்மயோகமும், கர்மத்தைத் துறத்தலான சன்யாசமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனியான பாதைகள்’ என்று அறியாத குழந்தைகள்தாம் கூறுவார்கள். ஆனால் சாஸ்திரம் அறிந்த அறிஞர்கள் அவ்வாறு கருதுவதில்லை. இரண்டில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுபவர்கள் இரண்டினுடைய பலனையும் பெறுகிறார்கள்,” என்று இன்னொரு இடத்தில் கூறுகிறார். எவனொருவன் யாரையும் வெறுப்பதுமில்லையோ, விரும்புவதுமில்லையோ அவனே உண்மையான நித்ய சன்யாசி ஆவான். அவனே இரட்டைகளிலிருந்து விடுபட்டு எளிதில் வீடுபேற்றை அடைகின்றான் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அதேபோல கர்மயோகம் புரிந்து மனத்தூய்மையை அடையாமல் நேரடியாக பூணப்படும் துறவு துக்கத்தையே அளிக்கும் என்கிறார்.

தியான யோகம் என்றழைக்கப்படும் ஆறாவது அத்தியாயத்தின் துவக்கத்தில் கிருஷ்ணர் கர்மயோகியையும், சன்யாசியையும் ஒப்பீடு செய்கிறார். எவனொருவன் செயலின் மீதும் அதன் பலன் மீதுமுள்ள பற்றைத் துறந்து தன் செயல்களை ஆற்றி வருகிறானோ அவனே யோகி என்றும், சன்யாசி என்றும் அறியப்படுகிறான்; செயலைச் செய்யாது விட்டவனோ, அக்னியை விட்டவனோ அல்ல என்று கூறுகிறார். இங்கு அக்னியை விட்டவன் என்பது சன்யாசியைக் குறிக்கிறது. சன்யாசி தனக்கென உணவு சமைக்க நெருப்பை வளர்க்காதவன் என்பதால் இவ்வாறு கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். யோகப்பாதையில் முன்னேற விரும்புபவனுக்கு கர்மயோகமே ஏணியாக அமைகிறது. கர்மயோகத்தால் மனத்தூய்மை வாய்த்து தியானத்தில் அமர்பவனுக்கு அந்த அமைதியே யோகமாகிறது. வெளிமுகமாக இருக்கும் மனதை உள்முகமாக மாற்றி, தியானத்திற்குத் தேவையான மனக் கட்டுப்பாட்டையும் ஒருமுகத் தன்மையையும் கர்மயோகமே தருகிறது என்று கூறி அர்ஜூனனை கர்மயோகம் புரியுமாறு வலியுறுத்துகிறார் கிருஷ்ணர்.

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.