அமெரிக்க இசை பிறந்த கதை
தங்க வேட்டை
1848, ஜனவரி 24. கலிஃபோர்னியா, அமெரிக்கா.
கலிஃபோர்னியாவின் கொலோமா பகுதியில் அன்று சூரியன் சோம்பேறித்தனமாக உதித்தது. சியேரா நெவாடா மலை அடிவாரத்தில் ஜேம்ஸ் மார்ஷல் , சடர் மர அறுவை ஆலையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
அந்த ஆலை அப்போதுதான் உருவாகிக் கொண்டு வந்தது. மார்ஷல் அந்த ஆலையின் கூட்டாளி. ஆற்றின் நீரோட்டத்தைப் பயன்படுத்தி இயங்கும் ஆலை அது. அப்போதுதான் அந்த ஆலை கட்டமைக்கப் பட்டுக்கொண்டிருந்தது. பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பணிகளைப் பார்வையிட நடந்தபடி ஆலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார் மார்ஷல். அப்படி அவர் ஆற்றின் கரையில் நடந்து கொண்டிருந்தபோது, கூழாங்கற்களிடையே ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டார்.
ஆர்வத்துடன் குனிந்து அமர்ந்து தன் கையினால் அந்தக் கூழாங்கற்களை அள்ளி எடுத்தார். கைகளில் மின்னிக் கொண்டு இருந்த மெல்லிய, மஞ்சள் நிற, மினுமினுக்கும் அந்தச் சிறு தட்டுகளை, கற்களில் தேய்த்துப் பார்த்தார். சட்டென மின்னல் போல் பிரகாசமானது அவர் முகம். அவர் கைகளில் இருந்த அந்தப் பொருள், தங்கம்!
மார்ஷலும் அவர் கூட்டாளி ஜான் சடர் இருவரும் இந்தச் செய்தியை ரகசியமாக வைத்துக் கொள்ள முடிவுசெய்தனர். ஆனால் ரகசியம் கசிந்தது. சில வாரங்களில் கலிஃபோர்னியாவின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் தங்கம் தேடி அங்கு வந்தனர். சில மாதங்களில் உலகெங்கிலும் இருந்து மக்கள் தங்க வேட்டைக்கு கலிஃபோர்னியாவிற்கு வந்திருந்தனர்.
1848 க்குள் கலிஃபோர்னியாவின் அந்நியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கானது. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சேரத் தொடங்கியிருந்தனர். சான் ஃபிரான்சிஸ்கோ துறைமுகத்தில் வந்து சேர்ந்த கப்பல்கள் திரும்பிச் செலுத்த ஆளில்லாமல் நின்றிருந்தன. மாலுமிகள் சுரங்கத் தொழிலாளர்களாக மாறியிருந்தனர். வியாபாரிகள், வேளாண் தொழில் செய்தோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என தங்க வேட்டையின் தாகம் எவரையும் விட்டு வைக்கவில்லை.
மெக்ஸிகோவிலிருந்து வெள்ளிச் சுரங்க வேலையில் அனுபவம் கொண்டவர்களும், சீனாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கும், சிலி, பெரு, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வந்திருந்த மக்களும் என, அடுத்த ஐந்து வருடங்களில் சுமார் மூன்று லட்சம் பேர் கலிஃபோர்னியாவுக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் தங்களுடன் தங்கள் பாடல்களைக் கொண்டுவந்திருந்தனர்.

ஓ! சுஸானா
1849 மே மாதம். சியேரா நெவாடா முகாம்.
விடியத் தொடங்கி இருந்தது. கூடாரங்களில் தங்கி இருந்தவர்கள் விழித்துக் கொள்ளத் தொடங்கினர். கண் விழித்தவுடன் அவர்கள் நினைவுக்கு வருபவை அவர்களது தொலை தூர வீடுகளும், குடும்பங்களும். மறுகணமே அவர்களின் நினைவுக்கு வருவது அவர்கள் தேடி வந்திருக்கும் தங்கம் தரக்கூடிய வளமான எதிர்காலம்.
அங்கு பேச்சுக் குரல்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ், சீனம் என்று பல மொழிகளில் கலவையாகக் கேட்டன. அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் வந்திருந்த அவர்கள் அன்றைய நாளின் தங்க வேட்டைக்குத் தயாராகினர்.
வேலை முடிந்து அவர்கள் முகாமிற்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் களைத்திருந்தனர். நீரோட்டத்தின் தடுப்பில் படிந்திருந்தவற்றைச் சுரண்டல், கூழாங்கற்களைத் துழாவுதல், மண்ணைச் சலித்தல் என நாள் முழுதும் வேலை செய்திருந்தனர். கைவிரல்களில் ஏற்பட்டிருந்த கீறல் காயங்கள் வேலை முடிந்த பின்னரே வலித்தன. அப்படி வலித்திருக்காத காயங்கள் ஏற்கனவே தழும்புகளாகி இருந்தன. சிலரின் முதுகு வலி மாதங்கள் ஆகியும் குறையவில்லை.
தன் விரலில் இருந்த காயத்தைச் சுத்தப்படுத்திக் கொண்ட சாம்யுவல், ஃபாஸ்டனில் இருந்து வந்திருந்தார். ஒரு கப்பல் நிறுவனத்தில் எழுத்தராக வேலைபார்த்து வந்த சாம்யுவல், செய்தித்தாள்களில் தங்க வேட்டை பற்றிய செய்திகளைப் படித்திருந்தார். பல வாரங்கள் சிந்தித்து, சாதக பாதகங்களைக் கணக்குப் போட்டுப் பார்த்து, அங்கு வந்து சேர்ந்திருந்தார். மென்மையாக இருந்த அவர் கைகள் இப்போது காய்ப்பேறி இருந்தன. மடிப்பு கலைந்திருக்காத ஆடைகள் இப்போது மண் மண்டியிருந்தன.
தங்க வேட்டை பற்றிய கதைகளால் கவரப்பட்ட லீ, சீனாவின் குவாங்டாங் பகுதியிலிருந்து வந்திருந்தார். அமெரிக்கர்கள் கைவிட்ட சுரங்கப் பகுதிகளில் பணி செய்வது இவரது பாணி. இவருக்கு, தங்கம், தண்ணீர் போன்ற ஓரிரு வார்த்தைகள் தவிர ஆங்கிலம் தெரியாது.
மெக்ஸிகோவில் இருந்து வந்திருந்த மரியா, வெள்ளிச் சுரங்க அனுபவம் கொண்ட தனது சகோதரர்களுடன் வந்திருந்தாள். அவள் சகோதரர்களின் அனுபவத்தின் முக்கியத்துவம் இப்போது குறைந்திருந்தது. இப்போது முன்போல் எளிதில் தங்கம் கிடைப்பதில்லை.
தீ மூட்டி அதைச் சுற்றி ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கி இருந்தனர். சூரியன் மறைந்து மெல்லக் குளிர் சூழத் தொடங்கி இருந்தது. யாரோ ஒருவர் பாடத் தொடங்கினார்.
பயிற்சி இல்லாத குரல் என்பது உச்ச ஸ்தாயியில் தெரிந்தது. அவரிடம் ஒரு கிட்டார் இருந்தது. அதுவும் சரியாகச் ஸ்ருதி சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், அங்கு குரலோ ஸ்ருதியோ முக்கியமானவையல்ல.
“ஓ! சுஸானா…”
ஒரு குரலாகத் தொடங்கிய பாடலில் ஒவ்வொருவராகச் சேர்ந்து கொண்டனர். சாம்யுவல் தன் கனமான குரலில் அந்தப் பாடலைத் தானும் சேர்ந்து பாடத் தொடங்கினார். ஆங்கிலம் பேசாத அந்நிய நாட்டுக்காரர்களும் கூட அந்தப் பாடலின் மெட்டை முணுமுணுக்கத் தொடங்கினர். ஒருவர் பின் ஒருவராக இணைந்து கொள்ள, சற்று நேரத்தில், “ஓ சுஸானா!” என்ற அந்தப் பாடல் ஒரு பேரலை போல் எழுந்து, சியேரா நெவாடா மலையில் எதிரொலித்தது.
பாடல் முடிவடைந்தபின் தன் கண்களை மூடியிருந்த சாம்யுவலின் மனம் அந்தப் பாடலில் இருந்து விடுபட்டிருக்கவில்லை. இந்தப் பாடலை எழுதி இசையமைத்த ஸ்டீஃபன் காலின்ஸ் ஃபாஸ்டரை அங்கிருந்த அனைவரும் அறிவர். ஃபாஸ்டரின் அந்தப் பாடலை, அங்கிருந்தவர்கள் கனவுகளைத் தேடி நீண்ட பயணத்தில் இருக்கும் தங்கள் மன உணர்வை வெளிப்படுத்தும் பாடலாகப் பார்த்தனர். அந்தப் பாடலே அவர்களின் வழித் துணையானது.
சாம்யுவல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மரப் பீப்பாயின் மேல் அமர்ந்தவாறு, முந்தைய நாளில் கிடைத்திருந்த அந்த ‘அல்டா கலிஃபோர்னியா’ செய்தித்தாளை விரித்துப் படிக்கத் தொடங்கினார். அப்போதுதான் போர் முடிந்து, கலிஃபோர்னியா மெக்ஸிகோவிடமிருந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு வந்திருந்தது. செய்தித்தாளில் பரபரப்பான அரசியல் சூழல் பற்றிய செய்திகள் நிறைந்திருந்தன. இந்தப் பரபரப்பான சூழலில், ஸ்டீஃபன் ஃபாஸ்டரின் அந்தப் பாடல் தன்னை ஒரு தனி உலகத்திற்கு அழைத்துச் சென்றதை எண்ணி வியந்தார் சாம்யுவல். அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.
அவர்கள் இரவு உணவு அருந்தியபோது தங்களுக்குள், ஒட்டுப் போடப்பட்ட மொழியில் அன்றைய கதைகளைப் பேசிக்கொண்டனர். மீண்டும் “ஓ சுஸானா” என்று ஒரு குரல் பாடத்தொடங்கியது. மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் ஸ்டீஃபன் ஃபாஸ்டரின் சில பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பாடத்தொடங்கினர். ஃபாஸ்டரின் அந்தப் பாடல்கள் அவர்களது களைத்துச் சலித்த மனங்களைத் தழுவின. பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருத்த அவர்களை ஒன்றாகப் பிணைத்தது.
தங்கள் வளமான எதிர்காலத்தைத் தங்கச் சுரங்கங்களில் கண்டடைந்து கொண்டிருந்த மக்களின் கலாச்சார அடையாளமாகி, தங்க வேட்டைக் காலத்தின் தேசிய கீதமானது.

அமெரிக்கப் பாடல்
ஸ்டீஃபன் ஃபாஸ்டர் உருவாக்கிய பாடல் மரபு என்னவென்று புரிந்து கொள்ள, நாம் ஃபாஸ்டர் காலத்திற்கு முன் இருந்த நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் .
1840 ல் அமெரிக்கர் ஒருவர் மூன்று வகை இசையை ரசிக்கலாம்.
முதலில் ஐரோப்பிய மரபிசை. சிம்ஃபனி, ஆபரா போன்றவை. நாம் இதுவரை பார்த்த பாக், மொஸார்ட் போன்றோர் இயற்றி, ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வந்திருந்த இசை. ஐரோப்பிய மரபில் பயிற்சி பெற்ற இசைக் கலைஞர்களைக் கொண்டு இசையரங்குகளில் இசைக்கப்படும் இசை. ஐரோப்பியக் கலாச்சாரத்தை, ஐரோப்பியக் குரலில் பேசும் இசை. அவை அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவத்திற்குத் தொடர்பற்றவை.
இரண்டாவதாக, தேவாலயங்களில் இசைக்கப்படும் இசை. இந்த வழிபாட்டிசை ஐரோப்பிய மரபிசை போன்றில்லாமல் மக்கள் பங்கெடுக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் அது பக்தி இசை. பொழுதுபோக்கு இசை அல்ல.
மூன்றாவது, நாட்டுப்புற இசை. ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட்டது. அது நினைவுகளில் இருந்து பாடப்பட்டது. எழுதி வைக்கப்பட்டவை அல்ல. ஒருவர் கடைக்குச் சென்று நாட்டுப்புற இசையின் இசைக் குறிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியாது. அன்றாட நடைமுறை வாழ்க்கையைச் சித்தரிக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, குடியேற்றத்தால் உருவாகி இருந்த ஒரு சமூகத்தின் பொது அடையாளமாக ஒரு நாட்டுப்புற இசை இருக்க முடியாது.
அத்தகைய அமெரிக்க அடையாளம் கொண்ட இசையை ஸ்டீஃபன் ஃபாஸ்டர் உருவாக்கினார். அவரது பாடல்கள் அமெரிக்க வாழ்க்கையை, அமெரிக்கக் குரலில் பாடின.
ஸ்டீஃபன் காலின்ஸ் ஃபாஸ்டர் 1826 ல் பென்சில்வேனியாவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு அரசியல்வாதி மற்றும் வணிகர். அவரது குடும்பத்திற்கும் இசைக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் மக்களின் இசை ரசனை, மனதில் நிற்கும் மெட்டுக்கள் போன்றவற்றைக் கவனிப்பது இளம் வயதில் இருந்தே அவருக்குப் பழக்கமாக இருந்தது. பாடல்களை உருவாக்குவதில் பயிற்சி செய்யவும் தொடங்கினார்.
ஃபாஸ்டரின் பாடல்கள் அமெரிக்கரின் அன்றாட வாழ்க்கை, சாலையில் நடந்து செல்லும்போது கடந்து சென்ற அழகான பெண், அன்றாட வாழ்வின் அபத்தங்கள் என ஐரோப்பிய இசை மரபு தொட்டிராத ஒன்றைத் தொட்டன.
ஃபாஸ்டரின் பாடல்களை யாரும் பாடலாம். இசைப்பயிற்சி தேவையில்லை. வேலை செய்யும்போதும், சமையல் செய்யும்போதும் பாடக்கூடிய பாடல்கள். அந்தப் பாடல்கள் அமெரிக்கர்களின் மனதிற்கு நெருக்கமாகின.
வீட்டில் நடக்கும் விருந்தின்போது ஒருவர் பாடலாம். பியானோவில் இசைக்கலாம். எங்கும் நுழைந்துவிடும் தன்மையே ஃபாஸ்டரின் பாடல்களின் வெற்றி. அமெரிக்காவின் முதல் “பாடகர்” ஃபாஸ்டர் என்று சொல்லலாம். ‘பாடகன்’ என்ற ஒரு தொழில் ஃபாஸ்டருக்கு முன் இருந்ததில்லை.
ஃபாஸ்டரின் காலத்தில் ஒலிப்பதிவு செய்யும் தொழில்நுட்பம் பிறந்திருக்கவில்லை என்பதனை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் அந்தப் பாடல்களை இசைக்குறிப்புகளாக வாங்கிக் கொள்ள முடிந்தது.
ஃபாஸ்டர் ஒரு பாடலை உருவாக்கியபின் அதனை ஒரு பதிப்பாளருக்கு விற்றுவிடுவார். அந்தப் பதிப்பாளர் பாடல் வரிகள் மற்றும் இசைக்குறிப்புகளை பதிப்பாக வெளியிடுவார். மக்கள் அதனை விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். அதுவே அன்றைய ஸ்பாட்டிஃபை (Spotify).
ஃபாஸ்டரின் பாடல்கள்
1848 ல் ஃபாஸ்டர் உருவாக்கிய பாடல் “ஓ! சுஸானா”. W.C. பீட்டர்ஸ் என்ற பதிப்பாளருக்கு விற்கப்பட்டது.
இந்தப் பாடலுக்கு ஃபாஸ்டர் பெற்ற தொகை நூறு டாலர்கள். அந்தப் பாடல் புகழ்பெற்றது. எளிய மெட்டு, சுரங்கம் தோண்ட வீடுகளை விட்டு வந்தவர்களின் மனத்தைத் தொட்ட பாடல் வரிகள். பாடல் இசைக்குறிப்புகள் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆனது. பதிப்பாளர் செல்வம் சேர்த்தார். ஃபாஸ்டர் பெற்ற நூறு டாலர்கள் செலவாகி மாதங்கள் ஆகியிருந்தது.
பதிப்பாளர் தேவைக்கேற்ப பிரதிகளை அச்சிடலாம். வேண்டிய அளவு விற்பனை செய்யலாம். பாடலின் வெற்றிக்கும் ஃபாஸ்டருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்போது விற்பனையில் படைப்பாளிக்கு ராயல்டி கொடுப்பது வழக்கமாக இருக்கவில்லை.
1850 களில் ஃபாஸ்டர் மேலும் தனது திறமையை மெருகேற்றிக் கொண்டார். பின் வந்த பல தலைமுறைகள் அமெரிக்க இசை என்று கருதிய இசை வடிவத்தை உருவாக்கினார்.
அவரது பல பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன. அவர் கலை மேலும் மேலும் மெருகேறியது. ஒரு கட்டத்தில் பதிப்பாளர்களிடம் புத்திசாலித்தனமான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் கற்றுக்கொண்டார். வாழ்க்கை கஷ்டங்கள் இல்லாமல் இருந்தது.
1850 ல் ஃபாஸ்டர் திருமணம் செய்துகொண்டார். ஒரு மருத்துவரின் மகள். நிச்சயமற்ற வருமானம் கொண்ட ஒரு கலைஞனுக்கு அது பெரிய இடத்து சம்பந்தம். மனைவி ஜேன், பாடகன் ஃபாஸ்டரின் நிலையற்ற வருவாயால் கலக்கமுற்றார். நிலையான வருவாய், குறிப்பிட்ட வேலை நேரம், நாலு இடங்களுக்குத் தன்னைக் கூட்டிச் செல்லும் கணவன் என்று எதிர்பார்த்த ஜேனினால் ,கணவன் ஃபாஸ்டரின் தொழிலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும், பிரிந்தனர். பின்னர் ஒன்று சேர்ந்தனர். மீண்டும் பிரிந்தனர்.
திருமணம் ஆன அடுத்த வருடத்தில், ஜேன் மகள் மரியனை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்றார். ஜேன் விரும்பிய வாழ்க்கையை ஃபாஸ்டரால் கொடுக்க முடியவில்லை. ஜேன் பிரிந்து சென்றபின் ஃபாஸ்டரின் வாழ்க்கை அலைக்கழிப்பானது. பாடல்களில் சில மட்டுமே வெற்றிபெற்றன. பதிப்பாளர்கள் கொடுத்ததை வாங்கிக் கொள்ளப் பழகி இருந்தார். இருபத்தொரு வயதில் “ஓ! சுஸானா” என்ற வெற்றிப் பாடலைக் கொடுத்த ஃபாஸ்டர், முப்பது வயதில் குடிகாரராய் மாறியிருந்தார்.
அமெரிக்க இசையின் தந்தை என்று அழைக்கப்படும் அந்த மனிதனை அந்த இசையே சிறிது சிறிதாகக் கொன்றுகொண்டிருந்தது.
நண்பர்களே, நல்லிதயங்களே
1864 ஜனவரி 10, நியூயார்க் நகரம்.
கூப்பர் தனது நண்பன் ஃபாஸ்டரைச் சந்தித்து அன்றோடு பத்து நாட்கள் ஆகியிருந்தன. கூப்பர் ஒரு இசைக்கலைஞன். அவ்வப்போது ஃபாஸ்டருடன் சேர்ந்து பணியாற்றும் கலைஞன். ஃபாஸ்டர் பத்து நாட்கள் வரை கண்ணில் படாமல் இருந்தது கூப்பருக்குக் கவலை அளித்தது. ஃபாஸ்டரை வழக்கமாகச் சந்திக்கும் இடங்களில் சந்திக்க முடியவில்லை. ஃபாஸ்டர் உடல் நிலை, அதிகரித்திருந்த குடிப்பழக்கம் இவை குறித்துக் கவலை கொண்ட கூப்பர், நகரெங்கும் ஃபாஸ்டரைத் தேடிக்கொண்டிருந்தார்.
ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக யாரோ சொன்ன தகவல் கேட்டு அங்கே சென்ற கூப்பர், படியேறும்போது அந்த அறையின் கதவு திறந்திருந்ததைப் பார்த்தார். கதவைத் திறந்த கூப்பர் கண்ட காட்சி அதிர்ச்சியானது. ஃபாஸ்டர் நினைவின்றித் தரையில் விழுந்து கிடந்தார். அவரைச் சுற்றி ரத்தம் பெருகியிருந்தது.
உதவிக்கு ஆட்களை அழைத்த கூப்பர் ஃபாஸ்டரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். காயங்களுக்கு மருத்துவம் செய்த மருத்துவர், கடுமையான காய்ச்சல் காரணமாக நடந்து செல்லும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டிருக்கலாம் என்று சொன்னார்.
நினைவின்றி மருத்துவமனையில் இருந்த ஃபாஸ்டர் அவ்வப்போது கண்விழித்து கூப்பரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார். மூன்றாம் நாள் இறந்து போனார். அப்போது அவரது வயது முப்பத்தேழு.
நைந்து போன ஆடைகள், துணிப்பை, 38 சென்ட் நாணயங்கள், ஒரு துண்டுக் காகிதம். இவையே ஃபாஸ்டர் விட்டுச் சென்றிருந்தவை. அந்தக் காகிதத்தில் “நண்பர்களே, நல்லிதயங்களே” என்று எழுதத் தொடங்கி முடிக்கப்படாமல் இருந்தது. அது புதிய பாடலாக இருக்கலாம். அல்லது ஒரு கடிதமாக இருக்கலாம். யாருக்கும் தெரியவில்லை.
அமெரிக்க பாப் இசையின் தந்தை என்று அழைக்கப்படும் அந்த மனிதர் முப்பத்தெட்டு சென்ட் நாணயங்களுடன் இறந்து போனார்.
நாணயத்தின் மறுபக்கம்
ஃபாஸ்டர் இறந்தபோது ஹாரிஸின் வயது பன்னிரண்டு.
ஹாரிஸ் சிறிய மில்வாகி (Milwaukee) நகரில் பிறந்து வளர்ந்தவர். நியூயார்க்கில் இருந்து வெகு தொலைவில் இருந்தது மில்வாகி. அது நியூயார்க்கின் இசைச் சந்தை, இசைத் தொழில் இவை எதுவும் எட்டிக் கூடப்பார்த்திராத தொலைவு.
ஹாரிஸ் முறையான இசைப் பயிற்சி இல்லாதவர். தன் சுய முயற்சியால் இசையைக் கற்றுக் கொண்டவர். 1892, ஹாரிஸ் எழுதிய பாடல் “ஆஃப்டர் த பால்”. தான் காதலித்த பெண்ணைத் தவறாகப் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த ஒருவன், உண்மையைத் தெரிந்து கொள்ளும்போது அவனது காதலி உயிருடன் இல்லை. சந்தேகத்தால் தன் வாழ்கையைச் சிதைத்துக் கொண்ட ஒரு மனிதன் தன் வலியைச் சொல்லும் பாடல்.
Charles K. Harris – After the Ball ஹாரிஸ் அந்தப் பாடலை ஃபாஸ்டர் போன்று ஒரு பதிப்பாளருக்கு விற்பனை செய்யவில்லை. மாறாக, தானே அந்தப் பாடலை வெளியிட்டார். அச்சு, விளம்பரம், பதிப்புக்களை விநியோகம் செய்தல் இவற்றுக்குப் பணம் செலவானது. ஆனால் பாடல் வெற்றி பெறவில்லை. எனினும் ஹாரிஸ் தொடர்ந்து முயற்சி செய்தார். பாடலை விளம்பரம் செய்ய ஆட்களை ஏற்பாடு செய்தார். (இவர்கள் song pluggers என்று அழைக்கப்பட்டனர். இவர்களைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்) ஹாரிஸ் தனது சேமிப்பைக் கரைத்திருந்தார். ஹாரிஸ் அன்றைய இன்ஸ்டாகிராம் (instagram) அல்காரிதத்தைப் புரிந்து கொண்டார். பாடல் பெரும் வெற்றி பெற்றது.

ஹாரிஸ் தானே பதிப்பாளராக இருந்ததால், ஃபாஸ்டர் போன்று லாபத்தை அவர் தவறவிடவில்லை. ஒரு வெற்றிகரமான பாடல் கலைஞனாக இருப்பது சாத்தியம் என்பதைக் காட்டினார். அச்சுப் பதிப்புகளின் உரிமை யாரிடமோ, செல்வம் அவரிடமே. இதுவே ஒலிப்பதிவுக்கு முன் இருந்த இசைச் சந்தை.
அடுத்து வந்த ஆண்டுகளில் அமெரிக்க இசைச் சந்தை பரிணாமம் பெற்றது. அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதியிலும் பிறந்து வளர்ந்த இசை எத்தகையது என்பதைக் கீழ்காணும் படம் சொல்கிறது.
வரும் நாட்களில் பாடல்கள் உற்பத்திப் பொருட்கள் போன்று ஆலைகளில் தயாராகி சந்தைக்கு வரும் என்று அப்போது யாரும் கற்பனை செய்யவில்லை. ஆனால், அதுவும் நடந்தது. நியூயார்க் நகரை மையமாகக் கொண்டு. இந்தப் பாடல் தொழிற்சாலைகள் எப்படிப் பிறந்தன? பார்க்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
