சில்லிட்டு விரைத்த
சக்கர வளைவுகளின் பின்
சல சலத்து
ஒலி எழுப்பி பின் தொடரும்
பழைய நினைவுகளாய்
பழுத்து உதிர்ந்துவிட்ட இலைகள்.
என் வாகனத்தின்
ஒலிப்பெட்டியில்
உயிர் பெற்று ஒலிக்கும் –
சக்கர வரிகள் வழி இறங்கி
தார்ச்சாலையின் பரப்பில்
இசைத்தட்டின்
கோடுகளைப்போல பதிந்துவிட்ட
பழைய பயணிகளின்
சரிதைகள்.
நிகழ் கணத்தை கொண்டாடும்
வெம்மையான எண்ணங்கள்
மிகையுணர்ச்சி காலத்திலிருந்து
இன்றைய பொழுதுக்குள்
இடம் பெயர துடிக்கும் இசைத்துணுக்குகள்.
கடவுளின் நல்லெண்ணத்தையும்
வருகையையும் அறிவிக்கும் பாடல்கள்.
புதிய காதலுக்கான தேடல்கள்.
முன்னாள் காதலிகளை நினைவுகூறும்
நாட்டார் பாடல்களில்
மென் துயரத்தின் குறிப்புகள்.
உள்ளூர் உணவகங்களின் பெருமைகள்
அறிவார்ந்த உரையாடல்கள்
அன்றாடங்களின் போதாமைகள்.
வியாபார வெற்றியின் ரகசியங்கள்
விளையாட்டு போட்டியின் விளக்கங்கள்
விவாகரத்து பெற்றவரின் கதையாடல்கள்
சமையல் குறிப்புகள்.
அனைத்தையும் –
என் ஒலிப்பெட்டிக்கு கடத்தியபடி
சக்கரங்களின் கீழே
நீண்டு வளைந்து சுழன்று செல்லும்
நெடுஞ்சாலையின்
கரிய இசைத்தட்டு.

முகடுகள் மறைக்கும்
வளைவில் இறங்கியதும்,
சாலையின் வலப்புறம்
வெள்ளை வண்ணமடித்த வேலிக்குப்பின்னால்
தம் விடுதலையின் புராதானத்தை
முயன்று பழகும் குதிரைகள்.
துரித உணவகத்தின் வரிசையில்
பறிமாறலை எதிர்பார்த்து காத்திருக்கும்
பயனர்களை எண்ணி
மாமிச கூடத்திற்கு தயாராகும் வேகத்தில்
அவசரமாய்
மலைச்சரிவை மேயும் மாடுகள்.
சாலையின் இடப்புறம்
வேருடன் பிடுங்கி
தலைகீழாய் நட்டது போல்
இலையின்றி நிற்கும் மரங்களின் பின்
காண்பவர் இன்றி
தனித்துக் கிடக்கும் ஏரி.
நீலப் பரப்பில் பிரதிபலித்து
வானத்தின் நெடுஞ்சாலையில்
நீந்திக்கொண்டு விரைகின்றன
வலசை செல்லும் பறவைகள்.
வாகனத்தில் உள்ளே
அதிசயிக்க தக்கது என எதுவுமில்லை
தன் நோக்கத்தை நேர்த்தியாய் நிறைவேற்றும்
இயந்திரத்தின் மெல்லிய உறுமல்.
சக்கரங்களின் சீரான இசை.
மெளனம் என்பது
அடுக்குகளாக அமைவதோ?
வாகனத்திற்கு வெளியே
மலைகளையே விழுங்கும் அளவிற்கு
விசாலமான மௌனம்.
வாகனத்திற்கு உள்ளே இருப்பதோ,
இரண்டு எளிய எண்ணங்களுக்கு நடுவே
அடங்கும் அளவுக்கு சிறியது.
தார்ச்சாலைக்கும்
சக்கரத்திற்கும் இடையே,
குளிர் காற்றிற்கும்
பக்கவாட்டுக் ஆடிகளுக்கும் இடையே,
முதிரும் சூரியனுக்கும்
மெல்லிய தூசி படியும்
முன்கண்ணாடிக்கும் இடையே.
தனிமை என்பது
திறந்தவெளிச் சாலைகள்
பேசிக்கொள்ளும்
ரகசிய மொழியோ?
இறந்த காலத்தை காட்டும்
பக்கவாட்டு ஆடியில்
வாகனங்கள் அற்ற
வெறுமையின் வரிசை.
தோன்றும் யாவையும்
ஒன்றன்பின் ஒன்றாய்
மறைய காண்பது போல்
சொல்ல முடியாமல் போன மன்னிப்பு.
அனுப்பப்படாத அந்த கடிதம்.
பகிர்ந்து கொள்ளாமல்
நெஞ்சோடு புதைத்த அந்த ரகசியம்.
சிரித்துக்கொண்டே விடைபெற்ற அந்த முகம்.
கூடவே நடந்து பாதியில் பிரிந்த அந்தத் தடம்.
அழைக்கத் தயங்கி
துண்டிக்கப்பட்ட தொலைபேசி.
திறக்கப்படாமல் தூசி படிந்த
அந்த பழையபெட்டி.
தேடி அலைந்து கடைசியில்
தெரியாமல் தொலைத்த பழைய சாவி.
நாம் சுமக்கும் பாரங்கள் யாவற்றையும்
சிறியதாக்கி
மறையச் செய்து
இல்லாமல் ஆக்க வல்லதோ
இந்த மந்திரக்கண்ணாடி?
வெளியேறுவது
ஒன்றும் தோல்வி அல்ல
என்பதை ஏற்றுக்கொண்ட
வீரனின் அமைதியுடன்
சூரியன் மேற்கே சாய்கிறான்.
அவன் வெளிச்சம்
ஒரு மலையைக் கூட நகர்த்தாமல்
எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது.
மரங்களை நிழல் உருவங்களாக –
மின் கம்பங்களை
மாலை நேரத்தின்
கடிகார சொடுக்குகளாக.
சற்று நேரத்தில்
விலகிச் செல்வது எப்படி என்று
கற்றுக்கொண்ட நிழல்கள்
நீளத் தொடங்குகின்றன.
எத்தனை முறை
கடந்து செல்ல முயன்றாலும்,
என்னை விடவும் சற்று முன்னோக்கி நீளும் என் நிழல்.
வாகனத்துக்கு முன்னால்
ஓடத்தொடங்குகிறது.
சக்கரங்கள் தார்ச்சாலையுடன்
தங்களின் புராதான உரையாடலை
தொடர்கின்றன. பேசி முடிக்காத
இந்த நாளின் இறுதி வாக்கியத்தைப்போல
முன் வருகிறது,
அந்த முதல் நட்சத்திரம்.
நான் ஒருபோதும்
திரும்பிச் செல்ல முடியாத இடத்திற்கும்,
இன்னும் போய்ச்சேர முடியாத
இடத்திற்கும் இடையில்
எங்கோ ஒரு புள்ளியில்,
எந்த ஆரவாரமும் இன்றி
தன் மேடையில் எழுந்து வருகிறது
மார்கழியின் முழு நிலவு.
நட்சத்திரங்கள்
எந்தத் தீர்ப்புமின்றி
என்னை பார்க்கத் தொடங்குகின்றன.
எதிரில்
தனித்த ஒரு
கனரக வாகனம்
கடந்து செல்ல
அதன் முகப்பு விளக்குகள்
என் முன் கண்ணாடியில்.
ஒரு நொடிப் பொழுது
இன்னொரு பயணியும்
என்னுடன் இணைகிறார்.
அவர் கடந்து செல்ல
உடனடியாக மீண்டும் திரும்புகிறோம்
அவரவர் அறையின் அவரவர் தனிமைக்கு.
இன்றைய ஞானம் என்பது
முழுச் சாலையையும்
எவரும் பார்க்க முடியாது என்பதை
ஏற்றுக்கொள்ளுவதோ?
சற்று நேரத்தில்
சாலையோர எரிபொருள் நிலையம்
செயற்கை வெளிச்சத்தின்
தீவாக மாறுகிறது. எதிரில்
கண்ணுக்கெட்டிய தொலைவையும்
தாண்டி நீளும் கரிய நெடும் சாலை.
இந்த உலகம் இவ்வளவு தனியதா?
என் பயணம் இவ்வளவு நெடியதா?
பிரிக்க முடியாதபடி
கவனமாய் தைக்கப்பட்ட
ஒரு தையலைப் போல
வெளிறிய இரு கோடுகள்
பூமியை ஒன்றாய் இணைத்து பிடித்திருக்க,
என் ஆழ் மனதை அறிந்து விட்டதை போல,
தொடர்ந்து பின் நோக்கி சென்றபடி
என்னை ஆசீர்வதித்து
ஆற்றுப்படுத்தி,
விடாது உடன் வரும்
துணையென –
என்
கண்ணாடியின் முன்
தொடுவானமாகி
என்னை விடாது
தொடர்ந்து வரும்
ஒரு தெய்வம்.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
