“ஓய்…தாருகா….! இன்னைக்கு ஆட்டம் எந்த ஊருல ஓய்” பாய்லரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே கடைக்கு முன் நின்றுக் கொண்டிருந்த பார்க்கவனிடம் கேட்டார் குஞ்சன்.
“ஓய் இன்னைக்கு ஆட்டம் வெள்ளிமலையில ஆக்கும், நீரு எனக்கு ஸ்ட்ராங்க ஒரு டீ போடும்”
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் சாலையைப் பார்த்துக் கொண்டே சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார் பார்க்கவன்.
“வெள்ளிமலயா…அது எங்க ஓய் இருக்கு” நுரை நிறைந்த கண்ணாடி டம்ளரை பார்க்கவனிடம் நீட்டியவாறே கேட்டார் குஞ்சன்.
“அது திங்கள்சந்த பக்கமா வேலுதம்பி தளவாய்க்க ஊரு இருக்கு இல்ல ஓய்… தலக்குளம். அது பக்கமாக்கும்…மலைக்க மேல இருக்க பெரிய முருகன் கோவிலு”
“அங்க இன்னைக்கு என்ன ? ஏதாச்சும் காவடிக் கட்டா”
“காவடிக்கெட்டு ஒன்னும் இல்ல ஓய்…அங்க இன்னைக்கு சூரம்பாடு. உமக்கு தெரியாதாக்கும்”
“ஓ…இன்னைக்கு சூரம்பாடு இல்ல. நான் மறந்தே போயிட்டேன். இன்னைக்கு தீபாவளி முடிஞ்சு மறு எட்டு. தீபாவளி முடிஞ்ச மறு எட்டுக்கு தான் சூரம்பாடு வரும். எனக்கு இப்போ ஒரு ஓர்மையும் இல்ல பார்க்கவோ”
“உமக்கு ஓர்மிக்க தான் ஆயிரத்தெட்டு காரியம் உண்டுமே”
“செரி செரி வண்டி வருதா, இல்ல பஸ்ஸில தான் போணுமா, எப்படியாக்கும் யாத்ர”
“ஆசானும் பசங்களும் வண்டில வந்திட்டு இருக்காங்க, இங்க கிட்ட வந்தாச்சுன்னு சொன்னானுவ இப்பம் வந்திருவானுவன்னு நினக்கேன்”
கையிலிருந்த கடைசித் துண்டு சிகரெட்டையும் இழுத்து முடித்தக் கையோடு டீ டம்ளரை குஞ்சனிடம் நீட்டினார் பார்க்கவன்.
டம்ளரை வாங்கிக் கழுவிக் கொண்டே குஞ்சன் “நாளைக்கு கேரளத்தில கர்த்தாலுன்னு உமக்கு தெரியுமா பார்க்கவோ” என்றார்.
“கேரளத்தில தானே ஓய் கர்த்தாலு, உம்ம கடையோடுமே பின்ன என்ன. அவனுவ எதுக்கு எடுத்தாலும் பந்து பிடிக்கானுவ. போன மாசம் கூட பந்து பிடிச்சானுவ. அன்னைக்கு பாத்து எங்களுக்கு ஒரு ஆட்டம் கிழக்கை கோட்ட பக்கமா இருந்திச்சு. இவனுவ பந்து புடிச்சனால அது கேன்சலாச்சு. ஆமா நாளைக்கு எதுக்காம் பந்து நடத்திருவானுவ?
“அவனுவளுக்குக் காரணமா இல்ல….” குஞ்சன் பேச்சை இழுத்துக் கொண்டே குனிந்து அரிப்பிலிருந்த தேயிலையை அங்கிருந்த பக்கெட்டிற்குள் கொட்டிக் கொள்ள ஒரு டாட்டா சுமோ ஹாரனை அடித்துக் கொண்டே அந்தக் கடைக்கு முன்பாக வந்து நின்றது. அந்த ஹாரன் ஒலியைக் கேட்டு திரும்பி பார்த்த பார்க்கவன் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்திருந்த சிசுபாலனைக் கண்டதும்
“செரி ஓய்….நான் கிளம்புறேன். ஆட்டத்த முடிச்சிட்டு நைட்டு வருவேன் நாளைக்கு காலத்த உம்மை வந்து பாக்குறேன். பற்றுல குறிச்சு வையும்”
பார்க்கவன் குஞ்சனிடம் விடைபெற்று ஓடிச்சென்று அந்த சுமோக்குள் ஏறிக் கொண்டார். குஞ்சன் தேயிலையைப் பக்கெட்டிற்குள் தட்டி எழுந்தக் கணம் சுமோ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
முன்புறச் சீட்டில் ஏறி அமர்ந்துக் கொண்ட பார்க்கவன் தலையைத் திருப்பி “கிரீடம் எடுத்திட்டு வந்தீங்களா” என்று பின்புறச் சீட்டில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். பின்புறம் அமர்ந்திருந்த குட்டப்பனும், சேகரனும், ரமணியும் மாறிமாறி ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து விட்டு “அய்யே….! சே….! ஓய் கிரீடத்த மறந்து ஆசான் வீட்டுலயே வச்சிட்டு வந்திட்டோம் கேட்டியளா” என்று சொல்லி வைத்தாற் போல் மூவரும் ஓரே நேரத்தில் பார்க்கவனைப் பார்த்துச் சொல்லிக் கொண்டனர்.
தாருகச் சண்டைக்கு கிரீடம் வேண்டும் என்ற பதற்றத்தில் பார்க்கவன் அம்மூவரையும் பார்த்து “மைத்தாண்டிகளா… போன் விளிச்சு நான் சொன்னேன் இல்ல மறக்காம கிரீடத்த எடுத்திட்டு வாங்கன்னு. இப்போ கிரீடம் இல்லாம அங்க போய் என்னத்த ஒண்டாக்க. ஆசான் இருக்கு இல்லன்ன உங்களக் கண்ட கண்டமா அறுத்து கிளிச்சிருப்பேன். ஆசானே கெட்ட வார்த்த போட்டத்துக்கு மன்னிச்சிடுங்க இவனுவ கிரீடத்த எடுக்காம வந்திட்டானுவ ஆசானே இப்போ என்னத்தப் பண்ண” என்று ஆவேசப்பட்டு சொன்னான்.
உடனே பின்னால் இருந்த ரமணி “ஓ…இவருக்க ஒண்டாக்குன கிரீடம், இவருக்க கிரீடம் இல்லன்னா இங்க ஆட்டம் நடக்காது மாதிரியும், என்னதோ கிரீடம் வச்சு காளி கிட்ட சண்டப்போட்டு ஜெயிக்கிற மாதிரியும், எப்படியும் தோத்து தொப்பி அடிக்கத் தானே போறீரு, அதுக்கு எதுக்கு உமக்கு கிரீடம், இன்னைக்கு ஒரு நாளும் கிரீடம் இல்லாம சண்ட போடும்”
“ஓய் உம்ம கிரீடத்த நீரு தானே வீட்டுக்கு கொண்டு போகணும் வண்டில போட்டுட்டு போவ உம்ம கிட்ட யாரு ஓய் சொன்னது” தன் பங்கிற்கு சேகரனும் பார்க்கவனை கடிந்தான்.
“லே அது போன மாசம் கடைசியா நம்ம கலிங்கராஜபுரத்துக்கு பண்ண புரோகிராமில மறந்து வண்டிலயே போட்டுட்டு போயிட்டேன்பிலே. இல்லாட்டி என்னைக்காவது கிரீடம் இல்லாம வந்திருக்கேனா. அன்னைக்கு என்னா நட லே. கிட்ட மொட்ட ஒரு பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்போமா. நடந்து நடந்து என் கால் ரெண்டும் ஊப்பாடு ஆச்சு டே. அதுவும் புரோகிராம் முடிஞ்சது எப்போ விடியக்காலத்த. என்னத்துக்கு இவ்வளோ தூரம் நடக்கிற மாதிரி ஊர்வலத்த வைக்கானுவ. ஒரு அஞ்சு கிலோ மீட்டருக்குள்ளயோ, ஆறு கிலோமீட்டருக்குள்ளயோ வைக்கக் வேண்டிய தானே. ஆட்டம் முடிஞ்சு வண்டில ஏறுனது தாம்லே எனக்கு ஓர்ம இருந்திச்சு பின்ன ஆசான் தட்டி எழுப்பி விட்டனால தான் உறக்கத்தில இருந்து எந்திரிக்கவே முடிஞ்சிது. இதுல எங்க இருந்து கிரீடத்த எடுக்க”
“ஓய் என்ன நட இருந்தாலும் கொண்டு வந்த சாதனத்த கரெக்டா வீட்டுக்கு கொண்டு போவாண்டாமா, நீரு என்னதோ புதுசா நடக்கிற மாதிரி இல்ல சொல்றீரு”
“புதுசா இல்ல தாம்லே. நம்ம நடக்காத்த நடையா. முன்னாடி கூட்டாலுமூடு கோவிலுக்கு நம்ம ஆடிகிட்டு இருந்தப்போ அந்த உச்ச வெயிலுல மார்த்தாண்டத்தில இருந்து கூட்டாலுமூடு வர நடந்திருக்கோம். கிட்டத்தட்ட பத்து வருஷம் அந்த ஊர்வலத்துக்கு நான் ஆடியிருக்கேன். ஆனா இந்த கொரோனா வந்ததில இருந்து என்னால அடிக்கடி களியாம ஆவது கேட்டியா”
பார்க்கவன் பேசியதைக் கேட்டு பரிதாபப்பட்ட குட்டப்பன் “செரி செரி நீரு பரானப்படாதியும் உம்ம கிரீடத்த மறக்காம எடுத்திட்டு வந்திருக்கோம். வண்டிக்க பின்னாடி தான் கிடக்கு” என்றான்.
அதைக் கேட்ட சேகரனும், ரமணியும் “லே குட்டப்பா ஏம்புலே கொண்டு வந்திருக்கோம்ன்னு சொன்ன நம்ம தாருகன கொஞ்சம் கூட வெப்ராளப் படுத்தியிருக்கலாமில்ல லே… போலே கிறுக்கா எல்லாத்தையும் கெடுத்திட்டா” என்று மாறி மாறி குட்டப்பனை கடிந்துக் கொள்ள
“லே … போங்க லே… இனியும் ஓட்டுனா அவரு வெப்ராளப்பட்டு உடம்பில எதாயாவது வருத்தி வச்சிட போறாரு அப்புறம் இன்னைக்கு ஆட்டத்துக்கு எங்க இருந்து தாருகன எடுக்க”
“போல அஞ்சறிவு அவரு என்னத்தக் களியாம ஆனாலும் வேஷம் போட்டுட்டாருன்ன அவர புடிக்கவே முடியாது அப்படியொரு கலை பக்தி கொண்டவராக்கும் நம்ம தாருகன்”
“என்ன பார்க்கவா நம்ம கூட்டத்திலேயே ரமணி தான் உனக்கு பெரிய ரசிகன் போல”
“ஆசானே அவனுவ தான் என்ன ஓடக்குறானுவன்னு நீங்களுமா ஒடக்குறீங்க, ஆமா ஆசானே ஷேவிங் கடையில போய் பண்ணீங்களா இல்ல நீங்களே பண்ணீங்களா”
நாடியில் இருந்த ஒன்றிரண்டு தாடி முடியினை தொட்டவாறே சிசுபாலன் சொன்னான் “கடையில போயி பண்ண கையில ஏது சக்கரம் பார்க்கவா. ஒரு மாசாமாச்சு கண்ணில நாலு சக்கரத்தப் பாத்து. நம்ம போன மாசி மாசம் மண்டைக்காட்டு கொடைக்கு ஆட்டத்துக்கு போனோமில்ல அங்க வச்சு கிடச்ச அட்வான்ஸ் ஆக்கும் இன்னைக்கு போறது. போன ஒரு மாசத்தில தாடி காடு போல வளந்திச்சு. எப்படியும் ஆட்டத்துக்கு மேக்கப் போடுறதுக்கு தாடிய வழிக்காம வேற வழியில்ல. சரி எவன்டையாவது ஒரு இருநூறு ரூபா சக்கரத்த கேட்போம்ன்னு கடன் தாறவன் எல்லாரையும் போன் பண்ணிக் கேட்டா….சீசன் இல்லாதனால நம்மள நம்பி கடன் தர ஒருத்தனும் ரெடியில்ல. சரி இனி யாருகிட்டயும் கேட்காண்டாம்ன்னு சோப்பு எடுத்து முகத்தில போட்டு நானே வழிச்சிட்டு நின்னப்போ தான் வண்டிக்கு டீசல் அடிக்கிற விஷயம் ஞாபகத்து வந்திச்சு. மோளுக்கு காலேஜ் பீஸ் கட்டினதால போன சீசன்ல்ல ஆட்டம் போட்டு மிச்சம் பிடிச்சு கையில வச்சிருந்ததும் கரஞ்சு போச்சு”
“ஆசானே அப்போ டீசல் போட பைசா யாரு தந்தா”
“அதுவா.. திருவந்தபுரத்தில ஒரு பார்ட்டி கொஞ்ச நாளா நம்ம கிட்ட கிடந்த தெய்யத்துக்குள்ள கொதச்ச முடியையும், டிரெஸ்ஸையும் கேட்டுட்டு இருந்தாங்க இன்னைக்கு காலைல அவனுவள போன் பண்ணேன் உடனே பணம் தாறதுக்கு ரெடியா இருந்தானுவ அதான் குடுத்திட்டேன் பார்க்கவா”
“என்ன ஆசானே….டீசல் அடிக்க நம்ம பொழப்ப விக்கணுமா”
“டீசல் அடிக்க மட்டும் இல்ல பார்க்கவ. காலைலை வண்டிய ஸ்டார்ட் பண்ணப்போ இவனும் ஓடாம தான் நின்னான். இவனச் சரி பண்ணதுக்கும் தான் பைசா தேவப்பட்டுச்சி இனி அடுத்த கொஞ்ச நாளு இவன் இருந்த தான் நம்ம பொழப்பு நடக்கும்”
“ஆசானே, உங்ககிட்ட சொந்தமா வண்டி இருக்கு இல்ல, உங்களுக்கு ஸ்கூல் சவாரி ஓடுனா என்ன”
தக்கலையிலிருந்து இரணியல் செல்லும் சாலைக்குள் வண்டியை திருப்பி விட்டு சிசுபாலன் “நானும் அத பத்தி யோசிச்சேன் பார்க்கவா. ஆனா நம்ம பொளப்புக்கு அது சரியாகாது. நம்ம எங்கேயாவது அட்வான்ஸ் புடிச்சு வச்சிருந்தா ஸ்கூல் புள்ளைங்கள கரெக்ட்டு நேரத்துக்கு யார் போய் கூப்பிடுவாங்க. நாலு மாசம் தான் சீசன் இல்லாதது அது பொறவு ஒவ்வொரு இடமா கோவில் திருவிழா தொடங்கி ஆட்டமும் வந்திடும். ஆட்டக்காரன்னு உள்ளால ஒரு நெனப்பு வந்திட்டா வேற எதுக்கு வேண்டியும் அத விட்டு குடுக்க தோணாது பார்க்கவா” என்றார்.
“ஆசான் சொல்லுறதும் செரி தான். நானும் ஆட்டத்த நம்பி கிடக்கிறவன் தான். பின்ன எனக்கு குடும்பம் குட்டி எதுவும் இல்லாத்தனால என்பாட மட்டும் பாத்த போதும். உங்களுக்கு அப்படி இல்லையே”
“செரி அந்தக் கதய எல்லாம் விடுங்க. யாருக்க டிரெஸ் எடுத்துக் கொடுதீங்க, மொதல்ல அத சொல்லுங்க ஆசானே”
“உங்களோடது ஒன்னும் நான் எடுக்கல போதுமா ரமணி. நான் கட்டுற டிரெஸ்ஸையும், தெய்ய முடியையும் தான் எடுத்து வித்தேன். இன்னும் ரெண்டு வாரத்தில அடுத்த சீசன் தொடங்கும் இல்ல. மொத அஞ்சு ஆடர் முடிஞ்சதும் புதுசா ஒன்னு வாங்கிக்கலாம்”
“ஆசானே… நம்ம பாச்சல்லூர் முடிப்புரை கோவில்ல இந்த தடவ பரணேற்று கொடைக்கு தாருகனா வேஷம் போட்ட ஆளு நேத்து இறந்து போயிட்டாரு தெரியுமா”
“இல்ல சேகரா.. அந்த ஆளு கோவில் பூசாரியோட மருமகனாச்சே எப்படி இறந்தாரு”
“ஆக்ஸிடென்டாம்… கோவளத்துக்க கிட்ட வச்சாம். நேத்து நம்ம கலாசமிதி வாட்சப் குரூப்ல வந்திச்சு நீங்க பாக்கல”
“யே… நான் அது பாக்கல.. அதில ஒரு நாளு ஒரு ஆயிரம் மெசேஜ் வரும். அதனால நான் அதில ஒன்னும் எடுத்து பாக்க மாட்டேன். உருப்படியா எந்த மெசஜூம் போட மாட்டானுவ, ரொம்ப நாளா புரோகிராம் ரேட்ட கூட்றதுக்கு பேசிட்டே இருக்கேன். எவனும் என் பேச்சுக்கு ஒத்து வர மாட்டேங்கிறானுவ. சும்மா ஆக்கர் ரேட்டுக்கு புரோகிராம் பண்ணுறானுவ. இவனுவ இப்படி பண்ண போய் நமக்கு கிடச்சிட்டு இருந்த ஆடர் கூட இப்போ கிடைக்காமா போவுது. இதனால நம்மளும் ரேட்ட கொறச்சு பண்ண வேண்டி இருக்கு. பன்னிரண்டு மாசத்தில ஆட்டம் நிறைய கிடைக்கிறதே வெறும் ஆறு மாசம் தான் அதில கிடைக்கிற நாலு காசத் தான் ஒரு கொல்லம் முழுவதும் வச்சு ஓட்ட வேண்டி இருக்கு. அத பத்தி பேசாம சும்மா கண்ட கண்ட மெசேஜ போட்டு ”
“சீசன் இல்லல்ல ஆசானே ஒருத்தனுக்கும் பொழப்பு இல்ல. வேற என்ன பண்ணுவானுவ”
“அப்படி ஒன்னும் கிடையாது கேட்டியா குட்டப்பா. நம்ம கொஞ்சம் ஆளுங்க தான் இதுன்னு சொல்லி உயிர விடுறோம். மத்தவனுக்கு இது சும்மா வண்டி ஓட்ட தான். அதனால தான் இவனுவ இந்த மாதிரி கம்மி ரேட்டுல ஆடர் புடிக்கானுவ”
“ஆசானே எனக்கு என்னதோ அடுத்த தாருகன் அது நம்ம ஆளோன்னு தோணுது”
“எதுக்கு ரமணி”
“பரலோகத்தில போறதுக்கு தான் ஆசானே, வேற எதுக்கு” ஹேஹேஹே என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ரமணி.
“ஓடுலே… மைத்தாண்டி… என்ன சீக்கிரம் சாக்காலைக்கு கொடுக்கத் தான் உனக்க நெனப்பு இல்ல, லே ரமணி உனக்க மனசிலிருப்பு கொள்ளாம் கேட்டீயா ” என்று சொல்லிக் கொண்டே சிசுபாலனைப் பார்த்து “ஆசானே கெட்ட வார்த்தப் போட்டத்துக்கு மன்னிச்சிடுங்க” என்றார் பார்க்கவன்.
“ஆமா ஓய் உங்கள எத்தனத் தடவ நான் கொல்ல. நீங்களும் அடுத்த நாள் ஆட்டத்துக்கு புதுசா நடந்து வாறீங்க. அன்னைக்கும் உங்கள கொல்லுவேன். திரும்பவும் அடுத்த நாள் ஆட்டத்துக்கு வருவீங்க. அங்க வச்சும் உங்கள கொல்லுவேன். ஆனா திரும்பவும் நீங்க அடுத்த நாள் ஆட்டத்துக்கு வருவீங்க. இப்படியே போயிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவு வேணாமா ஓய்” ரமணி சொல்ல அனைவரும் வண்டிக்குள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
“டே ரமணி அப்போ ஒன்னு பண்ணு இன்னைக்கு நீ தாருகனா வேஷம் போடு சரியா” என்று சிசுபாலன் சொன்னதும்
“ஆசானே… என்ன விட்ட உங்களுக்கு வேற நல்ல காளி கிடைக்காது பாத்துகோங்க”
“ஒரு மைத்தாண்டியும் வேண்டாம் இன்னைக்கு நான் காளி வேஷம் போடுறேன்” மீண்டும் சிசுபாலனைப் பார்த்து “ஆசானே கெட்ட வார்த்தப் போட்டதுக்கு மன்னிச்சுகோங்க” என்றார் பார்க்கவன்.
அப்போது குட்டப்பன் “ஓய்…காளிக்கு எங்க ஓய் தொப்ப இருக்கு” என்று சொல்ல
“இந்த ஒன்னால தான் நான் இன்னைக்கு வர தாருகனாவே கிடக்கேன்” தன்னுடைய வயிற்றைத் தடவிப் பார்த்து ஆதங்கப்பட்டுக் கொண்டான் பார்க்கவன்.
“பார்க்கவா… நம்ம கிட்ட எது இருக்கோ அத வச்சு அடுத்தவங்கள சந்தோஷப்படுத்திற தான் நம்ம ஆட்டம். அது நம்ம உடம்பானாலும் சரி, இல்ல நொம்பலத்தோட இருக்கிற நம்ம மனசானாலும் சரி” வெள்ளிமலை கோவிலின் தோரண வாயிலைக் கைகாட்டி இங்க தான் ஆட்டம் என்றார் சிசுபாலன்.
வண்டியைக் கொண்டு ஓரமாக நிறுத்தி விட்டு “ரொம்ப பழைய கோவிலாக்கும், சூரம்பாடு பாக்க நல்ல ஆளு கூட்டம் இருக்கும்னு அட்வான்ஸ் காரன் சொன்னான். வர ஆளுல ஒரு பத்து பேருக்கு நம்ம புரோகிராம் இஷ்டப்பட்டு அட்வான்ஸ் தந்திட்டாங்கன்ன அடுத்த கொஞ்ச நாள் நம்மளோட கஷ்டப்பாடு தீரும்”
வண்டியிலிருந்து கீழிறங்கிய பார்க்கவன் தோரண வாயிலின் முன் சென்று மலை மேல் இருக்கும் கோவிலை அண்ணாந்து பார்த்தப்படி ஏதோ யோசனையில் அங்கேயே நின்றார். திறந்த வாயை மூடாமல் சிறிது நேரமாக அப்படியே நின்றுக் கொண்டிருந்த பார்க்கவனைக் கவனித்த ரமணி, பையிலிருந்து ஒரு ரசகதளி பழத்தை எடுத்தான். தேங்காய் எண்ணெயில் அப்பழத்தை முழுவதுமாக அப்பி கைக்குள் மறைத்து வைத்து பார்க்கவனிடம் எடுத்து வந்தான். பார்க்கவன் தன்னை கவனிக்காத நேரம் பார்த்து அந்த பழத்தை எடுத்து அவர் வாய்க்குள் போட்டுக் கொண்டான். இதை சிறிதும் எதிர்ப்பார்க்காதப் பார்க்கவன் தன் வாய் முழுவதும் எண்ணெய் அப்பிக் கொண்டதையடுத்து பழத்தை தூர துப்பி விட்டு ரமணியை கண்டபடி திட்ட தொடங்கினான். ஆட்டம் முடிந்ததும் முகத்தில் தேய்த்து ஒப்பனையைக் கலைக்கக் கொண்டு வந்த பழத்தை இப்படி வீணாக்கி விட்டாயே என்று ரமணியை திட்டிக் கொண்டே லுங்கியால் வாயை துடைத்துக் கொண்டார்.
ஹேஹேஹே என்று சிரித்துக் கொண்டே ரமணி “மேக்கப்பு போடுறதுக்கு முன்னாடி ஒரு பழம் உங்க சழுவய துடைக்க எடுத்திட்டோம்ன்னு வச்சுக்கோங்க” என்றான்.
தனக்கு வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுகுவதாக ரமணி சொன்னதைக் கேட்டு கோபம் அடைந்த பார்க்கவன் “யாரு லே சழுவ, உனக்க கொப்பன் தான் சழுவ” என்றார்.
“ஓய் கொப்பன இழுக்காதியும்”
“நீ செய்யுற காரியத்துக்கு அவர தான் சொல்லணும்பிலே. உன்ன என்ன எளவுக்கு உண்டாக்குனாரோ”
“லே ரமணி வந்து இறங்காண்டம் அதுக்குள்ள தொடங்கியாச்சா லே,
“லே சேகரா சும்மா லே. அவருக்கிட்ட தாம்லே இது எல்லாம் பண்ண முடியும். அவரு நம்ம அண்ணம்பிலே. இல்ல ஓய்” என்று பார்க்கவனைப் பார்த்து ரமணி சொல்ல
“நொண்ண ஓய்… . டேஷ் டேஷ்டேஷ்”
“ஆசானே கோவிலுக்கு உள்ள போவோமா”
“அட்வான்ஸ் காரன் இன்னும் போன் எடுக்கல பார்க்கவா, இங்க தான் ஆட்டமா? இல்ல வேற ஏதாவது கோவிலுக்கு போணுமான்னு தெரியல, எதுக்கும் ஒன்னு கூப்ட்டு கேட்டுட்டு போவோம்”
மலை மேல் இருக்கும் கோவிலை அண்ணாந்து பார்த்தப்படியே ரமணி
“இது மொத்தம் எத்தன படி இருக்கும்” என்று சேகரனிடம் கேட்டான்
“எப்படியும் ஒரு அறுபது இருக்கும்” சேகரன் உத்தேசமாகச் சொல்ல
“அவ்வளவு ஒன்னும் வராது சேகரா, கூட போனா ஒரு நாப்பது படி தான் வரும்”
“போலே முப்பதே தாண்டாது, இது சின்ன மல தாம்லே”
“லே குட்டப்பா நீ இங்கிருந்து பாக்கிறதில்ல மலைக்க உயரம். இங்க இருந்து பாக்க சின்னதா தான் இருக்கும் ஏற ஏற தான் தெரியும் ஏத்தம் ஏறிட்டே போறது. செரி நீ சொல்லு எத்தன படி இருக்கும்”
“ஒரு…” எந்த எண்ணைச் சொல்லலாமென்று குட்டப்பன் இழுத்துக் கொண்டிருக்க வண்டியருகே நின்று “டோய்….” என்று அனைவரையும் உரக்க அழைத்தார் சிவபாலன்.
“அட்வான்ஸ்காரன் கிட்ட நான் பேசிட்டேன். எல்லா ஆட்டமும் இங்க வச்சு தானாம். வேற எங்கேயும் போகாண்டமா, சாதனத்த எடுத்து மேல கோவிலுக்குள்ள கொண்டு வைப்போம் வாங்க”
சிவபாலன் சொன்னதும் சூலம், கீரிடம், பாம்பு, ருத்ராட்ச மாலை, வாள், ஆறு கை, துணி, தலை என்று ஆட்டத்திற்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பைகளை ஆளுக்கு இரண்டு வீதம் சுமந்து ஒவ்வொருவராக மலை ஏற தொடங்கினர். கைகளில் பைகளுமாக வரும் இவர்களைக் கண்டதும் முதல் படியருகே கிடந்த ஒரு நாய் அங்கிருந்து எழுந்து வாலையாட்டி நின்றது. நாயை பார்த்து பயந்து ஒரு ஓரமாக நடந்து வந்த பார்க்கவனை நாயிடம் மெதுவாக தள்ளி விட்டான் ரமணி. பார்க்கவன் நாயருகே விழுவது போல சென்றதும் அந்த நாய் அங்கிருந்து ஓடிக் கொண்டது. தோரண வாயிலின் சுவரினைப் பிடித்து விழாமல் நின்று கொண்ட பார்க்கவன் ரமணியை பார்த்து “லே சழுவைக்க மோனே உனக்கு என்ன கிறுக்காலே” என்றான்.
“கிழட்டு வயசாவுது உமக்கு இப்பவும் நாய பாத்து பயமோ ஓய்”
“கெழடு கொபப்ன் பிலே…”
“ஓய் கொப்பன விளிக்காதியும்”
“உங்க சண்டைய மேக்கப் போட்டு களத்தில போடுங்கப்பா நம்ம ஆட்டத்த பாக்குற ஆளுங்களுக்காவது அது சுவாரசியமா இருக்கட்டு. சும்மா இங்க போட்டுட்டு கிடக்கிறீங்க”
“லே குட்டப்பா, இதெல்லாம் ஒரு ரசம் லே”
“ஆமா, அந்த ஆள ஒடக்கிற தான் உனக்கு ரசம். சரி வா நம்ம முன்ன ஸீபீடா நடந்து போவோம்”
படிகள் ஒவ்வொன்றையும் எண்ணிக் கொண்டே ரமணி நடக்க அவனது எண்ணிக்கையைக் குழப்பித்தவாறே பின்தொடர்ந்தான் குட்டப்பன். பத்து படியேறிக் கொண்டதும் பார்க்கவனிற்கு மெல்ல மூச்சு வாங்கிக் கொண்டது மேற்கொண்டு நடக்காமல் அங்கேயே நின்று கொண்ட அவரை சேகரன் கிண்டலடிக்க “ஆட்டத்தில நடந்து நடந்து என் கால் மூட்டு எல்லாம் தேஞ்சு போயாச்சு” என்று பரிதாபக் குரலில் பேசினார். அதைக் கேட்ட சேகரன் “ஆமா இவரு மட்டும் தான் ஆடுறாரு, நாங்க சும்மா வேடிக்கை பார்க்க இல்ல வந்தோம் எங்களுக்கும் கால் இருக்கு தாருகா, கொஞ்சம் சிகரெட்ட கொறச்சா சீக்கிரம் நடக்கலாம்” என்றான்.
“லே சேகரா என் தேய்மானத்தப் பத்தி எனக்கு தாம்லே தெரியும். நான் இந்த ஆட்டத்த பதினொன்னாம் வயசில தொடங்கினேன். என் காலில்ல ஒரு கிலோமீட்டர் காட்டுற கருவிய மாட்டுனா அது கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கிலோமீட்டருக்கு மேல காட்டும் லே”
“அப்போ ஆசானுக்கோ”
“அவருக்கு எப்படியும் ஒரு இலட்சம் போவும் சேகரா. மனுஷன் ஏழு வயசில இருந்தே தெய்யம் கட்ட போனாரு அப்போ எத்தன கோவில்ல பாத்திருப்பாரு எத்தன ஊர்வலத்தில நடந்திருப்பாரு”
“அங்க பாரு அத்தன ஊர்வலத்தப் பார்த்த அவரே அங்க ஸ்பீடா நடந்து வாராரு” என்று பின்னால் நடந்து வரும் சிசுபாலனைக் கை காட்டிக்கொண்டு சேகரன் “ஓய் உம்ம தேய்மானம் உண்மையிலே உடம்பிலையா இல்ல மனசிலையா” என்றான்.
“அது நீ என் சிகரெட்டு கிட்ட தான் கேக்கணும், அவன் தான் ஆழமா என் உடம்பில இறங்கிறான்”
“நல்லா சிகரெட் அடியும், உம்மள யாரக்கொண்டு திருத்த முடியும். என்னைக்கு அக்கா போனாளோ அன்னைக்கு தொடங்குனது. உம்மள சொல்லியும் குத்தமில்ல. எல்லாம் உம்ம தலையெழுத்து. மெதுவா ஊந்து வாரும் நா போறேன்”
முன்னமே நடந்து வந்த ரமணியும், குட்டப்பனும் மலை உச்சியில் இருந்த மண்டபத்தில் அமர்ந்து மற்றவர்களுக்காகக் காத்திருந்தனர். கோவிலுக்குள் செல்லும் அநேகம் பக்தர்கள் இவர்களை கடந்து அங்கு படியேறிக் கொண்டிருந்தனர். கைகளில் பெரிய பெரிய பைகளுடனும், கழுத்தில் டவ்வல்களுடனும் இருக்கும் இவர்களை அங்கு சாமி கும்பிட வந்தவர்களாக யாரும் கருதவில்லை. அதனால் நடந்து செல்பவர்களில் சிலர் இவர்களை கவனிக்கவுமில்லை. ஒன்றிரண்டு பேர் மட்டும் “அன்னதானம் போடுற இடம் அது” என்று தூரத்தில் இருந்த ஒரு கட்டிடத்தைக் காட்டி சென்றனர். அனுபவ முதிர்வால் அந்த நபர்களுக்கு இவர்கள் எந்த பதிலும் சொல்லிக் கொள்ளவில்லை. வெறுமனே அங்குமிங்குமாகப் பரக்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.
தூரத்தில் இருந்த கந்த சஷ்டி மண்டபத்தில் மயில் வாகனத்தை பூக்கள் கொண்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதைக் கண்ட ரமணி “பெரிய சப்புறமாக்கும் கேட்டீயா சேகரா, இத தூக்கிறதுக்கே எப்படியும் பத்தாளு வேணும்” என்றதும். “இவனுவ எங்க போய் கிடக்கானுவ ரமணி” என்றான் சேகரன். அந்த சமயம் ஆசானோடு சேர்ந்து மற்ற இருவரும் அங்கு அன்ன நடை போட்டு வந்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் ரமணி “கோய்…..” என்று கத்தினான். ரமணி அழைத்த ஓசையைக் கேட்டு மூவரும் அவர்கள் இருக்கும் இடம் பார்த்து நடையைக் கட்டினர். குட்டப்பன் பார்க்கவனையும், சேகரனையும் பார்த்து “இந்த மல ஏற உங்களுக்கு இவ்வளவு நேரமோ…” என்றான். அதற்கு பதிலாக சேகரன் ஏதோ சொல்ல முனங்கியப் போது “செரி செரி வா பேச நேரமில்ல” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு கந்த சஷ்டி மண்டபத்தைப் பார்த்து நடந்தார் சிசுபாலன். கந்த சஷ்டி மண்டபத்தின் ஒரு மூலையில் தங்களது பைகளைக் கொண்டு வைத்தப் போது அட்வான்ஸ் தந்த நபர் சிசுபாலனிடம் வந்து “நீங்க சரியா மூணு மணிக்கு ஆட தொடங்கிடுங்க, மூணு மணிக்கு மேளக் காரங்க அடிக்க தொடங்குவாங்க அப்போ நீங்க ஒரு ஆட்டத்தப் போட்டு விடுங்க. அஞ்சு அஞ்சரைக்கு சூரம்பாடு தொடங்கும். ஒரு ஏழு மணிக்குள்ள முடிஞ்சிடும்” என்றான்.
“யாரும் இன்னும் சாப்பிடல, சாப்பாட்ட ரெடி பண்ண சொல்லிருந்தேன் இல்ல” என்று சிசுபாலன் சொல்லும் போதே அட்வான்ஸ் தந்த நபர் “இல்ல இங்க அன்னதானம் உண்டு. அதோ தெரியுதில்ல கட்டிடம் அங்க வச்சு தான் அன்னதானம் கொடுத்திட்டு இருக்காங்க. கொஞ்சம் கூட்டமா இருக்கும். ஒன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. எனக்கு வேற கொஞ்சம் வேல இருக்கு நீங்க போய் வாங்கி சாப்பிட்டுகோங்க” என்று அன்னதானம் வழங்கும் கட்டிடத்தைக் கை நீட்டி காட்டி விட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார்.
அவர் அங்கிருந்து சென்றதும் சிசுபாலன் அனைவரையும் அழைத்துக் கொண்டு அக்கட்டிடத்தைப் பார்த்து நடந்தார். கட்டிடத்திற்கு வெளியே ஏராளமான பக்தர்கள் அன்னதானம் சாப்பிட காத்துக் கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் எப்படி உள்ளே நுழைந்து சாப்பிடுவது என்ற கேள்வி சிசுபாலன் உள்பட அனைவரது மனதிலும் தொற்றிக் கொண்டது. வேறு வழியில்லை ஆட்டம் தொடங்குவதற்கு முன் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதற்கு சிறிய கால அவகாசம் மட்டுமே இருப்பதால் எப்படியாவது கட்டிடத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு அனைவரிடமும் கூறினார் சிசுபாலன். அதைக் கேட்டு மற்ற நால்வரும் ஆளுக்கொரு பக்கமாக கூட்டத்திற்குள் நுழைந்து கொண்டனர். அறைக் கதவினை எப்போது திறப்பார்கள் என்று பலர் அங்கு முற்றுகையிட்டு கொண்டிருந்தனர். தாங்கள் திருவிழாவிற்கு வந்துள்ள கலைஞர்கள் என்று சொல்லி வேறு வழியாக உள் நுழைந்து கொள்வோமா என்ற யோசனை சிசுபாலனிற்கு வந்தது. ஆனால் மார்த்தாண்டத்தில் நடந்த ஒரு நிகழ்வால் வந்த யோசனை மறுகணம் அவராலே தார்மீகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. சற்று நேரத்தில் உள்ளிருந்த அனைவரும் சாப்பிட்டு முடிந்ததால் அறைக் கதவு திறக்கப்பட்டது. வேகமாக அறைக்குள் நுழைந்துக் கொள்ள பலர் அங்கு முந்தியடித்துக் கொண்டனர். யார் யாரையோ இடித்துக் கொண்டு முதலில் உள் நுழைந்துக் கொண்டான் ரமணி. ஓடிச்சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டதும் அருகில் கிடந்த நான்கு நாற்காலியையும் ஒன்றாகச் சேர்த்து போட்டுக் கொண்டான். அந்த நாற்காலிகளில் அமர்ந்து கொள்ள வந்த நபர்களிடம் “இங்க ஆளுண்டு, இங்க ஆளுண்டு” என்று சொல்லிக் கொண்டே தூரத்தில் நடந்து வரும் சேகரனைப் பார்த்து “சேகரா சேகரா இங்க வா” என்று கத்திக் கொண்டான். அவனது குரலைக் கேட்டு அங்கு ஓடிச்சென்ற சேகரன் இருக்கையில் அமராமல் மற்ற மூவரும் எங்கு நிற்கிறார்கள் என்று தேடினான். எங்காவது இடம் இருக்கிறதா என்று தேடிக் கொண்டு அலைந்த குட்டப்பனை பார்த்து “குட்டப்போ குட்டப்போ” என்று உரக்கக் கத்தினான். சேகரன் தன்னை அழைப்பதைக் கேட்ட குட்டப்பன் தன் அருகில் நின்ற சிசுபாலனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் பார்த்து நடந்தான். பார்க்கவனை மட்டும் காணாததால் அவன் எங்கே என்று கேட்கச் செல்போனை எடுத்து அவனிற்கு அழைத்தார் சிசுபாலன். தான் அறைக்குள் நுழைய முற்பட்ட போது கதவினை அடைத்து விட்டார்கள் என்றும் நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் நான் அடுத்த பந்தியில் உட்கார்ந்து கொள்கிறேன் என்றார் பார்க்கவன். இதை சிசுபாலன் மற்றவர்களிடம் சொன்னதும். பார்க்கவன் அறைக்குள் நுழைந்துக் கொள்ளாததை நினைத்து அனைவரும் “அய்யோ பாவம்” என்று பரிதாபப்பட்டுக் கொண்டனர்.
பார்க்கவன் சாப்பிட்டு முடித்து வெளிவந்துப் பார்த்தப் போது சிசுபாலனையும், கூட்டத்தினரையும் அங்கு காணவில்லை. உடனே சிசுபாலனை செல்போனில் அழைத்து எங்கிருப்பதாக விசாரித்தான். அலுவலகக் கட்டிடத்திற்கு பின்புறமாக ஒரு சிறு அறை தங்களுக்கு உடை மாற்றிக் கொள்வதற்கும், ஒப்பனைச் செய்வதற்கும் தரப்பட்டுள்ளதாகச் சிசுபாலன் சொன்னதும் அந்த அறையைத் தேடி நடக்கத் தொடங்கினான் பார்க்கவன். அப்போது கந்தசஷ்டி மண்டபத்திற்கு கீழாக இருந்த சூரனின் உருவத்தைப் பலர் சேர்ந்து அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட பார்க்கவன் “சூரனால நம்மளுக்கு இன்னைக்கு பேட்டா” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு பையனை அழைத்து சிசுபாலன் சொன்ன அறை எங்கிருக்கிறது என்று கேட்டுக் கொண்டார். அந்த பையன் ஒருவித சலிப்புடனே பார்க்கவன் அருகில் நடந்து வந்து தூரத்தில் அலுவலகம் என்று எழுந்திருந்த கட்டிடத்தைக் கை நீட்டிக் காட்டிக் கொடுத்து விட்டு அதன் பின்புறமாகத் தான் அந்த அறை இருப்பதாகச் சொல்லிக் கொண்டான். அதைக் கேட்டதும் அந்த பையனிடம் “புரோகிராம் கரெக்டா ஒரு ஏழு மணிக்கு முடியுமா” என்று கேட்க, அந்த பையன் “இல்ல எட்டு மேல ஆயிடும். ஏன்” என்று மீண்டும் அதே சலிப்பு தொனியில் சொன்னான். “ஊர்வலம் உண்டுமா …” இந்த முறை அந்த பையன் பார்க்கவனைக் கவனிக்காமல் மீண்டும் அக்கூட்டத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டான். கேட்டு முடிக்கும் முன்னே தன்னை அவமதிக்கும் தொனியில் அங்கிருந்து நகர்ந்த பையனை பார்த்துக் கொண்டே அவன் அலங்கரித்துக் கொண்டிருந்த சூரனை பார்த்தார் பார்க்கவன். சூரனின் நிர்மூல அமைதி அவரையும் தொற்றிக் கொண்டது.
அறைக்குள் வந்து பார்த்தப் போது ஆசான் உள்பட மற்ற அனைவரும் இப்போது அர்த்தநாரீஸ்வரராகவும், பார்வதி தேவியாகவும், பத்ரகாளியாகவும், கன்னியாகவும் உருமாறி போயிருந்தனர். இனி தாருகனானத் தான் மட்டுமே தயாராக மிச்சமுள்ளதென்பதால் வேகமாகச் சென்று ஒப்பனைக்கு தேவையானத் தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டார். பார்க்கவனைக் கண்டதும் “இனி நீ மட்டும் தான் மேக்கப் போடணும். கொஞ்சம் சீக்கிரமா ரெடியாவு கேட்டியா” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய ஜடா முடியை எடுத்து தரித்துக் கொண்டார் சிசுபாலன். அந்த ஜடா முடி அவரது கால் மூட்டு வரை கொத்தாக விழுந்து கிடந்தது.
ஆங்கில எழுத்து சி வடிவிலான ஓரு சிறு ஸ்டீல் தகடை ஜடா முடியின் வலதுபுறமாகச் சேர்த்துக் கட்டி விட்டு வெளியில் அது சரியாகத் தெரியுமாறு ஒழுங்குப்படுத்திக் கொண்டார். மெல்லிய கறுப்பு நிற நூலால் கட்டப்பட்ட அந்த தகடு தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிறை வடிவிலான சந்திரன் போல் காட்சியளித்தது. நீண்டிருந்த திரிசடையில் பிளாஸ்டிக் மல்லிகை பூக்களைச் சுற்றிக் கட்டியப்பின் பைக்குள் இருந்து மூன்று வெவ்வேறு குழாய்களை வெளியே எடுத்தார் சிசுபாலன். ஓரே வடிவத்திலான அம்மூன்று குழாய்களையும் ஒன்றாக இணைத்தப்பின் சூல வடிலினான மற்றொரு குழாயினையும் அதனோடு சேர்த்து இணைத்துக் கொண்டார். இப்போது அந்த முழு நீள குழாயும் ஒரு சூலமாக அங்கு உருமாறிக் கொண்டது. சூலக் குழாயின் இணைப்பு வெளியே தெரியாமல் இருக்க அந்த இணைப்பு வரும் இடத்தில் சிவப்பு நிறத்திலான ஒரு துணியைக் கட்டினார். அப்போது கோவிலில் முழங்கிய மேளச் சத்தம் ரேடியோவில் ஒலிக்கத் தொடங்கியது. “மேளம் அடிக்கத் தொடங்கியாச்சு டே கமிட்டி காரனுவ இப்ப வருவானுவ ஆட்டத்தத் தொடங்குகன்னு, சீக்கிரமா ரெடியாவுங்க கேட்டீங்களா” என்று மற்றவர்களை துரிதப்படுத்திக் கொண்டே பைக்குள் இருந்து தங்க நிறத்தலான ஒரு பிளாஸ்டிக் பாம்பை எடுத்துத் தன்னுடையக் கழுத்தில் மாட்டிக் கொண்டார். அதோடு சூலத்தை கையிலேந்தி அர்த்தநாரீஸ்வரராகவும் தோற்றம் கொண்டார்.
உதடு முழுவதும் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டிருந்த குட்டப்பனைப் பார்த்து “போதும் டே உன்ன யாரும் இங்க கல்யாணம் பண்ணப் போகல” என்றார் பார்க்கவன். “ஓய் உமக்கு வேண்டி தான் இங்க எல்லாரும் காத்திட்டு இருக்கோம். அங்க மேளம் அடிக்கத் தொடங்கிட்டானுவ நீரு இன்னும் உமக்க மீசையே வரஞ்சு முடிக்கல. சலம்பாம சீக்கிரம் ரெடியாவுற வேலைய பாரும் ஓய்” என்று குட்டப்பன் சொல்லிக் கொள்ள அவனுக்கு பதில் ஏதும் பேசாமல் நீளமான மீசையை வரைந்து முடிக்க ஆயத்தமானார் பார்க்கவன். ஆறு கைகள் கொண்ட உருவத்தை ரமணியின் முதுகுப்புறமாக வைத்து இழுத்துக் கட்டிக் கொண்டப்பின் தன்னை ஒருமுறைக் கண்ணாடியில் பார்த்தான் சேகரன். அவனுடைய அழகான ஒப்பனை அவனைக் கன்னிப் பெண்ணாகவே வெளியில் எடுத்துக் காட்டியது. தன் முக ஒப்பனையில் தெரியும் பெண்ணழகை ரசித்துக் கொண்டே நின்ற சேகரனிடமிருந்து கண்ணாடியை வாங்கி தன் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார் சிசுபாலன். தன்னுடைய ஒப்பனைத் தோற்றம் கொண்டு முழுமையான அர்த்தநாரீஸ்வரராகவே அவர் உருமாறியிருந்தார். சிசுபாலன் என்ற மனித தோற்றத்தை விட்டு அர்த்தநாரீஸ்வரரான தன்னுடைய தெய்வ முகத்தை கண்ணாடியில் ரசித்துப் பார்த்துக் கொண்டே ஒரு பாதி உதட்டில் தனது டிரேட்மார்க் புன்னகையை பதித்தார்.
அர்த்தநாரீஸ்வர சிரிப்பொன்றை உதட்டில் தருவித்துக் கொண்டார் சிசுபாலன். அப்போது அட்வான்ஸ் தந்த நபர் அந்த அறைக்கு வந்து சீக்கிரம் ஆட வருமாறு அவர்களை அழைத்து விட்டு செல்ல மீண்டும் அனைவரையும் துரிதப்படுத்தினார் சிசுபாலன்.

அர்த்தநாரீஸ்வரராகவும், பார்வதி தேவியாகவும், தாருகனாகவும், பத்ரகாளியாகவும், கன்னியாகவும் நடந்து வரும் அவர்களை பக்தர்கள் அனைவரும் வியப்போடு நோக்கினர். ஒரு சிலர் பயபக்தியோடு அவர்களை வணங்கவும் செய்தனர். செண்டை மேளம் வாசிக்கும் இடத்திற்கு வந்ததும் தாங்கள் ஆடுவதற்கு தயார் என்பதை தன் கண்களால் அம்மேளக் கலைஞர்களுக்கு உணர்த்தினார் சிசுபாலன். அம்மேளக்கலைஞர்களும் சிவ பார்வதி நடனம் ஆடுவதற்கு ஏற்றாற்போல் தங்களுடைய மேளத்தை அடிப்பதற்கு தயாராகிக் கொண்டனர். சிசுபாலன் உள்பட அனைவரும் ஒவ்வொரு நபராக அந்த மேளக்கலைஞர்களின் வாத்தியங்களைத் தொட்டு வணங்கி விட்டு தங்களுடைய முதல் ஆட்டத்தை அங்கு அரங்கேற்றத் தொடங்கினர்.
தாருகனை ஆவேசப்பட்டு பத்ரகாளி கொல்லும் போது சுற்றி இருந்த பக்தர்கள் அனைவரும் தங்களை மறந்து அங்கு குரவை ஒலி எழுப்பிக் கொண்டனர். ஆவேசம் கொண்ட பத்ரகாளி ஆறுகைகளுடன் அலறியப்படியே அங்குமிங்குமாக ஓடிக் கொள்ள அதைக் கண்ட கூட்டத்தினரின் வியப்பு அவர்களது தலையை தானே அங்கு உயர்த்தச் செய்தது. ஆட்டத்திற்கேற்ப மேளச்சத்தமும் உச்சம் தொட போரில் தோல்வியுற்று நிலத்தில் கிடந்த தாருகனின் கையை தூக்கி ஆவேசம் கொண்டு படாரென்று தன் வாளால் வெட்டினாள் காளி. வலது கை வெட்டப்பட்டதும் அக்கையை முதுகுப்புறமாக மறைத்து வைத்தார் பார்க்கவன். ஆவேசம் கொண்டு ஓடிய காளி ஒருமுறை வலம் வந்தபின் தாருகனிடம் ஓடி வந்து அவன் இடது கையை வெட்டினாள். பார்க்கவன் அந்தக் கையையும் தன் முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்தார். காளியால் வெட்டப்பட்ட இரு கைகளையும் பக்தர்களுக்கு காட்டாமல் இருக்க அதை முதுக்குப்புறமாக மறைத்து வைத்ததில் பார்க்கவனிற்கு தோள்பட்டை வலிக்கத் தொடங்கியது. கைகள் மீது உடல் எடை அழுத்திக் கொண்டிருக்கும் போதே அவரது ஒவ்வொரு கால்களும் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. வெட்டப்பட்ட ஒவ்வொரு காலையும் வளைத்து இடுப்போடு சேர்த்து வைக்கும் போது கால் மூட்டு சுள்ளென்று இறுகத் தொடங்கியது. அந்த வலி அவருடைய வயிற்றினை அழுத்திக் கொண்டிருக்கும் போது அர்த்தநாரீஸ்வரராக நிற்கும் சிசுபாலனிடம் சென்று தாருகனைக் கொல்வதற்காகச் சூலத்தை கேட்கச் சென்றான் ரமணி. அவரும் தாமதிக்காமல் சூலத்தைக் கொடுக்க தாருகவதம் காட்சி உச்சக்கட்ட விறுவிறுப்போடு அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. மண்டையோடுகள் குலுங்க சூலத்தை ஏந்தி ஆடினான் ரமணி. அந்த ஆட்டம் பத்ரகாளி பூமியில் வந்து ஆடும் ஆட்டமாக காட்சி பூர்வமாக அங்கு தோன்றியது. மேளம் சத்தம் தகிட தகிட தகிட என்று அதன் உச்சக்கட்ட ஓசையில் அங்கு முழங்க அதைக் கேட்டு சூலத்தை ஏந்தி ஒருமுறை கூட ஆவேசமாக ஓடி வலம் வந்த பின் தாருகனின் தலையைக் கொய்ய ஆவேசமானாள் பத்ரகாளி.
அந்த சமயம் சிசுபாலன் பக்கம் நின்ற சேகரன் ஒரு பொம்மைத் தலையைத் தூக்கி ரமணியிடம் எறிந்தான். அதைப் பிடித்ததும் சூலத்தால் பார்க்கவனின் தலையில் ஓங்கிக் குத்துவது போல் செய்துவிட்டு தாருகனின் தலையைக் கொய்தது போல் தன் கையில் இருந்த பொம்மைத் தலையைத் தூக்கி ஆவேசத்துடன் ஓடினான் ரமணி. அதைக் கண்ட பக்தர்கள் பத்ரகாளி தாருகனின் தலையைக் கொய்து ஆவேசத்துடன் ஓடுகிறாள் என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர். ஆவேசம் தணியாமல் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்த பத்ரகாளியை தணிக்கச் சிவபெருமான் காளி ஓடும் பாதையில் வந்து படுத்துக் கொண்டார். அவரை மிதித்தக் கணம் காளியின் ஆவேசம் படிபடியாகத் தணிந்ததுக் கொண்டது. அதைத் தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் ரமணி வெளிப்படுத்தியதும். கைதட்டல்களும், விசில் சத்தங்களும் நாலாபுறமும் இருந்து பறந்தது.
நிலத்தில் கிடந்த சிசுபாலனை கைக்கொடுத்து எழுப்பிக் கொண்டப் பின் தன் கையிலிருந்த திருசூலத்தை அவரிடம் கொடுத்தான் ரமணி. திருசூலத்தை ஏந்தி நின்ற அவரை பல பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டனர். ஒவ்வொரும் தங்களுடைய செல்போனால் அவரைச் செல்பி எடுத்துக் கொண்டனர். பல பக்தர்கள் உணர்ச்சி மிகுந்து அவர் கையில் காணிக்கைகளை அள்ளிக் கொடுத்தனர். கை நிறைய காணிக்கை கிடைத்ததும் அதை தன் கண்களில் தொட்டு வணங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார் சிசுபாலன். அப்போது கோவிலிற்குள் மணி அடிக்கும் சத்தம் கேட்க பக்தர்கள் அனைவரும் கோவிலைப் பார்த்து ஓடிக் கொண்டனர். அங்கிருந்து அரச மரத்தடியில் தன் சூலத்துடன் சென்று அமர்ந்து கொண்டார் சிசுபாலன். அந்த சமயம் ரமணியின் வயிறு கலங்க தன் முதுகுப்புறத்தில் கட்டியிருக்கும் ஆறு கைகள் கொண்ட உருவத்தினை அவிழ்குமாறு குட்டப்பனிடம் கேட்டு கொண்டான். இது தான் நேரம் என்று அவன் கோரிக்கையை குட்டப்பன் ஏற்க மறுக்க அவனை கோபித்துக் கொண்டே சேகரனிடம் சென்றான். சேகரன் கை உருவத்தை அவிழ்த்த மறு கணம் கழிவறையை நோக்கி ஓடினான். அப்போது ஒரு பெண் தன்னுடைய குழந்தையை சிசுபாலனின் கைகளில் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள் “கைலாசநாதர் கைகளில் என் கை குழந்தை. எப்படி ஸ்டோரி கேப்டன்” என்று தன் கணவனிடம் சொல்லிக் கொண்டப் பின் பர்சிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து “அப்பனே மகாதேவா காப்பாத்துப்பா” என்று கொடுத்தாள்.
இரவு எட்டு மணியளவில் சூரம்பாடு நிகழ்ச்சி நிறைவுற்று ஆட்டமும் முடிந்தது. வேஷம் கலைத்த சிசுபாலன் நேராக பணம் வாங்குவதற்கு சென்றார். அரைமணி நேரமாக கோவிலின் வெளியே காத்திருந்தவர் பொறுமையிளந்து அட்வான்ஸ் தந்த நபரை செல்போனில் அழைத்தார். ஒரு வேலையாகக் கடைக்கு வந்திருப்பதாகவும் பத்து நிமிடத்தில் வருவதாகவும் அந்த நபர் சொல்லியதையடுத்து அங்கிருந்த படிகட்டின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கோவிலிற்குள் வருபவரையும், வெளியே செல்பவரையும் பார்த்து பார்த்து காலம் கழிக்கத் தொடங்கினார். அநேகம் பக்தர்கள் அவரை கடந்தும், அவர் முன்பாகவும் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒருவர் கூட அவர் யாரென்று தெரிந்துக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. இதில் அர்த்தநாரீஸ்வரராக அவர் ஒப்பனை செய்து நின்று கொண்ட போது அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் கூட உண்டு. அப்போது அவரை பார்த்துச் சிரித்து சிரித்து பக்தி மயக்கத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களது முகத்தில் இப்போது ஏதோ ஒரு மனிதர் படிக்கட்டில் தன்னந்தனியே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்ற பாவமே தென்பட்டது. யாருக்கும் அவர் முகம் பிடிபடவேயில்லை. ஏதோ மனதிற்குள் நினைத்துக் கொண்டவர் போல் வேகமாகப் பாக்கெட்டிற்குள் இருந்து செல்போனை எடுத்து கேமராவில் தன்னுடைய முகத்தைப் பார்த்தார். ஒரு சொட்டு மேக்கப் கூட இப்போது அவர் முகத்தில் ஒட்டியிருக்கவில்லை. அவர் அவராகவே கேமராவில் தெரிந்தார். தான் தானாக இருப்பதை நினைத்து சிரித்துக் கொண்டே செல்போனை ஆஃப் செய்து பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்குக் கிடைத்தக் காணிக்கை அவர் கைகளில் தட்டுப்பட்டது. பாக்கெட்டிற்குள் இருந்து அந்த காணிக்கைகளை எடுத்துப் பார்த்தார். பத்து, இருபது, ஐம்பது, நூறு, இருநூறு என ரூபாய் தாள்கள் மனிதர்களின் வசதி போல் சுருண்டு கிடந்தன. மடங்கி கிடந்த ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து படியில் வைத்து விட்டு மிச்சம் காணிக்கைகளைப் பாக்கெட்டிற்குள் போட்டுகா கொண்டார். அந்த பத்து ரூபாய் தாளை விரித்து பார்த்தப் போது அதில் சிரித்துக் கொண்டிருந்த மகாத்மா, தன்னைப் பார்த்துச் சிரிப்பதாக அவருக்குத் தோன்றியது. அந்த பத்து ரூபாய் தாளை அப்படியே திருப்பி பின்புறம் இருந்த யானையையும், சிங்கத்தையும் பார்த்தார். அந்த மிருகங்கள் தன்னைப் பார்த்து பிளிறுவதாகவும், கர்ஜிப்பதாகவும் அவருக்கு தோன்றியது. தான் ஒரு சிங்கமென்றும், யானையென்றும் அவர் நினைத்துக் கொண்டிருந்தப் போது அங்கு கட்டப்பட்டிருந்த லைட் வெளிச்சம் ரூபாய் தாளின் முன்புறத்தைக் காட்ட இப்போது மகாத்மா முன்புறம் இருந்த யாரையோ பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதாக அந்த ரூபாய் தாள் காட்டியது. அதைக் கண்டதும் அநேகமாக அந்த பத்து ரூபாய் காணிக்கை அந்த யாரோ ஒருவருடையதாகத் தான் இருக்கும் என்று அவர்களை நினைத்துச் சிரித்துக் கொண்டார் சிசுபாலன். அப்போது அட்வான்ஸ் கொடுத்த நபர் பேசிய தொகையுடன் அவர் அருகே வந்து நிற்க காணிக்கைகளோடு சேர்த்து அந்த பணத்தையும் வாங்கி பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார் சிசுபாலன்.
***
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
