- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18
- றெக்கை – அத்தியாயம் 19
- றெக்கை – அத்தியாயம் 20
- றெக்கை – அத்தியாயம் 21
- றெக்கை – அத்தியாயம் 22
- றெக்கை – அத்தியாயம் 23
- றெக்கை – அத்தியாயம் 24
- றெக்கை – அத்தியாயம் 25
- றெக்கை – அத்தியாயம் 26
- றெக்கை- அத்தியாயம் 27
விக்டோரியா பழக்கடை.. விக்டோரியா பால் பண்ணை. ரெண்டும் ரெண்டு மாதிரி, பெண்கள் அதுவும் இளம் பெண்கள் பணியெடுக்கும் இடங்கள்.அவ்வப்போது சந்தித்துக் கொள்வதுண்டு. மேல் மட்டத்தில் அப்படி நடந்ததோ என்னமோ, கடைநிலை ஊழியர் அளவில் நிகழ்வது சாதாரணம் தான். பால்காரியின் பழங்கள் மற்றும் பழக்காரியின் பால் இவற்றின் பரஸ்பரம் ஸ்திதி பற்றிய கரிசனமான விசாரிப்புகள் கூடவே இயற்கை இவர்களுக்கு வாரி வழங்கிய கவின்மிகு செம்புகள் பரஸ்பரம் வருடப்பட்டு வடிவம் பற்றிய திருப்தியோ அதிருப்தியோ பகிர்ந்து கொள்வது அவ்வப்போது நடப்பதும் வழக்கம் தான், அப்படி நாடு முழுவதும் கெட்ட வார்த்தைக் கதைகள் பகிர்ந்து காலம்கொள்ளப்படும் காலம் கார்னிவலின் போதுதான். நல்ல சமூகக் கொண்டாட்டம்.ஒரே வாரம் அல்லது நீள்விடுமுறை காரணம் தொடர்ந்து ஓய்வு தினங்கள் வந்து போகும்போது அங்கே எழுந்து வரும்;
கடந்த 1899-ம் வருடம் கார்னிவல் ஒரு மாதம் தாமதமாக தேதி குறிக்கப்பட்டடது. நாடு முழுவதும் வெறும் வாய் வார்த்தையாக கிட்டத்தட்ட வதந்தியாக கார்னிவல் கொண்டாட்டம் பல தலை, மேலும் பற்பல வால்களாக நீண்டுசெல்ல, அரசாங்கம் கார்னிவல் கமிட்டி ஒன்றை சடுதியில் நியமித்தது.அந்த நாலு பேர் கமிட்டி மூட்டுவலி மருந்து, ஜலதோஷ நிவாரணி, வல்லாரை லேகியம். கால் ஆணிக்கு சைபால் என்று ஸ்டாக் பண்ணிக்கொண்டு, கதவை சாத்திக்கொண்டு விவாதம் ஆரம்பித்தது, ஆகாரம் என்று யாரோ கமிட்டி மெம்பர் நினைவுகூர, அடிப்படை தேவையான சாப்பாடு, லாகர் பியர், கொஞ்சம் போல் குடிதண்ணீர் கொண்டு வரப்பட்டது.
அதிகாலையிலிருந்து அந்த அறையில் கதவு அடைத்திருந்தது. கார்னிவல் கமிட்டி அங்கே கூடியிருந்து அந்தி நேரம் வரை விவாதித்து வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் ஏழு நாள் கார்னிவல் அனுஷ்டிக்கலாம் என்று பொதுவான முடிவுக்கு கமிட்டி ஏகோபித்த ரீதியில் வந்ததாக அறிவிக்கை சமர்பித்தது. கமிட்டி சிபாரிசு செய்யாவிட்டாலும் பொது மக்கள் கொண்டாடித்தான் இருப்பார்கள்.
கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது தெருவுக்குத் தெரு அலைமோதும் கூட்டத்தால் புலனாகிறது. நிர்மலாவும் லெவியும் தெரு விநோதமெல்லாம் கண்டபடியே அவர்களது சாரட் மெதுவாக நகர்ந்ததில் தெரிந்தது.
ஜாக்கெட் பொடேடோ சுடச்சுட சாப்பிடலாமா ?
லெவி கண்களில் குறும்பு மின்னக் கேட்டான். குளிருக்கு இதமான சீனப் பட்டு போர்த்தியிருந்த நிர்மலா மேல் துணியை அநிச்சயாக சீராக்கிக் கொண்டாள்.

மடச்சி, ஜாக்கெட் பொடடோ ஐநூறு வருஷமா இங்கிலீஷ்காரங்க சாப்பிடறது. உருளைக் கிழங்கை தோல் உரிக்காது அப்படியே வேகவைத்துச் சாப்பிடறது. இது கூட தெரியாமல் என்ன பாபுலர் டாக்டர் நீ?
நாயே என்றபடி பொய்க் கோபம் காட்டி கையில் பிடித்து விசிறிக் கொண்டிருந்த ஜப்பானிய வர்ணக் காகித விசிறியை திருப்பிப் பிடித்து அவனை அரையில் இலக்கு தவறாமல் பொய்யாகத் தாக்கினாள் கலகலவென்று சிரித்தபடி.
கடந்த இரண்டு வாரத்தில் அவர்களின் நெருக்கம் அதிகமாகி இருப்பது ஒருவரை ஒருவர் நாயே, பூனைக் குட்டியே, குரங்கே என்று அழைப்பதில் தெரிகிறது. இரண்டு வாரமாக நிர்மலா கணவன் அல்பி உடல் நிலை மிக அதிகம் மோசமாகி விட்டது. நிர்மலா மருத்துவக் கல்லூரியில் இன்னும் படித்துக்கொண்டிருக்கும் சீனியர் மாணவர்களில் இரண்டு பேரை ஒரு வாரம் அவளது டிஸ்பென்சரியில் மருத்துவம் பார்க்க நியமித்திருக்கிறாள். அங்கே நோயாளிகளின் கூட்டம் அதிகரித்ததே தவிர குறையில்லை.
அல்பிக்கு வந்திருக்கும் ஷயரோகம் குழந்தைகளை பற்றிப் படராமல் முன் ஜாக்கிரதையோடு குழந்தைகள் விசியையும் கிட்டாவையும் அவுட் ஹவுஸில் முத்தச்சன் தம்பதியோடு தற்காலிகமாக தங்க வைத்திருக்கிறாள். லெவி வேறு வேலை இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒரு நாள் விடாமல் டிஸ்பென்சரியில் தனித்திருக்கும் நிர்மலாவுக்கு அட்டெண்டென்ஸ் கொடுக்க வந்து விடுகிறான். கையெழுத்து போட்ட கை சும்மா இருக்குமா என்ன.
வேணாம் இது அல்பிக்கு செய்கின்ற துரோகம் என்று நிர்மலா மனசு நேரம் காலம் இல்லாமல் சதா புலம்பிக் கொண்டிருக்க,அதுவும் பழக்கமாகி இருக்கிறது. அந்த விலக்கப்பட்ட கனிச்சுவை வேண்டித்தான் இருக்கிறது.
தெருவில் பெருங்கூட்டமாக கிழவர்களும் கிழத்தியரும் ஓடி வர பின்னால் தடதடவென்று நான்கைந்து காளைகள் தெருவை ஆக்ரமித்துக் கொண்டு துரத்தி வருகின்றன. முதியோர் சிலர் விடாமல் கூடவே ம்ம்ம்ம்மாமா என்று சத்தமிடுகிறார்கள். எல்லாரும் சிவப்பு மேல்சட்டையும், அதேபடிக்கு கால்சராயும் தரித்திருக்கிறார்கள்.
இது மாட்டுப் பந்தயம் இல்லையே. வயசானவங்க பின்னாலே வயசான மாடுகளை ஒரு ஷோவுக்காக யாரோ ஓட்டி விட்டு ஓடற மாதிரி இருக்கே, நிர்மலா லெவியைக் கேட்டாள்.
அதே தான்.இவங்க மிருகங்களுக்கு துன்பம் இழைப்பது மாட்டுச் சண்டை அதை தடை செய்யணும்னு பிரசாரம் செய்யறாங்க..
நாகசுவரம் இசை எங்கேயோ இருந்து காதில் படிய நிர்மலா நம்ப முடியாமல் ஊ என்று கூச்சலிட்டாள். மழை பார்த்து தலைமேல் விழும் ஆலங்கட்டிகளாக கதனகுதூஹல ராகம் அவள் மேல் பொழிந்தது, ரகுவம்ச சுதா, அனுபல்லவியில் அவள் குரலும் சேர்ந்து இழைந்து உயர்ந்தது.
ஏயப்பா இந்த ரெண்டு மாசத்துலே இப்பத்தான் நம்ம பாஷை காதுலே விழுது நல்லா இருங்க.
நாகசுரக்காரவங எந்த ஊரு? காளையார்கோவில் பக்கம். பெயரும் காளைலிங்கம். வயது இருபது.
லெவி அவனிடம் எப்போது இந் தியா திரும்புவான் என்று கேட்டான். நிர்மலா அட அல்ப்பே என்று லெவியைப் பார்த்து விட்டு காளைலிங்கத்திடம் சொன்னாள் –
ஐயா, ஊருக்கு போகும் முன்பு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போங்க,முகவரி இதுதான் – கைப்பையிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்துக் கொடுத்தாள்.
அம்மா, மன்னிக்கோணும். எனக்கு தமிழ் மட்டும் தான் எழுத, படிக்க வருமுங்கோ.
சரி நானே வந்து கூட்டிப் போறேன். நிர்மலா அந்தப் பையன் மேல் கொஞ்சம் கருணை பொழிந்து விட்டு லெவியிடம் போகலாம் என்று கண் காட்டினாள்.
ஜாக்கிரதையா இருங்க. நம்மூர் மாதிரித்தான் வழிப்பறி, பிக் பாக்கெட், பர்க்லரி,இத்யாதி,
நிர்மலா சொல்லிவிட்டு சிரித்தபடி மண்டபத்துக்கு வெளியே வந்தபோது உள்ளூர் ஃப்ளமிங்கோ இசைக் கலைஞர்கள் உள்ளே போவதைப் பார்த்தாள். அடுத்த இசை நிகழ்ச்சி அவர்களுடையதாக இருக்கும். சேர்ந்து இசைக்கும் லைட் கர்னாடிக் அண்ட் ஃபிளமிங்கோ நிகழ்வாக இருக்குமோ.
அவளை சாரட்டில் ஏற்றி நகர்வது ரொம்ப சிரமமானதாக இல்லை.அந்த ஐந்து நிமிட யுத்தத்தில் லெவி சகஜமாக அவள் உடலைக் கைப்பற்றியிருந்தான்.
கார்னிவல் பெருங்கூட்டம் நகரின் மூலை முடுக்கெல்லாம் வெட்டவெளி சிறிதுமின்றி பரவி வசந்தவிழாக் கொண்டாட்டங்களில் கரைந்து மகிழ்ந்து கொண்டிருந்தது,
சட்டென்று அவசரமாக ஒதுங்கி ஓரம் கட்டி சாரட் நிற்க குதிரைகள் கடுமையாக ஆட்சேபித்துக் கனைத்தன. நிர்மலா ஆனை என்றாள் சுருக்கமாக.
இந்த வருஷம் கார்னிவல் கமிட்டி திட்டமிட்டபடி இந்திய கலாசாரம், கலை, இசை, உணவு என்று தெருக்கள் முழுக்க இந்திய மணம் தூக்கலாகக் கமழ்ந்தது. லெவி நிர்மலாவிடம் சொன்னது —வா, கீழே இறங்கி ஆன என்றால் எத்தனை தும்பிக்கை இருக்கும் என்று போய்ப் பார்க்கலாம்.
சம்ஸ்கிருதத்திலே ஒரு அலுக்காத விஷயம் உலகத்தில் மூன்று உண்டு. அலையடிக்கற சமுத்திரம், கொம்பன் ஆன,, நாட்டை ஆளும் பேரரசன்,
சட்டென்று முலைக்காம்பில், ரெண்டுலேய்யும் நெருப்பு சுட்ட உணர்ச்சி.
நாயே அங்கே என்ன பார்வை. இப்பவே வேணும்னா பறிச்சு தரேன். எடுத்துக்கோ போ.
முந்தானை அலைபாய்ந்து விலக நாலு விஷயம் என்றான் லெவி. எதிரில் நின்ற ஆனை அதெல்லாம் நீயா மகாகவி காளிதாசன் காவியத்தை ஓசைப்படாம திருத்தக் கூடாது என்பது போல் தலையசைத்து நின்றது. செக்கச்செவேல் என்று பெரிய முண்டாசு தலையில் சுற்றிய ஆனப்பாப்பான் – பாகன் – சுவரில் ஒட்டப்படும் ஆனை விசிட் பற்றிய காகிதத்தின் மேல் ஒரு கண்ணும் ஆனை மேல் மற்றதுமாக கால் மாற்றிக்கொண்டு நின்றான்,
இமயமலை அடிவாரத்தில் பிறந்து வளர்ந்து உலகப் பயணம் வந்த ஆனை பெயர் ஜயன். இங்கே கார்னிவல் தினங்கள் முழுக்க இருப்பான் ஜெயன். கார்னிவல் முடிந்த அடுத்த நாள் மறைந்துடுவான், பிரபலமான மந்திரவாதி கே.சி,பாரத் சர்க்கார் மேஜிக் ஷோ நடத்தி முடிவில் ஆனையை மறைய வைப்பார்.
அந்த அறிவிக்கை வாசாலகமாக இது தான் நடக்க இருப்பது என்று தீர்க்கதரிசனம் சொல்ல நிர்மலாவுக்கு நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
தெரு முனையில் நட்டநடுவாக அடுப்பு வைத்து ஜாக்கெட் பொடெடோ தட்டுத் தட்டாக சுடசுட விற்றுக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் ஒரு இளம்பெண்ணும் வார்த்தைக்கு வார்த்தை நடுவில் கெட்ட வார்த்தை பொழிந்தபடி இருந்தனர். லெவியைப் பார்த்து அந்தப் பெண் வேறே ஏதாவது வேணுமா சொல்லு என்று கண் சிமிட்டினாள். அவன் அருகே மழையில் ஒதுங்கி ஒண்டிக்கொண்டு நிற்பது போல் படர்ந்திருந்த நிர்மலா தீவிழிக்கக் கண்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள்
உஷ்ணமாகாதே அழகுப் பெண்ணே பக்கத்து தெருவிலே கதம்ப நாடகம் தெருவை அடைச்சு நடக்குது. மெக்சிகோவிலிருந்து கார்னிவலுக்காக வந்திருக்கு.
மாரை விண்ணென்று நிமிர்த்தி லெவி காதில் விழும்படி கிசுகிசுத்த அந்த இங்க்லிஷ்காரி லெவியின் மனதில் உறைந்து தான் போனாள்.
பிரிட்டீஷ் கதம்ப நாடகம் தெரு நடுவே படுதா கட்டி ரெண்டு நடிகர்கள் மேடையேறி கிணறு இருக்கு தூர் வார வா என்று பெண் ஆணை அழைக்க அவன் பைப் ரிப்பேர் செய்ய ஆள் தேடுகிறான். பாதி பிரிட்டீஷ் இங்க்லீஷ் என்பதால் ஸ்பானியர்கள் முன் எடுபடவில்லை,
கொஞ்ச நேரம் கதம்ப நா டகம் பார்த்து விட்டு சாரட் கிளம்பியது. எதிர்பார்த்ததற்கு மாறாக, நாடகம் லெவிக்கும் நிர்மலாவுக்கும் அநேகமாக புரியவில்லை.
வெளியில் வந்து சில்லென்ற காற்று முகத்தில் மோதுவதை அனுபவித்தபடி நிற்க முதுகில் பாரம் சுமந்து ஒரு மத்திய வயசன் தள்ளாடி வந்து நிர்மலா காலில் இடறியபடி ஓடினான். கூடை மண்ணில் விழுந்து பாதி தின்ற பர்கர், குடைந்து உண்ட உருளைக்கிழங்கு, மெக்சிகன் மிளகாய் சாண்ட்விட் துண்டம் என்று நிர்மலா கால் மேல் பொழிந்தன.
ஃப்ராங்கோ உன் நல்ல பண்புகள் எங்கே போச்சு?
ஓடியவன் முதுகை நோக்கி லெவி கத்தினான். அவன் நின்று லெவியைப் பார்த்தான். திரும்ப ஓடி வந்தான்.
லெவி , ஜாக்கெட் பொட்டேடோ வாங்கிக் கொடு. இல்லேன்னா உன் சினேகிதி கிட்ட இருந்து எடுத்துப்பேன் அவன் நிர்மலா வை கூர்மையாகப் பார்த்தபடி சொன்னான்.
லெவி சட்டைப் பையில் இருந்து காசு எடுத்து அவனிடம் கொடுத்தான்.
ஃப்ராங்கோ இதை எடுத்துக்கிட்டு ஒழி.எச்சல் தீனியை கூடையிலே வாரு. நாற்றம் தாங்கலே.
ஃப்ராங்கோ முகம் கவிந்து வரும் இருளில் ஒளிர்ந்தது. அவன் தரையில் மண்டியிட்டு சிதறிக் கிடந்த எச்சில் பண்டத்தை அவசரமாக வாயிலிட்டு மென்றப டி நிர்மலாவைப் பார்த்தான். என்ன நினைத்தானோ எழுந்து முழங்கால் வரை கூன் போட்டு நிதானமாக கூறியது – கார்னிவல் கடை எதிலே வேணும்னாலும் சாப்பிடு. இண்டியன் பர்கர்னு விக்கறான் பாரு மிளகா பஜ்ஜி என்ன உரைப்பு என்ன ருசி, சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வயிறு காலி ஆக்கிடும் மிளகாய்.
சொல்லியபடி ஓடினான்.
என்ன பார்க்கிறே? என் ஹாஃப் ப்ரதர்.
லெவி ஓங்கிச் சிரித்தான்.
தலைக்கு கொறச்சு இது .அல்லே? நிர்மலா சரியான இங்க்லிஷ் வார்த்தை நினைவு வராமல் மலையாளத்துக்கு மாறினாள் -தலைக்கு வட்டு.
லெவி அவள் நெற்றியை வருடியபாடி சொன்னான் – இல்லே குட்டி, இது மனப் பிறழ்வு இல்லே. அவனுக்கு பற்றியது ஸோம்பி ஸிண்ட்ரோம். உடம்பு முழுக்க நல்லா ஆரோக்கியமா இருக்கும். மனசு மட்டும் ஏதோ ஒரு இலக்கில் போய் குடி கொண்டிருக்கும். காய் நறுக்கறதுன்னா வெட்டிக்கிட்டே இருக்கணும். தேங்காய் துருவறதுன்னா உடைச்சு துருவிக்கிட்டே இருக்கும். நிறுத்தக் கூடாது, நிறுத்தினால் அடுத்த வேலையை சொல்லிக் கொடுக்கணும்,
பாவம் இல்லே? நிர்மலா அவன் தோளைப் பற்றித் தழுவியபடி சொன்னாள்.
உனக்கு பரிதாபம். வேறு பலருக்கு ஸோம்பி ஒரு பிசினஸ். அடிமை வர்த்தகம் தான் அழிஞ்சு போச்சு. அதன் மிச்ச சொச்சம் ஸோம்பி வர்த்தகத்திலே செழிச்சுட்டிருக்கு, முதலீடு கிடையாது. கல்லறைகளில் புத்தம் புதிதாக புதைத்த உடல்கள் மாயானக் கொள்ளையாக கெல்லியெடுத்து ஆப்பிரிக்க ஊடோ மந்திரவாதத்திலே அந்த உடம்புகளுக்கு உயிர் கொடுத்து…
லெவி நிறுத்தமல் சொல்லிப் போனான்,
மெக்காபர் ஆக இருக்கு நிறுத்துடா பன்னி.
ஒரு சிறு ஊர்வலம் வீல்பாரோவை தள்ளிக்கொண்டு ஆடிக்கொண்டு போனது. கூட்டத்தில் ஒருவன் நீட்டி முழக்கி குறும்பொழிவு நிகழ்த்தினான் –
யொபரோ யொபுரொ உங்களுக்கு அருள் புரிய யொபொரோ தெய்வம் வந்திருக்கிறார். ஜாக்கெட் பொடேடோவை ரசிச்சு மொசிச்சு மென்னுக்கிட்டிருக்கார். நீங்களும் ஜாக்கெட் பொடேடோ தின்று வாருங்கள்.யொபொராவுக்கு அந்த தாமதம் ரொம்ப பிடிக்கும். கடவுளும் சொர்க்கமும் காத்திருக்கட்டும்
சாரட் யாரும் கட்டளை இடாமல் நின்றது. நிர்மலா வீடு. ஜாக்கிரதையாக நிர்மலா இறங்கினாள். லெவி அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான்.
( தொடரும்)
***
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
