
சொல்வனம் வழங்கும் “எண்ணெய்யும் தண்ணீரும்” ஆங்கிலப் புத்தகம்
பொதுவாக மக்கள் ஆஃப்ஷோர் ஆயில் பிளாட்பார்ம் என்று சொன்னாலே பிரம்மாண்டமான கிரேன்கள், கம்ப்ரஸர்கள், குழாய் வழித்தடங்கள், மற்றும் பெரிய ஆபத்துக்கள் என்றெல்லாம்தான் கற்பனை செய்து பார்ப்பார்கள். ஆனால், அங்கே வரும் பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளோ, சமயத்தில் கடலில் வாழும் வாழ்க்கை குறித்த முற்றிலும் மாறுபட்ட ஆர்வங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
அவ்வப்போது, நிலப்பரப்பில் (onshore) புதிதாக வேலைக்குச் சேர்ந்த அதிகாரிகள் அங்கே நடக்கும் பணிகளை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக, ஓரிரு வாரங்கள் ஆஃப்ஷோர் பிளாட்பார்ம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஆஃப்ஷோர் பணிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை அவர்கள் தாங்களே நேரடியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இப்படி குறுகிய காலப் பயணிகளாக வரும் பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகள் பல நேரங்களில் எங்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தும். ஐம்பதுகளில் இருந்த ஒரு அதிகாரி ஒரு வாரம் எங்கள் பிளாட்பார்மிற்கு வந்திருந்தார். அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் தீவிரமான முகத்தோடு, “பிளாட்பார்மில் முடி திருத்துபவர் (hairdresser) யாராவது இருக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார். அந்தக் கேள்வி எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ஒரு பிளாட்பார்மில் அப்படி ஒரு வசதி இருக்கக் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லைதான். ஆனால், ஆஃப்ஷோர் வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களுக்கும் அதன் வேகத்திற்கும் பழகிப்போன எனக்கு, அந்தக் கேள்வி மிகவும் விசித்திரமாகத் தோன்றியது. நாங்களெல்லாம் பொதுவாகத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் மட்டுமே பிளாட்பார்மில் தங்குவோம் என்பதால், அத்தகைய தேவைகள் எங்களுக்கு எழாது என்றும், அதனால் எந்தவொரு பிளாட்பார்மிலும் முடி திருத்தும் நிலையங்களோ அல்லது மசாஜ் ஸ்பாக்களோ இருப்பதில்லை என்றும் அவருக்குப் பொறுமையாக விளக்கிப் புரியவைத்தேன்.

லிவிங் குவார்ட்டர்ஸில் இருக்கும் ஒவ்வொரு அறையும் பார்ப்பதற்கு சுத்தமாகவும் நவீனமாகவும் இருந்தாலும், மிகவும் எளிமையாகவே இருக்கும். நான்கு பதுங்கு படுக்கைகள் (bunk beds), ஒரு சிறிய எழுதும் மேஜை மற்றும் நாற்காலி, அப்புறம் சொந்தப் பொருட்களை வைக்க நான்கு குறுகிய அலமாரிகள் (cupboards). அவ்வளவுதான். இருந்தாலும், சற்றே புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால், அந்தச் சிறிய அறைகளைக் கூட ஆச்சரியப்படும் அளவுக்கு வசதியாக மாற்றிக்கொள்ள முடியும்.
பாத்ரூம்களும் டாய்லெட்டுகளும் பொதுவானவை (communal) என்றாலும், குவார்ட்டர்ஸிற்குள் அவை போதிய அளவில் இருந்தன; மேலும் ஃபீல்டில் வேலை பார்க்கும் இடங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக நடந்த ஒரு சிறிய சுவாரசியமான சம்பவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. எங்களது ஆய்வகத்தைச் சேர்ந்த ஒரு சீனியர் இன்ஜினியர், இன்ஸ்ட்ருமென்டேஷன் லேபுக்கு பின்னால் இருந்த யூரினலைப் பயன்படுத்திவிட்டு, ஃபிளஷ் செய்வதற்காக அந்தச் சிறிய லீவரை அமுக்கியுள்ளார். அங்கே நீர் அழுத்தம் மிக அதிகமாக இருந்ததால், தண்ணீர் வேகமாக அடித்து, மூத்திரத்தை கழுவி விடுவதோடு நிற்காமல், எகிறி அவர் மேலேயும் கொஞ்சம் பட்டுவிட்டது. இதனால் கோபமடைந்த அவர், நேராக அறைக்குச் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டு, அடுத்த சில நிமிடங்களில் நேரே பிளாட்பார்மின் வாட்டர் கன்ட்ரோல் பேனலுக்குச் சென்று மொத்தமாய் எல்லா கழிவறைகளுக்கான பிரஷர் செட்டிங்ஸை மாற்றி அமைத்துக் குறைத்துவிட்டார்.
இதை பார்த்த எனக்குள் ஒரு லேசான நகைப்பு எழுந்தது. நாங்கள் கருவியியல் பொறியாளர்கள் என்பதால், அந்த கட்டமைப்புகளுக்கு நாங்களும் ஒரு வகையில் பொறுப்புதான். எனவே நாங்களே நேராகச் சென்று அதைச் சரிசெய்து கொள்ள முடிந்தது; இதற்காக மெயின்டனன்ஸ் பிரிவைத் தொடர்பு கொண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கவில்லை.
அந்தக் காலத்தில் பிளாட்பார்மில் 48-அங்குல CRT தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் அதுதான் மிகப்பெரிய தொலைக்காட்சி சைஸ்! சுமார் அறுபது பேர் அமரக்கூடிய, தியேட்டர் போன்ற இருக்கை வசதி கொண்ட ஒரு பிரத்யேக டிவி அறையில் அது வைக்கப்பட்டிருந்தது. அப்போது டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள் கிடையாது; சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் அறிமுகமாக இன்னும் சில ஆண்டுகள் மீதமிருந்தன. நாங்கள் கரையிலிருந்து மிகத் தொலைவில் இருந்ததால் கேபிள் இணைப்புகளும் சாத்தியமில்லை.
இருந்தபோதிலும், பிளாட்பார்மின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த ஆண்டெனா மூலம் எப்போதாவது ஒளிபரப்பு அலைவரிசைகளைப் பிடிக்க முடிந்தது. திறந்த கடலில் கட்டிடங்களோ அல்லது வேறு தடைகளோ இல்லாததால், வானிலை ஒத்துழைக்கும் நாட்களில் மும்பையிலிருந்து வரும் சிக்னல்கள் எங்களுக்குக் கிடைக்கும். அந்தக் காலத்தில் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தூர்தர்ஷனின் ஒன்றிரண்டு சேனல்கள் மட்டுமே இருந்தன.
அதில் எங்களுக்கு வேடிக்கையாக இருந்த விஷயம் என்னவென்றால், எப்போதாவது ஒருமுறை மேற்கு திசையில் இருக்கும் வளைகுடா நாடுகளின் (Gulf region) தொலைக்காட்சி ஒளிபரப்புகள் எங்களுக்குக் கிடைக்கும். அலைவரிசைகள் நிலையாக இருக்காது, படம் அடிக்கடி மறைந்து மறைந்து தோன்றும். ஆனால், சிக்னல் எப்போதாவது நிலையாகக் கிடைக்கும்போது, நாங்கள் அந்தச் சேனல்களை மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்போம். குறிப்பாக, அரபு மொழியில் வரும் விளம்பரங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அரிசியும் பருப்பும் சமைக்கப் பயன்படும் பிரஷர் குக்கர்களுக்கான விளம்பரங்கள் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை நீளும். அக்காலத்திலேயே இந்தியத் தொலைக்காட்சி விளம்பரங்கள் பொதுவாக முப்பது நொடிகள் மட்டுமே இருக்கும் என்பதால், இவ்வளவு நீளமான அரபு விளம்பரங்களைப் பார்ப்பது எங்களுக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
பிளாட்பார்மில் விஹெச்எஸ் (VHS) மற்றும் பீட்டாமேக்ஸ் (Betamax) வீடியோ கேசட்டுகளைக் கொண்ட ஒரு சிறிய நூலகமும் இருந்தது. அவற்றில் The Sound of Music, Fiddler on the Roof, மற்றும் Lawrence of Arabia போன்ற உலகப் புகழ்பெற்ற கிளாசிக் படங்கள் இருந்தன. ஆனால், அவற்றை ரசித்துப் பார்க்க அங்கே யாரும் ஆர்வம் காட்டவில்லை. அங்கே இருந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் சாதாரண தொழிலாளர்கள் என்பதால், அவர்களின் முதல் தேர்வு இந்தித் திரைப்படங்களாகவே இருந்தன. பாலிவுட்டின் புதிய படங்கள் விஹெச்எஸ் கேசட்டுகளில் வந்திறங்கிய அடுத்த நொடியே, இரவு உணவிற்குப் பிறகு டிவி அறை முழுவதும் ஆட்கள் நிரம்பிவிடுவார்கள்.

அந்த பாலிவுட் கேசட்டுகள் பலவும் தரமற்ற முறையில் திருட்டுத்தனமாகத் தயாரிக்கப்பட்ட (pirated) பிரதிகளாகவே இருப்பது வழக்கம். அவற்றின் படம் மங்கலாகவும், ஒலி தெளிவாக இல்லாமலும் இருக்கும். டிவி அறையில் புதிய ஹிந்தி படம் பார்க்க அலை மோதும்போது எங்களைப் போன்ற தெளிவான காட்சித் தரத்தை விரும்புபவர்கள், சிறிய திரைகள் கொண்ட மற்ற இடங்களுக்கு மெல்ல நழுவிவிடுவோம். அப்படிப்பட்ட ஒரு இடம்தான் ஃபீல்டு ப்ரொடக்ஷன் சூப்பரிண்டெண்டெண்ட் (FPS) அதிகாரி தங்கியிருந்த அறை. அங்கே ஒரு சிறிய தொலைக்காட்சியும், ஹாலிவுட் கிளாசிக் மற்றும் சர்வதேசத் திரைப்படங்களின் அசல், உயர்தர கேசட்டுகளும் இருக்கும்.
அந்தக் காலத்து நினைவுகளில் ஒன்று இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. என் சொந்த ஊரான திண்டிவனத்திற்கும் மும்பைக்கும் இடையே நான் ரயிலில் பயணம் செய்தபோது, லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான போரும் அமைதியும் (War and Peace) புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். பின்னர் பிளாட்பார்மில் இருந்தபோது, அதே கதையின் திரைப்பட வடிவத்தை வீடியோவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தைப் படித்து முடித்த கையோடு அந்தப் படத்தைப் பார்த்ததால், என் கற்பனையில் விரிந்த காட்சிகள் திரையில் அப்படியே உயிர்பெற்று வந்தது போன்ற ஒரு அலாதியான அனுபவம் எனக்கு. இப்போதும் என் ஃபோனிற்க்குள் MP3 வடிவில் உட்கார்ந்துகொண்டு கவிதா கிருஷ்ணமூர்த்தி ஹுயி ஹுயி என்று முணுமுணுத்தபடி ‘ஹவா ஹவாயி’ பாடலைப் பாட ஆரம்பித்தால், வெகு இயல்பாக என்னை பிளாட்பார்ம் டிவியில் சித்ரஹார் பார்த்த நாளுக்கு தூக்கிச் சென்று விடுகிறார்!
கடந்த பல தசாப்தங்களில் விஷயங்கள் மாறியிருக்கலாம். ஆனால், அந்தக் காலத்தில் இந்தியாவிற்கான பெரும்பாலான ஆஃப்ஷோர் பிளாட்பார்ம்கள் ஜப்பான் அல்லது தென்கொரிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டன. எங்களது புரிதலின்படி, ஜப்பானிய நிறுவனங்களை விடத் தென்கொரிய நிறுவனங்கள் அமைத்த பிளாட்பார்ம்களின் கட்டமைப்புச் செலவு குறைவாக இருக்கும். இந்த வேறுபாடு, சில சிறிய ஆனால் கவனிக்கத்தக்க செயல்பாட்டு முறைகளில் பிரதிபலிக்கும். உதாரணமாக, ஜப்பானியக் கட்டுமானக் குழுவினர் வேலை முடிந்ததும் தாங்கள் பயன்படுத்திய சிறிய பவர் டிரில்கள், சுத்தியல்கள், மல்டிமீட்டர்கள் மற்றும் இதர கைக்கருவிகளை அங்கேயே விட்டுச் சென்றுவிடுவார்கள். இந்த உபகரணங்கள் பின்னர் பிளாட்பார்ம் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு உதவும்.
ஆனால், தென்கொரியக் குழுவினரோ கிளம்பும் போது அனைத்துப் பொருட்களையும் மிகக் கவனமாகச் சேகரித்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். கருவிகள் மட்டுமின்றி, சிறிய அளவிலான வயரிங் டேப்புகள் அல்லது குழாய்கள் போன்ற மிகச் சிறிய பொருட்களைக் கூட விடாமல் மூட்டை கட்டிக் கொண்டு போய்விடுவார்கள்.
இந்தச் சிக்கன நடவடிக்கை பொழுதுபோக்கு வசதிகளிலும் தெரிந்தது. ஜப்பானிய நிறுவனங்கள் கட்டிய பிளாட்பார்ம்களில் பெரிய அளவிலான விஹெச்எஸ் திரைப்பட சேகரிப்புகளும், சிறந்த உடற்பயிற்சி உபகரணங்களும், அதிநவீன பொழுதுபோக்கு அமைப்புகளும் இருந்ததாகக் கூறுவார்கள். நான் பணிபுரிந்த தென்கொரியப் பிளாட்பார்மில் திரைப்படங்களின் எண்ணிக்கையும், பொழுதுபோக்கு வசதிகளும் சற்று குறைவாகவே இருந்தன. அதற்கு முன்பு நான் வேறு பிளாட்பார்ம்களில் பணிபுரிந்ததில்லை என்பதால், ஒப்பீடு செய்ய எனக்குத் தெரியவில்லை. இருந்தபோதிலும், அங்கு எங்களுக்குக் கிடைத்த வசதிகளே மிகவும் தாராளமாகவே எனக்குத் தோன்றியது.
பிளாட்பார்ம் முழுவதும் ‘பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்’ (PAS) வசதி இருந்தது. இது அறிவிப்புகள் செய்வதற்கும், அவசரக்கால அலாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தில் தெருக்களில் இருக்கும் பொதுத் தொலைபேசிகள் (Public payphones) போல, பிளாட்பார்ம் முழுவதும் ஆங்காங்கே PAS ஸ்டேஷன்கள் வைக்கப்பட்டிருந்தன.
பிளாட்பார்மில் எங்கே இருக்கும் ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்றாலும், ஒரு பட்டனை அழுத்தி, சிஸ்டம் மூலம் அவர் பெயரை அறிவிக்கலாம். அறிவிப்பு பிளாட்பார்ம் முழுதும் அமைக்கப் பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளில் எதிரொலிக்கும். தன் பெயரைக்கேட்ட அந்த நபர் தனக்கு அருகில் இருக்கும் ஸ்டேஷனில் ரிசீவரை எடுத்து, இருக்கும் ஐந்து சேனல்களில் ஏதேனும் ஒன்றிற்கு மாற்றிப் பேசலாம். பழைய பார்ட்டி-லைன் (party-line) டெலிஃபோன் சிஸ்டம் மாதிரி, பிளாட்பார்மில் இருக்கும் வேறு யார் வேண்டுமானாலும் இன்னொரு ரிசீவரை எடுத்து நீங்கள் பேசுவதைக் ஒட்டுக் கேட்க முடியும் அல்லது உரையாடலில் பங்கேறக்க முடியும். ரகசியமாகப் பேச வேண்டுமென்றால், பிளாட்பார்மில் இருக்கும் டெஸ்க் ஃபோன்களுக்கு போய் விடுவோம்.
எங்கள் இன்ஸ்ட்ருமென்டேஷன் குழுதான் இந்த PA சிஸ்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்தது. லேபில் சும்மா கிடந்த இரண்டு ஸ்பேர் ஸ்பீக்கர்களையும், ஒரு PA ஆம்ப்ளிஃபையரையும் பயன்படுத்தி, எங்களது லேப் உறுப்பினர்கள் நாங்கள் தங்கியிருந்த லிவிங் குவார்ட்டர்ஸின் இரண்டு அடுத்தடுத்த அறைகளை (அறைகள் 219 மற்றும் 220 என்று இன்னமும் நினைவிருக்கிறது) இணைத்து ஒரு எளிய மியூசிக் அமைப்பை உருவாக்கினார்கள். மாலை வேலை முடிந்து வந்ததும், நாங்கள் அதில் பாடல்களைப் போட்டுக் கேட்போம். மற்ற அறைகளில் இப்படியான வசதிகள் எதுவும் இல்லாததாலும், மொபைல் போன்களோ அல்லது தனிநபர் மியூசிக் பிளேயர்களோ வராத காலம் அது என்பதாலும், எங்களுக்காக இந்தச் சிறிய வசதியை நாங்களே உருவாக்கிக் கொண்டதை நினைத்து எங்களுக்குள் ஒரு அமர்த்தலும், பெருமிதமும்.
அங்கு அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு பொழுதுபோக்கு அம்சம், டேபிள் டென்னிஸ் விளையாட்டு. இது பிளாட்பார்ம் அமைக்கப்பட்ட போதே வந்ததா அல்லது பின்னர் ஊழியர்களுக்காக வாங்கப்பட்டதா என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால், மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டு உபகரணம் அதுதான். ஒரு சிறிய அறைக்குள் விளையாடக்கூடிய சில விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்பதால் ஊழியர்கள் இதை மிகவும் விரும்பினர். மாலை நேரங்களில் அந்த அறை எப்போதுமே ஆட்களால் நிறைந்திருக்கும்; அடுத்தடுத்துப் போட்டிகள் நடந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் நாங்கள் சிறிய அளவிலான டோர்னமென்ட்களையும் நடத்துவோம்.
பிளாட்பார்மில் முறையான உடற்பயிற்சிக் கூடம் (gym) எதுவும் இல்லை என்றாலும், பிளாட்பார்மின் மேல் தளத்தில் சில எளிய உடற்பயிற்சி உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. பளுதூக்கும் கருவிகள் (free weights) மற்றும் சில உடற்பயிற்ச்சிக்கான உபகரணங்கள் அங்கே இருந்தன. இரவு உணவிற்கு முந்தைய நேரங்களில் ஊழியர்கள் அவற்றைச் தினமும் சிரத்தையாக பயன்படுத்தி வந்ததை கவனித்திருக்கிறேன்.
அந்த மேல் தளத்திற்கு கூரை எதுவும் கிடையாது. பிளாட்பார்மில் தடைகள் ஏதுமின்றி ஒருவர் நிம்மதியாக நடப்பதற்கோ அல்லது ஓடுவதற்கோ ஏற்ற சில திறந்தவெளிகளில் அதுவும் ஒன்று. அது பெரிய இடம் இல்லை என்றாலும், சமதளமாகவும் தடைகளற்றதாகவும் இருந்தது. மாலை நேரங்களில், மக்கள் அங்கே மெதுவாக ஓடுவதையோ அல்லது வேகமாக நடைப்பயிற்சி செய்வதையோ நான் அடிக்கடிப் பார்ப்பேன். அங்கே வீசும் கடல் காற்றோடும், தொடுவானத்தில் மறையும் சூரியனின் அழகோடும், அந்த மேல் தளம் பிளாட்பார்மின் மிகவும் அமைதியான ஒரு பகுதியாக விளங்கியது.
ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை, பிளாட்பார்ம் ஊழியர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் எளிய கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. டியூட்டி இல்லாத பணியாளர்கள் அனைவரும் லிவிங் குவார்ட்டர்ஸில் உள்ள பெரிய இடங்களான உணவகம் அல்லது டிவி அறையில் ஒன்றுகூடுவார்கள். ஆர்வமுள்ள சக ஊழியர்கள் செய்யும் நகைச்சுவை நாடகங்கள், பாடும் பாடல்கள் அல்லது அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த புல்லாங்குழல், ஹார்மோனியம் போன்ற சிறிய இசைக்கருவிகளை வாசிப்பதைக் கண்டு ரசிப்பார்கள். பார்ப்பவர்கள் அனைவரும் மிகச் சாதாரணமான திறமைகளைக்கூடக் கைதட்டி, உற்சாகப்படுத்தி ஆதரவளிப்பது வழக்கம்.
ஒருமுறை நானும் ஒரு எளிய தமிழ்த் திரைப்படப் பாடலைப் பாட முயற்சி செய்தேன். நான் பாடத் தொடங்குவதற்கு முன், “இந்தப் பாடலை பாடுவதான் மூலம் பழம்பெரும் பாடகரான கே. ஜே. யேசுதாஸ் அவர்களை நான் கேலி செய்வதாக யாரும் நினைத்துவிடக் கூடாது” என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். அந்த அறிவிப்பைக் கேட்டு அனைவரும் ரசித்துச் சிரித்த அளவுக்கு, நான் பாடிய பாட்டை ரசித்தார்களா என்பது சந்தேகம்தான்!
பிளாட்பார்மில் ஓராண்டு கழித்த பிறகு, அங்கே இருக்கும் அறிவிப்புப் பலகையை (noticeboard) பயன்படுத்தி ‘கிராஃபிட்டி’ (Graffiti) என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை உருவாக்க முயற்சித்தேன். ஊழியர்களிடமிருந்து சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளைச் சேகரித்து, ஒரு சிறிய ஆசிரியர் குழுவின் மூலம் அவற்றில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து, அனைவரும் படிக்கும்படி பலகையில் ஒட்டுவதுதான் திட்டம். மூன்று வாரங்களுக்கு ஒருமுறை புதிய படைப்புகள் ஒட்டப்பட்டு, புதிய “இதழ்” வெளியாகும்.
ஆனால், இந்த முயற்சி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஏனெனில் ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு இந்திய மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தனர். ஆங்கிலம் அலுவலக மொழியாகவும், இந்தி பெரும்பாலானோருக்குப் புரியும் மொழியாகவும் இருந்த போதிலும், கீழ்நிலை ஊழியர்கள் பலருக்கு இவ்விரண்டு மொழிகளிலும் சரளமாக எழுத வராது. எங்களால் முடிந்த மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், பிளாட்பார்ம் பெயிண்டராக இருந்த ராஜு ஓய்வு நேரத்தில் வரைந்த சில ஓவியங்களை அங்கே ஒட்டுவதுதான். அவரது ஓவியங்களை அனைவரும் வியந்து பாராட்டுவார்கள்; அவரது விரல் நுனியில் கலை விளையாடுகிறது என்று புகழ்வார்கள். “சிறந்த கலைக்கு மொழிகள் தடையில்லை, அது எல்லைகளைக் கடந்து எளிதாகச் சென்றடையும்” என்கிற மற்றொரு பாடத்தை பிளாட்பார்மின் இந்த பன்முகத்தன்மை எனக்குக் கற்றுத் தந்தது.
பிளாட்பார்ம் வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்க இன்னும் சில எளிய முயற்சிகளும் உதவின. உணவக மேலாளராகப் பொறுப்பேற்ற சத்யா என்பவர், ஆறு மாதங்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்துவிட்டுப் பின்னர் மாற்றலாகிச் சென்றார். அவர் உணவகத்தில் மாதாந்திரச் சிறப்பு நிகழ்வு ஒன்றை அறிமுகப்படுத்தினார். அங்கே இருந்த எல்லைகளுக்குள்ளேயே, உணவகத்தின் விளக்குகளை ஒரு கிளப் போல மாற்றி, சின்ன ஸ்பீக்கர்கள் வழியே இதமான இசையை தவழவிட்டு, சுவையான தின்பண்டங்கள் மற்றும் ஆல்கஹால் இல்லாத சிறப்புப் பானங்களை வழங்கி, இரவு உணவிற்கு ஒரு கேக் வெட்டுவதற்கும் ஏற்பாடு செய்தார். ஊழியர்களுக்கு ஒரே குஷி. ஆனால், அவருக்குப் பிறகு வந்த மேலாளர், “இது நிறுவனத்தின் ஒப்பந்த விதிமுறைகளில் இல்லை” என்று கூறி அந்த நிகழ்வுகளை நிறுத்தி விட்டார். எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இது எனக்கு ஒரு முக்கியப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தது: “வேலை செய்யும் அலுவலகங்கள் மகிழ்ச்சிகரமான இடங்களாக இருப்பதற்கு கம்பெனி விதிகள் மட்டும் காரணமல்ல; மேலாளர் சத்யா போன்ற தனிநபர்கள் காட்டும் ஆர்வமும், கடமையைத் தாண்டி அவர்கள் செய்யும் முயற்சிகளுமே அதற்கு காரணம். ஆர்வம் ஊக்குவிக்கப்பட்டால், நல்ல நடைமுறைகள் தொடரும்; இல்லையெனில், எவ்வளவு சிறந்த யோசனைகளாக இருந்தாலும் அவை காலப்போக்கில் அழிந்துவிடும்.”
என்னால் இயன்றவரை, எனது பணிக் காலத்திலும் அந்த ‘ஒப்பந்த விதிகளையும் தாண்டிச் செயல்படும்’ பண்பை நான் கடைப்பிடிக்க முயற்சித்திருக்கிறேன். எனது குழுவினரும், அமைப்புகளும் அதற்கு மிகவும் நல்ல முறையில் ஒத்துழைப்பதை நான் கண்டிருக்கிறேன்.
கடலிலிருந்து எழும் அலைகள் பிளாட்பார்மைத் தாங்கி நிற்கும் தூண்களின் மீது மோதும் மிகக் கீழ் தளத்திற்கு (lowermost deck) நாங்கள் செல்லக் கூடாது என்ற விதி இருந்தது. இருந்தாலும், சில நேரங்களில் உணவகப் பணியாளர்களோ அல்லது பிற ஊழியர்களோ அங்கே சென்று, பெரிய மீன்களைப் பிடித்து, சமைத்துச் சாப்பிடுவார்கள். நான் சைவ உணவை உண்பவன் என்பதால், அத்தகைய முயற்சிகளில் என்னால் ஒருபோதும் பங்கெடுக்க முடியவில்லை. அதேபோல, அங்கே மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், பொழுதுபோக்கிற்காக ஊழியர்கள் திராட்சை பழங்களை வைத்து ஒயின் தயாரிப்போம் என்றோ அல்லது தானியங்களைக் கொண்டு பீர் தயாரிப்போம் என்றோ முயல்வார்கள். முறையான உபகரணங்களும் பொருட்களும் இல்லாததால் அவை ஒருபோதும் மதுபானமாக மாறியதில்லை; இருந்தாலும் தாங்கள் தயாரித்த பானத்தை ஏதோ உண்மையான மதுபானம் போலக் கற்பனை செய்து குடித்துவிட்டு அவர்கள் மகிழ்வார்கள். குழந்தைகள் விளையாடும் ‘பாசாங்கு விளையாட்டு’ (pretend play) தான் எனக்கு அப்போது நினைவுக்கு வரும்.
அதிகாரிகள் பிரிவில் இருந்த எங்களைப் போன்ற இன்ஜினியர்கள் சிலர், தங்களது வேலைகளைத் தாண்டி, சாதாரண தொழிலாளர்கள் செய்ய வேண்டிய சில கடினமான வேலைகளைச் செய்து பார்க்க ஆசைப்படுவதும் இப்படித்தான். உதாரணமாக, கிரேன்களை இயக்குவது (crane operation). பொதுவாக, பள்ளிப் படிப்பை முடித்து, அதற்கான முறையான பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற ஊழியர்கள் மட்டுமே இதைச் செய்வார்கள். இதையே ஒரு தொழிலாகச் செய்ய வேண்டும் என்றால் அதன் சுவாரசியம் சீக்கிரம் குறைந்துவிடும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், என் சக ஊழியர் ஷியாம், கிரேன் ஆபரேட்டரான கோவிந்தராஜனிடம் தனக்கு ஒரு வாய்ப்புத் தருமாறு கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. கோவிந்தராஜனும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தார். ஒரு பட்டதாரி இன்ஜினியராகவும் அதிகாரியாகவும் இருந்த ஷியாம், மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று கிரேன் கேபினுக்குள் ஏறி அமர்ந்து, ஒரு சிறிய சப்ளை கப்பலிலிருந்து ஓரிரு கூடைகளைப் பாதுகாப்பாக மேலே தூக்கினார். அப்போது அவர் முகத்தில் வழிந்த அந்த அளவற்ற மகிழ்ச்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது!

இன்றைய காலகட்டத்தில், பல்வேறு நவீன சாதனங்களும், கணினியிலேயே விமானத்தை இயக்குவது போன்ற சிமுலேட்டர் மென்பொருட்களும் எளிதாகக் கிடைப்பதால், இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் பெரியவர்களைப் போல கனரக வாகனங்களை இயக்குவதிலோ அல்லது ஓட்டுநர் உரிமம் (driving license) வாங்குவதிலோ கூட அத்தகைய குழந்தைத்தனமான ஆர்வம் இருப்பதைக் காண முடிவதில்லை.
அந்தப் பிளாட்பார்ம் ஒரு விசித்திரமான பொருளாதாரச் சூழலையும் உருவாக்கியிருந்தது. அங்கே இலவச உணவு, துணி துவைக்கும் வசதி, குளிர்பானங்கள் என அனைத்தும் வழங்கப்பட்டதால், ஜூஹு ஹெலிபேஸிலிருந்து ஹெலிகாப்டரில் ஏறும்போதே நாங்கள் எங்கள் பணப்பைகளை (wallets) பைக்குள் பத்திரமாக வைத்துவிடுவோம். பிளாட்பார்மில் இருக்கும்போது பணத்தைச் செலவழிக்க வேண்டிய தேவையே இருக்காது. ஆனால், அதற்கு ஒரு சுவாரசியமான விதிவிலக்கு உண்டு. அக்காலத்தில் இந்தியா பல துறைகளில் சுயாதிபத்தியக் கொள்கையைப் பின்பற்றி, இறக்குமதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் வரிகளையும் விதித்திருந்தது. நாங்கள் சர்வதேசக் கடல் எல்லைக்கு மிக அருகில் இருந்ததால், பிளாட்பார்மிற்கு வரும் பிற வெளிநாட்டுப் படகுகளோ அல்லது கப்பல்களோ சில வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டு வந்து அங்கே விற்பனை செய்ய முடியும்.
இந்திய ஊழியர்கள் அந்தப் பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதால், அந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பல்களில் இருந்த ஊழியர்கள், பிற நாடுகளில் மலிவாகக் கிடைக்கும் பொருட்களை வாங்கி வந்து, எங்களிடம் அதிக விலைக்கு விற்று ஒரு ரகசிய பகுதிநேரத் தொழிலாகவே அதைச் செய்து வந்தனர். அப்படி விற்கப்படும் பொருட்கள் மிகவும் சாதாரணமானவைதான் – மாய்ஸ்சரைசிங் க்ரீம்கள், வாசனைத் திரவியங்கள், வெளிநாட்டு பிராண்ட் சிகரெட்டுகள் போன்றவைதான் முக்கியமாக இருக்கும். நான் புகைபிடிப்பதில்லை என்பதால் சிகரெட்டுகளில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் எப்போதாவது நான் வாங்கிச் செல்லும் வாசனைத் திரவியங்களும், சரும க்ரீம்களும் என் அம்மா, சகோதரி மற்றும் வீட்டில் இருக்கும் பெண்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும்; ஏனெனில் கடைகளில் அத்தகைய வெளிநாட்டு பிராண்டுகளை அவர்களால் அந்தக்காலத்தில் எளிதில் வாங்க முடியாது. 1990-களின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இன்று இந்தியக் கடைகள் முழுவதும் சர்வதேச பிராண்டுகள் நிறைந்து கிடக்கின்றன. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அந்த 1980களின் இறுதி நாட்கள் எளிய மகிழ்ச்சிகள் நிறைந்த ஒரு மாசற்ற மலரும் நினைவுகளைத் தரும் காலமாகத்தான் மனதில் வலம் வருகிறது!
(முற்றும்)
புத்தகத்தின் முழுப் பதிப்பு இப்போது பல வலைதளங்களில் பல வடிவங்களில் நீங்கள் வாங்க காத்திருக்கின்றது. சென்ற இதழில் கேட்டுக்கொண்டது போல, டஜன் கணக்கில் புத்தக பிரதிகளை ஆர்டர் செய்து, படித்து, பகிர்ந்து ஆதரவு அளியுங்கள், நிறை குறைகளை அலசி விமர்சனங்களை எழுதுங்கள். குறைகளை அடுத்த பதிப்பில் நிவர்த்திக்க காத்திருப்போம். சந்தடி சாக்கில் உங்களுக்கு MSF அமைப்பை ஆதரித்த புண்ணியம் போனஸ்!
புத்தகம் சார்ந்த சில இணைய இணைப்புகள்:
புத்தகத்தை பற்றிய ஒலிச்சித்திர அறிமுகம், தமிழில்!
ஒரு சிறிய கப்பலில் நின்றுகொண்டு பிளாட்பார்மை நோக்கி நான் ஏன் ஒருமுறை துப்பாக்கியால் சுட வேண்டியிருந்தது என்ற கதையை என்னுடன் பணிபுரிந்த இன்டெல் நிறுவன பொறியாளர்களுக்கு நான் விளக்கிய பேச்சக்கூச்சா ஸ்டைல் உரை: https://youtu.be/dzaY9GLWlMU. நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த புதிய இளம் பொறியாளர்களோ தற்போது இத்தகைய பிளாட்பார்ம்களில் வேலை செய்பவர்கள் என்றால் தங்களின் புதிய அனுபவங்களை நிச்சயம் பகிருங்கள்!

புத்தகத்திற்காகவே உருவாக்கப்பட்ட புதிய இணைய தளம்:
https://svedantham.wixsite.com/oilandwater
நீங்கள் இந்தியாவில் புத்தகத்தின் கடின அட்டைப் பதிப்பு மற்றும் மென் அட்டைப் பதிப்புக்களை குறைந்த விலையில் இந்த இணைப்புகள் வழியே வாங்கலாம்.
இந்தியாவுக்கு வெளியே அமெசான் மற்றும் கூகிள் இணையதளங்களில் புத்தகம் காகித, மின், ஒலிவடிவங்களில் கிடைக்கும்.
முந்தைய பகுதி:
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.

மிகவும் சிறப்பாக இருந்தது. முழுபுத்தகத்தையும் வாங்கி ஒரே மூச்சில் படிக்க தூண்டுகிறது. கல்லூரி நாட்களில Alistair Mac Lean எழுதிய புதினங்களில் கப்பல், நீர் மூழ்கிகள், எண்ணெய் எடுக்கும் மேடைகள் இவைகள் கதைகளமாக இருக்கும். கதையை ஒரு மூச்சில் படித்துவிட்டு இந்த பின்புல வர்ணனைகளை மறுபடி மெதுவாக படிப்பது என் வழக்கம். சுந்தர் இந்த ஆழ்கடல் மேடைகளை பின்புலமாக கொண்டு மர்ம கதைகள் புனைந்தால் சுவாரசியமாக இருக்கும்.