ஆழி மனங்கள்

இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு தேனீர் நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கே மிதமான கூட்டம் இருந்தது அதிகமும் யாத்ரீகர்கள் வாகனம் தான் நின்றிருந்தது வருவதும் போவதுமான வண்டிகள். கழிவறைக்கு சென்றுவிட்டு வந்து ஒரு காபியை சொல்லிவிட்டு காலியான தனியாக இருந்த மேஜையில் போய் அமர்ந்துக் கொண்டான் சரவணன். தன் காரையும் பின்சீட்டையும் ஒருமுறை பார்த்துவிட்டு சுற்றும் பார்வையை ஓட விட்டான் வட மாநிலத்தவரே அதிகமும் தென்பட்டனர் தீர்த்த யாத்திரையை காசியில் துவங்கி தெற்கே இராமேஸ்வரத்தில்  நிறைவு செய்பவர்கள் பெரும்பாலும் பித்ரு சடங்களுக்காக வருபவர்கள் பாதி தலைகள் மொட்டையாக இருந்தது. தான் நேசித்தவர்களை அப்பக்கமாக கரையேற்றி விட வந்தவர்கள் வாழும் நாட்களில் அத்தனை ஆசைகளோடு கனவுகளோடு வஞ்சம் கீழ்மையோடு இருந்த ஒரு மனித ஆன்மா இறந்து இது போன்று புனித இடங்களில் செய்யப்படும் சடங்களில் கொடுக்க படும் பிண்டங்களில் நிறைவடைந்து விடுமா? ஆனாலும் இங்கிருப்பவர் நிறைவும் திருப்தியும் அடைவார்கள் எல்லாவற்றையும் கடந்து நிறைந்து அங்கே சென்று சேர்ந்துவிட்டார்கள் என்ற ஒரு உறுதிபாடும் நம்பிக்கையும் இவர்களை தங்கள் வாழ்வில் பொருத்திக் கொள்ள உதவும் என்று எண்ணினான். மீண்டும் ஒருமுறை காரின் பின் இருக்கையை பார்த்துவிட்டு காபியை குடித்து முடித்து தன் கைபேசியை எடுத்தான் அது அணைந்து இருண்டு இருந்தது தன் உலகமும் கொஞ்ச நாட்களாக இருளில் இருப்பதாக தோன்றியது இளம் வயதில் ஹாரி பாட்டர் படத்தில் வரும் மாய போர்வை தன்னிடம் இருந்தால் எப்படி இருக்கும்? யார் கண்ணுக்கும் தெரியாமல் ஜாலியாக இருக்கலாம் என்று தன்னை போன்றே அந்த போர்வைக்காக ஏங்கிய நண்பர்களிடம் சொல்லுவான் ஆனால் இப்போது அந்த போர்வைக்கு தேவையே இல்லை மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்தாலே போதும் யார் கண்ணிலும் பட வேண்டியது இருக்காது என்று எண்ணியதும் சரவணனுக்கு புன்னகை வந்தது. போனை ஆன் செய்ததும் ஒளிருந்து முகப்பு திரையை காட்டியது அவனும் அப்பாவும் ஒரே மாதிரியான நிறத்தில் சட்டை அணிந்து கைகளில் கரும்போடு சிரித்துக் கொண்டு இருந்தார்கள் சென்ற பொங்கல் அன்று தங்கை எடுத்தது. இனி இதுபோல் ஒரு புகைப்படம் எடுக்க அமையாது  என்று யாருமே அன்று எண்ணவில்லை.

இன்னும் ஒரு மணிநேரத்தில் கோவிலை அடைந்துவிடலாம் கார் மிதமான வேகத்தில் சென்றது கடலின் மேல் விரிவுப்படுத்தி போடப்பட்ட புதிய மேம்பாலம் பயணத்தை சுலபமாக்கியது இருபக்கமும் நீரே சூழ்ந்து உள்ளது விடியலை நெருங்கும் நேரம் என்பதால் கடல் மின்னியது சுற்றிலும் நீலம் ஒரு சமயத்தில் வானும் கடலும் ஒன்றே என தோண ஆரம்பித்து விட்டது பார்க்க பார்க்க மனம் மெல்ல நிதானமாக ஆகியது. கண்ணாடியில் பின் சீட்டில் இருந்த சிவப்பு நிற பையை பார்த்தான். அப்பா இறந்து மூன்று வாரங்கள் கடந்து விட்டது அவரின் திடீர் மரணம் சரவணனை  நிலைகுலைய வைத்தது அதை தொடர்ந்து நடந்தேறிய விஷயங்களும் தெரிய வந்த சம்பவங்களும் அவனை முழுமையாகவே புரட்டிப் போட்டது. அப்பாவிற்கு கொஞ்ச நாட்களாக இதயத்தில் ஒரு வலி விட்டு விட்டு இருந்ததே அவரின் இதயம் முழுமையாகவே தன் செயலை நிறுத்திய பிறகு தான் அவனுக்கு தெரிய வந்தது ஆனால் அம்மாவுக்கு தெரிந்து இருந்தது அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்து இருக்கிறாள் ஏன் எடுத்துக்கொள்ளவில்லை என்று அவன் யோசித்த போது அவள் தன் வாழ்நாளில் எதையுமே பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. அப்பா பொருளியல் பந்தயத்தில் ஆர்வமில்லாதவராக தான் இருந்தார் அரசு மானியம் பெறும் கூட்டுறவு நிலையத்தில் கணக்கர் வேலை, குடும்ப பங்காக வந்த ஒரு வீடு கடைசி வரை அவர் அதில் ஒரு செங்கலை கூட புதிதாக மாற்றியது கிடையாது அவருடைய உறவிலும் சுற்றத்திலும் கிடைத்த வாய்ப்புகளை வைத்து மேலே முன்னோக்கி சென்றவர்கள் அநேகர். அதுகுறித்து அம்மாவிற்கு ஒரு புகாரும் ஒருநாளும் இருந்ததில்லை யாரேனும் கேட்டால் கூட “நானும் பிள்ளைகளும் பட்டினி இல்லே, யார் வீட்டு வாசலிலும் நிக்கறது இல்ல, பிறகென்ன” என்றுசொல்லிவிடுவாள். அவனும் தங்கை ப்ரியங்காவும் படிப்பில் மதிப்பெண் பெறுவதில் அத்தனை ஜொலிக்காத போதும் அதே மனநிலை தான் “எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் அள்ள முடியும்” என்று கடந்து விடுவாள். அவளுடைய மனநிலை தான் சரவணிடமும் ஆரம்பத்தில் இருந்தது நண்பர்கள் எல்லோரும் ஐடி கம்பெனியில் நல்ல லகரத்தில் சம்பளம் வாங்கும் போது இவன் மெக்கானிக்கல் முடித்துவிட்டு கார் தொழிற்சாலை ஒன்றில் முட்டிக் கொண்டிருந்தான் மெல்ல யதார்த்தம் புரிய துவங்கியதும் புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து மேலும் படிக்க துவங்கி வேலையில் முன்னேறினான் துணிந்து இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து  கார் கேரேஜ் ஒன்றை போன வருடம் ஆரம்பித்து சொந்த தொழிலில் கால் பதித்தான். 29 வயதில் இதை எல்லாம் அவன் செய்ததில் அப்பாவுக்கு சொல்ல முடியாத வியப்பும் பிரமிப்பும் கூடவே தாளாத பெருமையும் ஆனால் அவனுக்கு தான் அவர் செய்துவிட்டு சென்ற ஒரு காரியத்தால் பெருத்த இழிவும் அவமானமும் நேர்ந்து விட்டதாக மனம் குமைந்தான். நேற்று முற்பகலில் சும்மா படுத்திருந்தவனின் முன் அம்மா வந்து,

“எப்போ இராமேஸ்வரம் போறோம்” என்றாள்.

“அங்க எதுக்கு போகனும்” என்றவனை முறைத்து,

“என்னடா தெரியாத மாதிரி புதுசா கேக்குற..எத்தன தடவ அப்பா உன்கிட்டயே சொல்லி இருக்கார்..அவருடைய அஸ்தியை இராமேஸ்வரத்தில் கரைக்கனும்னு” என்றாள். படுத்திருந்தவன் எழுந்து கத்த ஆரம்பித்தான்,

“ஏன் இங்க எங்கேயாவது கரைச்சா அவரு ஆத்மா நிம்மதியா இருக்காதா..எதுக்கு அங்க போவனும்? பண்ணிருக்க காரியம் அப்படி ..அதை நினைச்சாலே எனக்கு உடம்பெல்லாம் கூசுது ..குமட்டிகிட்டு வருது..அங்க எல்லாம் போக முடியாது..போய் வேற வேலைய பாருங்க” என்றான்.  அம்மாவிற்கு பொங்கியது அதற்குள் ப்ரியா வரவும் அமைதியாகி “சரி ..நீ வரவேண்டாம் ..எதுவும் செய்ய வேண்டாம்..நாங்க இரண்டு பேரு மட்டும் போய்க்கிறோம்” என்று சொல்லிவிட்டு  வெளியே போய் விட்டாள். சரவணனுக்கு ஆத்திரமும் எரிச்சலும் அதிகமாகியது தன்னை மீறிய வார்த்தைகள் ஏதும் வந்துவிடுமோ என அவனே பயந்து மேஜை முன் இருந்த நாற்காலியை தரதரவென்று இழுத்துப் போட்டு அமர்ந்தான். மேஜை மேல் இருந்த தன்னுடைய பர்ஸை திறந்து அதனுள் இருக்கும் மின் மாயானத்தில் கொடுக்கப்பட்ட சீட்டை எடுத்தான். தகனம் செய்யப்பட்ட நாளில் பதிவு செய்யப்பட்டது தேதி, இறந்தவரின் பெயர் மற்றும் முகவரி, தொடர்பு எண்ணும், அதில் இவனுடைய எண் குறிப்பிடபட்டு இருந்தது. அப்பாவின் அஸ்தி அங்கே இருக்கும் காப்பு அலமாரியில் வைக்கப்பட்டுள்ளது அதற்கான ரசீது அது. எத்தனை நாட்கள் வைத்திருக்கிறோமோ அதற்கான கட்டணத்தை செலுத்தி வாங்கியது ஒருவேளை வாங்கும் நாட்கள் நீண்டு போனால் வாங்கும்போது அதற்குரிய தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்ததும் மறுநாளே செல்வதாக இருந்தது அதனால் அதற்குரியதை மட்டுமே கட்டியிருந்தான்..ஒருவாரம் தள்ளி போய்விட்டது ஏனெனில் அதற்குள் தான் அவனை அடியோடு நிலைகுலைய வைத்த சம்பவங்கள் நடந்தேறியது. கையில் ரசீதை எடுத்துக்கொண்டு ஹாலில் வந்து அம்மாவிடம் “ச்சரி..அஸ்தியை அங்கேயே கரைக்கிறேன்..ஆனா நான் மட்டும் தான் போவேன் ..நீங்க யாரும் வரவேண்டாம்” என்றவனை நோக்கி அம்மா ஏதோ சொல்லுவதற்குள் “தயவுசெஞ்சி என்னை விடுங்க ..தனியா தான் போவேன் ..நான் இரண்டு நாளைக்காவது தனியா இருக்கனும்..விடுங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் அறைக் கதவை சாத்திக் கொண்டான்.

கோவிலை ஒட்டியே கடலை பார்த்தபடி இருக்கும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தான் எப்போதும் ஆட்கள் வருவதும் போவதுமான ஒரு நகரில் எல்லாமே பரபரப்பான வியாபாரம் தான் சுமாரான அறைக்கே இரண்டு மடங்கு ரூம் வாடகை கேட்டதை கொடுத்துவிட்டு பையுடன் மேலே சென்று அங்கே இருந்த மேஜையில் தன் பயண பையையும் சிவப்பு நிற பையையும் வைத்தான். ஜன்னல்களை திறந்து விட்டு மனித தலைகளால் நிரம்பி வழியும் கடலை பார்த்துக்கொண்டு நின்றான் பிறகு போனை உயிர்பித்து பிரியாங்காவிற்கு வந்து சேர்ந்துவிட்டதாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காத்திருந்து அவள் தம்ஸ் அப் எமோஜி போட்டதும் மீண்டும் போனை அணைத்து விட்டு அப்படியே படுத்துவிட்டான். நீண்ட வெறுமையான சாலையில் கடும் வெயிலில் அவன் சிறுவனாக அப்பாவின் தோளில் அமர்ந்து செல்லும் காட்சி கனவில் வந்ததும் விழித்துக்கொண்டான். அறைக்குள் வீசிய ஓளி மாறுபாடு கண்டு எழுந்து ஜன்னல் திரையை விலக்கி மதிய வெயிலை பாத்தான் பசி வயிற்றை புரட்டியது கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்று யோசித்த போது நேற்று காலையா அல்லது அதற்கு முன் தினம் இரவா என்று தெரியவில்லை முதலில் ரூமிற்கே வரவழைத்து சாப்பிடவே எண்ணி பிறகு அந்த எண்ணத்தை ஒதுக்கினான் நிச்சயமாக தன்னால் இந்த அறையில் அமர்ந்து சாப்பிட முடியாது. சரவணனுக்கு கூட்டத்தில் தனியாக உட்கார்ந்து சாப்பிட தோன்றியது அதாவது தன்னை தெரியாத, தனக்கு தெரியாதவர்களின் மத்தியில் உலவ விரும்பினான் உடனே குளித்து ஆடை மாற்றி கிளம்பினான். கடலிலும் தீர்த்த கிணறுகளிலும் நீராடி வந்தவர்களால் சாலையே நனைந்து இருந்தது முதலிரண்டு உணவகங்களுக்குள் நுழையவே முடியவில்லை மூன்றாவதாக சென்றதில் கொஞ்சம் காத்திருந்து சாப்பிட முடிந்தது. வெளியே வந்ததும் கடற்கரை நோக்கிச் சென்று படித்துறைகளை விலக்கி தள்ளிப்போய் கடலை பார்த்த வண்ணம் அமர்ந்துக் கொண்டான். இத்தனை அழுக்கான கடலை பார்த்ததில்லை நீரில் மெல்லிய எண்ணெய் படலம் மிதந்தது பூ மாலைகளும் பல வகையான வண்ணத்துணிகளும்,மண்பானைகளும்,குடுவைகளும் என பலதும் அதில் அலை மோதியது கரையில் எங்கும் ஈர துணிகளை குவித்து வைத்து இருந்தார்கள் சாதாரணமாக அதில் இறங்கி குளிக்கவே தோணாது ஆனாலும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் கடலில்  புனித நீராடிகிறார்கள் தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக சேமித்து இங்கே வருபவர்கள் உண்டு இந்தியாவின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு வந்து தங்களின் முன்னோர்களின் முக்திக்கு பிராத்திப்பவர்கள். தொன்றுதொட்டு வரும் இந்நம்பிக்கை எங்கிருந்து ஆரம்பித்து இருக்கும்? இராமனின் பாவத்தை நிவர்த்தி செய்ததாக புராணம் சொல்கிறது. அது கொண்டு மக்களும் தங்களின் அனைத்து பாவங்களும் இங்கே நிவர்த்தி ஆகி மோட்சம் கிட்டும் என நம்புகிறார்கள். அதன் பொருட்டே இத்தனை தூரம் பயணித்து இத்தீவிற்கு வந்துக் கொண்டே இருக்கிறார்கள் அதில் தானும் ஒருவன் என்று சரவணன் எண்ணினான். அலைகளே இல்லாத கடல்..கடல் என்றால் அலைகள் இருக்கும் அல்லவா?  மனம் என்றால் எண்ணங்கள் இருப்பது போல ஓயாதவை ஒன்றன் பின் ஒன்றாக எழுபவை ஒன்றைஒன்று துரத்தி வருபவை சிலது ஆழிபேரலையென அழிப்பவை ஆனால் இங்கு அவை இல்லை நிச்சலனமான கடல். அவனின் உள்ளம் அதற்காக ஏங்கியது.

அன்று கேரேஜ்யில் வேலை அதிகமாக இருந்தது மதிய உணவுவேளைக்கு கூட செல்லாமல் வேலை தொடர்ந்து கொண்டிருந்தது. சரவணனின் போன் விடாமல் அடிக்கவே எரிச்சலுடன் எடுத்தான் மறுமுனையில் ப்ரியா பதட்டதுடன் “சரவ்…அப்பா நெஞ்சு வலிக்குதுனு சொல்றார்..நான் மலர் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் ..நீ அங்க வந்திடுனு” சொல்லிட்டு போனை வைத்துவிட்டாள் அவளின் பதட்டம் அவனிடம் ஒட்டிக்கொண்டது யாரிடமும் சொல்லாமல் வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததும் தான் தெரிந்தது அவசரத்தில் கார் சாவியை எடுக்காமல் ஆபிஸ் உபயோகத்திற்காக வாங்கிய டூவிலர் சாவியை எடுத்து வந்தது மறுபடியும் உள்ளே செல்ல தோன்றாமல் அதிலேயே கிளம்பினான் பதினைந்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து ஐசியூ பிரிவை நோக்கி விரைந்தவனுக்கு அம்மாவின் கதறலிலும் தங்கையின் அதிர்விலும் தெரிந்து விட்டது. அம்மா அவனை பார்த்ததும் பாய்ந்து வந்து கட்டிக்கொண்டு கத்தினாள் “அப்பா..போய்ட்டாருடா..நம்மள விட்டுட்டு போய்ட்டாரு” அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை அவள் அதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தாள் விழிகளில் வழிந்த நீரோடு அவன் கருவிகள் நீக்கப்பட்டு வெறுமே படுத்து இருந்த அப்பாவை கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தான். ஒரு வாரம் கடந்து விட்டது வீடு உறவினர்களின் நண்பர்களின் வருகையால் நிறைந்து ததும்பியது துக்க விசாரிப்புகள் குறைந்து வீட்டில் நெருங்கிய உறவுகள் மட்டுமே எஞ்சியது. அப்பாவுக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும், அம்மாவுக்கு ஒரு தம்பியும் இரு தங்கைகளும் அவர்தம் பிள்ளைங்களும் புதிதாக வந்த சம்பந்த உறவுகளும் என்று கூட்டம் நிரம்பி இருந்த வீடு இப்போது சற்று ஓய்ந்தது. பதினாறாம் நாள் காரியத்திற்கு நேரம் குறிக்கவும் ஜாதகத்தில் அடைப்பு பார்க்கவும் ஜோதிடர் ஒருவரை மாமா அழைத்து வந்தார் எப்போதும் பார்ப்பவர் உடல்நலம் இல்லாமல் இருந்ததால் அவர்க்கு தெரிந்த ஒருவரை அழைத்து வந்திருந்தார் அப்போது வீட்டில் பெரியப்பாவும் அவரின் மனைவியும் அத்தையும் மற்றும் சரவணனும்  அம்மாவும் மட்டுமே இருந்தார்கள். காரியத்திற்கு உரிய நேரத்தை குறித்துவிட்டு அடைப்பு ஏதும் இருக்கிறதா என்று பார்க்க துவங்கினார் சரவணனின் ஜாதகத்தையும் வைத்து இனி இவ்வீட்டின் எதிர்காலம் குறித்தும் கணிக்க ஆரம்பித்தவர் நெற்றியை சுருக்கி,  “இறந்தவர்க்கு இந்த தம்பி மட்டும்தான் மகனா இல்லை வேற மகன் ஏதும் உண்டா” என்றார். அம்மாவின் உடலில் ஒரு அதிர்வு ஒடியது பெரியம்மா விழிகளும் அம்மாவின் விழிகளும் வெட்டிக் கொண்டது பெரியம்மா உடனே எல்லோருக்கும் காபி போடும் சாக்கில் உள்ளே நழுவி விட்டாள். மாமா “வேற யாரும் இல்லே இவன் ஒருத்தன் தான் எங்க மாமாவுக்கு பையன்..ஏன் அப்படி கேக்குறீங்க” என்றார். அவர் குழப்பத்துடன் “இல்லே இந்த பையனின் ஜாதகம் படி இப்போதைக்கு இவனுக்கு பித்ரு கடன் செய்யற நேரம் இல்ல..ஒவ்வொருவருக்கும் அதுக்கான நேரம்னு ஒண்ணு வரும்..இப்போதைக்கு இவருக்கு இல்லேனு தான் ஜாதகம் சொல்லுது ..அதான் கேட்டேன்” என்றவர் வேறு எதையும் மேற்கொண்டு கேட்க வில்லை. இறப்பில் அடைப்பு ஏதும் இல்லை என்றும் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் சொல்லி கிளம்பினார். சரவணனுக்கு இதில் எல்லாம் ஒண்ணும் பெரிய எண்ணம் ஏதும் இல்லை அவன் எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.  இருட்டிய பிறகு மாடிக்கு செல்ல படி ஏறியவனின் காதில் மாடியில் பேசியவை காதில் வந்து விழுந்தது.. “அது எல்லாம் முடிஞ்சு போன பழைய கதை..நீங்க ஏதாவது பேசி எல்லாத்தையும் குழப்பாதீங்க” என்றது அம்மாவின் குரல். “நாம மூடி மறைக்கலாம் ஆனா எப்படியோ எங்கயோ அது வெளிய வந்துடும்” என்றாள் அத்தை. “உங்க தம்பி கடைசி வரைக்கும் என்கிட்ட கேட்டுகிட்டது எந்த காரணத்தை கொண்டும் பிள்ளைங்களுக்கு விஷயம் தெரிய கூடாதுனு தான் ..அதை நான் காப்பாத்துவேன்..நீங்க இடையில் புகுந்து எதுவும் செஞ்சுடாதீங்க புண்ணியமா போகுது” என்றவள் கீழே இறங்கி வரும் சத்தம் கேட்டதும் சரவணன் சட்டென்று உள்ளே போய் விட்டான். அன்று இரவு தூங்காமல் யோசித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை “அப்பா எதை மறைக்க விரும்பினார்.? அத்தை மூடி மறைக்க முடியாது என்று என்னத்தை சொல்கிறாள்? ஜோதிடர் வேறு, ஏதோ ஒன்றை குழப்பி சென்றார்..

இந்த வீட்டில் கோடிட்ட இடங்கள் இருக்கிறது அதை நிரப்பாமல் தன்னால் எதையும் கண்டுடையை முடியாது என்று எண்ணினான். ஆனால் அதற்கு பிறகான நாட்கள் அவனுக்கு தீப்பற்றி கொண்டதை போல சென்றது வீட்டிலும் தொழிலிலும் அதிகமான வேலைகள் அவனை எதையுமே சிந்திக்க விடவில்லை. சரவணனின் எல்லா குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கு விடை என்று ஒருவன் வருவான் என அப்போது அவன் நினைத்திருக்கவில்லை.

பதினாறாம் காரியங்கள் அனைத்தும் நன்றாகவே முடிந்தது ஒரு குழப்பமும் இல்லை வந்தவர்கள் மதிய உணவிற்கு பிறகு மெதுவாக கிளம்பி சென்றார்கள் அம்மாவின் சொந்தம் மொத்தமும் கிளம்பியிற்று. வீட்டில் பெரியப்பாவும் பெரியம்மாவும் அத்தையும் மட்டுமே.  நாளை இரவு சரவணனும் அம்மாவும் பிரியாவும் அஸ்தியோடு இராமேஸ்வரம் செல்வதாக முடிவு ஆனதால் பிரியா அதற்கு உண்டா பயண ஏற்பாடுகளை செய்ய அவள் அறைக்கு சென்றுவிட்டாள். பெரியப்பாவிற்கு ஒரு பொடி நடை தேவையாக இருந்தது அவரும் வெளியே சென்றிருந்தார். சரவணனுக்கு விட்ட தூக்கத்தை எல்லாம் தூங்கலாம் என்று இருந்தது மெல்ல ஹாலில் இருந்த சோபாவில் இருந்து எழுந்த நேரத்தில் அவன் உள்ளே வந்தான். தங்கராசு ..பெரியப்பாவின் ஒரே மகன். ஆச்சரியமாகி மறுபடியும் அங்கேயே உட்கார்ந்து விட்டான். அப்பாவின் இறுதி சடங்கில் பார்த்தது அவனை அதோடு இன்று தான் வருகிறான் காலையில் குளக்கரைக்கு கூட வரவில்லை அத்தை தான் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள் பெரியம்மா எதையோ சொல்லி வைத்தாள் அது எப்போதுமே அப்படிதான் அவன் அவர்களுக்கு ஒரே பையன் திருமணமாகி சில வருடங்களுக்கு பிறகு பிறந்தவன் அதனாலயோ என்னவோ அவனை எங்கும் அதிகம் அனுப்பமாட்டாள். சிறுவயதில் குடும்ப விழாகளுக்கு, விடுமுறை தினங்களுக்கு அவ்வபோது வருவான் வளர வளர அவனை அதிகம் பார்க்க முடியாமல் போனது அதுவும் இவர்கள் வீட்டிற்கு அவன் வருவது அபூர்வமாகியது. சரவணனை விட தங்கராசுக்கு ஐந்து வயது அதிகம், பெரியப்பாவிற்கு அவன் கண் போல ஒரு சொல் அதட்டவோ விரட்டவோ மாட்டார் வளர்ந்த பையனாக ஆன பின்பு கூட அவனை தோளில் சுமப்பார். பெரியம்மா அவனிடத்தில் பதட்டமாகவே தான் இருப்பார். அப்பாவிற்கு அவன் மேல் தனி பிரியம் இருந்தது பொதுவாக எல்லோருமே அவனை ராசு என்றுதான் அழைப்பார்கள் ஆனால் அப்பா தங்கம் என்று கூப்பிடுவார். ராசு பார்ப்பதற்கு அவனின் அம்மாவை ஒத்து இருந்தாலும் அவனில் எழும் சில அசைவுகள் தனக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருப்பதை எண்ணி சரவணன் வியந்து இருக்கிறான் இவ்வளவு நாள் அவற்றை எல்லாம் பெரிதாக எடுத்ததில்லை இன்று அவை எல்லாம் விடுப்பட்ட இடங்களாக இருக்கிறது. மேலும் அப்பாவுக்கு திருமணமாகி அம்மா வந்ததும் தான் பெரியப்பாவிற்கு மாற்றல் ஆகி தன் பங்கு இடத்தை விற்றுவிட்டு அவர்கள் வேறொரு இடத்தில் வீடு வாங்கி போனது அப்போது ராசுவுக்கு மூன்று நான்கு வயது இருந்து இருக்கும் இது எல்லாம் குடும்ப கதையாக அவனுக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் தெரியாத அறியாத ஏதோ ஒன்று மறைந்து உள்ளது அதை எண்ணும் போது அவன் மனம் அதை விலக்கி ஓடியது.  

தங்கராசு உள்ளே வந்ததும் சரவணனை போலவே அம்மாவும் பெரியம்மாவும் வியந்து தான் போனார்கள் பெரியம்மா “என்னடா ..இங்க வந்திருக்கே..நானும் அப்பாவும் காலைலே வந்திடுவோம்..நீ கிளம்பு”  என்றாள். அவன் அமைதியாக இருந்தான். அத்தை “நான் தான் போன் பண்ணி வர சொன்னேன்” என்றாள் இரு பெண்களும் திகைத்து அத்தையை சீறி பார்த்தார்கள். பெரியம்மா கடும் கோபத்துடன் “கமலா…நீ தேவையில்லாம மூக்கை நுழைக்காத..வீணா குழப்பத்தை உண்டாக்காத” என்றாள்.  அத்தை “அண்ணி, இரண்டு பேருமே என் கூட பிறந்தவங்க..அவங்க குடும்பம் கெட்டு போகனும்னு நான் நினைக்க மாட்டேன் ஆனா ஒரு ஆத்மா அதற்குரிய முறையில் நிறையனும் அதுக்கு தான் முயற்சி பண்ணுறேன்” என்றாள். அம்மா ஒரு அடி முன்னே வந்து அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டு “நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க மதனி..வேண்டாம்..ஏற்கனவே வீடு நிலையில்லே ..புண்ணியமா போகுது..உள்ளே போங்க” என்றவள் சரவணனை நோக்கி “நீ முதல்ல உள்ளே போடா..இது எல்லாம் ஒண்ணும் இல்ல..நான் பேசிக்கிறேன்” என்றாள். அவனுக்கு மொத்த இரத்தமும் தலைக்கு ஏறியது நேராக அத்தையிடம் “அத்தை ..எதுனாலும் நேரா பேசுங்க..யாருடையை ஆன்மா இப்போ சாந்தி அடையனும்..அப்பாவுடையதா? அவருக்கு என்ன குறை..எதிலே நிறையனும்” என்றான்.  அம்மா தவித்தாள். “ அஸ்தியை கரைக்க உங்க கூட தங்கராசுவையும் கூட்டிட்டு போங்க…அவ்வளவு தான் ..வேற ஒண்ணும் இல்லே..” என்றாள் அத்தை. சரவணன் திரும்பி ராசுவை பார்த்தான் அதற்குள் பெரியம்மா விறுவிறுவென்று ராசுவின் கையை பிடித்து இழுத்து “வாடா போலாம் ..இங்க நமக்கு என்ன வேலை? என்றாள். அவன் அசையவில்லை. சரவணன் “அவன் எதுக்கு?” என்றான். அத்தை திடமாக “அவனுக்கும் உரிமை இருக்கு” 

“என்ன உரிமை” என்றான் சரவணன் பலவீனமாக. அத்தை அடுத்த வார்த்தையை சொல்லும் முன் ராசு கொஞ்சம் உரக்க “நான் போக மாட்டேன்” என்றான். அங்கிருந்த அனைவரும் அவனை நோக்கினார்கள் அத்தை அவன் முன்னாடி நின்று “உனக்கு என்ன உரிமை இருக்குனும் அவன் உனக்கு யாருனும் தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்டே ராசு” என்றாள்.  “எனக்கு தெரியும்” என்றான். சரவணனை தவிர  மூன்று பெண்களுமே அதிர்ந்து போனார்கள். ராசு எழுந்து உறுதியோடு “அத்தை ..நீங்க எனக்கு போன் பண்ணி வர சொன்னதுமே நான் தெரிஞ்சுகிட்டேன்..முதல்ல வரக்கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா சிலதை தெளிவாக்கிடனும்னு தோணுச்சு..எனக்கும் உங்க தம்பிக்கும் உறவுனா அது அவருடைய அண்ணன் மகன்னு இருக்குற ஒரு உறவுதான் அதை தாண்டி எதுவுமே இல்லே..இப்போ மட்டும் இல்லே எப்பவுமே அது ஒண்ணு தான்..வீணா எதையாவது பேசியோ யோசிச்சோ மேலும் குழப்பத்தையும் சங்கடத்தையும் உண்டாக்காதீங்க. இதோட இதை பத்தி யாரும் எந்த காலத்திலேயும் பேச கூடாது” என்று சொல்லிவிட்டு சரவணனிடம் திரும்பி “உங்க அப்பா அஸ்தியை நீ உங்க குடும்பத்துடன் போய் நல்லபடியா கரைச்சுட்டு வா” என்றான். எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே சென்றவன் திரும்பி பெரியம்மாவிடம் “நான் அப்பாவை அழைச்சுட்டு வீட்டுக்கு போறேன் ..நீங்க வர்றீங்களா? ..இல்லே நாளைக்கு வர்றீங்களா? என்றதும் அவள் திகைத்து யாரையுமே பாராமல் வெளியே சென்றுவிட்டாள். வாசற்படியில் நின்றவனின் பார்வை சென்ற திக்கில் சரவணன் திரும்பி பார்த்தான் பிரியா நின்றிருந்தாள் அதுவரை ராசுவின் முகத்தில் இல்லாத ஒன்று வெளி வந்தது..புன்னகையா? என்று சரவணன் யோசிப்பதற்குள் சட்டென திரும்பி போய்விட்டான். அம்மா தலையில் அடித்துக்கொண்டு சத்தமில்லாமல் அழ தொடங்கினாள்.

மாலை நெருங்கியதும் காற்று வீச தொடங்கியது எங்கும் ஈர வாடை. சரவணன் கரை ஓரமாக நடக்க எண்ணி எழுந்த போது பேண்ட் பாக்கெட்டில் இருந்து போன் நழுவி விழுந்தது. எடுத்தவன் அதை அழுத்தி உயிர்பித்து இணையத் தொடர்பு கொடுத்ததும் ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தது பெரும்பாலும்  தொழில் சார்ந்தவை பார்ட்னர்களின் விசாரிப்புகள் ஒன்று மட்டும் புதிய நம்பரில் இருந்து ஆனால் வாட்சப் முகப்பு படத்தில் இருந்த ராசுவை பார்த்ததும் தெரிந்து கொண்டான். அழைக்குமாறு அனுப்பி இருந்தான் கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு சரவணன் ராசுவை அழைத்தான் . இரண்டு பக்கமுமே சில வினாடிகள் மெளனமே நிலவியது முதலில் ராசு தான் அதை உடைத்தான் “சரவணா..உன் மனசு இப்போ இருக்குற நிலை எனக்கு நல்லாவே தெரியும் ஏன்னா நானும் கொஞ்ச நாள் அப்படி சுத்தி இருக்குறேன் தற்கொலை வரை போனேன் ஆனா நான் பிறக்குறதுக்கு முன்னாடி நடந்த ஒரு செயலுக்கு நான் எப்படி பொறுப்பு ஆக முடியும்னு தோணுச்சு..அதில என்னோட பங்கு என்னன்னு நினைச்சேன் அதைவிட முக்கியம் என்னுடைய அப்பா..அந்த மனுஷனுக்கு நான் நாம நம்பி வாழுற இந்த பூமி மாதிரி..நடக்குறோம் ஓடுறோம் என்னன்னமோ செய்றோம் மேகத்தை தொடும் கட்டிடங்களை எழுப்புறோம் அது இந்த நிலம் அடியிலே இருந்து நழுவாதுனு நாம நம்புறதுல இருக்குது..காலடியில் இருக்குறது நழுவுச்சுனா இங்க எதுவும் மிஞ்சாது..அது மாதிரி தான் என் உறவு அவருக்கு ..என் மேலே தான் மொத்த வாழ்க்கையும் கட்டி எழுப்பி இருக்கார்..அதனால அதை உடைக்க கூடாதுனு நினைச்சேன்..நான் எந்த வழியிலேயும் வந்து இருக்கலாம் எந்த இரத்தத்திலும் முளைச்சு இருக்கலாம் ஆனா என் வாழ்வும் சாவும் அவருடைய மகனாக தான்னு முடிவு பண்ணிட்டேன்” அவன் குரல் இடறியது. இடைவெளி விட்டு “தனிப்பட்ட முறையில் நமக்கு ஏதோ அநீதியும் துரோகமும் நடந்து இருக்கிற மாதிரி நாம ஏன் கோபமும் வஞ்சமும் வெறுப்பும் அடையுறோம்னு சொல்லு.. நம்மோட ஆண் மனம்..அதுதான் காரணம் அந்த ஆணவம் புண்பட்டு போகுது..இப்போ அன்னைக்கு பிரியா எல்லாத்தையும் கேட்டுட்டு நின்னுட்டு இருந்தா இல்லையா அவளுக்கு உனக்கு இருக்கிற கொந்தளிப்பும் கசப்பும்  இருக்கும்னு நினைக்கிறீயா?..ஏன்னா அப்பாகிறது ஒரு பகுதி மத்தபடி அது ஒரு தனி உயிர் அதோட மொத்த செயல்களையும் பயணத்தையும் நாம கணிச்சு தீர்ப்பு சொல்லவோ பொறுப்பு ஏற்கவோ முடியாது சரவணா..இதிலே இருக்கறது ஒண்ணே ஒண்ணு தான் ..உங்க அப்பா உங்க அம்மாகிட்டயும் எங்க அம்மா எங்க அப்பாகிட்டயும் நிகர் செய்ய வேண்டிய ஒண்ணு..அநேகமா உங்க அப்பா செஞ்சுட்டு இருப்பார் எப்படினா அவங்களோட இத்தனை வருஷ வாழ்க்கை அதை காட்டுது, கடைசி வரைக்கும் உங்க அம்மா வாயில் இருந்து அது வரலை… எங்க அம்மாவும் வைப்பா நிகரான ஒன்றை..அது எதுனும் எப்போனும் நாம முடிவு செய்ய முடியாது…ஆனா ..வைப்பா” சரவணன் ஒன்றுமே சொல்லவில்லை ..

“மகன் என்கிற பகுதியை நீ சரியா செஞ்சுடு ஏன்னா அப்பாவா அவர் பகுதியை செஞ்சு இருப்பார்ல..எல்லாத்தையும் முழு மனசுடோ செஞ்சுட்டு எத்தனை நாள் ஆனாலும் எங்க போனாலும் திரும்பி உன் வீட்டுக்கு வந்துடு ..நீ தேடுற விரும்புற எல்லாமே அங்க தான் இருக்கு..சீக்கிரமா திரும்பு சரவணன்” . மெல்லிய விசும்பலுக்கு பிறகு சரவணன் போனை துண்டித்தான்.

கடலில் துருத்தி நின்ற ஒரு சிறிய பாறை மேல் சரவணன் ஏறி நின்றான் சூரியன் முழுவதும் மறைந்து மெல்லிய செவ்வொளி மட்டுமே எஞ்சி இருந்தது. அலைகள் அற்ற கணத்தை அவன் அடைந்த போது அவன் விழிகளில் நீரும் முகத்தில் புன்னகையும் ஒளிர்ந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.