சான் சல்வடோரிலிருந்து ஸ்பெயின் வரை — முழு காலவரிசை (1492–1493)
சான் சால்வடோரை ஆய்வு செய்த பிறகு, தங்கம் மற்றும் கிழக்கத்திய நாடுகளைத் தேடி கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளான சாண்டா மரியா டி லா கன்செப்சியன், ஃபெர்னாண்டினா மற்றும் இசபெல்லா ஆகிய தீவுகளுக்கு அக்டோபர் 14 அன்று (1492) சென்றார்.
அக்டோபர் 28 அன்று கொலம்பஸ் கியூபாவை அடைந்து அதற்கு “ஜுவானா” (Juana) எனப் பெயரிட்டார். இதை ஜப்பான் (சிபாங்கு) அல்லது சீனாவின் கண்டப் பகுதி என்று அவர் தவறாக நம்பினார். பின்னர் கியூபாவின் வடகிழக்குக் கரையோரம் சிறிது காலம் ஆய்வு செய்தார்.
நவம்பர் 21 அன்று மார்ட்டின் பின்சோன் தலைமையில் பிண்டா கப்பல், கொலம்பஸின் உத்தரவை மீறி தங்கத்தைத் தேடி தனியாகப் பிரிந்து சென்றது.
டிசம்பர் 5 அன்று கொலம்பஸ் ஒரு பெரிய தீவைக் கண்டுபிடித்து, அதற்கு “எஸ்பனியோலா” / ஹிஸ்பானியோலா (Hispaniola — தற்போதைய ஹைட்டி/டொமினிகன் குடியரசு) என்று பெயரிட்டார்.
டிசம்பர் 24 அன்று இரவு, கியூபா மற்றும் ஹிஸ்பானியோலா தீவுகளின் கடற்பகுதியில் பல நாட்களாகத் தொடர்ந்து பயணம் செய்ததால் கொலம்பஸும் மாலுமிகளும் கடுமையான சோர்வில் இருந்தனர். கடல் மிக அமைதியாக இருந்ததால், எந்த ஆபத்தும் இல்லை என நம்பிய கொலம்பஸ் வெகு நாட்கள் தூக்கமில்லாமல் இருந்ததால் ஓய்வெடுக்கத் தன் அறைக்குச் சென்றார். தலைமை மாலுமியும் தூங்கச் சென்றார். கப்பலின் சுக்கானைப் பிடிக்கும் பொறுப்பு ஒரு சிறுவனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது கடல்சார் விதிகளுக்கும் கொலம்பஸின் கட்டளைக்கும் முற்றிலும் எதிரான ஒரு செயல்.
நள்ளிரவில், அமைதியான நீரோட்டம் சாண்டா மரியாவைக் கரைக்கு அருகிலிருந்த பவளப் பாறைப் பகுதிக்கு மெதுவாக இழுத்துச் சென்றது. அங்கே கப்பலின் அடிப்பகுதி பவளப்பாறை செறிவுக்குள் சிக்கியது. நீரோட்டத்தின் வேகம் புரியாத சிறுவன், கப்பல் பாறையில் சிக்கியதை உணரவில்லை. சுக்கான் தரையில் உரசி, கப்பல் பாறையில் நிலைகுத்தியதும் தான் கப்பல் விபத்துக்குள்ளானதை அனைவரும் அறிந்தனர். அதிர்ச்சியில் விழித்த கொலம்பஸ் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்.
பாய்மரக் கம்பத்தையும் பாரமான பொருட்களையும் வெட்டி எறிந்து எடையைக் குறைக்க முயற்சி செய்து அனைவருமாக கப்பலை மீண்டும் ஆழமான கடலுக்குத் தள்ள முயன்றனர்.
கப்பலின் உரிமையாளரும் உதவி மாலுமியுமான ஜுவான் டி லா கோசா, நங்கூரத்தை ஆழத்தில் போட்டு கப்பலை இழுக்கும்படி கொலம்பஸால் ஒரு சிறு படகில் இறக்கி அனுப்பப்பட்டார்; ஆனால் அவர் பயந்து அருகிலிருந்த நினா கப்பலை நோக்கித் தப்பியோடினார் . நினாவின் அதிகாரிகள் அவரை மீண்டும் திருப்பி அனுப்பினர்.
அலைகளால் தொடர்ந்து மோதப்பட்டு, பவளப் பாறைகள் மிகக்கூர்மையாக இருந்ததால் கப்பலின் அடிப்பாகம் பிளந்து, உள்ளே கடல்நீர் வேகமாகப் புகத் தொடங்கியது. சில மணி நேரங்களுக்குப் பிறகு கப்பலைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த கொலம்பஸ், விடியற்காலைக்குள் தன் மாலுமிகளுடன் நினா கப்பலுக்குத் தப்பினார்.
சாண்டா மரியா மோதியபோது கடல் அமைதியாக இருந்ததால், அவர்கள் கரைக்கு மிக அருகிலேயே இருந்தனர். கப்பல் மோதிய இடத்திலிருந்து சுமார் ஒன்றரை லீக் (5–8 கி.மீ.) தொலைவில், தைனோக்களின் “மரியேன்” பிரதேசத்தைச் சேர்ந்த குவாகநகரி (Guacanagarí) என்ற தலைவரின் கிராமம் இருந்தது. விடியற்காலையில் கொலம்பஸ் இரண்டு பேரை ஒரு படகில் அனுப்பி, விபத்தை அறிவித்தார். செய்தி கேட்ட தலைவர் தன் மக்கள் அனைவரையும் பெரிய தோணிக்களுடன் (canoes) அனுப்பி கப்பலிலிருந்து சரக்குகளையும் மரக்கட்டைகளையும் இறக்க உதவினார் என்றும் கொலம்பஸ் பதிவு செய்துள்ளார்.
தலைவர் கொலம்பஸிற்குப் பயன்படுத்த இரண்டு பெரிய வீடுகளையும் கொடுத்தார். அவரது மக்களின் உதவியுடன், ஸ்பானியர்கள் சாண்டா மரியாவிலிருந்து உடைத்து மீட்கப்பட்ட மரப்பலகைகள், கம்பங்கள், ஆணிகள் ஆகியவற்றைக் கொண்டு, அந்த கிராமத்திலேயே ஒரு கோட்டையையும், கோபுரத்தையும், பாகுகாப்பிற்காக ஓர் அகழியையும் (moat) கட்டினர். அவர்களுக்கு தங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட வீடுகளைச் சுற்றியே இக்கட்டமைப்பு எழுப்பப்பட்டிருக்கக்கூடும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டிசம்பர் 25 அன்று கிறுஸ்துமஸ் அன்று இந்த விபத்து நிகழ்ந்ததாலும், இதையும் கொலம்பஸ் இறைவனின் வழிகாட்டுதலாக நம்பியதாலும், இக்கோட்டைக்கு “லா நவிடாட்”- கிறுஸ்துமஸ் என்று அவரால் பெயரிடப்பட்டது. ( Navidad என்றால் ஸ்பானிஷ் மொழியில் “கிறிஸ்துமஸ்” (Christmas) என்று பொருள். La என்பது அந்த மொழியின் பெயர்ச்சொல்லுக்கு முன் பயன்படும் “தி” (The) போன்ற ஒரு குறிப்புச்சொல்).
நினா கப்பலில் அனைவரையும் ஏற்றிச் செல்ல முடியாத நிலையில், கொலம்பஸ் 39 மாலுமிகளை லா நவிடாட்டில் விட்டுவிட்டு , தங்கத்தைத் தேடி வர்த்தகம் செய்யுமாறும், பூர்வகுடி மக்களிடம் நல்லுறவுடன் நடந்துகொள்ளுமாறும் அறிவுறுத்திவிட்டுப் புறப்பட்டார். இதுவே அமெரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியர்கள் அமைத்த முதல் குடியேற்றமாக வரலாற்றில் பதிவானது.
நினா கப்பலின் அப்போதைய உண்மையான கேப்டன் ‘விசென்டே யானேஸ் பின்ஸான்’ (Vicente Yáñez Pinzón – இவர் பிண்டோ கேப்டன் மார்ட்டின் அலோன்சோ பின்ஸானின் தம்பி). சாண்டா மரியா அழிந்த பிறகு, கொலம்பஸ் முழுப் பயணத்திற்கும் தலைவராக இருந்ததால், நினா கப்பலைத் தனது முதன்மை (Flagship) தளபதியகக் கொண்டு, அதன் பொறுப்பைத் தன் கைவசம் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
1493 ஜனவரி 6 அன்று ஹிஸ்பானியோலா (தற்போதைய டொமினிகன் குடியரசு) தீவின் வடக்குக் கரையை ஒட்டி, கொலம்பஸ் ‘நினா’ கப்பலில் கிழக்குப் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நினா கப்பல் கரையை ஒட்டி மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது, எதிரே கிழக்கிலிருந்து ‘பிண்டா’ கப்பல் வருவது கொலம்பஸின் பார்வையில் பட்டது. பிண்டாவின் கேப்டன் மார்ட்டின் அலோன்சோ பின்ஸான், அந்தப் பகுதியில் தங்கம் தேடி அலைந்துவிட்டு, மீண்டும் கொலம்பஸைத் தேடி வந்துகொண்டிருந்தான்.
நினா கப்பல் அருகே பிண்டா வந்து சேர்ந்ததும், பின்ஸான் படகின் மூலம் நினா கப்பலுக்குள் ஏறி வந்து கொலம்பஸைச் சந்தித்தார். தனியே பிரிந்து சென்றதற்காக பின்ஸான் கொலம்பஸிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, தான் தன்னிச்சையாகப் பிரிந்து செல்லவில்லை என்றும், மோசமான வானிலை மற்றும் காற்று வீசிய திசை காரணமாகவே கப்பல் கட்டுப்பாட்டை இழந்து தனியாகப் பிரிய நேரிட்டது என்றும் சாக்குப்போக்கு கூறினார்.
ஆனால் கொலம்பஸுக்கு உண்மை நன்றாகத் தெரிந்திருந்தது. பூர்வகுடி மக்கள் “பாபேக்” (Babeque) என்ற தீவில் பெருமளவில் தங்கம் இருப்பதாகக் கூறியதைக் கேட்டு, கொலம்பஸை முந்திச் சென்று தங்கத்தைக் கைப்பற்றுவதற்காகவே பின்ஸான் தன் கப்பலைத் தனியாக ஓட்டிச் சென்றிருந்தார்.
கொலம்பஸ் தனது நாட்குறிப்பில் பின்ஸானின் இந்தச் செயலால் கடுங்கோபமடைந்ததாக எழுதியுள்ளார். ஆனால் அந்தச் சமயத்தில் கொலம்பஸின் முதன்மைக் கப்பலான ‘சாண்டா மரியா’ சேதமடைந்திருந்தது. கைவசம் ‘நினா’ மற்றும் பின்ஸானின் ‘பின்டா’ ஆகிய இரண்டு சிறிய கப்பல்கள் மட்டுமே இருந்தன. ஸ்பெயினுக்குப் பத்திரமாகத் திரும்ப பின்ஸானின் உதவி தேவையாக இருந்ததால், கொலம்பஸ் தன் கோபத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகும் பின்ஸானின் எண்ணம் மாறவில்லை. ஸ்பெயின் திரும்பும் வழியில் மீண்டும் புயல் வீசியபோது, கொலம்பஸை விட முந்திச் சென்று ஸ்பெயின் அரச குடும்பத்திடம் “புதிய நிலத்தைக் கண்டுபிடித்த செய்தியை” முதன்முதலில் கூறிப் புகழ் பெற வேண்டும் என்பதற்காகத் தன் கப்பலை வேகமாகச் செலுத்தித் தனியாகச் சென்றார்.
இருப்பினும், பின்ஸானுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான நோயினால் பின்ஸானால் அந்தப் புகழைக் கைப்பற்ற முடியாமல் போனது. கொலம்பஸ் மற்றும் அவரது குழுவினர் கரீபியன் தீவுகளின் பூர்வகுடி மக்களுடன் கொண்ட தொடர்பால், புதிய உலகத்திலிருந்து (New World) ஐரோப்பாவிற்கு முதன்முறையாகக் கொண்டுவரப்பட்ட நோய் சிபிலிஸ் எனப்படும் பால்வினை நோய். பின்ஸான் கப்பல் பயணத்தின் போதே இந்நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். திரும்பும் பயணத்தின் போது வீசிய கடுமையான புயலும், அவரது உடலைத் தாக்கிய இந்த நோயும் அவரை நிலைகுலைய வைத்தன.
மார்ச் 1, 1493 அன்று ஸ்பெயினின் பையோனா (Baiona) துறைமுகத்தை அடைந்தபோதே அவர் மிகவும் பலவீனமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
பின்னர் அவர் தனது சொந்த ஊரான பாலோஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு, ‘லா ராபிடா மடாலயத்தில் சேர்க்கப்பட்டார். ஸ்பெயின் வந்து சேர்ந்த சில நாட்களிலேயே, மார்ச் 31, 1493 அன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்பெயின் நோக்கிய திரும்பும் பயணம் (ஜனவரி–மார்ச் 1493)
ஜனவரி 16, அன்று நினா மற்றும் பிண்டா இரண்டு கப்பல்களுடன் கொலம்பஸ் ஸ்பெயின் நோக்கிப் புறப்பட்டார். கியூபா மற்றும் ஹிஸ்பானியோலா தீவுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தாவர மாதிரிகள், சிறிதளவு தங்கம், மற்றும் ஆறு தைனோ பூர்வகுடி மக்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
பெப்ரவரி 12–15 நாட்களில் அட்லாண்டிக்கில் கடும் புயல் ஏற்பட்டது; இரு கப்பல்களும் ஒன்றை ஒன்று பிரிந்தன. கப்பல் மூழ்கிவிடலாம் என்ற அச்சத்தில் தான் கண்டுபிடித்த விவரங்களை அப்போதுதான் மரப் பீப்பாயில் வைத்துக் கடலில் வீசினார் கொலம்பஸ்.
பெப்ரவரி 18 அன்று புயலைக் கடந்து மீண்ட நினா கப்பல், போர்த்துகீசிய ஆட்சியின் கீழிருந்த அசோர்ஸ் தீவுக்கூட்டத்தில் சாண்டா மரியா தீவை அடைந்தது. உள்ளூர் போர்த்துகீசிய அதிகாரிகளுடன் சிறு மோதல் ஏற்பட்டது. சிலர் கடற்கரையில் இறங்கியபோது கைது செய்யப்பட்டனர், பின் விடுவிக்கப்பட்டனர்.
போர்த்துகீசிய அரசருடனான பதற்றமான சந்திப்பு (மார்ச் 4–11, 1493)
மீண்டும் வீசிய புயலால் நினா கப்பல் மார்ச் 4 அன்று போர்த்துகலின் லிஸ்பனுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது பதற்றமான ஒரு தருணம். கொலம்பஸ் தன் மேற்கு நோக்கிய கடல்வழித் திட்டத்தை முதலில் கொண்டு சென்றது போர்த்துகல் மன்னரிடமே, ஆனால் “பூமியின் சுற்றளவு அவர் நினைப்பதை விடப் பெரியது” என அவரது அறிஞர் குழு அதை நிராகரித்தது. இப்போது, அதே கொலம்பஸ், ஸ்பெயினின் கொடியுடன் புதிய நிலங்களைக் கண்டுபிடித்துவிட்டு, போர்த்துகீசியத் துறைமுகத்திலேயே வந்து நின்றார்.
கொடூரமான புயலில் சிக்கித் தவித்த கொலம்பஸின் ‘நினா’ கப்பல், தப்பிப் பிழைப்பதற்காக போர்த்துகீசிய தலைநகரான லிஸ்பனுக்கு அருகில் உள்ள ‘காஸ்காய்ஸ்’ (Cascais) / ரெஸ்டெலோ (Restelo) துறைமுகப் பகுதிக்கு வந்து சேர்ந்தது.
வந்தவுடனேயே கொலம்பஸுக்கு தரை இறங்க அனுமதி கிடைக்கவில்லை. போர்த்துகீசிய கடற்படையின் பெரிய போர்க்கப்பலின் தளபதியான பார்த்தலோமியோ டயஸ் (ஆப்பிரிக்காவின் தெற்கு முனையான ‘நம்பிக்கை முனை’யைக் கண்டுபிடித்த புகழ்பெற்ற மாலுமி) கொலம்பஸின் கப்பலை வழிமறித்தார்.
பார்த்தலோமியோ டயஸ் சிறிய படகில் வந்து, கொலம்பஸைக் கரையேறி வந்து தங்களது கடற்படை அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார். ஆனால், கொலம்பஸ் தான் ஸ்பெயின் அரசரின் கடற்படைத் தளபதி என்றும், அரச அனுமதியின்றித் தான் கப்பலை விட்டு இறங்க முடியாது என்றும் கூறி மறுத்துவிட்டார்.
கொலம்பஸ் கப்பலிலேயே இருந்தபடி, போர்த்துகீசிய மன்னர் இரண்டாம் ஜானுக்குத் தான் புயலால் ஒதுங்க நேரிட்டதாகவும், அமைதியான முறையில் தங்குவதற்கு அனுமதி தருமாறும் கடிதம் எழுதினார். அதே நேரத்தில், ஸ்பெயின் அரச குடும்பத்திற்கும் தான் திரும்பிய செய்தியைத் தூதுவர் மூலம் அனுப்பினார். உண்மையில் ஸ்பெயினுக்கும் போர்த்துகீசிய அரசுக்கும் இடையே கசப்பான எதிர்ப்போக்கு இருந்ததால், கரை இறங்கினால் கைதியாகப் பிடிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்ற அச்சத்தினால் கொலம்பஸ் கப்பலிலேயே பாதுகாப்பாக இருந்தார்.
கொலம்பஸின் கடிதத்தைப் பெற்ற மன்னர் இரண்டாம் ஜான், மார்ச் 8 ம் தேதி அவருக்கு அரச மரியாதை அளிக்குமாறும், கப்பலுக்குத் தேவையான உணவு மற்றும் தளவாடங்களை வழங்கி உதவுமாறும் உத்தரவிட்டார். மேலும், லிஸ்பனில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள தனது அரண்மனைக்கு (Vale do Paraíso) வருமாறு கொலம்பஸுக்கு அழைப்பு விடுத்தார்.
அதன் பிறகே, மார்ச் 8-ஆம் தேதி கொலம்பஸ் கப்பலில் இருந்து கரையேறி, மன்னரைச் சந்திப்பதற்காகப் பயணப்பட்டார். மார்ச் 8 க்கும்–11 க்கும் இடையில், மன்னர் இரண்டாம் ஜான், கொலம்பஸைத் தன் அரண்மனையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கொலம்பஸ் அப்போதும் பயந்துகொண்டோ பணிந்தோ பேசவில்லை. மாறாக தான் கண்டுபிடித்த தீவுகள், கொண்டு வந்த தங்கம், பூர்வகுடி மனிதர்களைக் குறித்துப் பெருமையுடன் பேசினார், இது போர்த்துகீசிய அதிகாரிகளை எரிச்சலடையச் செய்தது. அரண்மனை அதிகாரிகள் சிலர், கொலம்பஸை ரகசியமாகக் கொன்றுவிடலாம் என மன்னருக்கு ஆலோசனை கூறினர்.

ஆனால் இரண்டு காரணங்களுக்காக மன்னர் ஜான் அதைச் செய்யவில்லை; ஒன்று அது ஸ்பெயினுடன் நேரடிப் போருக்கு வழிவகுக்கும். இரண்டாவதாக கொலம்பஸ் கண்டுபிடித்த இடங்கள் 1479-ன் அல்காசோவாஸ் ஒப்பந்தப்படி போர்த்துகலுக்குச் சொந்தமான கடல் எல்லைக்குள் வரக்கூடும் என்று அவர் நம்பினார், எனவே சட்டரீதியாகவே அவற்றை உரிமை கோருவது சிறந்தது என முடிவு செய்தார். இந்தப் பதற்றமே அடுத்த ஆண்டு (1494) கத்தோலிக்கத் திருச்சபையின் தலையீட்டுடன் கையெழுத்தான டோர்டேசில்லாஸ் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்து, உலகையே ஸ்பெயினும் போர்த்துகலும் இரண்டாகப் பிரித்துக்கொண்டன.
கொலம்பஸிற்கும் போர்த்துகீசிய அரசிற்கும் இடையே கடலாதிக்கப் போட்டிகள் காரணமாகப் பலத்த பதற்றமும் அரசியல் முரண்களும் இருந்தபோதிலும், அரச மரியாதையின் அடிப்படையில் மன்னர் இரண்டாம் ஜான் கொலம்பஸை உபசரித்துத் திரும்பும் வழியில் பரிசுகளும் அளித்தார்.
மன்னரைச் சந்தித்து முடித்துவிட்டுத் திரும்பும்போது, கொலம்பஸ் மற்றும் அவருடன் வந்த தலைமை மாலுமி ஆகியோர் மீண்டும் துறைமுகத்திற்குச் செல்வதற்காகத் தனித்தனியாக உயர்தரக் கோவேறு கழுதைகளை மன்னர் ஏற்பாடு செய்து கொடுத்தார். கொலம்பஸுடன் வந்த மாலுமிக்கு மன்னர் 20 எஸ்பாடின்ஸ் (20 Espadims – போர்த்துகீசிய தங்கக் காசுகள்) மதிப்பிலான தங்கத்தைப் பரிசாக வழங்க ஆணையிட்டார்.
புயலால் சேதமடைந்திருந்த கொலம்பஸின் ‘நினா’ கப்பலைச் சீரமைக்கவும், ஸ்பெயின் வரையிலான எஞ்சிய பயணத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், நன்னீர் மற்றும் போதிய தளவாடங்களை இலவசமாக வழங்கி உதவினார்.
மன்னரைச் சந்தித்த பிறகு, கொலம்பஸ் போர்த்துகீசிய அரசி ‘எலினோர்’ (Queen Eleanor) தங்கியிருந்த மடாலயத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார். அங்கு அரசியும் அவரிடம் மிகவும் மரியாதையுடனும் அன்பாகவும் நடந்து கொண்டு உபசரித்தார்.
கொலம்பஸ் கண்டுபிடித்த நிலங்கள் போர்த்துகீசிய எல்லைக்குட்பட்டது என்று மன்னர் உரிமை கோர நினைத்தாலும், ஸ்பெயின் நாட்டோடு நேரடியாகப் போரை உருவாக்க அவர் விரும்பவில்லை. மேலும், ஸ்பெயின் அரச குடும்பத்திற்கு (மன்னர் பெர்டினாண்ட் & அரசி இசபெல்லா) கொலம்பஸ் தங்களை மரியாதையுடன் நடத்திய செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே மன்னர் ஜான் இந்த தாராள மனப்பான்மையைக் காட்டினார்.
இந்த உபசரிப்புகளுக்குப் பிறகு, 1493 மார்ச் 13 அன்று கொலம்பஸ் போர்த்துகீசிய எல்லையிலிருந்து புறப்பட்டுச் சென்று, மார்ச் 15-இல் பத்திரமாகச் ஸ்பெயினை அடைந்தார்.
ஸ்பெயின் வருகையும் இறுதி சந்திப்பும் (மார்ச் 15, 1493)
கொலம்பஸ் தான் புறப்பட்ட அதே துறைமுகமான பாலோஸ் தே லா ஃப்ரோன்தேராவை வந்தடைந்தார். அதே நாளில், புயலில் பிரிந்திருந்த பின்டா கப்பலும் சற்று தாமதமாக பாலோஸை வந்தடைந்தது.
இதன் பிறகுதான் கொலம்பஸ், ஸ்பானிய அரசர் பெர்டினாண்ட் மற்றும் அரசி இசபெல்லாவைச் சந்திக்கப் பார்சிலோனா சென்றார். அங்கு தான் கண்டுபிடித்த நிலங்களை அறிவித்து, தான் கொண்டு வந்த தங்கம், தாவரங்கள், பழங்கள், கிளிகள் போன்ற பறவைகள், மற்றும் ஆறு தைனோ பூர்வகுடி மக்களை அரச தம்பதியினர் முன் சமர்ப்பித்து, தன் முதல் பயணத்தை முறையாக நிறைவு செய்தார்.
மார்ச் 15, 1493-ல் அவர் எழுதிய அறிவிப்புக் கடிதம் ஸ்பானிய மொழியில் இருந்து ரோமிற்கு அனுப்பப்பட்டு, லத்தீன் மொழியில் அச்சிடப்பட்டு, அவரது கண்டுபிடிப்புகளை ஐரோப்பா முழுவதும் அறியச் செய்தது.
முதல் பயணத்திலிருந்து திரும்பியபோது, கொலம்பஸ் பெரிய அளவிலான வேளாண் பரிமாற்றத்தைத் தொடங்கவில்லை — அது இரண்டாம் பயணத்தில்தான் (1493 செப்டம்பர்) நிகழ்ந்தது. ஆனால் முதல் பயணத்தில், அமெரிக்காவின் வளத்தை ஸ்பானிய அரச தம்பதியினருக்கு நிரூபிக்கும் விதமாக, சில முக்கியமான தாவரங்களையும் பறவைகளையும் அவர் கொண்டு வந்தார்.
அவர் கொண்டு வந்தவைகளில் முக்கியமானவை:
புகையிலைச் செடி: ஐரோப்பியர்களுக்கு அன்றுவரை அறியப்படாத ஒரு புதிய தாவரம்.
அன்னாசிப் பழம்: கரீபியன் தீவுகளின் தனித்துவமான பழமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
வான்கோழி: அமெரிக்கக் கண்டத்தின் தனித்துவப் பறவையாக ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இவற்றுடன் கொஞ்சம் தங்க மாதிரிகள் முத்துக்கள், அலங்காரப் பொருட்கள், ஊஞ்சல்கள் (hammock) ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டன. இவை பெரும்பாலும் கியூபா மற்றும் ஹிஸ்பானியோலா தீவுகளிலிருந்து , அக்டோபர்–டிசம்பர் 1492-க்கு இடையே அவர் அந்தத் தீவுகளை ஆய்வு செய்த காலத்தில் சேகரிக்கப்பட்டவை.
கொலம்பஸுக்கு ஆற்றுப் படுகைகள் மற்றும் மணல் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய இயற்கைத் தங்கத் துகள்கள் மற்றும் சிறிய தங்கக் கட்டிகள் கிடைத்தன. ஆற்று மணலைக் கழுவிப் பிரித்தெடுக்கப்பட்ட இந்தத் தங்கத் துகள்களை, தான் கண்டுபிடித்த நிலங்களில் தங்கம் இயற்கையாகவே மிகுந்து கிடக்கிறது என்பதற்கு முதல் சான்றாகக் கொண்டு சென்றார்.
தைனோ மற்றும் லுகாயன் பூர்வகுடி மக்கள் தங்களின் அன்றாட பயன்பாட்டிலும் சடங்குகளிலும் தங்க மூக்குத்திகள் மற்றும் காதணிகள்: பூர்வகுடிகள் மூக்கிலும் காதுகளிலும் அணிந்திருந்த சிறிய தங்க வளையங்கள் மற்றும் தகடுகள், தலைக்கவசங்கள், முகமூடிகள் மற்றும் மரச் சிலைகளில் ஒட்டப்பட்டிருந்த மெல்லிய தங்கத் தகடுகள் ஆகியவற்றையும் எடுதுக்கொண்டார்.
கரீபியன் பூர்வகுடிகள் தூய தங்கத்தை விட, தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகிய மூன்றும் கலந்த ‘குவானின்’ (Guanin) என்னும் ஒரு கலப்பு உலோகத்தைப் பயன்படுத்தினர். இந்த உலோகத்தினால் செய்யப்பட்ட சிறிய நகைகள் மற்றும் தகடுகளையும் கொலம்பஸ் மாதிரிகளாகக் கொண்டு சென்றார்.
உண்மையில், கொலம்பஸுக்கு முதல் பயணத்தில் கிடைத்தது ஒரு சிறிய பெட்டி அல்லது பைக்குள் அடங்கிவிடும் அளவு தங்கம் தான். அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய தங்கச் சுரங்கங்களோ அல்லது கற்பனை செய்தது போலத் தங்கக் குவியல்களோ அங்கு இல்லை.
ஆனால், ஸ்பெயின் மன்னர் பெர்டினாண்ட் மற்றும் அரசி இசபெல்லா முன் ஆஜரான போது, இந்தச் சிறிய மாதிரிகளைக் காட்டி, “இது வெறும் மாதிரியே, அங்கு தங்க நதிகளும் சுரங்கங்களும் கொட்டிக் கிடக்கின்றன” என்று மிகைப்படுத்திப் பேசினார்.
இந்தச் சிறிய தங்க மாதிரிகளும், அவரது சாதுரியமான பேச்சும்தான் ஸ்பெயின் அரச குடும்பத்தை நம்ப வைத்து, உடனடியாக 17 கப்பல்கள் கொண்ட பிரம்மாண்டமான 2-வது பயணத்திற்கு நிதியுதவி செய்ய வைத்தன!
1493-ல் தொடங்கிய கொலம்பஸின் இரண்டாம் பயணத்தையும், கொலம்பஸ் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்ற கோதுமை, சிட்ரஸ் விதைகள், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ், கடலை, முலாம்பழம், முள்ளங்கி போன்ற தோட்டப் பயிர்கள் அடங்கிய உண்மையான, பெரிய அளவிலான “கொலம்பியன் பரிமாற்றத்தையும்’’ கோட்டையில் விட்டு விட்டு வந்த 39 பேரும் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதையும் இனி தொடர்ந்து காணலாம்.
தொடரும்..
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
