ரொட்டி சுட்டதடா…

முதலில்லெல்லாம் எனக்கு ப்ரெட்டைக் கண்டாலே பிடிக்காது. உடம்பு சரியில்லாத பொழுது உண்ணும் பண்டம் என்பது என் மனத்தில் பதிந்து விட்டதாலோ என்னவோ ரொட்டியைக் கண்டாலே ஒருவித ஆயாசம் ஏற்படும். அதிலும் அதை பாலில் முக்கி சொதசொதவெனச் செய்து தருவார்கள். இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது. இதையே தோசைக்கல்லில் கொஞ்சம் நெய் சேர்த்து மொறுமொறுவெனச் செய்து மேலே சீனியைத் தூவித் தந்தால் உண்ணும்படி இருக்கும். அப்பொழுது வீட்டில் டோஸ்டர் எல்லாம் கிடையாதென்பதால் தோசைக்கல்லில்தான் ரொட்டியை வாட்டி எடுப்பதெல்லாம். 

திருநெல்வேலியில் இருந்து அப்பா வாங்கி வந்த ஜாம் எனப்படும் பழக்கூழ் சீனியின் இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஆரஞ்சு, பைனாப்பிள், ஸ்டிராபெரி எனப் பல சுவைகளில் அப்பா பழக்கூழை வாங்கி வர வேண்டும் என்பது நிரந்தரக் கட்டளையானது. உள்ளூரில் கிடைக்கும் ரொட்டியை விட அங்கிருந்து வாங்கி வரும் மாடர்ன் ப்ரெட்டுக்கு கூடுதல் மதிப்பு இருந்தது. பல வண்ணங்களில் சிறு சிறு சதுரங்கள் போட்ட அந்த ப்ரெட்டின் நெகிழிப்பை இன்னும் மனத்தில் இருக்கின்றது. அதே போல சின்னச் சின்னப் பழத்துண்டுகள் போட்ட ஒரு வகை ரொட்டியும் அப்பா வாங்கி வருவார். அது கூடுதல் தித்திப்போடு வித்தியாசமாக ரொட்டிக்கும் கேக்குக்கும் இடைப்பட்டு இருக்கும். அதை வாட்டாமல் அப்படியே சாப்பிட வேண்டும். 

பின்னொரு நாள் நீண்ட கைப்பிடியும் முனையில் சதுர வடிவில் ஒரு வடிவமுமாக ஓர் இரும்பு சாதனம் வந்திறங்கியது. அந்த சதுர அறையைத் திறந்து அதற்குள் ரொட்டியை வைத்து தீயின் மேல் காட்டி வாட்டிலாம். அதனுள் செய்யப்பட்ட வடிவதால் சதுரமாக உள்ளே வைக்கப்பட்ட ரொட்டித்துண்டுகள் இரண்டு முக்கோணங்களாக வெளிவரும் மாயமும் நிகழும். இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வெங்காயம் தக்காளி கேரட் போன்றவற்றை வைத்து உப்பு மிளகு தூவி செய்து தந்த சாண்ட்விச்தான் ரொட்டியை ஓர் உணவுப் பொருளாகவே அடையாளப்படுத்தியது.

 

இன்னும் சொல்லப் போனால் ரொட்டியை ஒரு கலமாகக் கொண்டு அதில் பல வேறு பொருட்களைப் பொதிந்து உண்ணலாம் என்ற எண்ணம் மனத்தில் நுழைந்த பின் அதில் செய்யக்கூடிய பரிசோதனைகளுக்கு எல்லையே இல்லாமல் போனது. சிறுவயதில் இருந்தே நானே செய்து கொள்ளவும் அனுமதி கிடைத்ததால் கையில் கிடைத்ததை எல்லாம் ரொட்டியில் பொதிந்து உண்ணும் வழக்கம் வந்தது.  உருளைக்கிழங்கு கறி, மிக்ஸர், புளியோதரை, ஏன் எங்கள் ஊரின் சொத்தான அல்வாவைப் பொதிந்து கூட சாண்ட்விச் செய்து பார்த்திருக்கிறேன். இன்றைக்குச் சமையலில் நான் செய்யும் பரிசோதனைகளுக்கெல்லாம் அடித்தளம் அந்த சாண்ட்விச் செய்யும் இரும்புக் கருவிதான். 

சென்னைக்கு வந்த பின்னர்தான் உப்பிட்ட வெண்ணெய்யும் பாலாடைக்கட்டிகளும் அறிமுகமாயின. பழக்கூழ் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு புறம் வெண்ணெய் மறு புறம் பழக்கூழ் எனச் சேர்த்து உண்ணும் பொழுது ருசி பல மடங்கு அதிகமான உணர்வு. ப்ரெட்டோடு பன்னும் சேர்ந்து கொண்டது. மந்தைவெளி பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் ஓர் அடுமனையில் பன் பட்டர் ஜாம் பிரமாதமாக இருக்கும். மைலாப்பூர் லஸ் முனையில் இருந்த ஒரு நொறுக்குத்தீனி கடையில் ப்ரெட்டில் பஜ்ஜி செய்து தருவார்கள். ப்ரெட்டின் லேசான சுவையோடு மாவில் கலந்த காரமும் சேர்ந்து வெளியே மொறுமொறுப்பு உள்ளே ரொட்டியின் மென்மை என அருமையாக இருக்கும். அங்கே பன்னோடு காய்கறி மசியலைச் சேர்த்து தரும் பாவ் பாஜியும் நன்றாக இருக்கும். 

மும்பைக்கு சென்றால் தெருவோரம் இருக்கும் கடைகளில் ரொட்டியின் ஓரங்களை வெட்டிவிட்டு, அமுல் வெண்ணெய், காய்கறிகள், மசாலப் பொடிகள் எல்லாம் சேர்த்து செய்யும் பாம்பே சாண்ட்விச் தனித்தன்மையான சுவை கொண்டது. இதை வாட்டாமல் அப்படியே பச்சையாகத்தான் தருவார்கள். இதே போல தெருவோரக் கடைகளில் அப்பொழுது பொரித்து எடுத்த உருளைக்கிழங்கு போண்டாவை பன் உள்ளே வைத்து கூடவே ஒரு பூண்டுப் பொடியைச் சேர்த்து செய்யும் வடாபாவுக்கு நான் இன்றைக்கும் ரசிகன். அதென்னவோ பெரிய பெரிய உணவகங்களில் சாப்பிடும் வடாபாவ்கள் செம்பூர் தபால் நிலையம் அருகே இருக்கும் நடைபாதைக் கடை ஒன்றில் தரும் வடாபாவ் சுவையின் அருகே கூட வருவதில்லை.  

பயணம் செய்யும் பொழுது தொடர்வண்டியில் பேண்ட்ரி கார் என்றழைக்கப்படும் அடுப்படி இருந்தால் தனி உற்சாகம்தான். அதில் தரும் உணவுப் பொருட்களுக்கு ஒரு தனி ருசிதான். அதிலும் அவர்கள் தரும் ப்ரெட் ஆம்லேட்டைப் போல இதுகாறும் வேறெங்கும் உண்டதில்லை. கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு செய்த ஆம்லேட்டை ரொட்டிக்கு நடுவே வைத்து வாட்டித் தருவார்கள். எல்லா இடங்களில் செய்வதுதான் என்றாலும் அவர்கள் செய்தால் மட்டும் ஒரு கூடுதல் ருசிதான். வேறெங்கும் அச்சுவை கிடைப்பதில்லை. 

அமெரிக்கா வந்த பின் ரொட்டியின் மகிமை மேலும் கூடியது. ஆனால் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் இங்குள்ள ரொட்டியில் சர்க்கரையைக் கொட்டி வைத்திருக்கிறார்கள், அதனால் எல்லா வகை ரொட்டிகளிலும் தித்திப்பு மூக்கை நீட்டிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காது. இத்தாலிய ஹீரோ பனினி, கிரேக்க யீரோ,  லூயிசியானா போபாய், மத்திய ஐரோப்பிய கொலாச்சி, வியட்நாமிய பான்மி, அமெரிக்க ஸ்லைடர் என எத்தனையோ வகை சாண்ட்விச்சுகளின் அறிமுகம் கிடைத்தது. ரொட்டிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் எனப் பாடிக்கொண்டு கடை கடையாக ஏறி இறங்குவது வாடிக்கையானது. 

சப்வே என்ற கடையில் ஒரு அடி, அரை அடி என்ற கணக்கில் சேண்ட்விச்சுகளை வாங்கி உண்ணலாம். இன்றைக்கும் அவ்வப்பொழுது செல்லும் கடை இது.  சப்மரைன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் நீர்மூழ்கிக் கப்பல் வடிவத்தில் இருப்பதால் இந்த வகை ரொட்டிகளையும் அதில் செய்யப்படும் சாண்ட்விச்களையும் சப் என்று அழைக்கிறார்கள். ரொட்டியை நீளவாக்கில் அறுத்து அதனுள் பல வகை காய்கறிகள், இறைச்சிகள் சேர்த்து அவற்றின் மேல் வேறு வேறு சுவைகள் கொண்ட சாறுகளை ஊற்றித் தரும் சப்வே சாண்ட்விச்கள் நமக்குப் பிடித்தமான உணவானது. 

அது போலவே ரொட்டியை அடித்தளமாகக் கொண்டு அதன் மேல் பல்வேறு உணவு வகைகளை அடுக்கிச் செய்யப்படும்  பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடத் தொடங்கினேன். இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டியது எலுமிச்சையின் புளிப்புச் சுவை கொண்ட ஹாலண்டேஸ் சாஸ் ஊற்றப்படும் எக்ஸ் பெனிடிக்ட் என்ற காலையுணவு எனக்கு மிகவும் பிடித்தமானது. எலுமிச்சை புளிப்பு கொண்ட அந்த  சாஸ், பாதி வெந்த முட்டை, மேலே தூவப்பட்ட காய்கறிகள் என்று மிகப் பிரமாதமாக இருக்கும். பொதுவாக இதில் பேக்கன் என்ற பன்றி இறைச்சியில் செய்யப்பட்ட மொறுமொறுப்பான துண்டுகளைப் போடுவார்கள், எனக்கு அது பிடிக்காது என்பதால் தவிர்த்துவிடுவேன். 

பெருந்தொற்றுக் காலத்தில் நான் வீட்டில் ரொட்டியை உண்டாக்கத் தொடங்கினேன். அதிலும் குறிப்பாக சவர்டோ (Sourdough) என்ற வகை ரொட்டியை செய்வது வழக்கமானது. ஒரு வித புளிப்புடன் இருக்கும் இந்த ரொட்டி வீட்டில் எல்லாருக்குமே பிடிக்கும். அதிலே சீஸ், ஹேலப்பீன்யோ மிளகாய், வெள்ளை கருப்பு எள், ஓட்ஸ் போன்றவற்றைச் சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவைகளில் ரொட்டி கிடைக்கும். நானே செய்வதால் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்வதில்லை. முன்னே சொன்ன ஆவலாதியும் இப்பொழுது இல்லை. இந்த சவர்டோ இயற்கையாகவே புளிக்க வைக்கப்படுவதால் வயிற்றுக்கு நல்லது என்கிறார்கள். சும்மாவே ஆடும் நமக்குச் சலங்கையைக் கட்டி விட்டது போலானது. சவர்டோ ரொட்டி மட்டுமில்லாமல், அதில் ப்ரௌணி, கூக்கீஸ் என பலவகை பதார்தங்களைச் செய்யத் தொடங்கினேன். 

இவ்வளவு எல்லாம் சொன்னாலும் என் மனத்துக்கும் வயிற்றுக்கும் நெருக்கமான ரொட்டி என்றால் அது மற்ற இடங்களில் பரோட்டா என்ற பெயரில் வழங்கப்படும் ரொட்டிதான். கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் இருக்கும் மீரானியா புரோட்டா ஸ்டால் என்ற கடைதான் நமக்கு வாடிக்கை. கடை முகப்பில் மட்டும்தான் புரோட்டா ஆனால் புழக்கத்தில் எல்லாமே ரொட்டிதான். அங்கு ஒரு கூடுதல் வசதி என்னவென்றால் கடையின் ஒரு பாதியில் ஒரு தடுப்புப் போடப்பட்டு இருக்கும் அதன் பின் அமர்ந்தால் சாலையில் போய் வருபவர் கண்ணில் படமாட்டோம். அதனால் மாட்டிக் கொள்வோமோ என்ற கவலை கிஞ்சித்தும் இல்லாமல் உண்ணலாம். கடை வாயிலில் புரோட்டா மாஸ்டர் தன் நோஞ்சான் உடலில் இருக்கும் சக்தி எல்லாம் சேர்த்து மாவு பிசைவதும் ரொட்டி இடுவதும் அதை கல்லில் போட்டு லாகவமாய் எடுப்பதுமாக இரு கை போதாமல் இருப்பார். 

வாழை இலையைப் போட்டு அதில் ரொட்டியை அடுக்கி, இரு கைகளாலும் அவற்றை தட்டி பின் சிறு துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு அவற்றின் மேல் கொதிக்கக் கொதிக்க சால்னாவை ஊற்றும் பொழுது எழும் வாசம் இல்லாத பசியை எல்லாம் தூண்டி விடும். ரொட்டி சால்னாவுடன் தரப்படும், கொஞ்சம் தயிரில் ஏராளமாக தண்ணீர் விட்டுச் செய்த வெங்காயப் பச்சடி தேவாமிர்தமாய் இருக்கும். எதோ திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல எண்ணிக்கை எல்லாம் வைத்துக் கொள்ளாமல் போதும் என்ற அளவு போட்டுக் கொண்டே இருப்பார்கள். காசே இல்லை என்றாலும் கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்துவிடலாம். கையில் பணம் வரும் பொழுது பாயிடம் தந்து பைசல் செய்து கொள்வோம். 

கொஞ்சம் வயதாக அம்பை, விகேபுரம், திருநெல்வேலி, தென்காசி என நல்ல ரொட்டிக்கான தேடுதல் விரிவடைந்து கொண்டே போனது. குற்றாலத்தில் கண்கள் இரண்டும் சிவக்கும் வரை அருவியில் ஆட்டம் போட்டுவிட்டு அடங்காத பசியோடு பார்டர் கடைக்குச் சென்று காணாதது கண்டாற்போல் உண்ட ரொட்டி சால்னாவுக்கு ஈடான சுவை இதுவரை கண்டதில்லை. அல்வாவின் சுவைக்குக் காரணம் தாமிரபரணி தண்ணீர்தான் என்பது போல இந்த ரொட்டி சால்னா சுவைக்கும் காரணம் அந்த தண்ணீர்தானோ என்னவோ. 

இன்றைக்குப் பொரித்த பரோட்டா, பன் பரோட்டா, கிழி பரோட்டா என்று என்னென்னவோ வகைப் பரோட்டாக்கள் கிடைக்கின்றன. ஆனால் வெறும் ரொட்டி சால்னாவுக்கு முன் இவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றுதான் தோன்றும். 

பொதுவாகச் சமைப்பதில் ஆர்வம் உண்டு என்றாலும் இந்தப் பரோட்டாவைச் செய்ய மட்டும் ஒரு தயக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  ஆனால் கடையில் வாங்கிய பரோட்டாவைக் கொண்டு நான் செய்யும் கொத்துப் பரோட்டாவிற்கு குடும்பத்தில் அமோக வரவேற்புண்டு. இலவசக்கொத்தனாராகிய நான் செய்யும் இந்தக் கொத்துப் பரோட்டாவிற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் கொத்ஸு பரோட்டா!


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.