1
குறத்தி என்ற சொல் தமிழ் பண்பாட்டு நினைவில் சமூகத்தின் மையத்திற்கு வெளியே நிற்கும் ஒரு பெண்ணின் உருவத்தைத் தாங்கி நிற்கிறது. வள்ளி அதற்கான முக்கியமான நினைவுருவங்களில் ஒன்று. முருகன் தெய்வமாகவும், வள்ளி குறத்தியாகவும் இருக்கும் அந்த தொன்மத்தில் சமூகப்படிநிலை, அடையாளம், வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கிடையே ஒரு இடைவெளி இருக்கிறது. ஆனால் அந்த இடைவெளிக்குள் ஒரு தனிமனித உறவு உருவாகும் அழகியலும் இருக்கிறது. முடுக்கு என்பது பிரதானப் பாதையிலிருந்து விலகிய, ஒரு குறுகிய இடத்தை குறிக்கும் சொல்.
குறத்தி முடுக்கு நாவல் தொடங்குவதற்கு முன்னால் அதன் ஆசிரியர் ஜி. நாகராஜன் ஒரு சிறிய முன்னுரையை எழுதியிருக்கிறார். “நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன்” என்று தொடங்கும் அந்த முன்னுரையில், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் “முழுமையைத்தான் சொல்லியாக வேண்டும்” என்றும், தான் விரும்பிய அளவுக்கு அதைச் சொல்ல முடியவில்லை என்பதே தனது வருத்தம் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த “முழுமை” என்ற சொல், குறத்தி முடுக்கை வாசிக்கும்போது எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஒரு மனிதரைப் பற்றி நாம் வைத்திருக்கும் முதல் பார்வையிலிருந்து, அந்த மனிதரின் முழுமையை நோக்கி நகரும் பார்வையின் வாசிப்பாகவும், ஒரு பெயரிலிருந்து ஒரு மனிதருக்குச் செல்லும் பயணம் என்றும் தோன்றுகிறது.
குறத்தி முடுக்கு என்ற அந்த இடத்திற்குள் நாவல் வழியே சென்றவுடன், அங்கே இருப்பவர்கள் வெறும் “விளிம்புநிலை மனிதர்கள்” அல்ல என்பது தெரியவருகிறது. தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மனிதர்கள் இதற்கு முன்பும் வந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் இரக்கத்திற்குரியவர்களாகவோ, சமூக அநீதியின் குறியீடுகளாகவோ, அல்லது சீர்திருத்த அரசியலின் முகமாகவோ இருந்திருக்கிறார்கள். குறத்தி முடுக்கு இந்த மூன்றையும் முன்வைக்கவில்லை. இங்கே மனிதர்கள் முதலில் மனிதர்கள். அதன் பிறகுதான் அவர்கள் விபச்சாரிகள், தரகர்கள், வாடிக்கையாளர்கள், போலீஸ் அல்லது சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்கள். இந்த நாவலில் ஒவ்வொருவரும் தங்கள் ஆசைகள், பயங்கள், கணக்குகள், சுயநலங்கள், அன்புகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றுடன் முழுமையான மனிதர்களாக இருக்கிறார்கள்.
அதனால் “குறத்தி முடுக்கு” என்பது சமூகத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு இடம் மட்டுமல்ல. மையம் உருவாக்கிய பெயர்களையும், அந்தப் பெயர்களுக்குள் அடங்காத மனித வாழ்க்கையையும் சந்திக்கும் இடமாக அமைகிறது.
2

ஒரு நாவலில் பொதுவாக தொடக்கம், முரண், உச்சக்கட்டம், தீர்வு என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. நிகழ்வுகள் ஒன்றை ஒன்று உருவாக்கி கதையை முன்னோக்கி நகர்த்துகின்றன. இதையே கதைநிகழ்வுகளின் கட்டமைப்பு (plot arc) என்று அழைக்கிறோம்.
இந்த அளவுகோலில் குறத்தி முடுக்கின் கதைநிகழ்வுகளின் கட்டமைப்பு எளிமையானது. பெரிய திருப்பங்களோ, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களோ இங்கு இல்லை. மனிதர்கள் பேசுகிறார்கள், காதலிக்கிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், பிரிகிறார்கள், மீண்டும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள். ஒரு பெரிய சம்பவம் நிகழ்ந்து, அதன்பிறகு எல்லோருடைய வாழ்க்கையும் மாறிவிடும் வகையான கதை அமைப்பு இங்கே இல்லை. ஆனால் அதனால் நாவலுக்கு இயக்கமே (plot progression) இல்லை என்று சொல்ல முடியாது. நிகழ்வுகளின் நகர்வுக்குப் பதிலாக, இங்கே பார்வையின் நகர்வு ஒன்று நிகழ்கிறது.
நாவலின் தொடக்கத்தில் வாசகர் குறத்தி முடுக்கிற்குள் நுழையும்போது, அவருடைய மனதில் ஏற்கனவே சில பெயர்களும், விபச்சாரிகள், ஒழுக்கமற்ற வாழ்க்கை, பணத்திற்காக உடலை விற்பவர்கள் போன்ற சமூக வகைப்பாடுகளும் முன்முடிவுகளும் இருக்கின்றன. அந்த முன்முடிவுகளின் வழியாகத்தான் அந்த உலகைப் பார்க்கிறார். ஆனால் நாவல் அந்த உலகிற்குள் அவரை மெதுவாக அழைத்துச் செல்கிறது. அதன் மனிதர்களுடன் பழகச் செய்கிறது. அவர்களின் ஆசைகளையும் பயங்களையும், கணக்குகளையும் முரண்பாடுகளையும் பார்க்கச் செய்கிறது.
இறுதியில் அந்த உலகை நமக்குப் பழக்கமான ஒழுக்க அளவுகோல்களால் மட்டும் மதிப்பிட முடியாது என்ற உணர்வு உருவாகிறது. அதாவது, நாவலின் முடிவில் மாறுவது கதாபாத்திரங்கள் மட்டும் அல்ல. வாசகரின் பார்வையும் மாறுகிறது.
இதையே நான் “பார்வை நுண்மையடைதல்” (refinement of perception) என்று அழைக்க விரும்புகிறேன்.
3
பார்வை நுண்மையடையும் மாற்றத்தை நாவலில் வரும் கதாபாத்திரங்களின் வழியாகப் பார்க்கலாம். ஆரம்பத்தில் வரும் நிருபர் என்ற கதாபாத்திரம், தன்னை “உணர்ச்சியற்றவன்”, “யதார்த்தவாதி” என்று நம்புகிறான். “ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணுக்கு ஆண் தேவை. குழந்தை வளர்ப்பு என்ற தொல்லைக்காகத்தான் குடும்பம் உருவாக்கப்பட்டது” என்ற அவனுடைய சிந்தனை, காதல் மற்றும் குடும்பம் போன்றவற்றை உணர்ச்சியற்ற சமூக ஒப்பந்தங்களாகப் பார்க்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
விலைமகளிர் தெருவையும் அவன் முதலில் உடல் தேவையை நிறைவேற்றும் இடமாகத்தான் அணுகுகிறான். ஆனால் குறத்தி முடுக்கு தெருவில் உள்ள தங்கம் என்ற இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தின் உடனான உறவு அந்தத் தன்னம்பிக்கையை மெதுவாக உடைக்கத் தொடங்குகிறது. அவள் மற்ற ஆண்களுடன் இருப்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் ஏற்படும் சங்கடமும் பொறாமையும், உரிமை உணர்வும், “நான் உணர்ச்சியற்றவன்” என்ற அவனுடைய சுயபிம்பத்துக்கு எதிராக நிற்கின்றன. அவளுக்காகப் பணம் செலவழிப்பது, அவளுடைய வீட்டின் உள்தோற்றத்தை மாற்றுவது, அவளை மணக்க வேண்டும் என்ற ஆசை, அவள் இல்லாதபோது ஏற்படும் வெறுமை போன்ற அனைத்தும் அவன் முன்பு மறுத்திருந்த “காதல்” என்ற உணர்வின் வேறு வடிவங்களாகத் திரும்புகின்றன.
அவன் இரண்டு மனநிலைகளுக்குள் சிக்கிக்கொள்கிறான். ஒருபுறம் தன்னுடைய பழைய தத்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறான். மறுபுறம் தங்கத்தின் மீதான ஆசை அவனை அந்தத் தத்துவத்துக்கு அப்பால் இழுத்துச் செல்கிறது. தங்கத்துடனான உறவு அவனுடைய பார்வையை ஒரே நாளில் மாற்றிவிடுவதில்லை. அது முதலில் ஒரு மிகச் சிறிய குழப்பமாகவே தொடங்குகிறது. அவள் அவனை வழக்கமான வாடிக்கையாளரைப் போல மட்டும் நடத்தவில்லை என்று அவனுக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில், அவள் மற்றவர்களிடமும் இப்படித்தான் நடந்துகொள்வாளோ என்ற சந்தேகமும் அவனுக்குள் இருக்கிறது. அவள் தன்னிடம் மட்டும் ஏதோ விசேஷமாக நடந்துகொண்டாள் என்று நம்ப விரும்புகிறான். அதே நம்பிக்கையை சந்தேகிக்கவும் செய்கிறான்.
இந்தச் சிறிய ஊசலாட்டம்தான் முக்கியமானது. “விலைமகள்” என்ற பொதுவான வகைப்பாட்டிலிருந்து “என்னிடம் இவள் எப்படி இருக்கிறாள்?” என்ற தனிப்பட்ட கேள்விக்குள் அவன் நுழைகிறான். ஒரு பெயருக்குள் இருந்த பெண், மெதுவாக ஒரு குறிப்பிட்ட உறவுக்குள் இருக்கும் மனிதராக மாறுகிறாள். இந்த மாற்றம் அவளைப் பார்க்கும் அவனுடைய பார்வையில்தான் நிகழ்கிறது.
இந்த மாற்றம் இன்னும் தெளிவாகத் தெரியும் ஒரு காட்சி நாவலில் வருகிறது. ஒரு நாள் வழக்கத்தைவிட முன்னதாகத் தங்கத்தின் வீட்டுக்குச் செல்லும் நிருபர், அங்கிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைப் பார்க்கிறான். அவனுக்குச் சங்கடமாகிறது. ஆனால் தங்கம் கதவை அரைகுறையாக மூடிக்கொண்டு வழக்கம்போல அவனை வரவேற்கிறாள்.
இங்கே ஒரு முக்கியமான முரண்பாடு இருக்கிறது. தங்கம் விலைமகள் என்பதை நிருபர் ஏற்கனவே அறிவான். அவளிடம் மற்ற ஆண்கள் வருவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். அந்த உண்மை இதற்குமுன் அவனைத் தொந்தரவு செய்ததில்லை. ஆனால் அந்த உண்மை ஒரு குறிப்பிட்ட ஆணின் உருவில், தன் கண்முன்னே நிகழும்போது அது பொறாமையாக மாறுகிறது. அவன் அறிந்திருந்த உண்மை, அனுபவிக்கப்பட்ட உண்மையாக மாறும் தருணம் இது.
இதில்தான் நாவலின் பார்வை மாற்றம் இருக்கிறது. “விலைமகள் மற்றவர்களிடமும் செல்கிறாள்” என்ற சமூக அறிவு ஒன்றாக இருக்கிறது; “நான் விரும்பும் இந்தப் பெண் இப்போது வேறொருவருடன் இருந்திருக்கிறாள்” என்ற தனிப்பட்ட அனுபவம் வேறொன்றாக இருக்கிறது. முதல் அறிவு ஒரு வகைப்பாடு. இரண்டாவது ஒரு மனித உறவு. நாவல் அந்த இரண்டிற்கும் இடையிலான தூரத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
ஆரம்பத்தில் காதலைப் பற்றிய அவனுடைய பார்வை எவ்வளவு அலட்சியமானது என்பதை நினைத்துப் பார்த்தால், இந்த மாற்றம் இன்னும் கூர்மையாகத் தெரிகிறது. ஆண் – பெண் உறவை அவன் பெரும்பாலும் உடல் தேவையின் இயல்பான விளைவாகவே பார்த்திருந்தான். ஆனால் பின்னர் தங்கத்தைத் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டுப் போக வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுகிறது. அதே நேரத்தில், தங்கம் வேறொரு ஆணுடன் பழகக்கூடும் என்ற எண்ணம் அவனுக்கு வேதனையையும் பொறாமையையும் உருவாக்குகிறது.
இதை வெறும் “அவன் காதலிக்கத் தொடங்கிவிட்டான்” என்று சொல்வது இந்த மாற்றத்தின் நுட்பத்தைக் குறைத்துவிடும். அதைவிட முக்கியமானது, தன்னைப் பற்றி அவன் வைத்திருந்த பிம்பம் அவனுடைய சொந்த அனுபவத்தால் உடைந்து போகிறது என்பதுதான்.
ஒருகாலத்தில் காதலை வாழ்க்கையின் மையமாகக் கருதாதவன், இப்போது ஒரு பெண்ணின் மீது தனக்குரிய உரிமையை விரும்புகிறான். அவள் வேறொருவருடன் இருப்பாள் என்ற சாத்தியம் அவனுடைய மனத்தில் வலியை உருவாக்குகிறது. தன்னுடைய பழைய தத்துவத்தைவிட, தன்னுடைய வாழ்ந்த அனுபவம் வலிமையானது என்பதை அவன் அறியத் தொடங்குகிறான்.
4
மற்றொரு முக்கிய கதாபாத்திரமான தங்கம் ஒரு “விபச்சாரி” மட்டும் அல்ல. அதுவே அவளுடைய முழு அடையாளமுமல்ல. தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பல நேரங்களில் தியாகத்தின் உருவமாகவோ, கற்பின் உருவமாகவோ, அல்லது சோகத்தின் உருவமாகவோ எழுதப்பட்டிருக்கிறார்கள். தங்கம் இவற்றில் எதுவுமில்லை. அவள் நல்லவளும் இல்லை. கெட்டவளும் இல்லை. காதலிக்கிறாள், அதே நேரத்தில் கணக்கு பார்க்கிறாள். பாசம் காட்டுகிறாள், அதே நேரத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கான தந்திரத்தையும் கைவிடுவதில்லை. அவள் “மீட்கப்பட்ட” பெண்ணாக மாறாமல், தன் சூழலுக்குள் இருந்தே ஒருவித சுயாதீனத்தைத் தக்க வைத்துக்கொள்கிறாள். இதுதான் அவளுடைய வலிமை.
அவள் தன்னை விலைமகளாக நினைக்கவில்லை. அவள் ஆரம்பத்திலும் அதே. இறுதியிலும் அதே. அவள் ஒரு மனிதர். ஆரம்பத்திலும் ‘விலைமகள்’ என்பது அவளுடைய வாழ்க்கையின் ஒரு சூழ்நிலை மட்டுமே. தங்கம் ஆரம்பத்திலும் தங்கம்தான், இறுதியிலும் தங்கம்தான். அவள் திடீரென்று நல்லவளாக மாறுவதில்லை. தன் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய அறநெறி உண்மையை அவள் கண்டடைவதுமில்லை. அவள் தன் சூழலுக்குள் வாழ்கிறாள். அதற்கேற்ப நடக்கிறாள். “‘விலைமகள்’ என்ற பெயர் தங்கத்தைப் பற்றிய ஒரு உண்மையைச் சொல்கிறது. ஆனால் அவளைப் பற்றிய முழு உண்மையைச் சொல்லவில்லை.
நிருபர் முதலில் அவள் தன்னிடம் மட்டும் விசேஷமாக நடக்கிறாளா என்று அவன் யோசிக்கிறான். பின்னர் அவள் வீட்டிலிருந்து வெளியே வரும் இன்னொரு ஆணைக் காணும்போது பொறாமைப்படுகிறான். இறுதியில் அவளைத் திருமணம் செய்துகொண்டு வேறு வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறான். இந்த மூன்று தருணங்களையும் இணைத்துப் பார்த்தால், நாவலின் உண்மையான கதைக்கட்டமைப்பு நிகழ்வுகளில் இருப்பதைவிட பார்வையில் இருப்பது தெளிவாகிறது.
இன்னொரு கதாபாத்திரமான தேவயானை நாவலின் இறுதியில் வருகிறது. சாவதற்கு முயன்று, அதற்கும் வழியில்லாமல் கீழே விழுந்து அடிபடும் தேவயானை என்ற பெண்ணை பார்க்கும்போது “விலைமகள்”, “விளிம்புநிலைப் பெண்”, “சமூகத்தால் அழிக்கப்பட்டவள்” என்று மீண்டும் ஒரு பெயரை அவள்மீது வைத்துவிடுவது எளிது. ஆனால் இவ்வளவு தூரம் நம்மை அழைத்து வந்த நாவல் நம்மை அத்தகைய எளிய முடிவுக்குக் கொண்டு செல்வதில்லை. வள்ளி குறத்தி முடுக்கில் உண்மையான தேவயானைகளா வந்து சிக்குவார்கள் என்ற கேள்வியை நாவலுக்கு உள்ளேயே எழுப்புகிறது.
ஒருவேளை அங்கே சிக்குவது தேவயானைகள் மட்டுமல்ல. ஒரு பெயருக்குள் ஒரு மனிதனை அடைத்துவிடும் நம்முடைய பார்வையே. அப்போது நாவலின் முடிவில் விழுவது தேவயானை மட்டும் அல்ல. அவளைப் பற்றிய நம்முடைய எளிய புரிதல்களும் கூட. ஒரு மனிதனைப் பற்றிய நமது தீர்ப்புகள் அவனுடைய வாழ்க்கையைவிட எவ்வளவு சிறியவை என்பதை உணரச் செய்யும் நாவல் அதனுடன் முடியவில்லை. அதன்பிறகு இறுதிக்காட்சி வருகிறது.
நிருபர் தங்கத்தை சந்தித்துவிட்டு வந்தபின் அவளுடன் இருப்பதாக கனவு கண்டு தூக்கத்தில் இருந்து விழிக்கிறான். அதுவரை அவளை உடலின் வழியாகவும், உறவின் வழியாகவும் பார்த்த அவன், அந்தக் கனவில் அவளுடன் இருப்பதை விரும்புகிறான். அதற்குப் பிறகு மழை பெய்கிறது. நாவல் முழுவதும் நாம் மனிதர்களைப் பற்றி வைத்திருந்த பெயர்களும் அளவுகோல்களும் கொஞ்சம் கொஞ்சமாக நுண்மையடைந்து வந்திருக்கின்றன. இறுதியில் அந்த நுண்மை ஒரு உணர்வாக மட்டுமே எஞ்சுகிறது.
தங்கத்தைப் பற்றி இனி அவனால் எந்தத் தீர்ப்பையும் சொல்ல முடியவில்லை. அவளைப் பற்றிய ஒரு தெளிவான முடிவும் அவனிடம் இல்லை. அவள் அவனுக்குள் இருக்கிறாள். அவளுடன் இருந்திருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையின் சாத்தியமும், அவளை இழந்துவிட்டதன் வெறுமையும் ஒன்றாக இருக்கின்றன. அந்த உணர்வுக்குப் பிறகுதான் மழை வருகிறது.
இத்தனை நேரமும் தங்கத்தைப் பற்றியும், அந்த உலகத்தைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நம்மிடம் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த பார்வை, கடைசியில் ஒரு உணர்வாக நம்மீது இறங்குகிறது. பார்வை நுண்மையடைவது என்பது நாம் ஏற்கனவே தெரிந்துவிட்டதாக நினைத்த ஒருவரை மீண்டும் முதல் முறையாகப் பார்க்கத் தொடங்குவதுதான்.
ஒரு மனிதனை ஒரு வகைப்பாட்டிலிருந்து விடுவித்த பிறகு, அவனைப் பற்றிய இறுதியான தீர்ப்பும் நம்மிடமிருந்து விலகிவிடுகிறது. எஞ்சுவது அவனுடைய இருப்பு மட்டுமே. தங்கம் அப்படித்தான் நாயகனுக்குள் எஞ்சுகிறாள். அந்த எஞ்சுதலுக்குப் பெயர் காதலாக இருக்கலாம். அந்தக் காதலுக்குப் பெயர் வைக்காமல் பெய்யும் மழையாகத்தான் நாகராஜன் நாவலை முடிக்கிறார்.
5
நல்ல இலக்கியம் வாசகனை வாழ்வின் சாட்சியாக மட்டும் பார்க்க சொல்லிக்கோருகிறது. ஜி. நாகராஜன் எந்தக் கதாபாத்திரத்தையும் காப்பாற்ற முயல்வதில்லை. யாரையும் தண்டிக்கவும் முயல்வதில்லை. “இவர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்” என்று மட்டும் காட்டுகிறார். அந்தக் காட்டுதலிலிருந்தே வாசகரின் அசௌகரியம் உருவாகிறது. அசௌகரியம் அந்த உலகின் அனுபவ வடிவத்தை உருவாக்குகிறது. அந்த வடிவத்திற்குள் நுழைந்த பிறகுதான் அதன் அர்த்தம் நமக்குத் திறக்கிறது.
வாழ்க்கையைப் புரிந்துகொள்ள மனிதன் முதலில் அதை வகைப்படுத்துகிறான். நல்லவன் – கெட்டவன், தூய்மை – அழுக்கு, அறம் – அறமின்மை என்று எல்லைகளை வரைகிறான். இலக்கியம் அந்த எல்லைகளை அழிப்பதில்லை. அவை போதுமானவை அல்ல என்பதை மட்டும் காட்டுகிறது. அவற்றின் பின்னால் முரண்பாடுகள் நிறைந்த மனித இருப்பை நமக்குக் காட்டுகிறது. இலக்கியத்தின் பயணம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.
வாழ்க்கையைப் பிரித்து வகைப்படுத்தும் பார்வையிலிருந்து, அதன் முரண்பாடுகளையும் தீர்க்கப்படாத தன்மையையும் ஏற்றுக்கொள்ளும் பார்வை வழியே நாவல் காட்டும் நிகர் வாழ்வனுபவத்தின் நுண்ணுணர்வு மனித தரிசனத்தில் சென்று விரிவடைகிறது. இதை பார்வையின் முதிர்ச்சி என்று அழைக்கலாம்.
கலை என்பது எப்போதும் புதிய பொருளை (meaning) உருவாக்குவதில்லை. பழக்கப்பட்ட உலகையே மீண்டும் பார்க்கக்கூடியதாக மாற்றுகிறது. நாம் அறிந்துவிட்டோம் என்று நினைக்கும் உலகை, மீண்டும் முதல் முறையாகக் காண வைப்பதே கலையின் வேலை. என்ன தெரியும் என்பதல்ல, எப்படித் தெரிகிறது என்று உணரச்செய்வதே அதன் நோக்கம். அதுவே புதிய பொருளை உண்டாக்குகிறது.
குறத்தி முடுக்கு அத்தகைய நாவல். அது விலைமகளிரின் வாழ்க்கையை எழுதவில்லை. மனிதனைப் பற்றிய நமது பார்வையின் மொழியின் எல்லைகளை எழுதுகிறது. அது உலகத்தை மாற்றுவதில்லை. உலகத்தைப் பார்க்கும் நமது கண்களை மாற்றுகிறது.
கட்டுரையின் தொடக்கத்தில் “குறத்தி” என்பது ஒரு பண்பாட்டு நினைவுருவாக சமூகத்தின் மையத்திற்கு வெளியே நிற்கும் ஒரு பெண்ணின் உருவமாக வருகிறது. ஆனால் ஒரு உருவகம் உருவாகும் போது அதற்குள் இருந்த பல தனிமனித வாழ்க்கைகள் மெதுவாக மறைந்து போகின்றன. கதை அவற்றை நினைவாக வைத்திருக்கிறது. உருவகம் அவற்றை ஒரு பெயராகச் சுருக்குகிறது.
இலக்கியம் சில சமயங்களில் இந்தச் சுருக்கத்தை மீண்டும் விரிக்கிறது. குறத்தி முடுக்கு நாவல் வழியே “விலைமகள்” என்ற பெயருக்குள் இருக்கும் தங்கத்தை நாம் பார்க்கத் தொடங்குகிறோம். அவளை ஒரு வகைப்பாட்டின் வழியாகப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தனித்த ஒரு மனிதராக எதிர்கொள்வதற்குச் செல்கிறோம். அங்கேதான் பார்வையின் முதிர்ச்சி நிகழ்கிறது.
கதைகள் பண்பாட்டு உருவகங்களை உருவாக்குவது மட்டுமல்ல, உருவாகிவிட்ட பண்பாட்டு உருவகங்களுக்குள் மறைந்துபோன மனிதர்களையும் மீண்டும் நமக்குக் காட்டுகின்றன. ஒருவகையில் பண்பாடு மனித வாழ்க்கையை கதைகளாக நினைவில் வைத்துக்கொள்கிறது. இலக்கியம் அந்த நினைவையே மீண்டும் மனித வாழ்க்கையாக நம்மை அனுபவிக்கச் செய்கிறது.
அதனால்தான் கட்டுரையின் தொடக்கத்தில் வரும் வள்ளி என்ற உருவகமும் இங்கே மீண்டும் நினைவுக்கு வருகிறது. வள்ளியை நாம் ஒரு “குறத்தி” என்ற பண்பாட்டு உருவகமாக அறிகிறோம். ஆனால் அந்த உருவகத்தின் வழியே சென்றால், ஒரு குறிப்பிட்ட தனிமனிதரான வள்ளியையும் நாம் சென்றடைய முடியும். அதே நேரத்தில் அவளுடைய உறவின் வழியே தெய்வத்தையும் சென்றடைய முடியும்.
ஒரு நல்ல கதை உருவகத்தை உடைத்து மனிதனை மட்டும் நமக்குக் கொடுப்பதில்லை. உருவகத்தின் வழியே மனிதனைச் சென்றடைந்து, மனிதனின் வழியே உருவகத்தையே இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளச் செய்கிறது. வள்ளியைப் பற்றிய தொன்மமும், தங்கத்தைப் பற்றிய இந்த நாவலும் வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்தாலும், அவற்றை இணைப்பது இந்த அனுபவம்தான்!
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
