இன்றைய சூழலில் (2026), உலகெங்கும் அரசியல்வாதிகள் பந்தாடுவது, அமெரிக்காவின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை. இவற்றுக்கு Big Tech என்ற செல்லப் பெயர் வேறு சூட்டப்பட்டுள்ளது. என்னுடைய உதாரணங்களுக்காக, இவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டேன். Meta, Amazon, Google. இந்த பெரிய டெக் நிறுவனங்களில் Apple, Tesla, nVidia, xAI, Microsoft, Netflix, Oracle, OpenAI, Anthropic என்று இன்னும் சில நிறுவனங்கள் இருந்தாலும், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை.
இவர்களை யார் குற்றம் சாட்டுகிறார்கள்? அமெரிக்காவில் Bernie Sanders, கனடாவில் Mark Carney, ஃப்ரான்ஸில் Emmanuel Macron போன்றவர்கள், இந்த பெரிய டெக் நிறுவனங்களை வில்லனாக்கி, வெற்றி பெற்றுள்ளார்கள். குறிப்பாக, இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் இவை:
- பொதுநலனில் அக்கறையில்லாமல், தன்னை இன்னும் வெகு பணக்காரர்களாக ஆக்கிக் கொள்வதிலேயே குறியாய் இருக்கும் இவர்கள், ஒரு சமூகப் புற்றுநோய். இதை பெர்னி, Oligarchy என்று சாடுகிறார்
- கனடாவின் மார்க் கார்னி, இவர்களை Hyperscalers என்றும், இந்த நிறுவனங்களை ஒரு தடாலடி தாதா (Tech hegemon) என்றும் சொல்லி வருகிறார்
- ஃப்ரான்ஸின் மேக்ரோன், அமெரிக்க பெரிய நிறுவனங்களின் பிடியிலிருந்து யுரோப் விலக வேண்டும் என்று சொல்லி வருகிறார்
- அமெரிக்க அதிகாரம், இந்த நிறுவனங்களை ஊக்குவித்தாலும், மற்ற நாடுகள், இதை ஒரு sovereignty பிரச்சினையாகப் பார்க்கின்றன. இன்று, மேற்கத்திய நாடுகள், இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டை, அந்நாடுகளில் குறைக்க வழி தேடி வருகின்றன.

அரசியல்வாதிகளுக்கு மேல்வாரியாகப் பேசி, ஒரு வில்லனையும் உருவாக்குதல் என்பது, கை வந்த கலை. இதில் நமக்கு ஏதும் பயன் இல்லை. விவரத்திற்குப் போவோம். இந்த மிகப் பெரிய டெக் நிறுவனங்களின் முக்கியத் தேவைகள் என்னென்ன?
- ஏராளமான தரவுகள். இணையத்தில் உள்ள சகல நல்ல மற்றும் குப்பைகளையும் வைத்து அவர்களது பெரு மொழி மாதிரிகளுக்கு (Large Language Models) பயிற்சி அளிக்க வேண்டும்.
- தரவு பயிற்சி மையங்களுக்கு ஏராளமான இடம், நீர் மற்றும் மின்சாரம்
- தரவு மையங்களுக்கு காப்பு மின்சாரம் (backup power) உற்பத்தி செய்ய, மிகப் பெரிய ஜெனரேட்டர்கள்.
- 24×7 வேலை செய்ய, ராட்சச குளிர வைக்கும் காற்று விசிறிகள்.
- இதைத் தவிர, மிகவும் விலையுயர்ந்த செயலிகள், மின்னணு பாகங்கள் என்று மிகப் பெரிய பட்டியலே உண்டு.
இந்தத் தொழிலில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் கூகிள், அமேஸான் ஒரு புறம், மற்ற புதியவர்கள் இன்னொரு புறம். இவர்களின் வேகம், அமெரிக்க சாதாரணர்களின் அன்றாட வாழ்க்கையை பல இடங்களிலும் பாதித்துள்ளது உண்மை. டென்னிசி, வெர்ஜினியா, டெக்ஸாஸ், பென்சில்வேனியா என்று தொடங்கி, பல மாநிலங்களிலும், மாநில அரசுகளின் ஊக்க முதலீடு கொண்டு ஏராளமான மின்சக்தி, குடிநீர் மற்றும் நிலம் என்று சாதாரணர்களுக்குத் தேவையான விஷயங்களின் விலையுயர்விற்குக் காரணமாகி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. கொதிக்கும் அரிஸோனா, டெக்ஸாஸ் போன்ற இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஒரு புறம். மற்றொரு புறம், நீரையும் அதிகமாகப் பயன்படுத்தி, டீசல் ஜெனரேட்டர்கள் (அல்லது இயற்கை எரிவாயு) சுற்றுப்புற சூழலையும் கெடுக்கின்றன என்ற குற்றச்சாட்டு பெருகி வருகிறது.
இதுவரை நாம் சொன்ன கண்ணுக்குத் தெரியும் விஷயங்களைத் தவிர, பல மறைமுக விஷயங்களும் இதில் இடங்கும். குறிப்பாக:
- அமெரிக்க அரசாங்கம், இந்த ராட்சச டெக் நிறுவனங்களின் சார்பில், யுரோப் மற்றும் கனேடிய டிஜிட்டல் உரிமைச் சட்டங்களை மீறுகிறார்கள்.
- அமெரிக்க டெக் நிறுவனங்கள், தங்களது வெளிநாட்டு வருமானத்திற்கு சரியான வரி கட்டுவதில்லை.
- இந்த ராட்சச டெக் நிறுவனங்கள், மற்ற நாடுகளின் டெக் நிறுவனங்களை வளர விடுவதில்லை.
- மற்ற நாடுகளின் தரவு பாதுகாப்புச் சட்டங்களையும் சரியாக மதிப்பதில்லை. மிகவும் மோசமான அமெரிக்க தரவு பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்றுவதாகச் சொல்லி நழுவுகின்றன.
- மற்ற நாடுகளின் மொழிகள், கலாச்சாரத்தையும் ஒதுக்கி, அமெரிக்க ஆங்கிலம் மற்றும் கலாச்சாரத்தைத் திணிக்க முயலுகின்றன
இதில் எல்லா குற்றச்சாட்டுக்களும், எல்லா பெரிய டெக் நிறுவனங்களுக்கும் பொருந்தாது. உதாரணத்திற்கு, நெட்ஃபிளிக்ஸ், அமேஸான் ப்ரைம் போன்ற மின்னோடை (Digital streaming) சேவைகள் பல நாடுகளின் மொழிகள் மற்றும் கலைகளை மதிக்கின்றன.
இன்றைய இளைய தலைமுறையினர், தங்களது செய்திகளைப் பெரும்பாலும், சமூக வலைத்தளங்களிலிருந்தே படிக்கிறார்கள். இது, பாரம்பரிய செய்தி அமைப்புகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு, ஒரு மிகப் பெரிய சவாலாக உள்ளது. எக்ஸ் இணையதளம் ஒன்றும் செய்தியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. ஆனால், உலக நடப்புகளில் மிகவும் முக்கியமான தளமாகிவிட்டது எக்ஸ். இன்னும் நடந்து கொண்டிருக்கும் ஈரான் அமெரிக்க போரில், பல எதிரும் புதிருமான செய்திகளை அமெரிக்காவும், ஈரானும் எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. சுடச் சுட செய்தி என்று எவரும் அச்சடித்த செய்தித்தாளை இனியும் விற்க முடியாது. அதை, எக்ஸ் தளம், பத்திரிக்கையாளர் எவரும் இன்றி செய்து வருகிறது. அத்துடன் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் செய்திகள் யாராலும் சரி பார்க்கப் படுவதில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சுறுக்கமாக, சில சொற்கள் கொண்டு பங்கிட்டுக் கொள்வதற்காக உருவானது எக்ஸ் தளம். ஆனால், இன்று, பல வகை டிஜிட்டல் ஊடகத்தோடு, ஒரு செய்தித் தளமாகவே மாறிவிட்டது.
கனேடியச் சட்டப்படி, அமெரிக்க பெரும் சமூக வலைத்தள டெக் (big American social media companies) நிறுவனங்கள், உள்ளூர் சிறு பத்திரிக்கை நிதிக்கு ஒரு சின்ன பங்கு அளிக்க வேண்டும். இதை கூகிள், எக்ஸ் போன்றவர்கள் செய்தாலும், மெடா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) செய்ய மறுக்கிறது. ஒரு அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அளவிற்கு வளர்ந்து விட்டன இந்த நிறுவனங்கள். இந்த நிதிக்குக் காரணம், கனடாவின் சிறு பத்திரிக்கைகள் முடங்கி விட்டன. அரசாங்க உதவித் தொகையும் குறைந்துவிட்டது. அரசாங்கம், தான் அளித்து வந்த இந்த உதவித் தொகையை ஈடு செய்ய இப்படிப்பட்ட ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம் இன்று பல கனேடிய விவரணப் படங்கள், திரைப்படங்களை தன்னுடைய டிஜிட்டல் ஓடை சேவைகளில் சேர்த்துக் கொண்டுள்ளன. ஏனென்றால், கனடாவில் உருவாகிய ஊடகங்கள் ஒரு 15% இருக்க வேண்டும் என்பது சட்டம். இது அமெரிக்க கனடா உறவு விரிசலில் முக்கிய ஒரு காரணமாக அமெரிக்க அரசு சொல்லி வருகிறது. அடம் பிடிக்கும் கனடாவுடன் USMCA/CUSMA என்ற பன்னாட்டு வணிக ஒப்பந்தம் நீட்டிக்காத்தற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லி வருகிறது அமெரிக்க அரசு.
இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், இளைய சமூகத்தினரை அநாவசிய போட்டி மனப்பான்மையை தூண்டி விட்டு, அவர்களின் படிப்பையும், வளர்ச்சியையும் இந்த பெரு சமூக வலைத்தள டெக் நிறுவனங்கள், கெடுத்து வருகின்றன என்ற குற்றச்சாட்டும் பெருகிய வண்ணம் இருக்கிறது. முதலில் ஆஸ்ட்ரேலியா, 16 வயதுக்குட்பட்டவர்களை இந்தச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. இதைத் தொடர்ந்து, யு.கே. -யும் தடை விதித்துள்ளது. கனடாவும், சீக்கிரத்தில் தடைச்சட்டம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில், ஆஸ்ட்ரேலியாவின் தடையை பாராட்டினாலும், இந்தத் தடை, நடைமுறையில் அதிக பயனளிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
நாம் இதுவரை இந்தப் பகுதியில் பார்த்தது, உலக அரசியல்வாதிகளால், பூசப்பட்ட பெரும் டெக் நிறுவனங்களின் தீய முகம். இதை உலகெங்கும் ஊதி வாசிக்கும் இவர்களின் அறிக்கைகளில் ஓரளவு உண்மை இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் சக்தியை இதே அரசியல்வாதிகளே மறுப்பதில்லை. குறிப்பாக, இவர்களின் சில அறிக்கைகள், இந்தத் தொழில்நுட்பத்தை வேறு விதத்தில் அணுக வேண்டும் என்றும் சொல்லி வருகின்றன.
- அரசாங்க செயல்திறனைக் (இவை இரண்டுமே எதிர்பதமான சொற்கள்!) கூட்ட, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்
- புதிய மருந்து மற்றும் சுகாதார ஆராய்ச்சியை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்
- நாட்டின் கட்டுமானப் பணி வளர்ச்சிக்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்
- நாட்டின் கணிம வளங்களை எளிதில் சுரங்கங்கள் மூலம் வெளியெடுப்பதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்
இப்படி, அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஆனால், ஒன்றை கவனியுங்கள். இந்த அரசியல்வாதிகள் தடை செய்யும் எதுவும் நின்றுவிடவில்லை. இவர்கள் சொல்லும் நாட்டிற்குப் பயனுள்ள பல தரவு முயற்சிகளும் இதுவரை அதிக வெற்றி பெறவில்லை. என்ன காரணம் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
