உமிழ்

அன்றைய தினம் அதனுள் எண்ணற்ற விசித்திரங்களை புதைத்து வைத்திருந்தது. விரல்களுக்கிடையே புகையும் சிகரெட்டுடன் அதிகாலையில் மொட்டைமாடி சென்றிருந்தபோது அங்கே ஒரு மைனா பிறிதொரு மைனாவை தரையில் கிடத்தி கொத்திக் கொத்தி துன்புறுத்துவதை மற்றொரு மைனா அருகில் நின்று வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தது. பட்சிகள் அத்தகைய செயல்களில் ஈடுபடும் என்றும், அந்த வேளைகளில் அவை இத்தனை கோரமான கூச்சல்களை எழுப்பும் என்றும் நான் அன்றுவரை அறிந்திருக்கவில்லை.

டீ அருந்தும் பொருட்டு அண்ணா நகர் பதினெட்டாவது மெயின் ரோட்டில் இருந்த சேட்டா கடைக்குச் சென்றிருந்தபோது அதன் அருகாமையில் இருந்த மிகச்சிறிய விநாயகர் ஆலயத்தை பராமரித்துவந்த அறுபது வயது மதிக்கத்தக்க பூசாரியை காவல்துறையினர் கைது செய்துகொண்டிருந்தனர். அணிந்திருக்கும் பட்டு வேஷ்டியை ஒடுங்கிய அவரது இடையுடன் சேர்த்துப் பிணைத்திருக்கும் வெண்ணிறத் துண்டு அப்போது அவர் கைகளைச் சுற்றி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது.

எதிர்பட்டாலே முகம்சுளித்து விலகுபவர்கள் மத்தியில் சம்பிரதாயத்திற்காகவாது என்னைப் பார்த்து முறுவலிக்கும் ஜீவன்களில் ஒருவரான அந்தப் பூசாரி பள்ளிச் சிறுமியிடம் சில்மிஷம் செய்தார் என்பதை கேள்வியுற்றபோது ஈரைந்து விரல்களும் நடுக்கம்கொள்ளத் துவங்கியிருந்தன. காவல்துறை ஜீப்பின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அவர் உருக்குலைந்து காணப்பட்டார். வண்டி மெல்லிய விக்கலுடன் முன்னகரத் தொடங்கியபோது யதேச்சையாக கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டிருந்த என் பக்கம் பார்த்தவர் பழக்கதோஷத்தில் லேசாய் சிரித்தபோது ஏதோ பேரிழப்பு நேர்ந்துவிட்டதைப்போல் என் விழியிரண்டும் நனைந்துபோனது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டுத் திரும்பியபோது மூன்று வருடங்களுக்கு முன்னால் காணாமல் போயிருந்த மாமா திரும்பி வந்திருந்தார். முதல் முறை அவர் ஓடிப்போனபோது அத்தை ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தாள். அந்தக் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தபோது அவர் வீடு திரும்பினார். இரண்டாம் முறையாக அவர் மாயமானபோது அத்தை மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்தாள். மஞ்சள் காமாலை நோயினால் அக்குழந்தை இறந்து தற்போது எட்டு மாதங்கள் ஆகின்றன.

அவர் எங்கே செல்கிறார் என்ன செய்கிறார் என்பதையெல்லாம் எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை வீடு திரும்பும்பொழுதும் கைநிறைய பணத்துடன் வருவார். அவர் இல்லாத பொழுதுகளில் எல்லாம் நிறைவான உணவு வேண்டி ஏங்கிய வயிறு அவரது வருகையை விடுதலையெனவும், குதூகலமெனவும் கருதுவதை புத்தியினால் தடுக்க இயன்றதில்லை.

அன்று வந்ததும் வராததுமாக கையில் ரூபாய் நோட்டுகளைத் திணித்து கறியெடுத்து வரச்சொல்லி என்னை மீண்டும் சந்தையை நோக்கி ஏவினார் அவர். அத்தை அடுக்களையில் நின்றபடி கண்களைக் கசக்கிகொண்டே சோறாக்கிக் கொண்டிருந்தாள். நான் ஒரு வார்த்தை பேசாமல் கிளம்பினேன். வீசிய எதிர்காற்றில் எடையற்று, தொளதொளவென இருந்த என் சட்டை படபடக்க, உள்ளங்கையினுள் சுருட்டி வைத்திருந்த பணத்தை எனது கட்டைவிரல் வருடிக்கொண்டே இருந்தது.

எத்தனை முறைதான் இந்த மார்க்கெட்டைச் சுற்றி வலம்வருவாய் என்று எள்ளலுடன் எழுப்பப்பட்ட கறிக்கடைக்காரரின் கேள்வியை சகித்துக்கொண்டு உட்புறம் சதுரவடிவில் இருந்த சிறிய, இருளடர்ந்த அறையில் என் பொருட்டு அறுக்கப்படும் கோழியையே வெறித்துக் கொண்டிருந்தேன். நண்பனிடமிருந்து அந்த அழைப்பு வந்தது அப்போதுதான். வெட்டப்பட்டு ஓரம்வீசப்பட்ட அந்தக் கோழியின் பாதங்களைப்போல் சினிமாச் சந்தையில் விலைபோகாத, ஆனால் பழைய மனிதர்களிடம் இன்றும் மதிப்பிற்குரிய நிலையில் திகழும் இயக்குனர் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாகச் சொன்னான் அவன்.

உள்ளுணர்வு வழக்கம்போல் அச்சந்திப்பை தவிர்த்துவிடவே வலியுறுத்தியது. உயிர்த்தெழுதலும் உயரப்பறத்தலும் இப்பிறவியில் வாய்க்கப்படவில்லை என்பதை நான் ஏற்றுக்கொண்டு நெடுங்காலம் கடந்திருந்தது. அந்த இயக்குனர் கடைசியாக எடுத்து வெளிவந்த குப்பையை எண்ணிப்பார்த்தேன். காலம் கசக்கிப் பிழிந்துக் கடாசிய இவனா எனக்கு வழிகாட்டப்போகிறான் என்கிற எகத்தாளம் பிறந்தது.

கறித்துண்டுகளை கருநிற பிளாஸ்டிக் கவரில் போட்ட கடைக்காரர் அதனை என் முன் இருந்த பலகையின் மீது பொத்தென போட்டார். குருதிக்கறை படிந்து துர்நாற்றம் எழுப்பிக் கொண்டிருந்த கையை என்னை நோக்கி நீட்டியபோது அதில் மாமா என்னிடம் கொடுத்திருந்த ரூபாய் தாள்களை வைத்தேன். கல்லாப்பெட்டியினுள் அதனைப் போட்டவர் மீண்டும் அதே நக்கலுடன் என்னைப் பார்த்துச் சிரித்தார். சட்டென்று ஒருநொடி இயக்குனருடனான இந்தச் சந்திப்பே எங்கள் இருவரின் வாழ்க்கையையும் மாற்றப்போகும் மாயத்தருணமென உள்ளுக்குள் ஏதோ சொல்லியது.

நண்பனிடம் நான் உடனடியாக கிளம்பி வருவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வீட்டை நோக்கி விரைந்தேன். வாங்கிய கறியை அத்தையிடம் ஒப்படைத்துவிட்டு வேகமாக குளித்து என்னிடம் இருந்த ஒரே ஒரு உருப்படியான உடையான அந்தப் பச்சைநிற கட்டம்போட்ட சட்டையை அணிந்துகொண்டேன். வேலையில் மும்முரமாக இருந்த அத்தை எனது அந்தக் கோலத்தைப் பார்த்ததுமே புரிந்துகொண்டு தன் கைவசம் இருந்த இரண்டு நூறு ரூபாய் தாள்களை என்னிடம் தந்தாள். அவள் முகத்தைப் பார்க்காமல் அதனைப் பெற்றுக்கொண்டு சட்டைப் பையினுள் செருகியபடி தெருவில் இறங்கினேன்.

இலக்கை நோக்கி அன்று நான் எடுத்துவைத்த ஒவ்வொரு தப்படியையும் உள்மனம் வித்தியாசமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. வழக்கமாய் கூட்டம் என்றால் ஒதுங்கிப்போகும் சுபாவம் பெற்றிருந்த எனக்கு அன்று ஜனத்துடன் ஒன்றாய் இயங்குவதில் எந்தவித சிக்கலும் இருக்கவில்லை. படைப்புச் செயல் மீது நான் கொண்டிருந்த தசாப்த கால பற்றை முழுமுற்றாக கைவிடுவதே அனைவருக்கும் உகந்ததோ என்கிற சிந்தனை என்னை அணுகி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. அதனை உடனுக்குடன் பின்பற்றவேண்டிய தீர்மானமாக ஏற்றுக்கொள்ளாதது எத்தனை பெரிய நல்வினை என்று உள்ளுக்குள் ஒரு குரல் உரைத்தது.

பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருந்த மதுக்கூடத்தில் அவ்வேளையிலேயே கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. மது அருந்தச் செல்லாத பொழுதுகளில் எல்லாம் நான் அந்தத் திசையில் பார்ப்பதையே தவிர்த்துவிடுவேன். சிறகசைக்க இயலாத வெறுமையில் உழல்பவர்களை விசைகொண்டு வான் நோக்கி உயர்த்தி, எதிர்பாரா கணமொன்றில் தரையில் படாரென வீசிவிட்டு புதைத்துவிடும் வல்லமைகொண்ட பிசாசு ஒன்று அங்கே லாந்துவதாக மிகைபோதையில் ஒருநாள் மாமா சொல்ல கேட்டிருக்கிறேன். அவர் சொல்வதற்கும் எனக்கும் எத்தொடர்பும் இல்லை என்கிற பாவனையில் அமர்ந்திருந்த எனது சட்டையைப் பிடித்து, முகத்திற்கு நேராக நோக்கி, என்னைப்போன்ற திசையறியா பிராணிகளின் குருதிதான் அந்தப் பிசாசுக்கு மிகவும் பிடித்தமான பானம் என்று சொல்லியிருந்தார் அவர்.

விசித்திரங்கள் பல பொதிந்திருந்த அந்த தினத்தின் உச்சிவேளையில் ஏனோ எனது கண்கள் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி அந்த மதுக்கூடத்தின் பக்கமே சென்று கொண்டிருந்தது. குறிப்பாக அதன் வாசலில் சுயநினைவின்றி மல்லாந்திருந்த, பழுப்புநிற பனியன் மட்டும் அணிந்திருந்த ஒரு முதியவர் எனது கவனத்தை ஈர்த்தவண்ணம் இருந்தார். அவர் யார் எவர் என அடையாளம் காணும் முன்பே எனது உடல் பரபரக்கத் துவங்கி, கழுத்து மடிப்புகளில் வியர்வைப் பூக்க ஆரம்பித்திருந்தது.

வந்து நின்ற பேருந்தில் சட்டென ஏறிக்கொண்டு, செறிந்திருந்த கூட்டத்தினுள் நசுங்கிப் பிதுங்கி மைலாப்பூர் சென்று சேர்வதுவரை அந்த முதியவர் குறித்த சிந்தனைகளில் இருந்து ஓரளவிற்கு விடுபட்டிருந்தேன் என்றே சொல்லவேண்டும். ஆனால் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாம் தளத்தில் இருந்த அந்த இயக்குனரின் அலுவலகத்தினுள் நுழைந்தும், அங்கே தனது இருக்கையில் உச்சபோதையில், விழிகள் சிவந்து அமர்ந்திருந்த அந்த வீழ்ச்சியுற்ற மனிதரை எதிர்கொண்ட நொடி, அண்ணா நகர் மதுக்கூடத்தின் நுழைவை ஒட்டி மயக்கநிலையில் படுத்திருந்த, பழுப்புநிற பனியன் அணிந்த அந்த முதியவர் யார் என்பதை மனம் அடையாளம் கண்டுகொண்டது. குளிரூட்டப்பட்ட அந்த அறையினுள் அடியெடுத்து வைத்தபோது எனக்கு மூச்சடைத்துப்போனது பதற்றத்தினாலா அல்லது அந்த அறிதலினாலா என்று என்னால் அப்போது அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

***

நான் பிறந்து வளர்ந்த ஊரான பத்தமடையில் இருந்த எனது வீட்டின் முதல் தளத்தில் நான் வழக்கமாக அமர்ந்து எழுத்துப் பணிகளை மேற்கொள்ளும் அந்த அறை அலங்கோலத்திற்கு பெயர் போனது. அதிலும் அருணாச்சலம் ஆசாரியால் என் தந்தையின் ஆணைக்கேற்ப எனக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்ட அந்த மேசையின் பரப்பு எப்போதும் தூசிப்படலத்தால் போர்த்தப்பட்டிருக்கும். அதன் கால்கள் சிலந்தி வலைகளால் பின்னப்பட்டிருக்கும். மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்கும்போது கால் கட்டைவிரல் இடுக்குகளில் ஓடி நச்சரிக்கும் சிலந்திகள் பலவற்றை மிதித்துக் கொன்றிருக்கிறேன்.

அத்தனை அசிங்கமாக இருந்த அந்த எழுத்து மேசையின் மூலையில் எப்போதுமே எனது ஆதர்சன எழுத்தாளரான வேதக்கண் இருப்பார். பொதுவாக கவிஞராக அறியப்படுபவர் எழுதிய ஒரே ஒரு நாவலின் பின்னட்டையில் இருக்கும் அவரது சிரித்த முகமே எனக்கு தெய்வம். அந்த ஒற்றை புத்தகத்தின் இருப்பே அந்த இடத்தை புனிதமாய், கோவிலாய் மாற்றிவிடுவதாக தோன்றும். மொழியின் ஆங்காரச் சுழலினுள் சிக்குண்டு திக்குத்திசை தெரியாமல் தவிக்கும் வேளைகளில் அந்தச் சிரிப்பும், அவர் உதிர்த்த ஏதேனும் ஒரு சொல்லும் என்னை ஒளி நோக்கி உந்தத் தவறியதேயில்லை.

அன்றாட பேச்சுக்கள், விவாதங்கள், தனிப்பட்ட அவதானிப்புகள், வழங்கும் அறிவுரைகள், பின்னும் புனைவுகள் போன்ற அனைத்திலும் அவரது உமிழ்நீர் துளி ஒன்று என்னையும் அறியாமல் எப்படியோ ஊடுகலந்துவிட்டிருப்பதை பிறர் சுட்டிக்காட்டும் போதெல்லாம் உள்ளூர எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. கோவளம் கடற்கரையில் அமர்ந்தபடி, கனவுகள் நிரம்பிய விழிகளால் அலைகளை நோக்கிக் கொண்டிருப்பதைப்போல் எடுக்கப்பட்ட எனது தற்செயல் புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு, “சும்மா உக்காந்திருக்கும்போதும் லேசா வேதக்கண் சார் சாயல் வரத்தான் செய்யுது!” என்று நண்பன் ஒருவன் சொன்னபோது நாணத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

ஆனால் என்ன காரணத்தினாலோ அவரை நேரில் சென்று சந்திப்பதை மட்டும் நீண்ட காலமாக தவிர்த்தவண்ணம் இருந்தேன். அவருடனான எனது கற்பனை உரையாடல்கள் அனைத்திலும் எனது உழைப்பை, ஆற்றலைப் பாராட்டி ஊக்குவிப்பவராக விளங்குபவர் நிதர்சனத்தில் அக்கற்பனைகளை தகர்த்துவிடுபவராக உருக்கொண்டு என் முகத்தில் உமிழ்ந்துவிடுவாரோ என்று அச்சமாக இருந்தது. அப்படி மட்டும் நிகழ்ந்துவிட்டால் அதன் பிறகு இத்துறையில் நான் தொடர்ந்து இயங்குவதில் எப்பொருளுமில்லை என்று தோன்றியது.

நான் அவரை அடையும் முன்பே எனது படைப்பு அவர் கண்ணில் பட்டிருக்கவேண்டும். என்னைச் சந்திக்கவேண்டும் எனும் விழைவு நுண்வடிவிலாவது அவருக்குள் துளிர்த்திருக்கவேண்டும் என்றெல்லாம் கனாக்கண்டு வைத்திருந்தேன். எதிர்பாரா பொழுதில் நேர்ந்த அப்பாவின் கோரமான சாவு அனைத்தையும் புரட்டிப்போட்டது. காவல்கிணறு எனும் ஊரில் இருந்த சிறிய டீக்கடை ஒன்றினுள் முகமூடி அணிந்து புகுந்த நால்வர் எந்தவித காரணமும், முன்விரோதமும் இல்லாமல் அங்கிருந்த அனைவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். மாநிலத்தை உலுக்கிய அந்தக் குற்றச் சம்பவத்தினால் இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தது. பணி நிமித்தமாய் அவ்வூருக்கு அன்று சென்றிருந்த என் அப்பா அதில் ஒருவர்.

உடைந்து சுக்குநூறாகி போயிருந்த அம்மாவையும், என்னையும் ஆறுதல் படுத்தித் தேற்றுவதற்கு ஊரும், உறவினர்களும், ஒருசில அரசியல் பிரமுகர்களும் வந்துவிட்டுச் சென்றனர். ஆனால் என்னால் எவரையும் ஏறெடுத்து நோக்க முடியவில்லை. கலை, படைப்பு என்றெல்லாம் திரியாமல், காலாகாலத்தில் ஒரு வேலைக்குச் சென்று, ஏதோ ஒரு பெண்ணை திருமணமும் செய்திருந்தால் கழுத்தில் வெட்டுப்பட்டு பிணமாய் கிடக்கும் இந்த அப்பா என்றைக்கோ விருப்ப ஓய்வு பெற்றிருப்பார், முகமூடி அணிந்த பாவிகள் நுழைந்த அந்தக் கடை இருக்கும் திசைக்கே அவர் சென்றிருக்கமாட்டார் என்று அங்கிருந்த விழிகள் அனைத்தும் சொல்வதைப்போலவே இருந்தது. தோட்டத்தில் பூத்த மலர் ஒன்றை ரசித்துக்கொண்டிருக்கும் அப்பாவை நானே முகமூடி அணிந்துகொண்டு குரூரமாய் வெட்டுவதைப்போன்ற கனவுகள் எனது இரவுத் தூக்கத்தை குலைத்துப்போடத் துவங்கின.

என்ன செய்வது என்றே தெரியாமல் அலைந்து திரிந்த காலம் அது. இத்தனை காலமாக இயற்றிவந்த படைப்புச் செயலை அப்படியே கைவிடுவது முட்டாள்தனம் என்கிற எண்ணம் மட்டும் ஸ்திரமாக இருந்தது. “அப்பன் செத்ததும் அறிவு வந்திருக்கு!” எனும் வார்த்தைகளை கேட்க நான் தயாராக இருக்கவில்லை. என்ன ஆனாலும் எடுத்துக்கொண்ட துறையிலேயே கோலோச்சுவதே தந்தைக்கு நான் செய்யும் மரியாதையாக இருக்கும் என்று பட்டது. வேண்டுமென்றால் அவர் பெயரிலேயே கூட கதைகள் எழுதி அவரை அமரத்துவம் பெறச் செய்யலாம் என்றெல்லாம் திட்டமிட்டு நெகிழ்ந்தேன்.

திருநெல்வேலி டவுணில் நடக்கவிருந்த இலக்கிய விழா ஒன்றுக்கு எழுத்தாளர் வேதக்கண் வருகைதரப் போகும் செய்தி என்னை வந்தடைந்தது அப்போதுதான். அவரை சந்தித்துவிடலாம் எனும் முடிவை எடுப்பது அப்போது சுலபமாக இருந்தது. அவரிடம் என்னை ஒரு எழுத்தாளனாக அறிமுகம் செய்துகொள்வதை நினைக்கும்பொழுது வரும் கூச்சம் அப்போது தோன்றவேயில்லை. அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னபோது அவள் முகம் மலர்ந்தது. துறையில் வல்லுனர்களாக விளங்கும் நான்கு பேரைப் பார்த்தால்தான் எனக்கும் வழி பிறக்கும் என்று சொல்லிவிட்டு உச்சியில் கைவைத்து ஆசிவழங்கினாள்.

ஆனால் அன்று நான் எண்ணியதைப்போல் அவருடன் என்னால் உரையாடிவிட முடியவில்லை. விழாவில் அவரது சிறப்புரை முடிவுற்றதும் அவரைச் சூழ்ந்துகொண்ட கூட்டம் ஏற்படுத்திய சலசலப்பினால் எனக்கு அவருடன் ஐந்து நிமிடமே கிடைத்தது. அத்தனை பேருடன் பேசியிருந்தாலும் மிகவும் பொறுமையாக, சாந்தமாக தோற்றமளித்த வேதக்கண் மிகுந்த பரிவுடன் என் தோளில் கைபோட்டு என் பெயர், ஊர் மற்றும் வேலை பற்றி விசாரித்தார். பெயர் மற்றும் ஊரைச் சொல்லிவிட்டு ஒருவித பெருமிதத்துடன் என்னை ஒரு எழுத்தாளன் என்று அறிமுகம் செய்துகொண்டேன். அப்படியா என கேட்டு புருவத்தை உயர்த்தியவர் அடுத்த நொடியே மீண்டும் என்ன வேலை செய்கிறீர்கள் என்று அக்கறையுடன் வினவினார்.

மீண்டும் எழுத்தாளன் எனும் பதிலைச் சொல்வதற்கு எனக்கு கூச்சமாக இருந்தது. தலையைக் கவிழ்த்திக்கொண்டு வேலை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். நல்லது என்று சொன்னவர் அப்பா மற்றும் அம்மா பற்றி விசாரித்தார். அக்கணம் என்னுள் ஏதோ ஒன்று துள்ளிக் குதிப்பதை உணர்ந்தேன். சட்டென நிமிர்ந்து அவரிடம் என் அப்பாவைப் பற்றியும், அவரது கோரமான சாவைக் குறித்தும் விவரித்தேன். என் தோளைப் பற்றியிருந்த அவரது பிடி சற்று இறுகியபோது ஆசுவாசமாக இருந்தது. ஆனால், “தொடர்ந்து எழுதுங்க… அம்மாவ பாத்துக்கிடுங்க!” என்று சொல்லிவிட்டு அவர் விலகிய நிமிடம் தாளவேமுடியாத அவமானத்தில் என் உடல் குறுகிக்கொண்டது.

ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அந்த அவமான உணர்ச்சி சற்று பின்வாங்கியதைப்போல் இருந்தது. அதற்கு பதிலாக, என் கரங்களைப் பற்றியிருந்த வேதக்கண்ணின் கையின் சொரசொரப்பையே யோசித்தவண்ணம் இருந்தேன். அவரது கவிதைகளில் இழையோடும் மென்மையை நுகரும்போதெல்லாம் இந்த நபரின் விரல்கள் நிச்சயம் ஒரு குழந்தையின் மிருதுத் தன்மையுடனேயே இருக்கும் என்று பலமுறை எண்ணியிருக்கிறேன். அன்று இரவு அம்மாவிடம் எங்களது உரையாடலைப் பற்றி மிக சொற்பமான வார்த்தைகளில் சொல்லிவிட்டு, அவரது தோற்றத்தில் இருந்த வேறுபாடுகள், கையின் அந்த சொரசொரப்பு பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆனால் என்ன காரணத்தினாலோ அந்தச் சந்திப்பிற்கு பிறகு என்னால் ஒருவரி கூட எழுத முடியவில்லை. கடந்த இரண்டொரு ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருந்த எழுநூறு பக்க நாவலை அப்படியே கைவிடும் நிலை உருவானது. வதங்கிப்போன முகபாவத்துடன் உலவிக்கொண்டிருந்த என்னைப் பார்த்து தன் பங்கிற்கு வேதனையுற்ற அம்மா ஒருநாள் இரவு என்னை அருகினில் அழைத்து உள்ளூரில் இருந்தது போதுமென்றும், பேசாமல் உடமைகளை எடுத்துக்கொண்டு சென்னை செல்வது நன்று என்றும் அறிவுறுத்தினாள். இங்கே உள்ளூரில் இருப்பதைவிட அங்கே வாய்ப்புகள் சற்று அதிகம் என்று தெரிவித்தவள், அத்தை முழுகாமல் இருக்கும் செய்தியையும், மாமா ஊரைவிட்டு ஓடிப்போன தகவலையும் தெரிவித்தாள். நான் அங்கே செல்வது அத்தைக்கும் ஒத்தாசையாக இருக்கும் என்றும், அப்பா இருந்திருந்தால் இந்நேரம் அத்தைக்கு நிச்சயமாக ஆதரவு தந்திருப்பார் என்று சேர்த்துச் சொன்னாள்.

உதவாக்கரையாக வீட்டில் இருக்கிறான் என்கிற மறுக்கமுடியாத நிதர்சனத்தைவிட, சென்னையில் சினிமாவில் வேலை தேடிக்கொண்டிருக்கிறான் என்கிற மழுப்பல் ஒப்பீட்டளவில் அம்மாவிற்கு தோதாக படுகிறது என்பதை என்னாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு அடுத்த வாரம் பெட்டி படுக்கையுடன் சென்னையில் இருக்கும் அத்தை வீட்டில் குடிபுகுந்தேன். மூர்க்கமான ஆண் ஒருவரால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு ஒத்தாசையாக, பாதுகாப்பாக இருப்பது எனது வாழ்வுக்கும் ஏதோ பொருள் அளிப்பதாக பட்டது.

சொற்ப அளவிலான வாசிப்பும், வீட்டுக் காரியங்களும், திரைத்துறையில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்துகொண்டிருந்த தோழர்களுடனான சந்திப்பும் என காலம் முன்னேறிக்கொண்டிருந்தது. நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊர் பக்கம் தலைவைக்கும்போது சற்று மரியாதை கிடைப்பதாக பட்டது. திரைத்துறைக்கு நெருக்கமான ஆளாக இருப்பது எழுத்தாளனாக இருப்பதைவிடவும் உசத்தியாக, ஒருவித முன்னேற்றமாக ஊர்காரர்களால் கருதப்பட்டது. தீவிர இலக்கிய நூல்களின் மேற்கோள்களும், மேலை தத்துவமும், உளவியல் நுண்ணறிவும் பெற்றுத் தந்திராத கவனிப்பை எளிய நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்க கிசுகிசுப்புகள் ஈட்டித்தந்தது. முன்பைவிட தெருக்களில் சற்று கம்பீரத்துடன் நடமாட அது வழிவகுத்தது.

தெலுங்கில் வளர்ந்து வந்துகொண்டிருந்த இளம் நட்சத்திரம் ஒருவருடன் படம் பண்ணுவதாய் இருந்த தமிழ் இயக்குனருடன் தொடர்பு ஏற்பட்டது அக்காலகட்டத்தில் தான். வாடகை டாக்சி ஓட்டும் நண்பன் அந்த இயக்குனரை தி.நகரில் இருக்கும் பிரபலமான மதுவிடுதி ஒன்றில் சவாரி ஏற்றியிருக்கிறான். மிதமான போதையில் அதிகமாய் பேசிக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் தனது அடுத்த கதையின் விவாதத்திற்கும், வளர்ச்சிக்கும் இலக்கியம் அறிந்த இளைஞர் எவரேனும் உதவினால் நன்றாக இருக்கும் என்று வார்த்தையை விட்டிருக்கிறார். நண்பன் என்னைப் பற்றிச் சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. கிராம வாழ்க்கை அறிந்த, அதே சமயம் பெரிதாய் பிரபலமாகாத ஒரு எழுத்தாளனையே தானும் நாடிக் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு தனது தொடர்பு எண்ணை வழங்கியிருக்கிறார் அவர்.

மறுநாள் அவருக்கு போன் செய்தபோது உடனடியாக அழைப்பை ஏற்றுக்கொண்டவர் என்னுடன் இரண்டு மணி நேரத்திற்கு சகஜமாக உரையாடினார். அவருக்கு எனது சிந்தனை போக்கும், எழுத்து முறையும் மிகவும் பிடித்துப்போயிருந்தது. தான் இயக்கவிருக்கும் படத்தின் கதையின் சுருக்கத்தையும், அதற்காக அவர் செய்திருக்கும் ஆராய்ச்சி குறித்த தகவல்கள் அடங்கிய சிறிய கோப்பு ஒன்றையும் எனக்கு மின்னஞ்சல் செய்தவர், எனது ஆற்றலை சோதிக்கும் விதமாக அத்தகவல்கள் மற்றும் கதைக்கருவை வைத்துக்கொண்டு படத்தின் முதல் அரைமணி நேரத்தை திரைக்கதையாக எழுதித்தரச் சொன்னார்.

மேம்போக்கான அந்த கதைக்கரு மற்றும் ஆராய்ச்சி தகவல்களைக் கொண்டு ஏறத்தாழ ஐம்பது பக்கங்களுக்கு நான் எழுதிக்கொடுத்த திரைக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் மிகவும் இலக்கியத்தரமாக, ஏதோ நாவலைப்போல் இருப்பதை ஒரு குறையாகச் சொன்னார். எனக்கு அப்படித்தான் எழுதவரும் என்று ஒருவித கர்வத்துடன் நான் சொன்னதற்கு திரைத்துறையில் அப்படி இயங்கமுடியாது என்றும் இங்கே இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது முதுகுத்தண்டை வளைப்பதே எழுத்தாளனின் பிரதானப் பணி என்றும் அவர் சொன்ன மறுநொடி அழைப்பை அப்படியே துண்டித்துவிட்டேன்.

ஆனால் நெடுநாட்களாக எழுதாமல் இருந்த எனக்கு ஒரு காட்சியை, கதையை திரைக்கு ஏற்றாற்போல் எழுதும் பயிற்சி ஒருவித திறப்பாக அமைந்தது. மனதில் உள்ள கருக்கள் ஒவ்வொன்றையும் திரைக்கதையாக எழுதிப் பார்க்கும் முயற்சியில் மும்முரமானேன். ஐரோப்பிய அமெரிக்க கலைப்படங்கள் பலவற்றை உட்கொண்டு அத்துறையில் எனது ரசனையை மேம்படுத்த ஆரம்பித்தேன். சர்வதேச திரைப்பட விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டேன். அப்படி ஒரு விழாவில்தான் வேதக்கண்ணை நான் இரண்டாம் முறையாகச் சந்தித்தேன்.

எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து அந்த ஸ்வீடன் நாட்டு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவரை படம் முடிந்ததும் பின்தொடர்ந்து சென்றேன். உடன் வந்த ஒருவரிடம் பேசிக்கொண்டே அவர் கழிவறையினுள் சென்றதும் அவருக்காக வெளியே காத்திருந்தேன். வெள்ளைத்துணியால் கைகளைத் துடைத்துக்கொண்டே வந்தவரை மீண்டும் பின்தொடர்ந்து உணவுக்கூடம் வரைக்கும் சென்றபோது சட்டென என் பக்கம் திரும்பினார் அவர். நான் மிதமாக புன்னகை செய்தேன். அவரும் பதிலுக்கு சிரித்துவிட்டு உடன் இருப்பவரிடம் சிரித்துப் பேச ஆரம்பித்தார்.

திரும்பிவிடலாம் என்றே தோன்றியது. ஆனால் ஒரு வணக்கம் மட்டுமாவது சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று அவரை அணுகினேன். என்னைக் கண்டதும் வாங்க என்று சொல்லி தலையசைத்தவர் நான் யார் என்று கேட்டுவிட்டு மயிரடர்ந்த தனது செவியை எனது இதழின் பக்கமாகச் சரித்தார். திருநெல்வேலி டவுணில் நிகழ்ந்த இலக்கிய விழா ஒன்றில் அவருடன் உரையாடியதாகச் சொன்னதும், “அப்படியா? சந்திச்சோமா?” என்று கேட்டார். வினாக்குறி வடிவத்தில் உயர்ந்து வளைந்த அவரது புருவங்களை இரண்டொரு நொடிகளுக்கு உற்றுநோக்கினேன். பின்னர் வெறுமனே ஆம் என்று தலையை மட்டும் அசைத்தேன்.

என் கைகளைப் பிடித்துக்கொண்டே தன்னுடன் வந்தவரிடம் பேச்சில் இறங்கினார் அவர். நான் வணங்கிய எனது தெய்வத்தின் உடல் அப்படியெல்லாம் நெகிழும், நெளியும், குழையும் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களது பேச்சில் இருந்து அந்த நபர் மிகப்பெரிய செல்வந்தர் என்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அந்த நபர் சொன்ன ஏதோ அற்ப நகைச்சுவைக்கு ஒற்றைக்கையால் தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு உச்சகுரலெடுத்து சற்றும் இங்கிதம் இல்லாமல் வேதக்கண் சிரித்தபோது அவர் வாயினுள் இருந்து கிளம்பிய துர்நாற்றம் என்னுள் ஒருவித விலகலை உண்டாக்கியது.

மெதுவாக அவரது கையிலிருந்து எனது விரல்களை பிரித்தபோது சட்டென அவற்றை மீண்டும் பற்றிகொண்டவர் என்னைப் பார்த்து, “தம்பி ஒரு உதவி!” என்று சொல்லி தனது கைபேசியை என்னிடம் அளித்தார். நான் அதனைப் பெற்றுக்கொண்டு மீண்டும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். கண்களை ஒருவிதமாக சுருக்கிக்கொண்டவர் அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். சிதறல் சிதறலாய் நொறுங்கிக் கிடந்த அந்த கைபேசியின் முகப்புத் திரையை விரலால் நீவியபோது கண்ணாடிப் பொருக்குகள் சில விரல்நுனியில் ஊர்வதைப்போல் இருந்தது.

புகைப்படம் எடுத்து முடித்ததும் ஆசையாக அதனை கண்ணுற்ற வேதக்கண் மீண்டும் அந்த செல்வந்தருடன் உரையாடலில் மூழ்கினார். நாகர்கோவிலில் இருக்கும் அந்த தோப்பு வீட்டிற்கு தன்னை அழைப்பதே இல்லையே ஏன் என்று குழைந்தபடி வேதக்கண் கேட்டதற்கு, வெகுவிரைவில் அழைத்துச் செல்வதாக எள்ளல் மிகுந்த முகக்குறியோடு மறுமொழி உரைத்தார் அந்த நபர். சரி சரி என்று ஆர்ப்பரித்து பற்களைக் காட்டிய வேதக்கண் சென்றமுறை அந்த தோப்புவீட்டில் தான் உண்ட ஆட்டுக்கறியைக் குறித்து சிலாகித்துச் சொன்னார். பின்னர் கையில் வைத்திருந்த பையினுள் இருந்து தான் எழுதிய அந்த ஒற்றை நாவலை எடுத்து அந்த நபரின் கையில் ஒப்படைத்தார். அந்த நாளில் தனக்கு அணிவிக்கப்படும் நூறாவது சால்வையைப் பெற்றுக்கொள்பவரின் அலட்சியத்துடன் அப்படைப்பின் பிரதியைப் பெற்றுக்கொண்ட செல்வந்தர் உடனடியாக அதனை தனது உதவியாளனிடம் கையளித்தார்.

நான் அந்த இடத்தை விட்டு உடனடியாக நீங்கினேன். மவுண்ட் ரோட் சாலையில் மூச்சிரைக்க வேகநடையிட்டுச் செல்லும்போதெல்லாம் என் உடல் கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருந்தது. வயிற்றின் அமிலம் தொண்டைக்குழியை முட்டித் துளைக்க விரும்புவதைபோல் சுவாசத்தில் அனல் வீசியது. நேராக அண்ணா நகர் பேருந்து நிலையம் அருகே இருந்த மதுக்கூடத்தை அடைந்து குடிக்க ஆரம்பித்தேன்.

வாங்கிய குவளையில் சிறிதளவு மது மிச்சம் இருந்தபோதுதான் அந்த முதியவர் என்னை அணுகியிருந்தார். குடிப்பவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவை பிச்சைக் கேட்டு தனது தாகத்தை தீர்த்துக்கொள்பவர் என்பதை அவரை பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. நான் அவர் முகத்தைப் பார்த்து என்ன என்று சைகையால் கேட்டதற்கு கொஞ்சம் மது கிடைக்குமா என்று திருத்தமான தமிழ் உச்சரிப்புடன் கேட்டார். அவரது மூச்சின் வாடையா அல்லது அவர் இதழ்களின் ஒருவித கோணல் அந்த செல்வந்தரை நினைவூட்டியதாலா என்று தெரியவில்லை ஆனால் அடுத்த நொடியே கொஞ்சம்கூட தயங்காமல் அந்த முதியவரின் முகத்தில் நான் காரியுமிழ்ந்தேன். அவரும் ஒருசொல் பேசாமல் முகத்தைத் துடைத்தபடி அடுத்த மேசைக்கு நகர்ந்து சென்றிருந்தார்.

***

எலும்புகள் அதன் ஆற்றல் முழுவதையும் இழந்துவிட்டதைப்போல் இருந்தது. பெருங்கூட்டம் நடமாடிக்கொண்டிருந்த அந்த சாலையில் நான் அசையாமலே நின்றுகொண்டிருந்தேன். ஆனால் காலத்தின் ஸ்தூலவடிவாய் எனைச் சூழ்ந்திருந்த பெருந்திரள் என்னை அங்குலம் அங்குலமாக நகர்த்தி முன்செலுத்திக் கொண்டிருந்தது. இற்றுப்போன செருப்புகளை அணிந்திருந்த எனது பாதங்களை பல ஜோடுகள் பதம் பார்த்தன. எதிர்ப்படும் முகங்கள் என்னை நெருங்கிவந்த கணமே வடிவமிழந்து வெற்றுப் பரப்பாக, பொருளில்லா பொம்மைகளாக திரிந்துபோயின. சிந்தனைகள் அனைத்தும் வற்றிபோன வெளியாக உருமாறிப்போயிருந்த சித்தம் அண்ணா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த அந்த மதுக்கூடத்தைக் கண்டதும் மட்டும் லேசாய் விழிப்புற்றது.

காலையில் பார்த்திருந்த அதே இடத்தில் அதே கோலத்தில் அப்படியே படுத்திருந்தார் பழுப்பு நிற பனியன் அணிந்த அந்த முதியவர். அங்கேயே நின்றபடியே அவரை எத்தனை நிமிடங்களுக்கு வெறித்துக்கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் லேசான உடல் விதிர்ப்புடன் கடையினுள் அடியெடுத்து வைத்தபோது மையத்தில் எனக்கெனவே விட்டுவைத்ததைப்போல் அந்த நாற்காலி காலியாக இருந்தது. கூட்டம் பொங்கிவழிந்த அந்தக் கூடத்தில் காலியாக இருந்த அந்த ஒற்றை இருக்கையில் என் விழிகள் நிலைத்தபோது அந்த இடமே ஒருகணம் சுழன்று, காலத்தில் பின்னோக்கிச் சென்றதைப்போல் இருந்தது. அங்கிருந்த முகங்களும், பொருட்களும், இசைத்துக் கொண்டிருந்த பாடலும், வீசிய நெடியும் என அனைத்தும் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த அந்த இரவின் சாரத்தை போர்த்திக் கொண்டதைப்போல் தோன்றியது.

இமைக்கணத்தில் என் எதிரே அந்த இரண்டு மதுபுட்டிகள் முளைத்தது எப்படி என்று எனக்கு இன்றுவரை நினைவிலில்லை. ஆனால் அதனைக் கண்டதுமே எதற்கோ என் உடல் ஒருகணம் திடுக்கிட்டது. சட்டென அவற்றை கைகளால் பற்றிக்கொண்டு சுற்றிமுற்றி பார்த்தேன். அன்று வரை அந்த மதுக்கூடத்தில் அமர்ந்து குடித்திருந்த தருணங்கள் ஒவ்வொன்றும் உதிரிகளாக, கந்தல்களாக சிந்தைவெளியில் மிதந்து வந்தது. இங்கே அமராமல் முன்பு நான் குடித்திருந்த ஏதேனும் ஒரு இருக்கை அல்லது மூலைக்குச் சென்று முடங்கிவிட்டால் எதிலிருந்தோ விடுபடுவோம் என்று உள்ளுணர்வு சொல்லியது. ஆனால் அவ்விடங்கள் அனைத்திலும் ஓரமாய் நிற்பதற்குக்கூட இடமில்லாதவாறு கூட்டம் குழுக்குழுவாய் செறிந்திருந்தது. என்னை இந்த இருக்கையில் அமர்ந்திருக்கும்படி நிர்பந்திப்பதன் மூலம் விதி என்னை தனது பிணைக்கைதியாக கைப்பற்றியிருப்பதை உணர்ந்துகொண்டேன்.

கூடத்தின் கிழக்குப்புறத்தில் இருந்த பீடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சி ஒன்றில் பழைய பாடலொன்று இசைத்துக் கொண்டிருந்தது. சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்துகொண்டு நீர்வீழ்ச்சியினுள் ஈரம் சொட்டச் சொட்ட நின்றுகொண்டிருந்த நாயகியின் புட்டத்தை நாயகன் மிருகவேட்கையுடன் பற்றி அவளைத் தூக்கினான். அன்றும் இதே பாடல்தான் ஒலித்ததா? ஆம் என்றது மனம். அந்தப் படத்தை இயக்கியது மைலாப்பூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாம் தளத்தில் வசிக்கும் அந்த இயக்குனர்தான் என்பதை உணர்ந்தபோது தலைச் சுற்றுவதைபோல் இருந்தது. கண்களை மூடி இருநொடிகள் கழித்து திறந்தபோது மதுபுட்டியில் முக்கால் பங்கு தீர்ந்துபோயிருந்தது.

ஆம். நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த அரைமணி நேரமாக இங்கே அமர்ந்து மதுவருந்திக் கொண்டிருக்கிறேன். இந்தப் புட்டியை தீர்த்தது நானே. போதையில் இருக்கிறேன். மனம் பேதலித்துக் கிடக்கிறது என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டபோது அடிவயிற்றில் இருந்து ஏதோ ஒரு அம்பு கிளம்பி உச்சந்தலையில் குத்தி நின்றது. மறுகணம் அனைத்தும் நினைவுக்கு வந்து அழுகை முட்டியது. அதே சமயம் எதிலிருந்தோ ஒரேடியாக விடுபட்டதைப்போல் உள்ளம் தனது எடை அனைத்தையும் இழந்து காற்றில் மிதப்பதைப்போல் இருந்தது. அடுத்த நொடியே நிலத்தில் படாரென விழப்போகிறமோ எனும் அச்சம் கைவிரல் இடுக்குகளில் குளிரைப் புகுத்தியது.

ஒரே ஒரு நொடி, இருளடர்ந்த அந்த மதுக்கூடத்தின் மண் தரையில் தலைகுப்புற நான் விழுந்து கிடப்பதைப்போல் ஒரு காட்சி கண்முன் விரிந்தது. நிகழும் கணத்திலேயே அதனை பிரமை என்று உள்ளம் உணர்ந்தும் இருந்தது. இரண்டொரு நொடிகளில் அக்காட்சியின் மூலம் எது என்பதையும் நினைவுகூர்ந்திருந்தேன். சமீபத்தில் ஏதேனும் கதைகள் எழுதினீர்களா என்று அந்த இயக்குனர் எழுப்பிய வினாவிற்கு, எழுத்தாக எதுவுமில்லை எனவும் ஆனால் மனதினுள் கருக்களாக சில கதைகள் இருக்கின்றன என்றும் பதில் சொல்லியிருந்தேன். அவற்றில் எனக்கு நெருக்கமானதை விவரித்துச் சொல்லும்படி அவர் கேட்டுக்கொண்டதும் நான் சொல்லத் துவங்கிய கதையின் முதல் காட்சி அது.

ஆத்திரத்தில் பற்கள் அனைத்தும் கிட்டித்துக்கொள்ள கண்கள் இரண்டிலிருந்தும் நீர் தாரை தாரையாக கீழிறங்கியது. மங்கலாகி போயிருந்த பார்வையை எதிர்புறமாகச் செலுத்தியபோது முகமற்ற, வெறும் ஓசைகளினால் மட்டுமே ஆன திரள் ஒன்றின் ஊடாக ஒரு நெடிய உருவம் நிதானமாக நடந்து வந்தது. மதுவை யாசகம் பெற்று குடித்து கிறக்கம் ஏற்றிக்கொள்ளும் அந்த முதியவர் தோற்றத்தில் இத்தனை நெடியவர் என்பது எனக்குள் ஆச்சரியத்தை விதைத்தது. முந்தைய முறை அவரது உயரம் எனக்கு புலனாகாமல் போனது விந்தையாக இருந்தது.

அன்றைக்கு அவர் முகத்தில் காரியுமிழ்ந்ததை நினைத்தபோது அவமானமாக இருந்தது. இன்று அவர் என்னை அணுகினால் எஞ்சியிருக்கும் மதுவை மொத்தமாக அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். அவர் தொலைவில் தென்படும்பொழுதே என் எதிரே திறக்கப்படாமல் இருந்த குவார்ட்டர் பிராந்தியை எடுத்து உடம்போடு அணைத்துவைத்துக் கொண்டேன். அவர் என்னிடம் வரவேண்டும், இதனை என்னிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பதைபதைக்க ஆரம்பித்தேன்.

அந்திவேளையில் அந்த இயக்குனரின் குளிரூட்டப்பட்ட அலுவலக அறையில் அமர்ந்திருந்தபொழுதும் இத்தகைய பரிதவிப்பையே நான் உணர்ந்திருந்தேன். கதையைத் துவங்கு என கையசைவால் சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டார் அவர். கதாநாயகனின் வீழ்ச்சியில் இருந்து துவங்கும் அந்தக் கதையை சொல்ல ஆரம்பித்த கணத்தில் என் வசம் ஒருசில காட்சிகள் மட்டுமே இருந்தன. ஆனால் எப்பாடுபட்டாவது இந்தச் சந்திப்பை வெற்றிகரமான ஒன்றாக மாற்றிவிட வேண்டும் என்று உள்ளுக்குள் ஏதோ துடிதுடித்துக் கொண்டிருந்தது.

காலையில் துச்சமாக எண்ணிய இயக்குனர் தான் என்றாலும் இம்மியளவு முன்னகர்வாவது இல்லாமல் இந்த இடம் விட்டு நீங்கக்கூடாது என்கிற உறுதி பிறந்தது. துருப்பிடித்து, மட்கிப்போயிருந்தாலும் ஏணி ஏணியே என்று தோன்றியது. உச்சம் ஏறும்பொழுதே சிதைவுற்றுச் சரிந்தாலும் பரவாயில்லை, எவ்வித நகர்வும் இன்றி பிணம்போல் வாழ்வதற்கு, ஊதாரிப்பயலாய் திரிவதற்கு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு காலம் தள்ளுவதற்கு அந்த வீழ்ச்சி எவ்வளவோ மகத்தானது என்று அந்த நிமிடம் தோன்றியது.

நீண்ட நேரத்திற்கு அக்கதையின் முதல் காட்சியிலேயே ஊறித் திளைத்துக் கொண்டிருந்தேன். அளவுக்கதிகமான விவரணைகளை அழகான மொழியில், துல்லியமான குறிப்புகளுடன் விரித்தபடியே இருந்தேன். மாயக்கணம் ஒன்றில் என்னையும் அறியாமல் இரண்டு மூன்று என காட்சிகள் கிளைத்தபடியே சென்றன. என் குரல் இயல்பைவிட உயர்வதை, சொற்களின் வேகம் பன்மடங்கு பெருகுவதை, விழிகள் விரிவுபெறுவதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் அனைத்தையும் விஞ்சிய விசை ஒன்று என்னை ஓடு ஓடு என முன்செலுத்திக்கொண்டே இருந்தது. பலநாட்களாக பணிந்து கிடந்த படைப்பாற்றல் திடுமென அத்தனை வீரியத்துடன் செயல்பட்டது.

எத்தனை அவமானங்கள்? எத்தனை பேரிழப்புகள்? இனியும் இப்படியே பெட்டிப் பாம்பாய் கிணற்றுத் தவளையாய் திரிவதில் அர்த்தமொன்றுமில்லை. இதுவே இறுதி பாய்ச்சல். இதோ, ஊரில் என் அம்மா முதுமை எய்தி, நடமாட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அவள் சிதையேறுவாள். அப்பாவின் உடல் எரிந்து பொசுங்கும்பொழுது இருந்த அதே நிலையில் அம்மாவின் உடல் கருகும்பொழுதும் இருந்தால் நான் வாழ்ந்து என்ன பயன்? மனதின் ஆழத்தில் கொதித்துக் குமிழியிட்ட அச்சம், ஆதங்கம், ஆற்றாமை அனைத்தும் நுண்வடிவாய் சுருங்கி, மொழித் திரவத்தில் கரைந்து, வேறொன்றாய் அவதரித்து காட்சிகளாக, பெருங்கதை ஒன்றின் அங்கமாக உருவெடுத்துக் கொண்டிருந்தன.

பெரும் கடத்தல்காரனாக அவதரித்து, கொள்ளையடித்த அரிதான பொருட்களுடன் மலை உச்சி நோக்கி நாயகன் ஏறிக்கொண்டிருக்கும் இறுதி காட்சியை சொல்லிக் கொண்டிருந்தபோது திடுக்கென அனைத்தும் தடைபட்டது. “அவன்… அவன்… அந்த மலை…” என்று சொற்கள் திக்குமுக்காடத் துவங்கின. சொக்கிப்போன விழிகளுடன், சிவந்துபோயிருந்த முகத்துடனும் என்னையே பார்த்துக்கொண்டிருந்த இயக்குனர், “ம்” என்று முனங்கினார். நான் பெருமூச்செடுத்து மீண்டும் முயற்சித்துப் பார்த்தேன். சொற்கள் திரண்டுவர மறுத்தன. இதழ்கள் அதிர்ந்து, கண்கள் குளமானதும் சட்டென தலைகுனிந்தேன். முதிர்ந்த அந்த இயக்குனரின் சுருக்கங்கள் அடர்ந்த வலக்கை எனது குறியைக் கசக்கிக்கொண்டிருப்பதை அப்போதே நான் கவனித்தேன். நெடுநேரம் முன்பே அக்கரம் அவ்விடத்தில் நிலைகொண்டுவிட்டது என்கிற நிஜம் அப்போதே புத்தியில் உறைத்தது.

மெல்ல நிமிர்ந்து, சிகரெட் புகையின் திரைக்குப் பின்னால் தெரிந்த அவரது முகத்தைப் பார்த்தேன். துடிக்கத் துடிக்க நான் சொன்னவை எவையும் அந்தச் செவிகளினுள் நுழையவேயில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. உணர்ச்சிகளும், உயிர்ப்பும் செத்துப்போன இந்த விழிகள் ஒருபோதும் செயலூக்கம் பெற்று எழும்பாது என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது. வழுக்கைத் தலையின் அடியே புதைந்திருக்கும் மூலையை சிதல்கள் அரிக்கத்துவங்கி வெகுகாலம் ஆகிவிட்டிருப்பதை அந்த முகபாவமே உணர்த்தியது. தன்னிடம் யாசகம் கேட்கும் நிலையில், அந்த யாசகத்தின் பொருட்டு எந்த இழிவையும் ஏற்றுக்கொள்ளும் சூழலில் ஒருவன் இருப்பதை கண்டுகொள்வது மட்டுமே அவரது நோக்கமும் விழைவும் என்பது உறுதியானதும் மெல்ல எழுந்துகொண்டேன்.

“நான் தகவல் சொல்லி அனுப்பறேன் தம்பி!” என்று சொல்லிவிட்டு காலையில் காவல்துறை வாகனத்தினுள் அமர்ந்திருந்த பூசாரியைப்போலவே முறுவலித்தார் அந்த இயக்குனர். எந்தவித எதிர்ப்பையும் சீற்றத்தையும் வெளிக்காட்டாமல், “சரி சார், நன்றி!” என்று நான் சொன்னது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. மீண்டும் ஒருமுறை புன்னகை செய்த இயக்குனர், “ரெண்டு பெக்கு போடறியா?” என்று மேசையில் இருந்த விலை உயர்ந்த மதுப்புட்டியைச் சுட்டிக்காண்பித்தார். இரண்டொரு நொடிகளுக்கு ஸ்தம்பித்து நின்றவன், சட்டென அந்த புட்டியை கையில் பற்றி மடமடவென அதில் பாதியை வாயினுள் ஊற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தேன்.

மதுக்கூடத்தினுள் திடீரென மின்வெட்டு ஏற்பட்டு அந்த வளாகமே கும்மிருட்டில் மூழ்கியது. வாயிலைக் கடந்து செல்லும் வாகனங்கள் உண்டாக்கும் ஒளிக்கீற்றுகள் மதுக்கூடத்தின் மண்தரை மேல் நாகங்களைப்போல் சுழன்றோடி மறைந்தன. பின்புறம் இருந்த மேசையில் அமர்ந்திருந்த எவனோ ஏதோ ஒரு பெண்ணின் பெயரை உரக்கச்சொல்லி அவளது அங்க உறுப்புகளைப் பற்றிய நாராசமான விவரணைகளில் இறங்கினான். சட்டென மின்சாரம் மீண்டு வந்து அந்த மதுக்கூடத்தினுள் வெளிச்சத்தை பீச்சியடித்ததும் அவ்விடத்தில் பெரும் சிரிப்பலை ஒன்று எழுந்து ஓய்ந்தது. விழித்துக்கொண்ட தொலைக்காட்சி திரையில் ஒளிபரப்பான பாடலில் இரண்டு மைனாக்கள் கொஞ்சி விளையாடுவதை காதலனும் காதலியும் கள்ளச்சிரிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தனர்.

அலுப்புடன் முகத்தைத் திரும்பியபோது பனியன் மட்டுமே அணிந்த அந்த நெடிய முதியவர் என் எதிரே நின்றுகொண்டிருந்தார். எங்கள் விழிகள் சந்தித்துக்கொண்டதும் காவிக்கறை படிந்த தனது முன்பல் வரிசையை எந்தவித சங்கோஜமும் இல்லாமல் வெளிக்காட்டினார். அவரது பார்வை உணர்ச்சிகள் ஏதுமற்று உறைந்துபோயிருந்தது. இதழ்கள் உலர்ந்து வெடிப்புற்று பிளந்திருந்தன. முகத்தின் பாதியை ஆக்கிரமித்திருந்த வெள்ளைத் தாடி நெடுக ஏதேதோ கறைகள் திட்டுத் திட்டாக படிந்திருந்தன.

சட்டென என் கையில் இருந்த மதுப்புட்டியை அவரிடம் அளிக்க முனைந்தபோதுதான் அவர் தனது கையில் ஏற்கனவே ஒரு பாட்டிலை வைத்திருப்பது என் கண்ணில் பட்டது.  நான் மீண்டும் அவரது விழிகளை நோக்கினேன். அவர் எதுவும் பேசாமல் தன் கையில் வைத்திருந்த மதுவை பெரும் வேட்கையுடன் அருந்தினார். பிறகு ஓரிரு நொடிகளுக்கு என்னையே உற்றுப் பார்த்துவிட்டு அந்த பாட்டிலை என்னிடம் கொடுத்தார். நான் மறுப்பேதும் தெரிவிக்காமல் அதனைப் பெற்றுக்கொண்டேன். குப்பென்று நெடி கிளப்பிய அந்த மதுப்புட்டியைப் கூர்ந்து நோக்கினேன். அதன் வாய் பகுதி நெடுக காவி அப்பிக்கிடந்தது. ஒருகணம் நெஞ்சில் சுருக்கென்ற வலியை உணர்ந்தேன். மறுகணம் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அந்த எச்சில் மதுவை முழுதாக எனக்குள் ஊற்றிக்கொண்டேன். இமைகள் திறந்துகொண்டபோது என் பார்வைக்கு எதிராக மதுக்கூடத்தின் கூரை விரிந்திருந்தது. என் அருகே கிடந்த முதியவர் எதற்கோ கத்திச் சிரித்துக்கொண்டிருந்தார். புரண்டு படுத்து சிறிது நேரத்திற்கு அவரது முகத்தையே உற்றுப் பார்த்தேன். அக்கணத்தில் அவருடன் இணைந்து, அவரைப்போல் சிரிக்காமல் இருப்பது பெரும் அபத்தம் என்று தோன்றவே நானும் உச்சகுரலெடுத்துச் சிரிக்கத் தொடங்கினேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.