வரம்

ஜெயப்பிரகாஷையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் நிறைய கெட்ட வார்த்தை பேசுவான். அவனை மாதிரி யாராலும் குத்துச் சண்டை போட முடியாது. அவன் சட்டை எப்போதும் கிழிந்தே இருக்கும். அதன் வலது புறக் காலர் அவன் வாயில்தான் இருக்கும். அவன் அருகில் சென்றாலே அந்த எச்சில் வாடை அடிக்கும்.

சிறு பிள்ளைக் குறும்பு

காகம் சிரித்தது.
கடவுளின் ஒரே மகனை, அப்புழுவைக் கடித்து
நெளியும் இரு துண்டுகளாக்கியது.வால்பாதியை ஆணுக்குள் திணித்தது,
காயப்பட்ட முனையை வெளியே தொங்க விட்டு.

ஐஸ்கிரீம் தின்பவர்களைப் பற்றிய சிலகுறிப்புகள்

பெரியவர்களும்
பெரியவர்கள்போல வளர்க்கப்படும்
குட்டிக்குழந்தைகளும்
தவறாமல் உடனுக்குடன்
காகிதக்கைக்குட்டையால்
துடைத்துக்கொள்கிறார்கள்

குவாலிடி வீதி

அத்திருமண நாள் விசேஷ நாளாக எஞ்சோவுக்குப் படவில்லை. உற்சாகம் தருவதாக இல்லை. மகளின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணோம். இன்னும் கொஞ்சம் அழகாக அலங்காரம் பண்ணிக்கொண்டு பளிச் என்று உடுத்திக் கொள்ளேன் என்று மகளிடம் சொல்லிப்பார்த்தாள். அவள் காது கொடுப்பதாக இல்லை.

பாட்டில் குடிநீரின் கதை

சுத்தமான குடிநீர் ஒவ்வொரு மனிதனின் உரிமை. ஆனால் எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்த வெற்றிடத்தை பாட்டில் குடிநீர் உற்பாத்தியாளர்கள் மிகத் தந்திரமாக உருவாக்கி, அதைத் தங்கள் பொருட்கள் மூலம் நிரப்புகிறார்கள். இந்த நடவடிக்கையில் இந்தியா, குறிப்பாக சென்னை எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன? வேறென்ன, சென்னை உலகத்தின் குப்பைத் “பாட்டில் குடிநீரின் கதை”

அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…

பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது.

உலக நீர் நாள் – மார்ச் 22

மார்ச் 22-ஆம் தேதியை உலக நீர் நாளாக ஐ.நா நிறுவனம் அங்கீகரித்து நீர் நிலைகள் மாசு படுவதையும், நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியத்தையும் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் நேஷனல் ஜியோகரஃபிக் இதழும் நீர்நிலைகளைப் பற்றிய தனிக்கவனம் எடுத்து ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது. நீர் மாசுபடுதல், “உலக நீர் நாள் – மார்ச் 22”

மகரந்தம்

அவர்கள் மற்றொரு பயங்கர விஷயத்தை கண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் என்னதான் முயன்றாலும் நிரந்தரமாக உடலை பதப்படுத்தி அப்படியே கெடாமல் வைப்பது இயலாது (குறைந்தது அன்றைக்கு இருந்த தொழில்நுட்பத்துக்கு) ஆறுமாதத்துக்கு ஒருதடவை அதனை மீண்டும் எடுத்து சுத்தம் செய்து பதப்படுத்த வேண்டும். என்ன செய்வது இந்த போராட்டங்களை அன்றைய பாதுகாப்பற்ற சூழலை, அரசியலை எல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட நாடகம்தான் “Lenin’s Embalmers”.

மௌனத்தின் ஓசை

“கடந்து போகும் காலத்தை எதிர்த்து போராடும் இரு காதலர்கள் தங்களை இனம் கண்டுகொள்ளும் சமயம். அவர்கள் வாழ்வின் அந்த கடைசி வினாடிகள் தம் உயிரின் மேலானது என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை கவித்துவத்திற்காக சொல்லப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையிலே அந்த வினாடிகளுக்குப் பின் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்”. ஏறக்குறைய இப்படித்தான் பாலச்சந்தர் இந்த பாட்டின் சிச்சுவேஷனை இளையராஜாவிடம் விளக்கியிருப்பார். அந்த உணர்வை இந்தப் பாடலில் இளையராஜா சொல்வதற்கு எடுத்து கொண்ட ஆயுதம் – மௌனம்.

சில ஹாலிவுட் திரைப்படங்களின் அறிவியலும், அறிவியல் எதிர்ப்பும்:1

புகழ்பெற்ற ஹாலிவுட் எதிர்கால/அறிவியல் புனைவு திரைப்படங்களின் அறிவியல் எந்த அளவுக்கு சரியானது அல்லது எந்த தத்துவப் பின்னணியில் அறிவியலை அல்லது எதிர்காலத்தை அல்லது இரண்டையுமே அத்திரைப்படங்கள் எதிர்நோக்குகின்றன?

அங்காடித்தெரு – ஒரு பார்வை

தமிழ் சினிமா என்பது டெக்னாலஜியின் துணை கொண்டு நிகழ்த்தப் படும் ஒரு பிருமாண்டமான பொழுது போக்குச் சமாச்சாரம் என்ற விதியில் இருந்து வெளி வந்து, சமூக அவலங்களையும் அதன் யதார்த்தம் கெடாமல் சொல்வதற்கு சினிமா என்னும் மீடியாவையும் பயன் படுத்தலாம் என்பதை நிரூபித்து, முறைசாரா ஊழியர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக் கொணரத் துணிந்திருக்கிறார் வசந்த பாலன்.

நூலை மீறும் பொம்மைகள்

தெருவில் கோஷமிட்டபடிச் சென்ற போராளிகள் மீது, காவலர்கள் நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைப்பது, இரண்டு வெள்ளை இன ஆட்கள் கருப்பினப் பெண்களை உருட்டுக்கட்டையால் தலையில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் பலத்த அபாயங்களுக்கு நடுவே எடுக்கப்பட்டவை. சில வெள்ளை இன அதிகாரிகள், தங்கள் கல்லூரியில் சேரவிருக்கும் முதல் கருப்பு மாணவரை எப்படித் தாக்குவது என்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படமும் பிரபலமான ஒன்று.

கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 2

அவன் பிரச்னை நரம்புக் கோளாறு அல்ல, உணர்வுபூர்வமானது. அவனுக்கே இதெல்லாம் தானே பழகிக்கொள்ள நாளெடுக்கும். இப்படித் தடுமாற்றங்களில் அமெரிக்கர்கள் நிறைய வைத்தியச் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்த உணர்ச்சி அலையெழுச்சிகளுக்கெல்லாம் முழு நிவாரணம் என்பது இல்லை. கொஞ்சமாய் சிறு ஆசுவாசம் கிட்டலாம். திகிலுணர்சசி ரொம்ப உள்ளாழத்தில் ஒளிந்திருக்கிறது, எடுக்கிறது சிரமம். ஆனால் விபரீதப் பொழுதுகளில் சட்டென எழும்பி அது கிடுகிடுவென மேலே வருகிறது.

அந்த ஒரு சம்பவம், எல்லாவற்றையும் இழந்தேன்

தம்பியை தூக்கிக் கொண்டிருந்த என்னுடைய தந்தை வலப்புறத்தில் அவனை வேகமாக தூக்கி எறிந்தார். தாயின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்த என்னை வலப்புறத்தில் பலமாக வெகு தூரத்தில் தள்ளிவிட்டாள். அதன்பிறகு என்னுடைய பெற்றோர்களின் உடல்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடந்ததைப் பார்க்கமுடிந்தது. என்னுடைய தாயின் உடலும், தலையும் தனித்தனியாக சிதறிக் கிடந்தன.

பில்லா

மெதுவாகத்தான் படியில் ஏறினேன். ஏறும் போது காலுக்கடியில் என்னவோ இருக்கிறதே என்று நினைப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வாலை மிதித்திருக்கிறேன். பில்லா அப்படியே ‘குபீர்’ என்று என் மீது பாய்ந்தபோது நான் “ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடப் பார்த்தேன். பயத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். பில்லா கடித்துவிட்டது.

அந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா?

மத்திய கேபினெட், அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்தான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அடுத்து நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இது தொடர்பாக ஒரு கேள்வி-பதில் விவாதம்.

லாபம் இல்லை என்ற நிலையில் மூவர் மட்டுமே கல்வித் துறைக்குள் வருகிறார்கள். ஒருவர்: அரசு. இரண்டாமவர்: மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற தர்ம சிந்தனையுள்ள தனி மனிதர்கள், அறக்கட்டளைகள், மத அமைப்புகள். மூன்றாமவர்: திருடர்கள், பொறுக்கிகள், அரசியல்வாதிகள். இந்த மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். ஜாலியாக சட்டத்தை ஏய்த்து, பணத்தை கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை என்று மாற்றி உள்ளிருந்து வெளியே எடுத்துவிடுகிறார்கள். இந்த மூன்றாம் நிலையில் இருப்பவர்கள்தான் இன்று அதிகமாக கல்வியில் நுழைகிறார்கள்.
லாபம் செய்யலாம் என்ற நிலை வரும்போது நியாய சிந்தனை உள்ள பலரும் கல்வித் துறையில் நுழைவார்கள். திருடர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

Up! – ஒரு படி மேலே!

பொதுவாக, அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற
பேச்சுக்கே இடம் கிடையாது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான்.

உலகின் மிகப்பழமையான மரங்கள்

Slate.com உலகின் மிகப்பழமையான மரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2000 வருடங்கள், 4000 வருடங்கள் என சர்வசாதாரணமாகக் குறிப்பிடப்படும் இம்மரங்களின் பழமையும், வயதும் ஆச்சரியமளிக்கின்றன. புகைப்படத்தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

சிதார் கலைஞர் ரவிஷங்கர்

பிரபல சிதார் கலைஞர் ரவிஷங்கர் தனது மகளுடன் நிகழ்த்தும் இசை நிகழ்ச்சி ஒன்று. “ஆனந்த் கல்யாண்” எனும் ராகத்தை விரிவாக வாசித்து கேட்போரை கிறங்கடிக்கிறார்.

கூட்டம்

கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. Anonymity கிடைத்த இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.

பிற மனிதர்கள்

பைசாசம் அவன் உயிரை அக்கக்காகப் பிரித்து எடுத்தது. கணம் கணமாக, படுமோசமான ஒவ்வொரு சம்பவத்தையும். இதெல்லாம் ஒரு நூறு வருடம் நீடித்தாற்போலிருந்தது, இல்லை இல்லை, ஆயிரம் வருடங்கள் போல நீண்டது- அவர்களுக்கென்ன அந்த சாம்பல் நிற அறையில், கால நெருக்கடி என்று ஏதும்தான் இல்லையே, எல்லா நேரமும் இருந்ததே. இறுதியில் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பைசாசம் சொன்னது சரிதான். உடலால் சித்திரவதைப்பட்டது எவ்வளவோ அன்பாக இருந்தது.

வைரம்

தீவிரவாதிகள் விற்கும் வைரங்களுக்கு ‘ரத்த வைரங்கள்’ (Blood Diamonds) அல்லது ‘மோதல் வைரங்கள்’ (Conflict Diamonds) என்று பெயர்.உலகை ரத்தக் களரியாக்கியே தீருவேன் என்று முனைந்திருக்கும் ஒசாமாவின் கூட்டம் கூட இந்த வைரக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வதந்தி உலவுகிறது. ஆயுதங்கள் வாங்க பணத்தை நாடு விட்டு நாடு மாற்றுவது கடினமாக இருக்கிறது, ஒரு சிறு பொட்டலம் வைரம் கடத்துவது எளிது, அதன் மதிப்பும் சந்தையில் ஏராளம். அதனால் கிட்டும் ஆய்தங்களும் ஏராளம்.

யூத இன அழிப்பும் இசையின் வரலாறும்

சிம்பான்ஸிகளின் நெருப்பு நடனத்தின் ஆதாரமாக நிச்சயம் இசை இருந்திருக்கும். இசைக்கருவிகளின் வடிவம் குறித்த கவலை இங்கு அவசியமில்லை. தாங்கள் வளர்த்த அக்னியின் நாவசைவுகளில் அவர்கள் அடைந்த மனஎழுச்சியை தங்கள் நடன அசைவுகளில் வெளிப்படுத்தினர். அதன் ஆதார தாளம் நிச்சயம் அவர்கள் அகத்தில் ஒலித்திருக்கும் தானே! பரிணாம வளர்ச்சியின் ஊடாக மனித குலத்தின் அழகியல் திறனின் உச்சமாக இசை திகழ்கிறது.

வழித்துணை நாய்கள்

கண்பார்வை இழந்த வீரர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் ஒரு நாள் ஒரு பார்வையிழந்த வீரருடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரோ கூப்பிடவே தன்னுடைய நாயை அந்த வீரருக்குத் துணையாக விட்டுவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் அவருக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில், அந்த நாய் போர் வீரரைப் பள்ளம்-மேடு பார்த்து ஜாக்கிரதையாக ‘வாக்கிங்’ கூட்டி சென்று கொண்டிருந்தது.

ஹெட்லீ, மதானி – The Departed

புனே பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பிலும் ஹெட்லீயின் பங்கு இருப்பதாக இப்போது சந்தேகிக்கப்படுகிறது. ஹெட்லீயை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை செய்யவும் இந்தியா முயற்சிக்கும் என்றும் தெரிகிறது. ஆனால் என்ன செய்துவிடமுடியும் இந்தியாவால்? மும்பை தாக்குதலில் உயிரோடு பிடிபட்ட, அதற்கான வீடியோ ஆதாரம் உள்ள அஜ்மல் கசாபை விசாரிப்பதையே இந்தியா இன்னும் ஒழுங்காகச் செய்து முடிக்கவில்லை. அவன் ஒரு சிறுவன், அதனால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கசாபுக்காக வாதாடக்கூட நம்மூரில் ஆட்கள் இருக்கிறார்கள்.

மகரந்தம்

சீனா உலக மகா சக்தியாகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் எக்காளமிடுகிறார்கள். இந்தியாவிலேயே இந்தியா மோசம், சீனா நம் தலைமை என்று அரசியல் கோஷத்தைக் கொண்ட மனிதர்கள் கட்சிகள் நடத்துகிறார்கள். சுய வெறுப்பு இந்தியரிடம் அத்தனை உள்ளது. சீனர்கள் தம்மை உலகத் தலைமைக்கானவர்கள் என்று பல நூறாண்டுகளாகவே கருதி வருகிறார்கள். சீனா உண்மையில் எங்குள்ளது? உலகத் தலைமையருகேவா, அல்லது ஏற்கனவே தலைமையைக் கைப்பற்றி விட்டதா?

கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 1

நான் விருந்தளிக்கிறவன் அல்ல. நான் அவன் அப்பா. இல்லாத அவன் அப்பா நான்தான். அவன் தொட்டுணர்ந்த அப்பா. அவனைவிட்டு விலகியிருப்பதான என் பாவனையில், அவனது இதயத்துக்கும், ஆத்மாவுக்கும் வஞ்சனை செய்தேன் நான். ஆனாலும் உள்ளூற நான் அவன்சார்ந்த நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்தேன், அதையிட்டு மேலதிகம் அக்கறையான சிந்தனையைச் செலுத்தவில்லை.

வரலாற்றில் அடியோட்டம் தேடும் பழமலய்

பண்பாட்டுக்கலகங்களை தனி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் கேட்கிறார்கள்.அந்த வாழ்க்கை நோக்கும், அந்த மொழிநடையும் தான் செல்வாக்கில் இருக்கின்றன. அது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கிறது. இது இங்கே மட்டுமில்லை. உலகமெங்கிலும் தென்படுகிற சமாச்சாரம் தான். நமது வாழ்க்கையே பின்நவீனத்துவமாகத்தானே மாறிப்போறிப்போயிருக்கிறது? இது பழமலய்க்குப்புரியாது. புரியாமலிருப்பதே பழமலய்யின் பலம்.

தேடல்

நிச்சயமற்ற தருணங்களால் நிரம்பிய இந்த வாழ்க்கையில் நம்மால் எவ்வளவு திட்டமிட முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. திட்டமிட்டா எல்லாமும் இங்கே நிகழ்கிறது? பொறியியல் சேர்ந்ததிலிருந்து, அமெரிக்கா வந்து, பர்ஸ் போனது வரை எதுவுமே அவன் திட்டமிடவில்லை. யாரோ பி.ஈ. படி என்றார்கள். ஈ.சி.ஈ.க்கு நல்ல மதிப்பு என்றார்கள். ஜி.ஆர்.ஈ. எழுது என்றார்கள். வி.எல்.எஸ்.ஐ.க்கு உடனே வேலை என்றார்கள். இவன் இங்கே இருக்கிறான்… ஆம்பிளிபியரோடும், டெலிவரி பொருட்களோடும், தொலைந்த பர்சோடும் போராடிக்கொண்டு!

ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்

‘குட்டை’ ஆச்சிக்கான பெயர்க் காரணம் அவளது உயரத்தைப் பார்த்தாலே நமக்கு தெரியும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னை விட குட்டையாக இருந்தாள். ‘ஏச்சி, பாத்தியா! நான் ஒன்ன விட ஒயரம்’ என்பேன். ‘இருக்கட்டுமெய்யா. இதுலதான் பேத்தியாமாருகளுக்கு சந்தோசம். நீ பொறந்த ஒடனெ பார்வதிம்மா என் கைலதானெ ஒன்னய குடுத்தா’ என்று சொல்லி எட்டி என் கன்னத்தைப் பிடித்து முத்திக் கொள்வாள்.

வாசகர் எதிர்வினை

தொடர்ச்சியாக வரலாறு, அறிவியல் புனைவு போன்றவற்று நீங்கள் இடமளிப்பது முக்கியமானது. நீங்கள் எப்படி எழுத்தாளர்களை கண்டுபிடித்து எழுத வைக்கிறீர்கள் என்பது மிக ஆச்சரியமாக உள்ளது. சொல்வனம் தமிழ் தீவிர எழுத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது என்பது எனது ஊகம்.

தொப்பிக் கலாசாரம்

மேற்குலகில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய தொப்பி கலாசாரத்தின் போக்குகள் குறித்த ஒரு புகைப்பட ஆவணத்தை இங்கே காணலாம்.

மனித நாகரிகங்களை சமைத்த நியூரான்கள்

மனித குலத்தின் வரலாறு பல்வேறு பழம் நாகரிகங்களைத் தனக்குள் கொண்டுள்ளது. இந்த நாகரிகங்கள் உருவாகப் பல்வேறு சூழலிய காரணங்களை நாம் அறிந்திருக்கிறோம். சிக்கலான சமூக இயக்கங்களை நுண்ணறிவால் அறிந்து, அதற்குத் தகுந்த நாகரிகங்களை உருவாக்க உதவிய சில நியூரான்கள் குறித்து பிரபல நரம்பியல் மருத்துவர் வி.எஸ்.ராமசந்திரன் தன் துறை “மனித நாகரிகங்களை சமைத்த நியூரான்கள்”

நீடு எஞ்சுதலும், நவீனத்துவமும்

உரைநடையை எப்படிக் கவிதையின் அமைதியோடு எழுதுவது, அதே நேரம் அதில் ஒரு இசைத் தன்மையை எப்படிக் கொணர்வது என்று துவக்க காலக் கவிஞர்கள் கவனத்தோடு செயல்பட்டனர். சந்தத்தை உரைநடையோடு இணைக்கும் முயற்சி அது. மேற்கில் என்ன காரணங்களுக்காக மாடர்ன் பொயட்ரி என்ற உரு பரவியது என்பதை யோசித்து, அதே வகைக் காரணங்கள் தமிழில் இல்லாதபோதும், ஒரு சில ஒற்றுமைகளை பெரும்தளத்து அளவில் தமிழ்க் கவிஞர்கள் உணர்ந்தனர். அதாவது, சமூக, பண்பாட்டு, இலக்கிய மரபிலிருந்து விடுபடுதல் ஒரு முதல் கட்ட நகர்தல்.

பட்ஜெட் 2010 – ஒரு பேட்டி

2010ஆம் ஆண்டின் நிதி அறிக்கை (budget) பற்றிச் சில கேள்விகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (பெங்களூரு) பேராசிரியர் திரு. ரா.வைத்தியநாதனுடன் உரையாடினோம். பெருகிவரும் தாராளமயமாக்கல், கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம், உள்கட்டுமானம் போன்ற துறைகள் மீது இந்த பட்ஜெட்டின் கவனம் குறித்து உரையாடல் நீண்டது. “தனியார் மயமாக்குவது என்பது அதனளவிலேயே ஒரு இலக்காக ஆக முடியாது. அது ஒன்றும் மந்திரக் கோல் அல்ல. நம் அமைப்பும் மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பு. தவிர அரசு நிறுவனங்களைச் சரியான மதிப்பு போட்டு விற்பது என்பதும் எளிய செயலல்ல.”

ப்ளூம் பெட்டகம்- ஒரு பொக்கிஷப் பெட்டகமா?

பத்து வருடங்களுக்கு முன், நாஸாவுக்கு ப்ராஜக்ட்டுகள் செய்துவந்த அரிஸோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr.K.R.ஸ்ரீதரன் தனியாக “ப்ளூம் எனர்ஜி” என்றொரு நிறுவனம் ஆரம்பித்து இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் படு ரகசியமாகவே இருந்து வந்தன. அதன் காரணமாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இந்நிறுவனத்தைச் சுற்றி இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 24-ஆம் தேதியன்று கலிபோர்னியா மாநில ஆளுநர் அர்னால்ட் ஷ்வாட்ஸ்நேகரின் உற்சாகமான வரவேற்புடன் ப்ளூம் பெட்டகத்தை (Bloom Box) உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதரன்.

சந்தேகம்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில்
துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும்
எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும்
சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

பயணங்கள், புத்தகங்கள்

“இது என்ன?” என்று ஆர்வமாகக் கேட்க, “முதலைக் கறி,” என்றார்கள். கஜேந்திர மோட்சம் நடந்த இடம் இதுவாகக் கூட இருக்கலாம். என்னுடன் கூட இருந்தவர் நான் முழிப்பதை பார்த்து “மே ஐ ஹெல்ப் யூ?” என என்று விசாரிக்க, “நான், வெஜிடேரியன்” என்றேன் அப்பாவியாக. அதனால் என்ன என்று சாம்பாரில் நீந்திக்கொண்டு இருந்த முதலையைப் பாத்திரத்தில் கரையோரம் தள்ளிவிட்டு சாம்பாரை மட்டும் எடுத்து என் தட்டில் போட வந்தார். ‘ஆதிமூலமே!’ என்று நடுங்கியேவிட்டேன்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் ஸ்கான் எடுத்திலர் !

குகைக்குப் போய்க் கல்லால் அடைத்துக்கொண்டு மாதக் கணக்கில் தனியாக உட்கார்ந்திருந்தால், புற உலகத்தின் எல்லாக் காட்சிகளும் செய்திகளும் – பற்பசை விளம்பரங்கள் உட்பட – ரத்தாகி, மனத்திற்கு அதிக பட்ச சலிப்பு (boredom) ஏற்படுகிறது. அந்த நிலையில் க்ளூக்கோஸ்-ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் சேர்ந்துகொண்டு மனம் கெக்கரே பிக்கரே என்று கற்பனை செய்து கொள்ள, கண் எதிரே சங்கு சக்கர உருவங்கள் தெரிந்தாலும், அசரீரிக் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

மகரந்தம்

மனிதர் எப்போது எழுதப் படிக்கத் துவங்கினார்? மனிதர் பரிணாம ரீதியாக வளர்ந்து மேலெழுந்தார் என்பதையே நம்பாதவர் மேற்கில் ஏராளம். அவர்கள் விவிலிய நூல் சொல்வதுதான் இறுதி வரலாறும், ஒரே வரலாறும் என்று நம்பும் மக்கள். ஆனால் மனிதர் 40 ஆயிரம் வருடங்களாகவே எழுதப் படித்து வந்திருக்கிறார்.

தந்தைக்குக் கடன்

“சூதாட்டம் என்று இந்தக்காலத்தில் தனியாக எதுவுமில்லை. ஆனந்த் ஒரு கம்பெனி ஆரம்பிக்கப்போகிறான். அதில் வெற்றி நிச்சயமா? இல்லையே. வெள்ளிக்கிழமை காலையில் நீ தூக்கத்தைக்கெடுத்து, குளிரில் இரண்டுமணிநேரம் நின்றாய். குறைந்த விலைக்கு வாஷர்-ட்ரையர் கிடைக்காமல் போயிருந்தால்… இழப்பைத் தவிர்க்க நினைத்தால் எந்த முயற்சியிலும் இறங்கமுடியாது.”

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கோலசின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கோல்ஸ்.

மறுபடி

பள்ளிக்கூடத்திலிருந்து ஸ்டெல்லாவுக்கு காலையில் ஒரு கடிதம் வந்தது. கவுன்ஸிலரை சந்திக்க வரவேண்டும் என்று கோடிட்டிருந்தது. ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்களில் ஒரு மாதிரியான அந்நியத்தனத்தை உணர்ந்திருந்தாள் ஸ்டெல்லா. அவள் காலத்து இந்திய பள்ளிக்கூடங்கள் போல ஒட்டடையே அடிக்காத, குப்பை எங்கும் வெளியில் கிடக்க, அழுக்கும் அசிங்கமுமாய் இருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ ஒரு அன்னியத்தன்மை வந்ததாக ஸ்டெல்லா உணர்ந்திருந்தாள்.

செயற்கை இரட்டைகளும், இயற்கைப் பன்மையும்: வெங்கட் சாமிநாதன் கட்டுரையை முன்வைத்து

ஆரியர் என்கிற தந்தை-வழி சமுதாயத்தின் ஆண் தெய்வங்கள் கொண்ட வேதங்கள், அதன் அடிப்படையிலான பண்பாடு எனும் கருத்து ஒரு புறம்; திராவிடத் தாய் வழி சமூகம்- தாய் தெய்வ வழிபாடு மறுபுறம் என்ற கருத்து மறுபுறம். இப்படி ஒரு இரு துருவத்தில், binary இல்தான் நம் பார்வை தொடங்கி, பிறகு ஒரு ஒருமையைத் தேடுகிறது. எனவே எந்த இந்து மரபிலும் இந்த இரட்டையைத் தேடப் பழக்கப்பட்டுவிட்டோம்.

ஆழ்கடலில் தேடிய முத்து

வேலை முடிந்து சோர்ந்து இரவு உணவு சாப்பிட அமர்ந்தால் வரும் பெருவாரியான தொலை பேசி அழைப்புகள் காப்புரிமை, தொலைபேசி, வீட்டு சேவைகள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கால் செண்டர் தொல்லை. முக்கியமாக, இவர்கள் ஒரு சிந்தனையில்லாமல் உருவாக்கிய பட்டியலிலிருந்து அழைக்கும் பத்தாம் பசலிகள். பல்வேறு அசட்டு அழைப்புகளில், சில அழைப்புகள் எப்படி சரியாக இருக்கிறது? டேட்டா மைனிங்கின் இன்னொரு முகத்தை பார்ப்போம்.

நார்பாட்டனும், நம்ம பாட்டனும் !

தீர்க்காயுசாக வாழ்ந்திருந்த நம் கொள்ளுத் தாத்தா – எள்ளுப் பாட்டி கொடுத்துவிட்டுப் போன நல்ல ஜீன்கள் இருந்தாலும், இந்த எபிஜெனடிக் செய்திகள்தான் கடைசியில் வெல்லும். ஒருவர் வேளா வேளைக்கு உண்டு உறங்கி உடற்பயின்று ஒழுங்கான வாழ்க்கை வாழவில்லையென்றால், அவர் குழந்தைகள் கருவுறுவதற்கு முன்னமே அவர்கள் தலையில் ‘குண்டு, பொதுக்கை, அற்ப ஆயுள்’ என்று எழுதப் பட்டுவிடும்.

இராமேஸ்வரமும், சனீஸ்வரனும்

அவருக்கு திடீரென்று சென்னையில் மகனும், மருமகளும் நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை வந்தது. இது வழக்கம்தான். நான்கைந்து முறை குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கையில் யாருக்காவது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவரைப் பற்றிக்கொண்டு ஒரு நாள் முழுவதும் கூட அலைக்கழித்ததுண்டு. ஒரு தரம் சின்ன வயசில் டெல்லிவரை போனவர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ என்று தோன்றியதால் மறு நாளே திரும்பி வந்தார். அப்பாவுக்கு அப்போது ஒன்றும் இல்லை. இந்த சம்பவத்தை நினைத்து மனதில் திடீரென்று தோன்றும் பயத்தை தர்க்கரீதியாக விட்டுவிட முயற்சிப்பார்.

ஆங்கென் நட்பு

சுவரில் மோதிய வண்ணம்
கசிவைத் தேடியவண்ணம்
மெல்ல பசியத் தொடங்குகிறது அறை
புல்வெளியின் மணத்தோடும்
பசும் குழந்தையொன்றின் பால் மணத்தோடும்

மகரந்தம்

இணையத்தின் தற்போதைய காய்ச்சல் Google Buzz. நட்சத்திர நடிகர்களின் புதுப்படங்களை போல “நல்ல ஓப்பனிங்”. ஆனால் இது நீண்ட வெற்றியை பெறுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். ஒன்று கவனித்தீர்களா, கூகிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளும் செயல்முறையில் ஒருபோல இருக்கும்! கூகிள் நிறுவனத்தின் Talk, Buzz, Wave போன்றவை ஒரே குடும்பத்தில் அடங்கிவிடும். ஒரே சேவையை அளிக்க அது ஏன் இத்தனை தயாரிப்புகளை வெளியிடுகிறது?