சில ஹாலிவுட் திரைப்படங்களின் அறிவியலும், அறிவியல் எதிர்ப்பும்:1

புகழ்பெற்ற ஹாலிவுட் எதிர்கால/அறிவியல் புனைவு திரைப்படங்களின் அறிவியல் எந்த அளவுக்கு சரியானது? எந்த தத்துவப் பின்னணியில் அறிவியலையும், எதிர்காலத்தையும் அத்திரைப்படங்கள் எதிர்நோக்குகின்றன?

அவதாரை முன்வைத்து:

அவதாரில் சொல்லப்படும் ஒரு முக்கிய அறிவியல் கோட்பாடு – எவ்வாறு அந்த ‘பண்டோரா’ எனப் பெயரிடப்பட்ட உலகில் தாவர உயிர்களின் வேர்கள் புவிக்கடியில் ஒன்றுடன் ஒன்று இணைந்து மூளையின் நரம்பியக்கத்தை ஒத்த ஒரு செயல்பாடாக இயங்கிக் கொண்டிருப்பதென்பது. அது ஒரு பேரறிவாகவும் பெரும் நினைவாகவும் செயல்படுகிறது. அப்பெரும் பிரக்ஞையுடன் கிரகத்தின் சொந்த குடிகளான நா’வ்விகள் தம்மை இயைவுப்படுத்திக் கொள்ள முடியும். இப்பெரும் நினைவுவெளியிலிருந்து நினைவுகளை தரவிறக்கம் செய்யவும், தம் நினைவுகளை ஏற்றவும் முடியும்.

பின்னிருக்கும் அறிவியலும் ஊகங்களும்:

நமது பூமியில் தாவரங்களின் வேர்கள் இயங்கும் மண்டலம் வெறும் மண் சத்துக்களையும் நீரையும் உறிஞ்சுவதுடன் நிற்கவில்லை என்பதை அறிவியலாளர்கள் கண்டடைந்துள்ளனர். நரம்பு எவ்வாறு மின்னழுத்த மாற்றங்கள் மூலம் உடலுக்கு தகவல் அனுப்புகிறதோ அதே போல தாவரங்களிலும் புலனுணர்வு மின்னழுத்த மாற்றங்கள் மூலம் அனுப்பப்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

உதாரணமாக ஒரு தாவரம் வளரும் பகுதியில் நீர் குறையும் போது இலைகளில் இருக்கும் நுண்ணிய ஸ்டோ மாட்டாக்கள் எனும் திறப்பு அமைப்புகள் அடைத்துக் கொள்ளும். அதன் மூலம் நீர் தாவரத்தின் உடலில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படும். அதற்கான தகவல் தாவரத்தின் உடலில் நீரின் விசைப்பழுத்தக் குறைவு ஏற்படும் போது இலைக்குச் செல்லும். ஆனால் அத்தகைய நீரின் விசைப்பழுத்தக் குறைவு தாவரத்தின் உடலில் ஏற்படுவதற்கு முன்னரே இலைகளின் ஸ்டோ மாடாக்கள் அடைத்துக் கொள்வதை தாவரவியலாளர்கள் கண்டறிந்தனர். வேர்-மண் மண்டலத்திலிருந்து நீர் குறைவு ஏற்படுவது குறித்து வேரிலிருந்து மின்னழுத்த கடத்தலினால் தாவரத்தின் மேல் உடலுக்கு செய்தி செல்கிறது எனத் தெரிகிறது.

சுருக்கமாக நமது உடலில் இருக்கும் நரம்பு மண்டலத்தை போலவே, தாவரங்களிலும் தகவல் ஓட்டம்  மின்னழுத்தக் கடத்தலினால் நடக்கிறது. இந்த வேர் நரம்பு மண்டலம் தவிர, வேரடி மண்புலத்திலும் பல்வேறு உயிரினங்களுடன் நுண்ணுயிரிகள் மற்றும் இதர தாவர வேர்களுடன் வேதிப்பொருட்கள் மூலம் தாவரங்கள் ஒரு பெரும் “உரையாடலையே” நடத்துகின்றன என சொல்லலாம்.

உதாரணமாக ஜெர்மனியின் பலூஸ்கா எனும் அறிவியலாளர் வேர் நுனி துளிர்ப்புக்களில் நரம்பியல் மண்டலங்களில் உள்ள அதே வேதித்தொடர்புப் பொருள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். விலங்குகளைப் போலவே இனப்பெருக்கத்துக்கான உறுப்புகள் ஒரு உச்சத்திலும், நரம்பியக்கத்துக்கான பொருட்கள் மறு உச்சத்திலுமாக தாவரங்களில் அமைந்திருப்பதை அவரது ஆய்வுத்தாள் காட்டுகிறது. நரம்புகளுக்கிடையேயான தொடர்பு முடிச்சுகளைப் போலவே வேர்களிலும் அமைப்புகள் இருப்பதையும் அந்த ஆய்வுத்தாள் பேசுகிறது. பிற செடிகளில் சுய இன வேர்களை இனங்கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் தம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வேறு திசைகளுக்கு செலுத்தும் தன்மை வேர்களுக்கு உண்டு என்பது பல பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு உயிரியல் உண்மையோ அவதார் படத்தினை விட சுவாரசியமானது. வேர் மண்டலத்தின் மேலே ஒரு அவரைச் செடியை தாவர உண்ணிப் பூச்சிகள் சாப்பிடும் போது அச்செடியின் வேர்மண்டலங்களிலிருந்து சுரக்கும் வேதிப் பொருட்கள் பக்கத்திலிருக்கும் அதே வகைத் தாவரங்களின் ஧மேல் பகுதியில் சில வேதிப் பொருட்களை சுரக்கச் செய்கின்றன. இந்த வேதிப் பொருட்கள் காற்றில் கரைந்து தாவர உண்ணிகளை உண்ணும் எதிரிப் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கின்றன. இத்தகைய தாவர உண்ணிப் பூச்சிகளால் தாக்கப்பட்ட ஒரு செடியின் வேர்களை நனைத்த நீரை மண்ணில் விட்டால் கூட தாக்கப்படாத செடிகள் தாவர உண்ணிகளின் தாக்குதலுக்கு தயாராகி வேதித் தூதுவர்களை காற்றினில் அனுப்பி தங்கள் பாதுகாவலர்களை அழைத்துவிடுகின்றன.

அவதாரும், கிரேக்க பண்டோராவும்
அவதாரும், கிரேக்க பண்டோராவும்

ஆக, வேர் மண்டலத்தின் செயல்பாட்டை, ஒரு மிகப்பெரிய மூளை மண்டல அதி உயிரியாகக் கற்பனை செய்ய நீங்கள் விண்ணைத் தாண்டி பண்டோரா கிரகத்துக்குச் செல்ல வேண்டாம். உங்கள் வீட்டுத் தோட்டத்தின் கீழே மண்ணைத் தோண்டினால் போதும். ஒரு வேளை அதனால் தான் ‘பண்டோரா’ எனும் பெயரோ என்னவோ? ஏனெனில்  கிரேக்க புராணத்தில் ‘பண்டோரா’ ஒரு புராதன மனுஷி. அவளே முதல் மனுஷி எனலாம்.  கயா எனும் புவி எவ்வாறு கிரேக்க தெய்வக் குழாத்துக்கோ அது போலவே மானுடருக்கென பண்டோரா என்கிறார் பேராசிரியர் ராபர்ட் மாஹர் (Robert E. Meagher). அனைத்தையும் அளிப்பவள் – எனினும் ஞானத்தை ப்ரோமிதியஸ் தேடியதன் தண்டனையாக துயரத்தை கொணர்ந்தவள்.  ஒருவிதத்தில் ஏவாளின் முன்னோடி.

கூட்டுப் பிரக்ஞை வெளி ஒன்று உண்டா எனும் கேள்விக்கு அடுத்து நகரலாம்.

கூட்டு நனவிலி குறித்த கருதுகோளை ஆஸ்திரிய உளவியலாளர் கார்ல் குஸ்தாஃப் யுங் (Carl Gustav Jung) முன்வைத்தார். கூட்டு நனவிலி தொன்மையான ஆதார படிமங்களின் உறைவிடம். ஒவ்வொரு மனிதனூடாகவும் மானுடம் முழுவதையும் இணைக்கும் ஒரு பெரு நதி. லா.ச.ராவின் சிந்தா நதி. ஆனால், ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் மட்டுமல்லாது முழு மானுடத்துக்குமாக ஓடுவது; ஆழ்காலங்களிலிருந்து பிரவாகமெடுத்து என்றென்றைக்குமாக காலமில்லா வெளியில் ஓடுவது; முடிவின்மையிலிருந்து முடிவின்மைக்கு ஓடும் நதி.

இலக்கியம், தொன்மம், ஆன்மிகம், தெய்வாவேசம் என மானுடத்தின் அகவெழுச்சி கொண்ட பல வெளிப்பாடுகள் இந்த காணமுடியாத நதியிலிருந்தே பீறிடுகின்றன. நம் தாய் தெய்வங்களின் பொதுத்தன்மை, எல்லா மதக் குறியீடுகளிலும் காணப்படும் மண்டலங்கள் எனப்படும் முழுமைக் குறியீடுகள், இவை அனைத்தும் இங்கிருந்தே கிளம்புவை.

இவை மானுடத்தின் தொடக்கம் முதலே இப்பிரக்ஞை வெளியில் உறைகின்றனவா? அல்லது ஏதாவது கடும் உன்னத நிலை உச்சத்தில் ஒரு மானுட பிரக்ஞை அடைந்த விரிவும் ஆழமும் ஒரு குறியீட்டை விசையுடன் இவ்வெளியில் உள்ளிறங்க வைத்ததா? அதாவது கூட்டு நனவிலியிலிருந்து நாம் பெற்றுக் கொண்டு வெளிப்படுத்த மட்டும்தான் முடியுமா அல்லது நம்மால் அதனுள் ஒரு ஆழமான படிமமொன்றை உள்ளிறக்க முடியுமா? கூட்டு நனவிலி மானுடத்துடன் எவ்வித உறவு கொள்கிறது? முடிவற்ற சாத்தியங்களுடன் கேள்விகளாகவே இருக்கும் ஒரு பிரதேசம் அது. அதன் இருப்பே சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுநனவிலி ஓர் உலகத்தின் அதிஉயிரிகளின் மண்ணடி நரம்பு மண்டலத்தில் உறைந்து துலங்கி உறவாடுவது அழகான கற்பனைதான். அறிவியலின் இரு வேறு விளிம்புகளில் இருக்கும் விஷயங்களை ஒருங்கிணைத்து ஒரு மகா சித்திரத்தை உருவாக்குகிறார் காமரோன்.

லாசராவின் “அவள்” யுங்கியப் பார்வையில் மிக அருமையாக துலங்கும் ஒரு தொகுப்பு. கூட்டு நனவிலியின் இழையில் அன்றாட வாழ்க்கையின் பெண்களை பெண்களுடனான உறவுகளை காணத்துடித்தெழும் தொகுப்பு. எந்த அளவு அந்த முயற்சியில் லா.ச.ரா வெற்றி அடைந்திருக்கிறார் என்பது வேறு விஷயம். குறிப்பாக ஜனனியில் கூட்டு நனவிலியையும் ஒரு துவாலையாக உள்ளடக்கி விரியும் ஒரு உச்சத்தை பக்கங்களில் தொட்டுக் காட்டுகிறார் லாசரா.

(அடுத்தது: 2012 பேரழிவு முன்னறிவுப்புகள் தீர்க்க தரிசனங்கள்)

மேலறிய:

1) Roberto Pinton, Zeno Varanini, Paolo Nannipieri, The rhizosphere: biochemistry and organic substances at the soil-plant interface, CRC Press, 2007

2) Root apices as plant command centres: the unique ஑brain-like – status of the root apex transition zone, Biologia, Bratislava, 59/Suppl. 13: 1஗, 2004, (ds9.botanik.uni-bonn.de/…/plantneuro/…/NeuroPlantTZ-Biologia.pdf)

3) Robert E. Meagher, The meaning of Helen: in search of an ancient icon, Bolchazy-Carducci Publishers, 2002

2 Replies to “சில ஹாலிவுட் திரைப்படங்களின் அறிவியலும், அறிவியல் எதிர்ப்பும்:1”

Comments are closed.