27 வயதான அமெரிக்கக் குடும்பம்

ஒரு திரைப்படத்தையோ தொலைக்காட்சி தொடரையோ பார்க்கும்போது வெறும் மேம்போக்கான ரசிகனாக மட்டும் இல்லாமல், அதன் படைப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இது ஏதோ நானும் படமெடுக்கிறேன் என்று எதிர்காலத்தில் நான் கிளம்புவதற்கான முன்னேற்பாடல்ல. ஆக்கத்தின் பின்னால் உள்ள செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்வது, ஒரு கல்வி ஆய்வு (academic analysis) பின்புலத்துடன் நிகழ்ச்சிகளை நான் ஆழ்ந்து அனுபவிக்க உதவும் என்ற என் எண்ணம்தான் இதற்கு காரணம். என் பொறியாளன் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது இத்தகைய ஞானம் ஏதாவது தேவையற்ற புத்தகங்கள் எழுத உதவுமோ என்னமோ. அந்த நல்ல தொடர்கள் வரிசையில் சேர வேண்டிய ஆனால் மிகவும் வேறுவகையான புனைவு இருபத்தேழு வருடங்களாக அமெரிக்காவின் Fox தொலைக்காட்சி சேனலில் வந்து கொண்டிருக்கும் …
பெரியவர்கள் இது ஏதோ குழந்தைகளுக்கான டாம் & ஜெர்ரி போன்ற கார்ட்டூன் ஷோ என்று அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். 1988-1991களில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் “நான் இது வரை பார்த்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான ஷோ அது” என்று சொல்லி தனது அறியாமையை உலகுக்கு தெரிவித்தது இந்த அலட்சியத்தின் உச்சம். ஆனால் சிம்சன் தொடரோ அத்தகைய விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டு புஷ் தம்பதிகளையே ஒரு எபிசோடில் கலாய்த்துவிட்டு இன்றும் உற்சாகமாய் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.