விண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்

எவ்வளவு தூரத்தில், எப்படிப்பட்ட உலகமாக இருந்தாலும் சரி; அங்கே தொண்டையை நனைக்கக் கொஞ்சம் தண்ணீர் மட்டும் இருந்தால் போதும், ஏதோ ஒரு வகை உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். அட,அட அசடர்களா, பூலோக மனிதனுக்குத்தானேய்யா தண்ணீர் தேவை? மற்றக் கிரகங்களில், செலினியத்தைத் தின்று மீதேனைக் குடித்து வாழும் உயிர்கள் இருக்க முடியாதா என்ன? அவர்கள் சினிமா பார்க்கும்போது பாப் கார்னுக்கு பதிலாக ப்ளூட்டோனியத்தைக் கடித்துத் தின்றாலும் ஆச்சரியம் உண்டா?

வாயேஜர் என்கிற டீன் ஏஜர்

இந்த எல்லைக்கு வெளியே என்னதான் இருக்கிறது ? வெறும் சூனியமா ? இல்லை. ப்ளாஸ்மா என்ற மின்சாரத் துகள் மேகம் இருக்கிறது; எப்போதோ வெடித்துச் சிதறிய நட்சத்திர மத்தாப்பிலிருந்து சிந்திய பொறிகள் அவை. காந்தப் புலமும் உண்டு. இந்த ப்ளாஸ்மாவை அளந்து பார்த்தால் வாயேஜர் இருப்பது சூரிய மண்டலத்துக்கு உள்ளேயா வெளியேயா என்பது தெரிந்துவிடும்.

கல்லுளி மங்கனாய் ஒரு கணித மேதை !

தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சினையை, தனி ஒரு மனிதனாகத் தீர்த்தவர் என்று மோச்சிஸுகியை எல்லோரும் பாராட்டினார்கள். வெகுஜனப் பத்திரிகைகள் கூட பஜனையில் கலந்துகொண்டு சரண கோஷம் போட்டன. ‘உலகத்தின் மிகச் சிக்கலான கணிதப் புதிர் அவிழ்ந்தது ! ஜப்பானிய விஞ்ஞானியின் சாதனை !!’ என்றது டெலிகிராஃப் பத்திரிகை. ‘ஏ.பி.சி தத்துவத்துக்குத் தெளிவு கிடைத்துவிட்டது என்று தெரிகிறது’ என்று சற்று எச்சரிக்கையாக எழுதியது நியூயார்க் டைம்ஸ். இரண்டொரு நாள் வரை இணையத்தின் கணிதப் பக்கங்கள் பூரா இதே பேச்சுத்தான்.

டாக்டருக்கும் பெப்பே ! மருந்துக்கும் பெப்பே !

சின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.

அம்புலி மாமாவும் செம்புலி மாமாவும்

சமீப காலம் வரை விண்வெளிப் பயணம் என்பது, காசு கொழுத்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படி ஆகும் என்ற நிலை இருந்தது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் துணிந்து இறங்கிக் கலக்குகிறார்கள். கோடீசுவரர் எலான் மஸ்க் போன்றவர்கள் அமைத்த ராக்கெட் நிறுவனங்கள் நம் கிங்ஃபிஷர் விமானக் கம்பெனியைவிட லாபகரமாக இயங்குகின்றன. நாசாவிடம் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விண்வெளி நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள் சுமந்து செல்வதற்கு, சரக்கு லாரி போல லோடு அடித்துத் தருகிறர்கள்.

ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா

ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல் தொழிற்சாலையே இயங்குகிறது. ஏகப்பட்ட மாலிக்யூல்கள் (மூலக் கூறுகள்) இணைந்தும் பிரிந்தும் சங்கிலி நடனம் ஆடுகின்றன. ஆக்டின் இழைகள் தமக்குத் தாமே பிணைந்து வயர் கூடை பின்னுகின்றன. இரண்டு சின்னஞ் சிறிய கால்களால் அடி மேல் அடி வைத்து பலூன் வியாபாரி மாலிக்யூல் ஒன்று நடந்து போகிறது. கொழுப்புக் கடலில் ஒரு லிபிட் தெப்பம் மிதந்து வருகிறது. அதன் மீது ஒரு தொண்டர் கோஷ்டியே அலப்பறை செய்துகொண்டு ஏதோ கட்சி மாநாட்டுக்குப் போகிறது.
செல்லின் நடுவில் வட்டமாக மெத்தை போட்டு, திண்டு வைத்துக்கொண்டு முகலாயச் சக்ரவர்த்தி போல உட்கார்ந்திருப்பதுதான் மையக் கரு. அதற்குள் சுருட்டிய இரட்டை வடச் சங்கிலி போன்ற டி.என்.ஏ. இதில்தான் நம் பாட்டன், முப்பாட்டன் கொடுத்த மரபு வழிச் செய்திகள் அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. நம் சைடு வழுக்கை, சப்பை மூக்கு எல்லாவற்றுக்கும் ஆதி காரணம் டி.என்.ஏ.

தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!

க்வாண்டம் இயற்பியலுக்கு நூறு வயதாகிறது (இன்னும் புரியவில்லை). இத்தாலிய மொழியில் க்வாண்டம் என்றால் ‘எவ்ளோ?’ என்று பொருள். இந்த இயலை ஆரம்பித்து வைத்தவர்களால் விடை காண முடியாத பல கேள்விகள் இருந்தன. யாரும் பார்க்காத போது அதையெல்லாம் துடைப்பத்தால் தள்ளி பீரோவுக்கு அடியில் குவித்துவிட்டுப் போய்விட்டார்கள். உதாரணமாக, ‘ஒளியும் மின் காந்த அலைதான்’ என்று காலையில் சொன்ன அதே வாய், மாலையில் கொஞ்சம் போட்ட பிறகு ‘அது அலை அல்ல, துகள்’ என்று சொல்ல ஆரம்பித்தது.

‘உதய சூரியன்’ – தி.ஜானகிராமனின் ஜப்பான்

நாங்கள் போன சமயம் இலையுதிர் காலம். செர்ரி போன்ற மரங்கள் எல்லாம் தகதகவென்று எரியும் பொன் போலச் சுற்றிலும் சிலிர்த்துக் கொண்டிருந்தன. இலைகள் அப்படித் தங்கமாக மாறி, தாமிரமும் ஆரஞ்சும் மஞ்சளும் சிவப்புமாகப் பல வர்ணத் தீயைப் போல மைல் கணக்கில் அடி வானம் வரையில் பரந்து ஜொலிக்கும் அந்த வனப்பை நான் கண்டதில்லை. உயரமும் அந்த வர்ண நெடும் பரப்பும், தனிமையும் மெல்லிய பட்சியோசையும் புறக் கண்ணை ஊடுருவி, ஒரு அமானுஷ்யமான அந்தராத்மாவில் ஆழ்ந்து தோயும் அனுபவமாக, மறதியாக, மேலும் மேலும் ஆடிச் சென்றுகொண்டே இருந்தன. வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. திறந்தால் அந்த அமைதி, ஆனந்தம், லயம் எல்லாம் கெட்டுவிடும் போலிருந்தது.

வில்லியம் கிப்ஸன், அறிவியல் நவீன ‘ஆளுமை’

நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சம் பேர்தான் இருப்பீர்கள். நீங்கள் மோதுவதோ, ஏராளமான பெருந்தலைகளுடன். பயங்கரவாதம் என்பது உங்களுடைய பிராண்டைப் பிரபலமாக்கும் முயற்சி. ஏனெனில் உங்களிடம் இருப்பதெல்லாம் அந்த பிராண்ட் ஒன்றுதான். பயங்கரவாதிகளிடம் அவ்வளவாகப் பொருள் வசதி இருப்பதில்லை. முதலில், பயங்கரவாதம் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கவில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அந்த வார்த்தை துல்லியமாகச் சொல்லுவதில்லை

டிசம்பர் நாற்காலிகள்-2

சஞ்சய் சுப்ரமணியனின் வாய் மட்டுமில்லாமல் மொத்த உடம்பும் பாட்டுப் பாடுகிறது. குன்னக்குடிக்கு அடுத்தபடி சேஷ்டை மன்னர் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர். கை, அது பாட்டுக்கு ஏதோ மானசீகமான இயந்திரத்தின் knob-களைத் திருகிக்கொண்டே இருக்கிறது. ஆலாபனையின் போது ததரின்னாவைக் கைவிட்டு ‘டுட்டுட்டுடூ’ என்று கூட ஆரம்பித்துவிடுகிறார்.

டிசம்பர் நாற்காலிகள்-1

ஒவ்வொரு கீர்த்தனையின் முடிவிலும் சில பல சென்னை ரசிகர்கள் பஞ்ச் பஞ்ச்சாக எழுந்து வெளியேறினார்கள். பாவம், எல்லோருக்கும் ப்ளாடர் வீக் போலிருக்கிறது. இவர்களைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவே இந்த மாதிரி அருமையான இசைக்கலைஞர்கள் மெலடியைக் குறைத்து ஓசையையும் வேகத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் கதிரி டீமுக்கு ஒரு ரிக்வெஸ்ட்: ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் மேற்கத்திய ஸிம்ஃபனி போல் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு orgasmic crescendo-வுக்குப் பாய்வதைத் தவிர்க்கலாம். தகரப்பாலத்தின் மீது குதிரைப் பட்டாளம் ஓடுவது போல் ஒலிக்கிறது.

ராக்கெட்டில் போனவர்களின் ராஜ வைத்தியம்!

அமெரிக்க ராணுவத்தினர் அடாவடி ஆக்கிரமிப்புக்களுக்காக வெளி நாடு செல்லும்போது MRE (அப்படியே சாப்பிடத் தகுந்த உணவு) என்ற பட்டைச் சாதப் பொட்டலங்களைக் கொண்டு போவார்கள். போர் முனையில் ஃபிரிட்ஜ் இல்லாத இடத்தில்கூடக் கெட்டுப் போகாமல் இருக்க, அதிகக் காற்றழுத்தத்தில் சூடாக்கிக் கிருமி நீக்கம் செய்வார்கள். இந்த டெக்னாலஜியையும் நாசா உபயோகித்துக் கொள்கிறது. அமெரிக்க நாக்கு போர் முனையில் கூட சுடச்சுட சாப்பாடு கேட்கிறது போலிருக்கிறது.

மருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்!

சூப்பர் கிருமிகள் வளர்வதற்கு நம் பொறுப்பில்லாத மருந்து சாப்பிடும் பழக்கங்கள் காரணம். ஒவ்வொரு ஆண்ட்டி பயாடிக்காக அளவுக்கு மீறி உபயோகித்து, அதற்கு அடங்காத கிருமிகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டோம். நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே ? அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப் பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு !

அத்தனை கேஸும் முத்தின கேஸ்!

காதலனுடன் சண்டை போட்டுக்கொண்ட இளம் பெண் மனச் சோர்வு அடைந்து, இறுகிய முகத்துடன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போடுவது, கடைசியில் அந்த ராஸ்கல் செல்போனில் கூப்பிடும்போது துக்கத்தில் பேச்சு வராமல் தடுமாறுவது – இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’. எல்லாவற்றையும் விட விசேஷமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவது. இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான் !

தூணிலும் போஸான், துரும்பிலும் போஸான்!

இந்த ஹிக்ஸ் போஸான் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளுக்குப் பல வருடமாகத் தண்ணீர் காட்டி வரும் சின்னஞ் சிறு பொருள். அதைக் கண்டுபிடிக்கத்தான் 37 நாடுகளில் விஞ்ஞானிகள் பைப் புகைத்துக்கொண்டு பொறுமையில்லாமல் காத்திருக்கிறார்கள். இதில் அமெரிக்காக்காரர்களும் ஐரோப்பியர்களுக்கும் யார் முந்தி என்று போட்டா போட்டி வேறு!

எண்ணெய்ச் சிதறல் பற்றி : சில எண்ணச் சிதறல்கள்

முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால்?

எந்தக் கடையில் வாங்கின மூக்கு?

ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.

கடவுளுக்கு வி.ஆர்.எஸ்!

வேறொரு விதத்தில் சொல்ல முயன்றால், நாம் ஒரு பாட்டு. அ,டி,க,ஸ என்று நாலே ஸ்வரங்களால் ஆன ட்யூன். நாலு ஸ்வரங்களில் இயற்கை எத்தனை கோடி ட்யூன் போட்டிருக்கிறது.இப்போது விஞ்ஞானிகள் இதே நாலு ஸ்வரங்களில் தாங்களாகவே இயற்கையின் முழுப் பாட்டு ஒன்றை வாசித்திருக்கிறார்கள். நாலு ஸ்வரங்களில் இயற்கை எத்தனை கோடி ட்யூன் போட்டிருக்கிறது.

செல், பேசாதே!

கார் ஓட்டும்போது செல்பேசியை உபயோகித்தால் ஆபத்து என்று சரமாரியாக ஆய்வு முடிவுகள் வர ஆரம்பித்த பிறகு கூட அவர்கள் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை. கன்ஸ்யூமர் பாதுகாப்பு சங்கங்கள், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்று பல தரப்பினரும் உள் நாக்கு தெரியக் கத்தியதால், பல மாநிலங்கள் காரில் மொபைல் போன்களைத் தடை செய்ய சட்டம் கொண்டு வர முயற்சித்தன. செல்போன் கம்பெனிகள் தங்கள் லாபி இயந்திரம் முழுவதையும் முடுக்கி விட்டு, பணத்தை டாக் டைம் போலச் செலவழித்து சட்டத்தைத் தடுத்து நிறுத்தின.

பூச்சி உலகில் மர்ம மரணங்கள் !

தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது

கண்டவர் விண்டிலர், விண்டவர் ஸ்கான் எடுத்திலர் !

குகைக்குப் போய்க் கல்லால் அடைத்துக்கொண்டு மாதக் கணக்கில் தனியாக உட்கார்ந்திருந்தால், புற உலகத்தின் எல்லாக் காட்சிகளும் செய்திகளும் – பற்பசை விளம்பரங்கள் உட்பட – ரத்தாகி, மனத்திற்கு அதிக பட்ச சலிப்பு (boredom) ஏற்படுகிறது. அந்த நிலையில் க்ளூக்கோஸ்-ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் சேர்ந்துகொண்டு மனம் கெக்கரே பிக்கரே என்று கற்பனை செய்து கொள்ள, கண் எதிரே சங்கு சக்கர உருவங்கள் தெரிந்தாலும், அசரீரிக் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

நார்பாட்டனும், நம்ம பாட்டனும் !

தீர்க்காயுசாக வாழ்ந்திருந்த நம் கொள்ளுத் தாத்தா – எள்ளுப் பாட்டி கொடுத்துவிட்டுப் போன நல்ல ஜீன்கள் இருந்தாலும், இந்த எபிஜெனடிக் செய்திகள்தான் கடைசியில் வெல்லும். ஒருவர் வேளா வேளைக்கு உண்டு உறங்கி உடற்பயின்று ஒழுங்கான வாழ்க்கை வாழவில்லையென்றால், அவர் குழந்தைகள் கருவுறுவதற்கு முன்னமே அவர்கள் தலையில் ‘குண்டு, பொதுக்கை, அற்ப ஆயுள்’ என்று எழுதப் பட்டுவிடும்.

காலில் விழுந்த கண்டக்டர் !

கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்கூட ஆராய்ச்சிகள் பலப் பல செய்யப்பட்டு அத்தனையின் முடிவும் ஒன்றுதான் : நல்ல பள்ளிக்கூடம், நல்ல சூழ்நிலை, முன்னேறிய சிலபஸ், பெற்றோர் வருமானம், மதிய உணவில் முட்டை எல்லாவற்றையும் விட மாணவர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள்தான்.

மருந்து இருந்தால் சொல்லுங்கள்!

விஞ்ஞானிகள் ஓய்வாக இருக்கும்போது ஒரு கையால் தாடியையும் மறு கையால் மனச்சாட்சியையும் கோதிக்கொண்டு யோசிக்க வேண்டும். புகையிலை, ஆஸ்பெஸ்டாஸ் போன்றவைகளால் கான்சர் வருகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் அது பரவலாக வெளியே வருவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயிற்றே, ஏன் ? அரசல் புரசலாக உண்மையைப் பேச முயன்றவர்களையும் ‘பூ பூ !!’ என்று கத்தி வாயடைத்து உட்கார்த்தி வைத்துவிட்டார்களே, அதுதான் ஏன் ? காரணம், இவற்றைத் தயாரிக்கும் மெகா கம்பெனிகள். அவற்றின் கிகா வருமானம் !

வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்!

பயிற்சிதான் ஒருவரை சிறந்த இசைக் கலைஞராக ஆக்குகிறது. எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் குத்து மதிப்பாகக் கணக்கு போட்டுச் சொல்ல முடியும் : ஒருவர் தன் வாழ்க்கையில் பத்தாயிரம் மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்தால் ஏறக் குறைய மாஸ்ட்ரோ ஆகிவிடலாம். அரியக்குடி, குன்னக்குடி போன்றவர்கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்;

பரிணாமமும் பரோபகாரமும்!

வீட்டில் தம்பி தங்கைகளுடன் சாக்லெட்டைப் பகிர்ந்து கொள்ள முன்வராத குழந்தைகள் கூட, பள்ளிக்கூடத்தில் சடையப்ப வள்ளல் மாதிரி நடந்து கொள்வதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை வளர வளர, அதுவும் நம்மைப் போல் மாற ஆரம்பிக்கிறது; உதவி செய்யும் மனப்பான்மை குறுகத் தொடங்குகிறது.

எடைப் புதிருக்கு விடை என்ன?

ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ்

சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்

மனித ஜினோம் ப்ராஜெக்ட் ஆரம்பித்தபோது ‘இதனால் யூஜெனிக்ஸ் சாத்தியமாகும், நல்ல குடிமக்களைப் பிறப்பிக்க முடியும்’ என்றார்கள். பரம்பரை வியாதிகளைப் போக்குவதுடன், குற்றங்களைக் குறைத்து, சமுதாயத்தில் போக்கிரித்தனத்தை ஒழிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. 1989ல் ‘சயன்ஸ்’ பத்திரிகையின் தலையங்கத்திலேயே, ‘இனி மன நோய்கள் ஒழிந்துவிடும், ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்குபவர்கள் குறைந்துவிடுவார்கள்’ என்று சிவலிங்கத்தின் முன்னால் நின்ற மாணிக்கவாசகர் மாதிரி நெக்குருகினார்கள். நடந்ததா ?

விழப் போகிறது!

2004-ல் 2004FH என்ற பெயருள்ள 100 அடி அகலப் பாறை பூமியை மயிரிழையில் தப்பிச் சென்றது. 1992-ல் கைப்பர் வளையம் என்று புளூட்டோ வீட்டுக்கு அருகே மாபெரும் கற்களின் மாநாடு ஒன்று நடப்பதைக் கண்டுபிடித்தார்கள். இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்டவை, இங்கிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்குப் பெரியவை. இவற்றில் எது ஒன்று வந்து விழுந்தாலும் பூமிக்கு அத்துடன் ஜன கண மனதான்.

மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

மனித உடலுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்களை வளர்த்து அறுவடை செய்யப் பண்ணைகள் இருக்கும். இவை முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இயங்கும். நாமக்கல்லில் ஒரு கிட்னி பண்ணை, நாகப்பட்டினத்தில் இதயப் பண்ணை. இப்போதே மனிதக் கருக்களிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரிக்க சீனா போன்ற நாடுகளில் சந்துக்கு சந்து ஆராய்ச்சி சாலைகள் உள்ளன. அவர்களிடம் ஃப்ரிஜ்ஜில் ஆயிரக் கணக்கில் உறைய வைத்த மனிதக் கருக்கள் இருப்பதால், முதலீடு செய்ய அமெரிக்க சேட்டுகள் பண மூட்டையுடன் அலைகிறார்கள்.

முறுகல் தோசை மனிதன்

நான்தான் நடுத்தர வயதின் மண்ணாங்கட்டி ஆகிக் கொண்டிருக்கிறேன் என்பதல்ல. என் நண்பர்கள் பலரும் – அதில் பலர் அக்மார்க் அறிவு ஜீவிகள் என்றே சொல்லத் தக்கவர்கள் – தங்களுக்கும் இதே பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஸ்காட் கார்ப் போன்ற வலைப் பூவினரும் இதையேதான் சொல்கிறார்கள். ‘நெட் வந்த பிறகு என் படிக்கும் பழக்கம் மாறிவிட்டது. அதுகூடப் பரவாயில்லை; ஆனால் என் சிந்திக்கும் விதமே மாறிவிட்டதே!’ என்று அங்கலாய்க்கிறார்கள். ‘இனிமேல் என்னால் ஒரு டால்ஸ்டாய் நாவலைப் படிக்க முடியாது. ஒரு ப்ளாக்கூட நாலைந்து பாராவுக்கு மேல் இருந்தால் வயிறு நிரம்பிவிடுகிறது. மேலோட்டமாக சாம்பிள் பார்த்துவிட்டு அடுத்த சுட்டிக்குப் போய்விடுகிறேன்’.

மனிதன் 2.0 எப்படி இருப்பான்?

ஆன்லைன் வாசகர்கள் ட்விட்டர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ‘என்னுடைய பூனை பிங்க்கி காலையிலிருந்து பர்ர்..ர் என்று சப்தம் எழுப்புகிறது’ என்பது போன்ற மானாவாரியான செய்திகளுக்கிடையே சில சமயம் முத்து ரத்தினங்களும் சிக்குவதுண்டு. திடீரென்று ட்விட்டருக்கு ஞானம் பிறந்து, நீங்கள் என்ன மாதிரியான செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, மலச்சிக்கல் பூனைகளையெல்லாம் வடிகட்டிவிட்டுக் கொடுத்தால்? அப்போது தகவல் ஓவர்லோடினால் வரும் நிரந்தரமான அரைப் பிரஞ்ஞை நிலையிலிருந்து மீண்டு, கௌதம புத்தர் போன்று எல்லாம் அறிந்த ஓர் உணர்வு நிலையை எட்டுவோம்.

மனிதன்+

பரிணாம இட்லிப் பானையில் மெல்ல மூளை வெந்து பக்குவப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஃபாஸ்ட் ட்ராக்கில் நாமே நம் பரிணாமத்தை அமைத்துக்கொள்ளலாம். இந்தப் போக்கு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இண்டர்நெட்டில் புகுந்தவுடன் ஒரு தேன்கூட்டின் அறிவு போல் ஒத்து யோசித்து ஒரே மாதிரி செயல்படுகிறோம். ஒரே எம்.பி-3 பாட்டை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்கிறோம். அதிக நேரம் தூங்காமல் விழித்திருக்க, கவனத்தைக் கூர்தீட்டிக்கொள்ள, மருந்துகள் இருக்கின்றன. (சாப்பிடாதீர்கள்.)