சுலைமான் அப்படித்தான். மைக்கைக் கையில் பிடித்து விட்டால் வண்டி அங்கே இங்கே திரும்பாது. நம்ம ஊர் சிங்காரி மட்டுமல்ல. எங்கேயும் எப்போதும் பாடலுக்குக் கூட உடலில் அசைவில்லாமல் வேறெங்கும் பார்க்காமல் பாடுவார். ‘சொர்க்கம் மதுவிலே’ பாட்டுக்கெல்லாம் ஒருத்தன் ஆடாம பாட முடியுமாய்யா? ஆனால் அதற்கும் சுலைமான் அசைய மாட்டார். சிவகுருவுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
Author: சுகா
சாப்பாட்டுக் கடை
திருநவேலியில் தேடித் தேடி சாப்பிட்டது போக, சென்னையில் சாப்பிட்ட சாப்பாட்டுக் கடைகளின் பட்டியல் புதிய கடைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. அந்த வகையில் பழையன கழிந்து புதியன பல புகுந்து விட்டன. சாலிகிராமத்திலிருந்த ‘முத்துலட்சுமி பவன்’ ஹோட்டலை கழுகுமலை அண்ணாச்சி மூடி விட்டார். சுடச் சுட இட்லியும், பருப்பு சாம்பாரும், ரகசியமாக எனக்கு மட்டும் (ஊர்ப்பாசம்) கெட்டிச் சட்னியும் கொடுப்பார். அவர் கொடுக்கும் உணவையும், உபசாரத்தையும் மறப்பதற்கில்லை. ‘ஸார்! வாருங்கோ! சும்ம இருக்கேளா?’ என்று …
ஏக்நாத் எழுதிய 'ஆங்காரம்' நாவல்
திருநவேலியில் தெருவுக்கொரு உச்சினிமாகாளி. திருநவேலியைச் சுற்றி பல ஊர்களில் இசக்கி, பேச்சி, முத்தாரம்மன், பேராத்துச் செல்வி, சுடலை மாடன், பூதத்தார் என பல கடவுள்கள். கடவுள்கள் என்றால் வீட்டுக்குள் பூசையறையில் ஓவியமோ, காலண்டர் புகைப்படமோ மாட்டி, செப்பு போல் சிறு விக்கிரகம் வைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை, ஆடி இறுதியில் முழுகாட்டி புதுத் துணி போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, கற்பூரம் காட்டி சக்கரைப் பொங்கல் வைத்து, விழுந்து வணங்கப்படும் சாமிகள் அல்ல. காக்கும் கடவுள்கள்தான் என்றாலும், இவர்களுக்கு வீட்டுக்குள் இடம் கிடையாது. சில சாமிகளுக்கு தெருவிலும், இன்னும் சில சாமிகளுக்கு ஊருக்கு வெளியேயும் கோயில்கள் உண்டு. ‘கும்பிடுத சாமின்னாலும் துடியான சாமியல்லா! அவ்வொள வீட்டுல வைக்க முடியுமா? நம்மதான் அவ்வொ இருக்கற எடத்துல போயிக் கும்பிடணும். பொறவு மனுசாளுக்கும், சாமிகளுக்கும் என்னவே வித்தியாசம்? ‘
உபசாரம்
இப்போது எல்லா ஊர்களும் ஒரே ஊராகி விட்ட பிறகு பந்தி ஜமுக்காளம் விரித்து, இலை போட்டு, தண்ணீர் வைத்து, உப்பு, சுண்ட வத்தல் வைத்துத் துவக்குகிற முறையான பந்தி பரிமாறுதல் காணாமல் போய்விட்டது. கூடவே உபசாரம் செய்பவர்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். கேட்டரிங் ஊழியர்கள் கடனே என்று பரிமாறும் வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிடப் பழகி விட்டது, மனம். ஆனாலும் சென்னையில் அவ்வப்போது சில ஹோட்டல்களில் உபசாரம் செய்பவர்களை ‘சப்ளையர்கள்’ உருவில் பார்க்க முடிகிறது.
ஒரு தமிழ் எழுத்தாளரின் இறுதிச் சடங்கு – (ஜெயகாந்தன் அஞ்சலி)
நள்ளிரவில் ஜே.கே வீட்டு வாசலில் நின்றபடியே பேசிக்கொண்டிருந்த என்னையும், ராமகிருஷ்ணனையும் பார்த்து ஜே.கேயின் இளையமகள் தீபா, ‘எவ்ளோ நேரம் ஸார் நின்னுக்கிட்டு இருப்பீங்க? இந்தாங்க, முதல்ல டீ சாப்பிடுங்க’ என்று நாற்காலிகளை எடுத்துப் போட்டார். நான் ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’ பற்றியும், ராமகிருஷ்ணன் ‘எங்கோ, எப்போதோ, யாருக்காகவோ’ பற்றியும் பேசிப் பேசி நள்ளிரவைக் கழித்தோம்.
கவிதைகள்
நிறைய புதிய முகங்கள் பார்க்கிறேன்
நிறைய புதிய குரல்கள் கேட்கிறேன்
நான் வசிக்கும் அதே தெருவின் கடைக்கோடிவீட்டின்
ஹார்மோனிய இசைவகுப்புகளின் ஸ்வரவரிசைகள்
தி.க.சி இல்லாத திருநவேலி . . .
மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.
‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.
சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.
‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.
ஆசான்களின் ஆசான்
அதற்குப் பிறகு ஜே.கேயை சந்திப்பதற்கு ஜே.கே.யை தன் மானசீக குருவாக ஆராதிக்கிற எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன். அந்த சமயங்களில் சிவமூலிகையை, தன்னுடைய பழக்க, வழக்கங்கள் பற்றிய ஒளிவுமறைவில்லாத ஜே.கே விட்டொழித்திருந்தார். வ.ஸ்ரீநிவாசனுக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்கனவே நல்ல அறிமுகமும், தொடர்பும் இருந்த காரணத்தினால் அவருடன் போகும் போதெல்லாம் மெல்ல மெல்ல ஜே.கே.யுடன் நெருக்கமாகப் பேச முடிந்தது. ஒன்றிரண்டு சந்திப்புகளில் ஜே.கேக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. சில நேரங்களில் எங்களுடன் நண்பர் கே.பி.விநோத்தும் வருவார். அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் படித்திராத விநோத்துடன் ஜே.கே பிரியமாகப் பேசுவார். ஒருநாள் அப்படி பேசிக்கொண்டிருக்கையில் விநோத், ஜே.கேயிடம் சொன்னார்.
புத்தகக் கண்காட்சி உலா…
சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்குப் போகவே இல்லை. அதற்கு முந்தைய வருடக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் படிக்காத (நியாயமாக சொல்லப் போனால் அட்டையைக் கூடப் பிரிக்காத) புத்தகங்கள் என்னை தினமும் முறைத்த காரணத்தால்தான் போகவில்லை. வீட்டம்மாவின் தலைமையிலேயே மேற்படி புத்தகங்கள் முறைத்தன என்பது கூடுதல் செய்தி. இந்த முறையும் போகாமல் தவிர்த்து விடலாம் என்றால், அப்படி இருக்க முடியாதபடி செய்துவிட்டனர் ‘வம்சி’ பதிப்பகத்தார்…
என்னை ‘நான்’ ஆக்கியவர் . . .
தொன்னூறுகளில் துவக்கத்தில் நான் அவருடன் வந்து இணைந்த நாளிலிருந்து இன்றுவரை என் வாழ்வின் ஆதாரமாகத் திகழும் பாலுமகேந்திரா என்னும் உன்னதமான கலைஞன்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்புக்குக் காரணமென்னவோ அவரது திரைப்படங்கள்தான். ஆனால் பாலுமகேந்திரா என்கிற மனிதர், பாலு மகேந்திரா என்னும் ஆளுமை, பாலுமகேந்திரா என்றழைக்கப்படுகிற என்னுடைய குருநாதரை மறக்க முடியாமல் செய்து, தொடர்ந்து அவருடைய நினைவுகளால் இன்னும் கதறச்செய்து கொண்டிருப்பது அவருடனான எனது தனிப்பட்ட அனுபவங்கள்தான். […] ‘தலைமுறைகள்’ திரைப்படத்துக்கு அடுத்ததாக ஒரு திரைக்கதையை எழுதும் திட்டத்திலிருந்தார். முழுக்கதையையும் என்னை அழைத்துச் சொன்னவர், ’உன்கிட்ட சொன்னதுக்கப்புறம்தான் ராஜாக்கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னும் இதை கொஞ்சம் ஷேப் பண்ணிட்டு, ராஜாவப் போய்ப் பாத்து சொல்லிடலாம். நீயும் வந்திடு’ என்று சொன்னபோது, அது நடக்கும் என்று நம்பினேன்.
நாக்கு
வள்ளிநாயகம் சொல்வது திருநவேலிக்கும் மட்டும் பொருந்தாதுதான். சுவையான உணவைத் தேடி அலைகிற மனதுடைய மனிதர்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். வீட்டில் என்னதான் ருசியாகச் சமைத்தாலும் வெளியிடங்களில் சாப்பிட மனம் கிடந்து அலைந்து கொண்டேதான் இருக்கிறது.
“விசேஷ வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சுங்கெ! ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா!”
சென்னையில் நடக்கும் விசேஷ வீடுகளில் போடப்படும் சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது உள்ள நடைமுறையில் போடப்படும் சாப்பாட்டில் வகைகள் என்னவோ விதவிதமாகத்தான் உள்ளன. கைகளில் பிளாஸ்டிக் க்ளவுஸும், தலைக்கு குளியல் கவரும் போட்டு, சீருடையில் கேட்டரிங் ஊழியர்கள் பரிமாறும் சாப்பாட்டில் சுவை இல்லாமலில்லை. ஆனாலும் திருநவேலி விசேஷ வீடுகளில் கைநனைத்த எந்த ஒரு மனிதனையும் பெருநகர நவீனப் பந்திகள் திருப்திப்படுத்தி விடமுடியாது.
எழுத்துக்காரர் வண்ணநிலவனுடன் சில நிமிடங்கள் . . .
இலக்கியவாதிக்கு விசேஷத்தன்மை ஒண்ணும் கெடையாது. அவங்க செஞ்ச சாதனைகளால அப்படி தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்ணே ஒண்ணு இல்லாட்டி அவனை யாரும் யோசிக்கப் போறதில்ல. பத்தோட பதினொன்னுன்னு மறந்துருவாங்க. விசேஷம் ஒண்ணும் கெடையாது. இந்தத் தெறமை ஒண்ணும் கெடையாது.
இது ஒரு வேலை மாதிரிதான். டீக்கடைக்காரன் என்ன பண்ணுதான்? அவன் டீ போடுதான். நல்ல டீ போட்டுக் கொடுத்தா அந்தக் கடைக்குத் தேடிப் போறோம். அது மாதிரி நல்லா எளுதுனா, படிப்பீங்க, அவ்வளவுதான். நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லிட்டுப் போயிருவோம், அவ்வளவுதான்.
தாகூரின் பேரன்
சொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர்.
சுப்பையாவின் மருமகன்
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்தே சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மடைதிறந்த வெள்ளமாக, தேவாரமும், திருவாசகமுமாகப் பாடி வந்தார். இடையிடையே கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் வேறு. மரபின் மைந்தன் பாடிய ஒவ்வொரு பாடலும் எனக்கும் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. சில இடங்களில் கண்மூடி பக்தியில் மூழ்கிக் கிடப்பதான பாவனையில் சமாளித்தேன். உடன் வந்த ‘இசைக்கவி’ ரமணன் அவர்கள் ஒருபடி மேலே போய், மரபின் மைந்தனின் குரலுக்கு வாயசைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.
விருந்தோம்பல்
பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார்
திருநவேலியும், திருநெல்வேலியும்…
முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை.
தேவதேவனுக்காக இளையராஜாவுடன்
கார் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் நுழையும்போதே, பெரும் கூட்டம் வாசலில் காத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. இளையராஜாவால் கீழே இறங்கவே முடியவில்லை. மொய்த்துக் கொண்டார்கள். ஒரே சத்தம். ஒரு சில அழுகையொலிகளும் கேட்டன. ஒருசில நொடிகளிலேயே கூட்டத்துக்குள் நான் தொலைந்துப் போக இருந்தேன். நல்ல வேளையாக முகம் தெரியாத அரங்கசாமியின் நண்பர்கள் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர்.
பாட்டையா பார்த்த மனிதர்கள்
‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில்(அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும்.
தேவனின் கோயில்
‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன்.
மூத்தோர்
வழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.
இளையராஜாவின் ரசிகர்கள்
எண்பதுகளின் திரையிசை என்னும் தலைப்பு மனதைக் கவர, ‘நீயா நானா’ பார்க்க ஆரம்பித்தேன். எண்பதுகளின் திரையிசை என்றால் அது பெரும்பாலும் இளையராஜாவின் திரையிசைதான் என்பதுக்கேற்ப, இளையராஜாவின் ரசிக, ரசிகைகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். பெரும்பாலோர், தங்கள் உள்ளம் கவர்ந்த, அப்போதைய பிரபலமான பாடல்களை சுருதி விலகாமல் பேசிக் காண்பித்தனர்.
லொக்கேஷன்
திரைப்படம் எடுப்பது தொடர்பான எத்தனையோ வேலைகளில் முக்கியமானதும், சற்று சிரமமானதும் என்றால், அது லொக்கேஷன் பார்ப்பதுதான். அவுட்டோர் எனப்படும் வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வது என்பது ஒரு சுவாரஸ்ய அலைச்சல். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் படங்களுக்காக லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கிய பயணம், பிறகு நண்பர்களின் படங்களுக்காகத் தொடர்ந்தது. நண்பர்களுக்காக சுற்றியது போக, சென்ற மாதம் எனக்காக, எனது திரைப்படத்துக்கான வெளிப்புற இடங்களை தேர்வு செய்வதற்காக ‘லொக்கேஷன்’ பார்க்கச் சென்றிருந்தேன். மணப்பாடுக்குள் எங்கள் கார் நுழையும் போது, மின்சாரம் இல்லாமல் ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தெருக்களில் தத்தம் வீட்டு வாசல்களில் நாற்காலி போட்டு மணப்பாடுவாசிகள் உட்கார்ந்திருந்தனர். சட்டென்று வேறெந்த லோகத்துக்குள்ளோ பிரவேசிப்பது போல இருந்தது. பாலு ஒரு விளிம்புக்கு அழைத்துச் சென்றார். ‘அங்கெ பாருங்க. அந்த ஏரியாலதான் மணிஸார் செட் போட்டிருந்தாரு’. ஏற்கனவே இருந்த இருட்டுக்குள் மேலும் இருட்டாக இருந்தது. ‘அருமையா இருக்கு பாலு’ என்றேன். ‘இந்த வியூ பாருங்க. இங்கெதான் நான் ஷூட் பண்ணினேன்’ என்று வேறொரு கும்மிருட்டை காண்பித்தார். ‘அய்ய்யோ! இது அதவிட பிரமாதங்க’ என்றேன்.
மூப்பு
காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறதுதான். நான் பார்த்து பழகிய, பழகிப் போன உருவங்களில் மாற்றம் வரும்போது அதை சட்டென்று எதிர்கொள்ள முடியாமல் திணறித்தான் போகிறேன். வாத்தியாரைத் தொடர்ந்து என்னைத் திணறவைத்தது, எழுத்தாளர் ஜெயகாந்தனின் தோற்றம்.
சாமானியனின் முகம்
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கான கதாபாத்திரங்கள் உருவாவதை விட, கதாபாத்திரங்களுக்கான முகங்களை, மனிதர்களைத் தேடிப்பிடித்து நடிக்க வைக்கும் முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும், இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அத்திபூத்தாற் போல் எப்போதாவது, ஏதாவது ஓர் அதிசயம் நிகழாமல் இல்லை. அந்த அதிசயங்களில் கொஞ்சம் நேர்மை இருக்கும் பட்சத்தில், அதற்கான அங்கீகாரமும் தானாய்த் தேடி வந்து விடத்தான் செய்கிறது. தமிழ் கதாநாயகர்களின் வரிசையில் தற்போதைய அதிசயமாகத் திகழும் தனுஷ், ஏற்கனவே இங்கு நட்சத்திரமாகி சில வருடங்கள் ஆகின்றன. அவரது உடல்மொழி, மற்றும் முகபாவங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற விதமாக, யதார்த்த வாழ்க்கைக்கு வெகு அருகில் அவரைக் கொண்டு சென்று, சேவற்சண்டையில் பங்கேற்கும் ஓர் இளைஞனாக அவரை உருமாற்றி, சென்ற முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
கர்ணனுக்கு வழங்கியவர்கள்
‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன்.
நாறும்பூமாலை
ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.
நயினார்
காலையில் அடுக்களைக்குள் நுழையும் போதே, ‘எம்மா. நேரம் ஆயிட்டெ. இந்தா இப்பம் நயினார் வந்துருமெ’. அவசர அவசரமாக ஏழெட்டு தட்டுகள் இட்லி ஊற்றுவாள். வாசல் கேட்டைத் தாண்டி, தார்சா நடையில் ஏறி, பட்டாசல் வழியாக, மானவெளியில் வந்து நின்று அடுக்களைப் பக்கம் நின்று நயினார், அம்மாவைத் தேடும் போது சிலசமயம் அம்மா ஒளிந்து கொள்வதுண்டு. தும்பிக்கையை அடுக்களைக்குள் நுழைத்து, நயினார் அங்குமிங்குமாக தடவித் துழாவி அம்மாவைத் தேடும் போது, பாகன் உட்பட நாங்கள் அனைவரும் சிரித்தபடி அருகில் நிற்போம்.
விகடனிலிருந்து கிழக்கு வரை . . .
‘கிழக்கு’ ஸ்டாலை நெருங்கும் போது தூரத்திலேயே ஒரே ஒரு நாற்காலி போட்டு சாதாரண மனிதர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்ததால், பிரசன்னா அங்கில்லை என்பது உறுதியானது. வழக்கமாக பிரசன்னா மூன்று, நான்கு நாற்காலிகளின் வளைந்த கால்கள் கதற கதற அதன் மீது பரந்து விரிந்து நிறைந்திருப்பார். உள்ளே சென்று புத்தகங்களை நோட்டமிட்டேன். அங்கும் சிலர் கண்டு கொண்டார்கள். ‘ஸார், எனக்கும் திருநவேலிதான். கீளப்புதுத்தெரு. எங்க அக்காமகன் ஒங்கள பாக்கணும்ங்கான்’. ஒரு சின்னப்பையன் என்னைப் பார்த்துத் தயங்கிச் சிரித்தான். எட்டாம் கிளாஸ் படிப்பானாக இருக்கும். அவன் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற செய்தியை கொஞ்சம் கூட நம்பாமலேயே அவர்களிடம் சிலநிமிடங்கள் பேசினேன்.
மாங்குலை இல்லாத கல்யாணம்
‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்க விரும்புவதாகவும், அதற்காக என்னுடைய கைபேசி எண்ணை லலிதாராம் கேட்பதாகவும் சேதுபதியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. ‘தாராளமாக எண்ணைக் கொடுங்கள்’ என்று சேதுபதிக்கு பதில் அனுப்புவதற்குள், ‘லலிதாராமுக்கு ஒன்னோட மொபைல் நம்பர குடுத்திருக்கேன்’ என்று ‘பாட்டையா’ பாரதி மணியிடமிருந்து தகவல் வந்தது. சிறிது நேரத்திலேயே அழைப்பும் வந்தது. ‘வணக்கம் ஸார். நான் லலிதாராம் பேசுறேன்’. மனதோரத்தில் ரகசியமாக ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து போகிற மாதிரி ‘லலிதாராம்’ என்ற ஆண்குரல் என்னிடத்தில் பேசியது.
காதலர் பூங்கா
தொடர்ந்து நாங்கள் அந்தப் பூங்காவில் ‘Walking’ போனாலும், எங்கள் இருவரின் உடம்பும் இளைக்காமல் போனதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கு நான்கே நான்கு முறை மட்டும் நாங்கள் அந்தப் பூங்காவுக்குச் சென்றது மட்டும் காரணமில்லை. உட்கார இடம் தேடி அந்தப் பூங்காவில் நாங்கள் அலையும் நேரம் மட்டுமே எங்கள் ‘Walking’ அமையும்.
காந்திமதியின் தாயார்
அம்மாவின் சமையலை ஊரே மெச்சினாலும் அம்மா என்னவோ ஆச்சியின் சமையலுக்கு முன்னால் தன்னுடையது ஒன்றுமேயில்லை என்பாள். அவளுக்கு தன் தாயார் வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பதார்த்தமும் அவ்வளவு ருசியை அளித்தவை. ‘வெறும் புளித்தண்ணி வச்சாலும் எங்க அம்ம கைமணமே மணம்’. மகள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் போது, அவளுக்குப் பிடித்த ’கத்திரிக்காய் கொத்சு’ செய்து, சோற்றுடன் பிசைந்து சின்னக் குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல் ஆசைஆசையாக ஆச்சி ஊட்டி விட்டதைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுத் தள்ளி வந்து அழுதேன்.
ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்
‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தை திருநெல்வேலியின் ‘சிவசக்தி’ தியேட்டரில் ஒரு மாலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு முன்புவரை அந்தத் திரைப்படத்தின் மேல் எனக்கிருந்த ஒரே ஈர்ப்பு, மோகன்லாலும், வயல்கள் சூழ்ந்த ‘சிவசக்தி’ திரையரங்கின் திறந்து கிடக்கும் கதவுகளைத் தாண்டி வந்து நம்மை வருடும் மாலைநேரக் காற்றும்தான். ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய விறுவிறுப்பான அம்சங்களுடன் கூடிய கதையை சங்கீதப் பின்னணியில் அமைத்து லோகிததாஸ் எழுதியிருந்த திரைக்கதைக்கு மோகன்லாலுடன் இணைந்து நெடுமுடி வேணு, திக்குரிசி சுகுமாரன் நாயர், சுகுமாரி,….போன்றோர் வலு சேர்த்திருந்தார்கள் என்றாலும், ’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தின் ஆதார ஸ்ருதி என்னவோ அதன் இசையமைப்பாளர், அமரர் ரவீந்திரன் அவர்கள்தான்.
செண்பகத்தக்காவின் குரல்
தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘இதயம் போகுதே’, ‘அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.
கொலு
பி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.
உயரம் குறைவாக உள்ள வேட்டி
என் முழங்கை உயரமே இருக்கும் நண்பன் சந்திரஹாசன் எப்போதுமே வேட்டிதான் கட்டுகிறான். ‘இவ்வளவு கட்டையா இருந்துட்டு எப்படில வேட்டி கட்டுதெ?’ என்று கேட்டால், ‘அத ஏன் கேக்கெ? சுருட்டி சுருட்டி வயித்துப் பக்கத்துல ஒரு பெரிய பந்து கணக்கால்லா சவம் வீங்கிட்டு இருக்கு. நாளுபூரா பிள்ள உண்டாயிருக்கிறவ மாரிதான் வயித்தத் தள்ளிட்டு நடமாடுதென்’.
சித்தூர் தென்கரை மகாராஜாவும், நெல்லையப்பரும்
காந்திமதியம்மன் சந்நிதியின் வாசலில் பன்னிருதிருமுறை அடியார்கள் உடம்பு முழுக்க திருநீறும், மார்பு முழுக்க ருத்திராட்சங்களுமாக, தத்தம் வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான ஆச்சிகளும், நடுத்தர வயதுப் பெண்களும் தேவார, திருவாசகப் புத்தகங்கள், சின்னத் தூக்குச்சட்டி, தீப்பெட்டி, பூ, கூடை சகிதம் நடைவாசலில் காத்து நின்றனர். ‘சட்டைய கெளட்டிருங்க சித்தப்பா’. மீனாட்சியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தேன். நடை திறந்து கோயிலுக்குள் நுழையவும், பள்ளிக்கூடம் மணியடித்தவுடன் வெளியே ஓடிவரும் சிறுபிள்ளைகளின் உற்சாகக் குரலுக்கு இணையாக, ‘நம பார்வதி பதயே’ என்று ஒரு அடியார் சத்தமெழுப்ப, கூட்டத்தோடு கூட்டமாக நானும் மனதுக்குள் ஹரஹர மஹாதேவா’ என்றபடியே உள்ளே நுழைந்தேன்.
பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை
பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டு அந்த வாத்தியத்தை திரையிசையில் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். திரையிசையில் வாசிக்கும் பல வாத்தியக்கலைஞர்கள் ஒப்பற்ற மேதைகள். அவர்களில் ஒருவர் முப்பது வருடங்களாகத் தமிழ்த்திரையிசையில் ஷெனாய் வாசித்து வரும் பண்டிட் பாலேஷ். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர். சாலிகிராமத்தில் என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரம்தான் பாலேஷின் வீடு. அவ்வப்போது சாலிகிராமத்து வீதிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்வதுண்டு. பார்க்கும்போதெல்லாம், இருவரும் சாவகாசமாக அமர்ந்து இசை குறித்து நிறைய பேச வேண்டும் என்று சொல்லிக் கொள்வோம். பல நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் ஒருநாள் அது அமைந்தது. அவரது வீட்டின் மாடியிலுள்ள ஓர் அறையில் அவரது குருமார்களின் புகைப்படங்களுக்கு அருகே அமர்ந்து பேசத் தொடங்கினோம். பாலேஷின் மகன் கிருஷ்ணா பாலேஷும் உடனிருந்தார்.
அண்ணன்களின் பாடகன்
வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான்.
பிறந்த நாள்
குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத்தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்று கொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப்பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒருசிலர் கையில் கிலுகிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள்.
சந்திரஹாசன்
சந்திரஹாஸனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன்னை விட அதிகம் படித்த யாரையுமே, அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், ‘ஸார்’ என்றே அழைப்பான். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் பண்ணியிருந்தவர்களும் அவனுக்கு ஸார்தான்.எப்படியோ தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.ஸி வரை வந்துவிட்ட சந்திரஹாஸன், நாற்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தும் எஸ்.எஸ்.எல்.ஸியில் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறித்து பெரிதும் வருந்தினான். ஒரு பாடத்தில் முப்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்தான். ஆனால் மொத்த மதிப்பெண்களும் நாற்பத்தைந்து என்றால் கவர்னரே கையெழுத்திட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மெதுவாக எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தோம்.
பந்தி
கல்யாணவீட்டுப் பந்தியில் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கல்யாண வீட்டுக்காரர்களேதான் கவனித்துக் கொள்வார்கள். அதை ஒரு கடைமையாகச் செய்யாமல் உரிமையுடன் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடியாடி வேலை செய்வதை மனசும், உடம்பும் நிறைந்து மணமக்களின் பெற்றவர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். ‘நம்ம கோமு கல்யாணத்துக்கு வேலாயுதம் மாப்ளே அலைஞ்ச அலைச்சல மறக்க முடியுமா? கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான்!’
சின்னஞ்சிறு கிளியே
அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.
இசைமேதையின் புகைப்படம்
பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ராமனாதனின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார். ‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’ நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
துப்பு
ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார்.
கோட்டி
ஒருமுறை வந்தால் அதற்கு பிறகு அவள் எப்போது வருவாள் என்று சொல்லமுடியாது. அடிக்கடி வருவதில்லையென்பதால், சிலசமயம் ‘எங்கெ அந்த மூதிய ஆளயே காணோம்?’ என்று ஆச்சியே கேட்கும் அளவுக்கு இடைவெளி விட்டுதான் வருவாள். இடைவெளி ஒருமுறை நீண்டு, பிறகு அவள் வரவேயில்லை. ரயில் தண்டவாளத்தையொட்டி பீடி குடித்தபடியே அவள் நடந்து போனதை பார்த்ததாக குருக்களையா தாத்தா சொன்னதுதான் அந்த கோட்டிக்காரி பற்றி நாங்கள் கேட்ட கடைசி தகவல்.
ஆய்புவன்
அத ஏம்ணே கேக்கிய! குஞ்சண்ணன் கூடல்லாம் ஒரு எடத்துக்கு போலாமா? அங்கெ சாமி சன்னதில உள்ள மாமிங்கள்லாம் டி.வி. பாக்க வந்திருந்தாங்க பாத்துக்கிடுங்க. பந்த பௌலருங்க அங்கெ வச்சு தேய்க்கவும் குஞ்சண்ணன் என்ட்ட ‘எல, எங்கெ தேய்க்கனுவொ பாரு’ன்னு சொல்லிட்டு சத்தம் போட்டு ஒரே சிரிப்பு. நந்தி பட்டர்மாமா காதுல விளுந்துட்டு. எந்திருச்சு வெளியெ போங்கலன்னு ஏசி போட்டாரு. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணெ.
நட்சத்திரம் பார்த்தல்
லூஸ் மோகன், குண்டு கல்யாணம், பிந்துகோஷ், ராக்கெட் ராமனாதன் போன்ற நடிகர்களைப் பார்க்க முடிந்தது. வருடாவருடம் விழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் மேற்குறிப்பிட்ட நடிகர்கள்தான். இத்தனை நட்சந்திரங்களுடன் பழக்கம் உள்ள கர்வம் கொஞ்சமும் இல்லாமல் வேலாயுதம் அண்ணன் நெல்லைவாழ் மக்களுடன் எளிமையாகவே பழகி வந்தார்.
இருப்பு
அண்ணனின் மாமனாருக்கும் அவரது அண்ணனுக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். இறக்கும் தறுவாயில் தன் அண்ணன் இருக்கும் போது எழுபத்திரண்டு வயது தம்பி சொன்னாராம். ‘நீ தைரியமா முன்னால போ. நான் பின்னாலேயே வாரேன்’ என்று. கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் பெருக சிறிது நேரத்திலேயே காலமாகிவிட்டாராம் பெரியவர்.
உ.சு.வா
உரிமைக்குரல் பார்க்க காலையில் அப்ஸரா பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படிக்கும் போதே முடிவு செய்து விடுவான். ‘என்னைக்கு பரிட்சைக்கு போகாம படகோட்டிக்கு போனானோ, அன்னைக்கே இந்த தாயளி வெளங்க மாட்டான்னு நான் முடிவு பண்ணிட்டெம்லா?’ தனது தகப்பனார் லெட்சுமண பிள்ளையின் வழக்கமான ஏச்சுக்கள் கபாலி மாமாவின் காதுகளில் மோதி மறுபடியும் பத்திரமாக அவரிடமே திரும்பிச் சென்றன. கபாலி மாமா நாளுக்கு நாள் எம்.ஜி.ஆரிடம் நெருங்கிக் கொண்டேதான் இருந்தான்.
ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்
‘குட்டை’ ஆச்சிக்கான பெயர்க் காரணம் அவளது உயரத்தைப் பார்த்தாலே நமக்கு தெரியும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னை விட குட்டையாக இருந்தாள். ‘ஏச்சி, பாத்தியா! நான் ஒன்ன விட ஒயரம்’ என்பேன். ‘இருக்கட்டுமெய்யா. இதுலதான் பேத்தியாமாருகளுக்கு சந்தோசம். நீ பொறந்த ஒடனெ பார்வதிம்மா என் கைலதானெ ஒன்னய குடுத்தா’ என்று சொல்லி எட்டி என் கன்னத்தைப் பிடித்து முத்திக் கொள்வாள்.