ஒளிக்கடமை

நசீம் தான் என்னை அறைக்கு கொண்டு வந்து விட்டார். நீண்ட அரை மணி நேரப் பயணம். அவர் காலமான அவருடைய மூத்த மகள் பற்றி அப்பொழுது தான் பேச ஆரம்பித்தார்.

“நாங்கள் முதலில் டௌன் டவுன் அருகில் தான் இருந்தோம். ஆனால் என் மூத்த மகளுக்காக நாங்கள் நகர எல்லைக்கு மாற வேண்டியிருந்தது மற்றவர்களுக்கு தொங்கரவு இல்லாமல் இருக்க”

“அவளுக்கு கண் சரியாக தெரியாது, காதும் அப்படியே. எங்களை அவள் முழுமையாக பார்த்திருக்கிறாளா என்று தெரியாது. தீவிரமான கோபத்தில் இருந்த அவளை ஆசுவாசப் படுத்த அவளுக்கு மிகப்பெரிய ஒளிப் பிம்பகளையும் இரைச்சலான ஒலியையும் சேர்ப்பிக்க வேண்டி இருந்தது. 35mm திரை, மிக அதிக வோல்ட்ஸ்சில் அதிரும் போஸ் ஸ்பீக்கர்கள் மற்றவர்களை பாதிக்கு மில்லயா”

சுழலில் மிதக்கும் பூ

தேர்வன்று ராமர் மிகவும்பதட்டமாக இருந்தான். இவள், “எனக்கும்தான் மறந்துட்டு எல்லாம். சும்மா குழம்பாத,” என்று கருப்புக்கயிறைக் கையில் கட்டினாள். பக்கத்திலிருந்தவன், “நீ இந்தமாதிரி ஏதாவது ஆரம்பிச்சா கைநிறைய காசு பாக்கலாம்…அவன் பண்ணினதுக்கு இன்னும் இருக்கு,” என்றான்.

அவனிடம்,“கூட்டமான பஸ்சுக்கு காத்துக்கிட்டுருக்கவன் தானே நீ..” என்றாள். “வெள்ளப்பூனைக்குட்டி மாறி இருந்துக்கிட்டு புலின்னு நெனப்பு,” என்றவுடன் “பூனக்கி புலியத் தெரியுமோ இல்லையோ பால் எதுன்னு நல்லா தெரியும்,” என்றவுடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

ஆடிப்பாவை

“மூளை வெறும் உயிர்க் கருவி மட்டும் தானா?”
‘வேறு என்னவாக இருக்க முடியும்?’
“மனம், விழிப்புணர்வு, ஆழ்நிலை, ஆத்மா இவையெல்லாமே மூளையில் தான் இருக்கிறதா?’

‘புல் ஷிட். ஆத்மா என்றெல்லாம் கிடையாது.மனம் என்பது மூளை கொள்ளும் எண்ணங்கள்.விழித்திருக்கையில் நீர் உணர்வுடன் இருக்கிறீர். உறங்குகையில் உமது மூளை பல பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிறு எச்சரிக்கையுடன் உம்மைக் காக்கிறது. அதை நீர் ஆழ்நிலை என்று சொல்கிறீர்.’

உடன்வரும் நிழல்

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

பார்வை

சுஜாதா இந்த முறை சற்று எரிச்சலாகி விட்டாள். “இருக்குற வேலையை விட்டுட்டு உங்க கேபினுக்கு வந்து ஜோக் பண்ற நிலைமையில நான் இல்லை திவாகர். ஐ யம் ப்ரெட்டி சீரியஸ்.”
“நானும் சீரியசாத்தான் கேக்குறேன். அரை நாள்ல முடிக்க வேண்டிய வேலைய இரண்டு நாள் எடுத்து முடிச்சீங்க. இன்னைக்கு முடிக்க வேண்டிய வேலை இதுவரைக்கும் பெண்டிங்லதான் இருக்கு. இதப்பத்தி இதுவரைக்கும் நான் ஏதும் சொன்னேனாங்க? ஏற்கனவே ஒருத்தர் கல்யாணம்ன்னு லீவ்ல போயிருக்கார். அவருக்கு பதிலா நான், அவர் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன். நீங்க நாளைக்கு லீவு சொல்றீங்க. என் பொஸிசன்ல இருந்து நீங்க கொஞ்சம் யோசிங்க மேடம்” கடைசியாக மேடம் என்ற வார்த்தையில் கொடுக்கப்பட்ட அழுத்தம் சுஜாதாவை உறுத்தியது.

ஸ்பென்சர்

வேளாங்கண்ணிக்கு நடந்து வரேண்ணு வேண்டிக்க. சித்தூர்ல நாட்டு வைத்தியம் பாக்குறாங்க சாரப்பாம்பு எண்ணெய உருவி விட்டா நடந்திடுவான், பெங்களூர்ல காந்த சிகிச்சை தராங்க, மேக்னட் வச்சி ரெண்டு காலும் நடக்காத ஒரு அம்மாவுக்கு சரியாயிடுச்சி. மருதூர்ல இருக்குற சாமியாரு… நாகூர் தர்காவுல சரியாயிடும்.,கேரளாவுல மண்ணுல நாள் பூரா ஒக்கார வச்சி எண்ணத்தடவி சரி பண்ணிடறாங்க. எழுப்புதல் கூட்டங்கள். சுகமளிக்கும் பிரார்த்தனைகள். அக்குபஞ்சர்ல ஊசி குத்துனா சரியாயிடும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், சோசியங்கள், ஆருடங்கள், கணிகாரர்கள்,.,தேவ ஊழியர்கள். ,இயற்கை மருத்துவர்கள், பழம் மட்டுமே சாப்பிடக் குடுங்க. எத்தனை எத்தனை ஆலோசனைகள்… பரிகாரங்கள்.. வழிகாட்டுதல்கள்… எல்லா இடங்களுக்கும் அவனைச் சுமந்து அலைந்தார்கள்.எதற்கும் இளகாத கரும்பாறையல்லவா வாழ்வு

சக்யை

அவனுடன் குதிரையில் இரண்டாம் மதிலைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். குளம்படிகளின் ஓசை முரசொலியாய் அதிர்ந்தது. நிமிர்கையில் பிணந்திண்ணிகள் கார்த்திகைக் கோபுரமதிலில் சிறகு குறுக்கி அமர்ந்திருந்தன. காற்றில் நிணவீச்சம் ஏறியிருந்தது.

மூன்றாம் மதிலின் தவிட்டறையையடுத்த, கழுத்து மணியோசையும், மூச்சுச் செருமலுமில்லா தொழுவைக் கடக்கையில் மூச்சையிழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

புத்தகப்பை

சின்னையாத் தோப்பு வழியாகச் செல்வது சற்று கடினமான வேலை. பள்ளியின் கழிவறை சுவரில் ஏறி அந்தப் பக்கமாகக் குதித்தால் சின்னையாத் தோப்பு. அதை தாண்டினால் வரும் மாந்தோப்புக்குள் காவக்காரன் கண்ணில் அகப்படாமல் சென்றால் செந்துறை விளக்கை அடைந்துவிடலாம். அதற்கு முன்னர் ஆசிரியர் கண்ணில் மாட்டாமல் சுவர் ஏற வேண்டும். என் மனம் சின்னையாத் தோப்பு வழியை தேர்ந்தெடுத்தால் அன்று நான் படிப்பாளியாக மாறி விடுவேன். ‘பள்ளி முடிந்ததும் மரத்தடியில் அமர்ந்து படிப்பது போல சிறிது நேரம் பாவ்லா செய்ய வேண்டும். பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் சென்றவுடன், மாணவர்கள் யாரும் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் கண்ணிலும் சிக்காமல் புத்தகப்பையுடன் கழிவறை நோக்கி செல்ல வேண்டும். ஒண்ணுக்கு இருக்கும் பகுதியில் யாரும் இல்லையென்றால் சிறிது கூட யோசிக்காமல் சட்டென ஏறி குதித்துவிட வேண்டும்

பரண்

வளர்ந்து விட்டாள். வீட்டில் தங்கி கல்லூரியில் இலக்கியம் படித்து கொண்டிருக்கிறாள். இரட்டை சடையில் ஒன்றை, ஆள் காட்டி விரலில் சுற்றிக் கொண்டு, பதினெண் வயதுக்குரிய சதை பூரிப்போடு, காலை இளவொளியில் அழகாக இருந்தாள். அப்பாவை போல் மாநிறம். வலது கண்ணோரத்தில் அந்த சிறு வடுவை தடவிக் கொண்டு பேசுவாள். இளைஞர்கள் கிறங்கக் கூடும், ஆனால் சிறு வயதில் என்னை வெகு நாள் மிகவும் வதைத்த வடு. அவளுடன் பேசும் பொழுது, அவளை நேருக்கு நேர் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்து பேச செய்ததே இந்த வடுதான். “நான் மத்தியானத்துக்கு மேல ஃப்ரண்ட்ஸெ பாக்க போகணும். இப்பவே இந்த வேலைய முடிக்கலாம். அந்த போளி, சித்தி எனக்கு மட்டும் தான் செஞ்சு வச்சுட்டு போயிருக்கா… யாராவது கைய வச்சீங்க…” அண்ணா வீட்டுக்கு வந்தாலும் அதிகம் இருப்பதில்லை. வெளியிலயே தான் இருப்பான். வீட்டில் இருந்தாலும் ஒன்றிரண்டு சொற்றொடர்கள் மற்றும் சித்தியின் போளி மட்டும்தான். காலையில் இருந்து, விடாமல் மழை. அதனால் அதிசயமாக வீட்டில் இருக்கின்றான்.

அ .முத்துலிங்கம் படைப்புகள்

நான் பல்வேறு கால கட்டங்களில் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்று படிக்கும் ஒரு கதை ‘பூமாதேவி’. தனது ஒவ்வொரு பருவத்திலும், அமெரிக்க பண்பாட்டு சூழலில் தனக்கான உலகை மகள் கட்டமைத்துக்கொண்டிருக்கும் காலத்திலெல்லாம் அதனை விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்க்கமுடிந்த தந்தையால், புராணங்களை அமெரிக்க நடைமுறை வாழ்க்கையின் உதாரணத்திலிருந்து தன்னால் இனிமேல் தன மகளுக்கு புரியவைக்க முடியாது என்று உணரும் நொடியில் அவளை இழந்துவிட்டதாக நினைக்கிறார். தனது மண் சார்ந்த, பண்பாடு சார்ந்த புராணம் அடுத்ததலைமுறைக்கு தொடர்பில்லாமல் போவது ஒரு நீண்ட நெடிய பண்பாட்டு சங்கிலியில் ஒரு தொடர்ச்சியை தன்னால் ஏற்படுத்தமுடியாமல் போனதால் ஏற்பட்ட இயலாமையின் வலியல்லவா அது?

முத்துலிங்கத்தின் நாட்குறிப்புக்கள்

தன் வரலாற்றையும் தான் அறிந்த வேறொருவரது வரலாற்றையும் புனைவுப்பாணியில் நாவலாக்கித் தரும் போக்கும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் செல்வாக்குப்பெற்று வருகிறது. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப்பெற்றிருப்பது திரு அ முத்துலிங்கம் அவர்களின் ’உண்மை கலந்த நாட்குறிப்புக்கள். ’உண்மை கலந்த’ என்னும் நூலின் முன்னொட்டே இது ஒரு தன் வரலாறு என்னும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. ’உண்மையோடு பின்னிப் பிணைந்திருக்கும் அந்த நாட்குறிப்புக்களைத் தான் கையாண்டிருக்கும் உத்திகளாலும் நுட்பங்களாலும் செழுமைப்படுத்திப் புனைவு இலக்கியமாக அளித்திருக்கிறார் முத்துலிங்கம்.

எல்லைகள் கடந்த எழுத்து

சென்ற ஆண்டு ரெய்த் உரைகளில் க்வாமி அந்தோணி அப்பையா ‘பிழையான அடையாளங்கள்’ எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றி இருக்கிறார். மனிதன் எல்லாவற்றிலும் ஒரேயொரு அடையாளத்தை மட்டுமே பேணியாக முடியும் என்பதில்லை என கருதுகிறார். ஒரே நேரத்தில் தான் ஒரு கானாக்காரன்னாகவும், ஆங்கிலேயனாகவும், அமெரிக்கனாகவும் இருக்க எந்த தடையும் இல்லை என்கிறார். அடையாள சிக்கல்களுக்கு தீர்வாக உலகம் தழுவிய மானுடத்தை முன்வைக்கும் ‘காஸ்மோபோலிடனிசத்தை’ முன்வைக்கிறார். ‘அமேரிக்கா’ காஸ்மோபோலிடன்களின் கனவு என கூறலாம். முத்துலிங்கத்தின் இலங்கைகாரி காணும் ‘அமெரிக்க’ கனவும் இது தான்.

ஆட்டுப்பால் புட்டு

அ.முத்துலிங்கத்திடம் கவர்ந்தவிடயம் என்று மூன்றைச் சொல்லுவேன். புறவய சித்தரிப்பில் புகுத்தும் கட்டுக்கடங்காத தகவல்களின்/தரவுகளின் எண்ணிக்கை. தேய் வழக்கற்ற, கற்பனையில் அவ்வளவு இலகுவில் எட்டாத உவமைகள். மானுட துன்பத்தை மிக இலகுவாக வேடிக்கையாகச் சொல்லி நகர்ந்துவிடும் வித்தை. இந்த மூன்று விடயங்களும் அவரது அனைத்துச் சிறுகதைகளிலும் இருக்கும். தன்கதைகள் ஊடாக அந்தரங்கமாக அவர்தேடி கண்டடையும் உண்மையென்பது சின்ன தருணத்தின் விரித்தெடுத்த வடிவமாக இருக்கும். அதற்குள் சுழலும் ஏராளமான புறவய சித்தரிப்புகள் கதையை சுவாரசியப் படுத்தும்; வாசிப்பின் இன்பத்தைத் தக்கவைத்துக்கொண்டேயிருக்கும்.

வர்ணனையின் ரசவாதம்

இவரது வர்ணனைகளில் மெல்லிய கேலி, கிண்டல்கள் விரவி இருக்கின்றன. ‘எழுத்தை எழுதிவிட்டு அதைக்கொடியில் காயப்போடுவதுதான் சமஸ்கிருதம் என்று கனகசுந்தரி கேலியாகச் சொல்வாள்’ [கனகசுந்தரி] என்பது ஓர் எடுத்துக்காட்டு. வெறும் கேலியாக மட்டும் இல்லாமல், ‘இலங்கை தேசியகீதத்தை நானும் சாவித்திரியும் சேர்ந்து பாடுவதாகத் திட்டமிட்டு ‘மன்மத ராசா மன்மத ராசா’ என்று முதல் இரண்டு வரிகளைப்பாடினோம். நிறைய அகதிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் தேசியகீதத்தைப் போலவே அது ஒலித்தது. ஒருவருமே கண்டுபிடிக்கவில்லை ஆனால் கைதட்டினார்கள்’ [மூளையால் யோசி] என்று ஒரு கசப்பான உண்மையைக் கேலியாக வெளிப்படுத்தும் அம்சமும் அதில் இருக்கிறது..

அயலகத்து கொம்புத் தேனீ

போர், மேற்கத்தைய கலாச்சரம், வாழ்வு முறை, காதல், பிரிவு, மணம், மணமுறிவு, இச்சைப்படி வாழும் முறை உள்ளிட்ட பலவும் அடங்கியவை. ஆகவே அங்கு நிலவும் அவர்களுக்கான சாதாரண ஒரு விஷயம் கூட நமக்கு புதிதாய் வியப்பாய் வித்தியாசமாய் இருக்கக்கூடும். அப்படியெனில் இவரது எழுத்துக்களை எந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்? வேறு வகையில் சொல்வதானால் இவரது எழுத்து எழுதப்பட்ட களத்தில் உள்ளவர்களுக்கு சாதாரண கதையாக இருந்துவிடுமா ? இதற்கான விடையை அவரை வாசிப்பவர்கள் மட்டுமே கண்டு கொள்ள முடியும். அதே சமயத்தில் இப்படியான வகை கேள்விக்கு உட்படுத்த முடியும்படியான தமிழ் எழுத்தாளர்கள் நம்மிடம் மிக அதிகம் இல்லை என்பதில்தான் இவரது பங்களிப்பின் இடம் உள்ளது.

கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன்

முத்துலிங்கம் ஈழத்து அரசியல் பற்றியும் தமிழர்கள் பற்றியும் காத்திரமான எடுத்துக்கூறலைச் செய்யவில்லை என இலக்கியவாதிகள் சிலர் கூறுவதைக் காணமுடிகிறது. வெளிப்டையாகக் கூறுவதில் இருந்து ஒதுங்கிவிட்டு சில இடங்களில் மறைமுகமாகக் கூறியுமுள்ளார். (அதன் வலி எனக்குத் தெரியும் அதனை காசாக்க என்க்கு விருப்பமல்ல” என்று பாலுமகேந்திரா ஒருமுறை சொல்லியுள்ளதை இங்கு ஞாபகமூட்டலாம்.) இச்சிறுகதையில் அதற்கான ஓரிடம் இருப்பதாகக் கருதுகிறேன்.

அ.முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம். நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.

புதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர்

கலையாக்கத்தை ஒரு தொழில்நுட்பம்போல பயின்று பயின்று தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார் முத்துலிங்கம். இருபதாண்டுகளுக்கும் மேல் பழகிப்பழகி இன்று அவருக்கு வசப்பட்டுவிட்ட ஒன்றாக மிளிர்கிறது அந்தக் கலை. இன்று எந்த அபூர்வமான தகவலையும் அவர் அழகானதொரு கதையாக மாற்றியமைப்பதில் வல்லவராக இருக்கிறார். தகவலையும் கலையையும் கச்சிதமான முறையில் ஒன்றிணைத்து புதிதை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளில் இன்றைய காலகட்டத்தில் முத்துலிங்கமே முதன்மையான கலைஞர்.

பிரிக்கப்படாது – அந்தக் கடிதம்

சில வருடங்கள் ஓடிற்று. ஒரு வரி செய்தியாய் அவர்களின் இருப்பு அறியவரும். எனக்கும் வயதாகி இலக்கியம் தாண்டி, குடும்பம் ஏறிய ஒரு கட்டத்தில் அழைப்பு வந்தது. அவர்களும் மும்பைக்கே குடிபெயர்ந்திருந்தார்கள். அதற்குப்பின் அன்னம்மா ஒரு சில எழுத்தாளர் பெருந்தலைகள், தலை சாய்த்தபின் கூப்பிட்டனுப்புவார். நான் போவதில்லை. ஒரு மெலோ டிராமாவிற்கு மனம் தயாராயில்லை. இலக்கிய இடத்தை மெல்ல ஆன்மீகம் பிடித்துக் கொண்டது. (நன்றி: மாயாதீத சுவாமி)

இருப்பு

”ந்யாம ச்சோமா தயாரி” ஆங்கில எழுத்துக்கள் “8 புளூஸ் ஹோட்டல்”-ன் தலையில் பச்சை, சிவப்பு நியானில் மாறி மாறி மின்னின. ந்யாம ச்சோமா என்பது சுட்ட இறைச்சி. வெறும் உப்பு மட்டும் தூவி தீயில் சுட்டு பரிமாறுவார்கள். மிகப் பிரசித்தம். பெரும்பாலும் வெள்ளாட்டிறைச்சி. மாடும், பன்றியும் உண்டு. பசு இறைச்சிக்கென்று ரசிகர் கூட்டமுண்டு. கோயம்புத்தூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரி மாதிரி இங்கு கென்யாவில் புட்ச்சரிகளும் ந்யாமா ச்சோமா கடைகளும். ரவி காரை நிறுத்தி கதவு திறந்து இறங்கியதும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். ரோஸூம், எசெகியேலும் ஜான், ஜோயலோடு ஏற்கனவே அங்கு வந்து வாசலில் காத்திருந்தார்கள். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, “தயாரி” எழுத்துக்களை பார்த்தவாறு…

கலையும், இயலும்

நாங்கள் அப்போது குடியிருந்த வாடகை வீடு ரொம்ப வாகான ஒரு இடத்தில் இருந்தது. கடை,கண்ணி, பள்ளி, அப்பாவின் அலுவலகம் எல்லாம் பக்கத்தில் இருந்ததைத் தவிர இன்னுமொரு பெரிய சாதகமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது வீட்டுக்குள்ளிருந்தவாறே , வெளியில் நடக்கிற வித விதமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக தெருவின் முனையில், நாலு தெருவும் கூடுகிற இடத்தைப் பார்த்தாற் போல் இருந்தது. அங்கே, அரசியல் கட்சிக் கூட்டங்கள், பாவிகளை அழைத்து ரட்சிக்கிற கூட்டங்கள், கம்பி மேல் நடக்கிற கழைக்கூத்தாடி வித்தைகள், அப்புறம் எங்கள் தெருவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த ஒரு பையனின் சினிமா பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் …

திருமதி

அந்த இன்ஸ்பெக்டர் கிராதகன். அந்தப் பெண் மலங்க மலங்க விழிக்கிறது… அவளை நிற்கவைத்து என்னவெல்லாம் கேட்கிறான். அவருக்கு வேறபெண் யார்கூடயாவது தொடர்பு உண்டா?… என்கிறான். “உனக்கு?…” என்று அடுத்த கேள்வி. யார்கிட்டயாவது கடன் வாங்கித் திருப்பித் தராமல் வீட்டாண்ட தகராறு எதும் நடந்ததா? கெட்ட சகவாசம் எதும் உண்டா? யார் மேலயாவது சந்தேகப் படறீங்களா? உங்க வீட்ல நகை நட்டு எல்லாம் பத்திரமா இருக்கா? அதை அவன் எடுத்துக்கிட்டுப் போயிட்டானா… சிலருக்கு சில ஆட்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடுகிறது. இன்ஸ்பெக்டர் கன்னாபின்னாவென்று கற்பனைகள் செய்தான். “என்னய்யா, இந்தாளு பத்தாம் தேதியில யிருந்து காணம்… அதே தேதியில பக்கத்து ஊர்ல யாரும் பொம்பளை காணாமல் போயிருக்கான்னு விசாரிச்சிப் பாரு” …

பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்

நேயர் விருப்பம் போல “சாலா..கருப்பு நிலா பாடேன்..சாலா முத்தான முத்தல்லவோ பாடேன்” என ஒவ்வொருவராக பட்டியல் இட்டுகொண்டிருந்தார்கள். வள்ளி தூங்கினபாடில்லை. சிணுங்கி அழ துவங்கினாள். “அவளுக்கு அவ அய்யா பாடுனத்தான் தூக்கம்” என்றான் நானா. கால் நீட்டினால் சுவரிடிக்கும் அந்த வீட்டில், சம்மந்தியார்கள் மத்தியில் பாட அவருக்கும் சங்கட்டமாக இருந்தது. கொஞ்சிக்கொண்டு தூளியை அமைதியாக ஆட்டினாலும் அவள் தூங்காமல் ராங்கி செய்தாள். “சும்மா பாடுங்க அண்ணே” என்றாள் சம்மந்தியம்மா. அதே கட்டைக்குரலில் “ஆயர்பாடி மாளிகையில்..” என துவங்கி மூச்சிரைக்க பாடி முடிப்பதற்குள் வள்ளி உறங்கிவிட்டிருந்தாள்.

எண்ணிய எண்ணியாங்கு

கதிரும் சிரித்துக் கொண்டே கேப்டனைப் பார்த்து ” மாமா, நான் தொட்டேனு எனக்கு தெரியும், அங்க நின்னு ஆடி ஜெயிச்சாலும் தோக்கறத விட மோசமா பீல் பண்ணி இருப்பேன், உடு முப்பது ரன் தானே ,சதிசு தட்டிருவான், நிறைய ஓவர்ஸ் இருக்கு”.

கேப்டன் எரிச்சலுடன் ” வந்து சேர்றிங்க பார்றா எனக்குன்னு, டேய் வளத்தி ஒரு தம் குடு ” என்றான் சுரேசை பார்த்து.

தானிவத்தாரி

இருவரும் மெளனமாக அந்த சிமெண்ட் பெஞ்சில் காத்திருந்தோம். வெகுநேரமாக எதுவும் பேசிகொள்ளவில்லை. இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. கஷுமியின் முகத்தைப் பார்த்தேன். சலிப்பின் சுவடேயில்லை. எந்த நேரமும் அது நிகழும் என்பதுபோல் அமர்ந்திருந்தாள். ஐபோனில் பதிவு செய்வதற்காக விரல்கள் தயார்நிலையில் இருந்தது. நான் சலித்துபோய், நாம் நடக்கலாம் என்று சொல்லவாயெடுத்த அந்த நொடியில் எங்கிருந்தோ பறந்து வந்து எங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் அமர்ந்தது, அந்த உகியிசு குருவி. மேல்பகுதி முழுவதும் ஆலிவ் ப்ரவுன் நிறத்திலும், பஞ்சுபோன்ற உடலின் அடிப்பகுதி வெளுத்தும் இருந்தது. உட்கார்ந்தவுடன், தலையைச் சிலிர்த்து, உடலில் கொத்திகொண்டது. பிறகு சிறிய வாயை மெலிதாக திறந்து பாடுவதற்க்கு முன் குரலை சரிசெய்துக்கொள்ளும் தேர்ந்த பாடகனை போல் செருமி, க்யூ..க்யூ..க்யூகுயிக்யூ என்றது. ஒரு நீண்ட விசில் போல, ரயில் வண்டியின் கூவல் போல எழுந்து, பிறகு…

லட்சுமிராஜபுரம் அரண்மனை

கமலாம்பாபாயி அனைவரையும்விட அதிகாரம் மிக்கவளாக இருந்தாளாம். இராகேஜி ராவின் தர்மபத்தினி. அவள்மேல் காட்கே கொண்ட மோகம் அளவிடமுடியாதது. நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டுக் கவலை ஏதுமற்று இருக்குமளவிற்கு மோகம். ஸ்ரீ தளிகேசுவர சுவாமி கோயில் அங்கப் பிரதட்சிணம் செய்ய மாதந்தோறும் முப்பது சக்கரம் கொடுக்க வேண்டியது என்று ஹுசூர் கட்டளையிட்டிருந்தார். கமலாம்பா பாயியின் அத்தனை வரவுகளும் இலட்சுமிராஜபுரம் அரண்மனைக்குள் புகுந்துவிட்டனர். எல்லோருக்கும் உலுப்பை வழங்க மளமளவென உத்தரவாயிற்று. பத்தேசிங் ராகேஜிராவ் பக்கம் வீசிய அதிர்ஷ்டக்காற்று வெறும் காற்றல்ல சூறைக்காற்று.

ஆதவனின் ‘நிழல்கள்’ சிறுகதை பற்றி

நிழல்கள்’ பனி முடிந்து தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் காதலர்கள் இரவு வேளையில் நடந்து செல்லும்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் மூலம் தத்தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது மூலமும் அவற்றிற்கு ஒருவர் மீது ஒருவர் புரியும் எதிர்வினைகள் மூலமும் நகர்கிறது. கதாநாயகன் காதலியிடம் பூடகமாக எதையோ கோரிக்கொண்டே இருக்கிறான். அது உடலுறவா, முத்தமா, தழுவலா எதுவுமே தெரியவில்லை. எதுவாயிருந்தாலும் பஸ்கள் தொடர்ந்து வந்து போகும், போக்குவரத்து மிக்க சாலையில் அது எப்படி சாத்தியம் என்பது அவனுக்கு உறைப்பதில்லை. காதலிக்கும் இது பற்றிய பிரக்ஞை இருப்பது போலத் தோன்றவில்லை.

அகதி

என் சிறுவயது மிகவும் சந்தோஷம் நிரம்பிய நாட்களைக் கொண்டது. என் இன்றைய நிலைமைக்கு எவ்விதமான காரணத்தையும் அதில் தேடமுடியாது. சொல்லப்போனால் அந்த நினைவுகளில்லாமல் ஒரு நாளையும் என்னால் கடத்திவிட முடியாது. ரயில் டிப்போக்களில் இருள் வேளைகளில் திறந்திருக்கும் பெட்டிகளில் அடுக்கிவைக்கப்பட்ட சரக்கு மூட்டைகளுக்கு இடையே என்னைப் பொருத்திக்கொண்டு அந்த நினைவுகளை அசைபோடும் பல இரவுகள் உணவை மறக்க உதவியிருக்கின்றன. பதின்மவயது முடியும்வரை அன்னையின் கருப்பையைப் போல என்னைப் பாதுகாத்ததும் அவைதான். ப்ரிக் லேனுக்கு வந்த நாட்கள் முதலே கரித்துண்டும், வண்ணம் தோய்ந்த மரத்தூரிகையும்…

புகைப்படங்களின் கதைகள்

நாராயண் ராவ் திருநெல்வேலியில் தன் மூத்த மகனின் வீட்டில் தங்கி இருந்தார். மூத்தமகன் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார். அப்படிப் பார்த்தால் நாராயண் ராவ் தன் பேரன் வீட்டில் தங்கி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பேரனுக்கே ஐம்பது வயதுக்கு அருகில் இருக்கும் என்பதையும் இவரது மகன் கல்யாணத்துக்கு நிற்கிறான் என்பதையும் இப்போதைக்கு விட்டுவிடலாம். நாராயண் ராவின் மனைவி இறந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தன் மனைவியின் முகம் கூட சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வராது. அது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்

மற்றும் அவர்கள்

எதையெல்லாமோ நினைத்துக் கொண்டே வந்ததில், சீக்கிரம் கால்வாய்க்கரையோரம் படகு வீடுகளுக்கு அருகில் வந்து விட்டாற் போல் தோன்றியது.யார், யாருடைய வீடுகளையெல்லாமோ, இப்படி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே போகிறோமே, இது கொஞ்சம் அநாகரீகமோ என்று தோன்றினாலும், இந்த படகு வீடுகளைப் பார்ப்பதில் உள்ள புதுமை எனக்குப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று சொல்லிக் கொண்டாள். தவிர, அவர்கள் யாரும் இதைக் கவனிப்பதுமில்லையே என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். ஒரு படகு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாட்டு அறை தெரிந்தது. குட்டி சாப்பாட்டு மேஜை மேல் அழகிய வண்ணப் பூங்கொத்து.

சீடன்

மணிகண்டனை அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்திருந்தார்கள். வீடு விடாகச் சென்று தண்ணீர் கேன் போடும் வேலையைச் செய்துகொண்டிருந்தான். ஆளைப் பார்த்தால் இவனா தினமும் 100 நீர் கேனைத் தூக்குவான் என்பது போல ஒல்லியாக இருப்பான். “12 தோசை தின்னுட்டும் எந்திரிக்கமாட்டாங்க” என்று முருகேசனின் மனைவி ஒரு தடவை சொன்னபோது, “எங்க குடும்ப வழக்கம் அது” என்று முருகேசன் சொல்லிவிட்டான். எத்தனை உண்டாலும் வயிறு என்னவோ உள்ளடங்கியே இருந்தது. முப்பது வயதுக்குரிய அடர்த்தியான மீசையும் அடர்த்தியான தாடியும் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்றிருக்கும் கண்களும் சீரற்ற பற்களும் அவனை வினோதமாகக் காட்டின.

விடாய்

எனதுகால் அவள்மூட்டில் இடிக்குன்னாலும் இடுப்பில் தூக்கிக்கும் அம்மா.விறகை தலையில வச்சு திரும்பையில முந்தானய புடுச்சிக்கிட்டு ஓடிவரனும்.அந்த கொடுக்காபுளிமரத்துக்கிட்டதான் கொமரன் பொறந்தான். மழைநின்றகாலையில் அம்மாவோட வந்தப்ப மழவில்லுல இருக்கற அத்தனநெறத்துலயும் கருப்பு செறகுல புள்ளிப்புள்ளியா போட்ட வண்ணாத்திப்பூச்சிகள பாத்து கண்ணுக்கு சலிக்கல.”வெவரங்கெட்டவனே ஆளுக வாரதுக்குள்ள காளான கிள்ளி மடியில போடுவியா..வெறும் பார்வ பாத்தா கொழம்பு வந்துருமா…”அம்மா குரலால் குனிந்து நெருக்கமாகப் பார்த்தான் மெய்யன்.

அருவம்

அந்த சனிக்கிழமை இரவைக் எப்படிக் கடப்பது என்று மந்திரமூர்த்தி யோசித்துக்கொண்டிருந்தான். நாற்பது வயதில் நாய்க்குணம் என்று சொல்வதின் பொருள் என்ன என யோசித்துக் கொண்டிருந்தபோது, சண்டை போட்டுக்கொண்டு கனமான தொப்பை மீது ஓடி வந்து விழுந்த பெரிய மகனையும் சிறிய மகளையும் “அங்கிட்டு போய்த் தொலைங்க மூதிகளா” என்று உரக்கச் சத்தம் போட்டு ஏசினான். உள்ளே இருந்து மங்களம் “அவாகிட்ட போகாதீங்கன்னா கேக்குகளா” என்று சொன்னது இவனுக்கு மெல்லக் கேட்டது. “அப்பா ஏம்மா எப்பவும் எரிஞ்சே விழறாங்க” என்று மகன் மங்களத்திடம் கேட்டிருப்பான் என மந்திரமூர்த்தி நினைத்துக் கொண்டான். நாளெல்லாம் எண்ணெய்க்கடையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விழுந்தால் இங்கேயும் ஒரு நாதி இல்லை என்று மெல்லச் சொல்லலாமா அல்லது…

பழனி

‘பழனி பத்தாவது மாடியில் பதினொன்றாம் ரூமில் செக் இன்னுக்கு முன்னதான வேலைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான். சுரத்தில்லாமல் இருந்தான். என்னைப்பார்த்ததும் சுமாராக சிரித்து கட்டிக்கொண்டான். பிறகு அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து படிக்கச் சொன்னான்..
‘அந்த பொண்ணுகிட்டேந்துதான் வந்திருக்கு, படிச்சு சொல்றியா?’
நான் அதைப் படித்து சாராம்சமாக சொன்னேன்…
‘அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையோட கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாம். ஆனா அதுக்கு உன்னயத்தான் பிடிச்சிருக்காம். எப்படியாச்சும் அது நடுவில திருத்தணி வறப்ப வந்து கூட்டிணு போக சொல்லுது.’

தூரம்

டீ குடித்து வெளியில் வருவதற்கும், அலெக்ஸாண்டர் ஜீப்போடு மருத்துவமனை வாயிலில் நுழைவதற்கும் சரியாய் இருந்தது. பிணவறை வாசல் படிக்கருகில், ரிவர்ஸில் வந்து ஜீப்பை நிறுத்தினார் அலெக்ஸாண்டர். கிருஷ்ணப்பா போய் மருத்துவமனை சிப்பந்தியை கூட்டி வந்தார். உள்ளே போய் கதவு திறந்து, தலை முதல் கால் வரை முகம் தெரியாமல் வெள்ளைத்துணி சுற்றப்பட்ட மோகனாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுவந்தார்கள். “லட்சுமீஈஈஈ…என் கண்ணூ…” வெங்கடலட்சுமி வீறிட்டு நெஞ்சிலடித்து கதறியது அந்த நள்ளிரவின் இருட்டை கிழித்தது.

ஆழம்

“எந்திரிடீ.. என்னமோ புர்ன்னு கெடக்க… மணியாச்சு பாரு..“ கைக்கு இரண்டாக ரப்பர் குடங்களை வைத்திருந்தாள் வரலட்சுமி. கைகளிலும் ரப்பர் வளையல்கள்தான். பெண் வாரிசு இவள் ஒருத்தியே என்பதில் கூடுதல் சலுகையாக கைக்கு பொன் வளையல் கிடைத்தது. முதலில் அடகுக்குப் போனது இவைகள்தான். பிறகு இரட்டை வடச்செயின்.. என வரிசையாக மூழ்கி விட இனி மீட்க முடியாது என்ற தளத்தில் தாலிக் கொடியை விற்று வெள்ளாமை செய்தான் நாச்சிமுத்து

குட்டிப் பாதங்களால் அறிந்த மண்ணில்

மல்லிகாவும், இயலும் இறங்கிப்போய் டீ வாங்கி வந்தார்கள். பகலாயிருந்தால் கடலை மாவு போண்டா பெரிய உருண்டையாய் கிடைக்கும். ராஜலிங்கத்தின் வீடு தாராபுரத்தில்தான் இருந்தது. ஒருமுறை காலேஜ் டூர் போனபோது தாராபுரம் கடக்கும்போது ராஜலிங்கம் வீட்டிற்குப் போனது ஞாபகம் வந்தது. பத்து நிமிடத்தில் பஸ் கிளம்பியது. கொஞ்ச நேரம்தான் கண்ணயர்ந்த மாதிரி இருந்தது. சத்தம் கேட்டு பாதி கண் திறந்து பார்த்த போது, பஸ் ஆரப்பாளயம் ஸ்டேண்டில் நுழைந்துகொண்டிருந்தது.

கடைவழி

காலுக்குக் கீழே மூத்திரம் வழிந்து சேலையை நனைத்தது. இடுப்பை நிமிர்த்தி நடுங்கும் கைகளால் பழஞ்சீலையை சுருட்டி அடியில் திணித்தாள். நிலைகொள்ளாது கிடுகிடுத்த தலையை நிமிர்த்தி கண்களை இடுக்கியபடி பார்த்தாள். அசைவேதும் தென்படவில்லை. கயிற்றுக் கட்டிலின் ஓரத்தில் கிடந்த குச்சியை தடுமாறும் விரல்களால் பற்றி எடுத்தாள். கீழே கிடந்த ஈயப்போசியைக் குச்சியால் தட்டவேண்டும். சத்தம் கேட்டால் யாராவது எட்டிப் பார்க்கக்கூடும்.

வியாழன் இரவு

பிலிப்பனோக்கார கார் டிரைவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். காரில் நெருக்கி அடித்து உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு பிரேக் அடிச்சா ஆளுக்காளு முத்தம் கொடுத்துக்கவேண்டியதுதான் என்றான் ஷிராஸ். அய்ய என்றான் சந்தோஷ் மேனன். சந்தோஷ் மேனனின் வழுக்கைத் தலை அவனுக்கு நாற்பது வயதிருக்கும் என்று காட்டினாலும் அவனுக்கு 30 வயதுதான் ஆகி இருந்தது. ஷிராஸ் எப்போதும் அவனை கஸண்டி என்றே அழைப்பான். அவனை வெறுப்பேற்றுவதற்கென்றே தன் தலைமுன்பு வந்து விழும் முடியை அடிக்கடி கோதிக்கொண்டான் சுரேஷ். ‘பின்னே… இவன் ரஜினியல்லே’ என்றான் சந்தோஷ் மேனன். அதுவரை அமைதியாக அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பிஜூ, “அது கொள்ளாம்” என்றான். சுரேஷ், பிஜுவின் தொப்பையைத் தட்டி, “தொப்பை போட்ட ஃபார்ட்டி கிழவன்ஸ்… பொறாமை எதுக்கு? ஐ’ம் தி ஒன்லி எலிஜிபில் பேச்சிலர்” என்றான்.

மரி

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரையும் எதுவும் கேட்காமல் நானே “ எட்டு டீ” என்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளி நின்று சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பார்த்தியருகே போய் நின்றேன். எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். கையைக் கட்டிக் கொண்டு இருளை வெறிக்கத் துவங்கினான். மெல்ல அவன் தோளில் கை போட்டேன். அமைதியாய் இருந்தான். நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் ராட்சச சப்தத்தையும் மீறி அங்கே தொடங்கி சாலையிலிருந்து விலகி நீண்டிருந்த புதர்க்காட்டிலிருந்து ராப்பூச்சிகளின் சப்தம் கனமாய் ஒலித்தபடியிருந்தது. காற்றில் லேசான மூத்திர வீச்சம் கலந்திருந்தது.

நண்டுச் சுவடுகள்

சதுப்புக் குட்டைகளில் நண்டுகள் குடித்தனம் இருக்க, அவற்றைத் தின்ன கொக்குகளின் கிரீச்சலான சண்டைகள்.
“இந்த கொக்குகள் கடலுக்கு நன்றி சொல்லுமா?”
“புரியல.”
“சதுப்புக் குட்டைகளை இந்தக் கடல் உருவாக்கிருக்கு. அப்படி உருவான அதில நண்டுக உருவாகி, இந்த கொக்குகளுக்கு சாப்பாடாக மாறுது. இந்த சதுப்பு குட்டைகளால்தானே கொக்குகளுக்கு சாப்பாடு கெடைக்குது.”

விடிவு

‘ ட்ரிங்ஸ் பண்ணீங்களாடா..’
‘ இல்ல சார்.. உங்களுக்கு தெரியாதா… நாங்க குடிக்க மாட்டோம் சார்’
‘ டேய்..டேய்.. தெரியுண்டா.. இருந்தாலும் ஆபீஸ்ல கேட்டாங்க…’
மீண்டும் ரூமிற்கு வந்தபோது மொபைலில் மாமா அழைத்தார்…
ரெண்டு பேரும் ரெண்டு வண்டில போனீங்களாடா
ஆமாம்.. வறப்போ மூணுபேர் இருந்தோம். அதனால ரெண்டு வண்டில வந்தோம்
அந்த ஊரில் பஸ்ஸெல்லாம் கிடையாதா..
சும்மா..பைக்ல போயிட்டு வரலாம்னு..
‘இப்ப சும்மாவே போயிருச்சு பாத்தியா.. பைக்ல சுத்தாதீங்கன்னா கேக்குறீங்களா.. அதுலதான் உங்களுக்கெல்லாம் ஒரு மஜா…’
‘……’
‘அப்புறம் என்னாச்சு’

என் பெயரும் கிருஷ்ணன்

“ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிண்டு வந்து நிப்பா என் பொண்ணுன்னு நான் நினைக்கலை. எனக்கு வியாக்கியானமாகச் சொல்ல வார்த்தை வரலை. இவளுக்குக் கீழே ஒரு தம்பி ஒரு தங்கை இருக்கா. நான் ராமர் கோவில் பட்டர். தெனம் நாலுபேருக்குப் பதில் சொல்றா மாதிரி பண்ணிடாதீங்கோ. இது சரிப்பட்டு வராது. நான் யாரையும் துணைக்கு அழைச்சிண்டு பஞ்சாயத்து பண்ண வரலை. எங்களுக்கு யாரையும் எதிர்க்கும் திராணி இல்லை. எதுக்கெடுத்தாலும் பயம் தயக்கம் உள்ளவா நாங்க. உங்களை அந்தத் தாயாரா நினைச்சிண்டு கேக்கறேன் என் பொண்ணு ஸ்வேதாவிற்கு எங்க மனுஷாளுக்கு நடுவிலேயே மாப்பிள்ளை பார்த்துக்கறேன். விட்டுடுங்கோ “ என்று என் அம்மாவின் கால்களில் பணிய இருந்தவரை அம்மாதான் பதறிப்போய்த் தடுத்து நிறுத்தினாள்.

சமூகவியல்

மற்றவர்கள் எதை எல்லாம் ஒளித்தனரோ, அவற்றை ஜூன் கொடுத்தாள்; அவள் வாய் விட்டுச் சிரித்தாள், தன் பயங்களைப் பற்றிப் பேசினாள். எல்லெனுக்கு நினைவிருந்த நாட்களில் சிறப்பானது ஒன்று, அன்று ஜூன் அடுக்கத் தக்கனவாக உருவமைக்கப்பட்ட உலோக நாற்காலி ஒன்றில் அருள் வாக்கு கூறும் பெண் ஒருத்தியைப் போல உட்கார்ந்திருந்தாள், அவளுடைய ஒளி ஊடுருவும் கண்ணிமைகளின் பின்னே பார்வை இல்லாத கண்பாவைகள் தாவி அலைந்தன. ‘என்னால் நம்பவே முடியவில்லை, நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்பதை,’ என்றாள் அவள். ‘என்னை நான் பார்த்ததே இல்லை என்பதால் இப்படி இருக்கும் போலிருக்கிறது.’

முப்பாலுக்கு அப்பால்

பின்னால் கொல்லையில் காவேரி ஒடுகிற சல சல சத்தம், தோட்டத்து மரங்களில், கிளைகளும் இலைகளும் உரசுகிற சத்தம், சிள் வண்டுகளின் ரீங்கார சத்தம், எங்கோ தெருவில் போகிற வண்டி மாடுகளின் கழுத்து மணிகளின் சத்தம், கூடை அடைய தாமதமான ஒற்றைப் பறவையின் சத்தம், தூரத்து மெயின் ரோடில் லாரி போகிற சத்தம், ஆசிரம இரும்பு கேட்டில் கட்டியிருக்கிற தகரம் காற்றில் ஆடும் சத்தம், சமையலறையில் பாத்திரங்களின் ஜலதரங்க சத்தம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருக்கையில் இப்பிடியே இருந்து விட்டால் என்ன என்று தோன்றியது.

அம்பையின் சிறுகதை-"அம்மா ஒரு கொலை செய்தாள்"

இக்கதையில் நாம் அறிந்த அம்மா, அப்பெண் எதிர்பார்ப்பது போல ராணி போல அவளது பருவமடைந்த செய்தியை எதிர்கொள்வாள் என்றோ பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருப்பாள் என்றோ நாம் நினைப்பதுக்கு மாறாக, “அவள் என்னடீ அவசரம்?” எனத் திட்டுகிறாள்….மெல்லுணர்வுகளைத் தாங்கி இருப்பவர்கள் கூட அதை நெருப்பில் அவிசாகப் போடும் நேரமும் உண்டு. … இதன் தீவிரத்தை உணர்ந்தாலும் நாமும் இப்படிப்பட்ட கொலையில் பங்கு கொள்பவர்களே”. … தன்ராஜ் அசந்துவிட்டார்.

விடுதலையின் பின் வாழ்க்கை

கோபால் ஜோஷி, தன் குடும்பம் வறுமையில் வாடுவதற்கு காரணம் தொழிற்சாலைகள் அமைக்கப்பட ஆன கால தாமதம், திடீரென்று வந்த சமூக சீர்திருத்தங்கள் என்றே கருதியிருக்கவேண்டும். அவர் அடிக்கடி சொன்ன வரிகள் “ வெள்ளைக்காரன் போனான். இப்ப நம்ம நிறத்துல இருக்கறவன் சுரண்டறான்.” எளிமையான அதிகம் சிந்திக்க முயற்சிக்காத மக்கள், தங்கள் உடைமைகளையும், உடலுழைப்பையும் எதிர்காலத்தைப் பற்றிய சில கனவுகளுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு, கசப்புடன் இறந்துபோனது காலத்தின் கோலம். ஆனால் இந்த தடுமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.

வட்டம்

“எளவு அந்தூருக்கு எவம் போவான்?” என்றார் சலிப்புடன். “லே, அவன் இருக்கற ஊர்ல, அக்கினி நட்சத்திரத்துலயும் இழுத்து மூடி கிடக்க வேண்டியிருக்கு. நமக்கு குளிர்காலம்னா பனியன் போடணும், கோடை வந்திச்சின்னா, அதக் கழட்டணும், இதுதான் உடுப்பு. அங்க்கிட்டு, எல்லாம் போட்டுட்டு ஒரு மாசம் இருந்தேன், இருப்பு கொள்ளல. வந்துட்டேன். கடை சும்மா அடைச்சு கிடந்துச்சின்னா, எலி வந்துரும் பாத்துக்க.” .. .. .. “இப்படி கடை கிடக்கறதுக்கு, எலி தின்னா என்னா அண்ணாச்சி ? இனிமே என்ன சம்பாரிக்க வேண்டியிருக்கு? இப்பத்தான் பெங்களூர் வந்துட்டாம்லா? பையன் கிட்ட இரிங்க.” .. .. .. அண்ணாச்சி அருகில் வருமாறு சைகை செய்தார் “ ஏலா” என்றார் அன்பாக.

தச்சன்

அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும் பெருந்திரளான கூட்டம். சீடர்கள். பேதுரு சீமோன் போன்ற உரிமையான நண்பர்கள். அவன் நிமித்தம் எல்லாப் பழியையும் ஏற்று கருணையினால் நிறைந்த அன்னை. .. .. .. ஆனாலும், அவனுக்கென எவருமில்லை. அவன் மனம் தனித்தே நிற்கிறது. எங்கோ ஓர் வெறுமை. எனக்கென என் மனதுடன் உரையாட ஓர் அன்பு நெஞ்சமில்லை. எல்லோருக்கும் நான் ரபி, குரு, ஞானத் தந்தை…என்னுடன் முகமுகமாய் அளவளாவ நண்பனே என்று அழைக்க எவருண்டு ? .. .. .. அவன் குனிந்து அவளைப் பார்க்கிறான். .. .. .. யாரிடமும் ஒன்றாத அவன் தனிமை அவளின் கருணை நிறை அன்பில் கரைகிறது. உடைக்கப்படும் புனிதங்கள். கட்டளைகள் மீறப்படுகின்றன. அவள் உன்மத்தமாகிறாள்…

கொரங்கி

மணி அடித்தவுடன், முதல் ஆளாக எழுந்து ஓடினேன் வீட்டை நோக்கி. தினமும் பள்ளியிலிருந்து வீடு வர 45 நிமிடம் ஆகும். ஆனால் இன்று 20 நிமிடத்தில் வீடு வந்தடைந்தேன்.
வீட்டு முன் ஒரே கூட்டம். பார்த்த எனக்கோ கை, கால் எல்லாம் நடுங்கியது, அக்காவுக்கு என்ன ஆச்சோ என்று.
அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று வெளியில் நின்ற அனைவரையும் விலக்கிக் கொண்டு உள்ளே சென்றேன். அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, ஆச்சி எல்லாரும் நின்று கொண்டிருந்தனர். அக்காவை மட்டும் காணவில்லை.