உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தத்தமது தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி இந்த மூன்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான போராட்டமே மனித வாழ்வு. இம் மூன்றையும் ஏதோவொரு விதத்தில் வெல்லும் முயற்சியில்தான் மனிதனின் சகல ஆற்றல்களும் குவிந்து செயல்படுகின்றன. முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும் இத் தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே.
Author: எம்.கோபாலகிருஷ்ணன்
கடைவழி
காலுக்குக் கீழே மூத்திரம் வழிந்து சேலையை நனைத்தது. இடுப்பை நிமிர்த்தி நடுங்கும் கைகளால் பழஞ்சீலையை சுருட்டி அடியில் திணித்தாள். நிலைகொள்ளாது கிடுகிடுத்த தலையை நிமிர்த்தி கண்களை இடுக்கியபடி பார்த்தாள். அசைவேதும் தென்படவில்லை. கயிற்றுக் கட்டிலின் ஓரத்தில் கிடந்த குச்சியை தடுமாறும் விரல்களால் பற்றி எடுத்தாள். கீழே கிடந்த ஈயப்போசியைக் குச்சியால் தட்டவேண்டும். சத்தம் கேட்டால் யாராவது எட்டிப் பார்க்கக்கூடும்.
மனைமாட்சி – ஒரு பகுதி
எட்டாவது படிக்கும் இந்த வயதில் இவளுக்கு எங்கிருந்து இத்தனை முதிர்ச்சியும் பொறுமையும் சாதுர்யமும் கூடி வந்திருக்கிறது என்று அடிக்கடி அவன் வியப்பதுண்டு. விபரம் தெரிந்த நாளிலிருந்து சாந்தியை எதிர்பார்க்காமல் அவளே ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டிருந்தாள். குளித்து தலைபின்னி இருவருக்குமான மதிய உணவு டப்பாக்களை தயார் செய்து தண்ணீர் நிரப்பி புத்தகப் பைகளை தயார் செய்து தங்கையின் காலணிகளை அணிவித்து தானும் தயாராகி எந்த நிலையிலும் பதட்டமில்லாமல் பள்ளிக்குப் புறப்படத் தெரியும் அவளுக்கு. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொள்ளும் வேளைகளில் இன்னொரு அறையில் கதவைச் சாத்திக்கொண்டு மீனாவை சமாளிக்கவும் தெரியும்.
கண்மணி குணசேகரனின் “வந்தாரங்குடி“
தொழில் மயமாக்கலும், தாராளமயமாக்கலும் தொடர்ந்து நிலங்களின், பண்பாட்டின், மனிதர்களின் தனிப்பட்ட அடையாளங்களை அழித்து பொதுவான அடையாளமொன்றை நிறுவும் முனைப்புடனே நம் முன் விரிகின்றன. பெயரில் இருந்த தனித்துவங்களை இழந்து வெகு காலமாயிற்று. இப்போது நாம் நமது மொழி, உணவு முறை, மருத்துவ முறை, உடைகள், கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்று ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள தனிப்பட்ட அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.
வீழ்த்தப்பட்ட வரலாறு: தமிழ்மகனின் வெட்டுப்புலி
ஒரு நேர்மையான, மேலான இலக்கியப் படைப்பின் பணி என்பது காலங்காலமாக முன்வைக்கப்படுகிற வரலாற்றின் உள் அடுக்குகளில் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் குறித்த தேடல்தான். இதுவரையில் அறியப்படாத உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே அதன் இலக்காக இருக்கும். ‘வெட்டுப்புலி‘ கதையின் வேர்களை நோக்கி மிக வலுவாக நகரும் ஒரு சரடு உண்மைக்கு மிக அருகில் சென்றுள்ளது என்பதை முன்னுரையில் வாசக சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள பகுதியிலிருந்து நம்மால் உத்தேசிக்க முடிகிறது.
கவிதைகள்
கால்களும் நிழல்களும்
வலை பின்னி
பந்துதைத்துத் திரிய
நான் மட்டும்
அசைந்தேன், நடந்தேன், ஓடித் தவித்தேன்.
இரவின் திவலைகள்
இதோ உடன் நடக்கும் உன் முகம்
நான் முன்பு அறியாதது,
இப்பாதையில் என்னுடன்
எது வரையிலும்
உடன்வருவாய் என்றும் தெரியாது
க.நா.சு – கனவும் காரியங்களும்
இது க.நா.சு பிறந்த நூற்றாண்டு தருணம். இத்தருணத்தில் தமிழ் இலக்கிய சூழலில் அவரது பங்களிப்பு குறித்த ஒரு முழுமையான பார்வையை அளிக்க முயல்கிறது இந்தக் கட்டுரை : கோட்பாட்டு அடிப்படையிலான, பல்கலைக் கழகங்கள் சார்ந்த விமர்சன மரபிலிருந்து விலகி, ரசனை அடிப்படையிலான தனித்துவமிக்க விமர்சன மரபை உருவாக்கியது க.நா.சுவின் முக்கியமான பங்களிப்பாகும். தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய நிலையிலிருந்து பின்னோக்கிச் செல்லும்போது, படைப்பிலக்கியம், விமர்சனம், பத்திரிக்கைகள் என அதன் எல்லாத் தளங்களிலும் க.நா.சு என்று அறியப்படுகிற கந்தாடை நாராயணன் சுப்பிரமணியத்தின் அழுத்தமான பங்களிப்பை நம்மால் அடையாளம் காணமுடியும்.