கம்பனும் சேல்ஸ் மீட்டிங்கும்

ramayan
“அஞ்சரைக்கே வர்றேன்னீங்க?” என்று தொடங்க நினைத்தவன், உதயகுமார் முகத்தைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டேன்.
“என்னாச்சு?”
“ப்ச்” என்றார், தொப்பென்று நாற்காலியில் அமர்ந்தபடி முகத்தை கைகளால் பொத்திக்கொண்டு முன்னே குனிந்தார்.
“ஆபீஸ்ல ப்ரச்சனையோ?”
“நல்லதே சொல்லப் போகக்கூடாது சுதாகர். உண்மைக்கு மதிப்பில்ல”
மவுனமாயிருந்தேன். சில விசயங்கள் ஊற்று மாதிரி. முதல்ல கசியும். அப்புறம் மடமடவெனப் பெருகும். நிதானம் வேணும்.
“குவாட்டர் முடிவு மீட்டிங் இன்னிக்கு. விற்பனை, டார்கெட்டை எட்டலை. ரெண்டு கோடி குறையுது. சுனில் தேஷ்பாண்டே நொந்து போய்,’ரிஸைன் பண்ணிடறேன்’ன்னு சொல்ற அளவுக்குப் போயிருச்சு.”
சுனில் தேஷ்பாண்டே, உதயகுமாரின் தலைமை அதிகாரி. எங்க கம்பெனியின் விற்பனைத்துறை ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி. சுனில் கிட்டத்தட்ட பெரிய அண்ணன், அல்லது தந்தைக்கு சமம். மற்றவர்கள் அவருக்காக உயிரையே கொடுப்பார்கள்.
“சுனில் இப்படிச் சொன்னதும், ரெண்டு பேர் அழுதுட்டாங்க. ‘சார். நாங்க மொதல்ல போறோம். எங்களாலதான் இந்த அவமானம்’ னாங்க” உதய்குமார் தண்ணீரைக் குடித்தார். பின் தொடர்ந்தார்.
“எல்லாரும் நம்ம விலை அதிகம். கடைசி ஒருமாசமாச்சும் தள்ளுபடி கொடுத்திருக்கணும்னாங்க. சுனில்கூட போன மீட்டிங்க்ல, ’நம்ம விலை அதிகம்தான்’னு ஒத்துகிட்டு மேனேஜ்மெண்ட்ல பேசறேன்னு சொல்லியிருந்தார். அவர் கேட்ட விலை கொடுக்க மறுத்துட்டாங்க.. இவரு விரக்தியாகி, என்னாலதான் உங்களுக்கு கெட்ட பேரு. நான் இந்த நாற்காலியில இன்னும் இருக்கணுமா?ன்னு கேட்டாரு பாருங்க, குரல் தழுதழுச்சிருச்சு”
“இட்டது இவ்வரியணை; இருந்தது என் உடல்”. “மேல சொல்லுங்க” என்றேன்.
“சுனில் முந்தியே சொன்னதை எல்லாரும் பிடிச்சுத் தொங்கிட்டிருந்தாங்க. விலை, விலை அதுதான் காரணம். நானும் , ஜித்தேந்திராவும் மட்டும்தான் வேற காரணம் சொன்னோம். “ நம்ம சர்வீஸ் சரியில்ல சுனில் சார். கஸ்டமர் காட்டுத்தனமா கத்தறாங்க. முதல்ல அதைச் சரி பண்ணுங்க”ன்னோம்.
”சரி” என்றேன், ஆவி பறக்க வந்த டீயை, சாஸரில் ஊற்றி, உறிஞ்சியபடி. இந்த ஓட்டலில் எதுவுமே நல்லாயிருக்காது…டீ தவிர.
உதயகுமார் உதடு துடித்தது. அந்த நிகழ்விற்குப் போய்விட்டிருந்தார் “ என்னை மட்டும்…, என்னை மட்டும் நிக்க வச்சு, ’நீ எனக்கு புத்தி சொல்ல வந்துட்டியோ? விக்கறதுக்கு துப்பில்ல, வேற காரணம் சொல்லவேண்டியது’ன்னு நார் நாராய் கிழிச்சுட்டாரு. ஜித்துவை ஒண்ணுமே சொல்லலை. எல்லாருமுன்னாடியும் அவமானப் படுத்தி..சே.. ”
அவரது புறங்கையை ஆதரவாகத் தட்டினேன்.
“எப்படி உழைச்சேன்? என் பையன் ஆஸ்பத்திரியில கிடக்கறப்போகூட, சுனில் சொன்னாருன்னு போபால் போகல? டில்லியில போன வருசம் டிஃபென்ஸ் டீல் பேசறப்போ நூத்திநாலு டிகிரி காய்ச்சல். வேலையத்தான பார்த்தேன்? உண்மையச் சொன்னா, நியாயமா நடந்தா, என்ன பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சுபோச்சு இப்ப”
சுய இரக்கத்தின் வீரியம் குறைவதற்கு ஐந்து நிமிடம் காத்திருந்தேன். அதன் பின் “ இதுல உங்களுக்கு எது வருத்தமாப் படுது? அவர் உங்களைத் திட்டினாருன்னா? இல்ல ஜித்துவைத் திட்டலைன்னா? அல்லது மத்த எல்லாரும் ஜால்ராவா இருந்து பேர் வாங்கறாங்கன்னா?”
உதய குமார் யோசித்தார் ‘எல்லாம்தான். மத்தவங்க புத்திசாலி சார். ஜால்ரா அடிச்சே பொழச்சுக்குவானுங்க.. அது சுனிலோட பலவீனம்னு இன்னிக்கு தெரிஞ்சுகிட்டேன். சரி, அத விடுங்க, இந்த ஜித்துவும் நானும் சொன்னது ஒண்ணுதான். ஆனா அவனை ஒண்ணுமே சொல்லலை பாருங்க.”
”ஒண்ணு ஒண்ணாப் பார்ப்போம்” என்றேன். “மத்தவங்க எல்லாம் ஜால்ரா இல்ல உதய். அவங்களுக்கும் நீங்க யோசிச்சமாதிரியே தோணியிருக்கும், ஆனா சொல்ல மாட்டாங்க”
“ஏன்? ஜால்ரா பொழப்புதானே?”
‘இல்ல” என்றேன் புன்னகையுடன் “ இது குழுமசிந்தனை, groupthinkனு சொல்லுவாங்க. குழுவின் சிந்தனையில்லை. குழுமசிந்தனைங்கறது, தனிமனித சிந்தனையைத்தாண்டியது. மிகப் பலமுள்ளது.
மனிதன் சமூக விலங்கு. சமூகம் அவனை மாற்றும். சமூகத்தின் சிந்தனை என்பது ஒவ்வொரு உறுப்பினரின் தனிமனித சிந்தனையின் கூட்டுத் தொகையைத் தாண்டியது. அது, தனிமனித சிந்தனையை, இயக்கத்தைத் தாக்கும்”
”புரியலை”
“ரோட்டுல ஒரு ஆட்டு மந்தை போயிட்டிருக்குன்னு வைச்சுக்குவோம். ஒவ்வொரு ஆடும் ஒவ்வொரு மாதிரி நடக்கும், சிலது தலையைத் தூக்கும். காதை ஆட்டும், சிலது அமைதியா நடக்கும். ஆனா எல்லாம் சேர்ந்து ஒரு மந்தையாக மட்டுமே போகமுடியும். மந்தையிலிருந்து வெளியே போற ஆடுக்கு ஆபத்து அதிகம். எனவே தனித்துவ இயக்கத்தோடு, மந்தை இயக்கத்தை மையமாக வைத்தே அவை நகரும். மனிதனின் உறவுகளும் இப்படித்தான்.”
“இதுக்கும் நான் திட்டு வாங்கறதுக்கும் என்ன தொடர்பு?”
“சுனில் முதல்லியே சொல்லிட்டாரு – விலைதான் ப்ரச்சனைன்னு. எனவே எவரும் அதைத்தாண்டி சொல்ல நினைக்கலை. குழுவில் மந்தையில் இருப்பதுதான் பாதுகாப்பு. நமது நனவிலியிலிருந்து வேறு எண்ணங்கள் வெளிவருவதை, குழுமச்சிந்தை என்கிற சட்டவடிவம்,ஸ்கீமா, டெம்ப்ளேட் தடுத்துவிடுகிறது. முன்னை நடக்கிற நிகழ்வுகளுக்கு ஏற்றபடி இயங்க வைக்கிறது. இது தவறென்று சொல்லிவிட முடியாது. நமது டிசைன் அப்படி.”
”அப்போ, குழுவில் பேசி முடிவெடுக்கறது தப்புங்கறீங்களா? ஒரேமாதிரியான முன்முடிவுகளோடுதான் குழுக்கள் முடிவெடுக்கின்றன என்கிறீர்களா?” அவரது குரலில் விவாதத்தின் தொனி வெளிப்பட்டது.
“ஆம்/ இல்லை. குழுக்கள் சிந்தித்து முடிவெடுப்பது வேறு, குழுமச்சிந்தனை முடிவெடுப்பது வேறு. முன்னதில், தனிமனிதர்கள் ஒரே நிகழ்வை வேறு கோணங்களில் சிந்தித்து, தருக்கத்து, நடைமுறைக்கு இணங்கி முடிவெடுக்கும் திட்டம் அடித்தளமாக இருக்கிறது. இரண்டாவது, முன்னதன் மயக்கத்தில் வரும் போலி முடிவுகள். குழுக்களில் மக்கள் உரையாடியிருப்பார்கள். ஆனால், ஒரே கருத்திற்கு முன்முடிவுடனே ஒத்துப் போயிருப்பார்கள். தனியே கேட்டால்  ’சொல்லணும்னு நினைச்சேன்.. சரி, எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்,’ என்பார்கள். “
“அப்ப நான் சொன்னது தப்பா சார்?”
“இல்ல, சொன்ன இடமும், நேரமும்,சொன்ன விதமும் மாறியிருக்கலாம். நான் அங்க இல்ல. அதுனால தீர்மானமாச் சொல்ல முடியாது. நீங்க சிந்தித்துப் பார்க்கணும்.”
“அப்ப ஜித்து?”
“அவர் எப்படி பேசச் தொடங்கினார்னு சொல்லுங்க” என்றேன்.
“ம்” யோசித்தார் “ மொதல்ல இந்த பாயிண்ட்டைச் சொல்லிட்டு, இது உங்களுக்குத் தெரியும் சுனில்ஜி,”ன்னாரு”
உணர்ந்திலை, உணரும்தன்மையோய்!
“சரியாச் சொல்லியிருக்காரு. சுனிலுக்கும் விவரம் நல்லாவே தெரியும். அவரும் குழுமச் சிந்தனையைத் தாண்டக்கூடாது. தாண்டினா குழு சிதறிவிடும் ஆபத்து இருக்கு. எனவே தான் சொன்னதே சரின்னு நிப்பாரு. ஜித்து, மாறுபட்ட கருத்தைச் சொல்லி, இதுவும் உங்களுக்குத் தெரியும்னு மரியாதையும், அவர் நகர்வதற்கான இடமும் கொடுத்திருக்காரு. அது குழுவுக்குள் ஏற்றுக்கொள்ளப்படும். நீங்க, மாறுபட்ட கருத்தை மட்டும் சொல்லியிருக்கீங்க. அது குழுச்சிந்தனைக்கு இடையூறு. எனவே சுனில் பொங்கிட்டாரு.”
உதயகுமார் சில நிமிடங்கள் அமைதியா இருந்தார். “இது.. எந்த புக்ல இருக்கு?”
டீ கோப்பையைக் கீழே வைத்தேன். “கம்பராமாயணம்” என்றேன் “யுத்தகாண்டம் 1 – இராவணன் மந்திர ஆலோசனைப் படலம்.
அனுமான் இலங்கையைத் தீக்கிரையாக்கிப் போயிட்டான். ராவணன் அடுத்தநாள் அதிர்ந்து போய் அவையைக் கூட்டுகிறான். ஒரு குரங்கு, இத்தனை பேரைக்கொல்லும், இப்படி நாசம் பண்ணும்னு அவன் நினைக்கவில்லை. ஒரு சுய இரக்கத்துடன் பேசறான்.
சுட்டது குரங்கு; எரி சூறை ஆடிடக்
கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும்
பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்;
இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல்.
அவன் அங்கு அறிவுரையைக் கேட்க அவையைக் கூட்டினான்னு நினைச்சோம்னா, அது நமது அறிவீனம். அவன் ஏற்கெனவே நொந்து போயிருக்கான். அவனுக்கு உற்சாகமூட்டுவதாக வார்த்தைகள் வேண்டும். போர் செய்ய ஆவேசம் வேண்டும். இந்த முன்முடிபு அவன் மனத்தில் இருப்பதை அவன் வார்த்தைகளிலேயே அறியலாம்.
’அவமானம் எல்லா இடத்துலயும் பரவிருச்சே, போர் செய்யணும், அந்த ராம,இலக்குவர்களை , குரங்குகளை அழிக்கணும்’ என்பதுதான் உள்ளோடும் கருத்து.
எல்லா அரக்கர்களும் “ இதுக்கு ஒரு ஆலோசனை வேணுமா? கிளம்புங்கய்யா, கொன்னுபோட்டுட்டு வருவோம்,” என்பதாகப் பேசுகிறார்கள். மூன்று பேர் தவிர.
ஒருத்தன் சேனை நாயகன். அவன் , முன்பே சீதையைக் கவர ராவணன் செல்லும்போது தடுத்தவன். இப்போதும் அதையே சொல்கிறான். ஆனா எப்படி சொல்றான்னு பாருங்க.கடைசி வரி பாருங்க.
அறியும் தன்மை உடையவனே! நீ அது தவறு என்று உணரவில்லை.
ராவணனைத் தப்பு என்று சொல்லுமதேயிடத்தில், நீ உணரக்கூடியவனே -என்று புகழ்ந்து குழுச்சிந்தனையிலிருந்து மாற்றிச் சிந்திக்க வல்லமை உடையவன் என்கிறான். எனவே , படைத்தலைவனை ராவணன் சினந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.
அடுத்ததா கும்பகர்ணன் சொல்கிறான், முதல்ல அவனைப் புகழ்கிறான்.
”நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்
ஆயிரம் மறைபொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்”  
ன்னு சொல்லிட்டு, அதுக்கு அப்புறம்
”ஒரு குலத்தோன் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ”
என்று கேட்கிறான்.
ஆனால் அதன்பின் “போர் செய்யத்தான் வேண்டும்” என்கிறான். ராவணனின் சிந்தனைக்கு ஏற்ப இது இருந்ததால, அவன் கும்பகர்ணனை ஒன்றும் சொல்லவில்லை. குழுச்சிந்தை அப்படிப்பட்டது.
கடைசியா விபீஷணன். இவனும் முதல்ல கும்பகர்ணனைப் போலவே ராவணனைப் புகழ்கிறான்.
எந்தை நீ யாவும் நீ எம் முன் நீ தவம்
வந்தனைத்தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ”
ஆனா, அதுக்கப்புறம், குழுவுக்கு வெளியே இருப்பதைப் போல உணர்வு தெறிக்க, இப்படிச் சொல்லிடறான்.
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன்.
இப்படி அட்வைஸ் கேட்கிற சூழ்நிலையில இராவணன் இல்லை. அதோட நிக்காம விபீஷணன், குழுச்சிந்தைக்கு மாறாக, ’போர் வேண்டாம். சீதையை ராமன்கிட்ட கொடுத்திரு’ன்னு சொல்றான். இது ராவணனுக்கு பிடிக்காதது மட்டுமில்ல, குழுச்சிந்தைக்கே பொறுக்காதது. அதான் ராவணன் பொங்கிட்டான். விபீஷணனை திட்டி அவமானப்படுத்திடறான்.”
உதயகுமார் அமைதியாகக் கேட்டிருந்தார்
“நீங்க வீபீஷணன் மாதிரி பேசியிருக்கீங்க. அதான் திட்டு வாங்கியிருக்கீங்க”
“அப்ப விபீஷணனும் நானும் தப்புங்கறீங்க?”
”இல்ல” என்றேன். “குழுச்சிந்தைக்கு மாறா சிந்திக்க ஒரு பெரும் ஆளுமை தேவை. தைரியம் தேவை. அங்கு அறிஞர்களாயிருந்த படைத்தலைவன், கும்பகர்ணணின் அறிவை விட, விபீஷணனின் அறம், தைரியம் நேர்மை நின்றது பாருங்க, அதான் கம்பன் அவனை “அறிஞரில் மிக்கான்” னு புகழ்றாரு. நீங்க அடிபட்டீங்க. ஆனா அறம் பக்கமா நின்னீங்க. எது வேணும்னு நீங்கதான் தீர்மானிக்கணும்.”
ஐந்து நிமிட அமைதிக்குப் பின் “கிளம்புவோமா?” என்றார். அவர் முகம் சற்றே தெளிந்திருந்ததைப் போலிருந்தது. அது எனது குழுமச்சிந்தையாகவும் இருக்கலாம்.

5 Replies to “கம்பனும் சேல்ஸ் மீட்டிங்கும்”

  1. Sudhakar, அற்புதமான கதை .. இன்றைய கார்பரேட் சூழலின் Stress க்கு இந்த கதை மிக பொருத்தமானது.. சரியான வழிகாட்டுதல்.. மேலும் இப்படி நிறைய படிக்க ஆசை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.