வியாழன் இரவு

dubai

வியாழன் இரவுகளில் துபாயின் தெருக்களிலும் இந்தியர்களின் அறைகளிலும் காமமும் போதையும் கலந்தோடும் என்று சொன்னார் கரண். வல்லா என்றான் ஷிராஸ். சுரேஷ், “கவிதையா கரண்” என்று கேட்டான். கரண் சிரித்துக்கொண்டே ஏப்பம் விட்டார். சுரேஷ் மூக்கைப் பிடித்துக்கொண்டான். கரணின் கண்கள் பூனையின் கண்களைப் போல் எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். ஏன் எதையாவது எப்போதும் யோசிச்சிக்கிட்டே இருக்கிறீங்க கரண் என்று சுரேஷ் ஒரு தடவை கேட்டபோது மிகப் பொதுவாக எல்லாரும் அபப்டித்தான் என்று கரண் சொல்லிவிட்டார். நீண்ட நாள் சுரேஷ் அந்த பதிலையே யோசித்துக்கொண்டிருந்தான்.
ஒரு கேள்விக்கு ஷிராஸ் சொன்ன பதிலும் லேசுப்பட்டதல்ல என்ற நினைப்பு ஓடியது சுரேஷுக்கு. “அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எந்த அளவுக்குன்னா, கல்யாணத்தப்ப அவ ரெண்டு மாசம்னா பார்த்துக்கோ” என்று அவன் மனைவியைப் பற்றித் தன்னிடம் சொன்னதை சுரேஷ் நினைக்காத நாளில்லை. ஷிராஸின் நகைசுச்சுவை உணர்வு எல்லையற்றது. அதில் எப்போதும் கொஞ்சம் செக்ஸ் கலந்திருக்கும். ஷிராஸ் பேச ஆரம்பித்தால் அனைவரும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். ஷிராஸ் சிரித்துக்கொண்டே இருந்தால் போதையில் இருக்கிறான் என்று அர்த்தம் என்பது அவர்கள் அனைவருக்குமே தெரியும்.
பிலிப்பனோக்கார கார் டிரைவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். காரில் நெருக்கி அடித்து உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு பிரேக் அடிச்சா ஆளுக்காளு முத்தம் கொடுத்துக்கவேண்டியதுதான் என்றான் ஷிராஸ். அய்ய என்றான் சந்தோஷ் மேனன். சந்தோஷ் மேனனின் வழுக்கைத் தலை அவனுக்கு நாற்பது வயதிருக்கும் என்று காட்டினாலும் அவனுக்கு 30 வயதுதான் ஆகி இருந்தது. ஷிராஸ் எப்போதும் அவனை கஸண்டி என்றே அழைப்பான். அவனை வெறுப்பேற்றுவதற்கென்றே தன் தலைமுன்பு வந்து விழும் முடியை அடிக்கடி கோதிக்கொண்டான் சுரேஷ். ‘பின்னே… இவன் ரஜினியல்லே’ என்றான் சந்தோஷ் மேனன். அதுவரை அமைதியாக அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பிஜூ, “அது கொள்ளாம்” என்றான். சுரேஷ், பிஜுவின் தொப்பையைத் தட்டி, “தொப்பை போட்ட ஃபார்ட்டி கிழவன்ஸ்… பொறாமை எதுக்கு? ஐ’ம் தி ஒன்லி எலிஜிபில் பேச்சிலர்” என்றான். “பொறாமையோ… ஏடா குரங்கா, நீ ஒருபக்ஷே எலிஜிபிள் பேச்சிலராயிருக்கும். பக்ஷே, ஞெங்களா எலிஜிபில் ஜென்ஸ், அறியோ நினக்கு? எக்ஸ்பீரியஸ் வேணும் கேட்டோ” என்று சொல்லிவிட்டு, “இன்னு போகேண்டே” என்றான் ஷிராஸ். சந்தோஷ் மேனன், பிஜு, கரண் மற்றும் ஷிராஸின் கண்கள் ஒரு படபடப்புடன் மின்னுவதைக் கண்டான் சுரேஷ்.
சுரேஷின் உடலில் சிறிய பதற்றம் எழுந்து அடங்கியது. கரண் சத்தமாக, “சுரேஷுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இந்த வாரம் நாம கலக்கறோம்” என்றார். பிஜு போதையில் “அது கொள்ளாம். பக்ஷே எத கலக்க” என்று மீண்டும் மீண்டும் சொன்னான். ஷிராஸ், “வல்லா” என்றான்.
சந்தோஷ் மேனன் பிலிப்பனோக்காரனிடம் பர்துபாய்க்குப் போகச் சொன்னான். பர்துபாயின் பேருந்து நிலையைத்தை ஒட்டி இருந்த பிஸினஸ் க்ளாஸ் ஹோட்டலின் முன்பு வரிசையாக பல கார்கள் நின்றிருந்தன. மணி இரவு இரண்டைத் தொட்டிருந்தது. கையில் ஹேண்ட் பேக்குடன் பல நாட்டுப் பெண்கள் லிப்ஸ்ட்டிக் பூசி தெரு ஓரத்தில் நின்றிருந்தார்கள்.
பிலிப்பனோக்காரன் ஒரு பெண்ணின் பக்கத்தில் போய் நிறுத்தினான். சுரேஷ், “நான் வீட்டுக்குப் போறேன்” என்றான். “வீட்டுல என்ன இருக்கு தம்பி. இங்கதான் ஸ்வர்க்கம் இருக்கு” என்றான் சந்தோஷ் மேனன். ஷிராஸ் உடனே, “நிண்டெ தமிழ் கொள்ளால்லோடா” என்று சொல்லிவிட்டு, சுரேஷிடம், “எடா, கல்யாணத்தின முன்னெ நினக்கொரு எக்ஸ்பீரியன்ஸ் வேண்டே?” என்றான். சுரேஷ் அமைதியாக இருந்தான். “ஈ ஃபிலிப்பனோ ஐயன்பாக்ஸாடா” என்றான் ஷிராஸ். சொல்லிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினான். விடாமல் சிரித்துக்கொண்டே இருந்தான்.
கரண், “சுரேஷ், நீ ஜஸ்ட் எங்க கூட இரு. ஒனக்கு அடுத்த வாரம். எங்களுக்கு வாரா வாரம்” என்றார். சந்தோஷ் மேனன், “சரி சரி தம்பி. பயப்படாத, நான் இருக்கு உனக்கு” என்று சொல்லிவிட்டு, “இவ்விடெ இரிக்கு. நமக்கு ஒண்ணா போவாம்” என்றான். ஷிராஸ் அதற்கும் சிரித்தான். “இவன குளிப்பாட்டினாத்தான் சரியாகும்” என்றார் கரண்.
சந்தோஷ் மேனன் காரில் இருந்தபடியே ஒரு பெண்ணிடம் பேரம் பேசினான். பிஜூ சந்தோஷிடம், “நல்ல பூ வெச்சிருக்குன்ன குட்டி உண்டோ நோக்கு” என்றான். சுரேஷ், “ஓ பின்ன…” என்றான். “ஜாதகமும் கேட்கவா” என்றார் கரண். தெருவில் நின்றிருந்த பெண் என்னவோ கோபமாகப் பேசினாள். கடைசியாக பாஸ்டர்ட்ஸ் என்று சொன்னது மட்டும் சுரேஷ் காதில் விழுந்தது. ஷிராஸ் “கிட்டி” என்றான். சந்தோஷ் மேனன் சிரித்துக்கொண்டே “இன்னு நன்னாயி” என்றான். சுரேஷ் பதற்றத்துடன் “நம்ம போயிடலாம்” என்றான். “தம்பி, நீ ஒரு கொச்சு” என்று சொல்லி சிரித்தான் ஷிராஸ். கரண், “கொழந்தையா? இவனா” என்றார். பிலிப்பனோக்காரன் ஏனோ தலைகவிழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தான். “இவனுக்கும் மலையாளம் தெரியுமா” என்று சுரேஷ் ரகசியமாகக் கேட்டதற்கு கரண், “அது உலக மொழி” என்றார்.
கார் அந்த இடத்திலிருந்து நகன்று சென்றது. ஷிராஸ், “இன்னு வேண்டா… நமக்கு முறிக்கேறாம்” என்றான். சுரேஷ், “கரண், அவ ஏன் திட்டினா. இந்த பிலிப்பனோ வேற கமுக்கமா சிரிச்சானே” என்று கேட்டான். கரண், “மேனோன் 40 திர்ஹாமுக்கு கூப்பிட்டான். அஞ்சு பேருக்கு 40 திர்ஹாமான்னு அவ காறித் துப்பிட்டா” என்று சொன்னார். “ஐயோ, நாலு பேர்தானே” என்று சுரேஷ் அலறவும், சந்தோஷின் முதுகில் தட்டி சத்தம் போட்டுச் சிரித்தார் கரண். “பின்னெ அவளு பத்தினியல்லே” என்றான் சந்தோஷ் மேனன்.
பர்துபாயின் ஆள் அரவமற்ற முக்கியச் சாலையில் கார் விரைந்தது. ஒன்றின் மேல் ஒன்று படுத்துக் கிடந்த பூனைகள் கார்ச் சத்தத்தில் கலைந்து ஓடின. சந்தோஷ் மேனன், “பாவம்” என்று சொல்லவும், சுரேஷ் கரணிடம், “கரண், ஏன் துபாய் தெருல ஏகப்பட்ட பூனைகள் இருக்கு?” என்று கேட்டான். “ஷிராஸ்கிட்டதான் கேக்கணும் இஸ்லாத்துக்கும் பூனைக்கும் என்ன உறவுன்னு” என்றார் கரண். ஷிராஸ், “எடா, ஒரு ஆண் பூச்சா உண்டெங்கில் இன்னொரு பெண் பூச்சா உண்டாவனும், அதே நியமம்” என்றான். பின்னர் சிரித்துவிட்டு, “நாள பறையாம்” என்று சொல்லிவிட்டுத் தெருக்களின் இருளில் பெண்களின் முகங்களைத் தேடத் துவங்கினான்.
தெருவோரம் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கடைகள் முளைத்திருந்தன. “சத்யம் ஆ கடை மலையாளியுடெதன்னெயா” என்றான் பிஜு. சுரேஷ், “காக்ரோச்சஸ்” என்றான். சந்தோஷ் மேனன் கோபமாக, “காக்ரோச் நிண்டெ அச்சி” என்றான். சுரேஷ் உடனே, “ஹலோ… என்னை பேசுங்க. அதோட நிறுத்துங்க” எனவும் மற்ற நால்வரும் அவனிடம், “தேஷ்யம்… கோபம் வேண்டா தம்பி… சுஹுர்த்துக்களல்லெ” என்று சொல்லிச் சிரித்தார்கள். ஷிராஸ், “காக்ரோச்சஸ் எங்கன செய்யும்?” என்று சொல்லவும் பிஜு அவன் முதுகில் சிரித்துகொண்டே பலமாகத் தட்டினான்.
அடுக்குமாடிக் கட்டடத்தின் வாசலில் வாட்ச்மேன் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பி, தங்கள் கையில் வைத்திருந்த மது பாட்டில் ஒன்றை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தங்கள் அறைக்குச் செல்ல லிஃப்ட்டில் ஏறினார்கள். பிஜு கேட்டான், “ஈ வாட்ச்மேனிண்டெ பார்யா எவ்விட? நாட்லயா இவ்விடதன்னெயா?” கரண், “ரொம்ப முக்கியம்” என்றார். சந்தோஷ் மேனன், “முக்கியம்தான் சாரே” என்றான். தங்கள் வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாளிடும்போது, பக்கத்து வீட்டுக் குளியறையில் யாரோ குளிக்கும் சத்தம் கேட்டது. “அடுத்த வீட்டுப் பெண்குட்டி ஈ சமயம் எந்தினா குளிக்குண்ணது?” எனக் கேட்டான் பிஜு. பிஜுவின் தொடையைத் தட்டிச் சிரித்துக்கொண்டே “அவளு அராபியாடா” என்றான் ஷிராஸ். “பின்னெ ஸெரியா” என்றான் பிஜு.
இரண்டு பெட் ரூமும் ஒரு சமையலறையும் ஒரு பொது அறையும் உள்ள பெரிய வீடு அது. பொது அறையில் உள்ள சாப்பாட்டு மேஜையைச் சுற்றி ஐவரும் உட்கார்ந்துகொண்டார்கள். சந்தோஷ் மேனன் கையில் சீட்டுக்கட்டுடன் வந்து உட்கார்ந்தான். பிஜு எழுந்து டிவியை ஆன் செய்துவிட்டு, ஃப்ரிட்ஜில் இருந்து மது பாட்டிலையும் கடலையையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் பரத்தி வைத்தான். டிவியின் முன்பு ஒரு சிடி கிடந்தது. அதைக் கையில் எடுத்து கண்ணில் ஒற்றிய பிஜு, “எண்டெ தெய்வமே” என்று சொல்லிவிட்டு, பொன்னோ பூவோ என்று அந்த சிடியை அதே இடத்தில் வைத்தான். ஷிராஸ் சத்தம்போட்டுச் சிரித்தான்.
“எனக்குத் தூக்கம் வருது. தூங்கப் போறேன்” என்று நழுவிய சுரேஷை கரண் இழுத்துப் பிடித்து உட்கார வைத்தார். சந்தோஷ் மேனன், “அடுத்த ஆழ்ச்ச நீ இங்கன உறங்குவோ?” என்றான். சுரேஷ் வெட்கப்படுவதைப் பார்த்து “ஐயடா… தம்பிக்கு வெட்கம்” என்று பிஜு சொன்னான். “அவன் எங்கன உறங்கும்?” என்றான் ஷிராஸ். கரண் சீரியஸாக “சுரேஷ், தூங்காம என்ன பண்ணுவ?” என்றார். “பாவகுட்டியா ஈ தம்பி” என்று பிஜு சொன்னான். சுரேஷைப் பார்த்து, “30 திவசம். ஒறங்கறது. ஒறங்க…ற…து. 100 ப்ராவஸ்யம்” என்றான். கரண், “போதுமா?” என்றார். ஷிராஸ், “ஒரு பெண்ணல்லெ… மதி” என்றான். சுரேஷ் பதிலே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவன் மனதுக்குள் என்னென்னவோ எண்ணங்கள் அலைமோதிக்கொண்டிருந்தன.
ஐந்து பேருக்குமாக சீட்டைக் கலைத்துப் போட்டான் பிஜு. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார் கரண். எதோ நினைத்தவராக, “இன்னைக்கு பார்த்தவ நல்லா இருந்தாள்ல” என்றார். சந்தோஷ் மேனன், “அய்ய… சாதனம்” என்றுவிட்டு, சுரேஷை நோக்கி, “நீ ஆ ஹோட்டலில் டான்ஸ் பாத்திருக்கா தம்பி” என்று கேட்டான். சுரேஷ், “ஏது டான்ஸு?” என்றான். சந்தோஷ் சத்தமாகச் சிரித்துக்கொண்டே “நல்ல டான்ஸாடா தம்பி… ஷிராஸ், தம்பிக்கு பறஞ்சி கொடுக்கு” என்றான்.
ஷிராஸ், “ஒரு பெண்ணு ஆடும் தம்பி. ஒவ்வொரு ட்ரஸா அவிழ்க்கும். காணான் கொதியாவும். கண்டில்லே? எடா இது துபாயா. தமிழ்நாடல்லா. இவ்விடெ நீ அடிச்சி கலக்கணும் கேட்டோ” என்றான். பிஜு, “எத கலக்க” என்றான். சந்தோஷ் மேனன் நேரில் காணும் பரவசத்துடன் “அடி பொலி” என்றான். சுரேஷ், “அப்புறம்” என்று சொல்லவும், ஷிராஸ், “இவன் ஆளு கொள்ளால்லோ…” என்றான். கரண், “அப்புறம் என்ன? ஒரு கர்ச்சீஃப் மட்டும் இருக்கும். அப்பொ லைட் ஆஃப் ஆகும்” என்று சொல்லிவிட்டு, சந்தோஷிடம் “நீ அந்த கர்ச்சீஃபை ஒரு தடவ எடுத்தேல்ல?” என்றார். பிஜு உடனே, “இவன் ஆளு டூப்பா” என்றான். “டூப்பு நீயாடா பட்டி. பின்னெ நீ சென்னு எடுக்கடா” என்றான் சந்தோஷ் மேனன். “ஞான் நல்ல க்றிஸ்டியனல்லோ” என்றான் பிஜு.
கரண், “கடைசில யார்தான்யா அந்த கர்ச்சீபை எடுத்தீங்க?” என்றார். “ஆ தேங்கா உறியாயிருக்கும்” என்று சொல்லவும் நான்கு பேரும் சத்தம்போட்டுச் சிரித்தார்கள். “மனசிலாயில்லா அல்லா சுரேஷெ?” என்று கேட்டான் பிஜு. “தேங்கா உறி மனசிலாயில்லா? நம்ம சஷியடா. அவனா தேங்கா உறி. நீ தேங்கா உறி கண்டிட்டுண்டோ? இங்கனயா தேங்காயா உறிக்கணும்…” என்று சைகையில் தேங்காய் உறிப்பதைச் செய்துகாட்டிக்கொண்டே கண்ணில் நீர் வரச் சிரித்தான். “பாவம் சின்ன பையன், விடுங்கடா” என்றார் கரண்.
மெல்ல பேச்சு மாறியது. எதோ நினைத்தவனாக சந்தோஷ் மேனன், “ஆ மானேஜர் தெண்டி நாள என்ன விளிக்கிட்டே…. ஞான் ஸெரிக்கும் காணிச்சு கொடுக்கும்” என்றான். சுரேஷ், “மேனேஜர் தெண்டிதான்” என்றான். கரண், “நாளைக்கு நிச்சயம் கூப்பிட்டு சைட்ல அவசர வேலை வான்னு சொல்லத்தான் போறான்” என்றார். பிஜு, “அவனெ… ஞான் வெச்சிட்டுண்டு” என்றான்.
சத்தமே இல்லாமல் ஏஸியாநெட் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. “ஏஸியாநெட்டில் ஷகிலா மூவி கண்ட ஒரு காலம் ஒண்ணு உண்டு. பறையான் வையா” என்றான் சந்தோஷ் மேனன். “சாரே, தம்பிக்கு பறஞ்சு கொடுக்கு” என்றான் பிஜு. கரண், “ஏஸியாநெட்ல ஷகிலா படம் போட்டிருக்காங்க முன்னாடி, அதைச் சொல்றான்” என்றார். சுரேஷ் ஆச்சரியமாக, “அப்படியா” என்றான். “ஆ மேனேஜர் தெண்டி இவ்விடெ உண்டாயிருந்து அன்னு” என்றான் பிஜு. “ஏடா, ஆ கத ஓர்மையுண்டோ… மேனேஜரிண்டே அலியனிண்டெ கத?” என்றான் சந்தோஷ் மேனன். பிஜு வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான். “பொன்னு மாஷே, அதுன மறக்குவோ” என்றான். சிரித்துத் சிரித்துக் கண்களில் இருந்து அவனுக்கு நீர் வழிந்தது. சுரேஷ், “என்ன இவன் இப்படி சிரிக்கறான்?” என்றான்.
கரண் சொன்னார், “அப்பத்தான் அந்த மேனேஜரோட பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. பொண்ணையும் மாப்பிள்ளையும் இங்க துபாய்க்கு ஹனிமூனுக்கு கூட்டிக் கொண்டு வந்திருந்தான். அவனுக்கு சொந்த ஊரு கலமச்சேரி. இங்க வந்து ஹோட்டல்ல தங்கவெச்சா காசு செலவாகும்னு தன் ரூம்லயே தங்க வெச்சிட்டான். அதச் சொல்றான்.”
சுரேஷ், “ஹனிமூன் மாமனாரோடயா… அய்ய” என்றான். சந்தோஷ் மேனன், “பாவம் பொண்ணு மோளல்லே… எந்தெங்கிலும் அலியன் போக்கிரித்தனம் காணிச்சால்…” என்றான். கரண், “ஆனா மேனேஜர் சொன்னதுதான் காமெடி. அவங்க பெட்டுக்கும் தன் பெட்டுக்கும் நடுவுல ஸ்கிரீன் போட்டுட்டேன்னு சொன்னான் அந்தக் கிறுக்கன்” என்றார். “சத்தம் கேக்காதா” என்றான் சுரேஷ். சந்தோஷ் மேனன் கையைத் தட்டி, “கொழந்த கொள்ளாம்” என்றான். “ஏடா, சத்தம் நல்லதா. நீ கலக்கு” என்றான். பிஜு “எத கலக்க” என்று தமிழில் கேட்டான். கரண், “இவன் தமிழ்லயே கொல்றானே” என்றார். ஷிராஸ், “சுரேஷு, நிண்ட அம்மாயி அச்சன் எங்கனயா?” என்று அப்பாவியாகக் கேட்டான்.
அதிகாலை நான்கு மணி வரை என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். ரிஷப்னலிஸ்ட் மாலினியைப் பற்றி சந்தோஷ் மேனன் பேசிக்கொண்டே இருந்தான். “அசல் குட்டியா” என்றான் பிஜு. “மிடுக்கி” என்றான் மேனன். பின்பு எதோ நினைத்தவனாக, “ஞான் ஒறங்காம் போகுன்னு” என்று சொல்லிவிட்டு அருகில் கிடந்த மெத்தையில் படுத்துக்கொண்டு உடனே தூங்கிப் போனான். “நாள பள்ளிக்குச் செல்லணும். ஞான் ஒறங்கட்டே” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான் பிஜு. ஷிராஸ் நாற்காலியில் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தான்.
கரணும் சுரேஷும் உட்கார்ந்திருந்தார்கள். டிவி சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. கரண், “என்னப்பா, கல்யாணத்துக்கு எல்லாம் ரெடியா” என்றார். “ரெடி கரண்” என்றான். கரண் ஏதோ நினைத்தவராக அருகில் இருந்த மதுவை எடுத்து மடக் மடக்கென்று குடித்தார். “கல்யாணத்துக்கு முன்னாடி உள்ள காலம் மாதிரி வராது சுரேஷ். பொற்காலம்” என்றார். சுரேஷ் அமைதியாக இருந்தான்.
“வருஷத்துக்கு ஒரு தடவை முப்பது நாள்…” என்றார். “அவன் சொன்னதும் சரிதான். நூறு தடவை” என்று சொல்லிவிட்டு, மீண்டும் எதோ யோசித்தவராக, “பாவம் பிஜு. போன தடவை அவன் போனப்ப அவன் பொண்டாட்டிக்கு அம்மை போட்டிருந்தது” என்று சொல்லிவிட்டு, தட்டில் இருந்த கடலையை வாயில் போட்டுக்கொண்டார். சுரேஷ், “பாவம்” என்றான். “உண்மையிலயே பாவங்கள்தான். இத்தன பேசுறாய்ங்கள்ல, ஒருநாள் கூட இவைங்க இங்க ஒருத்திகிட்டயும் போனதில்ல… இது ஒரு விளையாட்டு இவைங்களுக்கு. ஓகே, எங்களுக்கு. இந்த கர்ச்சீப்பு கதையெல்லாம் சும்மா. அங்க பெல்லி டான்ஸ்தான் நடக்கும். இவைங்களுக்கு யாரோ சொன்னதை இவைங்க திரும்ப சொல்லி, நாங்க உனக்கு சொல்லி…” என்றார். கரண் எல்லா இடங்களிலும் சுற்றிவிட்டு இங்கே வந்து இப்படி முடிப்பார் என்பது சுரேஷுக்குத் தெரியும். அந்தக் கணத்துக்காகக்த்தான் காத்திருந்தான். அன்றைய வியாழன் இதோடு முடிவுக்கு வரும். சுரேஷ் அமைதியாக இருந்தான். கரண் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அமைதியைக் கலைக்கும் விதமாக சுரேஷ், “நம்பிட்டேன்” என்றான். கரண் மென்மையாகச் சிரித்தார்.
“ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போகும்போது இனி வரமாட்டேன்னு சொல்லிட்டுத்தான் ஷிராஸ் ஃப்ளைட் ஏறுவான்” என்ற கரண். “து… பா…. ய்…” என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லிப் பார்த்தார். அதையே இரண்டு மூன்று நான்கு முறைகள் சொல்லிப் பார்த்தார். தலையை உலுக்கிக் கொண்டார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி காலை ஆறு என்று காட்டியது. “ஏழரை ஆச்சு… அங்க பையன் இந்நேரம் எந்திரிச்சிருப்பான். ஒரு போன் பண்ணிட்டு தூங்கறேன். நீயும் போய் தூங்கு” என்று சொல்லிவிட்டு போனை எடுத்துகொண்டு பால்கனிக்குச் சென்றார். ஒரு துபாய் வெள்ளி அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. இன்னொரு துபாய் மெல்ல விழிக்கத் துவங்கி இருந்தது.

One Reply to “வியாழன் இரவு”

  1. பள்ளிக்குழந்தைகள் பேச்சுப்போட்டியில் மனனம் செய்துவந்தததை ஒப்புவிப்பார்கள். அவர்களுக்கு தாங்களாகவே சிந்தித்த கருத்துக்களை வைத்துப்பேசும் எண்ண வலிமை வளர்ச்சியடையாத வயது ஆதலால். மடமடவென மூச்சுவிடாமல் சொற்றொடர்கள் விழும். பேச்சுப்போட்டி என்ற பெயரில் ஒப்புவித்தல் போட்டி. இதுதான் என் நினைவுக்கு வந்தது இக்கதையைப்படித்த போதும், முடித்த போதும். சிறுகதை எழுதுவது தொடக்க‌ காலத்தில் முதலில் இந்நடையே கையாளப்படுத்தப்பட்டது. முதலில் நாம் மாட்டுவண்டியில்தானே போனோம்?. ஆசிரியர் சுலபமான வழியைக் கண்டு சோம்பேறித்தனமான தமிழில் படைத்துவிட்டார். மாட்டுவண்டியை விட மாட்டார் போலும்!
    கதை வெளிநாட்டில் வாழும் தென்னிந்திய இளைஞர்களைப் பற்றியது. இந்தியாவிலும் பிறமாநிலங்களில் வாழும் ஒரே மாநிலத்தைச்சேர்ந்த அல்லது அண்டை மாநிலத்தைச்சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக அறையில் வாழும்போது என்ன செய்வார்கள்? விபச்சாரிகளைப் பற்றியும் அனுபவத்தைப்ப்ற்றியும் கிண்டல் செய்துகொள்வார்கள். இடையிடையே மதுவும் அருந்திக்கொண்டு. விடுமுறை நாட்களில் ஊர் மேய்வார்கள். அவர்களுக்குள் இருந்து தொல்லைதரும் நினைவுகளுக்கு ஒரு ஆன்டிடோட். தெரிந்ததே.
    தெரிந்த கதையைத் தெரிய இங்கே ஒரு கதை. கதை இதைத்தாண்டி எங்கும்போகவில்லை. அப்படியும் கதை இருக்கலாம். அதாவது நன்கு தெரிந்த பொருளையும் கதைக்கலாம். ஆனால் அங்கு ஏதாவது ஒரு புதுச்சுவையை உருவாக்க வேண்டும். மேலோட்டமாக; அல்லது கீழோட்டமாக. காணாத ஒன்றைக் கண்ட உணர்வைத்தரவேண்டுமே? இங்கு ஒன்றுமே இல்லை. கடினமாக எப்படியோ படித்து முடித்துவிட்டேன்.
    இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் – மலையாளச் சொற்கள்.. தொடக்கத்திலிருந்து கடைசி இரு பத்திகளுக்கு முன்புவரை மலையாளத்தின் ஆதிக்கம் எதார்த்தம் என்ற பேரில் பேயாட்டமாடுகிறது. நான் இப்படி பிறமொழி உரையாடல்கள், பேச்சுக்கள் ஊடே செல்லும் சிறுகதைகள்; நாவல்களைப்படிதததுண்டு இதைக்கையாள்வோர் அதில் தொய்வில்லாமலும் எரிச்சலைக் கொடுக்காமலும் நடாத்திச்சென்று சிறப்படைவதுண்டு. இக்கதையாசிரியருக்கு அக்கலை இன்னும் வரவில்லை.
    — பல. விநாயகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.