இருவரும் மெளனமாக அந்த சிமெண்ட் பெஞ்சில் காத்திருந்தோம். வெகுநேரமாக எதுவும் பேசிகொள்ளவில்லை. இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. கஷுமியின் முகத்தைப் பார்த்தேன். சலிப்பின் சுவடேயில்லை. எந்த நேரமும் அது நிகழும் என்பதுபோல் அமர்ந்திருந்தாள். ஐபோனில் பதிவு செய்வதற்காக விரல்கள் தயார்நிலையில் இருந்தது. நான் சலித்துபோய், நாம் நடக்கலாம் என்று சொல்லவாயெடுத்த அந்த நொடியில் எங்கிருந்தோ பறந்து வந்து எங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் அமர்ந்தது, அந்த உகியிசு குருவி. மேல்பகுதி முழுவதும் ஆலிவ் ப்ரவுன் நிறத்திலும், பஞ்சுபோன்ற உடலின் அடிப்பகுதி வெளுத்தும் இருந்தது. உட்கார்ந்தவுடன், தலையைச் சிலிர்த்து, உடலில் கொத்திகொண்டது. பிறகு சிறிய வாயை மெலிதாக திறந்து பாடுவதற்க்கு முன் குரலை சரிசெய்துக்கொள்ளும் தேர்ந்த பாடகனை போல் செருமி, க்யூ..க்யூ..க்யூகுயிக்யூ என்றது. ஒரு நீண்ட விசில் போல, ரயில் வண்டியின் கூவல் போல எழுந்து, பிறகு…