அ.முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம். நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.