பிரிக்கப்படாது – அந்தக் கடிதம்

இந்த முறையும் அன்னம்மா கூப்பிட்டி விட்டிருக்கிறார்கள். அதே கதை. அல்லது வேறு கதை. கதையின் கிளைக்கதை. உட்கதை. எதுவாகவும் இருக்கலாம்.

*

அன்னம்மா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தார்கள்.

”வாடா ..வா” என் தலை கோத முயற்சித்து கன்னம் தொட்டு தடவிய விரல்களில் சின்ன நடுக்கமிருந்தது. ஈரம் இருந்தது. வாசனை வந்தது. பேர் அன் லவ்வ்லியாக இருக்கும்.

எப்போதும் அலங்காரம். அது அலங்காரம் என தெரிந்துவிடாத அலங்காரம்.

”படிச்சியா.. மவே போயிட்டார்.. “

“பார்த்தேன்மா.. “

“ என்ன மனுசண்டா.. சச்ச லவ்லி கேரக்டர்.. “ சொல்லிய கண்கள் கலங்கின.

எனக்கும் மவே போனது பெரிய வருத்தமாகப்படவில்லை. வயசாகி விட்டது. வயது 80க்கும் மேல்.எழுதி கை நின்று போயி இருபது வருடங்களாகி விட்டன.  அங்காங்கே குறிப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறவர். அமைதியான குடும்பம். பேரன், பேத்தி பார்த்துவிட்டு, போயிருக்கிறார்.

அன்னம்மா மவேயின் இறப்பில் மூழ்கியிருந்தார்கள்.  அந்த கணத்தில் அன்னம்மாவின் முகம் பார்க்க வேண்டாம் என்று உள்மனம் கூவிற்று.

முகம் பார்த்தால் அவர்கள் அழப் போவதை பார்க்க நேரிடும். மற்றவர் பார்க்கும் போது கொஞ்சம் அதிகமாய் பெருகும் கண்ணீர் துளிகள். நிலம் பார்த்து, வெறும் ‘உச்சு’ ஒலியை மட்டும் எனது துக்கத்தின் தூதுவனாய் எழுப்பினேன்.

அன்னம்மாள் எனது ஒலி கேட்டு, நான் மிகவும் துக்கமடைந்ததாய் நினைத்துக்கொண்டார். அதற்கு சுருதி சேர்க்கும் வகையில் கொஞ்சம் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். ஏற்கனவே கேன்சரால் தொய்ந்து போன குரல். கொஞ்சம் இழுத்து இழுத்து அழுதல் அவரின் இயல்பு. அழுது முடித்த பின்போ, முடிக்கும் முன்போ அவருக்கு கைக்குட்டை வேண்டும்.

என் பையிலிருந்ததை எடுத்து கொடுக்க எண்ணி, ஏதோ தடுக்க அப்படியே விட்டு விட்டேன்.

அழுகை நாராசமாயிருந்தது. அதன் டெசிபல்களும், நாடகத்தன்மையும் கூடியதாய் உணர்கிறேன். இது வெறும் எனது நினைவடுக்கின் எண்ணப் பதிவாய் இருக்கலாம்.

டேபிளிருந்து ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்துக் கொடுத்தேன். காத்திருந்தவரைப் போல வாங்கித் துடைத்துக்கொண்டார். துடைக்கும் போது ஒரு நாசுக்குத்தனம்.

அன்னம்மாள் அப்படியேதானிருக்கிறார்கள். இதுபோல எத்தனை தடவை என நான் மனக்கணக்கு போட ஆரம்பித்தேன்.

*

ஜரா இறந்து போதும் அழுது அழுது கண்கள் வற்றி போய் ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படியானது. இலக்கிய வட்டத்திற்கு நான் தான் அதை செய்தியாக்கினேன். ஆஸ்பத்திரியிலியிருந்து அவர் எழுதிய இரங்கல் கடிதம் “ ஒவ்வொரு சொட்டாய் விழும் சைலனின் பிம்பத்திலிருந்து நம் நினைவுகளை கோர்த்துப் பார்க்கிறேன். “ என்று ஆரம்பிக்கும் அந்த கடிதம் சாகாவரம் பெற்றது என்று அன்னம்மாவின் வட்டத்தில் பேசப்பட்டது. ஜராவின் ஓவ்வொரு நினைவேந்தல் கூட்டத்திலும் அன்னம்மாவின் இந்த வரிகளை சொல்லிவிட்டுத்தான் பெரும்பாலானோர் பேசினார்கள். முதல்வருட அஞ்சலிக் கூட்டத்திற்கு அன்னம்மாவை ப்ளைட்டில் அழைத்துப் போனார்கள்.

கிமகா செத்துப் போன போது இரங்கல் வரி ஏதும் வராதது ஆச்சரியமாயிருந்தது. அந்த வாரயிறுதில் நீள் இரவில் மதுக்கோப்பை உறிஞ்சியவாறும், அதன் கண்ணாடி நுனிகளை பல்லால் கடித்தவாரும் இருந்தபோது அவரே கேட்டார்.

“ ஏன்டா கிமகாவுக்கு ஒன்னுமே எழுதலைன்னு கேட்கவேயில்லையே..”

நான் அமைதியாயிருந்தேன்.

“ ஆண் பன்னி.. எப்பப் பாத்தாலும் குடும்பந்தான் பெரிசுன்னு..பேத்தல்.. பெண்டாட்டி முந்தானி சுத்தின பய..ஒரு விமர்சகன்னா.. வாழ்க்கையை குலைச்சு போட்டு பாக்க வேணாம்.. வெங்காயம்.. “

“ அம்மா.. முதல்ல அவர்தான் உங்க எழுத்த அடையாளம் கண்டுபிடிச்சு காட்டினது.. “

“ மை புட்.. இந்த பெயர வாங்கிறதுக்குத்தான்.. அந்த தயிர்சாத கம்மநாட்டி.. அப்படி .. ஆரம்ப எழுத்த ஆஹா.. ஒஹோன்னு.. ஏதோ காணதது கண்ட மாதிரி எழுதுருவான்.. தூக்கி விட்ட பத்துல ஒன்னு மேல வந்துட்டாக்கூட.. அவன் தான் ஏணின்னு.. எல்லோரையும் பேச வைச்சிருவான்.. ராஸ்கல்.. “

மடார் மடார் என்று குடிக்க ஆரம்பித்தார்..உள்ளே போன திரவம் ஒரு சமநிலையை கொடுத்ததோ என்னவோ, கொஞ்ச நேர மெளனத்திற்கு பின்,

“ பட்..ஒன் திங்.. எப்ப நான் டவுண்ணாலும்.. ஹீ ஆல்வேஸ்.. சோல்டர் பார் மீ.. இரண்டு கல்யாணம்… டைவர்ஸ்.. அடாப்ட் சைல்ட் கோர்டு வழக்கு.. எவ்வளவு துக்கம்..  எனக்கான எல்லா தனிமையிலும் அவன் வெறும் மெளன சாமியா இருந்திருக்கான்.. ஒரு துளி கூட எல்லை மீறாமா.. சதப்பிரஞ்ஞன் மாதிரி.. ஸ்வீட் பாஸ்டர்ட்…” சொல்லிவிட்டு சிரித்தார்கள். உள்குமிழி உடைந்தது.

அலையாத பாற்கடலின் சதப்பிரஞ்ஞன் – என்ற அஞ்சலி குறிப்பு மறுபடியும் அதிகமாய் பேசப்பட்டது.

இதே போல முற்போக்கு எழுத்தாளர் ஆணிஆறுமுகம் இறந்த போது அவர் எழுதிய அஞ்சலி குறிப்பில், வெளியில் முற்போக்காய் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் எவ்வளவு பிற்போக்குத்தனமாய் இருந்தார் என்பதை மறைமுகமாக சுட்டியிருந்தார். ஆனாலும் அவரின் கொள்கை எவ்வாறு இலக்கியத்தில் கலைநயத்தோடு கலந்திருந்தது என்பதையும் குறிப்பிட தவறவில்லை. அதை எழுத்தாள சங்கம் எல்லா இதழ்களிலும் மறுபிரசம் செய்தது. அவர்களை தன் போட்டா இல்லாமல் எழுத்தை பிரசுரம் செய்தலாகாது என்று எச்சரித்து எழுதி, முடிந்தவரை வித்தியாசமான கோணங்களில் படம் வருமாறு பார்த்துக்கொண்டார்.

அஞ்சலிக் குறிப்பிற்கென்றே தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டவர் அன்னம்மாவாகத்தான் இருக்கமுடியும்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக் வந்து பைபாஸ் செய்துகொண்ட பின்பு தான் அவர் அஞ்சலிக்குறிப்பு எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். ஒவ்வொரு எழுத்தாளர் அஞ்சலிக்குறிப்பிற்கும் அவர் உணர்வு பூர்வமாய் அதிகமாய் உழைக்க வேண்டியிருந்தது.  பலவீனமான இதயம் அதற்கு தோதனதில்லை என்பதால் டாக்டர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தார்.

ஆகவே ஓவ்வொரு தலை விழும்போதும் எனக்கு போன் வரும். சின்னதாய் இரங்கல் கூட்டம் அவரது வீட்டிலே நிகழும். முதலில் அதையே ஒரு நிகழ்வாய், கட்டுரையாய் எழுதிக் கொண்டிருந்தேன்.

அதற்காகத் தான் என்னை கூப்பிட்டு மறைமுகமாய் வரிகளை என்னுள் பதிப்பார்கள். இழவையே ஒரு இயக்கமாக செய்து கொண்டிருக்கிறார் என்று சில விசும்பல்கள் வரத்தான் செய்தன. இழவு இலக்கியம் என்று ஒரு பிரிவு வரப் போகிறது என்று சில நகைப்புகளும் காற்றில் மிதந்தன.

ஒட்டுதல் குறைந்த நான், மரணம் எவ்வளவு மங்கலகரமானது என்று ஒரு நாள் பேசியபின்பு

“ தெரியும். அந்த சாமியார் குஞ்சப் பிடிச்சிண்டு நீ அலையறடா.. நோ ட்ரிங்க்ஸ்.. நோ.. இலக்கியம்னு.. ஹோ.. டாக்.. பக்டூயூ.. “ குடி உச்சத்தில் சத்தமிட்டார்கள்.

அது என் மீதான் அக்கறையினால் அல்ல என்று தெரியும். அவர்களது எழுத்து என்னால் எழுதப்படவில்லை என்பதால். மெல்லிய விரிசல் மேலும் பிளந்தது. எனக்கு பின் ஆனந்தனை கூப்பிட்டு முதுகு சொறிந்தார்கள். படு மொக்கையாக அவன் எழுதிய எழுத்து அன்னம்மாவை மேலும் கடுப்பாக்கியது.

அன்னம்மா என்னை அடிக்கடி அழைக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்ப நிறைய எழுத்தாளர்களும் இறந்து கொண்டேயிருந்தார்கள்.  நானும் முடிந்தவரை தவிர்த்த படியே இருந்தேன்.

நான் தேடிப்போன அன்னம்மா வேறு வடிவானவள். எழுத்தாளரையா நான் தேடிப் போனேன் ?  என்னுள் இருந்த ஒரு பிம்பத்தை தானே நான் தேடிப் போனேன். அப்போதய அறிவுத் தேடலுக்கு கிடைத்த வெளிப் பிம்பம்தான் அன்னம்மாவா ?

அது ஒரு காலம்.

*

நான் அவரின் பரமவிசிறியாய் இருந்த காலம் இருந்தது. இன்னும் அவரது பழைய எழுத்துக்களுக்கு பெரு/சிறு விசிறிதான். ஒரு அறுபதாண்டுகளுக்கு முன்பு வந்த பெண் எழுத்தாளர்களின் வரிசையில், அவரின் வீச்சில் விழாதவர் தான் யாரிருக்கமுடியும்.

”துடைப்பக்கட்டையின் ஈறுகள் “ என்கிற 74ல் வந்த அவரது கதை, தமிழ் சிறுகதை உலகத்தில் ஒரு திருப்பம் என்பார்கள். அது 80களில் நான் தமிழ் இலக்கியம் வந்தபோது என் கைக்கு கிடைத்தது. அப்போது அவர்களும் கல்கத்தாவில் தான் இருந்தார்கள்.

தமிழ் சங்கத்தின் கிருஸ்ணமூர்த்திதான் அந்த விலாசத்தை கொடுத்தார்.

“ நான் கொடுத்தேன்னு சொல்லிப்பிடாதே.. அது எப்படி, எங்க பிராண்டும்னு தெரியாது “

வாங்கிக் கொண்டேன்.

“ பிரைட் வுமன் வுத் மங்கி மைண்ட். அதுவும் வுமன் மங்கி. குதிக்கிறதுக்கு கேக்காவா வேணும்.. “ சொல்லும்போது குனிந்து, குரல் தாழ்த்தி சொன்னார்.

என் மீது கொஞ்சம் அதீத அன்பு உண்டு. பாரதி பைத்தியம் மற்றும் வள்ளியூர்காரன் என்கிற காரணங்கள் தாண்டி, அவர் சொல்கிற தாகூர் கதைகளை அறுவை என்று தெறித்து ஓடாமல் கேட்டுக் கொண்டேயிருப்பவன் என்பதும் கூடுதல் காரணமாயிருக்கலாம்.

அன்னம்மாவை பற்றிய அவரது கருதுகோள்கள்/ கிசுகிசுப்புகள் தான் எனது மனதில் முதல் சித்திரத்தை ஏற்படுத்தியது.  துடைப்பக்கட்டையின் ஈறுகள் கதையை அவர்தான் வங்காளத்தில் மொழிபெயர்த்திருந்தார். அறிவுஜீவிகள் உலகத்தில் அந்த கதை ஒரு சலனத்தை ஏற்படுத்திருந்தது உண்மைதான்.

எங்கள் அலுவலகத்தின் அஸ்வின்கோஸ் அதை பிரபல்யபடுத்தினான். அவன் சொன்னதிற்கு பின்புதான் அதன் தமிழ் மூலத்தை நான் படித்தேன். அஸ்வின்கோஸின் அந்த புகழுரையும் அந்த கதை ஏற்படுத்திய சலனத்தின் அமைதியும் அதை அவன் தாகூரின் தபஸ் கதையோடு ஓட்டிய பாங்கும் என்னை கொஞ்சம் உலுக்கியது. அதற்கு பிறகு அந்த தமிழ் கதையை படித்து அவனோடு சுருதி சேர்ந்துகொண்டேன்.

அந்த முதல் சந்திப்பு, ஒரு ஞானகுருவிற்கும் , ஞானத்தவிப்புடன் கூடிய சீடனுக்குமான சந்திப்பாகவே அமைந்தது. என்ன ஒரு ஆனந்தம். அந்த நாட்களில் அன்னம்மாவின் வாழ்க்கையை ஒரு மெய்யியல் தரிசனமாகவே எனக்குப் பட்டது. ஒரு உபநிடத ரிஸிக்கு இயற்கை கொடுத்த வாழ்க்கை விடைகள் எப்படியிருந்திருக்குமோ தெரியாது. அன்னம்மாவின் ஒவ்வொரு விடையும், அமைதியும் எனக்கு அப்படியாகத்தான் பட்டது.

பேசக் காத்து கிடந்த தினங்கள். எனது வாழ்க்கையின் ஓவ்வொரு நிகழ்வையும் அவரிடம் சொல்லி விட்டு நடத்திய வாழ்க்கை சக்கரம்.

‘மடத்துக்கார மாதிரி பக்தியாயிருப்பார் போல என்று மாமியார், ”போன ஜென்மத்தில என்னவா இருந்தேளோ..”  மனைவி.

எனக்கு எதுவுமே உரைக்காத தினங்கள். கரையில்லா அறிவுக்கடலில் ஒரு பாதுகாப்பான தோனியாய் உணர்ந்த பருவம் அது.

எப்போது, எப்படி பாயும் என்று தெரியாத பாய்ச்சல். கிருஸ்ண மூர்த்தி சொன்னது சரிதான்.

ஆங்கிலப்படுத்த சொன்ன கதையை கொண்டு போய் கொடுத்தபோது கிழித்துப்போட்டது, அடிக்கடி பேசாமல் இருப்பது, வலிய கூப்பிட்டு வரவழைத்து வார்த்தைகளால் கிழிப்பது, உதாசீனப்படுத்துவது, ஒதுக்கி வைப்பது, தேவைப்படும்போது மறுபடியும் இட்டழைப்பது, புதிய சகாக்கள் மீதான் அதீத பாசம் காட்டி தன்னை ஒரு துரும்பாக்கி கொள்ளல்.

சதுரங்க பலகையில் நான் என்னவென்று தெரியாத நிலையில் பல வருடங்கள். உறவு எல்லாம் முடிந்ததென்று நினைத்திருக்க வேளையில், திடீரென்று அன்பு கொப்பளிக்க உறவு மேம்படும். கர்த்தர் அழைக்கிறார் என்பது போல.

ஒருநாள், திடீரென்று போன்வந்தது.

“ கண்ணு ரிஸீஸ்டர் பண்ணிக்கலான்னு இருக்கேன் “

நான் மெளனமாய் இருந்தேன்.

“ என்னடா கோபமா ? “

நான் மெளனத்தை அதிகப்படுத்தினேன்.

ரிச்சர்ட் என்கிற ஜெர்மன் காரனோடு ஒருவருசமாய் இருப்பதாய் கேள்வி. அப்படி கேள்விப்பட்டு முதலில் வாழ்த்த போன போது, தான் ஒருவன் அங்கு வந்திருப்பதாக பிரஞ்ஞை இல்லாதவனாக காட்டிக்கொண்டார்கள். துணைவன் என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்கள், என்னை விடுத்து.  என்னிருப்பு அங்கில்லாததாகவேயிருந்தது.

அவன் நெடிதுயர்ந்த மரமாய் நின்றான். படர்ந்து விழுந்த தலை. மையிட்டு எழுதிய விழிகள். சின்னதாய் ரோஸ் அடித்த உதடு. அதில் இருந்து நழுவி விழுந்த குறுந்தாடி. நிலையில்லா, தத்தளிக்கும் கண் இமைகள். தோள் கண்டார் தோளே கண்டார் வகை தோள்கள். ஐரோப்பிய ஜட்டி விளம்பர ஆளாயிருந்தாலும் ஆச்சரியமில்லை. யூதனாய் இருக்கவேண்டும் என்று பட்டது.

சேர்ந்திருந்தார்கள். வசந்தமாயமாய் வாழ்க்கையிருந்திருக்கலாம். நான் இருப்பற்றவனானேன்.  என்னவிருந்தாலும் அவர்கள் எங்கே, நான் எங்கே,? மனதிற்குள் வலிந்து சமாதான புறாவை பறக்கவிட கற்றுக்கொண்டேன்.

முழுக்க புறக்கணிப்பிற்கு பின், இப்போது ஏன் திடீரென கர்த்தரின் அழைப்பு ?

சரி..மனநிலை மாற்றமிருக்கலாம். ஏதாவது புரட்டி போடும் இலக்கியத்திற்காக வாள் தீட்டிக்கொண்டிருக்கலாம். என் நடத்தை, எழுத்து, உடல் மொழி, அவர்கள் மனதை புண்படுத்தியிருக்கலாம். ராமசங்கரியின் புதுப்புத்தகத்திற்கு நடுநிலையான விமர்சனம் எழுதியது பிடிக்காமல் போயிருக்கலாம். பார்ட்டிகளில் குடிக்காமல் வெறும் கையோடு இலக்கிய முழம் போடுபவன் தனது அறிவுஜீவி வட்டத்திற்கு பொருந்ததவனாய் இருக்கலாம்.சுவாமிஜீயோடு ஆன்மீக உலக ஞானஸ்நானமும், அது சார்ந்த மாற்றங்களும் பிடிக்காமல் இருந்திருக்கலாம். குழந்தை, குட்டி என சமூதாய கட்டத்திற்குள் அடைபவன் இலக்கிய பீடத்திற்கு அருகிலிருப்பது பெண், உடல், சமுதாய் அரசியலில் அவர்கள் தீப்பிழம்பாய் இருப்பதற்கு தடையாய் இருக்கலாம்.

இப்படி எத்தனையோ சமாதான கலாம்கள். மனம் ஓய்ந்து, வலி காய்ந்து, புருக்கு தட்டி, வாழ்க்கை சக்கர வேகத்தில் மறதிப் போர்வையின் கீழடுக்குகளுக்கு பயணித்துக்கொண்டிருந்தது.

அவ்வப்போது, மரியாதை நிமித்தமான அழைப்புக்கும் பதிலில்லை. அப்புறம் கூப்பிடிகிறேன் என்று வேகமாய் வைக்கப்படும் போன். தலைப்பிள்ளை பிறந்த நாளுக்காவது வருவர்கள் என்று எதிர்ப்பார்த்திருந்தேன்.

“ அன்னம்மா.. உங்களுக்கு குளோசாமே “ என்று உறவுக்கார பையன் வந்திருந்தான். மதுரையிலிருந்து கல்காத்தாவிற்கு வருவது வெறும் மாமனாரை கொண்டு விட  மட்டும் வரவில்லை என்றும் அவன் இலக்கிய பைத்தியம் என்று தெரிந்து கொண்டேன்.

“ அக்கா, நிறைய சொல்லிருக்கா.. நீங்க பூக்கோ பத்தி.. பல்லி இதழ் எழுதினதை பத்தி, அன்னம்மாவோட எழுத்தை சிலாகித்து எழுதனதை, பேசினதை பத்தி எல்லாம் சொல்லிருக்கா.. நான் என்ன நினைக்கிறேன்னா.. “

எனது பத்துவயது குறைந்த பிம்பத்தை பார்ப்பதை போல உணர்ந்தேன்.

இலக்கிய வாசல்கள் காற்று பட்டு, வெறும் எழுத்தை படித்துவிட்டு பிம்பங்களை பார்த்துவிடுகிற,  அளந்துவிடுகிற, அணுகிவிடுகிற, அந்த அறிவு வெப்பத்தில் குளிர் காய்ந்து விடுகிற இளம் பருவம், பூவோடு சேர்ந்து நாறும் மணந்துவிடும் என்கிற நப்பாசையோடும், நம்பிக்கையோடும், மறைத்து வைக்கப்பட்ட தன்னகங்காரம், அறிவுப்பூச்சு, தேடல் போர்வை கொண்டு, மிதப்பாய்.. இது ஒரு பருவம். தேடல் பருவம்.

இன்னமும் அந்த குடிபோதை குறைந்ததில்லை எனினும் அது மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

அவனை அன்னம்மாவிடம் கூட்டிப்போக முடியவில்லை. பார்க்க முடியாதென்று ஒரு வரி செய்தி.

சில வருடம் பேச்சு, மூச்சின்றி முழுக்க முழுக்க ஒதுக்கிவிட்டு, ஏதும் நடக்காததுபோல ஒற்றைவரியில் ’ரிஜீஸ்டர் பண்ணிக்கலாம்னு இருக்கேன் வர்றியா’ என்ன மயித்துக்கு.. கையெழுத்துக்காகவா ? விளக்கு பிடிக்கவா ? “என்று சுடுசொல் எழுந்தது.

மடாதிபதிகளின் மரியாதை ஒட்டி இருந்ததுபோல. சடக்கென்று சட்டைபோட்டுக் கொண்டு கிளம்பினேன். அந்த ஜெர்மன்காரன் இல்லை என்று பதிவாளர் அலுவலகம் சென்றபின்பு தான் தெரிந்தது. வேறு யாரோ ஒருவன். குட்டையாய், கொஞ்சம் தடித்து, தாடிசேர் மீசை, மெல்லியதா நறுமணம் கொண்ட சட்டை.

” நன்றிடா.. நீ வருவாய் என்று எனக்கு நம்பிக்கை தான்.. ஒரு சாட்சி கையெழுத்து போடு. ”

போட்டு முடிந்தபின் அவன் பெயர் பார்த்தேன். புனக்குத்து அப்துல்லா. எங்கோ பார்த்த ஞாபகம்.

“ நாசமாப் போச்சு. உனக்கு தெரியாதா.. அவர்டா ?? “ காதில் குசுகுசுத்தான். அஸ்வத் கோஸ் இன்னொரு சாட்சி கையெழுத்து போட அவனும் வரவழைக்கப்பட்டிருந்தான்.

பதிவேட்டை மறுபடி பார்த்த போது தான் அன்னம்மா, ஆயிஸா அன்னம்மாவியிருப்பது தெரிந்தது.

*

எழுத்து, ஆளுமை, உறவுகள் இவற்றையெல்லாம் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பது அடிப்படை அறிவுதான். வாழ்க்கையில் சில அடிப்படை புரிதல்கள் பெரும்பாலான நேரங்களில் கண்ணிலிருந்து மறைந்து விடுகின்றன.

“ எல்லாம் கிரகக் கோளாறுதான் ‘ என்று என் மனைவி அனைத்தையும் ஒற்றைவரியில் தாண்டிவிடுவாள். ஆயினும்,  எளிய புரிதல்களை கூட நிறைய வலிகளோடு தான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

எது நடந்ததோ அது எனக்கு நன்றாகவே நடந்தது. முன்னைப் போல இந்த உறவு இடியாப்பச்சிக்கல்கள் என்னை குழப்புவேதேயில்லை. மெல்லிய ஆன்மீகம் என்னுள் எழுந்து இலக்கியத்திலிருந்து விலக ஆரம்பித்திருந்தேன். அதே மரியாதையுடனும், நன்றியுணர்வுடனும் வலியின்றி விலக கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன்.

மாயாதீத சுவாமிஜியின் நெருக்கமும், நட்பும் அந்த பரிமாற்றத்தை இலகுவாக்கின என்பது இப்போது திரும்பி பார்க்கும்போது தெரிகிறது.

அன்னம்மா பதிவு போலத்தானிருந்தார்கள்.

பதிவுத் திருமணம் முடிந்து சில வருடங்கள் முழுக்க முழுக்க மதபோதகராயிருந்தார்கள். உடல் நடுங்க வைக்கும் எழுத்துக்களில்லை. சரக்கென்று பிரித்து நீ என்னயிருந்தாலும் ஆம்பிள மயிரா என்கிற தொனியில்லை. உலகத்தின் எல்லா யோனிகளின் கண்ணீருக்கும், காமநீருக்கும் தானே, தனது எழுத்து வழிகாட்டி என்கிற பம்மாத்து இல்லை. என்ன பேசினாலும், தன்னை ஒதுக்கி வைக்கத் தான் போகிறார்கள் என்கிற உள்குமைவு இல்லை. அதிலிருந்து எழுகிற வலியிருந்து மறுபடியும், மறுபடியும் கூரான, நயமான, உக்கிரமான ஆனால் அவிகிதத்தில் வந்து விழுகிற எழுத்துகளில்லை.

முன்பெல்லாம் இதிகாச, புராண கதாநாயகர்கள் அன்னம்மாவின் எழுத்தில் புழுதி பட புறமுதுகேறி ஓடிவிடுவார்கள். எந்த ஆண் பிம்பங்களையும் இலகுவாக உடைத்து, அதை ஆர்ப்பட்டமாய் பாடை கட்டுவதில் அன்னம்மாவுக்கு நிகர் அவரே. கிரேக்கிய இலக்கியத்தில் ஆடையில்லாமல் இருக்கிற கடவுளர்களின் குறிகளை அவர் விவரிக்கும் அழகு இலக்கியத்தின் எச்சில் இதுவரை படாத பகுதி. உறவுகள், குடும்பங்கள், பெண் சார்ந்த பிரசனைகள், அதுபற்றி மற்ற பீஸ்ம இலக்கியகர்த்தாக்களின் முகமூடி கிழித்தல் போன்றவற்றில் அவரது முத்திரையிருக்கும்.

அவையெல்லாம் பழங்கதையாகிப்போனதொரு தோற்றத்தோடு அவரது எழுத்து. குடும்பம் பற்றி, மனைவியின் அந்தரங்க அபிலாஸைகள் பற்றி, பெண்ணின் ஆழ்மன வருத்தங்கள் பற்றி என பயணித்தது. அவரது எழுத்து எனக்கு பிடிக்கவும் செய்தது. ஒரு புதிய வாசக வட்டத்தை, அலையை உருவாக்கியது. அப்போது அவர் மிஸர்பூரில் இருந்தார். அவரது கணவரோடு. கணவரின் பழைய மனைவியின் குழந்தைகளை தனது குழந்தையாக பார்த்துக்கொண்டிருந்தார்.

மும்பையில் ஏதோ கவி விழாவிற்காக வந்திருந்தார். எனது வீட்டில் தான் தங்குவேன் என்று தங்கியது என் பாக்கியம். மனைவியுடனும், எனது குழந்தைகளுடனும் அவர் பழகிய விதம் எனக்கு உள்புண் ஆற்றல். தவறாமல் தொழுகை செய்தார்.

அந்த கால கட்டத்தில் தான், குழந்தையின் தொடையில், அடுப்பிற்குள்ளும் ஆண்டவன் ராஜ்ஜியம், முனைவெட்டப்பட்ட குறிகள், கவரிமான் உடல்கள், ஓயாத யோனிஅலை, என் தறவுக்குள் குத்தும் முட்கள் போன்ற உன்னதமான படைப்புகள் வந்தன.

குடும்பம் அவரை மட்டுப்படுத்தியது என்று சிலவிமர்சகர்கள் புலம்பினார்கள். எப்போதும் நதி ஆர்பாரித்துக்கொண்டிருக்குமா என்ன,  சிலயிடங்களில் அது அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் என்று நான் இலக்கிய வக்கீலாக பதிலளித்துக்கொண்டிருந்தேன்.

பர்தாவுக்குள் ஒரு பூந்தோட்டம் என்ற அபுனைவுக்கதையை, கனமான கருப்புத்துணி என்கிற குறுநாவலை எழுதி, அச்சில் ஏற்றியபின் எதனாலோ  வாபஸ் வாங்கிவிட்டார். எனக்கு மட்டும் அவர் எழுதிய படி முழுவதையும் படிக்க கொடுத்தார். கண்டிப்பாக வந்திருக்க வேண்டிய புத்தகம். சில பல அழுத்தங்கள். சொல்லவில்லை. புரிந்துகொள்ளத்தான் முடிந்தது.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த நதி சடாரென்று ஒடுங்கி காணமல் போயிற்று. தொடர்பும், விலகலும், மெல்லிய பிரிவின் வலியை கொடுத்தது என்றாலும் முன்போலில்லை.

‘ அடுத்த கல்யாணத்து கூப்பிடுவா ‘ சொன்ன மனைவியிடம் ஒருவாரம் பேசவில்லை. அந்த வார்த்தையின் சூடு, விலக்கப்படுதலின், நான் உபயோகிப்படுத்தலை எனக்கு உணர்த்திட்டா என்ன ?

இருக்கலாம்.

*

சில வருடங்கள் ஓடிற்று. ஒரு வரி செய்தியாய் அவர்களின் இருப்பு அறியவரும். எனக்கும் வயதாகி இலக்கியம் தாண்டி, குடும்பம் ஏறிய ஒரு கட்டத்தில் அழைப்பு வந்தது. அவர்களும் மும்பைக்கே குடிபெயர்ந்திருந்தார்கள்.

” கையெழுத்து போடறதுக்கு பேனா எடுத்துண்டு போங்கோ’ன்னு மனைவி சொல்லுவாள் என எதிர்பார்த்தேன். அந்த சொற்கள் வந்திருந்தாலும் எனக்கு வலித்திருக்காது.. சொல்லப் போனால் அப்படி வலியான வார்த்தைகள் எனது உள்காயத்தை மேலும் காயப்படுத்த தேவையாக கூடயிருந்திருக்கலாம்.

போனேன். இப்போது அன்னம்மா மட்டுமே. ஆயிஸா இல்லை. இதுவரையான கதை சுருக்கம் சொன்னார்கள். என் மனம் அதை உள்வாங்கி கொள்ளவேயில்லை.

வருவது, போவது ஒரு நிகழ்வாயிருந்தது. இந்த காலகட்டத்தில் நானும் தமிழ் இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதும் ஒரு முக்கியமான இலக்கிய விமர்சகனாயிருந்தேன். மிகக் குறைவாக எழுதுவதாலும், பழைய விமர்சக சேர்கள் செத்துவிட்டதாலும், பழைய தெரிந்த மாவை கொஞ்சம் மசாலா தூவி அரைப்பதனாலும் விமர்சக பட்டம். (ஆனால், பேட்டிகளில் “ நான் வெறும் வாசகன் மட்டுமே “ : அவையடக்கம்)

*

அதற்குப்பின் அன்னம்மா ஒரு சில எழுத்தாளர் பெருந்தலைகள், தலை சாய்த்தபின் கூப்பிட்டனுப்புவார். நான் போவதில்லை. ஒரு மெலோ டிராமாவிற்கு மனம் தயாராயில்லை. இலக்கிய இடத்தை மெல்ல ஆன்மீகம் பிடித்துக் கொண்டது. (நன்றி: மாயாதீத சுவாமி)

ஆனால் இதைப்பற்றி (அன்னம்மா உறவின் இழுபறி, வலி இன்னபிற..) நான் மனம் திறந்து பேசுவது மாயாதீத சுவாமியிடம் மட்டும்தான்.

“ தனக்காக இறப்பு குறிப்பு எழுதி பார்த்துக்கொள்ளுதல்..எவ்வளவு பெரிய மடத்தனம்.. ஒவ்வொரு எழுத்தாளரும் எப்படி எழுதுவார் என்று இப்போதே எழுதி வைத்திருக்கிறார். இப்போதெல்லாம் யார் இருந்தாலும், விழுந்து போய் எழுதுகிறார். தான் இறந்தால் நன்றாக எழுதவேண்டும் என்று இப்போதே மற்றவர் எழுத்துக்களுக்கு மறைமுகமாக பயிற்சி கொடுக்கிறார்.

அவர் கேட்டார். “இறப்பு என்பதற்கு தயாராவது தப்பொன்றுமில்லையே.. “

” நோ. சுவாமி.. இது டூ மச்.. ஓவ்வொரு எழுத்தாளர் இறந்த பின்னும் யார் யார் என்னென்ன மாதிரி சொல்கிறார்கள் என்று பார்த்து விடிய, விடிய அதன் எழுத்துக்களை படித்துக்கொண்டிருக்கிறார்.

இறந்து போன பின்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் கடிதம் போடச் சொல்லி சில கடிதங்கள் எழுதிவைத்திருக்கிறார்.

என்னம்மா பாவ மன்னிப்பான்னு கேட்டா, ’மயிராண்டிங்க யாருக்கு நான் மன்னிப்பு கேட்கணும், அதுங்க ஏதும் நம்ம மேலே கண்ட சாக்கடைய தூக்கி போட்டிருக்கூடாதேன்னு.. நல்லாத எழுத வேண்டிருக்கு.. நாய்ங்க.’அவனுக்கு கிடைச்ச எலும்ப வைச்சுத்தானே என்னையே பார்ப்பான்.. எலும்புதுண்டு தொண்டைல நின்னு திட்டற சத்தத்தை தொலைச்சுரும்.. . என்று கத்துகிறார். அதில் எனக்கு ஒரு கடிதம் இருக்கலாம் என்ற பயமும் இருக்கிறது. ”

சுவாமியின் உள் ஆழ சிரிப்பு முகத்திலும் தெரிந்தது.

” ஊதி, ஊதி பெரிதாக்கி எட்டி உதைத்தா வாழ்க்கையோடு உறவாடுவது “

ஒரு நீள் மெளனம். மெல்லிய ஆஸ்ரம காற்று மட்டும் சின்ன ஸ்வரத்தில்.

சிறிய இடைவெளிக்குப்பின், மாயாதீத ஸ்வாமியே தொடர்ந்தார்.

” மனிதனின் மிகப்பெரிய பயம் சாவு. அதை நேர் நோக்கும் நேரம். காற்றுப்போன பலூனை ஏற்றுக்கொள்ளும் நேரம்..”

நான் உள் வாங்கவில்லை.. புரியவில்லை. பந்து தலைக்கு மேல் பறந்தது.

புரியமாலே, அடுத்த கேள்விக்கு தாவினேன். “ அது ஏன் எனக்கு வலியை தருகிறது.. “

சிரித்தார்..சுவாமி.. “ நல்லது.. உன்னிலிருந்து பார்க்க ஆரம்பிக்கிறாய்.. அதுவே நல்லது.. “

உருளையான ரஜாயில் சாய்ந்து கொண்டு, புகைத்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ நிறைய உறவுகளிடம் நெருக்கம் தரும் சந்தோசத்தை விட, பிரிவு தரும் வலிதான் அதிகமாயிருக்கிறது. அது வெளியில் நடப்பதில்லை. உனக்கும், உனக்குமான உறவுதான்.. புரிகிறதா.. உன்னிளிருக்கும் ஒரு அபூரணத்துவத்தின் வெளிப்பிம்பம்தான் அன்னம்மா.. உன்னில் உடைந்த கண்ணாடியை ஒட்டும்போது இத்தகைய வெளி வலிகள் இருப்பதில்லை..“

சுவாமிஜீ சொன்னது போல, நான் ஆழமாய் என்னை உள்நோக்கி பார்க்க முயற்சித்தேன். மணித்துளிகள் கரைந்தன. சுவாமிகள் புகைத்து முடிக்க, சூடான தேநீர் வந்தது. பருகினோம்.

தேநீர் நனைத்த, உற்சாகக் குரலில் சுவாமிகள் பேசினார்.

”உபநிஸத்தில் ஒரு சில வாக்கியம் உண்டு. “வாயுர நிலமமிர்தம் மதேதாம் பஸ்மாந்தக்கூம் சரிரீம் ; ஓம் கிரத்தோஸ்மர கிரிதகும் ஸ்மர . “

”யஸ்மின் ஸ்ர்வானி பூதானி ஆத்வைமாபூத் விசாதனக ; தத்ர கோ மோக கா சோக கா ஏகத்யம் அநுபஸ்யதக ”

” நான். நான் என்கிற போது மனித மனம் வகுக்கிற அந்த கட்டத்தில் தன் இயல்பான பிம்பத்தை ஒருவரால் பார்க்கமுடியாது. இப்படி யோசித்துப்பார். காற்று ஊதாத பலூன் தான் நிதர்சனம். அதை பார்க்கப் பிடிக்காமல் ஊதி ஊதி பார்த்துக் கொள்வதன் விளைவு தான்.. தன்னை விட பெரிதான் ஒன்றை தானாய் நினைத்து கொள்ளுதல். காற்று போன பலூந்தான் நான் என்கிற சின்ன உண்மை புரிகிற போது இந்த பிரச்சனைகள் வருவதில்லை.

தன்னையே பெரிதுபடுத்திக்கொள்வது எவ்வளவு ஏழ்மையென்று தெரியுமா.. அந்த அடிமட்ட ஏழ்மையில் உழல்பவள் தான் அன்னம்மா.. காரண, காரிய உலகம் மட்டுமே கொண்டவர்கள் ஏந்திக் கொள்ளும் வறுமை.. “

ஸ்வாமிஜி அமைதியாகி எழுந்து கழிவறை போனார். திரும்பி வந்து விழுந்து, விழுந்து, கலங்கி, கலங்கி சிரிக்க ஆரம்பித்தார்.

“ உனக்குன்னு தெரியுமா, அன்னம்மா, என்னையே நிறைய தடவை கேட்டிருக்கிறாள். என்ன காற்றுப்போன பலூன் மாதிரி வைத்திருக்கிறாய் என்று.. “

சொல்லிவிட்டு வானம் அதிர சிரித்தார் மாயாதீத ஸ்வாமி. அவரது பூர்வாஸ்ரம பெயர் அஸ்வத் கோஸ்.

*

ஆச்சரியமாய், சுவாமிஜீ சொன்னபடியே, அன்னம்மா செத்துப் போன பின்பு எனக்கு வந்த கடிதத்தை நான் தொடக்கூடயில்லை. அதில் என்ன இழவு இருக்கப் போகிறது. உள்சரி இல்லாதவரின் எழுத்துகள் மலத்துக்கு அடிக்கிற வாசனை திரவியங்கள் தானே.

கிழித்து போட்டு விட்டேன். பயங்கள் தாண்டி, முழுக்க முழுக்க இலக்கிய முழுக்கு.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.